Trial By bloggers
Trial By Bloggers
நாற்பத்தெட்டு மணி நேரங்களைத் தொடப் போகும் இந்த யுத்தத்தில், இன்னமும் நிலைமை தெளிவடையவே இல்லை. ‘முடிந்து விட்டது’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய ஒரு நிமிட இடைவெளிக்குள், அதிகாரிகள், ‘என்கவுண்டர்’ இன்னமும் முடிவடைய இல்லை, விலகுங்கள்’ என்று அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கு முன்னரே வெற்றி குரல்களும், பாராட்டு குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.
It’s spontaneous.
தேவையான ஒன்றும் கூட.
தங்கள் பணியை எந்த சார்புமற்ற பொதுமக்கள் உற்சாகக் குரல் கொண்டு ஆதரிக்கிறார்கள் என்பது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்த வீரர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தைக் கொடுக்கும். ஒவ்வொருவருமே தங்கள் பணிக்காக வெறும் சம்பளத்தை மட்டும் கொண்டே திருப்தியுறுவது கிடையாது.
Appreciation is an important motivation.
இந்தத் தாக்குதல் பற்றி, பலவகை எண்ணங்களும் கருத்துகளும் வலைத்தளத்தில் வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது பார்வையில் கருத்துகளை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனது கருத்துகளை சுதந்திரமாக வைக்க உரிமை இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் பின்னூட்டமிடவில்லையென்பதால், அவற்றைப் பற்றிய எனது எண்ணங்களை மொத்தமாக ஒரே பதிவாக எழுதி விடுகிறேன்.
‘இந்தத் தீவிரவாதம், கஜினி முகமது, கோரி முகமது வந்த பொழுதே வந்துவிட்டது’என்ற நகைச்சுவையுடன், ஒரு முழுநீள காமெடியுடன் இட்லிவடை தளம் ஆரம்பிக்கின்றது. புஷ்ஷின் உறுதியான தலைமையாலேயே மீண்டும் அங்கு ஒரு தீவிரவாத செயல் நிகழவில்லை என்றும் வாதிடுகிறார்..
‘அமெரிக்கர்களின் நலனை உலகம் முழுவதும் தாக்குவோம்’ என்ற அல்-கொய்தாவின் நிலைபாட்டையொட்டி, அமெரிக்கர்கள் இயங்கும் ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தத் தான் செய்கின்றனர் - அதை எதிர்த்துத் தான் அவர்களும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துகின்றனர் நேர்மையற்ற வழிகளில் என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி என்ன சொல்வது? புஷ்ஷின் இந்தத் தோல்வி தான்,சமீபத்தில் நடந்த தேர்தலில் அகோரமான தோல்வியை அவரது கட்சிக்கும், நண்பருக்கும் பெற்று கொடுத்ததும் என்பதுவும், 'மிக மோசமான அதிபர்' என்ற பெயருடனும், பெருத்த அவமானத்துடனும் தான் அவர் பதவி விலகுகிறார் என்பதும் தெரியாதவர்களாக இவர்கள். இல்லை, நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம் அதனால் உலகம் இருண்டுவிட்டது என்று நாங்கள் சொல்லும் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களது வாதத்தின் 'அதிபுத்திசாலித்தனம்' குறித்து நகைக்க வேண்டியிருக்கிறது. இறுக்கமான சூழ்நிலையைக் குறைக்கத் தேவையான காமெடி நடிகர்களின் பணியைச் செய்திருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாக். அரசைக் குறி வைத்துக் கூட தீவிரவாதத்தைத் தொடர்கின்றனர் என்ற பொழுது, அல்-கொய்தாவிற்கு யாரும் பொருட்டில்லை. இவர்களை ‘நல்லது / கெட்டது’ என்ற எல்லைக்குள் வைத்து மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர, வேறு எந்த சித்தாந்தாங்களுடன் இணைக்க முடியாது. தன்னிச்சையாக இயங்கும் ஒரு Evil force மட்டுமே இவர்கள். அதை நியாயப்படுத்த அவர்கள் எந்த ஒரு தத்துவத்தையும் இழுத்து வந்து தங்களுக்கு அரணாக நிறுத்தி வைக்க முடியும். Counter terrorism என்ற வகையில், தாங்கள் நீதி வழங்கப் போவதாக எண்ணிக்கொண்டு, தீவிரவாதத்தை கையிலெடுத்த சில அமைப்புகளைப் போன்றதே இந்த அமைப்பும். counter terrorism என்பது ‘ரா’வின் வேலை என்று சொல்லி மற்றொரு நகைச்சுவையாளர் ஒருவர் தனது தேசபக்தியையும் வெளியிட்டிருந்தார்.
அத்துடன், இவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு நரேந்திர மோடி தான் சரி என்ற தீர்வையும் முன்வைக்கிறார். டோண்டுவும் கூட அந்த கருத்தைத் தான் வைக்கிறார். இந்தத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுவது ஒன்று தான் வழி என்ற இனஒழிப்பை ஆதரிக்கும் இவர்களால் வேறு நற்சிந்தனைகளை முன் வைக்க முடியாது. இஸ்லாமியர்களை அழித்து ஒழித்த பின்பு, வேறு எவரைக் குறித்த counter terrorism குண்டுகளை சங் பரிவார்கள் தங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப் போகிறார்கள் என்பது ஒரு interesting question! அல்லது தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிடப் போகிறார்களா என்பதுவும் தெரியவில்லை. மூடிவிட மாட்டார்கள். அழித்தொழிப்பிற்கு, அவர்களது மேலாண்மையை எதிர்க்க பலர் இருக்கின்றனர்.
மறுபுறம் பல கேள்விகளை எழுப்பி, இந்தத் தீவிரவாதிகளை இந்துத்வத்தின் முகமாகப் பார்க்க முனைகிறது – சத்தியமார்க்கம். அந்தத் தீவிரவாதிகள், தங்கள் கைகளில் சிவப்புக் கயிற்றை அணிந்திருந்தார்கள் என்ற சாதாரண விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வருவது எத்தனை சரியாகும்?
என்றாலும், சத்தியமார்க்கம் எழுப்பிய முக்கியமான கேள்விகளில் ஒன்று – ஏன் ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்டார்? Counter terrorism என்ற பெயரில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்த சில அமைப்புகளைக் குறித்த தகவலை வெளிக்கொணர்ந்தார் – அவர்கள் சங் பரிவார் சித்தாந்தத்தில் வந்தவர்கள் தான் என்ற தகவலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், சங் பரிவார்களும், அதன் அரசியல் முகமான பிஜேபி-யும் இனியும் தீவிரவாத துருப்புச் சீட்டை எடுத்ததெற்கெல்லாம் வீசியெறிய முடியாது என்ற இக்கட்டான நிலைமைக்கு கொண்டு வந்த ஆத்திரம் இருந்தது. அதனால், தீர்த்துக் கட்டி விட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்தது.
ஆரம்பத்தில் அப்படித் தான் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்திருக்கும். ஆனால், தொடர்ந்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த நிலையின் உக்கிரம் அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது. இது குறித்து நான் பண்புடன் தளத்தில் 27/11/08 (http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/0a509464b1ee8136#) தளத்தில் எழுதியிருந்தேன் இவ்வாறு:
// ஹேமந்த கர்கரே - தானாகத் தான் அங்கு சென்றிருக்கிறார். அவரைக் கொல்வது தான்
உத்தேசம் என்றால், அவர்கள் இந்த வழியைத் தேடியிருக்க மாட்டார்கள். உயர் அதிகாரிகள் முன்னணியிலிருந்து சண்டையிடுவார்கள் என்று எவருமே எண்ணிப்பார்த்திருக்க முடியாது. அவரது பதவியின் தன்மையைக் கொண்டு பார்த்தால், அவர் பின்னால் நின்று கொண்டு, தனது கான்ஸ்டபிள்களை முன் அனுப்பி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக முன்னணிக்குச் சென்று தானே தீவிரவாதிகளை எதிர் கொண்டிருக்கிறார் என்ற பொழுது அவரது தீரம் பிரமிக்க வைக்கிறது. //
இது போன்று ஒரு உயர் அதிகாரியே துப்பாக்கியை எடுத்து வந்து, தனது படையினருடன் தோளாக தோள் நின்று போரிடுவார் என்று எந்த இயக்கமும் நம்பி திட்டம் தீட்டியிருக்க முடியாது. அதிகாரிகள் பெரும்பாலும் responsible for taking the decision – not for executing it themselves in the field. அவர் முன்னணிக்குச் சென்று யுத்தமிட்டது தீரம் என்றாலும், இன்று இழப்பு நமக்கு தான். இதையே என்றென்றும் அன்புடன் பாலாவும் தனது தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
சத்தியமார்க்கம் முன்வைத்த தியரி ஒத்துவருமா என்று தெரியவில்லை.
இந்த மாதிரி ஒருநிலை சார்பான கருத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிற தளங்களின் கருத்துகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழரங்கம், ராயகரன் எழுதிப் பதிவிட்ட, பம்பாய் பயங்கரவாதம் ஆளும் வர்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கட்டுரை படிக்க வேண்டும்.
// அரச பயங்கரவாதமும், மனித விரோதக் கூட்டத்தின் குறுகிய நலன்களும் தான் 'பயங்கரவாதத்தை" உற்பத்தி செய்கின்றது. இந்தப் பூமியில் சக மனிதனாக வாழமுடியாத நிலைமைதான் 'பயங்கரவாதத்தின்" வெளிப்பாடு. எப்படி மனிதன் இந்த உலகில் வாழமுடியாது அதிருப்தியுற்று தற்கொலை செய்கின்றானா, அப்படித்தான் 'பயங்கரவாதம்" எதிர் தாக்குதலாகின்றது. //
பயங்கரவாதத்தின் உற்பத்தி மூலத்தைத் தொட்டிருக்கிறார், இராயகரன்.
// சட்டம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்பது அனைவருக்கும் மறுக்கப்பட்டு, அது சில சமூகங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் சிறப்பாக அடைபடும் போது, அதன் எதிர்வினை தான் 'பயங்கரவாதம்".//
என்று அது எவ்வாறு வளர்கிறது என்பதையும் பொதுப்படையாகவே சொன்னவர்,
// பம்பாய் தாக்குதல் கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, இந்து பயங்கரவாதம் நடத்திய கொடூரத்தின் மொத்த விளைவாகும். //
என்று இந்த இரு தின யுத்தத்தை இந்து பயங்கரவாதத்தின் எதிர்வினையாகப் பார்க்கிறார். இந்தத் தாக்குதல், இந்து பயங்கரவாதத்திற்கு எதிரான பின்வினை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இன்றைய தினத்தில் நடந்த பம்பாய் தாக்குதல் குறி வைத்தது – அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இஸ்ரேல் மக்கள். அயோத்தி சம்பவத்திற்குப் பின், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தாக்குதல் தொடுத்தவர்கள் – இப்படி ஒரு selected targetஐ குறிவைத்து இயங்கியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு இந்திய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் குறியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நிகழ்ந்தது – குறி வைக்கப்பட்டவர்களில் எவரும் இந்தியர்களாக இல்லை.
இறந்து போனவர்களில் இந்தியர்கள் இருக்கக்கூடும் – அது, crossfireல் மாட்டிக்கொண்டவர்கள் தான். குறிப்பாக ஊழியர்கள். தாஜ் ஊழியர்கள்.
அதனால், இந்த மும்பை தாக்குதல், வெறுப்படைந்த இந்திய முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் – அதற்கான நியாயம் அவர்களுக்கிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை மறுக்கிறேன்.
மேலும் ஊடக உலகைப் பற்றிய குறைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் அதை ஒரு வன்முறையாகச் செய்கிறார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தே திணிப்புகளே – செய்திகளை தங்கள் நலனுக்குகந்ததாக மாற்றிப் பேசவைப்பதே – ஊடக வன்முறைகளாக மாறுகிறது. ஆனால், இங்கு எந்த சித்தாந்த திணிப்புமின்றி, காட்சிகளை அது நிகழும் வகையில் அப்படியே காட்டுவது என்பதை வன்முறையாகப் பார்க்க முடியாது. அதிலும், சில காட்சிகளை அவர்களே தவிர்த்துவிட்டார்கள் என்பதுவும் தெரிய வந்தது. இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் எந்த ஒரு ஊடகமும், எந்த ஒரு முடிவையும் செய்யாமல், நாலு ‘எக்ஸ்பர்ட்டுகளைக் கூப்பிட்டு’ தாங்கள் கண்டுபிடித்த முடிவைச் சொல்லி, கருத்து கேட்காமல் இருந்ததே ஒரு ஆறுதல்.
அதை பின்னர் செய்யக்கூடும். ஆனால், அதை செய்யாது நிகழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதை குறை கூற முடியாது. இது குறித்து நான் எழுதியது:
// மேலும் ஒரு முழு இரவு முழுக்கவும் விழித்திருந்து - 12:30 லிருந்த்து காலை 10:00 மணி வரைக்கும் தொடர்ந்து பார்ர்த்த பொழுது - ஒரே ஒரு வார்த்தை கூட 'islamic terrorist' என்ற வார்த்தைப் பேசப்படவே இல்லை. முதன் முதலாக ஒரு செய்தியை அச்சத்துடனும், பதட்டத்துடனும் பாராமல், ஒரூ இந்தியன் என்ற உணர்வுடன் பார்க்க வைத்தது. இப்பொழுது கூட, terrorist என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
இனி, இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை -மாறாக அவர்களை கெட்டவன் என்ற நோக்கை மட்டும் கொண்டே பார்க்க வேண்டும் என்ற புரிதலுக்கு வந்திருக்கின்றனர்ர். முதன்முதலாக, அத்வானி அரசைக் குறை கூறாமல், மன்மோகன்சிங் குடன் மும்பை வருவதற்கு தயாராகியிருக்கிறார். தீவிரவாதத்திற்கு எதிராக, ஒருமித்த குரல்
ஒன்றாக எழுந்திருக்கிறது. அதைவரவேற்கத் தயாராகுங்கள்.//
தீவிரவாதம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு மதத்துடன் அதை இணைப்பதினால், தீவிரவாத ஒழிப்பு என்ற பாதையை விட்டுவிலகி மததுவேஷம் என்ற பாதையிலே மட்டும் தான் பயணம் செய்வோம். தீவிரவாதத்தை GOOD Vs EVIL என்ற பார்வையைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும்.
பின் எவர் தான் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை trial by media ஆவாக எவரும் செய்ய வேண்டியதில்லை. அதற்கான துறைகள் விசாரித்து, முறைப்படியான தகவல்களைக் கொடுக்கட்டும் என்று பொறுத்திருக்கத் தான் வேண்டும். இல்லையென்றால், ஊடக வன்முறைகள் என்று புலம்பும் பிளாக்கர்கள், தாங்கள் செய்யும் ‘வன்முறையைக்’ காண கண்ணில்லாதவர்களாகிவிடுவார்கள்.
Trial by media என்பது போய் trial by bloggers என்ற தளத்திற்குப் போய்விடுவோம்
அனைவரும், தீவிரவாதம் குறித்த பார்வையில் ஒரு மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் – including trial by blogs.