"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, November 21, 2008

Is IT people a seperate entity?
IS IT people a seperate entity?

ஒரு தொழிற் சமூகமாக இந்த வகை போராட்டங்களில் ஈடுபட வைப்பது நியாயமா?


தமிழ் என்ற உணர்வு ஒன்றே மட்டும் தான், தமிழீழ ஆதரவிற்குத் துணையாகும்.
IT என்ற பல வகை மனிதர்களையும், அவர்கள் சென்னையில் இயங்குவதால் மட்டுமே,
ஒரு அழகிய டீ சர்ட்டுகளுக்குள் அடைத்து தமிழின உணர்வாளர்களாக மாற்றிக்
காட்ட முனைவதில் அர்த்தமேயில்லை.


இதில் கலந்து கொண்ட அனைவருமே, தமிழுணர்வால், கலந்து கொண்டார்கள் என்றால், அதை ஏற்பதில் தயக்கமில்லை. ஆனால், வற்புறுத்தலின் பேரால், கலந்து கொள்ள வைக்கப்பட்டார்கள் என்றால், இத்தகைய உணர்வுகள் தேவையற்றவை. ஏனென்றால், எனக்குத் தெரிந்து, மொத்த இந்தியாவுமே, தேசபக்தி என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு, தமிழீழ விடுதலையை ஏளனம் செய்யும் பார்வையையே எல்லா தளங்களிலும் முன் வைத்திருக்கின்றன.

சென்னையில் IT people என்பது ஒரு தனி அடையாளாமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. இங்குள்ள பல IT நிறுவனங்களின் தலைமையகமோ, அல்லது கிளைகளோ, மற்ற மாநிலங்களிலும் இருக்கின்றன. அங்குள்ளவர்களின் நிலைபாடுகள் முற்றிலும் மாறாக இருக்க வாய்ப்பிருக்கின்றன.

தமிழர்களுக்கான காவிர் நீர் ஆற்றுப் பிரச்சினையில், தமிழர்களுக்கெதிரான ஒரு நிலைபாட்டை பெங்களூர் IT நிறுவன ஊழியர்கள் எடுக்க நேர்ந்ததையும் எல்லோரும் அறிவர். அவ்வாறிருக்க, தமிழீழ நிலைபாட்டில், ஒரு அடையாளமாகத் தங்கள் கிளை நிறுவன ஊழியர்களை இவ்வாறு அனுமதிப்பது, தங்கள் தமிழ் பற்றை, தாங்கள் சென்னையில் யங்குவதால் மட்டுமே அனுமதிப்பது போலல்லவா இருக்கிறது?


ஆகையால் ஒரு தொழிற் சார்ந்து ஒரு இனமாக உருவெடுப்பதைக் காட்டிலும், நேர்மையாக இருப்பதுவே மேல். இது குறித்து யாருமே எந்த தவறான பார்வையும் முன்வைக்கவில்லை.

'டெக்கிஸ்'களுக்கான உலகம் தனியானது. அதனால், அவர்களைக் குறித்து கவலை கொள்வதை விட்டு விடலாம். அதையும் மீறிய தமிழுணர்வாளர்களால் இருப்பார்களேயானால் சரி, மற்றபடிக்கு, அவர்கள் தங்கள் secular credentialsஐ விட்டு விட்டு, பேருக்காக இத்தகையப் போராட்டங்களை நடத்தி தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளவேண்டிய அவசியமேயில்லை. அது இல்லாமலே, அங்கிருக்கும் உணர்வாளார்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

புரிந்து கொள்வார்கள்.

புரிந்து கொண்டோம்.

காவிரி ஆற்று நீர் பிரச்சினைக்காக ஒரு நிலையும், ஈழ பிரச்சினைக்காக ஒரு நிலையும் என்று அரசியல் சதுரங்க ஆட்டத்திற்குள் எல்லாம் அவர்கள் நுழைய வேண்டியதில்லை. தொழில்நுட்ப சமூகம் ஒரு தனி உலகம். அவர்கள் சமூக பிரச்சினைகளில் தலையிடவில்லையே என்று யாரும் புகார் செய்யவில்லை. அதே சமயம் அவர்கள் ஒரு இனத்திற்கான எதிர்வினையாளிகள் என்றும் யாரும் புகார் செய்யவில்லை.

சிலர் அவ்வாறு செய்திருந்தாலும் அது ஒரு ஆதங்கமாகத் தான் இருந்திருக்கும்.

தங்கள் ஆடைகளில் வசீகர வாக்கியங்களை ஏந்திக் கொள்ளும் அதே சமயத்தில், கைப்பேசியில் யாருடனோ பேசத் தவிக்கும், வெற்று ஆராவாரத்துடன், ஈழம் பேசப்பட வேண்டியதில்லை.(புகைப்படங்கள் - இலக்குவன் / பண்புடன் குழுமம்.)

8 comments:

Anonymous said...

1. Do you think atleast one person in the crowd, wouldn't have a real concern for the sufferings which happen in Srilanka?
2. I don't know what "IT" has to do here. Can't this be taken as a concern a human raises for the suffering of other humans?
3. I personally find this article as something which tries to find bad in a good initiative/protest.

நண்பன் said...

அநாநி,

உங்கள் கேள்விகள் நியாயமானவையே.

நான் இன்னும் கூட சற்று விரிவாகவே எழுதியிருக்க வேண்டும். இது குறித்து பண்புடன் குழுமத்தில் நான் எழுதிய பதில்:

என்னுடைய கேள்வியே - ஒவ்வொருவருக்கும் ஒரு நிர்ப்பந்தம் தரப்படுகிறது - அதனால்,அவர்கள் ஒரு கட்டாயத்தின் பேரால், ஒவ்வொரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். சினிமாத்துறையினர் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்று வற்புறுத்தியதையும் நான் எங்கும் ஆதரித்திருக்கவில்லை. அவர்களின் பேச்சையும், ஒரு சிலரைத் தவிர,ஒரு எல்லையைத் தாண்டி, ரசிக்க இயலவில்லை. ஏனென்றால், அவற்றில் உணர்ச்சிவசப்பாடு தான் மேலோங்கி இருந்தது.

அது போலவே நடிகர்களுக்கு இடப்பட்ட கட்டளையும் கூட.

இதுவே ஒரு விவாதமாகியது! (தனி விவாதம்)

'ஒவ்வொருவரும் வற்புறுத்தி வரவழைக்கப்பட வேண்டுமா?'

'ஆமாம் - அவர்கள் வாழ்வது நாம் கொடுக்கும் பணத்தில் தானே? உலக அளவில் விற்பனையாவது தமிழ் ஈழமக்களினால் தானே?'

ஆக, ஒரு கலைஞன், தன்னைச் சுற்றி நிகழும் வினைகளால் பாதிக்கப்பட்டவனாகி, உந்துதல் கொண்டு எதிர்வினையாற்றுகிறானா என்பதை விட, உங்கள் விற்பனைகளை பாதிப்புள்ளாக்குவோம் என்ற பேரத்தின் நிர்ப்பந்தத்தினால், அல்லவா இந்த உணர்வுகள் எழுப்பப்படுகின்றன?

எந்த ஒரு உறவிலும், பேரங்கள் நுழையுமானால், அங்கு தார்மீக நெறிகள் பின் தள்ளப்பட்டு, வியாபார அழுத்தங்களே முன் வைக்கப்படுகின்றன. அதனால் தான் ரஜினி போன்றவர்கள், முன்னுக்குப் பின் முரணாகப் பேச வேண்டிய அளவிற்குத் தள்ளப்படுகிறார்கள். தன் ஆளுமைக்கேற்ற தகுதியுடன் ஒரு கம்பீரத்துடன் பேச வேண்டியவற்றைத் தட்டுத் தடுமாறி பேசி, அனைவரின் நகைப்புக்கும் இடமாகிறார். நாம், நக்கல், கிண்டல் எல்லாம் செய்யலாம். ஆனால் அதையும் மீறி, இந்த வியாபார நிர்ப்பந்தங்களை நாம் உருவாக்கி, இக்கட்டான சூழலில் ஒருவரைக் கொண்டு போய் நிறுத்துவதை நாம் உணரவேயில்லை.

இதே இக்கட்டான சூழல் தான், காவிரி நீர் ஆற்றுப் பிரச்சினையின் போதும். கர்நாடகாவிலுள்ள ITயினர் ஒன்று திரண்டு, தமிழகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கர்நாடக மக்களின் மன உணர்வுக்கேற்ப, அந்தப் போராட்டம். இப்பொழுது, தமிழகத்தின் மனநிலைக்கேற்ப, இங்கு இந்த நிலை.

ஒருமுறை, சன் தொலைக்காட்சியில் அஜித் பேட்டி ஒளிபரப்பாகியது. ஒரு பண்டிகையின் போது. இறுதியாக, ஒரு சில காட்சிகளை நடித்துக் காட்டச் சொன்ன பொழுது, மறுத்து விட்டார். மிகவும் வற்புறுத்திக் கேட்ட பொழுது, ஒரு சில நொடிகளுக்குப் பின், முடியாமல் சிரித்து விட்டார். ‘You had become conscious of yourself. என்னால் முடியவில்லை’யென்று சொன்னார்.

தன்னால், ஒரு தொழில் என்பதை மீறி, வேறெந்த தளத்திலும் தோன்றி நடிக்க முடியவில்லையென்று கூறிவிட்டார். அதே போல், அவர் எந்த விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. நட்சத்திர கலைவிழாக்கள் உட்பட. இதை ஏன் எல்லோராலும் மதிக்க முடியவில்லை? ஏன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்திலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? ஒரு நடிகன் என்பதால், கூப்பிட்ட இடத்திலெல்லாம் வந்து நம்மை மகிழ்விக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் போலத் தான், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால், நீங்களெல்லாம் வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தாக வேண்டும் என்ற சூழல் உருவாக்கமும்.

இதன் மூலம் என்ன நிகழ்கிறது என்றால், ஈழத்தமிழர்களுக்குத் தேவையான ஆதரவு நீர்த்துப் போய்விடுகிறது. ஒரு நாள் அடையாளாமாக ஏதாவது செய்து விட்டு கடமையை முடித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்குத் தான் தள்ளப்பட்டுவிட்டிருக்கின்றனர் அனைவரும். இந்த ஒரு நாள் அடையாளப் போராட்டத்தின் மூலம், கடமை முடிந்து விட்டது என்று கருதுவதனாலயே, அரசும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், மௌனம் காக்கிறது. ஏனென்றால், அரசை அசைத்துப் பார்க்கும் கனம் இந்தப் போராட்டங்களில் இல்லை. வெறும் கேலிக்கூத்தாக மட்டுமே இது நிகழ்கிறது. மாறாக, ஈழத்தமிழர் ஆதரவு போராட்டம், இன்னும் வலுவான தளங்களில், தமிழ் என்ற ஆர்வத்துடனும், உறுதியுடனும், அரசுகளை அசைத்துப் பார்க்கும் நோக்கத்துடனும் நடத்தப்பட வேண்டும். தமிழ் என்ற தளத்தில் ஏற்கனவே இயங்கி வரும் நெடுமாறன், சுபவீ போன்றவர்களுடன் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்த முன்வரவேண்டும். தமிழ் என்ற உணர்வுடன் எத்தனை பேர் கூடத் தயாராக இருப்பார்கள்? இருக்கிறார்கள்?

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/7913d2a800bf2520/6393494e557dbe43#6393494e557dbe43

‘டெக்கீஸ்’களுக்கான உலகம் தனியானது என்று குறிப்பிட்டது, அவர்கள் பளாபளா கட்டிடங்களில், ஏர்கண்டிஷனிங் சூழலில் வேலை செய்கிறார்கள் என்பதல்ல. அதை ஒரு சமூகப் பார்வையாகவும் முன்வைக்கவில்லை. தொழில்நுட்பம் சார்ந்த உலகத்தைச் சார்ந்தவர்கள், மாநில எல்லைகள் தாண்டியும், ஒரே இனமாகத் தான் இயங்க வேண்டும். பனியின் நிமித்தம் மாநிலத்திற்கு மாநிலம் மாறிப்போகும் பொழுது, அவர்கள் அந்தந்த மாநில உணர்வுகளைக் கொண்ட நிலைபாடுகளுக்கு மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தப்படுவது கூடாது. தங்கள் தொழிலையும், இனஉணர்வுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அதனால் தான் அந்த உலகம் தனியானது - அதனுள் பிற உணர்வுகளை எழுப்பி குழப்பம் கொள்ளக் கூடாது என்று சொல்ல வந்தேன்.

மற்றபடிக்கு, இன்றைய அளவில், ஏர்கண்டிஷனிங் என்பதெல்லாம், பெரும் சொகுசல்ல. உற்பத்தித் திறனைப் பெருக்கவும், மின்னணு இயந்திரங்களைப் பாதுகாக்கவும் ஒரு அத்தியாவசியத் தேவை. அதைக் கொண்டெல்லாம், ஒரு சூழலை விமர்சிக்கும் அளவிற்குப் போய்விட மாட்டேன். மேலும், என்னோட, தொழிலே ஏர்கண்டிஷனிங் தான்.

இனியவன் ஹாஜி முஹம்மது said...

Dear Nanban-Shaji,
Our family members are dying in Ilankai ( Never say Sri Lanka).
We have to give humanitian support to our families, who are suffring on both side. I have confidence that we will get Tamil Ezham very soon. I pray to Almighty God to save Maaveeran.(Ilaiya Rajaji- Pirabakaran Anna)

Regards,
IniyaHaji
http://iniyahaji.blogspot.com
iniyavan.haji@gmail.com
Mobile: 00974 6932877

நண்பன் said...

நன்றி இனியவன் ஹாஜி முகமது,

உங்கள் எண்ணம் போலவே, விரைவிலே, ஈழம் மலரட்டும்.

அன்புடன்
நண்பன்

தாமிரபரணி said...

//***டெக்கிஸ்'களுக்கான உலகம் தனியானது***//
எப்படி தொழில்நுட்பவர்களாகிய நாம் எல்லாம் நாலுகாலுல நடக்கிறோமா, இல்ல இறக்கை வச்சி பறக்கிறோமா என்ன சார் பேசுறிங்க, நம்க்கு எல்லாம் என்ன உணர்ச்சி என்பதே கிடையாதா, அங்க மக்கள் சாப்பாட்டுகாகவும், இருக்க இடம் இல்லாமலும் அல்லல் படுறானுங்க அத பார்க்கிற யார்க்கும் மனது வலிக்கும் இதை அவன் சகமனிதனா பார்த்தாலே புரியும், அதிலும் நாம் தமிழர்கள் நம் இனம் அங்கே அழிக்கபடுகிறது, நம் ஏதிர்ப்பை காட்ட ஒரு சின்ன போராட்டம் அவ்வுளவுதான் இதை பார்த்தவுடன் இந்தியாவும், இலங்கையும் உடனே நல்ல பிள்ளைங்களா மாறிட போவதில்லை, ஆனால் இப்படி எல்லா துறையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் போது அரசாங்கத்தை சற்று யோசிக்க வைக்கும், இதுவே நாம் யாரும் போராட்டம் செய்யவில்லை என்றாலோ, நம் உணர்வை வெளிப்படுத்தவில்லை என்றாலோ பின்னாளில் இந்தியா தமிழ்களாகிய நம்மிதுதான் பழிபோடும்
தமிழர்களாகிய நாமே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்றால், வடநாட்டவர்களால் ஆளபடும் இந்திய அரசு ஏன் கண்டுகொள்ளபோகிறது
அது சரி உனக்கு ஒ வியிறு நெறஞ்சா போதும் அதன்ன
//***
இதில் கலந்து கொண்ட அனைவருமே, தமிழுணர்வால், கலந்து கொண்டார்கள் என்றால், அதை ஏற்பதில் தயக்கமில்லை. ஆனால், வற்புறுத்தலின் பேரால், கலந்து கொள்ள வைக்கப்பட்டார்கள் என்றால், இத்தகைய உணர்வுகள் தேவையற்றவை
***//
இல்ல தெரியாமதான் கேட்கிறேன் வற்புறுத்தலின் பேரால்தான் கலந்து கொண்டேன் என்று யாரு உங்க்கிட்ட சொன்னது, இல்ல நிங்களா உங்க்கிட்ட சொல்லிகிட்டிங்களா, நல்லா விசயத்துக்காக வற்புறுத்துறது தப்பில்லை, உங்க பையன் படிக்க போக மாட்டேன்னா விட்டுருவிங்கா அவன வற்புறுத்தி படிக்க வைக்கமாட்டிங்க அதுபோலதான் இதுவும்

//***
தங்கள் ஆடைகளில் வசீகர வாக்கியங்களை ஏந்திக் கொள்ளும் அதே சமயத்தில், கைப்பேசியில் யாருடனோ பேசத் தவிக்கும், வெற்று ஆராவாரத்துடன், ஈழம் பேசப்பட வேண்டியதில்லை
***//
ஆடைகளில் வாக்கியங்களை ஏந்தி அதன் மூலம் அனைவரின் கவனத்தை இழுப்பதும் ஒருவையான போரட்டாமே
ஏன்டா உனக்குதான் போரட்டாமே ஆகாதுனுட்டிய அப்புறம் அவனுங்க ஆடைகளில் வசீகர வாக்கியங்களை வச்சி போராடினா என்ன, கைப்பேசியில் யாருடனோ பேசிகிட்டே போராடினா என்ன?

அது சரி முஸ்லிம்ல ஒருத்தன் பாதிக்கபட்டா போராடுவிங்க, அதுமட்டுமில்லாமல் நிங்க எல்லாம் முஸ்லிம் கால்த்துல எங்கிருந்தோ வந்தவங்கதானே உங்களமாதிரி ஆளிடம் இருந்து எப்படி ஈழமக்களுக்கு அன்பு இருக்கும்
நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை, நான் தமிழன் அவ்வுளவுதான், மனிதர்களை நேசிப்பவன், அங்கு தமிழக மக்களை மட்டும் அல்ல, அங்கு உங்கள் முஸ்லிம் இன மக்களை கொன்றால் கூட வருத்தபடுவேன்

நண்பன் said...

தாமிரபரணி என்ற பெயர் வைத்துக்கொண்டிருப்பதினால், அந்த நதியைப் போலவே, உங்கள் மனமும் வறண்டு கிடக்கிறது என்றே தெரிகிறது, நண்பரே.

// அதுமட்டுமில்லாமல் நிங்க எல்லாம் முஸ்லிம் கால்த்துல எங்கிருந்தோ வந்தவங்கதானே உங்களமாதிரி ஆளிடம் இருந்து எப்படி ஈழமக்களுக்கு அன்பு இருக்கும் //

உங்கள் எண்ணங்கள் எத்தனை மேலோட்டமானவை! சொந்த மதத்தினரையே மதிக்கத் தெரியாத ஆட்களிடமிருந்து விலகிச் சென்றவர்கள் தான் இன்றைய இஸ்லாமியர்கள் என்ற புரிதலை இன்னும் அடையவில்லை நீங்கள். இன்னமும் உங்கள் கண்கள் திறக்கப்படவேயில்லை. உங்கள் பார்வை, பின் எப்படி மற்ற நியாயங்களைப் பார்க்கும்?

இலங்கையில், நடக்கும் யுத்தமும், அவலமும், இன்று நேற்று ஏற்பட்டதல்ல நண்பரே. அங்கு யுத்தம் கடந்த 30 வருடங்களாக நடந்து வருகிறது. அவர்களுக்காக தமிழகத்திலிருந்து 30 வருடங்களுக்கும் மேலாக ஈழ மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர் – ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று.

இன்று இந்தியாவில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அதை ஒருங்கிணைத்து, ஒரு முழுமையான ஈழமக்கள் ஆதரவு போராட்டமாக மாற்ற வேண்டுமே ஒழிய, ஒரு அடையாளப் போராட்டமாக, தனது தயாள குணத்தை அடையாளாப்படுத்த வேண்டி, ஒரு நாள் போராட்டம், ஒரு நாள் உண்ணாவிரதம் என வேடிக்கைக் காட்டுவது எந்த வகையிலும் பயனளிக்காது, நண்பரே.

ஒரு வலுவானப் போராட்டமாக இல்லாமல், இந்த அடையாளப் போராட்டமெல்லாம், அரசிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, நண்பரே. இதுவே வழமையானால், இதை அனுமதித்து அவர்களது அடையாளத்தை உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து விட்டால், பின்னர், அவர்கள் வேலையைப் பார்த்துப் போய்விடுவார்கள் என்பது தான் அரசின் அனுமானம். அதனால் தான், இங்கு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, இலங்கைக்கான இந்திய உதவிகள் போய்க்கொண்டே தான் இருக்கின்றன.

குறைந்த பட்சம், இந்த அடையாளங்களின் தலைமையாவது, இந்த ஈழமக்கள் ஆதரவில் வலுவாக நிற்கும் தலைமையாக இருக்கிறதா? அதுவும் இல்லை. சில நடிகர்களின் தலைமையில் அடையாளப்படுத்திக் கொண்டது, தங்களுக்கென்று பெரும் கொள்கையளவில் ஈடுபாடு ஏதுமில்லை. கடமையைக் கழித்து விட ஒரு நாளைத் தேர்வு செய்து முடித்துக் கொண்டோம் என்ற அளவில் தான் இருக்கிறது. போராட்டங்களின் மொத்த வடிவையுமே நீர்த்துப் போகச் செய்ய இது மிக எளிதான வழி.

தமிழகம் முழுவதும் இணைந்து, ஒருமித்த குரலில், ஒன்றாகக் குரல் எழ வைக்கும் ஒரு போராட்டத்தை, இந்த தளத்தில் பல ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமையில் எழ வைக்கும் ஒரு போராட்டத்தைக் கைகொள்ள வேண்டும். அதுவே பயனளிக்கும்.

// நமக்கு எல்லாம் என்ன உணர்ச்சி என்பதே கிடையாதா, அங்க மக்கள் சாப்பாட்டுகாகவும், இருக்க இடம் இல்லாமலும் அல்லல் படுறானுங்க அத பார்க்கிற யார்க்கும் மனது வலிக்கும் இதை அவன் சகமனிதனா பார்த்தாலே புரியும், அதிலும் நாம் தமிழர்கள் நம் இனம் அங்கே அழிக்கபடுகிறது//

அங்கே, உணவு, உடை, இடமின்றி தவிக்கிறார்களே என்ற ஆதங்கத்துடன், புத்தாடையெடுத்து உடுத்திக் கொண்டீர்களாக்கும். நல்ல கதை தான்.

டீ சர்ட் குறித்து பேசியது, அதற்கான செலவை, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்திருக்கலாமே என்பது தான். அந்த டீ சர்ட், அந்த ஒரு நாளைக்குப் பின், வேறெந்த நாட்களிலும் வேறெவராலும் அணியப்படவே இல்லை என்பது தான் உண்மை.

//
Naresh Kumar View profile

More options Nov 21, 4:37 pm
நண்பன்,
இங்கு பார்வைதான் மாறுபடுகிறது என்பது என் எண்ணம்...
டீ சர்ட் என்பது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது அவர்கள் எண்ணமாக
இருக்கலாம் (ஆனால் அந்த குறிப்பிட்ட தினத்தில் மட்டுமன்று சாதரணமாகவே அதை
உபயோகப் படுத்துவது இன்னும் சிறந்தது என்பது எண்ணம். ஏனெனில் அந்த
குறிப்பிட்ட தினத்தைத் தவிர மற்ற நாளில் அந்த டீ சர்ட் அணிந்து நான்
யாரையும் பார்க்க வில்லை!!). //

(http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/7913d2a800bf2520/a4e4b9e86f4d9068#a4e4b9e86f4d9068)

அவ்வளவே தான்.

மற்றபடி, நீங்கள் இரண்டு காலில் அல்லது நாலு காலில் நடக்கலாம். அது உங்கள் விருப்பம்.

பின்னர், என்ன சொன்னீர்கள், சகமனிதனாகப் பாருங்கள் என்றா?
முதலில், நீங்கள் அதை கற்று கொள்ளுங்கள். ஒரு மனிதனை, இஸ்லாமியன் என இனம் பிரித்துப் பார்த்துப் பொருள் கொள்ளும் உங்கள் கண்களை நன்றாகக் கழுவுங்கள் – பின் இதிலிருக்கும் நியாயம் உங்களுக்குப் புரியும். மேலும் எழுதியவற்றை கொஞ்சம் கவனமெடுத்துப் படியுங்கள் – எந்த ஆதங்கத்திலிருந்து எழுதப் படுகிறதென்று. 30 வருடப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் – தயவு செய்து.

அன்புடன்
நண்பன்

தாமிரபரணி said...

பதிலுக்கு நன்றி,
நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் கிடையாது,
நான் பெரியார்,அண்ணா,கலைஞர் போல மதத்தையும் ஆதரிப்பவன் அல்ல, தமிழக மக்கள் அனைத்து மதத்தையும் கும்பிடலாம் ஆனால் தமிழில் கும்பிட வேண்டும் என்பதே என் கருத்து
//***
ஒரு மனிதனை, இஸ்லாமியன் என இனம் பிரித்துப் பார்த்துப் பொருள் கொள்ளும் உங்கள் கண்களை நன்றாகக் கழுவுங்கள்
**//
நான் உங்களை இஸ்லாமியர்கள் என்று மதத்தின் பெயரால் பிரித்தபோது எவ்வளவு வருத்தபட்டிருப்பிர்கள்
அதுபோலதான் 'டெக்கிஸ்'களுக்கான உலகம் தனியானது என்று நிங்கள் தொழில்வாரியாக பிரித்தபோது அதே வருத்தம் நானும் பட்டேன்
//**
ஆக, ஒரு கலைஞன், தன்னைச் சுற்றி நிகழும் வினைகளால் பாதிக்கப்பட்டவனாகி, உந்துதல் கொண்டு எதிர்வினையாற்றுகிறானா என்பதை விட, உங்கள் விற்பனைகளை பாதிப்புள்ளாக்குவோம் என்ற பேரத்தின் நிர்ப்பந்தத்தினால், அல்லவா இந்த உணர்வுகள் எழுப்பப்படுகின்றன?

எந்த ஒரு உறவிலும், பேரங்கள் நுழையுமானால், அங்கு தார்மீக நெறிகள் பின் தள்ளப்பட்டு, வியாபார அழுத்தங்களே முன் வைக்கப்படுகின்றன
**//
ஏன் கடவுளை ஒருவன் கும்பிடுவதுகூட ஒருவகையான சுயநலமே
எ-டு, ஒருவன் நிம்மதிக்காக கும்பிடுகிறான், ஒருவன் பொருளுக்காக கும்பிடுகிறான்
உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு ஆதாயத்துக்காகதான் அடுத்தவர்களிடம் பேசுகிறார்கள், பழகுகிறார்கள்
உதாரணத்துக்கு நிங்கள் என்னுடைய முதலாளி என்று வைத்துகொள்ளுங்கள், நான் ஒரு திமிர் பிடித்தவன், சிரித்து பேச தெரியாதவன் என்று வைத்துகொள்ளுங்கள், ஆனால் நான் அவ்வாறு நடந்து கொள்ள இயலாது இல்லை என்றால் வாழஇயலாது, அதுபோலதான் சினிமாதுறையும்
நிங்கள் சொல்வதுபோல அனைத்தும்
இந்தியாகூட ஒரே நாளில் விடுதலை பெற்றுவிடவில்லை, இப்படி பலதுறையில் ஆங்காங்கே புரட்சி ஏற்பட்ட பின்புதான் விழிப்புணச்சி ஏற்பட்டது, அவர்கள் ஒருநாள் போராடிவிட்டு மறந்துவிடுவார்கள் என்பது உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக உள்ளது என்பதை காட்டுகிறது, எந்த போராட்டம் மாநாடு நடந்தாலும் அதில் குற்ற கண்டுபிடிப்பதிலே தாங்கள் ஆர்வமாக உள்ளிர்கள்

நண்பன் said...

தாமிரபரணி,
// பதிலுக்கு நன்றி, // நன்றிக்கு நன்றி.


// நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் கிடையாது,
நான் பெரியார்,அண்ணா,கலைஞர் போல மதத்தையும் ஆதரிப்பவன் அல்ல, தமிழக மக்கள் அனைத்து மதத்தையும் கும்பிடலாம் ஆனால் தமிழில் கும்பிட வேண்டும் என்பதே என் கருத்து //

என்ன சொல்ல வருகிறீர்கள் –

பெரியார், அண்ணா, கலைஞர் – இவர்களெல்லாம் மதத்தை ஆதரித்தார்களா? மறுக்கிறேன். உங்கள் பார்வையில் எங்கோ தவறு இருக்கிறது.


பெரியார் – மதத்தை மூர்க்கமாக எதிர்த்தார்.


அண்ணா – ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற சமரச நிலைபாட்டை எடுத்தார். ஆனால், மதங்களை அவர் ஆதரிக்கவில்லை.


கலைஞர் – பெரியாரா, அண்ணாவா என குழம்பி, இறுதியில் ஒரு சில நெருக்கமான நண்பர்களுடன் தனித்து விடப்பட்டவர் ஆனார். என்றாலும், அவர் மதத்தை ஏற்கவில்லை.


நண்பரே – கொஞ்சமாவது என்ன சொல்ல வருகிறோம் என்று தெரிந்து எழுதுங்கள். பதிவிடும் முன்பு சற்று வாசித்து சரியாக பொருள் வருகிறதா என பார்த்து விட்டு பதிலிடுங்கள். //ஆதரிப்பவன்// என்பதை >எதிர்ப்பவனும்< என்று எழுதினால் சரியாகப் பொருள் வரும்.

அப்படித்தான் எழுத நினைத்தீர்களா?

//நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல// சொன்னால் மட்டும் போதாது. எண்ணத்திலும் செயலிலும் அதை அமல்படுத்த வேண்டும்.


கும்பிடுவது – கும்பிடாதது ஒருவனின் தனிப்பட்ட விஷயம். Praying is a personal relationship between a man and his God. அதை அவன் எவ்வாறு எம்மொழியில் செய்யப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதை அந்த தனிமனித உரிமையாளனிடம் விட்டுவிடலாமே!!!


//***
ஒரு மனிதனை, இஸ்லாமியன் என இனம் பிரித்துப் பார்த்துப் பொருள் கொள்ளும் உங்கள் கண்களை நன்றாகக் கழுவுங்கள்
**//
நான் உங்களை இஸ்லாமியர்கள் என்று மதத்தின் பெயரால் பிரித்தபோது எவ்வளவு வருத்தபட்டிருப்பிர்கள்//


வருத்தமா? நல்லா சொன்னீர்கள், போங்கள். அப்படியெல்லாம் ஏதுமில்லை. இதைவிட மோசமான கருத்துகளையெல்லாம் நான் கேட்டுவிட்டேன்.


நான் உங்கள் கண்களைக் கழுவுங்கள் என்று சொன்னது, இஸ்லாமியர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பார்க்கவியலாத பார்வையைச் சொன்னது. இன்னமும், இஸ்லாமியர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களென்றால், யதார்த்தத்தை நீங்கள் தவறவிடுகிறீர்கள் என்று சொல்வதற்கே. எதற்காக, பெரும்பான்மையான மக்கள் பிற மதங்களைத் தேடுகிறார்கள் என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ள மறுத்தீர்களென்றால், பின் அந்தத் தவறுகளை உங்களால் களைய முடியாது.


// அதுபோலதான் 'டெக்கிஸ்'களுக்கான உலகம் தனியானது என்று நிங்கள் தொழில்வாரியாக பிரித்தபோது அதே வருத்தம் நானும் பட்டேன் //

சாதியை முன்னர் தொழிலைப் பிரித்ததன் மூலமாகத் தொடங்கினார்கள். அதனால், அவ்வாறாகப் பார்க்காதீர்கள், இணைக்காதீர்கள்.

அவர்களின் உலகம் தனியானது என்று சொல்ல முனைந்தது – தொழில்நுட்பம் சார்ந்த துறையினுள் – தமிழ், கன்னடம், மராத்தி என்பது போன்ற உணர்வுகளைத் திணிக்காதீர்கள். அவர்களை தொழில்நுட்பம் என்ற உலகினுள், ஒருங்கிணைந்த சமூகமாக வளரவிடுங்கள் என்பதைக் குறித்து தான் அந்த ‘டெக்கீஸ்’ உலகம் தனியானது என்று சொன்னேன்.


நிலவில், கால் பதித்த விஞ்ஞானிகளை எப்படி இவர் தமிழர், கன்னடர், வங்காளி, என்று நாம் பிரித்துப் பார்க்க முனைவதில்லையோ, அது போல IT உலகையும், மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு இனமாகக் கருத வேண்டும் – அவர்களை மொழி சார்ந்த போராட்டங்களுக்கெல்லாம் அழைக்காதீர்கள் –

ஆர்வமுள்ளவர்கள், அதற்கான தளத்தில் போய் இணைந்து கொள்ளட்டும் என கூறுகிறேன். இதைப் புரிந்து கொள்ள இயலாவிட்டால், அதற்காக நான் வருத்தப்பட வேண்டியது இல்லை, தாமிரபரணி.// இந்தியாகூட ஒரே நாளில் விடுதலை பெற்றுவிடவில்லை, இப்படி பலதுறையில் ஆங்காங்கே புரட்சி ஏற்பட்ட பின்புதான் விழிப்புணச்சி ஏற்பட்டது, அவர்கள் ஒருநாள் போராடிவிட்டு மறந்துவிடுவார்கள் என்பது உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக உள்ளது //


இந்தியாவில் ஆங்காங்கே நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்தும், ஒரு தலைமையின் கீழ் விவாதிக்கப்பட்டு, விதிமுறைகள் உணர்த்தப்பட்டு, பிராந்திய தலைமைகள் அமைக்கப்பட்டு, கொள்கைகள் விளக்கப்பட்டு, ஒரு இயக்கமாக நடத்தப்பட்டது.


அவ்வாறு செய்யத் தான் நான் சொல்கிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்றார் போல், அர்ப்பணிப்பற்றவர்கள் தலைமையில் தங்களை அடையாளப்படுத்துவதை தான் குறை சொல்கிறேன். போராட்டங்களை அல்ல. ஒரு வலுவான குரலாக எழும்பாமல் நீர்த்துப் போகச் செய்யும் வழிமுறைகளை மட்டுமே மறுக்கிறேன்.


நன்றி, உங்கள் கருத்துகளுக்கு.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்