"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, February 18, 2007

கவிதைத் தருணங்கள்....

வருண் காந்தி எழுதிய இந்தக் கவிதை, அவருடைய The Otherness of Self என்ற அவருடைய முதல் கவிதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. மிக நேர்த்தியாக செய்யப்பட்ட அந்த புத்தக வடிவமைப்பில், பெருமளவில் ஆக்கிரமித்திருப்பது அடர்ந்த கறுப்பு அல்லது சாம்பல் வண்ணங்கள் தான். தனிமை, மரணம் பற்றிய சிந்தனைகள் மிகுந்த கவிதைகளுக்கு, துயரத்தின் சாயல்களைக் கொடுக்கின்றது இந்த கறுப்பு அல்லது சாம்பல் வண்ணங்கள்.

தன்னை நேரு குடும்ப பாரம்பரியக்காரன் என்று சொல்லிக் கொள்ளாமல், ஒரு மாணவன் என்று மட்டுமே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நான்கே வரிகள். மற்றபடி எந்த குறிப்புகளும் இல்லாமல், பெரும் பிரபலங்களின் வாழ்த்தொலிகள் இல்லாமல், இயல்பான ஒரு கவிதைத் தொகுதியாக வெளிக் கொண்டு வந்திருக்கும் இந்த கவிதைத் தொகுதியின் மற்றுமொரு சிறப்பு - ஓவியங்கள். அஞ்சோலி இளா மேனோன், மஞ்சித் பாவா, மனு பரேக், ஹுஸைன் இவர்களின் ஓவியத்திற்கு இடையில் நடக்கிற கவிதைகளுள் என்னைக் கவர்ந்த கவிதை ஒன்று கீழே:





மனநல காப்பகங்களும்
மருத்துவ மனைகளும்
இன்று சற்றேனும் மதிக்கப்பட்டன.


எனக்கு,
அவைகள் தாம் யதார்த்தங்கள்.


இசையின் அடிநாதமாய் ஒலிக்கும்
யதார்த்தங்கள்......

வலுவில் அமரச் செய்து
அருந்திச் சுவைக்கச் செய்யும்
யதார்த்தங்கள்......

நாளை
எனக்கு நினைவூட்டுகிறது -
இன்று எத்தனை இனிய நாள் என்று.

இப்பொழுது,
சிறிதாக தூரவிலகி ஓடும்
அல்லது வலிதாக விரைந்தருகே வரும்
பொருட்களைக் காட்டும் எனது கண்கள்,
என்மீது காட்சிகளை
அசுர வேகத்தில் மோத விடுகின்றன.

தாமரை இலை நீராக
தத்தளிக்கும் காட்சிகள்
என்னைத் தாமதப்படுத்துகிறது -
என் கவிதைக்கு கரு
என்ணுள்ளில் கலந்து போவதை.

எனக்குத் தான் தெரியவில்லை -
என்னைக் கவிஞனாக்கியது,
அமர்ந்து சிந்திக்க வைத்த
அந்தத் தருணங்கள் தானே தவிர
சிந்தனையில் தோன்றிய எண்ணங்கள் அல்ல,

2 comments:

Unknown said...

/எனக்குத் தான் தெரியவில்லை -
என்னைக் கவிஞனாக்கியது,
அமர்ந்து சிந்திக்க வைத்த
அந்தத் தருணங்கள் தானே தவிர
சிந்தனையில் தோன்றிய எண்ணங்கள் அல்ல,
/

உண்மையான வரிகள்.
எண்ணங்கள் எண்ணங்களாகவே இருக்கின்றன்... தருணங்கள் அமையும்போதே அவை சிறந்த கவிதையாக உருப் பெறுகின்றன...

அறிமுகத்துக்கு நன்றி நண்பரே...

நண்பன் said...

அருட்பெருங்கோ,

உங்கள் பெயர் அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.

அந்தக் கவிதையை மிகவும் பிடித்ததற்குக் காரணம் நீங்கள் சொன்னது தான்.

என்ன தான் சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருந்தாலும், சில அற்புதமான தருணங்களில் தான் அவைகள் கவிதையாக வெளிப்படுகின்றன.

நன்றி உங்கள் வருகைக்கு

அன்புடன்,
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்