"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, November 22, 2008

வணக்கமும், பெண் மொழியும் :: கவிக்கோவின் பார்வையில்...

தமிழகத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவரான, கவிக்கோ, துபாய்க்கு வந்திருந்தார். ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, இங்குள்ள பலரிடமும் அது குறித்து விவாதிப்பதற்காக வந்திருந்தார். வந்த இடத்தில் தனக்குப் பிடித்தமான கவிதைகளைக் குறித்தான நிகழ்ச்சிகளுக்கும் கொஞ்சம் இடமொதுக்கித் தந்தார்.


வியாழன் மாலை மருளில்லா மலர்கள் என்ற ஒரு கவிதை நூலை வெளியிட்டார். ஆனால், நிகழ்ச்சியை 6:00 மணிக்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட, துபாயின் தொல்லைகள் நிறைந்த போக்குவரத்தில் நீந்தி வருமுன்னே, கவிக்கோ பேசி முடித்து விட்டு கிளம்பி விட்டிருந்தார். அடுத்து அவருக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது - ஈமான் அமைப்பினால். (ஈமான் - Indian Muslim Association - IMAN).


சரி, அங்கு சென்றால், அவருடைய பேச்சைக் கேட்கலாம் என்று புத்தக வெளியீட்டு விழா முடிந்ததும் சென்றால், அங்கும் இறுதியாக சிலவற்றை மட்டுமே கேட்க முடிந்தது. ஏழை மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதற்கு இஸ்லாமியர்கள் முன்வர வேண்டும் என்ற கோரிககையை முன் வைத்து அதை மட்டும் குறித்தே பேசினார்.




அவரது பேச்சை எங்குமே முழுமையாகக் கேட்கவில்லையென்றாலும், மறு நாள் அமீரகக் கவிஞர் பேரவையின் மூலமாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம். வெள்ளியன்று மாலை சரியாக ஏழு மணிக்கு அவைக்கு வந்து அமர்ந்து விட்டார்.


7:15 க்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. வளவளவென்று பேசிக்கொண்டிருக்காமல், ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பின், கவிஞருடன் கலந்துரையாடல் தொடங்கியது. ஒரு சிறிய முன்னுரையைப் பேசி தொடங்கி வைத்தார் - கவிக்கோ.


அதைத் தொடர்ந்து முதல் கேள்வியை நண்பர் முத்துகுமரன் கேட்டார். புதுக்கவிதைக்கு, மரபுக்கவிதைப் பயிற்சி அவசியமா என்ற கேள்வியை. முதல் கேள்வியே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. மரபுக்கவிதைகளின் பயிற்சியின் மூலம் புதுக்கவிதைகள் வளமுறுமே தவிர, குறையாது என்று பதில் சொல்லியவர், அதற்காக சில புத்தகங்களையும் வாசிக்கும்படி சொன்னார். இன்னமும் அதிகமான வழிகாட்டும் புத்தகங்களைப் பின்னர் தருவதாக சொன்னார்.


அடுத்த முக்கியமான கேள்வி:


ராவுத்தர்ஷா என்ற நண்பர் ஒருவர் ஒரு கேள்வியைத் தொடங்கினார் - வணக்கம் சொல்வது சரியா, தவறா என. ஆசிப், அந்தக் கேள்வியை சற்று விரிவுபடுத்தி, வணக்கம் என்ற சொல்லைக் குறித்தான இஸ்லாமியர்களின் தயக்கத்தையும், அது குறித்து நிகழும் சர்ச்சைகளையும் தர்க்கங்களையும், பின்னர் அது தமிழர் மரபல்ல என்ற நிலையை சில இஸ்லாமியர்கள் எடுக்க முனைந்ததையும் விரிவாகச் சொல்லி, தமிழ், இஸ்லாம் என்ற நிலையிலிருந்து, இதை விளக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.


ஒரு சாதாரணக் கேள்வியாகத் தான் கேட்கப்பட்டது. ஆனால், அது அத்தனை சூடு கிளப்பும் என்று எதிர்பார்க்கவில்லை. கவிக்கோ பேச ஆரம்பித்ததும், முதல் வாக்கியமாக சொன்னது -
இஸ்லாமியர்களில் பலருக்கு இஸ்லாத்தையும் தெரியவில்லை - தமிழையும் தெரியவில்லை என்று சொன்னதும், சில இஸ்லாமிய நண்பர்களுக்கு - அதுவும் தான் இஸ்லாமியன் என்ற அடையாளங்களை மிக விரிவாக ஏற்றிருந்த சில நண்பர்கள் அதை மறுக்க ஆரம்பித்து விட்டனர். எப்படி எங்களுக்கு இஸ்லாத்தைத் தெரியாது, தமிழைத் தெரியாது என்று சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள் என்று கேட்கத் தொடங்கி விட்டனர். 'அமருங்கள் - பதில் சொல்கிறேன்' என்று சொல்லியும், கேளாது, அவரை பேசவிடாமல் மீண்டும், மீண்டும் இடைமறித்து பேசிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில், அவர் ஒலிவாங்கியை வைத்து விட்டு, நீங்கள் பேசி முடியுங்கள் அப்புறமாக நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் தான், அவரைப் பேச அனுமதித்தனர்.


'இறைவா, நான் உன்னை வணங்குகிறேன்' என்ற நிய்யத்தை, மன உறுதியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அது இறைவழிபாடாகிறது. அதில்லாமல், வணங்குகிறேன் என்ற சொல், வெறும் வரவேற்பிற்கான சொல் மட்டுமே. மேலும் வணங்குதல் என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது, அதனுடன் இணைந்த உடல்மொழியைக் கவனித்தாலும், இதில் உள்ள வேறுபாடு புரியும் என்ற கவிக்கோ, அதையும் தெளிவுபடுத்தினார்.


தெய்வத்தை வணங்குவதாக இருந்தால், தலைக்கு மேலாகக் கைகளைக் கூப்பி வணங்குதல் செய்ய வேண்டும். வயதில் மூத்தவர்களுக்கு வணக்கம் சொல்லும் பொழுது, முகத்திற்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும். தனக்கு சமமான நண்பர்களை வரவேற்கும் பொழுது, வணக்கம் சொல்லும் முறையானது - நெஞ்சுக்கு நேராக கைகூப்புதல் வேண்டும். நாம் இதையெல்லாம் செய்யாமல் வணக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒருவருக்கான வரவேற்பு மொழியை, 'வணங்குதல்' என்ற நிய்யத்தின்றி இயல்பாக, உடன் இணையும் உடல் மொழியல்லாது தான் செய்கிறோம். எண்ணத்தில் இல்லாத ஒன்றை, ஒரு செயல் நிகழ்த்தி விடாது. அதனால் வணக்கம் சொல்வதில் எந்தத் தயக்கமும் வேண்டாம் என்று சொன்னவர், அடுத்து மொழியைக் குறித்துப் பேசினார்.


ஆரம்ப காலத்தில் இல்லையென்பதனால், ஒரு மொழி தன்னை வளப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பிற மொழியின் சொற்களை ஏற்பதைக் கொண்டு, அச்சம் கொள்ள வேண்டியதில்லை. வணக்கம் என்பது இடைப்பட்ட காலத்தில் வந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தன்னை வளப்படுத்திக்கொள்ளும் பொருட்டே, ஒரு மொழி, சொற்களை உருவாக்குகிறது. அதற்கு சமமான பிற மொழி சொற்களையும் ஏற்றுக் கொள்கிறது. மொழியியலின் வழமை அது. வளர்வதற்கான அறிகுறியது. அதை நிராகரிக்க வேண்டாம் என்று சொன்னார்,


வணக்கம் சொல்வது, இஸ்லாமியத் தத்துவங்களின் படியும், தமிழ் மொழியின் இயல்புக்கேற்ற வகையிலும் ஏற்புடைய செயலே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.


அடுத்து நான் கேட்ட கேள்வி - படிமம், குறியீடு இவற்றின் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு, அதை கவிதையில் இயல்பாகக் கையாள்வது கவிதையின் வீச்சை அதிகப்படுத்தும் என்று சொல்கிறீர்கள். ஒரு வளர்ந்த கவிஞரின் படிமம், குறியீடுகளை தொடர்ந்து வாசித்து வருவதன் மூலம், எளிதாகக் கிரகித்துக் கொள்ள முடிகிறது. அவரது படிமமும், குறியீடுகளும் எவை எங்கிருந்து பெறப்படுகின்றன என்ற புரிதல் இருப்பதால், அவை வீச்சைக் கூட்டுபனவையாக இருக்கின்றன. ஆனால், புதிதாக வரக்கூடிய கவிஞர்களின் படிமங்கள், குறியீடுகள் முற்றிலும் அறிமுகமற்றதாக இருக்கும் பொழுது, அவற்றை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது, அல்லது எவ்வாறு ஒரு கவிதையில் அமைப்பது என்பது குறித்து சற்று பேசுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன்.


அது குறித்து அவர் மிக விரிவாக பேசினார். படிமங்கள், குறியீடுகள் அவற்றை அறியப்படாமலே, பலரும் அவற்றைக் கையாளத் தான் செய்கின்றனர். ஆரம்ப காலத்தில் நாம் உவமை, உருவகம் என்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், இவற்றின் பலவீனம் அவை ஒன்று - ஒன்று என்ற உறவைக் கொண்டு, மனித கற்பனைகளுக்கு இடம் கொடாத வகையில் இருந்தன. ஒற்றைப் பொருளைச் சுட்டுவதுடன், உவமை, உருவகங்கள் மறைந்துவிடுகின்றன. ஆனால், படித்தவர்களின் அறிவாற்றலையும் தன் கவிதைக்குள் வரவழைக்கத் தான் இவற்றை மீறிய ஒரு உத்தியைத் தேடினான் மனிதன்.


மனித மனம் ஒரு காமிராவைப் போன்றது. ஒரு புகைப்படக் கருவி, ஒரு பருப்பொருளை மட்டுமே பதிவு செய்யும். நுண்பொருளை - abstract objects - அவற்றைப் பதிவு செய்யாது. அதனால், ஒரு நுண்பொருளைப் பற்றிப் பேசும் பொழுது,அவற்றைப் பதிவு செய்ய ப்ருப்பொருளான ஒரு காட்சியையும் அமைக்க வேண்டியதிருக்கிறது. காட்சிகள் நுண்பொருளுடன் இணக்கமாக அமைக்க வேண்டும். நுண்பொருள் உணர்த்தாத காட்சி படிமம் ஆகாது.


சில இடங்களில் அந்தப் படிமம் வெளித்தோன்றாமலும் அமைந்துவிடும் - உதாரணமாக,


என் மனம்
அவளிடத்தில் அழைத்துச் செல்லச் சொல்கிறது
நான் அதட்டினால்
அழுகிறது


இதில் மனம் என்பதை ஒரு குழந்தை என்ற படிமத்தைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், குழந்தை என்பதை எங்கேயுமே சொல்லவில்லை. அந்த வார்த்தைப் பயன்படுத்தவேயில்லை. ஆனால், அதன் பண்பு இருக்கிறது. படிமங்களை அமைக்கும் பொழுது, இந்த பண்புகளைத் தவறவிடாது அமைக்க வேண்டும் என்று சொன்னர். (அவர் சொன்னதன் சுருக்கமான தகவல் மட்டுமே)


பின்னரும் தொடர்ந்த விவாதங்களில், கவிதை என்றால் என்ன, சமுதாயத்திற்கு கவிதைகள் என்ன பணியாற்றுகின்றன, செம்மொழி திட்டத்தினால் தமிழுக்கு என்ன பயன், உயர்நிலைப் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் ஏன் புதுக்கவிதைகள் இடம் பெறுவதில்லை, பாரதியையும் பாரதிதாசனையும் தாண்டி கவிஞர்கள் ஏன் மறுக்கப்படுகிறார்கள், இன்றைய படைப்பிலக்கியங்களில் வார்த்தை வறட்சி அதிகம் தென்படுகிறதே ஏன் - என்பது போன்ற கேள்விகளும் பதிலுமாய் போய்க் கொண்டிருந்த விவாதத்தில், அடுத்து பிரச்சினைக்குரிய ஒரு கேள்வியாக மாறப் போகிறது என்பது தெரியாமலே ஒரு கேள்வி கேட்டேன்.


Surrealism என்ற ஆழ்மனப் பிம்பங்களையும், உணர்வுகளையும் (sub-conscious feelings and images) அதிகம் பாடல்களில் கையாண்டவர் நீங்கள். அதாவது, புறவுடல் என்பதை மறுத்து அகவுடல் நோக்கிய பயணமாகக் கவிதைகளைக் கையாண்டீர்கள். ஆனால், இன்றைய சூழலில், அகத்தை விட அதிகமாக புறவுடலின் அவயவங்களை முன்னிறுத்தி கவிதை படைக்கும் உத்தி அதிகம் கையாளப்படுகிறதே, இது குறித்து உங்கள் பார்வை என்ன என்று பேசுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன்.


எடுத்த எடுப்பிலே, அவர் சொன்னார் – உடலுறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவிதைகளில் கையாளப்படுவதை தான் முற்றிலுமாக மறுப்பதாக சொன்னார். மேலும், பல தளங்களிலும், இது குறித்து நான் மறுத்தே பேசி வந்திருக்கிறேன். சிற்றிதழ் இலக்கியவாதிகளில் தங்கள் மீது கவனம் கொள்ளுமாறு, ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக செய்யப்படும் இவை நீண்டகாலம் நிலைக்கப் போவதில்லை. உடலுறுப்பைக் கொண்டு எதை சொல்ல வருகிறீர்கள் என்ற தெளிவின்மை நிறைந்திருக்கிறது. ஆண்டாள் ப்ரியதர்ஷிணியின் கவிதை நூல் ஒன்றை வெளியிடச் சென்ற பொழுது, சில வரிகளைக் குறிப்பிட்டு சொன்னேன் – இத்தன நாட்களும் ஆண்கள் பெண்களின் சதைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், மனதைப் பார்க்கவில்லை என்று ஆதங்கப் படுகிறார்கள் பெண்கள். உங்களுக்கு எழுதுவதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்ட பொழுது, நீங்கள் மனதையா காட்டுகிறீர்கள், சதைகளையேத் தானே திரும்பவும் திறந்து காட்டுகிறீர்கள் என சொன்னேன். அது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கிவிட்டது. அவ்வாறு எழுதுவது தவறு என்றார்.


பார்வையாளராக இருந்த நண்பர் அசோக், “அதை எப்படி தவறு என்று சொல்கிறீர்கள் – அது ஒரு பெண்மொழி தானே” என்றார்.

“அந்தப் பெண்மொழியினால், நீங்கள் பெறுவது எதை? உடலுறுப்புகளை மையப்படுத்துவதன் அவசியம் என்ன?”

“அது ஒரு கொண்டாட்டம். தன் உடலைத் தானே கொண்டாடுதல்”

“கொண்டாடத்தக்க பங்களிப்பு என்ன இருக்கிறது. தன்னைத் தானே கொண்டாடும் ஆபாசம் அந்த மொழி என்பது எனது கருத்து. அதற்கு மாற்றாகக் கருத்தை நீங்கள் கொண்டிருக்கலாம். அது குறித்து நான் கவலை கொள்ளவில்லை”

“அதை – பெண்மொழிகளை ஆபாசம் என தீர்மானிக்க உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது?” என சட்டென கேட்டுவிட்டார், அசோக்.

எல்லோரிடத்திலும் ஒரு பதற்றம். என்னுடைய கருத்து அது – நீங்கள் அது குறித்து மாற்றுக் கருத்து கொண்டிருக்கலாம் என்று சொன்னதன் பின், அதிகாரம் குறித்துப் பேசியது கொஞ்சம் அதிகப்பட்சமோ என தோன்றியது. என்றாலும் அந்த விவாதத்தை அத்துடன் முடித்துக் கொண்டு, அடுத்த கேள்வியை ஒருவர் கேட்க, எல்லாம் அமைதியாகியது.
பின்னர் விழா முடிந்து, போகும் பொழுது, அசோக்கிடம் அவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஓவியங்களில் ஆர்வமும் வரையும் பழக்கமும் கொண்டவர் என்பது தெரிந்து வியந்தார். பின்னர், எப்படி எழுத்துகளின் மீது இத்தகைய நுட்பமான பார்வை? என்றார். ‘வாசிப்பதில் மிக்க ஆர்வம் உள்ளவர். எழுத்துகளைப் பற்றிய விமர்சனங்களையும், விவாதங்களையும் வாரந்தவறாமல் செய்து கொள்கிறோம்’ என்று சொன்னேன்.
அத்துடன் விடை பெற, கூட்டம் இனிதாக முடிந்தது.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்