"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, November 23, 2008

தமிழீழ அங்கீகார மாநாடு

வருகின்ற டிசம்பர் 1, அன்று 'தமிழீழ அங்கீகார மாநாடு' ஒன்றை விடுதலை சிறுத்தைகளின் இளஞ்சிறுத்தைகள் நடத்துகின்றனர். அதில் அனைவரும் பங்கேற்று ஆதரவு குரல் கொடுங்கள்.

நவம்பர் 26ஆந் தேதியன்று, மதுரையில் நடத்துவதாக இருந்தார்கள். ஆனால், சட்டக் கல்லூரியின் பிரச்சினையால், மதுரையில் சிறுத்தைகள் கூடினால் தென் மாவட்டங்கள் சூடேறும் - நீங்கள் சென்னைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்ற காவல் துறையினரின் வேண்டுகோளின் படி, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

அனைவரையும் அழைத்துள்ளனர்.

ஒரு தேசமாக அங்கீகாரம் கிடைப்பது ஒன்று தான் மீதம் என்ற சூழலில், அரசினால் அந்த அங்கீகாரம் கிடைக்காது என்ற பொழுதில், மக்களாக அந்த அங்கீகாரம் வழங்க, முனைந்திருக்கின்றனர். ஈழமக்களின் போராட்டங்களின் பொழுது, தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பலரும் - தலைவர்கள் உட்பட கலந்து கொள்ளும் இந்த விழாவில், அனைவரும் கலந்து கொள்வது, சிறப்பானதாக இருக்கும்.

4 comments:

Anonymous said...

விடியலை எதிர்நோக்கி, மரணத்தின் வாயிலில் காத்திருக்கும் வன்னிமக்கள்!

வன்னியூரான்

வன்னியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும், புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இலங்கை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு எந்தப்பாதை வழியாக ஓடுவது என்பதுபற்றி திட்டம்தீட்டுவதிலும் அல்லது எப்பொழுது இலங்கை இராணுவம் இங்கு வந்து தம்மை விடுவிக்கும் என்று எதிபார்த்துக் காத்திருப்பதிலும்தான் நாட்களை ஓட்டிவருகின்றனர். ஏனெனில் அவ்வளவு தூரத்துக்கு புலிகள் எங்களதுவாழ்க்கையை சின்னாபின்னப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அமைதியாக வாழ்ந்த வன்னி மக்களின் வாழ்க்கையில் இடிவிழுந்தது போல, 1995ல் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட புலிகள் வந்து புகுந்தார்கள். அன்றிலிருந்து எங்கள் வாழ்க்கை பரிநாசம்தான்.

யாழ்ப்பாணத்து மக்கள் காணியை பூமியை விற்று சுட்டென்றாலும் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிடுவார்கள். மீதம்மிச்சமாக புலி இயக்கத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்தவர்களும், களமுனைக்கு போகாமல் புலிகளின் தலைவர்களாகவோ அல்லது புலிகளின் அரசியல் - கலாச்சார வேலைகளில் ஈடுபடுபவர்களாகவோ இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். புலிகளுக்கு வாய்ச்சது மட்டக்களப்பானும் வன்னியானும் தான். அதிலும் மட்டக்களப்பு புலிகள் 2004 ஆண்டில் புத்தியாக கருணா-பிள்ளையான் தலைமையில் விலகிச்சென்று தப்பிக்கொண்டார்கள். மிச்சமாக அகப்பட்டு கொண்டது வன்னிச்சனங்கள்தான். குஞ்சுகுருமான், குடும்பகாரர், கிழடுகள் என ஒருவர் மிச்சமில்லாமல் எல்லோரையும் புலிகள் போர்முனைக்கு கொண்டுசென்று பலியிட்டு வருகிறார்கள். இப்ப இங்கே வன்னியில் எல்லோருடைய வேலையும் காலையில் எழுந்து நிவாரணத்துக்காக சங்கக்கடையிலை கியூவிலை நிற்பதும், பின்னர்போர்களத்திலேயிருந்து பிரேதமாக வருகிறவர்களின் செத்தவீட்டுக்கு செல்வதும்தான். அதனால் தான் இந்த நரக வாழ்க்கையிலிருந்து எப்பொழுது இலங்கை இராணுவம் வந்து காப்பாற்றும் என்று வன்னிச்சனங்கள் நேராத கடவுளையெல்லாம் நேர்ந்து கொண்டு திரியுதுகள்.

இந்த உண்மையை சொல்லும்போது வெளிநாடுகளிலை இருக்கிற எங்கடை தமிழ் ஆட்களுக்கும், தமிழ்நாட்டிலை இருந்து சத்தம் போடுகிற அரசியல் -சினிமாகாரருக்கும் சிலவேளைகளில் நம்ப முடியாமல் இருக்கும். அவர்கள்நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் வன்னிச்சனங்களின் உண்மைநிலை. தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை இங்கே வந்து உண்மை நிலையை பார்க்கச்சொல்லி, மகிந்த ராஜபக்ச அழைத்த நேரம், அவர் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். கருணாநிதி வன்னியை வந்து பார்த்திருந்தார் என்றால், தமிழ்செல்வன் போன்றோருக்கு இரங்கல் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, புலிகளால் வன்னிச்சனங்கள் படுகின்ற அவலத்தை வைத்து, கண்ணீரை வரவழைக்கிற மாதிரி இன்னொரு ‘பராசக்தி’ பட வசனம் நிச்சயம் எழுதியிருப்பார். புலிகள் ஒருபக்கத்தில் வன்னிச்சனங்களை வைத்து கசக்கி பிழிந்தாலும், இலங்கை இராணுவம் பரந்தனையும் கிளிநொச்சியையும் பிடித்த பின்னர் முல்லைத்தீவை நோக்கி வந்தால் என்னசெய்வது என்ற பயக்களையுடனும்தான் நடமாடுகிறார்கள். புலிகளுடனான இறுதியுத்தத்தில் தாங்களும் அதிகம் பாதிக்கப்படலாமென வன்னிச்சனங்களும் பயந்துகொண்டுதான் இருந்தனர். ஆனால் விசுவமடுவிலிருந்துஒட்டிசுட்டான்வரை பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்த பிறகு, வன்னிச்சனங்களுக்கு ஓரளவு நிம்மதி.

அந்த அறிவிப்புக்கு பிறகு எல்லா சனங்களும் இப்ப அந்தப்பகுதிக்குள்ளே வந்து குவியத்தொடங்கிவிட்டுதுகள். ஆனால் முல்லைத்தீவு, பரந்தன், கிளிநொச்சி போன்ற சில இடங்களில் புலிகள் தங்களுடைய பாதுகாப்புக்காக, சனங்களை வெளியேறவிடாமல் புலிகள் மறித்துவைத்திருக்கிறார்கள். அதனால் அந்த இடங்களிலுள்ள புலிகளின் முகாம்களுக்கு விமானப்படை குண்டு போடும்போது, அநியாயமாக எமது மக்களில் சிலர் சாக நேரிடுகின்றது. மக்களை முதலிலேயே பாதுகாப்பான இடங்களுக்கு போகவிட்டிட்டு, புலிகளும் இராணுவமும் மகாபாரதப்போர் மாதிரி நேருக்குநேர் நின்று சண்டைபிடித்து தங்களுடைய வீரத்தைக் காடடியிருக்கலாம். புலிகள் வன்னிமக்களை தமது பாதுகாப்பு கேடயமாக வைத்திருப்பதால், தங்களை வெளியேற விடமாட்டார்கள் என்பது சனங்களுக்கு தெரியும். ஆனால் ஐக்கியநாட்டுச்சபையும் வெளிநாடுகளும் இந்தியாவும்புலிகளை வலியுறுத்தி, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு போகவைப்பார்கள் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. தமிழ்நாட்டுக் கட்சிகளாவது முயற்சிக்கும் என்றால் அவர்களும் வன்னி மக்களுக்கு உதவாமல் புலிகளின் பக்கம் நின்று கொண்டார்கள். இப்பொழுது வன்னிச்சனங்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்றில் வன்னியிலிருந்து மெதுவாகக் கழன்று இலங்கை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு ஓடவேண்டும் அல்லது இலங்கை இராணுவம் வந்து அவர்களை விடுவிக்க வேணும். ஆனால் இலங்கை இராணுவம் முன்னேற, முன்னேற புலிகள் மக்களையும் தமது பாதுகாப்புக்கு கொண்டு போகிறார்கள். இப்படியே போனால் இறுதியில் என்ன நடக்கப்போகிறதுஎன்பதுதான் மக்களின் கவலையாக இருக்கிறது.

1995ல் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது, புலிகள் வலிகாமம் மக்களை வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் கொண்டுபோனார்கள். இராணுவம் மிருசுவில் வரை முன்னேறியபோது, வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் தங்கிநின்ற சனங்கள், புலிகளின் தடையையும்மீறி பிய்ச்சுக்கொண்டு, கொடிகாமம் - நெல்லியடி வீதிக்கூடாகயாழ்ப்பாணத்துக்கு மீண்டும் திரும்பி குடியேறிவிட்டார்கள். அவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பிப்போனவர்களை வெருட்டி, ‘துரோகிகளே இருங்கோ, மீண்டும் யாழ்ப்பாணம் வந்து உங்களை கவனிக்கிறோம்’ என புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எச்சரிக்கை கவிதை எழுதினதுதான் மிச்சம். வன்னிக்கு அஞ்ஞாதவாசம் போன புலிகள் போனதுதான். திரும்ப வரவே இல்லை. இனிமேல் திரும்பிவரப்போவதுமில்லை.

1995ல் யாழ்ப்பாணத்து சனம் பிய்ச்சுக்கொண்டு போனதுமாதிரி, வன்னியிலும் இலங்கை இராணுவம் முன்னேறி வரும்போது, இங்குள்ள சனங்களும் பெருமெடுப்பில் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு பரவலாக நிலவுகிறது. ஏனெனில் இராணுவம் கிழக்கே குமுழமுனையிலிருந்தும், மேற்கே புளியங்குளம், மாங்குளம், பரந்தனிலிருந்தும், புலிகளின் கடைசிஇருப்பிடமான முல்லைத்தீவை நோக்கி முன்னேறும்போது, புலிகள் கிழக்குப்பக்க கடல்மார்க்கமாக தாய்லாந்துக்கோ அல்லது ஏதாவது ஆபிரிக்க நாடு ஒன்றுக்கோ தப்பி ஓடுவதைத்தவிர, புலிகளுக்கு வேறு வழியில்லை. அந்தநேரம் வன்னிமக்களுக்கும் இலங்கை இராணுவத்திடம் போவதைத்தவிர வேறுவழியில்லை. இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துப் போவதைப்போல, இப்பொழுதே சில வன்னிமக்கள்களவாக யாழ்ப்பாணம் செல்கிறார்கள். புலிகளுக்கு வேண்டிய மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களை சேர்ந்தவர்களை, புலிகளே வன்னியைவிட்டு வெளியேற அனுமதித்து வருகின்றனர். சில வசதியானவர்களிடம் புலிகளின் சில பொறுப்பாளர்கள் இலட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டும் வன்னியைவிட்டு வெளியேற ‘பாஸ்’ வழங்குகின்றனர்.

ஆனால் வன்னியிலுள்ள சனங்களுக்கு இன்னொரு பயமும் இருக்கின்றது. புலிகள் வன்னியைவிட்டு தப்பியோடுவதற்கு முன்னர், பொதுமக்களை கண்டபடி கொலைசெய்யக்கூடும் என்ற அச்சமும் சிலரிடம் நிலவுகின்றது. ஏனெனில் இப்படியான கொடுரமான இயக்கங்கள், உலகின் பல பாகங்களில் தமது இறுதி அழிவு நேரத்தில், இப்படியான அழிவு வேலைகளை செய்துள்ளார்கள். 1971ல் பங்களாதேசில் (அப்போது அது கிழக்குபாகிஸ்தான்) இந்திய இராணுவம் நுழைந்து தலைநகர் டாக்காவை விடுவித்த போது, அங்கு பாகிஸ்தானுக்காக போரிட்டுக் கொண்டிருந்த ‘ரசாக்கர்கள்’ என்ற குண்டர்படை, வங்கமக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துவிட்டுத்தான் வெளியேறிச்சென்றது. புலிகளும் தமது இறுதிக்கட்டத்தில் வன்னிச்சனங்களை கொன்றுவிட்டு, அதன் பழியை இலங்கை இராணுவத்தின் தலையில் போடக்கூடும் என்ற அச்சம்இங்கு சிலரிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

எனவே புலிகளை அவ்வாறு செய்துவிடாமல் தடுக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமையாகும். குறிப்பாக புலிகளுடன் நெருக்கமாக ஒட்டி உறவாடுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள், புலிகளுக்கு தகுந்த புத்திமதி சொல்லி, புலிகள் எங்களுக்கெதிரான விபரீத நடவடிக்கைகளில் இறங்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வன்னி மக்கள் கடந்த 13வருடங்களில் தமது பிள்ளைகள், சொத்து, சுகங்கள் என எல்லாவற்றையும் புலிகளிடம் இழந்துவிட்டார்கள். மிகுதியாக எங்களிடம் இருப்பது உயிர் ஒன்றே. அதையாவது இழந்துவிடாமல் இருக்க உதவுமாறு அனைத்துலகத்திடம் வேண்டிநிற்கின்றோம்.
courtesy: thenee.com

நண்பன் said...

மிக்க நன்றி, அநாநி.

உங்களின் நீண்ட பதிவு ஒன்றையே இங்கே வெளியிட்டு விட்டீர்கள்.

புலிகளின் மீது உங்களுக்கிருக்கும் மனக்குறை, உங்கள் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஏனென்றால், நான் அறிந்தவரையில், எனக்குத் தெரிந்தவை - புலிகளே மக்களை அரவணைத்து நிற்கிறார்கள் என்பது மட்டுமே.

எந்த ஒரு போராட்ட வரலாற்றிலும் மாற்றுக் கருத்துகள் இருக்கத் தான் செய்கின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்திலும் கூட மாற்றுக் கருத்துகள் இருக்கத் தான் செய்தன.

அதனால், எந்த ஒரு இயக்கத்தையும், முற்றிலும் ஒர் புனிதமான அங்கமாக கருத முடியாது. தேவைக்கேற்ப அவர்கள் சில செயல்களை - பலரின் நலன் கருதி எடுக்கும் பொழுது, அது ஒரு சிலருக்குப் பாதகமாக அமைந்துவிடக் கூடும். அதனால், அந்த இயக்கமே இருக்கக் கூடாது - அழித்துவிடுவது என்பது, பாதிக்கப்பட்டவரின் சுயநலம் அன்றி, பொது நன்மைக்கு எந்த விதத்திலும் உதவாது.

நிற்க, புலிகள் உங்களுக்குத் தீது செய்து விட்டார்கள். அதனால், அவர்கள் வேண்டாம். சரி, பின் எங்கு செல்வீர்கள். மகிந்தாவிடம்?

ஒரு தமிழன் அதிபர் ஆனால், என்று ஒரு சிறுபதிவை வெளியிட்டதற்காக ஒரு பதிவரையே கைது செய்து போனவரிடமா? கனவு கூட காணாதே என்று கபாலத்தினுள் கை விட்டு, கனவைக் கலைக்கும் ஒரு கூட்டத்தாரிடையேத் தான் போக வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

கர்ப்பிணி பெண்களின் கருவிலே கைவிட்டு, சிசுவை நசுக்கிக் கொள்ளும் கொடூர மனநிலை தான் அங்கு நான் காண்கிறேன்.

யுத்தத்தில் நீங்கள் தோல்வியடைந்தால், பின்னர் கைகள் கட்டப்பட்ட நிலையில் நின்று தான் பேச முடியும். நீங்கள் நினைப்பது போல், சமமான இருக்கையில் அமர்ந்து அல்ல.

இந்தப் பதிவில், ஒரு சுயநலத்தை மட்டுமே காண முடிகிறது.

மன்னிக்கவும், தோழரே.

உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், அதற்காக புலிகளைக் காட்டிகொடுத்து விடலாம் என்று பேசாதீர்கள்.

அது உங்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்காது.

நன்றி.

HK Arun said...

//புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு இலங்கை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு எந்தப்பாதை வழியாக ஓடுவது என்பதுபற்றி திட்டம்தீட்டுவதிலும் அல்லது எப்பொழுது இலங்கை இராணுவம் இங்கு வந்து தம்மை விடுவிக்கும் என்று எதிபார்த்துக் காத்திருப்பதிலும்தான் நாட்களை ஓட்டிவருகின்றனர்.//

இப்படியான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி புலிகளிடம் இருந்து மக்களைப் பிரித்து அல்லது வெறுக்கவைத்து பிளவுப்படுத்தி விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடவே சிங்கள அரசு கணவு கண்டு வருகின்றது.

இதனை தூர நோக்கோடு சிந்தித்து உணரப்பட வேண்டும். இல்லையேல் இலங்கையில் மட்டுமன்று உலகில் எந்த ஒரு தேசத்திலும் தமிழன் எனும் ஓர் இனம் சுதந்திரம் எனும் பேச்சையே எடுக்காத வாறு உலக அரங்கில் முடுக்கப்பட்டுவிடும். உலகின் நிரந்தர அடிமை இனமாக மாற்றப்பட்டுவிடும்.

இன்றையப் போர் என்பது எமது நாளைய சந்ததி கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்கானதே. இப்போரில் தமிழர் தரப்பு தோழ்வியுறுமானால், தமிழரை அடிமைப்படுத்தப் பட்டு அவர்களால் நிர்பந்திக்கப்படும் சட்டத் திட்டங்களுக்கு மட்டுமே தலையசைத்து நிரந்தர அடிமைகளாக்கப்படும். இலங்கையில் தமிழர் என்று ஓரினமே வாழ்ந்ததற்கான தடயம் இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

எமது குழந்தைகள் நாளைய இலங்கையில் உயிருடன் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்று நினைப்பது அறிவுடைமையல்ல.

நண்பன் said...

அருண்,


// இன்றையப் போர் என்பது எமது நாளைய சந்ததி கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்கானதே. இப்போரில் தமிழர் தரப்பு தோழ்வியுறுமானால், தமிழரை அடிமைப்படுத்தப் பட்டு அவர்களால் நிர்பந்திக்கப்படும் சட்டத் திட்டங்களுக்கு மட்டுமே தலையசைத்து நிரந்தர அடிமைகளாக்கப்படும். இலங்கையில் தமிழர் என்று ஓரினமே வாழ்ந்ததற்கான தடயம் இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். //


எல்லோரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

மிக்க நன்றி அருண்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்