"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, December 30, 2007

பே நசீரின் மரணம் இட்டுச் செல்லும் பாதைகள்....


"உங்களுக்குப் பாக்கிஸ்தான் செல்வதற்கு அச்சம் இல்லையா?"

" இல்லை "

"உங்கள் உயிருக்கு ஆபத்து என்று தோன்றவில்லையா?"

"இல்லை. வாழ்வதும், இறப்பதுவும் இறைவனின் கையில் இருக்கிறது. இறைவன் என்னை அழைக்கும் வரை, இறப்பைப் பற்றிய அச்சமின்றி இருப்பேன்"

தீர்க்கதரிசனம் என்பது இதுதானா?

NDTVயின் பர்கா தத் பேநசீரின் உரையாடிய பொழுது, பேநசீர் இவ்வாறு குறிப்பிட்டார். "என் சொந்த மண்ணிற்குத் திரும்ப, நாட்களை, மணிகளை, நிமிடங்களை, நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தேன்" என்று பூரிப்புடன் சொன்னார். அவர் முகத்தில் எப்போதுமில்லாத அசாத்திய நம்பிக்கை.

ஆனால், இவை எவற்றையும் இறைவன் கேட்கவில்லை போலிருக்கிறது. அழைத்துக் கொண்டான். அவ்வாறு சொல்லி நடந்த விஷயங்களை ஜீரணித்துக் கொள்ள வேண்டியது தான்.

ஆனால், இந்த மரணத்தை செரித்துக் கொண்டால் போதுமா? பாக்கிஸ்தானில் நிகழ்பவை இந்தியாவை நேரடியாகப் பாதிக்கும். தீவிரவாதிகளை எதிர்த்துப் போர் புரிய இந்தியா, தனது ஒத்துழைப்பை அமெரிக்காவுக்கு நல்கிய பொழுது, அதை அமெரிக்கா நிராகரித்தது. பாக்கிஸ்தானையே தேர்ந்தெடுத்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை முஷரஃப் ஒழித்து விட்டாரா?

முஷரஃப் தீவிரவாதிகளை ஒடுக்கி விட்டாரா என்ற கேள்விக்கு, உதடு பிதுக்கி இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் தீவிரவாதிகள் பற்றிய புரிதலே இல்லையோ என நினைக்கும் படியாகத் தான் செயல்பாடுகள் இருக்கின்றன. அமெரிக்காவின் வற்புறுத்தலுக்காகவே, தீவிரவாத எதிர்ப்பைக் கடைபிடிக்கிறார் போலும் தோன்றுகிறது. பே நசீர் புட்டோவின் மரணத்துக்குக் கூட ஒருவிதத்தில் அவர் காரணமாகி விட்டார் என்றே கூற வேண்டும்.


அமெரிக்காவின் தொடர்பில் இருக்கும் எவரையும் மலைக்குகைகளில் ஒளிந்து வாழும் தீவிரவாதிகள் மன்னிக்கத் தயாரக இல்லை. பேநசீர் பாக்கிஸ்தான் திரும்பும் முன், முஷ்ரஃப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் - அதிகார பகிர்வு ஒப்பந்தம் மிகத் தவறானது. இந்த ஒப்பந்தத்தை முன்னின்று நிகழ்த்தியது அமெரிக்கா என்பது வெளிப்படையாகத் தெரியும் அனைவருக்கும். அப்படி இருக்கையில், வெகு அலட்சியமாக அவரது பாதுகாப்பைக் கையாண்டது மிகத் தவறானது.

இம்ரான் கான் பேட்டியை NDTVயில் காண நேர்ந்தது. அப்பொழுது அவர் சொன்ன சிலவை சிந்திக்க உகந்தது. எல்லாவற்றிற்கும் அல்கொய்தா பெயரையே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதற்கான நீதிவிசாரணை நடத்தப்பட்டு, அவர்களது குற்றங்கள் நிரூபிக்கப்படவேண்டும் என்றார். முடக்கிப்போடப்பட்ட நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

பேநசீரின் மரணத்திற்கு மெஹ்சூத் என்ற தாலிபான் தலைவர் தான் காரணம் என்று ஒரு டேப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உடனே அல்கொய்தா அதை மறுத்திருக்கிறது. தன்னுடைய செயல்களுக்கு எப்போதுமே உரிமை கொண்டாடும் ஒரு இயக்கம் வெளிப்படையாக மறுத்தது - புட்டோவின் கொலையில் புதிய சந்தேகங்களை உருவாக்குகிறது. குண்டு பாய்ந்து இறக்கவில்லை. வண்டியின் மேற்கூரையில் தலை மோதிய அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என்ற தகவலை இப்பொழுது கூறுகிறார்கள். பேநசீரின் உதவியாளர் அதை மறுத்திருக்கிறார். பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை. குடும்பத்தினரின் வேண்டுகோள் ஏற்று செய்யவில்லை என்கிறார்கள். ஆக, தீவிரவாத சதி என்பது பெரும் குழப்பத்திற்குத் தான் இட்டுச் செல்கிறது. அரச சதியாகக் கூட இருக்கலாம் என்ற ஊகமும் பலரால் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவரின் வாகனம் அருகே அத்தனை அநாயசமாக ஒருவரால் நெருங்க முடிகிறது என்பதே எத்தனை தீவிரமாக தீவிரவாதம் எதிர்க்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும். பின் எங்கிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படுகிறது என்ற கோஷத்தை நம்புவது?

தீவிரவாதம் என்பது ஒரு ideology. அதை ஒழிக்க வழமையான ஆய்தங்கள் ஏந்திய ராணுவத்தால் முடியாது. இது உலகெங்கிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போர் புரிந்த அரசுகளின் அனுபவமாக இருக்கிறது. ஒரு சித்தாந்தத்தை மற்றொரு சித்தாந்தத்தின் மூலமாகத் தான் எதிர்க்க முடியுமே தவிர, ஆய்தப் பலப்பிரயோகம் அடக்கி விடாது. ஆகையால் ஆய்த வலிமை கொண்டு, தீவிரவாதத்தை எதிர் நோக்குவதை விட, தீவிரவாதிகளின் இயங்குதளமாக அமையும் மக்கள் வாழுமிடங்களை அணுகி, அவர்களை வென்றெடுப்பதின் மூலமே தீவிரவாதத்திற்கெதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

ராணுவ ஆக்கிரமிப்பால், எல்லா இடங்களையும் நிரப்பிவிட்டால், தீவிரவாதிகள் இருக்க இடமில்லாமல் ஓடி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புத் தான் அரசு எந்திரங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறது. எந்திரத் தனமாக செயல்படும் அரசுகள் இருக்கும் வரை, மக்கள் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக் கிடக்க நேரிடும். தங்களுடைய தேவைகளை மக்களின் அதிருப்தியில் எளிதாக ஊடுருவச் செய்து, தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள தீவிரவாதிகளால் எளிதாக முடிகிறது.

முதலில் தீவிரவாதிகளைத் தீவிரவாதிகளாகத் தான் அடையாளம் காணவேண்டுமே தவிர, அவர்களை மக்களின் மதத்தோடு இணைத்துப் பேசி, மக்களை அன்னியப்படுத்தி, தீவிரவாதிகளை நோக்கி நெட்டித் தள்ள முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுமானால், அத்தகைய செயல்களைச் செய்யலாம். ஆனால், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளால் அதை அவ்வாறு செய்ய முடியாது. அது தேவையற்ற மூர்க்கத் தனத்தில் தான் கொண்டு போய்விடும். மக்களின் எந்த ஒரு கலாச்சார கூறுகளோடும் தீவிரவாதிகளை இணைத்துப் பேசுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பின் இயங்கக் கூடிய ஒரு நிர்வாகத்தை மக்களுக்கு அரசு தரவேண்டும். வடமகாணங்களில், இன்றளவும் அரசு என்று ஒன்றில்லாமல், பழங்குடி இனத்தலைவர்கள் தயவில் தான் அரசு இயங்குகிறது. இந்தத் தலைவர்களை, மதத்தின் பெயரால், தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வது தீவிரவாதிகளுக்கொன்றும் பெரிய சித்து வேலை கிடையாது. அரசு நிர்வாகம் நடக்க வேண்டுமென்றால், அங்கு முதலில் மக்கள் பங்குபெறக் கூடிய ஆட்சி தேவை. முறையான தேர்தல்கள் மூலம் மக்களை பங்கு பெற வைக்க முடியும்.

இதெல்லாம் இல்லாமல், முஷ்ரஃப் தன் ராணுவத்தின் பலத்தையும், அமெரிக்காவின் ஆய்த சப்ளையையும் மனதில் கொண்டு, தீவிரவாதிகளுடன் போர் தொடுத்தால், நாட்டை அழிவுப் பாதையில் தான் நடத்திச் செல்ல முடியுமே தவிர, நேர்வழியில் அல்ல. பாக்கிஸ்தானில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால், பாக்கிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்கப்பட்டு, அவர்கள் முழுமனதுடன் தீவிரவாதத்தை மக்கள் ஆதரவுடன் எதிர்த்துப் போரிட வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வெட்டி சித்தாந்தத்தைக் கைவிட்டு விட்டு மனப்பூர்வமாக போரிட முன்வர வேண்டும்.

பாக்கிஸ்தான், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சீரிய சூழ்நிலையில் இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ள, முஷ்ரஃப் உதவ வேண்டும். தன் பதவியைத் துறந்து விட்டு, மக்கள் அரசு அமைய உதவ வேண்டும். முஷரஃபிற்குத் தேவையான பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அமையக் கூடிய அரசு செய்ய வேண்டும். அவரின் உயிருக்கும் எந்நேரமும் ஆபத்துகள் விளையக் கூடுமென்பதால், அவரது பாதுகாப்பிற்குப் அமையவிருக்கும் அரசுகள் உத்தரவாதம் தரவேண்டும். அத்துடன் மக்களை அரவணைக்கும் வேலையில் - மக்களை ஒன்றிணைக்கும் வேலையில் அரசு ஈடுபட வேண்டும்.

இல்லையென்றால், பாக்கிஸ்தான் தோற்கும். சிதறிப்போகும். சிதறிப்போகும் பாக்கிஸ்தானால் தான் இந்தியாவுக்கு அதிக ஆபத்துகள் விளையக் கூடும்.

பேநசீரின் மரணம், தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு வலுவான கதவைத் திறந்து வைத்திருக்கிறது. மக்களின் ஆதரவை தீவிரவாதத்திற்கு எதிராக ஒருமுகப்படுத்த பாக்கிஸ்தானில் நல்ல சூழ்நிலை நிலவுகிறது.

இதை பயன்படுத்துவார்களா?

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்