"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, December 22, 2007

தியாகப் பெருநாள் செய்தியின் தொடர் சிந்தனைகள்.

தியாகப் பெருநாள் செய்தி யின் தொடர் சிந்தனைகள்.

வலிமையான செய்தி.

நேர்மையுடன் தன் தரப்பு வாதங்களைக் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் எடுத்து வைக்கும் அழைப்பிற்கு ஒரு பாராட்டு.

ஓட்டுகள் குத்தி ஆதரவு காட்டிய சகோதரர்கள், ஏனோ கருத்து தெரிவிக்க விரும்பவில்லை போலிருக்கிறது. தங்கள் அடையாளங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டாம் என்று நினைக்கிறார்களா, என்ன?

சகோதரர்கள் மனமுவந்து நியாயத்திற்கப்பாற்பட்ட விமர்சனங்களை எதிர்த்து எழுத வேண்டும் - நியாயாமான நேர்மையான மொழி நடையில் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கு ஆக்கப் பூர்வமான பதில் தரவேண்டும்.

ஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களது அடையாளங்களை மொத்த இந்திய சமூகத்தின் மீதும் சாட்டி, மற்ற சகோதரர்களைப் புண்படுத்தா நடையில் எழுத வரவேண்டும்.

நியாயமான நேர்மையான எழுத்துககளை மக்கள் என்றும் மதிப்பார்கள்.

வெளியிலிருந்து வலிந்து திணிக்கப்படும் இழிவுகளைக் களைய முனையும் அதே வேளையில், 'நீ பெரியவனா, நான் பெரியவனா?' என்ற ரீதியில் அணி பிரிந்து அடித்துக் கொண்டிருக்கும் செய்திகளும் கண்ணில் படுகின்றன. தங்கள் சுய நலனை சமுதாய நலனைக் காட்டிலும் மேலானதாக நினைப்பவர்களையும் குறித்து கண்டித்து எழுத முன்வரவேண்டும்.

எழுத்தாளர்களைக் குறித்தான மாற்றுக் கருத்துகள் என்னிடம் உண்டு. உள் விசாரணைகளாக எழும் அவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வைக்க வேண்டியதில்லை. அவர்களது, 'ஆராய்ச்சிகள்' நல்ல பலன் கொடுக்கக் கூடும் - அறியப்படாத விஷயங்களைப் பற்றிய ஒரு விவாதத்தைத் தொடங்க உதவலாம். அவற்றைப் பற்றிய கருத்தாக்கங்கள் எவ்வாறிருப்பினும்.

சுயநலம் கொண்டு, இளைஞ்ர்களைத் தூண்டி, மோதவிட்டு, தங்கள் மேலாண்மையை, ஊர்தோறும் நிருவ நினைக்கும் சகோதரனை விட, ஒரு பழக்கம் குறித்து, தீவிர சிந்தனையுடனும், ஆர்வத்துடனும், கேள்வி எழுப்புபவர்கள் மோசமானவர்கள் அல்ல.

ஒரு சில 'மேதாவிகளுக்கு' நடுவே மட்டும் இயங்கும் இவர்களது செயல்பாடுகளை விமர்சித்து, ஒரு தீர்வு கிட்டும் முன்னே, தண்டனை வழங்கி, சுயசிந்தனைகளை முடக்கிப் போட நினைப்பது நல்லதல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாமிய அறிஞர்கள் அந்தக் காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப - தேவைக்கேற்ப மறுவாசிப்புக்கு இஸ்லாமிய விதிகளை உட்படுத்தியே வந்திருக்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில், இந்த மறுவாசிப்பும், விசாரணையும் நின்று போய்விட்டது.

அதன் பின், தங்களது விருப்பத்திற்கேற்ப வாசித்துக் கொள்ளும் நபர்கள் பெருகிவிட்டதனால், இஸ்லாத்தின் எளிமை களையப்பட்டு, இறுக்கம் நிறைந்த ஒரு மார்க்கமாக இவர்களால் பிரகடனப் படுத்தப்பட்டு விட்டது. இதன் மூல காரணம் - பொது நீரோட்டத்திலிருந்து விலகி, தனித்தீவாக சமுதாயத்தை மாற்றி, அதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டை இறுக்கமாக சமூகத்தின் மீது ஏற்றிவிடலாம் என்ற சிலரின் நப்பாசை தான்.

இந்தியாவின் முகல், துருக்கியின் ஓட்டமான் பேரரசுகள் தேயத் தொடங்கியதும், இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறார்கள் அதன் எதிரிகள் என்ற பயங்கரத்தை முன்நிறுத்தி, அதன் மூலம் எழும் உணர்வுகளை தங்கள் ஆதரவுத் தளமாக மாற்றிக்கொள்ள முற்பட்டனர் சிலர். அத்தகைய போக்கு இன்றும் எங்கெங்கும் காண முடிகிறது. உதாரணமாக, கொமெய்னி, பின்லேடன், மற்றும் ஹமாஸ் இயக்கங்கள். இந்த மாதிரியான மதவாதத்தை முறியடிக்காத வரையிலும், நாம் வெளியிலிருந்து எழும் கருத்துகளை மட்டுமே சாடிக் கொண்டிருந்து விட்டு எதையும் சாதிக்கப் போவதில்லை.

இன்று உலகின் பெரும் சிந்தனை தளங்கள் இயங்கக் கூடிய மொழிகளை அனைவரும் கற்றுக் கொள்வது நல்லது. அதில் பரிச்சியம் ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம், ஒரு இடத்தில் நிகழ்பவைக்கு மட்டுமே எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பேன் என்றில்லாமல், ஒரு விரிந்த தளத்தில் தேவையான கருத்துப் பரிமாற்றங்களை ஏறிட்டுக் கொள்ளலாம்.

இது குறித்து மேலும் தெளிவு பெற விரும்புபவர்கள் - The Struggle within Islam என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். அந்தப் புத்தகம் ஒரு வரலாற்று நூல் மட்டுமல்ல. ஆனால், அது ஒரு உள்முக விசாரணை. ஏன், இஸ்லாம் தன் பெருமைகளை இழந்தது என்ற கேள்வியோடு, இஸ்லாமிய ஆட்சியாளார்கள் குறித்து - நபிகளின் மரணம் தொட்டு ஆரம்பித்து, முகல் பேரரசின் வீழ்ச்சி, ஓட்டமான் பேரரசின் வீழ்ச்சி, மூர் இனத்தவர் ஸ்பெயினில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது என முழு வரலாற்றையுமே ஒரு கூரிய விமர்சனப் பார்வையுடன் எழுதி இருக்கிறார் Dr, Rafique Zakaria.

எழுத வாருங்கள் என்ற அழைப்பு எத்தனை முக்கியமானதோ, அத்தனை முக்கியம் எதை எழுதுவது என்று. இந்த எதை எழுதுவது என்பதில், பலத்த சர்ச்சைகளும், மனத்தாபங்களும் எழலாம். ஆனால், இனியும் குறைபாடுகள் என்று இஸ்லாத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து வைப்பதிலோ, அல்லது அது குறித்து நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் - நாங்கள் இருக்கிறோம் என்ற சில சுயநலமிகளின் வார்த்தைகளை ஏற்று, பெரும்பான்மையானவர்கள் மௌனமாக இருப்பதுவோ சரியல்ல.

ஒவ்வொருவரும் தங்கள் சக்தியைக் கொண்டு, சுயமாக சிந்திப்பதுவும், தங்களுக்குச் சொல்லப்படும் செய்திகள் சரிதானா, நேர்மையானதா என்று எடை போட்டுப் பார்க்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதுவும் தான், வலிமையான ஆயுதமாக பேனாவின் முனையை மாற்றும்.

இல்லையென்றால், மேலும், மேலும் சாதரணனைக் குழப்பவும், திகைக்க வைக்கவும் தான் செய்யும்.

அனைவரும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

6 comments:

Unknown said...

//ஒவ்வொருவரும் தங்கள் சக்தியைக் கொண்டு, சுயமாக சிந்திப்பதுவும், தங்களுக்குச் சொல்லப்படும் செய்திகள் சரிதானா, நேர்மையானதா என்று எடை போட்டுப் பார்க்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதுவும் தான்//

சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
அத்துடன் மனதில் எத்தகைய முன் முடிவுகளுமின்றி கருத்துக்களை அணுகுதல் அவசியம்.

நண்பன் said...

Sultan,

// அத்துடன் மனதில் எத்தகைய முன் முடிவுகளுமின்றி கருத்துக்களை அணுகுதல் அவசியம்.//

Thanks,

An essential requirement for aspiring writers. I missed it. You had added it at the right place / right time.

அபூ முஹை said...

வழக்கம் போல் உங்கள் முத்திரை மிளிர்கிறது. வலிமையான செய்தியை விரிவாக்கியதற்கு நன்றி நண்பன்.

சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடந்த லீனா மணிமேகலையின் நிகழ்வுக்கு இஸ்லாத்தின் வேர்களே காரணம் என இதையும் விட்டு வைக்காமல், சம்பந்தமேயில்லாத இஸ்லாத்தின் மீதான தாக்குதலை வழக்கமாகத் துவங்கி விடுகின்றனர். இஸ்லாத்துக்கு முன்புவரை மனிதன் ஆடை உடுத்தும் நாகரீகத்தைப் பெறவில்லை, நபியவர்கள் வழியாக இஸ்லாம் மனிதனுக்கு முதல் முறையாக ஆடை உடுத்தும் சட்டம் இயற்றியது என்பது இவர்களின் கருத்து - இவர்கள் அறியாதவர்கள் - அதனால் தானோ என்னவோ, ஆடை, உடை சர்ச்சை எங்கு கிளம்பினாலும் இவர்களுக்கு இஸ்லாம் மீது அக்கறை வந்து விடுகிறது.

நண்பர்களின் நியாயமான விமர்சனங்களையும், அநியாயமான இழிவுகளையும் நேர்மையுடன் சந்திக்க முன் வர வேண்டும் என உங்களுடன் சேர்ந்து அழைக்கிறேன்.

- அனைவரும் இது குறித்து சிந்திக்க வேண்டும். - நன்றி!

நண்பன் said...

அன்பின் அபூமுஹை,

மிக்க நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள்...

╬அதி. அழகு╬ said...

துருக்கிப் பேரரசின் வீழ்ச்சியும் அதற்குப் பின்னுண்டான நிகழ்வுகளும் இங்கு விபரமாகத் தமிழில் சொல்லப் பட்டுள்ளன. தெரிந்து கொள்வதற்கு நிறைய செய்திகள் உள:
http://islamiccollections.blogspot.com/search?q=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%2C+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%2C+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88

நண்பன் said...

அதி அழகு,

மிக்க நன்றி.

வாசித்து விட்டு, அது குறித்து எனது கருத்துகளை எழுதுகிறேன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்