வலைப் பதிவருக்கு சிறைத்தண்டனை
ஆமாம் - வலைப்பதிவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது - எகிப்து நாட்டில், ஒரு பல்கலைக் கழகம் தன் அறிவுறுத்தலையும் மீறி, அந்த மாணவன் செயல்பட்டதாகப் புகார் கொடுத்தது நீதிமன்றத்தில். அது குறித்து விசாரித்த காவல்துறை, பல மாணவர்களைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்தி வைக்க, அவர்களையெல்லாம் விசாரித்த நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது - ஒருவரைத் தவிர.
அப்துல் கரீம் நபில் என்ற அந்த மாணவர் (22 வயது) இஸ்லாத்தையும், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கையும் விமர்சித்து தனது வலைத்தளத்தில் எழுதி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அல் அசார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். அந்தப் பல்கலைக்கழகம் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகும். கரீம் அமெர் என்ற பெயரிடப்பட்ட வலைத்தளத்தில் அவர் தனது பல்கலைக்கழகத்தைப் பற்றி, மோசமாக எழுதியுள்ளார். எகிப்து அதிபரின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார். அவரை பல்கலைக்கழகத்தை விட்டு, கடந்த வருடம் வெளியேற்றி, அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற அந்தப் பல்கலைக்கழகம், அரசை வற்புறுத்தி வந்துள்ளது.
அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள நீதிமன்றத்தில், ஐந்து நிமிடம் வாசிக்கப்பட்ட அந்த தீர்ப்பில், இஸ்லாத்தின் மீது அவதூறு எழுதியதற்காக முன்று வருடத் தண்டனையும், அதிபரை விமர்சித்ததற்காக, ஒரு வருடமும் ஆக மொத்தம் நான்கு வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டார். சாதாரணமாக இவ்வகை குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் கால அளவு - 9 வருடங்கள். நீதிபதி தனது அறிக்கையை வாசித்த பொழுது, அமைதியாக இருந்த நபில், உடனடியாக சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
ஹாபிஸ் அபூ ஸாத், எகிப்து மனித உரிமை குழுவின் தலைவர், இந்த தீர்ப்பு மிகக் கடுமையானது என்று கூறியுள்ளார். என்றாலும், எகிப்து, தனது நாட்டின் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வண்ணமாக இந்த வழக்கைக் கருதி செயல்பட்டது என்பதே உண்மை.
ஒருவர் தனது வலைப்பதிவில், தனது சொந்தக் கருத்துகளை எழுதியது குறித்த அதிருப்தி காரணமாக இத்தனை கடுமையான தண்டனை வழங்கியது தவறு என அமெரிக்காவின் செனட் உறுப்பினர் இருவர் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் எகிப்திய தூதுவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.
செய்தி: The Gulf Today - Page 7 News Agency: Associated Press
வளைகுடா நாடுகளில் இருந்து வலைப்பதியும் நண்பர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கடந்த முறை துபாய் வலைப்பதிவர்கள் சந்தித்த பொழுது, இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுது எழுந்த ஒரு கேள்வி: இங்கு நடக்கும் நிகழ்வுகளை - அறிந்தவற்றை - தெரிந்தவற்றை - பார்த்தவற்றை அப்படியே எழுதலாமா என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்ட பொழுது, அவ்வாறு செய்யாமல் இருப்பதே நலம் என்று தான் முடிவு செய்யப்பட்டது. நான் எழுதும் செய்திகள் பெரும்பாலும், பத்திரிக்கைகளில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பத்திரிக்கைகளில் வரும் செய்திகளே. பல்வேறு பத்திரிக்கைகளை இணையம் மூலம் படிக்க வாய்ப்பிருந்தாலும், அவையெல்லாம் வளைகுடா ஆட்சியாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தப்படாததினால், அவற்றை மேற்கோள் காட்டி எழுதுவதில்லை. அவை செய்திகளாக மட்டும் தான் வாசிக்கிறேனே தவிர, அதை வைத்துக் கொண்டு, விமர்சனத்தில் இறங்குவதில்லை.
இங்கிருந்து எழுதும் நண்பர்கள் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் - ஆனால், ஆட்சியாளர்களை, அல்லது ஆட்சிமுறையை விமர்சிப்பது அத்தனை நல்லதல்ல.
சரி, சரி, பின்னூட்டங்களைக் கொஞ்சம் பார்த்து எழுதுங்க. அப்புறம் வெளியிடவில்லையென்றால், கருத்து சுதந்திரம் கொடுக்க மாட்டேனென்கிறான் என்று புலம்ப வேண்டாம்.
கருத்து சுதந்திரத்தை விட, கழுத்து சுதந்திரம் மிக முக்கியமல்லவா?
No comments:
Post a Comment