"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, December 19, 2007

வாங்க முடிந்ததற்கும் வாங்க முடியாமல் போனதற்குமுண்டான

'பாந்தான்' வந்து விடுவானோவென்ற அச்சத்துடன் பெரிய விழிகளால், அமர்ந்திருந்த இடத்தின் சகல கோணங்களையும் கலவரத்துடன் அலசிக்கொண்டிருந்தான் பப்ளு. இரவின் அமைதியைக் கலைத்தெழச் செய்யும் பார்வைக்குப் பிடிபடாத உயிரினங்களின் பெரும்சப்தங்கள் நிறைந்திருந்தன. நிசப்தங்கள் உடைந்து விலகும் பொழுதெல்லாம் ஒண்ணுக்குப் போக வேண்டிய
தேவையை பெரும்திகிலுடன் நடுங்கும் தொடை அறிவித்துக் கொண்டேயிருந்தது. வண்ணங்கள் நிறைந்த பகல் வெளியேறிய முன்னிரவில் அவன் வீட்டை விட்டு இறக்கி விடப்பட்டிருந்தான் தந்தையால். இறுக மூடிக்கிடந்த கனத்த கதவு வீடென்னும் பாதுகாப்பை விழுங்கிக்கொண்டது.


எவ்வித அமைதிப்படுத்தலுக்கும் உடன்பட மறுத்து அழுது அடம் பிடித்த ஒரு நாளில், அவன் தந்தை பாந்தானிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாக அறிவித்தார். அன்று தான் பாந்தான் அறிமுகம் ஆனான்.


''பாந்தான் ஆரு?'' அடம்பிடித்தலின் நடுவே ஆர்வம் ஓர் இடைவெளி உண்டாக்கி கேள்வியெழுப்பியது. தற்காலிகமாக உருவான ஆர்வத்தினை அவன் தந்தை மேலும் வளர்த்தினார். ஒழுங்கமைவுகளை உண்டாக்க, புரிந்து கொள்ளத் தக்க அச்சங்கள் தேவையாயிருக்கத்தான் செய்கிறது. அவை வடிவமைக்கப்பட வேண்டும் - அடக்கிப்போட வேண்டியவனின் புரிதல் சக்தியின் வீச்சுக்கேற்ப. தானாக வந்து வாய்த்துவிடுவதில்லை. வளர்ந்தவர்களுக்கு சட்டதிட்டங்கள். குழந்தைகளுக்கு அமானிட பிசாச வடிவங்கள்.

சிறு கணலை ஊதிப் பெரிதாக்கினார். பாந்தானுக்கு தொடர்ந்து வடிவம் படைத்தார். ஒற்றைக் கால். நெற்றியில் ஒற்றைக் கண். அசையாத பார்வை. வாய் கிடையாது. சப்தம் கிடையாது. பளீரென வெட்டும் பார்வையை தப்பு செய்யும் பொழுது வீசுவான். அந்தப் பார்வையின் மூலம் உயிரை உறிஞ்சி விடுவான். நகாராது, இருந்த இடத்திலிருந்து, கண் வழியாக உறிஞ்சி...


அன்றிலிருந்து, பாந்தான் பெயரைக் கேட்டதும் சகல பரப்புகளிலும் திகிலும் பீதியும் விரவிப் பரவி, அடிபணிதலை ஒரு தற்காலிக ஏற்பாடாகவேனும் வரவழைத்து விடும். காலப்புறக்கணிப்பில் அடைத்து கிடக்கும் இருண்ட மூலைகளில் அரவமற்றுப் படியும் தூசு போல மனதின் வெளிச்சமறியா திசுக்களில் அச்சம் தன்னை மெல்லப் படர்த்திக் கொண்டது பாந்தான் என்ற பெயரில். அந்தப் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம், கலைக்கப்படும் தூசுக்கள் எழும்பியடங்குவது போல் தன்னை உயர்த்தி கலவரப்படுத்தியடங்கும் அச்சம்.


ஒரு பெரும்வெளிச்சத்துண்டு தன் மீது விழுந்து உறிஞ்சிக் கொள்ளப்போகும் அந்த அச்சக் கணத்தைத் தேடிக்கொண்டிருந்த சிறிய புரிதலின் பின்னே கதவுகளுக்கப்பால் உரத்த சப்தங்கள் உராய்ந்து பொறிமூட்டிக் கொண்டிருந்தன.


''நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லாயில்ல'' அம்மாவின் குரல்.


''எது நல்லதில்ல? தெரியாம பர்ஸைத் திறந்து பணத்தை எடுத்ததா?'' பர்ஸிலிருந்து எடுக்கப் பட்டது பணம் என்பதை விட, தனது பிரத்யேக எல்லைக்குள் அத்துமீறல் நடக்கக் கூடுமென்ற அறிதலின் அதிர்ச்சியே உக்கிரம் கொள்ள வைத்தது தந்தையை. மூத்திரம் பெய்து நிர்ணயித்த எல்கைக்குள் அத்துமீறும் சக மிருகத்துடன் யுத்தம் செய்யும் மிருக மூர்க்கத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது குரல். அத்துமீறியதைக் காயப்படுத்தி செயலிழக்கச் செய்யும் ஆக்ரோஷம்.


''அப்படியென்ன பெரிய தப்பு செஞ்சுட்டான்? ஏதோ ஆசையா சாக்லெட் வாங்க
எடுத்திருக்கான்... மீதி பணம் அத்தனையும் மேஜை மீது வச்சுட்டானே... கவனிக்கலயா?''


''பர்ஸிலிருந்து எடுக்கனும்னு தோன்றியிருக்குதே, அதான் தப்பு. தொகை சின்னதா, பெரியதா என்பதல்ல கணக்கு.." தன் நிலைபாட்டின் நியாயம் பற்றி அவருக்குக் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. மேஜையின் மீது கிடந்த மீதியை காலைநேர அவசரங்களில் தவறவிட்டிருக்கலாம்.

''கணக்கு, கணக்கு... எல்லாத்துக்கும் ஒரு கணக்கு... அவனுக்கு வாங்கி வச்ச சாக்லெட் தீந்து போய் ஒரு வாரமாகிப்போச்சுதே.., வாங்கி வைக்கணும்னு ஒரு வாரமா சொன்னதை மறந்துட்டீங்க, அப்போ என்னாவாச்சு உங்க கணக்கு?'' மகனுக்கான வாதாட்டம் கணவனின் தவறுகளையும் இடித்துக் காட்டும் தடங்களைப் பற்றியது.

''நேரம் வேண்டாமா, என்ன?. இது மட்டுமே தான் மனுஷனுக்கு வேலையா?''


''இது மட்டுமே வேலையாக நினைக்க உங்களுக்கு முடியாது. உங்க நேரத்தை கணக்கா வச்சுக்க முடியாது. அது தப்பில்ல. ஆனா பிறரது தேவைகள மட்டும் கணக்கில் இருக்கா, இல்லையான்னு பாப்பீங்க, இல்ல?'' எப்படியும் கணவனைப் பதிலுக்குத் தாக்கிக் காயப்படுத்தி விடுவதென்ற ஆவேசம் அம்மாவுக்குள்ளும் திரண்டது.


''ஆமா. அப்படித்தான். உனக்கு சகிக்கலன்னா, நீயும் வெளியே போ...'' சமன்நிலைக்கு மீள இயலாது தொடர்ந்து தடுமாறும் அவரது கோபம் பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

அவர் மீண்டும் தன்னியல்புக்கு மீளும் வரையிலும் தனிமையில் விடுவதே சாத்வீகமானது. பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டு, வாயில் திறந்து வெளியில் இறங்கி மகனைத் தேடினாள்.


''அம்மா...'' ஓடி வந்து கட்டிக் கொண்டான், பாந்தான் பிசாசிடமிருந்து மீட்டுச்செல்ல வந்த தேவதை. ''வாம்மா, சீக்கிரம் வீட்டுக்குள்ள போய்டலாம்...'' பதைபதைப்புடன் அவசரத்தையும் கலந்து கைகளைப் பற்றி இழுத்தான்.



''பப்ளு... நாம வீட்டுக்குள்ள போகப்போறதில்ல...'' அம்மா அமைதியாகச் சொன்னாள்.

பாதுகாப்பான பரப்பில், திரையிட்ட சன்னல் சாத்தி, பாந்தானின் ஒற்றைக் கண் வெளிச்சத்தை வெளியில் நிறுத்திய பத்திரத்தில் போர்த்திக் கொண்டு தூங்கலாமென்ற நினைப்பிருந்தது பப்ளுவிற்கு. ஆனால், இந்த அம்மா என்ன சொல்கிறாள்?


''அம்மா பாந்தான் வந்திருவான். வாம்மா, போய்டலாம்'' துரிதப்படுத்துதலில் பப்ளுவின் பயம், தன் பரிமாணங்களின் மூடுதிரைகளைக் களைந்தது. அவனது பயங்களின் நிர்வாணம் அவளுக்குத் திகிலூட்டியது. அடம் பிடித்தழும் அந்தக் கணத்தைத் தள்ளிப்போட எளிதான வழி கிட்டிய ஆசுவாசத்தில் அதன் மறுபுறத்தைக் கவனியாது விட்டிருப்பதன் விபரீதம் விடியத் தொடங்கிற்று அம்மாவிற்கு.


''பப்ளு, வீட்டிற்குள்ளே போவப்போறதில்ல. பாந்தானும் வரப்போவதில்லை. பார்த்துக் கொண்டேயிரு...'' அம்மா கதவின் வெளிப்புறத்தை தாளிட்டாள். அவனருகில் அமர்ந்தாள். அவன் தலைமுடிகளைக் கைகளால் கோதிவிட்டாள். பாதுகாப்பற்ற பதட்டங்கள் விலகத் தொடங்கிற்று அவனுள்.


''ஏம்மா, வரமாட்டான்?''

''அப்படி யாருமில்லடா..''

''நெஜம்மாவாம்மா?'' பெருத்த நிம்மதி அவனுள்ளே அமைதியைப் படைத்துக் கொண்டிருந்தது.


''ஆமாம் - இந்த ராத்திரி முழுக்க நாம இரண்டு பேரும் இங்கே உட்கார்ந்து பாப்போம். பாந்தான் வரமாட்டான்னு நீ தெரிஞ்சுப்ப.''

அம்மா சொன்னால் அப்படித் தானிருக்கும். உண்டென்று சொன்னபோது, உண்டு. இல்லை யென்றால், இல்லை. அவனுக்கு வேறெந்த ருசுவும் வேண்டியிருக்கவில்லை.


இரவின் ஆளுமை கரிய இருளுடன் குளிரையும் கனமாகப் படர்த்திய பொழுது, அம்மாவின் அடிமடிக்குள் தன்னை சுருட்டிக் கொண்டான். அங்கிருந்து கொண்டு, எதைப் பார்த்தாலும் பயமற்றிருந்தது. அலட்சியமாக சுற்றியும் பார்த்துக் கொண்டிருந்தான்.

''அப்பா, எங்கம்மா?''

''வீட்டுக்குள்ள...''

''நீ வெளியில பூட்டிட்டீயே?''

''காலைல திறப்போம். அதுவரையிலும் பூட்டிய வீட்டிற்குள்ள கிடக்கட்டும்...''

''ஜெயிலாம்மா?''

''உ..ம்... அது மாதிரித் தான்னு வச்சுக்கோயேன்..''

அவனுக்குச் சிரிப்பு வந்தது. அம்மாவிற்கும் தான். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே கதைகள் பேசினர். வீட்டினுள் சிறைப்பட்டுக் கிடக்கும் தந்தையை மறந்து போனது. சிறிது சிறிதாக மூச்சிரைப்பு நிறுத்தி, எழுந்து நின்றாடிய விடைத்த படம் சுருக்கி, பெட்டிக்குள் ஒடுங்கும் நாகமாக தந்தை சுருங்கிக் கொண்டிருந்த பொழுது, தன் தவறுகள் படம் காட்டத் தொடங்கியிருந்தது. மனைவியும், மகனும் தன்னைப் பிரிந்து வெளியில் நிற்பது உரைத்தது.

அவர்களை உள்ளே அழைக்க கதவை திறக்க எத்தனித்த பொழுது, வெளியிலிருந்து
சாத்தப்பட்டிருப்பது தெரிந்தது.

தொட்டாற்சிணுங்கி தீப்பற்றிக் கொள்ளவில்லை.

'கையிலே காசில்லாமல், வந்துட்டான்க...' இளக்காராமாக பேசிக் கொண்டேயிருக்கும் நண்பர்களுக்கிடையில் தன் பிம்பத்தைத் தூக்கி நிறுத்த, உற்ற தோழன் ஒருவனின் பலத்த தூண்டுதலில், இந்த அனுபவத்திற்காக அலைந்த நாளிலே பர்ஸை முகத்தில் விட்டெறிந்து, இழுத்து அறைந்து தனனைக் குவித்து சாத்திக் கொண்ட கதவு தன் அழுக்குக் குரலில் விரட்டியது. ஒரு சிறு கவனப்பிசகில், கீழே விழுந்தது அவமானமாகத் தோன்றவில்லை.

'வாளிப்பான சாக்லெட் மாதிரிடா...' ரசித்து சிலாகித்துச் சொல்லி அனுப்பிய சிநேகிதனின் வார்த்தைகள் அவமானப்படுத்திக் கொண்டேயிருந்தது.

ஒரு சாக்லெட் வாங்க முடிந்ததற்கும் வாங்க முடியாமல் போனதற்குமுண்டான போராட்டங்கள் அழிந்து போயிருந்தன அங்கே.

1 comment:

நண்பன் said...

இந்தக் கதையை எழுதி முடித்து, இணையத்தில் பிரசவித்த பின், எப்பொழுதுமே நான் கருத்து கேட்கும் நண்பர்களிடத்தில் வாசித்து கருத்து சொல்லும் படி கேட்டுக் கொண்டேன்.

'நன்றாக இருக்கிறது' என்ற நமுத்துப் போன நழுவல் விமர்சனங்களை ஒரு போதும் நான் ஏற்றுக் கொண்டதில்லை. விமர்சனம் என்பது ஒரு மதிப்பீடு. அவற்றை எதிர்கொள்ள மறுக்கும் சராசரியான நண்பர்களை விடுத்து, கூரிய விமர்சனங்களை முன் வைக்கக்கூடிய நண்பர்கள் அவர்கள்,

இசாக் சொன்னார், 'நன்றாக இருக்கிறது. ஆனால், நடையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம் - 'இறந்த காலத்திற்கு வயதில்லை' போல...' என்றார்.

கதைக் கரு சிறப்பானது. ஆனால், விரிவாகப் போய்க் கொண்டிருந்த ஒரு நதி, சட்டென்று ஒரு கட்டத்தில், குறுகி ஓடையாக மாறிவிடுவது போன்ற பிரம்மை. கதையில் எங்கோ தடுமாற்றம் இருக்கிறது. எங்கே?

'உங்களுக்குத் தெரிகிறதா?' முத்துகுமரனிடம் கேட்டேன்.

'தெரியவில்லை. அது அவரோட பார்வை. ஆனால் கதை நன்றாக வந்திருக்கிறது. தனனை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியாத மனிதன், பிறரை தன் அதிகாரத்தின் மூலம் ஒழுங்கு படுத்த முனைவது தெரிகிறது. குழந்தைகளை மிரட்டி அடிபணிய வைப்பது தவறு என்பதுவும் கதையில் தெளிவாக விளாங்குகிறது. சரி, 'பாந்தான்' எப்படி உங்களுக்குத் தோன்றியது? எங்கே படித்தீர்கள்? அல்லது பிடித்தீர்கள்?'

'பாந்தான் உருவான விதத்தை அப்புறம் சொல்கிறேன். ஆனால், 'நடை' என்று குறிப்பிட்டு எதைச் சொன்னார் என்று தெரியவில்லையா?'

'தெரியவில்லை.'

விமர்சனம் என்பது ஒரு மதிப்பீடு. அதில் கூர்மை வேண்டும். நழுவல்கள் கூடாது. மதிப்பீடுகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். என் கதை பற்றிய மதிப்பீடு ஒன்று என்னிடத்தில் வந்து சேர்ந்தது.

'முன்னர் எழுதிய இறந்த காலத்திற்கு வயதில்லை மாதிரி இல்லை'

மீண்டும், இறந்த காலத்திற்கு வயதில்லை கதையை வாசித்துப் பார்த்தேன். பிறகு மீண்டும் இந்தக் கதையை. பலமுறை.. மீண்டும், மீண்டும்... ஒரு நாள் கழிந்த பின் மீண்டும் வாசித்தேன்.

சட்டென்று அடைக்கப்பட்டிருந்த கதவுகள் திறந்த மாதிரியாக இருந்தன. தந்தைக்கும் மகனுக்குமான போராட்டங்கள் இறுதிவரையில் ஒரு புள்ளியில் இணைவது மாதிரியல்லாமல், வளர்ந்துவிட்டவன் செய்யும் தவறாக தந்தையின் தவறைப் பற்றி எழுதி இருப்பதுவும், மகனின் தவறை ஒரு குழந்தை செய்வது மாதிரியும் எழுதி, இரண்டுமே தனித்தனியாகப் பிரிந்து நிற்பது போல் காட்டி இருந்தேன். ஆனால், தவறு என்று வரும் பொழுது, அது எத்தகையது என்பதல்ல கணக்கு. வயது வித்தியாசங்களைப் பொறுத்து, தவறின் தராதரம் மாறலாமே தவிர, தவறு செய்ய முனைந்த மனம் இருவருக்கும் ஒன்றே என்ற புள்ளியைத் தொட வேண்டும் 'அப்பொழுது தான் இந்தக் கதையில் ஒரு முடிவு ஏற்படும் என்பது விளங்கியது.

முதலில் எழுதிய பொழுது, இதை தவறவிட்டிருந்தேன். நேரடியாக ஒரு தவறைச் சுட்டிக்காட்டி எழுதியது நிறைவற்று இருந்தது. தவறு எத்தகையது என்ற நேரிடையான மதிப்பீடுகளை விட, அதை குழந்தையின் தவறோடு இணைத்து, தவறு செய்வதில் குழந்தை, வளர்ந்தவன் என்ற பாகுபாடுகள் கிடையாதென்ற மதிப்பீடுகளினூடே கதையை முடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.

'வாங்க முடிந்ததற்கும், வாங்க முடியாததற்குமிடையே உண்டான போராட்டங்கள்' என்று பெயர் வைத்ததும் பொருந்தி வந்தது.

என்றுமே, தீவிர எழுத்துத் தளத்தை எட்டிப் பிடிக்க முயற்சிப்பவனுக்குத் தேவையாயிருக்கிறது - கூர்மையான விமர்சனங்கள். சாண் ஏறினால், முழம் சறுக்கும் இந்தப் போராட்டத்தில், வாசிப்பவர்களின் மதிப்பீடுகள் படிக்கட்டுகளாக மாறக் கூடும். ஆனால், வாசித்துவிட்டு ஏதுமே சொல்லாமல் போய்விடுபவர்கள், படிக்கட்டுகளைத் தருவதில்லை. மாறாக, ஏற முயற்சிக்கும் வழுக்குப் பாறையில் வெளக்கெண்ணெய்யை ஊற்றி விடுகிற மாதிரி தோன்றுகிறது.

என்று கற்றுக் கொள்வோம், மதிப்பீடுகளை நேர்மையான விமர்சனமாக முன் வைக்க?

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்