"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, December 20, 2007

இணையத் தளங்களில் இஸ்லாம் - இறுதிப் பகுதி.

இணையத் தளங்களில் இஸ்லாம் - இறுதிப் பகுதி.

பகுதி 1: இங்கே வாசியுங்கள்.

பகுதி 2: இங்கே வாசியுங்கள்.


பகுதி 3: இங்கே வாசியுங்கள்.
Coffee House: வலைப்பூக்கள்.


இணையப் பயன்பாட்டில் வெகுவேகமாக முக்கியத்துவம் பெற்று வரும் இந்த வலைப்பூக்கள், நாளைய வெகுஜன பத்திரிக்கைகளுக்குப் போட்டியாக கருத்தாக்கங்களை உருவாக்க முடியும். தகவல்களை அதிவேகத்துடன் பகிர்ந்து கொள்ள இயலும். இந்த வலைப்பூக்களை "Coffee House" என்றே குறிப்பிடுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் பல பாகங்களிலும் இயங்கிய காப்பி கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் முக்கிய செயல்பாடு, காபி குடிப்பதுடன், அன்றைய தினசரிகளை வாசித்து, அவற்றில் வந்திருக்கும் செய்திகளை விலாவாரியாக விமர்சிப்பது.


பல வலைப்பூக்களும் அதைப் போலவே, அன்றைய பரபரப்பூட்டும் செய்திகளை, தகவல்களை விமர்சித்து விவாதத்திற்குட்படுத்துகின்றனர். செய்தி விமர்சனம் மட்டுமன்றி, மேலும் பல ஆக்கப்பூர்வமான படைப்புகளும் இங்கு வருகின்றன. அவற்றை விடுத்து இஸ்லாத்தின் மீதான தாக்கம் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.


இஸ்லாத்தின் மீதான விஷமப்பிரச்சாரம், இந்த வலைப்பூக்களில் தான் கொடி கட்டிப் பறக்கிறது எனலாம். இத்தகையவர்களின் போலிப் பிரச்சாரத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என முனைந்து பல இஸ்லாமிய சகோதரர்கள் எழுத முன்வந்ததும், ஆரம்ப கால தயக்கங்களுக்குப் பின் இப்பொழுது சரளமாக எழுதப் பழகிக் கொண்டனர் என்பதும் உற்சாகம் தரும் விஷயங்கள். சிலர் விஷமப் பிரச்சாரத்திற்குப் பதில் தருவது மட்டுமன்றி, குரான் விளக்கவுரைகள், மற்ற இஸ்லாமிய இலக்கிய வடிவங்களைப் பற்றிய எழுத்துகள் என விரிவான வழியிலும் தடம் பதித்திருக்கின்றனர். இத்தகைய நேர்மறை ஆக்கங்கள் இருந்தாலும், இன்னமும் இஸ்லாத்தின் மீதான ஆதாரமற்ற நேர்மையற்ற விஷமப்பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய விஷமப்பிரச்சாரர்களில் பலரும் தங்கள் அடையாளங்களை மறைத்து, போலியான உருவங்களுடன் இயங்குபவர்கள்.


இவர்களின் முதல் தாக்குதலே, இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது தான். முகம் தெரியாத, தனக்கென அடையாளமற்ற யாரோ ஒருவரை அல்ல - நட்பு ரீதியாக ஒரு விவாதத்திற்கு வருகை தர விரும்பும், அனைவராலும் அறியப்பட்ட இஸ்லாமியர்களைத் தான் இவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கின்றனர். வெகுஜன ஊடகங்கள் எழுப்ப விளையும் பொதுத்துவமான இஸ்லாமிய பிம்பத்தை ஒட்டி, அதன் நீட்சியாக இங்கும் செயல்பட விழைபவர்கள். எந்த ஒரு நட்பையும் நாங்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்ட இவர்களின் மற்ற விமர்சனங்களின் லட்சணம் எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றி கூற வேண்டிய அவசியம் உண்டா, என்ன? இவர்களின் கூற்றுகளை விமர்சனம் என்று கூட வகைப்படுத்த இயலாது. அறிவின்மையால் எழுந்த அவதூறுகள்.


நீங்கள் இறைவனையே அவன், இவன் என்றழைக்கும் பொழுது, நபிகளுக்கு மாத்திரம் என்ன மரியாதை கிடக்கிறது என்று கூறிக்கொண்டு, நபிகளைப் பற்றி ஒருமையில் இழிவாக எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிற இவர்கள், இறைவனின் ஒருமையைக் குறிப்பதற்காக, தமிழ் மொழி இலக்கணப்படி, இறைவன் அவ்வாறு விளிக்கப்படுகிறான். ஆனால், நபி அவர்களை - கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தலைவரை, சற்று மரியாதையுடன் குறிப்பிடுங்கள் என்று குறிப்பிட்டே கேட்டுக் கொண்டும், அதை மீறியும் அவதூறாகப் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றனர். அத்துடன் நபிகளின் திருமணங்களை இழிவாக விமர்சிப்பது - அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை இங்கு குறிப்பிட இயலாது, இஸ்லாமியர்களின் அன்னையர்கள் என்று குறிப்பிடப்படும் நபிகளின் மனைவியர்களைப் பற்றி இழிவாக எழுதுவது என பல வகைகளிலும் எழுதி வருகின்றனர். மேலும் ஜனநாயகப் பண்பைப் பேணுகிறோம் என்னும் பெயரில், மிகக் கேவலமான மொழியில் எழுதப்படும் பின்னூட்டங்களை / விமர்சனங்களை அனுமதிக்கின்றனர் - அவற்றைத் தடுத்து நிறுத்த வழிகள் இருந்தும். இந்த விமர்சனங்களில் பல தாங்களே எழுதி தங்கள் பதிவில் இட்டுக் கொள்கின்றனர். காரணம் - நியாயமான மன சாட்சி உள்ள பலரும், அவர்கள் எழுத்தை குப்பை என ஒதுக்கி வாசிப்பதில்லை.


இவர்களில் ஒருவர், தான் இஸ்லாத்தின் கொள்கை பிடிக்காமல் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டதாக குறிப்பிட்டு கொள்கிறார். இது போலவே மற்றொரு தளத்திற்கு, ஒரு இஸ்லாமியப் பெண் பெயரிட்டு, அவர் இஸ்லாத்தை விமர்சிப்பதாக எழுதி மோசடி செய்து கொண்டிருந்தனர். அதன் உச்ச கட்டமாக, அந்த இஸ்லாமியப் பெண் காமக் கதைகளை எழுதுவதாக போலியாக இவர்களே எழுத முனைந்த பொழுது, இந்த மோசடியை சில மாற்று மத நண்பர்களே கண்டு பிடித்து, அம்பலப்படுத்தினர். மாற்று மத சகோதரர்களாலாயே சகிக்க முடியாத இந்த கொடுஞ்செயலை நாம் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது?


இஸ்லாமியர்கள், அதன் அமைப்புகள், தலைவர்கள், இணையத்தில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களைக் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும். இது குறித்தப் புரிதலை மற்றவர்களிடத்திலும் எடுத்துச் செல்ல வேண்டும். இத்தகைய விஷமிகளை அமைப்பு ரீதியாகச் செயல்பட்டால் மட்டுமே கண்காணிப்பதும், களைந்தெடுக்கும் முயற்சியாக காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை அணுக இயலும். இல்லையென்றால், நாளை இந்த இணைய உலகத்தில் இஸ்லாம் பற்றிய தவறான அவதூறும் இழிவும் நிறைந்த செய்திகள் மிக அதிகமாக நடமாடும்.


எப்பொழுதுமே, இஸ்லாமிய உலகம் தன்னைச் சுற்றி நிகழும் செயல்களுக்குச் சற்று தாமதமாகவே எதிர்வினை புரியும். இங்கும் அவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இனியும் தாமதிக்காமல், இணையம் என்ற இந்த மின்னணு உலகில் என்ன நிகழ்கிறது என்பதைக் குறித்து அக்கறையுடன் இஸ்லாமிய உலகம் நோக்க வேண்டும். இல்லையென்றால், தலைக்கு மேல் வெள்ளம் போகும் பொழுது, ஒரு சாண் என்ன, ஒரு முழம் என்ன என்று துயில் கொண்டிருக்கலாம் - எதிர்கால சந்ததிகள் இஸ்லாம் பற்றி அறியக் கூடிய தவறான செய்திகளைத் தலையணையாகக் கொண்டு.முற்றுப் பெற்றது.

1 comment:

நண்பன் said...

Mr.Anonymous,

என்னுடைய முதல் குற்றச்சாட்டே, அடையாளமற்று இயங்கும் விமர்சகர்களைக் குறித்து தான் என்பதை நீங்கள் இந்தப் பதிவை சரியாக வாசித்திருந்தீர்கள் என்றால் உணர்ந்திருக்க முடியும். இவ்வாறு மறைந்திருந்து இயங்குவதால் எந்தப் பயனும் இல்லை.

மேலும் இங்கு எந்தப் பதிவரையும் பெயர் குறித்துப் பதிவதில் விருப்பமில்லை. அவ்வாறு செய்வதில்லை என்றும் பலருக்கும் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

உங்களுக்கு நான் கூறும் அறிவுரை - ஒன்று வெளிப்படையாக இயங்க வாருங்கள். பின், பிற பதிவர்களின் தளங்கள் குறித்து இங்கு எழுத வேண்டாம். அதை உங்கள் தளத்தில் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, இஸ்லாம் குறித்து தெளிவாக எழுதும் எண்ணமிருந்தால், அதை நீங்களே எழுதலாம்.

இஸ்லாம் குறித்து எனக்கு எந்த விமர்சனங்களும் கிடையாது என்றாலும், இஸ்லாமியர்கள் குறித்தும், அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் ஏகப்பட்ட விமர்சனங்கள் உண்டு. இத்தகைய விமர்சனங்களையும், உள்விசாரணைகளையும் ஏற்பதற்குப் பழகி கொள்ளுங்கள்.

மீண்டும், அநாநி பின்னூட்டங்களயும், ஆங்கில பின்னூட்டங்களையும் பொதுவாக நான் அனுமதிப்பதில்லை. உங்களுடைய உண்மையான அடையாளாங்களுடன், பின்னூட்டமிடுங்கள். இல்லையென்றால், வாசித்துவிட்டு போய்க் கொண்டிருக்கும் மற்றவர்களைப் போல் செய்யுங்கள்.

24 மணி நேரத்திற்குப் பின் உங்கள் பின்னூட்டம் நீக்கப்படும். மன்னிக்கவும்.

நன்றி.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்