"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, February 23, 2007

கலைப்படங்கள் : At Five in the Afternoon

சமீபத்தில் ஆசிப் மீரான் எழுதிய கலைப்படங்கள் மீதான பார்வை என்ற பதிவு தந்த தாக்கம் தான் இது.

இது வரையிலும், நான் தாக்கம் பெற்று எழுதிய பதிவுகளை எல்லாம், எல்லோருமே ஒரு மிரட்சியோடு தான் படித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால், இது அதிலிருந்து மாறுபட்ட ஒரு பதிவாக இருக்கும்.

கலைப்படங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டம் இப்பதிவு.

முதலில் கலைப்படங்கள் என்ற வகைப்படுத்தலையே தவறு என்று சொல்ல வேண்டும். எவரும் கலைப்படம் எடுக்கிறோம் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுப்பதில்லை. முதல் போட்டு முதல் எடுப்பவர்களே தங்கள் படங்களைப் பற்றிய ஒரு ஜம்பத்தையும் பிம்பத்தையும் வளர்க்க தங்கள் படைப்புகளைப் பற்றிய முன்முடிவுகளை, அறிவிக்கிறார்கள்.

ஆனால் மற்றவர்கள் தாங்கள் நம்பும் விஷயங்களைப் படமாக்குகிறோம் என்ற நம்பிக்கையில் மட்டுமே, அது வரையிலும் நடைமுறையில் இருந்த திரை மசாலாக்களை ஒதுக்கி விட்டு, இயல்பான படங்களை எடுக்கின்றனர். அந்த இயல்புத் தன்மையே அவற்றை மற்ற படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவற்றை என்னவென்று சொல்லி அழைப்பது என்ற சிக்கலுக்குள் நுழையும் பொழுது தான் அவற்றை கலைப்படங்கள் என்று கூறத்தொடங்கினோம்.

திரைப்படம் என்பதே ஒரு கலைவடிவமாக இருக்கையில், தீவிரமான ஈடுபாட்டுடன் செய்யப்படும் படங்களைக் கண்டு மிரண்டு போன திரைத்துறை வியாபாரிகள், பொழுதுபோக்கை மட்டுமே விரும்பும் மக்களிடத்தில் தங்கள் படங்களை மிக எளிதாக எடுத்துச் செல்ல, அவற்றை வேறுபடுத்திக் காட்ட, உண்மையான படைப்புகளை கலைப்படங்கள் என்று பெயரிட்டு, வேறுபடுத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்க மட்டுமே திரைப்படங்களுக்கு செல்லும் மக்கள் அதிகரித்ததும், இந்த இயல்பான படைப்புகள், ஒதுக்கப்பட, போலிகள் முன்னணிக்கு வந்து விட்டது நமது துரதிர்ஷ்டமே.

அது போகட்டும், என்னிடம் உள்ள திரைப்பட சேகரிப்பில் இருந்து உங்களுக்காக ஒரு படம் -

At Five in the Afternoon.



இது பிரபலமான ஸ்பானிஷ் கவிஞர் எழுதிய ஒரு கவிதையில் வரும் வரி. ஃபெடரிகோ கார்சியா லோர்கா என்பவர் எழுதியது. இந்தக் கவிதைக்கு இந்த திரைப்படத்திலும் ஒரு மிக முக்கியமான பாத்திரம் உண்டு. அதை பின்னர் பார்ப்போம்.

முதலில் படத்தின் கதை:

தாலிபான்கள் ஆட்சி முடிவுற்று, பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பும் ஆஃப்கானிஸ்தானிய அகதிகள் தான் இந்தப் படத்தின் கதைக்களம்.

சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு நடுவே தங்க இடம் கிடைப்பதில் போட்டியில் தொடங்கி, சிறு சிறு சச்சரவுகளுடன், தொல்லை மிகுந்த அந்த துரதிஷ்ட வாழ்க்கையை மக்கள் எதிர்கொள்ளும் விதத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, ஆஃப்கானிஸ்தானின் அதிபராக வேண்டும் என்ற கனவுகளுடன் தன் கல்வியைத் தொடரும் ஒரு பெண், அவளது பழமைவாத தந்தை, காணாமல் போன தன் சகோதரனைத் தேடிக் கொண்டே இருக்கும் அவனது மனைவி, இத்துடன் வருங்கால ஆஃபானிஸ்தான் அதிபரைக் காதலிக்கும் ஒரு கவிஞன் என்ற அகதிகளான இவர்களளுடன் கை கோர்த்து கொண்டு, கதையும் நடக்கிறது. அவர்கள் மூலமாக பெண்களின் நிலையை, குறியீடுகள் மூலம் நமக்குப் புரிய வைக்க முயல்கிறது கதை.


நோக்ரா - கதை நாயகி. ஆஃகானிஸ்தானத்தின் அதிபராக வரவேண்டும் என்ற தீராத ஆசையை உள்ளுக்குள் வளர்த்துக் கொள்கிறாள். அவள் பள்ளியில் நடக்கும் ஒரு சிறு விவாதத்தில் கவனம் பெற்று, அந்த ஆசை உண்டானது. தீவிரவாதத்தை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால், ஒரு பெண்ணே அதிபராக வேண்டும் என்ற கருத்தை உதிர்க்கும் மினா என்ற அவள் வயதையொத்த பெண், நோக்ராவின் கண் முன்னே, சாலையில் என்றோ புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகுண்டில் அடிபட்டு இறந்து போகிறாள். அதைக் காணும் நோக்ரா இன்னும் உறுதி கொள்கிறாள்.

அவள் தந்தைக்கோ வாழ்க்கையில் உள்ள ஒரே பிடிப்பு, தொலைந்து போன தன் மகனைத் தேடிக் கண்டுபிடித்து தன் மருமகள் கையில் ஒப்படைக்க வேண்டும். தொழில்: குதிரை வண்டியோட்டுவது. முகத்திரை அணியாத பெண்களை வண்டியில் ஏற்ற மாட்டார். தவறிப் போய் பார்த்து விட்டாளோ, இறைவனிடம் அதற்காக மன்னிப்பு கோருவார். மற்றொரு கவலை: தங்குவதற்கு - குளிரிலிருந்து தப்புவதற்கு இடம் பார்ப்பது. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு போட்டி வந்து விடுகிறது. முதலில் தங்கி இருந்த ஒரு இடத்தில், அவரது மகளே, அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவர்களால் அவளது சிதிலமடைந்த கட்டிட வீடும் ஆக்கிரமிக்கப்பட, அமைதியாக தொழுவதற்கும், பெண்களை மறைவாகப் பாதுகாக்கவும் வீடு தேடி அலைவதே மீதி நேரத்தில் அவருக்கு இருக்கும் பணி.

இந்த எளிமையான கதையில் வரும் ஒரு அசாத்தியாமான குறியீடு - தூய வெள்ளை நிறத்தையுடைய குதிங்கால் உயர்ந்த காலணி. The high heel shoe. அதை அணிவதற்கு தந்தையிடமிருந்து தடை. புதுமையை ஏற்க மறுக்கும் தந்தையின் கண்களிலிருந்து மறைத்து வைத்திருக்கிறாள். தந்தை இல்லாத இடங்களில் அதை எடுத்து அணிந்து, தன் அதிபர் ஆசையின் கனவுகளைச் சுமந்த படி, கம்பீரமாக நடக்கிறாள். பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்கான குறியீடாகவே, அந்த காலணி படத்தில் உயிர் பெறுகிறது. அதே சமயம் பழமைவாதியான ஆண்கள் முன்னால், அது மறைக்கப்படுகிறது. அதுவே அந்தக் கதையின் மையக் கருத்தும். பெண்கள் கல்வி பெறுகின்றனர் என்பதை உணர்த்த செய்தித் தாள் வாசிப்பவளாகக் காட்சி அமைக்கப்படுகிறது. அதுவும் பழமைவாதிகளின் கண்களுக்குத் தெரியாமல் இரவின் தனிமையில் மறைத்து மறைத்து வாசிக்கப்படுகிறது.

மற்றுமொரு குறியீடு, அவளது குடை. அதிபராகும் எண்ணம் வரும்பொழுதெல்லாம், அந்தக் குடை விரிகிறது. தலையைச் சுற்றிய ஒரு ஒளிவட்டம் போல அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உறுதியுடன் வீரநடை நடக்கிறாள். குடை தரும் பாதுகாப்பிற்காக, அதை உயர்த்திப் பிடிக்க முனைவதும் அவளது அதிபராகும் ஆசையின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு, எல்லோருக்கும் ஆதரவு...
இத்தகைய குணங்கள் கொண்ட, இவளை அகதியாகத் திரும்பும் ஒருவன் நேசிக்கிறான். காதலைக் குறித்தான வசனங்கள் எதுவும் கிடையாது - ஊர் பழிச்சொல் பேசுமே என்ற கவலையை அவள் சொல்வது தான் காதலைக் குறிக்கிறது. தவிர தந்தையின் பழமைவாதம் அவளுக்குத் திரையிடுகிறது. அவன் அவளுக்கு செய்தித்தாள் சேகரித்து கொடுக்கிறான். ஒரு பிரஞ்ச் படை வீரனுடன் அவள் பேசும்பொழுது, அவளுக்கு மொழி பெயர்ப்பவனாகும் அவன், தன் மூன்று சகோதரர்களை யுத்தத்தில் இழந்தவன் - ஒருவன் ரஷ்யாவிற்கு, மற்றவன் அமெரிக்காவிற்கு, இன்னுமொருவன் தாலிபான்களுக்கு. அந்நிய சக்திகளால் ஆஃப்கானிஸ்தான் எப்படி சீரழிந்தது என்பதை எளிதாக, ஒரு அங்கத உணர்வோடு சொல்லி, அதனால் தான் யுத்தத்தைக் கைவிட்டு கவிஞனாகிவிட்டேன் என்று கூறுகிறான். அவர்கள் போகுமிடமெல்லாம் அவனும் இடம் பெயர்கிறான். அவளோ தன் தந்தைக்கு அஞ்சுகிறாள். அவனோ, அவளுக்கு பிரபலமான ஸ்பானிஷ் கவிதை ஒன்றை வாசித்துக் காட்டுகிறான்.

At five in the afternoon,
It was exactly five in the afternoon
The rest was death and death alone
With sweet mists, and deep shores
Which will carry away the bull’s body
The bull does not know you,
Nor the fig tree, nor the horses
Nor the ants in your house
Because you have died forever
Ah, That terrible five in the afternoon!
It was five by all the clocks, it was
Five in the shade of the afternoon

(இந்தக் கவிதை மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் கவிதையை எழுதிய கவிஞனைப் பற்றிய முழுமையான தகவலைப் படிக்க விரும்புபவர்கள் எஸ்.ராம்கிருஷ்ணன் எழுதிய விழித்திருப்பவனின் இரவு என்ற புத்தகத்தைப் படியுங்கள்: லோர்கா எனும் ஜிப்ஸி பக்கம் 101.)

படம் உச்ச கட்டத்தை நோக்கி நகர்கிறது - காணாமல் போன தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு - இங்கு தான் படத்தின் கவித்துவமான காட்சி வருகிறது - மிகப்பழமைவாதியான அந்த தந்தை, தன் மருமகளிடமிருந்து அந்தச் செய்தியை மறைக்கிறார். அவரால் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண்ணை ஒரு விதவையாக மாற்ற விரும்பவில்லை. அதனால், அவள் என்றென்றும் கணவனைத் தேடுபவளாக இருக்கட்டும் என்று விஷயத்தை தன்னுள்ளே புதைத்து மறைக்கிறார்.

செய்தியைப் புதைத்து விட்டாலும், மனம் ஓலமிடுகிறது. தனிமையில் தன் குதிரையிடம் புலம்புகிறார்.




'உனக்குப் புல்லைத் தவிர,
எவற்றையும் அறியும்
ஞானமில்லையென்றாலும்
துணை இறந்த அன்று
உதிர்த்தாயே ஒரு கேவல்
அதைக் கூட செய்ய இயலவில்லை
என்னால்
இனி என்றென்றுமே
அத்தகைய ஒரு கேவலை
உதிர்த்துவிடாதே என் முன்னால்...'

(வசனத்தைக் கவிதையாக மாற்றியது நான்)

தந்தையின் புலம்பலை மறைந்து இருந்து கேட்கும் நோக்ராவிற்கு புரிகிறது. என்றாலும் அவளும் மௌனம் காக்கிறாள் தன் தந்தையினுள் மாற்றத்தை விளைவித்த மௌனத்தைப் பங்கிட்டவளாய்.

இந்த ஊரில் இருந்தால், யாராவது அவளிடம் செய்தி சொல்லி விடுவார்களோ என்று பயந்து, மீண்டும் இடம் பெயர முடிவெடுக்கிறார் - அந்த ஊரை விட்டு நிரந்தரமாக. அவரின் பழமைவாதம் மொத்தமாக அமிழ்ந்து போக, புது மனிதனாக தன்னையுமறியாமலே உருவெடுக்கிறார்.

பயணத்தின் ஊடே, தன் மகனின் ஒரே குழந்தை குளிரினால் மிகவும் நோயுற்று விட,
ஒரே சிகிச்சையாக தன் குதிரை வண்டியை தீ வைத்து, குளிர் நீக்க முயல்கிறார். நாளைய பிழைப்புக்கு வழி? - அதை நாளை பார்ப்போம். இப்பொழுது குழந்தையைக் காப்போம். பற்றி எரிகிறது குதிரை வண்டி.

மறுநாள் பகல் முழுவதும் பாலைவனத்தில் நடக்கிறார்கள். இறந்து கொண்டிருக்கும் ஒரு கழுதைக்கு அருகே ஒரு வயதான மனிதன் அமர்ந்து கொண்டிருக்கிறான். இவர்களைப் பார்த்ததும் அவன் வழி கேட்கிறான் காந்தகாருக்குப் போக. கையிலிருக்கும் குழந்தையும் இறந்து விடுகிறது. தண்ணீர் எடுத்து வர இரு பெண்களையும் அனுப்பி விட்டு, இறந்த குழந்தையைப் புதைக்க குழி தோண்டிக் கொண்டே, அவனிடம் பேச்சுக் கொடுக்க, அவன் காந்தாகாருக்கு சென்று, முல்லா உமரை சந்திக்க வேண்டும் - அறிவு மிக்க மனிதர்களை எல்லாம் அவர் அழைத்திருக்கிறார். பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி கருத்தறிய. அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு ஈமான் உள்ள முஸ்லிமை என்றுமே அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அவரிடம் சொல்லத் தான் போகிறேன் என்கிறான்.

'போ, முட்டாளே, காந்தகாருக்கு அல்ல, உன் ஊருக்கு. அமெரிக்கர்கள் ஏற்கனவே வந்தாகிவிட்டது. திரும்பி போ' என்று ஆத்திரத்துடன் பதிலுரைக்கிறார். That summarizes the change from a fundamentalist to a liberated man - the Afghan man.

தண்ணீர் எடுக்கச் செல்லும் நோக்ராவோ, இரவில் ரகசியமாக தான் வாசித்து வந்த தன் காதலனின் கவிதையை இப்பொழுது வாய்விட்டே பொல்கிறாள். அவளுக்குத் தெரியும் - இனி தன் தந்தை ஒரு பழமைவாதி அல்ல. தன் காதலுக்குத் தடை இல்லை என்று.

புதிய நம்பிக்கைகளை விதைக்கிறது படம்.

பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், தவற விடாதீர்கள்.


இனி வாசிக்கப் பொறுமையிருந்தால், தொடருங்கள்:

இந்தப் படம் இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது

1. Golden Peacock International Film Festival of India.
2. Prix Du Jury - Cannes Film Festival

படத்தை இயக்கிவர் : ஸமீரா மக்மல்பாஃப். அவரது தந்தை - மொஹ்சென் மக்மல்பாஃப். ஈரானைச் சேர்ந்தவர்கள்.

ஸமீரா இயக்கிய மற்ற படங்கள்:

1. The Apple
2. Blackboards

தந்தை இயக்கிய பிரபலமான படம் : Kandahar

Film Credits



Director Samira Makhmalbaf


Screenplay S. Makhmalbaf, M. Makhmalbaf
Photo
Editing Mohsen Makhmalbaf
Decor
Music Mohamad Reza Darvishi
Cast Agheleh Rezaie Abdolgani Yousefrazi Razi Mohebi Marzieh Amiri

படத்தின் முன்னோட்ட காட்சிகள் சிலவற்றிற்கு:

http://www.filmfestivals.com/cgi-bin/fest_content/festivals.pl?debug=&channelbar=&fest=cannes2003&partner=&page=films&year=2003&lang=en&film_id=6901

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்