"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, February 12, 2007

பர்ஸானியா - எழுதப்படாத தடை

திடமான நம்பிக்கைகளின் வழியாக படைக்கப்படும் திரை வடிவங்கள் மிகவும் குறைவு நமது நாட்டில். வேறு வழியில்லாது பார்த்து தொலைக்க வேண்டிய நிலையில் தான் இந்தியாவின் பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இடுப்பசைவுகளுக்கும், மார்பு குலுக்கல்களுக்கும் நடுவில், வெகு அபூர்வமாய் ஒரு சில நல்ல திரைப்படங்கள் வந்து விடும் பொழுது, பெரும்பாலும் அவை சிக்கலில் போய் சிக்கிக் கொள்கின்றன. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படம் - பர்ஸானியா.

குஜராத்தில், அரசினால் அல்லாமல், திரை அரங்கு உரிமையாளர்களால் மறுக்கப்பட்டிருக்கிறது திரையிடப்படுவதற்கு. அதற்கு காரணமாக திரை அரங்கு உரிமையாளர்கள் கூறுவது - மீண்டும் பழைய ஞாபகங்களைக் கிளறி விடும் வகையில் அமைந்த திரைப்படத்தை வெளியிட விரும்பவில்லை என்று.

பர்ஸானியாவின் கதை - ஒரு உண்மைச் சம்பவம். மோடி குடும்பத்தைச் சார்ந்த சிறுவன், கலவரத்தின் போது கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போய்விடுகிறான். (இந்த மோடி குடும்பத்தினருக்கும், குஜராத் முதல்வர் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.) குஜராத் கலவரத்தின் பின்னணியில், இந்தக் கதையை அமைத்து, ஆங்கிலத்தில் படமாக்கி வெளியிட்டிருக்கிறார் - ராகுல் தொலாக்கியா.

தணிக்கை குழு படத்தை வெளியிட ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். ஆனால், இந்தியாவில் அதிகாரப்பூர்வமற்ற தணிக்கைக் குழுவினர் பலர் இயங்குகின்றனர் என்பது எல்லோருக்கும் தான் தெரியுமே. அத்தகைய வடிவத்தில் ஒன்று தான் இப்பொழுது 'திரும்பிப் பார்க்க விரும்பவில்லை' என்ற வடிவத்தில், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ திரையரங்கு உரிமையாளர்களைக் கொண்டே மறுப்பு வரச் செய்துள்ளனர்.

தான் சார்ந்த நம்பிக்கைகளின் மீது கொண்டுள்ள உறுதியான நிலைபாட்டின் வழியாக படைப்புகளை உருவாக்கம் செய்வது குறைந்து வருகிறது. வாழ்க்கை சரிதம் என்ற பெயரில், லஞ்ச லாவண்யங்களை, வன்முறைகளை பீடத்தில் ஏற்றி வைக்கும் வகையில் திரைக்கதை வடிவமைத்து, திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டு, பின்னர் இது கற்பனைக்கதை என்று கூறிக் கொண்டே, பின்னணியில், பத்திரிக்கை சமுதாயத்தின் துணைகொண்டு, இது இன்னாரின் கதை என்று வதந்தி கிளப்பி, தன் வியாபாரத்தை சரிவர கவனித்துக் கொள்ளும் படைப்பாளிகளே இன்று பெருகி வருகின்றனர்.

சமூக நிகழ்வுகளை விமர்சன கண்ணோட்டத்தில் வித்தியாசாமான கோணத்தில் பார்க்கும் திரைப் படங்களை வெளி வர அனுமதிக்காததன் மூலம் - ஒரு சிறு கும்பல், தன்னை அதிகாரத்தை நிலை நிறுத்தம் செய்யும் சக்தியாகக் காட்டிக் கொள்கிறது. இவர்கள் மூலமே - நாம் நம் கலாச்சாரத்தை, பண்பாட்டை படைப்பு வடிவத்தில் கண்டடைய வேண்டும் என்னும் பொழுது, இந்தப் பண்பாட்டின் மீது படிந்துள்ள தூசுகளை கசடுகளை விமர்சிக்க - களைய முயற்சி எடுக்கும் எந்தக் கலைஞனும் இந்த சிறு கும்பலின் தயவை நாடி நிற்க வேண்டும் - தங்கள் எண்ணுபவற்றை சொல்வதற்குக் கூட. நல்ல திரைப்படங்களைத் தேடியலையும் குறைந்த எண்ணிக்கையளவே உள்ள இந்திய ரசிகர்களின் பாடு தான் திண்டாட்டம்.

எப்பொழுதும் பெண்களின் உடைகளைக் களைவதிலே, நாம் படைப்பாளிகள் காலந்தள்ள வேண்டியது தான் - துச்சாதனர்கள் போல, இந்தக் கலாச்சாரப் பாதுகாப்பு கும்பலின் முழு ஆதரவோடு.

சிந்திப்பது மட்டும் தான் இவர்களைப் பாதிக்கிறது. மற்ற எதுவுமல்ல.

3 comments:

G.Ragavan said...

நல்ல கருத்து. தவறுகள் எங்கும் நிகழ்வதுதான். ஆனால் தன் தவறைத் தானே சுட்டிக்காட்டும் எண்ணம் இன்னொரு சக இந்தியனுக்கு இருப்பதைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். 1947 earth என்ற படமும் இதே போன்ற சர்ச்சைக்குரிய படம்தான். பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொண்டது என்று நினைக்கிறேன். பிறகு வாட்டர். இப்பொழுது farzania. ஒவ்வொருவரும் தம்மீதான விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயங்குவதுதான் இதற்கெல்லாம் காரணம். உலகளாவிய உளவியல் பிரச்சனை இது. டாவின்சி கோடுக்கான எதிர்ப்பும் இத்தகையதோ என்று தோன்றுகிறது. இரண்டிலும் களங்கள் வேறு என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் தான் சார்ந்த ஒன்றின் மீதான விமர்சனம் அல்லது மாற்றுக் கருத்து என்பதற்கு ஒவ்வொருவரிடமும் தடை இருக்கிறது என்பதற்கு farzania தடை ஒரு எடுத்துக்காட்டு. இந்தப் படம் திரையிடப்படாவிட்டால் வேறெந்த இந்திப் படமும் குஜராத்திற்குப் போகாது என்று யாரோ அறிக்கை விட்டிருந்தார்களே.

நண்பன் said...

ராகவன்,

மிக்க நன்றி.

நமது நாட்டில், அடுத்தவருக்காக முடிவெடுப்பதில் பலருக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. அவரவருக்குத் தேவையான முடிவை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும் என்று விடுவதில்லை.

இன்னமும் கூட்டுக் குடும்பத்தில் கிடந்து புழுங்கும் அப்பாவிகளாய் வைத்து தங்கள் விருப்பங்களைத் திணிக்கும், 'தலை'களாகத் தான் இந்த இயக்கங்கள் இருக்கின்றன.

அவமதிப்புகளை எதிர்த்து களம் இறங்குவதில் இந்தப் பலம் தேவைப்படுகிறது என்பது உண்மையென்றாலும், எது அவமதிப்பு என்று தீர்மானிப்பதிலே வேறுபாடுகள் வந்து விடுகின்றன.

CD / DVD ஆக வெளியிடுவேன் என்றிருக்கிறார், ராகுல் தொலாக்கியா. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

G.Ragavan said...

farzania என்று குறிப்பிட்டிருக்கிறேன். அது தவறு. parzania என்பதுதான் சரியென்று நினைக்கிறேன். சரிதானா நண்பன். இந்தப் படமும் black friday என்ற படமும் இப்பொழுது பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்