"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, March 23, 2007

எழுத்தறியாத் தலைவன் - உரையாடல் 2

எதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும், எதற்கு பின்னர் விடையளிக்க வேண்டும் என்ற நிலைகள் இல்லாமல், பிடித்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்.

தருமி தான் அறிந்ததாகக் கூறி, முன் வைத்த கருத்துகளில் ஒன்று: இதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நபிகள் பெருமானாரை விமர்சிப்பவர்கள் முன் வைத்த கருத்து தான்.

// இதிலேயே, முகமது ஒரு பெரிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் எப்படி எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்திருப்பார் என்ற கேள்வியும், இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு. //

ஒருபுறம் நபிகள் பெருமானாரை, மிகவும் புத்திசாலி, நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று நிருவுவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். ஒரு மனிதனைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என அனனவரும் வரலாற்றில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர் - அவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று. அவருடைய நண்பர்கள் என்றால் அவர்கள் எல்லாம் சாதாரண, சிந்திக்கத் தெரியாத மூடர்கள் இல்லை. மாறாக, ஆளுமை மிக்க, தங்கள் அளவில் தனித்தன்மை மிக்க தலைவராக உருவாகும் பெரும் பண்பு கொண்டவர்கள். அவர்களிடையே இருந்து தான் நான்கு பெரும் கலீபாக்கள் தோன்றினர். இது போலவே, அன்றைய தினத்தில் இஸ்லாமியர்களாகிய அனைவரும், நேரிடையாக முகமது நபியவர்களைச் சந்தித்து, உரயாடி, பின்னர் தான் அனைவரும் இஸ்லாமியராயினர்.

இன்றைய தினத்தைப் போல, கல்வி என்பது அந்தக் காலத்தில் அத்தனை எளிதானது அல்ல. மெனக்கெட்டால் தான் முடியும். அதே சமயம், கல்வி என்பது அந்தக் காலத்தில் ஒரு வாழ்க்கைத் தேவையாக இருந்திருக்கவில்லை. ஏன், ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, கல்வியை ஒரு அவசியமாகக் கொண்டிருக்கவில்லை - இந்தியர்களின் பலரது மூதாதையர். கோடி கோடியாய். மேலும் வாஞ்சையுடன் அரவணைத்து, கல்வி கற்க அனுப்பி வைக்க, அவருக்குத் தாயார் இல்லை. பிறந்து ஐந்து வய்து கழியும் சமயத்து இறந்து விடுகிறார். தந்தையோ பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகிறார்ல் அநாதையாகத் தான் வளர்ந்தார். வளர்த்த பாட்டானருக்கோ, அவருக்கு, நடைமுறை வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து, ஒரு வெற்றி பெற்ற மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதே அவசியத் தேவையாக இருந்தது. பின் எங்கிருந்து கல்வி கற்பது?

ஒரு வர்த்தகர் எழுதப் படிக்கத் தெரிந்தால் மட்டுமே, வெற்றி பெற்ற வர்த்தகராக இருக்க முடியும் என்பது தர்க்கத்திற்கு உதவாத விஷயம். கல்வியறிவு இல்லாத, அடிமட்டத்தில் இருந்து கிளம்பி, பெரும் வியாபார சாம்ராஜ்யங்களைப் படைத்தவர்கள் உண்டு. ஒரு வியாபார நிறுவனத் தலைவர் தன் கைப்பட அனைத்து வரவு செலவு கணக்குகளையும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமற்ற வாதம். மேலும், ஹதீஜா பிராட்டியரின் வியாபாரத்திற்குப் பொறுப்பேற்று செல்லும் பொழுது, கூடவே, ஹதீஜாவின் பிரதிநிதியும் வருகிறார் - கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்ள. அவரது பெயர் - மைசாரா. (அ)

இத்தகைய வியாபாரத்திற்காக, அதற்கென கணக்கர்கள் இருக்கும் பொழுது, ஒரு தலைவராக இருப்பவர், செய்ய வேண்டியதெல்லாம் make certain strategical decisions அவ்வளவு தான். எந்த பொருளை வாங்க வேண்டும், எதை எந்த இடத்தில் விற்க வேண்டும் என்று செய்ய வேண்டிய இந்த முடிவுகளுக்கு, தேவை அனுபவம். எழுதப் படிக்கத் தெரிந்த மனம் அல்ல. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை விட, இந்த முடிவு எடுக்கத் தெரியும் நபர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் செய்யும் முதல் காரியம் - எழுத்தை விற்றுக் கிடைக்கும் பணத்திலே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர, வியாபாரத்தில் திறமையெல்லாம் காட்டி, முன்னேறி விட தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை. இல்லை, எழுதப் படிக்கத் தெரிந்தால், இயல்பாகவே பெரும் வெற்றி பெற்று விடலாம் - அது தான் பொது நியதி என்றால், இன்று உலகம் முழுக்க வியாபாரிகள் தான் இருக்க முடியும்.

ஆக, எழுதப் படிக்கத் தெரிய வேண்டும் - ஒரு வியாபார நிறுவனத் தலைவராக இருப்பதற்கு என்பது எடுபடாத வாதம். இந்த "எழுதப்படிக்கத் தெரிந்த" தன்மையை முன் வைப்பவர்கள் - வரலாற்றை வசதியாக மறந்து விடுகிறார்கள் - வரலாற்றில் The Great என்று அடைமொழி கொடுத்து அக்பரை அழைத்து மகிழும் நமது இந்திய நண்பர்கள், அக்பர் - Akbar, The Great எவ்வாறு ஒரு பேரரசை - விந்திய மலை தொடங்கி, பர்மா முதல், ஆப்கானிஸ்தான் வரையிலுமான ஒரு வல்லரசை நிர்வகித்தார்? இதை யாரும் கேள்வியாகக் கூட கேட்பதில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் "ஒரு நல்ல தலைவனாக" இருப்பதற்குக் கல்வியறிவு தேவையில்லை என்று. அப்படியானால், நபிகள் பெருமானார் மட்டும் கல்வியறிவு இல்லாமல் எதையும் சாதித்திருக்க முடியாது என்ற வாதம்? Sheer hypocrisy... சந்தர்ப்ப வாதம் - வசதிப்பட்ட பொழுது, வசதிப்படும் முகமூடிகள்...!!!

நபி பெருமானாரின் எழுத்தறிவின்மையைக் குறித்து கேள்வி எழுப்புவது - அவரது தனிப்பட்ட தகுதியைக் குறித்த ஐயப்பாடு அல்ல. மாறாக, குரான் என்ற புனித நூல், இறைவனின் வார்த்தைகள் அல்ல, மாறாக நபிகள் அவர்களின் உருவாக்கமே என்று நிருவுவதற்காகத் தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். அதற்காக அவர்கள் மெனக்கெட்டு, நபிகள் அவர்களை மிகவும் கற்றறிந்தவராகக் காட்டுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒருபுறம் - அவர் மிகுந்த தகுதியுடையவர் என்று சொல்லிக் கொண்டே, மறுபுறம் அவரை இழிவு செய்ய முயற்சிப்பதை hypocrisy என்று தான் சொல்ல முடியுமே அன்று, வேறு எவ்வாறு விளங்க வைக்க முடியும்?

(அ.) Page 20, The Life of Muhammad - his life based on the earliest sources - Tahia Al-Ismail.

9 comments:

தருமி said...

இந்தப் பதிவும் பதிவில் உள்ள கேள்வியும் என்னை நோக்கியதா என்று தெரியவில்லை. இருப்பினும், எனக்குரியதாயின்: மன்னிக்கணும்; இவ்வளவு பெரிய பதிவு தேவையில்லை. ஏனெனில் ஏற்கென்வே ஒரு இஸ்லாமிய நண்பரும் இதற்குப் பதில் சொல்லி விட்டார் என்பதோடு அல்லாமல் நான் இஸ்லாமிய கோட்பாடுகளை நோக்கி எழுப்பிய கேள்விகள் எல்லாமே 'இனி என் ஐயங்கள்' என்று எண் வரிசையில் தந்துள்ளேன்.
முகமது படித்தவரா இல்லையா என்பது பற்றிய ஒரு கருத்தாடல் இஸ்லாமியர்களுக்குள்ளேயே இருந்தது என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். ("இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு.")
அவர் கல்வியறிவு பற்றிய விவாதம் தேவையில்லாத ஒன்று. அவரது கல்வியறிவு எப்படியாயினும் அதனால் நான் எழுப்பியுள்ள கேள்விகளில் எம்மாற்றமும் இல்லை.
வேண்டுமானால் இக்கருத்தை என் அந்தப் பதிவில் சேர்த்து விடுகிறேன். தேவையில்லாத ஒன்றை வைத்து என்ன விவாதம் செய்யப் போகிறோம்.

நண்பன் said...

இந்தப் பதிவில் இருக்கும் பதில், உங்களுக்கானது அல்ல. இது குறித்து, பூடகமாகவும், தெளிவற்ற தன்மையுடனும் எழுதும் நண்பர்களும் அதை சிலாகிக்க, அருகாமையில் அநாநிகளும் கொண்ட நண்பர்களுக்காக. அல்லது அவர்களது தவறான தகவலை நம்பி, ஆகா என்று வாய் பிளந்து அதிசயித்து நிற்கும் நண்பர்களுக்காகவும் இருக்கட்டுமே!!!

மீதியுள்ள ஐயங்களுக்கும் எழுதுவேன். தருமி என்ற நியாய குணமுடைய மனிதரின் தளத்தில் எழுதப்பட்டவை எல்லாம் உண்மையாக இருக்குமோ என்று உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள், யாராவது அதற்கான பதில் விளக்கங்களைத் தேடிக் கொண்டிருக்கக் கூடுமானால், அவர்கள் இந்தப் பதிலையும் வாசிக்கட்டுமே!!

உங்களுக்கான ஒரே ஒரு கேள்வி - எனது முதல் பதிவில் இருக்கிறது - தருமியுடன் ஒரு உரையாடல் தொடங்குகிறது. - என்ற பதிவில் இருக்கிறது. நீங்கள் மதங்கள் மீது வைத்த விமர்சனங்களை விட, இந்த மதங்களை விட்டு விலகுகிறேன் என்று எடுத்த முடிவு சரியானதா என்பதை மட்டும் விவாதிக்க விரும்புகிறேன். நீங்கள் கொடுத்த சுட்டிகளை முன்னரே படித்து விட்டேன். ஒவ்வொரு பதிவையும் எழுதும் முன் நான் நிறைய home work செய்வேன். அதனால், நீங்கள் கவலை அடைய வேண்டாம்.
தமிழ் ரிபெர் என்ற நண்பர் - சில விஷயங்களைக் கூறி இருக்கிறார் - சில மோசமான வாக்கியங்களைத் தவிர்த்து விட்டால், வாசிப்பதற்கும், விவாதிப்பதற்கும் மிக நல்ல பதிவு.

அதனால், கண்டிப்பாக உங்கள் விவாதத்தையும் வையுங்கள்.

நன்றி,

அன்புடன்
நண்பன்.

நண்பன் said...

//("இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு.") //

எல்லோருமே குறிப்பிடுகின்றனர் - இஸ்லாமிய அறிஞர்கள் என்று. ஆனால், யார் அந்த அறிஞர், எங்கே, எப்பொழுது, எதைச் சொன்னார் என்று குறிப்பிடுவதில்லை.

இஸ்லாமிய இலக்கிய ஆன்மீக உலகம் என்பது ஒரு பெருங்கடல். அதில், விபரங்கள் குறிப்பிடப்படவில்லையென்றால், அந்த குறிப்பிட்ட நபரை தேடிக் கண்டு பிடிப்பது மிகச் சிரமம். அதனால் தான், விபரங்கள் குறிப்பிட வேண்டும் - இல்லையென்றால் பதில் சொல்வது என்பது இயலாது.

மேலும் இந்த இஸ்லாமிய அறிஞர்கள் இருக்கிறார்களா, அல்லது, on the authority of him என்று ஒரு சங்கிலித் தொடர் போல், இல்லாத ஒருவரை நோக்கி பயணம் செய்வார்களா என்பது அறியாத பொழுது, இந்த வாதம் ஒரு அனர்த்தமாகி விடும்.

பகுத்தறிவாளன் said...

////("இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு.") //

எல்லோருமே குறிப்பிடுகின்றனர் - இஸ்லாமிய அறிஞர்கள் என்று. ஆனால், யார் அந்த அறிஞர், எங்கே, எப்பொழுது, எதைச் சொன்னார் என்று குறிப்பிடுவதில்லை. ////

நண்பன் (பேரே நண்பனாக இருப்பதால ஏதோ பேரச் சொல்லி விளிப்பதா நெனக்காதீங்க - நண்பரே)

நல்ல ஒரு தொடக்கம் குறிச்சிரிக்கீங்க.

தருமி ஐயாவோட குற்றச்சாட்டுல ஒண்ண அழகா ஒடக்கவும் செஞ்சிருக்கீங்க.

மேல நீங்க வச்ச எதிர் கேள்விக்கு அவருட்ட இருந்து நேர்மயான பதிலு வரும்னு எனக்கு நம்பிக்க இல்ல.

அவரு மதம் மாறுனதுக்கு சொன்னதுல முக்கியமான ஒரு காரணத்து மேல நா கேட்ட ஒரு எதிர் கேள்விய இதுவர அவரு பப்ளிஷ் பண்ணாத்தது மட்டும் இல்ல, அதத்தொடந்து நா வச்ச எந்த கேள்வியயுமே அவரு கண்டுக்கவே இல்ல.

பாப்போம் இங்கயாவது அவரு நேர்மயா பதில சொல்லாரான்னு.

தொடந்து நீங்க வைக்கிற பதில்கள்ல அவரு நேர்மயா தொடந்து விவாதிச்சாருன்னா, நானும் என்னுடைய பாகத்துல வந்து கலந்துகிடறேன்.

தொடந்து அவரோட தவறான அனுபவ அணுகுமொறய நீங்க வெளிச்சம் போட்டு காண்பிங்க.

ரெம்ப ஆசயோட காத்திருக்கேன்.

பகுத்தறிவாளன்.

நண்பன் said...

பகுத்தறிவாளன்,

உங்கள் வருகைக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி.

இங்கே, நீயா, நானா, சவாலே சமாளி - இது போன்ற பந்தயங்கள் எல்லாம் வைத்துக் கொண்டு வாதாட வரவில்லை.

இந்தப் பகுதிக்கு நான் உரையாடல் என்று தலைப்பிட்டதற்குக் காரணமே - ஒருவரோடு ஒருவர் உரையாட வேண்டும் - கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்று தான். அதனால் நான் பதில் ஏதும் எதிர்பார்க்காமல், அதே சமயம் என் நிலைபாடு என்ன என்பதை சொல்கிறேன். அவர் ஏற்கனவே இஸ்லாமிய நண்பர்கள் கொடுத்த விளக்கம் போதுமானது என்று தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாம் மீது ஐயப்பாடுகள் தோன்றுவதே தவறு என்பது சரியான நிலைபாடல்ல. ஏற்படுகின்றன ஐயங்களை இயன்ற வரை களைய முற்படுவது நம் கடமை. ஆனால், ஐயம் கொண்டதற்காகவே ஒருவரை எதிரியாகப் பாவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

திட்டமிட்டு, அவதூறு பரப்புவர்களை மட்டுமே நாம், தவிர்க்க வேண்டுமே தவிர, நியாயமான வாதங்களைத் தவிர்த்து விடுதல் கூடாது.

இன்னும் சொல்லப் போனால், இத்தகைய வாதங்களே, இன்னும் நம்மை, நம் மதத்தை மேலும் கூர்ந்து ஆராயச் செய்யும் - கற்றுக் கொள்ளச் செய்யும்.

தயவு செய்து அமைதியாகப் படித்து வாருங்கள் - அல்லது, நான் எழுதுவதை விட, அதிகப்படியான தகவல்கள் உங்களிடத்தில் இருந்தால், அதை பின்னூட்டத்தில் இட்டுத் தந்தால், அதனால் அனைவரும் பயனடைவர் - நான் உட்பட.

மேலும், பெயரைச் சொல்லி விளிப்பதில் என்ன தவறு? தாராளமாக நண்பன் என்று கூப்பிடுங்கள்.

சுல்தான் said...

//திட்டமிட்டு, அவதூறு பரப்புவர்களை மட்டுமே நாம், தவிர்க்க வேண்டுமே தவிர, நியாயமான வாதங்களைத் தவிர்த்து விடுதல் கூடாது.
இன்னும் சொல்லப் போனால், இத்தகைய வாதங்களே, இன்னும் நம்மை, நம் மதத்தை மேலும் கூர்ந்து ஆராயச் செய்யும் - கற்றுக் கொள்ளச் செய்யும்.//
மிகச்சரியான அணுகுமுறை நண்பரே.

சவூதி தமிழன் said...

நண்பன் அவர்களே,

திரு ஜார்ஜ் சாம் கிறிஸ்தவத்திலிருந்து ஏன் வெளியேறினார் என்ற விளக்கமாக இஸ்லாத்தில் இன்னின்னதெல்லாம் சரியில்லை என்று சொன்னால் அறிவுக்குப் பொருந்துகிறதா?

ஏதோ கட்டாயத்தில் அரைகுறையாக விமர்சித்திருக்கிறார், அதனால் வருத்தம் என்னவென்றால் அதனை சாக்காக வைத்து சில மனநோயாளிகள் கும்மாளம் அடித்தது தான்.

அவரது இந்துமத விமர்சனப்பதிவில் இந்த மனநோயாளியைக் காணவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

அழகப்பன் said...

அன்பின் நண்பன்,

கிருத்தவராக இருந்த தருமி தான் கிருத்துவத்திலிருந்து வெளியேறி நாத்திகனாக ஆனதை "நான் மதம் மாறினேன்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

கிருத்துவத்திலிருந்து வெளியேறிய அவர் குற்றம் சுமத்தியது என்னவோ இஸ்லாத்தைதான். அவரது பதிவிற்கு பின்னூட்டியவர்களும் இஸ்லாத்தின் மீது தாக்குதல் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாய் இருந்தனர். அவரது பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே...

http://dharumi.blogspot.com/2005/09/55-3.html#comment-112489204177120887

நிற்க. இந்நிலையில் மிக அழகிய முறையில் அவருடன் உரையாடல் தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களுக்கு இந்த உரையாடல் ஒரு பதிலாய் அமைய வேண்டும் என்பதே என் அவா.

நண்பன் said...

அன்பின் நண்பர்கள்

சுல்தான், சவூதி தமிழன், அழகப்பன் - கருத்தாக்கங்களுடன் பங்கு பெற்றதற்கு மிக்க நன்றி.

நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்