எதிரியைத் தேடி...
மறைந்து கொள்ள
கிடைத்த ஒரு முதுகும்
இன்னொருவனுடையதாயிருந்தது
தற்செயல் தான்.
அந்த இன்னொரு முதுகின்
முன்புறம்
முகமேதுமற்ற
வெற்று வட்டங்களாயிருந்ததுவும்
தற்செயல் தான்
காலி பாத்திரங்களின்
குரல்களுக்கெல்லாம்
எதிரொலி வருமென்ற
நம்பிக்கை கொண்டதுவும்
தற்செயல் தான்
அநாமதேயங்களைப் புறக்கணித்து
எதிரிகளைத் தேடி
தன் தனித்த பாதையின் பயணம்
தற்செயல்களில் சிக்குண்ட
சிலரைப் போல
அவனுக்கு என்றுமே தற்செயல் அல்ல.
எத்தனை வலியவனானாலும்
எத்தனை கொடிய ஆயுதமேந்தினாலும்
முதுகிற்குப் பின் மறையாது
முகத்திற்கு நேராய் நிற்கும்
எதிரியைத் தான் பிடிக்கிறது
தன் அடையாளங்களுடன்
நேராக நிற்பதால்
எதிரியைக் கண்டு கொள்வது
என்றுமே நிகழ்வதில்லை
தற்செயலாய்.
No comments:
Post a Comment