"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, December 13, 2005

பின் நவீனத்துவம்

பின்நவீனத்துவம்...

வேற்று முகம்
பொருத்தப்படும்
பழைய முகத்திலென
அறிவிப்புடன் கடை போட்டான்
நவீன அறிவுஜீவி.

அலைமோதியது
அங்குமிங்கும் கூட்டம் -
புதுமுகம் தரித்து
முற்போக்கு வேஷம் போட்டாட.

புதுமுகம் பொருத்தி
வந்த மனுஷிகளெல்லாம் நடித்தனர் -
பலருடன்
பாதுகாப்பாய்ப் படுத்தல்
தங்களை தளைகளிலிருந்து
விடுவிப்பதாய்.

ஆண்களிடமிருந்து விடுபட
ஆண்களுடனே படுத்தெழுங்களென்ற
பின் நவீனத்துவம்
நாகரீகமாய்ப்பட்டது சிலருக்கு.

எங்கெங்கும்
அவர்களைப் பற்றியே
பேச்சாக இருந்தது.
புதிய புதிய மனுஷிகளால்
நிரம்பி வழிந்தது
நவீனத்துவ கடை.

புதுத்தொழிலாகிய
கட்டுடைத்தலின் பேரால்
கடந்தகால முகங்களை வீசி
பாவங்களைக் கழுவத் தொடங்கினர்
நடுவீதியில்.

ஒழுங்கமைவற்ற
கட்டுடைத்தல்களில்
விழுந்து போன
பழைய முகங்களைக்
குப்பைத் தொட்டியில்
போடச் சொன்னனர்
தெருவில் வாழும் மக்கள்
கொஞ்சம் அதட்டியே.

அடக்கப்படுவதாய்
கிளர்ந்தெழுந்த ஒப்பாரியில்
தொடர்ந்து கிழிகின்றது
ஒப்பனை முகங்கள்.

என்றாலும் அவர்கள்
என்னவோ பரிகசிக்கிறார்கள்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு
திரைச்சீலைகள் போட்டுப்
பாதுகாக்கப்பட்ட
படுக்கை அறைகளைப் பார்த்து -
பலருடன் பகிரப்படவில்லையென்று.

அறிவுஜீவி மட்டும்
யோசித்துக் கொண்டிருக்கிறான்
இன்னொரு கடை
திறக்கலாமாவென்று.

3 comments:

பூனைக்குட்டி said...

நண்பரே, பின்நவீனத்துவக் கவிதையின் சிறப்புக்களில் இதுவும் ஒன்றோ!!!! பிரச்சனை தரும் விஷயத்தைபற்றிய தன் எண்ணங்களை விமரிசனங்கள் என்ற பெயரில் வரும் பின்னூட்டங்கள் பற்றிய பயமின்றி(?) தெளிவாக வெளிப்படுத்த முடிவதும்.

நண்பன் said...

மோகன் தாஸ்

நன்றி.

பின்னூட்ட பயமில்லாதவன் நான்.

என்றாலும் உங்கள் கோணம் - சற்று உண்மையே.

உரை நடைக்குக் கொதித்து எழுபவர்கள் - கவிதை நடைக்கு சற்று அடங்கியேப் போய்விடுகிறார்கள்.

அவர்களுக்கு குறியீடுகளைக் கண்டு சற்று பயமிருக்கலாம். அல்லது எதையாவது சொல்லிவிட்டு பின்னர் அதில்லை என்றாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயமாகக் கூட இருக்கலாம்.

என்றாலும் உங்களைப் போன்ற கவிதை தெரிந்த நண்பர்கள் வருகிறீர்களே அதுவரையிலும் மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

நண்பன் said...

இந்த மாத திசைகள் இதழில் - புது வருட இதழில் - இந்தக் கவிதை வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்ல - துபாயில் இருந்து மூன்று கவிஞர்களின் கவிதை வெளியாகி உள்ளது.

ஒரு வாய்ச்சொல் வீரன் புலம்பினார் - துபாயில் இருப்பவர்கள் எல்லாம் அறிவுஜீவிகளா என்று.

திசைகள் அதை நிரூபிக்கும்...

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்