சிறிலின் கேள்வியும், ரூமியின் கவிதையும்....
சிறில் அலெக்ஸ் கேட்டிருந்த கேள்விக்கு நண்பர்கள் பதில் சொல்லி விட்டார்கள் என்றாலும், (அல்லாஹ் என்ற பதிவில்) இந்த ரூமியின் கவிதை ஒன்றை ஒரு பின்னூட்டத்தில் போட்டுப் பூட்டி விட மனம் விரும்பவில்லை என்பதால், அதை ஒரு தனிப்பதிவாக ஆக்கி விட்டேன்.
ஒரு நல்ல கேள்விக்கு ஆக்க பூர்வமான பதிவு.
பொதுவாகவே, இறைவனை அவன் என்று குறிப்பிடும் பொழுது, அது மொழியின் பலவீனமே. ஆணையோ அல்லது பெண்ணையோ குறிக்காத ஒரு பொதுச்சொல் இல்லாமையால், அவன் என்று குறிப்பிட நேர்ந்தது.
இது தமிழில்.
இது போல மற்ற மொழிகளுக்கு வேறு விதமான பிரச்சினைகள் இருக்கலாம்.
முன்பு mankind என்று எழுதுவதில் கூட feministகள் எல்லோரும் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஏன் womankind என்று குறிப்பிடுவதில்லை என்று. இறுதியாக humankind என்றானது. என்றாலும் human என்பது கூட ஆண் சார்பு எடுக்கும் ஒரு சொல் என்ற தர்க்கம் உண்டு.
மொழி என்பது நாம் உண்டாக்கிக் கொண்டதே தவிர, அதன் பலவீனத்திற்கு இறைவனை பொறுப்பாக்க முடியாது. இறைவன் - ஆண், பெண் நிலைகளை எல்லாம் கடந்தவன் என்பதால் தானோ என்னவோ, இஸ்லாத்தில், இறைவனை ஆணாகவோ, பெண்ணாகவோ பாவித்து பாடல்கள் எழுதுவதும், பக்தி கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜலாலுத்தீன் ரூமி எழுதிய பாடல்கள் சிலவற்றில், இவற்றை மீறும் தன்மை தெரியும். அதனால், அவற்றைக் காதல் பாடல்கள் என்று மொழி பெயர்த்து புத்தகம் ஆக்கினார்கள். ஆனால், ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ பாவித்து, காதல் மேலிட, பக்தி பாடல்கள் எழுதுவது தான் தடை செய்யப்பட்டதே தவிர, முன்னிலையில் - அதாவது - second person - you / yourself என்ற முன்னிலையில் இறைவன் மீது பாடல்கள் எழுதுவதோ, பாடுவதோ தடை செய்யப்படவில்லை.
இப்பொழுது மீண்டும் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய காதல் பாடல்களை எடுத்துப் படித்து பாருங்கள் - கண்டிப்பாக அதில் he / she என்ற படர்க்கை நிலை பாடல்கள் இருக்காது. அவர் எழுதி காதல் பாடல்களாக அறியப் பட்டவை எல்லாம் - அவர் இறைவன் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடுகளே.
அவன் / அவள் என்ற பாகுபாடு இல்லாமல், நீ என்ற பதத்தைக் கொண்டு, இறைவனிடம் நேரிடையாக பக்தியைக் காட்டியவர். இத்தகைய உறவு நிலையை பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லையென்றாலும், பலருக்கும் இந்த சூஃபிக்களைப் பிடித்திருப்பதற்குக் காரணம் - அவர்கள் காட்டித் தந்த, இசையும், கவிதையும் கலந்த ஒரு பக்தி வழி.
இதோ ஜலாலுத்தீன் ரூமியின் ஒரு கவிதை.:
ஆங்கிலத்தில்: (Andrew Harvey)
I unlock the Door from inside to myself
Step from room to room leading myself
Come to myself in myself in our Bed of fire
Hear, You astoundedly call yourself by my name.
தமிழாக்கம்: ( நண்பன் - நானே தான்)
என்னுள்ளே
அடக்கப்பட்டிருந்த
கதவைத் திறக்கின்றேன்
எனக்குள்ளிருந்து.
அறை அறையாக
என்னை
வழி நடத்திச் செல்கிறேன்.
நெருப்பிலமைந்த படுக்கையில்
என்னை நான் வந்தடையும் பொழுது
கேட்கிறேன்:
நீ வியப்புடன்
உன்னை அழைக்கிறாய்
என் பெயர் சொல்லி.
தன் அறியாமையினால், தன்னுள்ளே அடைத்துக் கிடக்கும் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்நோக்கிய ஒரு தேடுதல் பயணம். ஒவ்வொரு ரகசிய மூலையும் அலசி ஆராயப்படுகிறது - தேடப்படுகிறது. தேடுதல் அதிகப்பட, அதிகப்பட, மனம் தகிக்கிறது. நெருப்பாற்றில் விரிக்கப்பட்ட படுக்கை போல் கொதிக்கிறது. தன்னைத் தேடி அடைகிறான் கவிஞன் - தன்னை அடைந்ததும் அவன் கேட்பது - அங்கிருக்கும் இறைவன், தனனை அழைக்கிறான் - அவன் உதிக்கும் பெயர் - கவிஞருடையது. தன்னை உணராத மனிதன் இறைவனை என்றுமே அடைய முடியாது என்பதே கவிஞரின் வார்த்தை.
இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவை - இறுதியில், தன்னை உணர்தலே இறைவனை அடைதல் என்ற தெளிவு - வெகு சிலருக்கே கைவரக்கூடியதாகும்.
இப்படி விரிவான பொருளை விரும்பாதவர்களுக்கு, இப்படி வாசித்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள்:
அன்பே,
உன் ஒவ்வொரு அடிக்கும்
என்னுள்ளே
அடக்கப்பட்டிருந்த
கதவைத் திறக்கின்றேன்
எனக்குள்ளிருந்து.
ஒவ்வொரு அறை அறையாக
எ(உ)ன்னை
வழி நடத்திச் செல்கிறேன்.
நெருப்பிலமைந்த படுக்கையில்
எ(உ)ன்னை நான் வந்தடையும் பொழுது
கேட்கிறேன்:
நீ வியப்புடன்
உன்னை அழைக்கிறாய்
என் பெயர் சொல்லி
No big deal, alright! A Simple, plain, love poem. Enjoy.
10 comments:
நல்ல கவிதையை வெளிக்கொண்டு வர முடிந்ததற்கு நன்றி.
//இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவை - இறுதியில், தன்னை உணர்தலே இறைவனை அடைதல் என்ற தெளிவு//
இந்து மதக் கருத்தை ஒத்துப் போகிறமாதிரி இருக்கிறது.
//பொதுவாகவே, இறைவனை அவன் என்று குறிப்பிடும் பொழுது, அது மொழியின் பலவீனமே. ஆணையோ அல்லது பெண்ணையோ குறிக்காத ஒரு பொதுச்சொல் இல்லாமையால், அவன் என்று குறிப்பிட நேர்ந்தது.//
சரியாக சொன்னீர்கள் நண்பரே! மறுமொழியாக்கம்(translation) செய்வதினால் வரும் தவறுகளாகவும் இருக்கலாம். எல்லா ஆன்மீகவான்களும் கடவுளை/ஆத்மாவை (Self) காதலியாகவோ, காதலனாகவோ வர்ணித்திருப்பதாக மறுமொழி ஆக்கங்கள் கூறும். அதே ஆங்கில மறுமொழியாக்கமாக இருந்தால் My love என்று குறிப்பிட்டிறுக்கும். இது ருமிக்கு மட்டுமல்ல, கபீர் தாஸ், கலீல், யாவருக்கும் பொருந்தும். பல வேளைகளில் மொழி ஒரு தடையே.
இறைவனைத் தன்னுள் உணர்தல் என்பது ஏகத்தை உணர்வதாகும். பலரைத் தன்னுள் உணர்வது இறைவனை உணர்வதாகாது.
இந்து மதம் ஏக இறைவனை வலியுறுத்தவில்லையே!!!
என்றாலும், ஏக இறை சிந்தனை இந்து மதத்தில் உண்டு. சிலர், தங்கள் வசதிக்காகவும், மேன்மைக்காவும் திசை திருப்பி, பல தார தெய்வ நம்பிக்கையாக்கி, தங்கள் தெய்வம் உயர்ந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என்ற அசமத்துவ நிலையை மெனக்கெடுத்து தோற்றுவித்துக் கொண்டார்கள்.
இது இந்து மதத்திற்கு நேர்ந்த விபத்து. அப்பொழுது ஏற்பட்ட ஊனம் இன்று வரையிலும் சரி செய்யப்படாமலே போய்விட்டது.
இன்று அதை ஒரு ஊனம் என்று அங்கீகரிக்கக் கூட மறுத்து விட்டு, சமத்துவம் பேசுகிறார்கள்.
எப்படி, எங்கிருந்து, சமத்துவம் வரும்?
"இந்து மதம் ஏக இறைவனை வலியுறுத்தவில்லையே!!!"
இது ஒரு தவறான புரிதல். சிறு குழந்தைகள், பொம்மையை நண்பனாகப் பாவித்து
விளையாடுகிறது. வயதானவுடன் அதை பொம்மையாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒரே மன வளர்ச்சியுடையவர்கள் இல்லை. கீதை இறைவனை நிற்குணப் பிரம்மன் என்றுதான் குறிப்பிடுகிறது. எந்த மதத்தைப் பற்றிய விமர்சனமும் அதை ஆழ்ந்து
படித்த பின் தான் தொடங்க வேண்டும் இல்லையா?
ஒரே ஒரு வரியை எடுத்துக் கொண்டு வாதாட வருவது கூடாது, இல்லையா?
நீங்கள் குறிப்பிட்ட வரிகளுக்கு அடுத்த பத்தி முழுக்க நான் எழுதியதை சௌகரியமாக மறந்து விட்டீர்கள்.
பொம்மைகளை வளர்ந்ததும் மறந்து விட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், மறக்கிறீர்களா, இல்லை இன்னமும் அந்த பொம்மைகளை வைத்துக் கொஞ்சுகிறீர்களா என்பதை நீங்கள் தானே சொல்ல வேண்டும்?
என்னிடம் கேள்வி வைத்தால் எப்படி?
மேலும், நான் பேசும் விஷயங்கள் மதம் சார்ந்தவை அல்ல, என்பதைக் கூட இத்தனை விவாதத்திற்கப்புறமும் உங்களால் புரிந்து கொள்ளவில்லை என்பது வியப்பு தான்!!!
வாருங்கள் காட்டாறு.
// பல வேளைகளில் மொழி ஒரு தடையே. //
நன்றி காட்டாறு.
இந்த தடைகளையும் கடந்து வரும் மனிதனே மிகச் சிறந்த கவிஞனாக, சிந்தனையாளானாக பரிணமிக்கிறான் என்பதும் உண்மை.
1. உன்னை அறிந்துக் கொள் அது உனக்கு போதுமானது - 2. தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் - என்ற ஹதீஸ்கள் நினைவிற்கு வருகிறது - நாகூர் ரூமி அவர்கள் திண்ணையில் எழுதிய மஸ்னவி கதைகளை படித்து இருக்கிறீர்களா? - ரூமி (ரஹ்) அவர்களின் நூல் தமி௯ழில் வெளிவந்துளதா? - காண கிடைக்காத அந்த அற்புதத்தை அறிமுகப் படுத்த முடியுமா? - நாகூர் இஸ்மாயில்
திண்ணையை வாசித்து பல நாட்களாகி விட்டது. நாகூர் ரூமியின் எழுத்துகளில் வாசித்தது - இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் மாத்திரமே.
தமிழ் நாட்டில், இஸ்லாமிய பதிப்பகங்களில் விசாரித்தால் கிடைக்கக் கூடும் - துபாயில் தமிழ் புத்தகங்கள் மருந்துக்குக் கூட கிடைக்காது.
ஆகையால், நான் வாசிக்கும் புத்தகங்களில் பெரும்பான்மையானவை - இஸ்லாம் சம்பந்தப் பட்ட அனைத்தும் ஆங்கிலத்தில் தான். வாசிக்கும் பொழுதே மனதிற்குள் மொழி பெயர்ப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதனால், எனக்குப் பிரச்னைகளில்லை.
நாகூர் ரூமியின் அற்புத மொழி பெயர்ப்புகளில் நான் சொன்ன திண்ணை மஸ்னவியும் அடங்கும், நாகூர் ரூமியின் அடுத்த விநாடி எனும் நூலை படிக்குமாறு வேண்டுகிறேன். சூஃபியிசம் பற்றி ஒரு பதிவிடுவீர்களா? - நாகூர் இஸ்மாயில்
// சூஃபியிசம் பற்றி ஒரு பதிவிடுவீர்களா?// - நாகூர் இஸ்மாயில்
நன்றி, நாகூர் இஸ்மாயில்.
சூஃபியிஸம் பற்றி - ஒரு நீண்ட பதிவு ஒன்று எழுதி வைத்து இருந்தேன். ஆனால், சிறிது நாட்களூக்கு முன் கணிணியில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றினால் அனைத்தையும் இழந்து விட்டேன்.
மீண்டும் உட்கார்ந்து எழுத வேண்டும். கண்டிப்பாக எழுதுவேன். ஆனால் இப்பொழுது இல்லை.
ஜூன் 15க்கு அப்புறம்.
Post a Comment