"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, November 26, 2008

இலங்கைத் தமிழர்களும், இஸ்லாமியர்களும்

நேற்றிரவு வின் தொலைக்காட்சியில் தவ்ஹீத் ஜ்மாத்தாரின் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியை கண்டேன். அதில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பி. ஜெய்னுல் ஆபிதீன். அதில் ஒரு கேள்வி ' நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை ?

பதில்: விடுதலைப் புலிகள் தமிழர்களை மதரீதியில் பிரித்து பார்க்கிறார்கள். ஈழத்து இஸ்லாமியத் தமிழர்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள் ஈழத் தமிழ் முஸ்லிம்கள்.

Any comments friends ?
*****

தனி மடலில், இப்படியொரு கேள்வி வந்தது -நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி. நான் என்ன ஒரு சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு முக்கியமானவனா? என் கருத்தைக் கூட ஆவலாகக் கேட்க ஒருவர் முனைகிறார்? கேள்வியை அனுப்பியவர், நான் மிகவும் மதிக்கும் நண்பர்.

குழப்பமான கேள்வி தான். நான் சந்தித்த சில இலங்கை இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமே அவ்வாறு சொல்கிறார்கள் - புலிகளால் நாங்கள் தொல்லைக்காளானோம் என்று. ஆனால், மற்ற பெரும்பான்மையான முஸ்லிம் நண்பர்கள் பலரும் அவ்வாறு சொல்லவில்லை. யாரும் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லவில்லை. இலங்கையின் தமிழ் இலக்கிய உலகில் இயங்கும் சில நண்பர்கள் கூட அவ்வாறு குற்றச் சாட்டை வைக்கவில்லை. (நடந்துவிட்ட சில சம்பவங்கள், மனதை வருத்தினாலும், புலிகளைக் கைவிட தயாரில்லை என்றே சொல்கிறார்கள்)

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் கிழக்குப் பகுதியில், கருணாவின் தலைமையில் நிகழ்ந்தது. ஆனால், அவர் விலகிய பின்பு அத்தகைய நிகழ்வுகள் இல்லையென்றும் சொல்கிறார்கள்.

மறுபுறம், இஸ்லாமியர்கள், சிங்களத்தினரிடம் புலிகளை அடையாளம் காட்டும் வேலையில் ஈடுபட்டதாகவும், அந்தத் துரோகத்திற்குப் பதிலாகத் தான் அவர்கள் மீது தொடக்கத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். அதாவது காட்டிக் கொடுத்தல் என்ற சம்பவத்தை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டோம் - அவர்களின் மதசார்பு நிலையைக் கணக்கில் கொள்ளவில்லையென்று.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேட்டியளித்த பொழுதும், முஸ்லிம்களை நோக்கி நேசகரம் நீட்டுவோம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாகப் பார்க்காமல், வேறு வகையில் தனித்த இனமாகப் பிரித்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் - தாங்கள் எந்தப் பக்கமென்று.

தமிழ் மொழியை ஒரு அடையாளமாக ஏற்க மறுத்தால், நாளை அதே வீச்சில், சிங்கள மொழியையும் ஏற்க மறுக்க வேண்டும். அந்த சமயத்தில், சிங்கள சமூகத்தில், அவர்களுக்கு எந்த அடையாளமும் இருக்காது. இல்லை, நாங்கள் சிங்கள அடையாளத்தை எந்தவித சிரமமுமின்றி ஏற்போம் என்று கூறினால், அது ஒரு இரட்டை நிலைபாட்டை எடுத்ததாகிவிடும்.

முஸ்லிம் அடையாளம் என்ற காரணத்தால், தமிழ் அடையாளத்தைத் துறக்கத் துடித்தவர்கள், நாளை சிங்கள அடையாளத்தை ஏற்க முனைந்தால், அதைப் போன்று ஒரு அபத்தம் இருக்க முடியாது. சிங்கள அடையாளத்தையும் மறுப்போம் என்றால், பேரினவாதத்தின் கொடுங்கரத்திலிருந்து, இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது.

இப்பொழுது அவர்கள் எங்களை நன்றாக வைத்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்வது தற்காலிக பாதுகாப்பாக அமையக் கூடும். இது பிரித்தாளும் உத்தியை சிங்களவர்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு மாத்திரமே அடையாளம். சிங்கள மேலாண்மையை ஏற்று பாதுகாப்பைத் தேடுவோம் என்பது இஸ்லாமியர்களின் இன்றைய நிலைபாடாக மட்டும் இருக்காது. வாழ்நாள் முழுவதற்கும் 'அண்டி வாழும்' நிலையை மேற்கொள்ள இன்றைய சூழல் இட்டுச் செல்லும். அதிலும், சிங்கள மொழியை தங்கள் அடையாளமாக ஏற்றுக் கொள்ளும் பொழுது மட்டுமே சாத்தியப்படும்.

பாதுகாப்பிற்காக, தமிழைக் கைவிடுவோம், சிங்களத்தை ஏற்போம் என்ற நிலைபாட்டை எடுத்தால் - it would be totally against the free spirit of the humankind and the intellectual capability of the human animals. தமிழை தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள், இலங்கையில் தங்களைத் தமிழர்களாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். அது ஒன்றே அவர்களுக்கு நன்மை தரும்.

இல்லையென்றால், the muslims will become the hypocrites in SriLanka.

தமிழகத்து இஸ்லாமியர்கள் இந்த விஷயத்தில், தமிழ் என்ற அடையாளம் சார்ந்து இயங்குவதே நல்லது. (இது எனது கருத்து மட்டுமே) PJயின் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. (மேலும் பல விஷயங்களில் கூட)

அது சரி, இது ஏன் பொதுவில் வைக்கப்படக் கூடாது ஏன்கிறீர்கள்? இதுவும் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வியே.

இருசாராரும், தங்களிடையே விதைக்கப்பட்ட வேறுபாட்டைக் களைந்து, ஒன்றுபட இதுவே தருணம்.

1 comment:

மு மாலிக் said...

நண்பன்,

பிஜேயின் எந்த கருத்துகளின் மீதும் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் விடுதலைப் புலிகள் விஷயத்தில் பிஜேயின் கருத்து இது என்பதால், நான் அதற்கு மாற்று கருத்து முடியவில்லையே என நான் வருந்துகிறேன் :) பிஜே என்றால் எனக்கு அவ்வளவு வெறுப்பு. அது ஒரு புறம் இருக்கட்டும்.

நான் முஸ்லீம்களுக்கும் மற்ற தமிழ் மக்களுக்கும் இடையே சுமூகமான உறவினையே வேண்டுபவன். ஆனால் புலிகளால் அது சாத்தியமில்லை.

புலிகள் விஷயத்தில் நான் கொண்டுள்ள வெறுப்பின் காரணம், அவர்களின் இயக்கத்தின் பேரில் கொடுமைகள் முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட பின்பு, அதற்காக அவர்கள் மனம் திருந்தியிருந்தால், அவர்களாக முன் வந்து அதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதே. அவர்கள் "நாங்கள் மனம் வருந்துகிறோம்" என மட்டும் கூறி அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லீம்களின் ஆதரவினைக் கோறுகிறார்களே தவிர, அவர்களால் பாதிக்கப் பட்ட முஸ்லீம்களுக்கு அவர்கள் செய்வதாக வாக்களித்தது ஏதேனும் உள்ளதா ?

பிரபாகரன் அப்போது வெளியேற்றினார்; இப்போதுதான் கூப்பிடுகிறாரே என்று போய் சேர்ந்துக் கொள்வதா ?

அவர்களது துயரங்களுக்கு பிரபாகரன், ஒவ்வொருவருக்கும் ஒரு பத்து மில்லியன் டாலர் தருவதாகக் கூறினால் அவர்கள் சிறிது சிந்திக்கலாம். ஏனெனில், தண்டனைக்குறிய பிரபாகரனை தப்பிக்கவிட அவர்கள் இது போன்ற ஆதாயத்தினை எதிர்பார்ப்பது தவறல்ல. பல பொன்களை இழந்து துயரத்தினை அனுபவிப்பவர்களை வெறுமனே, தனது அரசியல் ஆதாயத்திற்காக அழைத்தால் எப்படி ?

படுகொலைகள் கருணாவின் தலைமையில் நிகழ்ந்தது என்பதெல்லாம் வெறும் தட்டிக் கழிக்கும் போக்கு. அது உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கூட 15 வருடங்கள் (1990 - 2004)பிரபாகரன் அவரது செயலை ஆதரித்துத் தானே வந்துள்ளார் ? சரி, நடந்தவைகள் அனைத்தும் கருணாவின் தன்னிச்சையான செயல்பாடு என்று பிரபாகரன் இப்போதாவது கூற முடிகிறதா ?

கருணா அவ்வாறு பிரிந்ததிலிருந்து புலிகள் அதனைச் செய்யவில்லை என்பதும் சர்ச்சைக்குறியது. மூதூரில் நிகழ்ந்தது என்ன ? ஸ்ரீரங்கன் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

இவைகளுக்கு பிரபாகரன் தனது உயிரினால் மட்டுமே சமாதனத்திற்கு வர முயற்சிக்கவேண்டும். மன்னிப்பதற்கு இது தனி நபர் சார்ந்த விஷயம் அல்ல.

அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதைப் பொருத்தே அவர்களை மதிப்பிட வேண்டுமே தவிர, அவர்கள் மனம் வருந்துவதாக கூறுவதாலோ அல்லது அவர்கள் அளிக்கு முன்வரும் அரசியல் பதவிகளாலோ அல்ல.

அவர்களால் ஒரு ஈழம் அமைக்கப்பட்டால், எழுதப்படும் வரலாற்றில் அவர்கள் நிச்சயமாக தங்களது செயல்களை அங்கீகரிக்க முன்வரமாற்றார்கள். தங்களை நியாயப்படுத்த, "முஸ்லீம்கள் துரோகிகள்" எனும் அவர்களது கருத்து வரலாற்றில் நியாயப்படுத்தப்படும்.

இறுதியாக,

இனவொற்றுமைக்கு விரோதமாக இருக்கும் புலிகளைத் திருத்திதான் அதனை ஏற்படுத்தவேண்டும் என்பது அவசியமல்ல.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்