"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, November 06, 2008

ஒபாமா ஒன்றும் தேவதூதன் அல்ல....

The Great White Lies failed.


'சும்மா அதுருதுல்ல'


ஷங்கர் படத்தின் 'fantasy' கதைகள் போலிருக்கிறது. தெருவில் கூடி குதூகலிக்கும் மக்களின் மகிழ்ச்சிப் பெருவெள்ளம் உற்சாகம் கொள்ள வைக்கிறது. மிகக் கேவலமான ஒரு ஆட்சியின் இறுதியில் நிகழும் மாற்றத்தைக் கண்டு, இந்த உலகமே உவகை கொண்டிருக்கிறது.

ஆனால், எல்லோருக்குமே அப்படியிருக்குமா?

பால்பாயாசத்தில் உப்பு போட்டுத் தருபவர்கள் இல்லாமலா இருப்பார்கள்?

தொனி மாறுகிறது - யுத்தங்கள் குறித்த பேச்சுகளில் என்பது தொடங்கி, பொருளாதாரத் துறைகளில் எதுவுமே செய்ய முடியாது என்று தொடர்ந்து, இது இன வெற்றியல்ல என்று குமுறுவது வரை வாதங்கள் பத்திரிக்கையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஒபாமாவின் வெற்றி இனரீதியாக ஈட்டப்பட்ட வெற்றியல்ல என்பது வரையில் உண்மையாக இருக்கலாம். பெரும்பான்மைக்கும் குறைவான மக்களுடைய ஓட்டுகளால் ஆனது மட்டுமே இந்த வெற்றி என்று எவரும் நினைத்து விட முடியாது தான். அந்த வகையில், இது ஒரு பொதுப்படையான வாதம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒ(டு)துக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவன் மேலெழுந்து வந்து, உலகின் வல்லாண்மை மிக்க ஒரு அரசின் தலைவனாக எழுச்சியுற முடியும் என்பது - எவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிருவப்பட்டிருக்கிறது. இதை நடுத்தர வர்க்கத்து மக்களின் அபிலாஷைகள் என்று தான் பார்க்க வேண்டும் என்று சொல்வது, ஒரு எழுச்சியை மறைத்து இகழ்வதாகவே அமையும்.

நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை முன்னெடுத்துச் செல்வது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால், அதை ஒரு வெள்ளையரால் கூட செய்திருக்க முடியும். பெரும்பான்மை பலம் கொண்ட வெள்ளையர்களும் அதைத் தான் விரும்பி இருப்பார்கள். பொருளாதார காரணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களித்திருந்தால், அவரால் 'அதிருதுல்ல்' என்று சொல்ல வைக்கும் வெற்றியைத் தொட்டிருக்க முடியாது. இத்தனைக்கும், கெய்ன், முதலாளித்துவக் கொள்கைகளைப் ஒபாமாவை விட தன்னால், நன்றாகக் காக்க முடியும் என்று அறைகூவலே விடுத்தார்.

நடுத்தர மக்கள் தங்கள் கனவான ஒரு நல்வாழ்வைக் குறித்து மட்டுமே கவலை கொண்டிருக்கவில்லை. மாறாக இந்த உலகம் முழுவதும் தங்கள் ஆணவத்தை இகழ்கிறது - தாங்கள் அனைத்து மக்களாலும் வெறுக்கப்படுகிறோம். இதை மாற்றச் செய்ய வேண்டுமானால், அதற்கான ஒரு தகுந்த முகம் ஒன்றை கண்டாக வேண்டுமென்ற வேகம்
தான் இந்தத் தேர்தலின் முடிவுகள் என்றே கருதுகிறேன். மீண்டும் ஒரு வெள்ளை முகத்தை நிறுத்துவதன் மூலம் இந்த உலக மக்கள் அமெரிக்காவின் மீது கொண்டிருக்கும் வெறுப்பை மாற்றியமைக்கத் தேவையான நம்பிக்கயை முதலில் பெற முடியுமா? என்பது சந்தேகமே!


அமெரிக்க தேசம் நடத்திய யுத்தங்களின் கோர முகம் வெளியே தெரிய ஆரம்பித்த பின்னர் தான், அவர்களது மதிப்பு உலக அரங்கில் அடிவாங்கத் தொடங்கியது. இல்லாத அணு ஆயுதங்களைக் காண்பித்தது, ஆடிய கோரதாண்டவத்தின் விளைவாக, தீவிரவாத விளை நிலமாக மாற்றிவிட்டு, பின்னர் தீவிரவாதங்களுக்கு எதிரான யுத்தம் என புலம்பிக் கொண்டிருந்தது, பிற நாடுகளின் இறையாண்மைகளைத் தூசியாக ஊதித் தள்ளி, தன் படையினரை அந்நாட்டு எல்லைகளைக் கடக்கச் செய்தது, இன்னமும் மீதி இருக்கும் நாடுகளின் மீதுமேதோ காரணம் காட்டி போர் தொடுக்க முனைவது என ஒரு யுத்த பிசாசாக அலைந்தது.


அமெரிக்கர்கள் நடத்திய “எதிராளியற்ற மூன்றாவது உலகப் போரை” அனைவருமே வெறுத்தனர்.

எவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உண்மை என்பது எப்பொழுதும் அழியாத்தன்மை கொண்டது. இந்த உண்மையை இப்பொழுது தான் உணரத் தொடங்கினர் என்பதே யதார்த்தம். தங்கள் நலனுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்காத உள்ளூர் சண்டைகளிலெல்லாம், நுழைந்து தங்கள் நாட்டு மக்களைப் பலி கொடுத்தது என்பதை எவர் தான் ஏற்றுக் கொள்வர்? செத்துப் போகும் பிற நாட்டு மக்களின் சடலங்களைக் கண்டு, எந்த மனசாட்சியுள்ள மனிதனால் அமைதி கொள்ள இயலும்? இந்த யுத்தங்களில் இறந்துவிடும் நபர்களின் குடும்பங்களின் துயரங்களை யார் கணக்கிலெடுத்துக் கொள்வது?


இந்த யுத்தங்களை நிறுத்துவது தான் அமெரிக்க தன் மதிப்பை மீட்டெடுக்கக் கூடிய ஒரே வழியாக இருக்க முடியும். அதற்கான ஒரு நபராக எதிர் அணியிலிருந்து தான் ஒருவர் வரமுடியுமே தவிர, புஷ்ஷின் நண்பர்களால் அதை செய்ய முடியாது.


ஒபாமாவால், எத்தனை தூரம் இதில் முன்நோக்கி நகர முடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது ஒரு தற்காப்பான பொதுப்படையான வாதம். அதை செய்வதினால் மட்டுமே ஒருவரை விமர்சித்து விடமுடியாது. ஒபாமா தனது கருத்தியலை மாற்றிக் கொண்டு, வெற்று அறிவிப்புகளோடு முடித்துக் கொள்வார் என்பது சரியான வாதமாக இருக்காது.

இந்த யுத்தங்களை நிறுத்திவிட இயலாதவாறு பலரும் முயலக் கூடும் - குறிப்பாக ஆயுத வியாபாரிகள் மற்றும் இஸ்ரேலிய லாபி. வெகு ஆழமாக புதை மணலில் சிக்கிக் கொண்டவன் தன்னை விடுவித்துக் கொள்ளவே பெரும் பிரயத்தனம் செய்தாக வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியையாவது ஒபாமாவால் தொடங்கி வைக்கப்படுமென்றால், அதுவே வெற்றியாகத் தான் அமையும்.


அதை வெற்று அறிவிப்புகளாகக் கருதி இன்றே அதை தோல்வியாக வர்ணித்து புளகாங்கிதம் அடையவேண்டியதில்லை.


பொருளாதார சறுக்கல்களுக்குக் காரணம் - எந்தப் பிடிமானமுமற்ற வரைமுறையற்ற
அனுமதிகளே காரணம் என்பது வரையில், எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பொருளாதார சுரண்டல்கள் முதலீட்டு சந்தையில் தடுக்கப்பட வேண்டுமென்றால், குறிப்பிடத்தக்க நிபந்தனைகளும், சமூக மதிப்பீடுகளைக் காக்கும் திட்டங்களும் அமைக்கப் பெற வேண்டும் - இல்லையென்றால், எல்லோரும் ஒட்டுமொத்தமாக முழுக வேண்டியதிருக்கும் என்ற புரிதல் அனைவரையும் சென்றடைந்திருக்கிறது. ஆக, நியாயமான முதலீட்டுக் கொள்கைகளை அனுமதிக்கும் வேளையில், சூறையாடுதலையும், சூதாட்டத்தையும் முன் வைத்து செயல்படும் பேராசைகளுக்குக் கடிவாளம் போடுகையில் அதை எதிர்ப்பதற்கு எவருக்கும் துணிவிருக்காது.


பெரும் அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட ஒபாமா ஒன்றும் தேவதூதன் அல்ல – என்றாலும், ஒரு நல்ல வாழ்வினை நோக்கி இந்த வாழ்க்கையை நகர்த்திச் செல்வது ஒன்று தான் அவரிடமிருந்து எதிர்பார்க்க வேண்டுமே தவிர, உலகின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் ஏன் தன் ராணுவத்தை பின்னழைக்கவில்லை, ஏன் முழுமையான சோசலிச நாடாக இன்னும் மாற்றிவிடவில்லை, என்றெல்லாம் பின்னர் கேள்வியெழுப்பத் தோதாக இப்பொழுதே பேசி, எழுதி வைத்து விடுவோம் என்பது குதர்க்க வாதத்திற்குட்பட்டது.


மாற்றங்கள் தேவை என்று ஓங்கி ஒலித்த குரல் - தீண்டப்படாதவனாக ஒதுக்கப்பட்ட ஒரு இனத்திற்கும் எழுச்சியுண்டு என்று உலகெங்குமிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமைந்ததைக் கண்டு எழுச்சியுறாமல், ஒரு அசூயையுடன் பேசுவது, இன்னமும் நாம் அந்த எல்லைகளை - தீண்டப்படாதவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை ஆட்சியாளாராக மாற்றிப் பார்க்கும் எல்லைகளைத் தொடத் தயாராகவில்லையென்பதையே தெரிவிக்கிறது. அதனால் தான் இந்த வெற்றியைத் திரிப்பது, ஒரு சாதாரண நிகழ்வாக மாற்றிக் காட்ட முனைவது, வெற்று அறிவிப்புகள் தான் வருமென ஆரூடம் சொல்வது, கனவுகளாகப் போய்விடும் என்பது எல்லாம்...

சில பத்திரிக்கையாளர்களுக்கும், பரம் அறிவுஜீவிகளுக்கும், இந்த உலகை வௌவாலாகத் தான் பார்க்க இயல்கிறது என்பது சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

8 comments:

வனம் said...

வணக்கம் நண்பன்

இன்னும் உங்கள் இடுகையை முழுமையாக படிக்கவில்லை, முதல் பத்தியை படித்தவுடன் தோன்றியது.

\\
ஷங்கர் படத்தின் 'fantasy' கதைகள் போலிருக்கிறது.
\\

நீங்கள் நிச்சையம் கீழ்கண்ட புத்தகத்தை படிக்க வேண்டும்

கிழக்கு பதிப்பகத்தின்
\ மோதிப்பார் \

படித்துப்பாருங்கள்.
ஷங்கர் படத்தின் 'fantasy' கதைகளை உண்மையாக்கி இருக்கிறார்

நன்றி

நண்பன் said...

இராஜராஜன்

வணக்கம்.

நீங்கள் சொல்லிய புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை.

ஒபாமாவைப் பற்றியதா?

இந்தியா வருகையில் வாங்கி வாசிக்கிறேன், கண்டிப்பாக.

மிக்க நன்றி

அன்புடன்
நண்பன்

வனம் said...

வணக்கம் நண்பன்

அந்த புத்தகம் ஒபாமாவைப் பற்றியது இல்லை

அவரைவிட சிறந்தவரை பற்றியது
தென்னமெரிக்க நாட்டின் மிக முக்கிய தலைவரை பற்றியது

நன்றி

நண்பன் said...

இராஜராஜன்,

சஸ்பென்ஸைக் கூட்டிக்கிட்டே போகிறீர்கள்.

அந்தப் புத்தகம் ஒபாமாவைப் பற்றியதோ, அல்லது மாண்டேலாவைப் பற்றியதோ தெரியாது - ஆனால், யாரைப் பற்றியது என்று தெரிந்தால், அவர்களைப் பற்றிய மூலப்புத்தகங்களையே வாங்கிப் படித்து விடலாம்.

எப்போவென்றாலும் அப்படித் தான் செய்வேன்...

நன்றி,

அன்புடன்
நண்பன்

வனம் said...

மண்ணிக்கவும் நண்பரே

நேற்று அவரின் பெயரை மறந்துவிட்டேன்

அவரரின் பெயர் ஹிகோ சாவேஷ் (Hugo CHAVEZ) வெனிசுலா நாட்டு அதிபர்

என்னுடைய வாழும் ஆதர்ச புருஷர் அவர்தான்

நன்றி

பாரதி தம்பி said...

அது ஹியூகோ சாவேஸ் பற்றிய புத்தகம். எளிமைப்படுத்துகிறோம்’ என்று அவரை ஒரு மசாலா படத்தின் ஹீரோவைப்போல் சித்தரித்திருக்கும் மட்டமான புத்தகம் அது. சாவேஸ் பற்றி தெரிந்துகொள்ள ’மோதிப்பார்’-ஐ விட இணையமே சிறந்தது.

நண்பன் said...

இராஜராஜன்,ஆழியூரான்,

மிக்க நன்றி.

புத்தகம் எழுதுவதற்கு உழைப்பதற்கும், பிறரிடமிருந்து திரட்டப்பட்ட தகவல் தொகுப்பிற்கும் நிச்சயமாக வித்தியாசங்கள் இருக்கத் தான் செய்யும்.

விரிவான ஆங்கில வாசிப்பு இருப்பவர்கள், இணையத்தின் மூலம் இலக்கற்று தேடுபவர்களுக்கு இந்த மாதிரியான புத்தகங்கள் அத்தனை சுவையாக இருக்காது.

நான் சில சமயம், ஏதாவது ஒரு நிகழ்வைப் பற்றி கருத்தறிய, ஒரே சமயத்தில், அந்த நிகழ்வைப் பற்றிய பல தரப்பட்ட பத்திரிக்கைகள், புத்தகங்கள் என்று வாங்குவதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்திருக்கும் - அவைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிராகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசங்களுக்காகவே வாங்கிப் படிக்க வேண்டியதிருக்கிறது.

ஆனால், அதற்காக, Glorifying the events என்ற அளவில், தங்கள் சொந்த கற்பனையையும் சேர்த்து கலந்து கட்டி, மக்களின் மனநிலைக்கேற்ப, எழுதி வெளியிடுவது ஆபத்தானது. அது போலவே, எந்த ஒரு விமர்சனப் பார்வையுமற்று, நாயக அந்தஸ்தில் வைத்துக் கொண்டாடுவது, தங்களுக்குப் பிடிக்காதவர்களை, பயங்கரவாதிகளாக சித்தரிப்பது.

எல்லாவற்றையும் கடந்து தான் புத்தகங்கள் வாங்க வேண்டியதிரூக்கிறது. என்ன செய்ய?

உங்கள் கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறேன், ஆழியூரான்.

நன்றி,

அன்புடன்
நண்பன்

வனம் said...

வணக்கம் ஆழியூரான்

இணையத்தில் தேடுகிறேன், ஹிகோ சாவேஷ்-ஐ அந்த புத்தகத்தின் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன்

உங்களுக்கும் ஏதேனும் உபயோகமான சுட்டி கிடைத்தால் தெரியப்படுத்துங்கள்

நன்றி

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்