"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, November 25, 2008

மைக் ஜாக்ஸனும், பேசப்பட வேண்டிய வரலாறுகளும்!!!

MJ இணைந்ததில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை தான். இங்கு அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டதை பெருமையாகச் சொல்லவில்லை. ஆனால், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்பதை மட்டும் மறுக்க முடியாது. செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் இன்று பல வலைப்பூக்கள் / குழுமப் பதிவுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒரு செய்தி மட்டுமே!!!


எப்படி இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி?


இஸ்லாம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு செய்தியாக்கும் பொழுது, அதை மறுப்பதுவும், ஒரு செய்தியே. பொய்களுக்கிடையில் 'அது அவ்வாறில்லை' என்ற மறுப்பு தருவதற்கு இதுவும் ஒரு செய்தியே.


இந்த வகையான செய்திகளை ஒதுக்குவதன் மூலம், இந்த உலகில் ஒவ்வொரு மூலையிலும், ஒரு ஒடுக்கப்பட்ட இனம், மேலாண்மைமிக்கதாகத் தங்களைக் கருதிக்
கொள்ளும் ஒரு சமூகத்திடமிருந்து, எத்தகைய கொடுமைகளை, இன்னல்களை ஏற்க வேண்டியதிருக்கிறது என்ற வரலாற்றையும் மறந்து விட வேண்டிய சூழலில் இருப்பவர்களாகி விடுவோம்.


மீனாட்சிபுரம் - அன்று செய்தியாகத் தான் செய்தது. பலத்த நெருக்கடியை உண்டாக்கிய செய்தி. பல அரசியல் குழுமங்களும், சமூக தொண்டாற்றும் இயக்கங்களும், இந்து, இஸ்லாமிய இயக்கங்களும் பல நாட்கள் முகாமிட்டு, எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்ற சூழ்நிலையில் தான் இயங்கியது. அன்று அது ஒரு வலுவான செய்தியாக இருந்தது. மேற்சாதியினர் என தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், எவ்வாறு தங்கள் செயல்களைத் திரும்பிப் பார்க்க வைக்கப்பட்டனரோ, அது போலவே தான் இதுவும். பின்னர் கோரியூர் என்ற சம்பவங்கள் பத்திரிக்கைகளால் மூடி மறைக்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தது எல்லாம் செய்தி ஆகவில்லையே - அதனால், வேறு எதுவுமே செய்தியாகிவிடக்கூடாது என்ற கட்டளைகள் ஏதும் உண்டோ? இல்லை. பத்திரிக்கைகள் கொண்டு வராத பொழுது, அதை தெரிந்தவர்கள் செய்யலாம்.


இவ்வாறு செய்திருக்காவிட்டால், யாருக்குமே மால்கம் X என்பவர் யார், கறுப்பின மக்களுக்காக அவரது போராட்டத்தின் இறுதியில், தன்னை இஸ்லாமித்திற்கு மாற்றிக்கொண்ட வரலாறு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. சமூகக் குற்றவாளிகளுடன் தொடர்பிருந்ததாகக் கூறி, சிறை வைக்கப்பட்டார். இந்த சிறுமையிலிருந்து, வெளியேற வாய்ப்பேயில்லையா என்று தவித்த பொழுது தான், அவருக்கு Nation of Islam கிடைத்தது. இது ஒரு விடுதலையைத் தருமென நம்பினார். தலித் மக்களுக்கு எப்படி, பௌத்தம் ஒரு வழியாகுமென அம்பேத்கர் நம்பினாரோ, அது போன்ற ஒரு நம்பிக்கை தான் இது. பின் அவர் இஸ்லாத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து, அதையே தன் மக்களுக்கும் சொன்னார். இன்று அமெரிக்காவில், எல்லா எதிர்ப்புகளையும் மீறி, இஸ்லாம் வளர்கிறது என்றால், இந்த மதமாற்றமும் காரணம். ஒரு வரலாறாக, கறுப்பின மக்களிடையே பேசப்பட்டு வருவதினால் தானே?

(1960ல் தங்கம் வென்ற பொழுது)

பின்னர் வந்த காஸ்ஸியஸ் க்ளே என்பவரை யாருக்கும் தெரியாதிருக்கலாம். முகமத் அலி என்று தன்னை மாற்றிக் கொண்ட பின்பு, அவர் வாழ்ந்த வாழ்க்கை, எந்த இஸ்லாமியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். தெரு வீதிகளில், சண்டையிடும் பக்கத்து தெரு ரவுடி போலத்தான் அவர் வாழ்வும் தொடங்கியது.

ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில், தங்கம் வென்ற அவரை, அமெரிக்கா எப்படி வரவேற்றது தெரியுமா? க்ளேயின், மூதாதையரில், எங்கோ ஓரிடத்தில், வெள்ளை ரத்தம் கலந்து விட்டிருக்கிறது – அதுவே காரணம் என்றது.


பழக்கப்பட்ட வாக்கியமாகத் தோன்றுகிறதா?


அது தான் உண்மை. ஆத்திரம் பொங்க, தான் வாங்கிய தங்கத்தை, மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் விட்டெறிந்தார். தன்னை, சமமானவாக மதிக்கும் ஒரு புதிய பாதையைத் தேடினார். அவர் கண்டு கொண்டது தான் – இஸ்லாம்.


வியட்நாம் யுத்ததிற்கு அவர் ஆதரவைப் பெற்றுவிட முனைந்த அமெரிக்காவிற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? வியட்நாமியருக்கும் எனக்கும் எந்தப் பகையுமில்லை என்றார். அன்று அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலிலும், அந்த வியட்நாம் யுத்ததிற்கு எந்த விதத்திலும் தன் பெயரை வழங்க மாட்டேன் – தேவையானல், என்னைக் கைது செய்து கொள் என்றார்.


அவரை வசை பாடிய அதே அமெரிக்கா, 1960ல் ரோம் ஒலிம்பிக்கில் வென்ற தங்கத்தை கோபம் கொண்டு நதியில் தூக்கியெறிய வைத்த அதே அமெரிக்கா, பின்னர் அவரைக் கொண்டே 1984 LA ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வைத்து, விண்ணதிர கரகோஷம் செய்து, தன் மீது படர்ந்த கறையைக் கழுவி கொண்டது. அவர் எப்பொழுதோ, மத எல்லைகளைக் கடந்து விட்டார். ஆனால், அவ்வாறு கடந்து போகும் நிலைமையைத் தந்தது - இஸ்லாம்.


கறுப்பின மக்களை விட்டு விடுங்கள் - Cat Steevens வரலாறு தெரியுமா? அவர் கறுப்பினத்தைச் சார்ந்தவர் இல்லை. வெள்ளையர் தான். எந்த சூழல் அவரை நிர்ப்பந்தித்தது? தனது பத்தொன்பதாவது வயதில், காசநோயால் அவதிப்பட்ட பொழுது, மருத்துவ மனை நரகத்திலும், அருகே மனிதர்கள் இறந்து போவதைக் காண்பதுமாக கழிந்த நாட்களில், அவருள் எழுந்த கேள்வியே அது. தொடர்ந்து, அவர் அச்சத்துடன் தன் மீத வாழ்க்கைக்காக, அலைபாயும் மனதுடன் தவித்த கணங்களே, அவரை இறைவனைத் தேடச் சொல்லித் தூண்டியது. அவர் முதலில் தியானம் செய்தார். சைவத்திற்கு மாறினார். பிற மதங்களின் நூல்களைத் தேடித்தேடி படித்தார். புத்தம், ஜென், ஐ சிங்க், எண் கணிதம், டாரோட் கார்ட், ஜோதிடம் என சகல தளங்களிலும் தேடினார்.


இந்த நிலையில், மொராக்கோவிற்கு சென்றிருந்தவர், தொழுகை அழைப்பைக் கேட்டார் –


‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’


உடல், மனம் என தன்னை முழுமையாக ஆக்கிரமித்த அதை ஒரு இசையாகக் கருதினார். அருகே இருந்தவர்களிடம் அதைக் கேட்ட பொழுது, அவர்கள் அவருக்கு விளங்கும் மொழியில் சொன்னார்கள் –

It’s the music of God.


மரணத்தின் விளிம்புகளில்
தாகமெடுத்தலையும் மனதை
உனது இசையால் நிரப்பினாய்
இறைவா
என்னை உன் பாதையில் அழைத்துக் கொள்.


இறைவனின் இசையில் உடலும், மனமும் குழைந்தாலும், இன்னமும் முழுமையான இஸ்லாமியனாக உள்ளே நுழையவில்லை. அதற்கு இதைவிட இன்னமும் அழுத்தமான கணங்கள் காத்திருந்தன.


மாலிபொ கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடித்துச் செல்லப்பட்டார். இனி, அடுத்த கணம் மரணம் என்ற தீர்மானத்தின் இறுதியில், அவர் இரைந்து இறைவனை உதவிக்கு அழைத்தார் – ‘இறைவா, என்னைக் காப்பாற்று, இனி என்றென்றும் உன் பாதையில் நானிருப்பேன்’ அடுத்து நிகழ்ந்ததை அவரே சொன்னார் – ஒரு பெரும் அலையொன்று என்னைத் தூக்கி வந்து கடலின் கரையில் போட்டது.


ஒரு பெரும் மாற்றத்திற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்ட பொழுது, அவருடைய சகோதரன் ஜெருசலேத்திலிருந்து ஒரு நூலை வாங்கி வந்திருந்தார் –

என்ன தெரியுமா?


குரான்


அதை முழுவதுமாக வாசித்து விட்டுத் தான் கீழே வைத்தார். நான் என் வாழ்வில் தேடிய அமைதியை என்னுள் தந்தது குரான். இனி, நான் ஒரு முஸ்லிம் என்று அறிவித்தார். தன் பெயரை மாற்றிக் கொண்டார் – யூசுப் இஸ்லாம் என்று.

குரானை வாசிக்கிறார் தன் அருமைத் தமக்கை எனத் தெரிந்ததும், அவரைக் கொலை செய்யும் நோக்கில், உருவிய வாளுடன் வீட்டிற்கு சென்ற உமர் (ரலி), கதவைத் திறக்க தாமதித்த ஒரு கணத்தில், குரானின் இனிய வாசகங்களை உள்வாங்கத் தொடங்கிய மனதிடம் தன்னை ஒப்புவித்தார். உருவிய வாள் கீழே விழுந்தது. கண்களில் தாரை தாரையாக வழிந்தோடும், கண்ணீருடன், குரானை வாசிக்க ஆரம்பித்த உமர் (ரலி) அவர்களின் வரலாறையா வாசிக்கிறோம் என்ற பிரமிப்புத் தோன்றுகிறது – யூசுப் இஸ்லாமின் மனமாற்றம்.


பின் மீதமிருந்த தன் வாழ்வை, அமைதியின் நல்வழியை அனைத்து மக்களிடமும் காட்டுவதற்காகவும், கல்வியைப் பரப்பவுமே செலவழித்தார். உலகத்தினர், அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டேயிருந்தனர். அவை எதுவுமே எடுபடவில்லை.


புகழின் உச்சத்தில் - மூன்று முறை பிளாட்டினம் டிஸ்க் கொடுத்தவர் என்ற புகழின் உச்சத்தில் இருந்தவர் - தன் இசைக்கருவிகள் அனைத்தையும் விற்று, நன்கொடையாக வழங்கினார். இஸ்லாமிய சமூகத்தின் கல்விக்காக முப்பது வருடங்களையும் கடந்து உழைத்துக் கொண்டிருப்பவர். அவரது உழைப்பிற்காக பல விருதுகள் சமாதானத்தை வளர்த்தெடுத்தற்காக அவருக்கு வழங்கப்பட்டன. அதில், 2003's World Award, the 2004 Man for Peace award, and the 2007 Mediterranean Prize for Peace இவையனைத்தும் அடங்கும். நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும் முயற்சியில்.


ஆனால், அவரை எப்படி நடத்தியது, அமெரிக்கா?


அவரை ஒரு தீவிரவாதி என்றது! அவர் பயணம் செய்த விமானத்தை திசை திருப்பி வேறிடத்திற்கு அனுப்பியது. அத்தனை பயணிகளையும் சேர்த்து தான். அவரைக் கைது செய்து - தன் நாட்டு எல்லைகளை விட்டு, மறுநாளே வேறொரு விமானத்தில் ஏற்றி அனுப்பியது - அவர் பிரிட்டிஷ் பிரஜை என்பதால் அத்துடன் விட்டார்கள். வேறு யாராக இருந்தாலும், அப்படி ஒருவர் வந்தார் என்பதோ, தாங்கள் கைது செய்தோம், என்பதோ கூட வெளியில் தெரிந்திருக்காது.

பிரிட்டீஷ் ஊடகங்கள், அவரை தீவிரவாதி என்று எழுதி தங்கள் வெறுப்பைக் கொட்டினார்கள். The Sun. The Sunday Times என்ற பத்திரிக்கைகள். பின்னர், நீதிமன்றத்திற்கு வெளியே பெரும் பொருள் கொடுத்துத் தீர்த்துக் கொண்டனர். அத்துடன், தங்கள் பத்திரிக்கையில், பகிரங்க மன்னிப்பு கடிதம் வெளியிட்டனர்.


அமெரிக்கா எப்படி சமாதானம் ஆயிற்று?


பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை காரியதரிசி, ஜாக் ஸ்ட்ரா, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை காரியதரிசி, காலின் பவலை நேரில் சந்தித்து புகார் கூறியதன் பின்னே, watch list மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, திருத்தப்பட்டது. அதுவும் யூசுப் இஸ்லாம் என்ற பெயரின் ‘spelling’ திரும்பத் திரும்ப கேட்கப்பட்டு, எழுத வைக்கப்பட்டு, ‘அது ஏதோ எழுத்துப் பிழையால் நிகழ்ந்தது’ என்ற பம்மாத்து காட்சியை அரங்கேற்றி, பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என அறியாது வாழ்வதா, வாழ்க்கை? இஸ்லாம் குறித்து தவறாகப் பேசுவதற்கு, ஒஸாமா, ஜாவேரி என காட்டும் பொழுது, அவர்களுக்கு மாற்றாகக் காட்டவும், ஒரு தேடுதல் மூலமாக வந்தவர்கள் தான் – இவர்கள். இந்த வரலாறுகளை பிரபலங்களின் வரலாறு தானே – இதில் என்ன இருக்கிறது என கேட்டால், பின் எதில் தான் என்ன இருக்கிறது?

மஹ்மூத் தர்வேஸ் என எழுத்துலகில், கவிதையுலகில் சிற்றிலக்கியப் பத்திரிக்கைகள் கொண்டாடுவதால், நானும் அவரை கொண்டாடுகிறேன் என்பது, ஊரோடு ஒத்தூது என்பது மட்டும் தானே?

கறுப்பின மக்களின் எழுச்சிக்காக உழைத்த மால்கம் X கொண்டாடப்பட வேண்டியவர் தானே?

இனத்தூய்மையற்றவன் என புரணி பேசிய இனத்தை எதிர்த்துப் பொங்கியெழுந்து, பின்னர் இந்த நூற்றாண்டின் இணையற்ற விளையாட்டு வீரன் என BBCயாலும், Illustrated Sports பத்திரிக்கையாளும் கொண்டாடப்பட்டவர் தானே முகமத் அலி? நாமும் கொண்டாட வேண்டுமா, இல்லையா?


காட் ஸ்டீவன்ஸ், மரணத்திலிருந்து தப்புவதற்காக, இறைவனை தேடி அலைந்து, பின்னர் தான் கண்ட அமைதியை உலகிற்கு எடுத்துச் சொன்னாரே – அது கொண்டாடப்பட வேண்டாமா?


இவர்களையெல்லாம் கொண்டாடுவதற்கு என்ன பயம்? இஸ்லாத்திற்குள் தன்னை இணைத்து, உன்னத வழியைக் கண்டவர்கள் என்ற உண்மையையும் கொண்டாட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவோம் என்ற பயமா?

இறைவா, என் சகோதரர்களை ஒஸாமா, ஜாவேரி போன்ற தீவிரவாதிகளின் பாதையில்
போகாமல், இவர்களைப் போன்றவர்களின் வழியில் நடத்து என சொல்வதற்காக,
இவர்களைக் கொண்டாட வேண்டாமா? வெறுமனே, தீவிரவாதத்தை எதிர்க்கிறேன் என்ற
முழக்கம் மட்டும் போதுமா? மாற்று பாதைகளையும் கொண்டாட வேண்டாமா?


MJ இப்பொழுது தான் இணைந்திருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
(பஹ்ரைன் மன்னர் மகனை ஏமாற்றிவிட்டார் என்ற செய்தியையும் MJ முடித்து
வைத்து விட்டார் – இன்றைய செய்தியின் படி.)

(இணைக்கப்பட்ட படங்களும் செய்தி சொல்கின்றன - கூர்ந்து கவனியுங்கள்)

4 comments:

suvanappiriyan said...

இஸ்லாத்தை ஒரு மார்க்கமாக பார்க்காமல் உலக மதங்களில் ஒன்றாக பலரும் பார்ப்பதில்தான் கோளாரே ஆரம்பிக்கிறது.

பலருக்கும் விளங்கும் விதமாக அழகாக விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஸதக்கத்துல்லாஹ் said...

"சிக்" "கனமான" சொற்கள். அதீத கவனத்துடன் கையாளப்பட்ட வாக்கியங்கள். வாசிக்கும் போதே ஆக்கத்தின் காத்திரத்தை உணர்ந்து கொள்ளச் செய்யும் ஆறுதல் நடை.
வாழ்த்துகள் நண்பா.

Unknown said...

//வெறுமனே, தீவிரவாதத்தை எதிர்க்கிறேன் என்ற முழக்கம் மட்டும் போதுமா? மாற்று பாதைகளையும் கொண்டாட வேண்டாமா?//
தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் கோர்த்துள்ள பொருள் புதைந்த பதிவு.

நண்பன் said...

நன்றி, சுவனப்பிரியன், ஸதக்கத்துல்லாஹ், சுல்தான்.

சுவனப்பிரியன் - ஒரு குழுமத்தில், உங்களையும், என்னையும் போட்டு, ஒருவர் குழப்பிக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்