"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, December 25, 2007

மோடிக்கு வாழ்த்துகள் சொல்வோம்

குஜராத் ஒளிர்கிறது என்று ஆரம்பித்து, பின்னர், ஒரு புள்ளியில் அதன் மீதான அவநம்பிக்கை கொண்டு, கொலை குற்றங்களை நியாயப்படுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்த முனைந்த பொழுதே, தெரிந்து விட்டது மோடி வெற்றி பெறுவார் என்று.

மக்களின் ஏகோபித்த ஆதரவு - நேர்மையான ஆட்சியும், மக்களின் அன்றாடத்தேவைகளை சிரமேற்கொண்டு செய்வது என்ற முனைப்பினாலும் வந்தது என்பதே உண்மை. இது அனைத்து அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

ஆனால் மோடியின் சிறப்புகள் இத்துடன் முடிவடைந்து விட்டன.

அப்பட்டமாக, சிறுபான்மை இனத்தவரின் மீது தன் பரிவாரங்களை ஏவிவிட்டது - அந்தக் குற்றச் செயல்களை மூடி மறைப்பதில் முன் நின்றது, எல்லாவற்றிற்கும் மேலாக, தன் வாயாலே அரச கொலைகளை நியாயப்படுத்தியது என தலைமைக்குத் தகுதியற்ற பல பண்புகளைக் கொண்டிருக்கும் அவரை - என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவரது பாவச் செயல்கள்.

பின் எப்படி இத்தனை ஆதரவு?

கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களைக் கூட யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. அதனாலேயே, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் சிறந்த தலைவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

ஆனால்,

முதலில் அதிகாரம் கைக்கு வரட்டும் - எல்லாரையும் அச்சுறுத்தி அடக்கி வைப்போம். பின்னர், நல்வழிகளைத் தேடும் என்ற 'anti-hero' கதையின் நாயகனாக மோடி இருக்கும் பட்சத்தில், இப்பொழுது அவர் நல்வழியைத் தேடும் கட்டாயத்தில் இருக்கிறார்.

இன்று குஜராத்தில், தனித்தீவாக சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுவிட்டனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. தங்கள் பிழைப்புக்காக, தங்களது இயற்பெயரையே மறைத்துக் கொண்டு, ஹிந்துப் பெயர்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு சிறுபான்மையினர் தள்ளப் பட்டிருக்கின்றனர்.

இந்த சூழலையெல்லாம், எவ்வாறு மோடி மாற்றப் போகிறாரென்று தெரியவில்லை. இனி அவரே முயற்சித்தாலும், மக்களிடையே அவர் தோற்றுவித்த பிளவுகளை இணைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். அவ்வாறு இணைக்க முடியுமென்றால் - அதற்கான விலை அவருக்கு மிகப்பெரியதாக இருக்கும் - சொந்த சகாக்கள் சிலரையே அவர் பலி கொடுக்க வேண்டியதிருக்கும். அவ்வாறு இணைக்க முடியுமென்றால், அவர் தோற்றுவித்த பிளவுகளை அவரால் கடக்க முடியுமென்றால் - சந்தேகமேயில்லை - அவர் நிச்சயமாக ஒரு சிறந்த தலைவராக வர முடியும்.

இனி வருங்காலத்தில், மோடி கவனிக்கப்படுவார் -

எவ்வாறு அவர் மக்களிடையே தோற்றுவித்த அச்சத்தையும், வெறுப்பையும் போக்கப் போகிறார் என்று. அவர் அந்த வழியில் செல்வாரா, இல்லை மீண்டும் மீண்டும், மக்களை பிளவு படுத்தி அதன் மீது தனது பிம்பத்தை எழுப்பிக்கொள்வாரா என்பதை அனைவருமே கவனிப்பர்.

சிறுபான்மை இனத்தவர்கள் சொல்கின்றனர் - 2002 கடந்து செல்ல விரும்புகிறோம். இது ஒரு நியாயமான ஆவல். நேர்மையான எதிர்பார்ப்பு.

அதற்காக மோடி மெனக்கெடுத்து, அவர்களுக்கு கரம் கொடுத்து உதவப் போகிறாரா, அல்லது, அவர்களை 2002 கடக்கவே முடியாத அச்சத்தில் உறைய வைக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்து, காலம் அவரைப் பற்றி எழுதும் -

அவர் சிறந்த தலைவரா, அல்லது ஹிட்லரை விட மோசமான பாசிஸ்டா என்று.

அவர் 2002 கடந்து தன் மக்களை அழைத்துச் செல்வாரென்றே நம்புவோம். தன் தனிமனித ஆகிருதியில் அவர் பெற்ற வெற்றி, பிஜேபியையும் விட அவர் பெரிதாகிக் கொண்டே போகிறார் என்ற செய்தியை தெளிவாக்குகிறது. குஜராத்தையும் தாண்டி அவர் தேசிய அளவில் வருவதற்கு அவர் முதலில் 2002ஐக் கடக்கட்டும்.

கடப்பார் வெற்றிகரமாக என்று வாழ்த்துச் சொல்வோம்.பாலாவின் இந்தப் பதிவில் பின்னூட்டமிட்டது.

23 comments:

Anonymous said...

ஹிட்லர் கூட மிகச் சிறந்த அட்மினிஸ்ட்ரேட்டர் எனப் பெயர் வாங்கியவர்தாம்..

Anonymous said...

முதல் மந்தரியாக தேர்வு செய்யபட்ட பின் நரமாமிச உண்ணி பேசிய போது, "கடந்த 5 ஆண்டகளாக ஆட்சியிலிருந்த நம்மை மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதன் மூலம் நாம் சரியான பாதையிலேயே செல்கிறோம் என்பது தெளிவாகிறது" என்று சொல்லியுள்ளான். இந்த 5 ஆண்டுகளில் தான் பாபு பஜ்ரங்கிகளை பாதுகாத்தான். பாதிக்கப்பட்ட மக்களுக்க நீதி மறுக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்களும் கூட குற்றவாளிகளின் ஆலேசகர்களாக இருந்தனர். போலி எண்கெளண்டர்களால் அப்பாவிகள் தீவிரவாத பட்டம் சூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதே நிலை தொடரும் அல்லது இன்னும் அதிக வீரியத்துடன் செயல்படுத்தபடும்.

பெரும்பான்மையான குஜராத் மக்கள் நீதியை சாகடித்து விட்டார்கள் அல்லது பாசிச வெறியர்களாக ஆகிவிட்டார்கள்.

குட்டிபிசாசு said...

நல்ல அலசல்! உங்க கருத்துகளோடு ஒத்துப் போகிறேன். வாழ்த்துக்கள்!

ஜலீல் said...

நடந்த துயர சம்பவங்களை நினைவுகூறாமல், நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

மோடிக்கு ஆண்டவன் நல்ல எண்ணத்தை வழங்கி நல்லபடி வழிநடத்துவானாக. இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

சுல்தான் said...

இவர் திருந்துகின்ற வழியில் இருப்பதாய் இதுவரை தெரியவில்லை. தன் தவறுகளை நியாயப்படுத்தி மென்மேலும தவற்றின் பக்கம் சாயவே விரும்புவதாகத் தெரிகிறது.

அவர் வென்று விட்டதால் அவர் செய்த அநியாயங்களை ஒன்றுமில்லை என்பது போல் எழுதுபவர்களைப் பார்த்தீர்களா? குமட்டுகிறது.

enRenRum-anbudan.BALA said...

ஷாஜி,

என் பதிவில் நீங்கள் பின்னூட்டமாக இட்ட இப்பதிவின் கருத்துகளுக்கு, என் மறுமொழியை அங்கு தெரிவித்து விட்டேன். நிற்க.

நிலைமையை நன்றாகவே அலசி இருக்கிறீர்கள். மோடி 2002-ஐ கடக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து நிஜமாகட்டும்.

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

சுல்தான்,
//அவர் வென்று விட்டதால் அவர் செய்த அநியாயங்களை ஒன்றுமில்லை என்பது போல் எழுதுபவர்களைப் பார்த்தீர்களா? குமட்டுகிறது.
//

2002-இல் செய்த தவறு தவறு தான் என்பதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும் ?

சுட்டுவிரல் said...

ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி.
எல்லோருமே எதிர்பார்த்த 'இந்த வெற்றி'யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் 'எதிர்பார்த்தவர்கள்' தான்.

100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் போன்ற) பல காரணங்களால் வாக்களிக்காமலே இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?
கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.
(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).

அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.

கடும்குற்றவாளியாக தண்டனை பெறவேண்டியவர்கள் முதலமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் ஆவது நம் தேசத்தின் சாபக்கேடு ஆகும்.

ஆ.வி ஆசிரியரை சிறைக்கு அனுப்பக் காரணமாயிருந்த கருத்துப்படத்தின் வரிகளில் ஜேப்படி, பிக்பாக்கெட் என்றிருந்தவற்றில் மட்டும் இனப்படுகொலைக்காரன், ஆலய இடிப்புக்காரன் என்று மாற்றிப் படிக்கும் நிலை நம் தாய்த்திருநாட்டில் உண்மையாகி வருவது நேர்மையுள்ள எவருக்கும் உவப்பாக இருக்க முடியாது.

மோடி செய்த இனப்படுகொலைகளை தவறிச்செய்த ஒன்றாக கருத இடமேயில்லை. தவறிச்செய்திருந்தால், குறைந்தபட்சம் உதட்டளவு மன்னிப்பாவது கேட்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ அந்தப்படுகொலைகளுக்காக ஒரு மிருகப் பெருமிதமே வெளிப்பட்டது.
எனவே தயவுசெய்து பாலாக்கள் //தவறு தவறு தான்// என்று சொதப்பாமல், கொலைகாரர்களையும் தெரிந்தே எடுக்கும் ஜனநாயக ஓட்டைகளை அடைக்கும் வழிகளை யோசிக்கட்டும்.

நண்பன் said...

Mr. Anonymous 1

// ஹிட்லர் கூட மிகச் சிறந்த அட்மினிஸ்ட்ரேட்டர் எனப் பெயர் வாங்கியவர்தாம்.. //

உங்கள் கூற்று மிக்க சரியே.

அவருக்கும் மோடிக்கும் மிக நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு.

இருவருமே Nationalism பேசுபவர்கள். ஹிட்லருக்கும் ஜெர்மானியம். மோடிக்கு இந்துத்வம். மற்றவர்கள் அனைவரும், இருவருக்குமே மாக்கள். மக்கள் அல்ல.

நிர்வாகத் திறமை படைத்தவர்கள் தாம் இருவரும். எத்தகைய திறமை. தான் சொல்லியவற்றை சிரமேற்கொண்டு காரியம் செய்ய வேண்டும். தன் தனிப்பட்ட ஆளுமை, சுயசிந்தனை கூடாது.

பொருளாதார ஏற்றம் - முதலாம் உலகப் போருக்குப் பின், உலகப் பொருளாதராம் அதலப் பாதாளத்தில் விழுந்தது. அதை The Great Depression என்று சொல்வார்கள். பின்னர் பொருளாதர சுழற்சியில், ஜெர்மானியர்கள் மற்றவர்களை முந்தினார்கள். இயல்பான அந்த நிகழ்வுக்கு, ஹிட்லர் உரிமை கொண்டாடினார். அது போலவே, இந்திய பொருளாதரம் இயல்பாக எழுச்சியுற்ற பொழுது, அதில் குஜராத்திற்குரிய பங்கை மோடி தன் பங்கு என்று கூறிக் கொள்கிறார்.

ஹிட்லர் - யூதர்களக் கொன்று குவிக்கும் அரசு யந்திரத்தின் தலைவராக இருந்தார். மோடி அதே போன்று, இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த அரசு யந்திரத்தின் தலைவராக இருக்கிறார்.

இந்த ஒற்றுமைகள் இனியும் தொடராது இருக்க வேண்டும் என்பதே விருப்பம். வேண்டுகோள்.

மோடியை எல்லோரும் புத்திசாலி என்கிறார்கள். இனி தான் அவர் அதை நிருபிக்க வேண்டும்.

நண்பன் said...

Mr.Anonymous 2

// பெரும்பான்மையான குஜராத் மக்கள் நீதியை சாகடித்து விட்டார்கள் அல்லது பாசிச வெறியர்களாக ஆகிவிட்டார்கள். //

இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மோடியை ஆதரித்தவர்கள், ஒழுங்காக ஓட்டுச்சாவடிக்குப் போய் ஓட்டுப் போட்டு விட்டனர். மற்றவர்கள் தங்களை ஒன்றிணைத்து, தங்கள் எதிர்ப்பை ஓட்டுகளாக மாற்றிக் காட்டத் தவறி விட்டனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நண்பன் said...

குட்டிப்பிசாசு,

// நல்ல அலசல்! உங்க கருத்துகளோடு ஒத்துப் போகிறேன். வாழ்த்துக்கள்! //

மிக்க நன்றி.

(மிக்க நன்றி குட்டிப் பிசாசு என்று எழுத ஆசை தான். ஆனால், பிசாசுகளுக்குப் போய் நன்றி தெரிவிப்பதா என்ற தயக்கம். சீக்கிரமே குட்டி தேவதையாக உருவெடுங்கள். )

நண்பன் said...

ஜலீல்,

// நடந்த துயர சம்பவங்களை நினைவுகூறாமல், நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

மோடிக்கு ஆண்டவன் நல்ல எண்ணத்தை வழங்கி நல்லபடி வழிநடத்துவானாக. இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.
//

இப்போதைக்கு இவைகள் தாம் நம்பிக்கைகள். அதே சமயம் நம்பிக்கை கொள்ளும் நபர் எத்தகையவர் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், நாளை நம் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் பொழுது, மிகுந்த ஏமாற்றம் ஏற்படும்.

மோடியை நன்றாக உணர்ந்தே இந்த கோரிக்கையை வைக்கிறோம். இல்லையா?

நண்பன் said...

சுல்தான்,

// இவர் திருந்துகின்ற வழியில் இருப்பதாய் இதுவரை தெரியவில்லை. தன் தவறுகளை நியாயப்படுத்தி மென்மேலும தவற்றின் பக்கம் சாயவே விரும்புவதாகத் தெரிகிறது. //

இன்னும் பொருத்திருந்து பார்க்கலாமே!!!

வெற்றிப் பெருக்கில் எல்லோரும் பேசக் கூடும். பழைய மோடி மோசமானவர் தாம். ஆனால், புதிய மோடிக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாமே!!!

நண்பன் said...

பாலா

// நிலைமையை நன்றாகவே அலசி இருக்கிறீர்கள். மோடி 2002-ஐ கடக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து நிஜமாகட்டும்.//

மிக்க நன்றி.

எதிர்பார்ப்புகள் இருக்கின்ற அளவிற்கு, அவநம்பிக்கைகளும் இருக்கத் தான் செய்கின்றன.

பார்க்கலாம், காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்று,

நண்பன் said...

சுட்டுவிரல்,

உங்கள் பின்னூட்டம் அரும. தேர்தல் முறையை மாற்றி அமைக்க எழும் கோரிக்கை ஒவ்வொரு தேர்தலின் போதும் வைக்கப்படுபவை தான். ஆனால், தேர்தல் சீர்திருத்தங்கள்,, புதுவருட உறுதி மொழியைப் போன்று, வெகு சுலபத்திலே ஆவியாகப் போய்விடும்.

// கடும்குற்றவாளியாக தண்டனை பெறவேண்டியவர்கள் முதலமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் ஆவது நம் தேசத்தின் சாபக்கேடு ஆகும். //

உண்மை தான். நேர்மையானவர்களிடத்தில் 'தசைநார்களின்' பலம் இருப்பதில்லை. இருப்பவர்கள் அவற்றை உபயோகப்படுத்துவதில் எந்தவித தர்ம நியாயங்களும் பார்ப்பதில்லை. இவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன்?

தொடர்ந்து மக்களை விழிப்புணர்வடையச் செய்வது ஒன்று தான் வழி. அதற்கு அனைவரும், தொடர்ந்து அக்கிரமங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

கருத்துக் கூறவே தங்களை அடையாளம் காட்ட பலருக்கும் தயக்கமிருக்கையில், விழிப்புணர்வடைவது எந்த வகையில் சாத்தியம் என்று புரியவில்லை.

நண்பர்களே, தங்கள் அடையாளத்துடன் எழுத வேண்டும். அந்தக் கருத்துகளே பெருமளவில் மக்களிடத்தில் போய் சேரும்.

Raveendran Chinnasamy said...

Good Blog . No one can deny Modi done wrong . We should forget Dec 6 and 2002 . Why we bring bitter memories to fuel communal ?

Muslim leaders should work with Sangh to bring harmony and dont depend on congress which is using muslims as a political reasons

TINA factor is working for Modi now as same worked for MK and congress . Lets hope God will give us strength to pass this period .

நண்பன் said...

ரவீந்திரன் சின்னசாமி,

வருகைக்கு நன்றி.

டிசம்பர் 6, மற்றும் 2002ஐ மறப்பதற்கு இஸ்லாமியர்கள் முயன்றாலும், சங் பரிவாரத்தார் விடுவதில்லை. இவைகள் மறக்கப்பட்டால், அதனால் விளையும் நட்டம் பரிவாரக் கும்பலுக்குத் தான்.

முஸ்லிம்களை காயப்படுத்துவதின் மூலமே, இந்து ஓட்டுகளை தங்கள் கைக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ணம் இன்னமும் அவர்களுக்குள் மறைந்திருக்கின்றது. மற்ற மாநிலங்களில், பெரும்பாலும் காலாவாதியாகிப் போன இந்த உத்திகளைத் தான் மோடி இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார். அதைத் தான் அவர் கைவிட வேண்டும்.

சங் பரிவாரத்துடன் இணைந்து செயல்பட முனைபவர்கள் - வடிகட்டிய அடிப்படைவாதிகளாக இருப்பார்கள். அவர்களுடன் கை கோர்க்க முனையும் எவரும் தங்கள் நம்பகத் தன்மையை இழப்பார்கள்.

அடிப்படைவாதத்தை விட்டு விலகி, மனித தர்மத்தை மதிக்கும் வழியை நோக்கிய பயணத்திற்குத் தான் நாம் முயற்சிக்கவேண்டுமே தவிர, அடிப்படை மனித உரிமைகளை மண்ணில் போட்டு மிதிப்பவர்களை நோக்கிய பயணத்திற்கு ஒரு போதும் யாரும் முயற்சிக்கக் கூடாது.

நண்பன் said...

// மற்ற மாநிலங்களில், பெரும்பாலும் காலாவாதியாகிப் போன இந்த உத்திகளைத் தான் மோடி இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார். அதைத் தான் அவர் கைவிட வேண்டும். //

எழுதி முழுதாக ஒரு நாள் கூட நிறைவேறி இருக்கவில்லை. அதற்குள் போட்டுத் தள்ளிவிட்டார்கள் - ஒரிசாவில்.

இந்த முறை கிறித்துவர்கள்.

சங் பரிவாரத்தினர் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பது மகா முட்டாள்தனம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களது ஆளுமையின் கீழிருக்கும், பி.ஜே.பி மட்டும் சுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது - பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று கோருவது போல.

சோ said...

நம்பிக்கை தரும், இந்த வெற்றி !

நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள், ஒரு முதல்வரினுடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் அடிக்கடி நடப்பதில்லை; இம்முறை இது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்.

எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்து, மோடியின் தலைமையில் பா.ஜ.க.
இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்தான், இந்த வெற்றியின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். "சென்ற இடமெல்லாம், பெரும் கூட்டங்களைச் சந்தித்து, பெண்களை எல்லாம் கவர்ந்துவிட்டார்' என்று கூறப்பட்ட
– சோனியா காந்தியின் கடுமையான தாக்குதல்கள்; மோடி மீண்டும் ஆட்சிக்கு
வந்தால், அந்த "மரணத்தின் வியாபாரி' கையில் குஜராத் சிக்கிவிடும் என்று அவர் விடுத்த மிரட்டல்கள்; மிகவும் நல்லவர் என்று எல்லோராலும் அறியப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் தீவிர பிரச்சாரம்; மோடியையும், பா.ஜ.க.வையும் பொய்யர்கள், ஏமாற்றுப் பேர் வழிகள் என்று அந்த நல்லவரே கூறிவிட்ட சூழ்நிலை; பா.ஜ.க.வில் மோடியின் நிர்வாகத்தில் தங்களுக்குப் பயன் கிட்டவில்லை என்பதால், அக்கட்சியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் வேட்பாளர்களாகவும், சுயேச்சைகளாகவும்
போட்டியிட்டு பா.ஜ.க.வின் ஓட்டுக்களைப் பறித்துவிட முனைந்த, பா.ஜ.க. அதிருப்தியாளர்களின் ஓட்டுப் பிளவு முயற்சிகள்; கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரங்களும், நிகழ்ந்த கொலைகளும் மோடியினால் நடத்தப்பட்டவை என்று சித்தரிக்க முனைந்த, தெஹல்கா தயாரிப்பு வீடியோ
காட்சிகள்; அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, "மோடி கொலைகாரர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது' – என்று தீர்ப்பளித்து, அவரை தண்டிக்குமாறு குஜராத் வாக்காளர்களை வற்புறுத்திய டெலிவிஷன் சேனல்களின் அவதூறுகள்; "மோடி வெறியர், பா.ஜ.க. மதவெறிக் கட்சி' என்றெல்லாம் கூறி, குஜராத் தேர்தலை
காங்கிரஸுக்குச் சாதகமாக்கி விட, வரிந்து கட்டிக்கொண்டு, தேர்தல் பிரச்சாரத்தில்
இறங்கிய பத்திரிகை உலகம்;
பா.ஜ.க.விலேயே இருந்துகொண்டு, மோடியைத் தேர்தலில் வீழ்த்தி, பா.ஜ.க.வை தோற்கடித்து, தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சித்த கேசுபாய் பட்டேலின் துரோகம்; அவரும் அவருடைய ஆதரவாளர்களும் உருவாக்கிய ஜாதி ரீதியான பிரச்சாரம்... என்ற பன்முனைத் தாக்குதலைச் சந்தித்து, மோடியும் அவர் தலைமையில் பா.ஜ.க.வும் கண்டுள்ள
வெற்றி இது.

எதனால் இது சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு; அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண் ஜேட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கும் மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை; அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் – இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக் கூடிய விஷயம் இந்தத் தேர்தலில்
நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில்
இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க்கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது. வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும்
– அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற
அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும், மிகக் கடுமையாக முனைந்தும் – ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர் இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் – என்று நரேந்திர மோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.


சாதாரணமாக நேர்மையாளராகத் திகழ்பவர்கள், செயல் முனைப்பில் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள் என்பது, நம் நாட்டு அரசியலில் உள்ள ஒரு பலவீனம். ஆனால் மோடி இப்படிப்பட்டவரல்ல; அவருடைய செயல் திறன் வியக்கத்தக்கதாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சரி; நிர்வாக ரீதியாக துணிவுடனும், உறுதியுடனும் செயல்படுவதிலும் சரி, அவர் புதிய அத்தியாயங்களையே எழுதி வருகிறார்.

அவருடைய நிர்வாகத் திறனையும் உறுதியையும் காட்ட ஒரு உதாரணம் :
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது, பெரும் எதிர்ப்புக் கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர். மோடி, விவசாயிகளிடம், "இலவச மின்சாரம் தந்தால் – அது ஒவ்வொரு தினமும், மின்சார
விநியோகத்திற்கு வசதியான நேரத்தில்தான் உங்களுக்குக் கிடைக்கும்; மாறாக நீங்கள் கட்டணம் செலுத்தி மின்சாரம் பெறுவதாக இருந்தால், அது ஒவ்வொரு தினமும் 24 மணி நேரமும் கிட்டும். எது வேண்டும்? எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்ல முடியாத இலவச மின்சாரமா? அல்லது எப்போதும் வரும் என்கிற, கட்டணம் செலுத்திப் பெறப்படுகிற மின்சாரமா?' என்று கேட்டார்.

விவசாயிகள், கட்டண மின்சாரத்தையே ஏற்றார்கள்; இலவச மின்சாரம் போயிற்று. அவர்களுக்கு, 24 மணி நேர மின்சார சப்ளை கிட்டியது; ஆனால் சிலர் மின்சாரத் திருட்டில் இறங்கினார்கள். பார்த்தார் மோடி. மின்சாரம் திருடிய ஒரு லட்சம்
விவசாயிகளுக்கு, மின்சார சப்ளை ரத்தாகியது. "ஓட்டு வங்கி' என்று நினைத்து,
அஞ்சி, விவசாயிகள் விஷயத்தில் "வம்பு வேண்டாம்' என்று ஒதுங்கிவிடுகிற
நிர்வாகங்களையே எல்லா மாநிலங்களிலும் கொண்ட நமது நாட்டில் – குஜராத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, மின்சார திருட்டு காரணமாக, மின்சார சப்ளை நின்றது. அவர்கள் தவறை உணர்ந்தனர். நிலைமை சீரடைந்தது. இலவச மின்சாரம் போயிற்று; விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் கிட்டியது. விவசாயிகளுக்குத் திருப்தி; நிர்வாகத்திற்கு வெற்றி. இது மோடியின், நிர்வாக பாணி.


இம்மாதிரி நிர்வாகம் இருப்பதால்தான் – "குஜராத் மிக நன்றாகச் செயல்படுகிற நிர்வாகம் உள்ள மாநிலம்; நிதி நிர்வாகத்திலும் சரி, நீர் நிர்வாகத்திலும் சரி, சமூகத்தில் செய்கிற பணிகளிலும் சரி, முதன்மையாக நிற்கிற மாநிலம் குஜராத்' என்று திட்டக்கமிஷனே – மத்திய காங்கிரஸ் அரசின் கீழ் இயங்குகிற திட்டக்கமிஷனே
– தனது அறிக்கையில் கூறியது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை – சோனியா காந்தியின் தலைமையில் இயங்குவது; மத்திய அமைச்சர்கள் சிலரை உறுப்பினர்களாகக் கொண்டது. அந்த அமைப்பினால் நியமிக்கப்பட்ட குழு, குஜராத்தை "இந்தியாவின் முதல் மாநிலம்' என்று
தேர்ந்தெடுத்தது. "பொருளாதார சுதந்திரம், ஊழலின்மை, அரசின் குறுக்கீடு இல்லாமை, சட்டம் – ஒழுங்கு, மக்கள் வாழ்விற்குப் பாதுகாப்பான சூழ்நிலை, வேலை நிறுத்தத்தினால் தொழில் நஷ்டம் இல்லாமை – ஆகிய பல அம்சங்களிலும், மிக நன்றாகச் செயல்பட்டு, குஜராத் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது' – என்று அந்த அமைப்பு கூறியது.

"ஹிந்துத்துவம் பேசுகிறார்' என்று வர்ணித்து மோடியை வீழ்த்த காங்கிரஸ் முனைந்து வந்தது; அதுவும் பலிக்கவில்லை. ஹிந்துத்துவத்தில் தான் கொண்டுள்ள நம்பிக்கையை மோடி மறைத்ததில்லை; ஹிந்துத்துவம் என்பது, மதரீதியானது அல்ல – என்று
சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது;
மக்கள் மனதிலும் இது ஒரு மதவெறி நிலையாகக் காணப்படவில்லை.

நிர்வாகத்திலும், நேர்மையிலும் மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக மோடி திகழ்கிறார். அப்படிப்பட்டவர் பெற்றிருக்கிற வெற்றி, நேர்மைக்குக் கிடைத்துள்ள வெற்றி.

"நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா?' என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க்கொண்டிருக்கிற நம் நாட்டு
அரசியலில் – மோடி பெற்றிருக்கிற வெற்றி, மக்கள் மனதில் நம்பிக்கை துளிர்க்க வழிசெய்யும்.

நண்பன் said...

சோ,

// மோடி இப்படிப்பட்டவரல்ல; அவருடைய செயல் திறன் வியக்கத்தக்கதாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சரி; நிர்வாக ரீதியாக துணிவுடனும், உறுதியுடனும் செயல்படுவதிலும் சரி, //

இது குறித்து நானும் சொல்லிவிட்டேன். பாராட்டப்படவேண்டியது அவசியம். அதற்கும் மேல் ஒரு படி போய், மற்ற அரசியல்வாதிகள் மோடியிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும் இவ்விஷயத்தில் என்றும் சேர்த்தே சொல்லி இருக்கிறேன். இத்தனையும் சொல்லிவிட்டு, பின்னர் அத்வானியின் பிரச்சாரம், ஜேட்லியின் உழைப்பு என்பதெல்லாம் தேவையற்றவை. இவர்களுடைய பங்களிப்பு என்பது பூஜ்யம் என்று தான் நான் சொல்வேன்.

பா.ஜ.க - வை விடவும் பெரிதாகிறார் என்று சொன்னதனால், இப்பொழுது இவ்வெற்றியைப் பரவலாக்கவும், மற்ற தலைவர்களின் அந்தஸ்தையும் உயர்த்திக் காட்டவும் வேண்டிய முனைப்பு, கட்சி சார்ந்து பேசுபவர்களுக்குத் தான் தேவையாயிருக்கிறது. மற்ற பார்வையாளார்கள் அதை ஏற்பதில்லை. ஏற்கவில்லை.

அடுத்து,

நண்பன் said...

// ஹிந்துத்துவத்தில் தான் கொண்டுள்ள நம்பிக்கையை மோடி மறைத்ததில்லை; ஹிந்துத்துவம் என்பது, மதரீதியானது அல்ல - என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது; மக்கள் மனதிலும் இது ஒரு மதவெறி நிலையாகக் காணப்படவில்லை. //

'இவை தான் எமது கொள்கைகள்' என்று ஒரு தாளில் எழுதிக் காட்டியதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கும். ஏனென்றால் சட்டத்தின் முன் அது தான் செல்லுபடியாகும். ஆனால், அதன் பின்னர் நிகழ்த்திக் காட்டப்படும் வன்முறைகள் எல்லாம் அதிகபட்சம் சட்டம் ஒழுங்கு என்று பெயர் வழங்கப்பட்டு தான் விசாரிக்கப்படும் - விசாரிக்கப்படுகிறது.

தான் ஆட்சி புரியும் மாநிலத்தில் தன் நிர்வாகத்தாலே தடயங்களை அழித்து, தனனை சுத்திகரித்துக் கொள்ளும். பிற கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலத்தில் கூப்பாடு போடும் - சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது என்பதனால், இந்துத்வம் புனிதப் பசு ஆகிவிடாது. கொள்கை என்னும் பொழுது அறிவிக்கப்பட்ட வார்த்தைகள், வாக்கியங்கள் தான் கணக்கிலெடுக்கப்படுகின்றன. அவ்வளவு தான் சட்டத்தினால் முடியும். அந்த கொள்கைகளுக்குப் பின்னர் இருக்கும் 'நோக்கம்' 'திரைமறைவு திட்டங்கள்' என்பதையெல்லாம் - எழுதப்படாத - அறிவிக்கப்படாதவற்றையெல்லாம் அது கணக்கில் கொள்வதில்லை.

அதனால் மட்டுமே இந்துத்வம் ஏதோ புனிதமான கொள்கைகளினால் கட்டுமானம் செய்யப்பட்டது என்பதை எவரும் ஏற்கவில்லை. சங் பரிவாரிகள் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொண்டு மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான்...

நண்பன் said...

// ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க்கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது. வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை.//

வரலாறே அறியாமல் எழுதத் தொடங்கினால் இப்படித் தான் நகைச்சுவையாகப் போய்விடக்கூடும். ஆனால், அது தான் நோக்கம் என்பதினால், விஷயத்திற்கு வருவோம்.

கேரளத்தில் முதல்வராக இருந்த ஆண்டனியைப் பற்றி, இதை எழுதிய பிரகஸ்பதி அறிந்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. நம் தமிழகத்திலே கூட காமராசர் என்ற மக்கள் தலைவர் ஒருவர் இருந்தார் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்.?

போகட்டும் - ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது தெரியுமா? ஆம், ஊழல் குற்றச்சாட்டு தான் கிடையாது. ஆனால், படுகொலை குற்றச்சாட்டுகள் உண்டு. கலவரம் செய்யத் தூண்டியவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. தடயங்களை அழிக்க முனைந்து, இந்திய அரசியலமப்பு சட்டத்திற்கே முரணாக நடந்தவர் என்ற பெயரும் உண்டு. ஊழல் குற்றச்சாட்டுகளை விட மிக மோசமான குற்றச்சாட்டுகள். இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, எங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுமில்லையென தம்பட்டம் அடிப்பது இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக முடியும்.

அது தான் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோமே, எல்லாம் சரியாகி விட்டது என்று நினைப்பவர்களுக்கு - இந்திய பாராளுமன்றத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிரிமினல் ரெக்கார்ட் உள்ளவர்கள் தான். அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுத் தான் பாராளுமன்றத்திற்கு வருகிறார்கள். அதனாலேயே அவர்கள் அனைவரும் புனிதர்களாகி விட முடியாது. மத்திய அமைச்சரவையில் இருந்தவரையே நீதிமன்றங்கள் கொலைக் குற்றத்தில் தண்டித்திருக்கின்றன.

ஆம் - இதைத் தான் நாம் எதிர்பார்க்கிறோம் - ஆட்சியாளார்களாக இருந்தாலும், முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

// கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரங்களும், நிகழ்ந்த கொலைகளும் மோடியினால் நடத்தப்பட்டவை என்று சித்தரிக்க முனைந்த, தெஹல்கா தயாரிப்பு வீடியோ காட்சிகள்; //

இதற்கு முன்னர் தெஹல்கா நடவடிக்கைகளை அனைவரும் வியந்து பாராட்டினார்கள். ஆனால், இப்பொழுது மட்டும் தெஹல்காவின் மீது பற்றிக் கொண்டு வருகிறது. ஏனுங்க?

ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்களே என்ற கோபமா? அப்படியானால், அது தான் ஒரு பத்திரிக்கையாளருக்கு கிடைத்த வெற்றி. ஒவ்வொருவரும் தங்கள் சுயவிருப்பத்துடன், சுயநினைவுடன் தங்களின் வன்செயலை தாங்களே ரசித்து, சிலாகித்து, புளகாங்கிதமடைந்து கொடுத்த பேட்டி அது. ஏதோ தெஹல்கா ஒட்டு வேலைகள் செய்து மோசடியாக சில 'டேப்'புகளைத் தயார் செய்து ஒளிபரப்பிக் கொண்டுவிட்டார்கள் என்று நினைத்தால் அது மாதிரியான முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. மோசடியாளார்கள் யாரும் இருக்க முடியாது.

ஏன் தெஹல்காவின் மீது வழக்குப் போட முடியவில்லை? ஏன் சுப்ரீம் கோர்ட் போகவில்லை? உங்களின் ஒவ்வொரு செய்கையையும் புனிதப்படுத்தத் தானே இருக்கிறது?

வெறிச்செயலின் முழு பரிமாணமும் வெளிப்பட்டு விட்ட நிலையில், மொத்த உலகமுமே பரிவாரத்தைக் குறித்து, 'கொலைகாரர்கள்' என்று பதிவு செய்து விட்டது. இனி இந்த வரலாறை எழுதுபவர்களையும் 'eminent historians' என்று மட்டம் தட்ட, வரலாறே அறியாத பொருளாதார வல்லுநர்கள் கிடைக்காமலா போய்விடப் போகிறார்கள்?

K.R.அதியமான். 13230870032840655763 said...

///ஹிந்துத்துவம் என்பது, மதரீதியானது அல்ல - என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது////

As an aside, this is how Bal Thaakrey 'defined' hinduthva some years ago,(when there was a raging contrversy over what hinduthva real means) :

'...hinduthva means all hindus should always vote for BJP and Company...'

:))))

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்