"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, March 05, 2007

இந்துத்வாவின் சமரசம் !?

அதீத ஆர்வத்தில் பல சமயங்களில் பலருக்கு சறுக்கல் நேரிடும், அல்லது இயல்பாக அடி மனதின் ஆழத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள் வெளியாகி விடும். அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது - இங்கே -பின்னூட்டத்தில்.

செய்திக்கு பின்னாடி வருவோம் - முதலில் அர்விந்தின் பின்னூட்டம், அதைத் தான் மேலே குறிப்பிட்டேன்.

// அரவிந்தன் நீலகண்டன் கூறியது...

ஒரிஸாவில் நடந்தது இதோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ பரவாயில்லை. //

எதை எதனுடன் ஒப்பிடுவது? எந்த சட்டத்திற்கும் கட்டுபட மாட்டேன் - எங்கள் அரசு தனி என தாந்தோன்றித் தனமாக செயல்படும் ஒரு தீவிரவாதக்கும்பலின் செயலைக் கொண்டா, ஜகன்னாத் பூரி கோயிலின் பூசாரிகளின் செயலை நியாயப்படுத்துவது?

தீவிரவாதிகள் எந்த ஒரு சட்டத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை - இஸ்லாமிய சட்டங்கள் உட்பட. தாங்களே தங்கள் விருப்பம் போல், சட்டங்களை வாசித்துக் கொண்டு, தங்கள் செயல்களுக்குத் தேவையான நியாயங்களைப் பிறரது அநியாயங்களைக் கொண்டு, நியாயப்படுத்தி வாழ்பவர்கள். இதைத்தான் இப்பொழுது அர்விந்தும் செய்கிறார். 'அவர்களுடன் ஒப்பிடுகையில் இங்கு நடந்தது எவ்வளவோ பரவாயில்லை' என்று.

என்ன ஒரு விபரீதமான ஒப்பீடு.!!!

இது சறுக்கலா? அல்லது ஆழ்மனதின் உள்ளக்கிடக்கையா?

ஜகன்னாத் பூரியில் நடைபெற்ற செயலை, இறைநேசன் என்ற இஸ்லாமியர் விமர்சித்ததினால், இத்தகைய சமாதானமா? இதையே, ஒரு பிரஹ்மின் அல்லாத ஒரு ஹிந்து அல்லது ஒரு தலித் சகோதரர் விமர்சித்திருந்தால், என்ன சொல்லி இருப்பார்? யாரோடு ஒப்பிட்டிருப்பார்? அர்விந்த் தான் விளக்க வேண்டும்!!!

சரி, இப்பொழுது செய்திக்கு வருவோம். அந்த செய்தி AP செய்தி நிறுவனத்தால் தரப்பட்டது. செய்திகளை முந்தி தருவதில், நிலவும் பலத்த போட்டியைப் பற்றி, இங்கு விரிவாக எழுதிக் கொண்டிருப்பது தேவையில்லாதது. முதலில் தருகிறேன் என்று முழு தகவலையும் திரட்டாமலேயே, செய்திகளைக் கொடுத்து விடுவது, புகைப்படங்களுக்கு file photoவில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிடுவது என்று செயல்படும் நிறுவனங்கள், பின்னர், உண்மைகள் வரும் பொழுது, ஒன்றும் நடவாதது போல், முந்தைய செய்திகளுக்கு வருத்தம் தெரிவிக்காமலே அமைதியாகி, தங்களின் 'பத்திரிக்கைத் தர்மத்தைக்' காத்து கொள்வார்கள். அதனாலயே, ஒரு செய்தி முழுமையாகக் கிடைக்க அதன் follow - up story ஐயும் சேர்த்தே வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவன் நான். எழில் பின்னர் follow up storyன் சுட்டி கொடுத்திருந்தார். ஆனால், அதற்கும் பின் ஒரு செய்தி வந்தது - அது தான் முக்கியமான செய்தி.

கொலையுண்டவர்களின் குடும்பத்தினர், சௌதியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது தான் அந்த செய்தி. அதில் அந்தக் குடும்பத்தினர் சொன்னது, ' எங்களிடம் எதுவும் அவர்கள் பேசவில்லை.' அதாவது அவர்கள் எந்த நாட்டினர், யார், எவர் என்று எதுவும் கேட்காமல், சுட்டுக் கொன்றிருக்கின்றனர். காரணம் என்ன?

தீவிரவாதிகளின் செயல்களுக்குக் காரணம் தேடிக் கொண்டிருக்க முடியாது என்றாலும், அவர்களுக்கு குறைந்த பட்சமாக ஒரு காரணம் எப்பொழுதும் இருக்கும் - அச்சுறுத்துவது. -- அரசுகளை, மக்களை, அதிகாரத்தை, சமூகத்தை, சட்டத்தை, நீதியை.

இப்படி அச்சுறுத்துவதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இலகுவான குறி - ஆயுதமற்ற அப்பாவி மக்கள். அதிலும் எல்லா மக்களையும் அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. ஏன்? Just kick where it hurts. அவ்வளவு தான். ஆசிய மக்களைக் கொன்றால், பெரிதாக ஏதும் நடந்து விடாது என்ற சமயத்தில், அவர்கள் தேர்ந்தெடுப்பது - அமெரிக்க அல்லது ஐரோப்பிய மக்களை. பெரிய அளவில் கண்டனக் குரல் எழும். சவுதி அரசின் மீது நிர்ப்பந்தம் அதிகரிக்கும், அதிருப்தி அதிகரிக்கும் - இது தான் அவர்களது நோக்கம்.

அவர்கள், இஸ்லாமிய புனிதத் தலங்களில் நுழைந்து விட்டார்கள் - அல்லது நுழையப் போகிறார்கள் என்பதெல்லாம் காரணமில்லை. ஏனென்றால், இஸ்லாம் இந்த இடங்களில் மனிதர்கள் நுழையக் கூடாது என்று தடை விதிக்கவில்லை. இஸ்லாம் தோன்றிய காலத்திலே, அங்கு யூதர்களும், கிறித்தவர்களும் இருக்கத் தான் செய்தனர். இந்த தடை விவகாரம் பின்னர் வந்தது. வஹாபிக்கள் என்று சொல்லப்படும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட, சில இஸ்லாமிய தலைவர்கள் ஏற்படுத்திக் கொண்டது.

அப்படி தவறி நுழைந்தால், அதற்கான தண்டனை தலை பறிப்பு என்றில்லை. இது குறித்து, தன்னை ஒரு முஸ்லிம் போல உருமாற்றிக் கொண்டு, மக்காவிற்கு சென்று திரும்பிய சர் ரிச்சர்ட் பர்டன், 1855ல் ஒரு புத்தகமே எழுதினார் - The Pilgrimage to Al-Medinah and Meccah (1855).

அவர் ''....neither Koran or Sultan enjoin the death of Jew or Christian intruding within the columns that note the sanctuary limits, nothing could save a European detected by the populace, or one who after pilgrimage declared himself an unbeliever.". ( Selected Papers on Anthropology, Travel, and Exploration by Richard Burton, edited by Norman M. Penzer (London, A. M. Philpot 1924) p. 30.) பொதுமக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தவிர, மத ரீதியாகவோ, அரச ரீதியாகவோ, எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை.

இது இவ்வாறு இருக்க, புனித தலத்திற்குப் போக இருந்ததினால் தான் கொல்லப்பட்டனர் என்பது மிகத் தவறான செய்தியாகும். அவர்கள் ஒரு சுற்றுலா தலத்தில் (அங்கே செல்ல எந்தத் தடையுமில்லை.) மெடய்ன் சாலஹ் என்ற இடத்திலிருந்து வெளியேறி, அந்த ஊருக்கும், மதினாவிற்கும் செல்லக் கூடிய சாலையில், ஒரு பாலைவனத்தில், கார்களை நிறுத்தி விட்டு, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இறங்கியவர்கள் அவர்கள். தீவிரவாதிகளுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது. சமீப காலமாக, தங்களை மிக முனைப்புடன், வேட்டையாடிக் கொண்டிருக்கும் - வஹாபியிஸத்தைப் பின்பற்றக் கூடிய, சவுதி அரசிற்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முனைந்த அல்கொய்தா உதைதிருக்கிறது - வலிக்கும் இடத்தில். மற்றபடி, இதை அர்விந்த் சொன்னது போல், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்யவில்லை. செய்தவர்கள், தீவிரவாதிகள். தீவிரவாதத்திற்கும், அடிப்படை வாதத்திற்கும், வித்தியாசம் தெரியாதவர் அல்ல - அர்விந்த்.

ஜகன்னாத் பூரி, ஒரு பெரிய இக்கட்டாக வந்து நிற்கும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். அதை நியாயப்படுத்த தவித்துக் கொண்டிருந்தவர், ஒரு தவறான மரக் கொம்பைப் பற்றிக் கொண்டு, மிதக்க நினைக்கிறார். பாவம், அது ஆள் விழுங்கி மலைப்பாம்பு என்று அறியாமலே.
.
பின் குறிப்பு: பிரஞ்ச் அதிபர், சிராக், சவுதி அரசிற்கு நன்றி கூறி இருக்கிறார், தேவையான உதவிகளைச் செய்தமைக்கு. எல்லோருமே தீவிர வாதிகளின் செயலைத் தான் கண்டித்தார்களே தவிர, சவுதி அரசை அல்ல.

இந்த சம்பவம், சவுதி அரசு, இன்னும் எத்தனை, வீர்யத்துடன், இந்த அல்கொய்தாக்களை வேட்டையாடும் வேட்டையாடப்பட வேண்டும் என்பதையே உணர்த்தி இருக்கிறது.

ஒரு அடிப்படை வாதம் மற்றொரு அடிப்படைவாதத்தை ஆதரிக்கும். இல்லையென்றால், அதனுடைய இருப்பே கேள்விக்கு உரியதாகி விடும்

தீவிரவாதிகளின் செயல்பாட்டைக் கொண்டு, பூரி ஜகன்னாத் கோயில் சம்பவத்தை நியாயப்படுத்த முனையும் இந்த நண்பர்களின் செயல், மேற்கண்ட வாக்கியத்தை உறுதிபடுத்துகிறது - இன்னும் ஒரு படி மேல் போய், ஒரு அடிப்படை வாதம் என்றதன் அடுத்த கட்டமான தீவிரவாதத்தைக் கூட நியாயப்படுத்த தயாராகிவிட்டார்கள்.

இது தான் இந்துத்வாவின் முகம் - தன் இருப்பை நியாயப்படுத்த, எதனுடனும் - அடிப்படை வாதமோ, தீவிரவாதமோ, சமரசம் செய்து கொள்ளத் தயங்காது என்பதே.

16 comments:

gulf-tamilan said...

two of the killed french nationals are muslims. and buried in madinah.they are not christians

அரவிந்தன் நீலகண்டன் said...

//தீவிரவாதிகளின் செயல்பாட்டைக் கொண்டு, பூரி ஜகன்னாத் கோயில் சம்பவத்தை நியாயப்படுத்த முனையும் இந்த நண்பர்களின் செயல்//
மன்னிக்கவும் ஐயா வைகுண்டர் அவதார திருவிழாவை ஒட்டி சிறிது வேலைகள் அதிகமாக இருப்பதால் என்னால் அதிகம் பங்கேற்க முடியாது. பூரி ஜகன்னாத் கோவில் சம்பவத்தை நான் எங்கேயாவது நியாயப்படுத்தியிருக்கிறேனா? இதோ எனது எதிர்வினை //மடத்தனம். ஆனால் இந்தியாவில் மட்டும் என்காதீர்கள் தேடினால் எல்லா இடங்களிலும் இத்தகைய மடத்தனங்களை பார்க்கமுடியும். ஆனால் கருணாநிதித்தனமாக அப்படி ஒரு பட்டியலைக் கொடுக்காமல் இது தவறு என சொல்லி இத்தகைய மடத்தனமான விசயங்களுக்கு எதிராக இந்து இயக்கங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என சொல்லுவதுதான் சரியாக இருக்கும்.//(http://satrumun.blogspot.com/2007/03/blog-post_8331.html) 'அட இவன் அவனைவிட கேனையனாக இருக்கிறானே' என வியந்தது உங்களுக்கு ஒரு கிறுக்கனை ஆதரிப்பதாகவா தோன்றுகிறது. நண்பன். மன்னித்துக்கொள்ளுங்கள். உங்களிடமிருந்து இப்படி ஒரு கருத்து நேர்மையற்ற பதிவினை எதிர்பார்க்கவில்லை.

நண்பன் said...

மிக்க நன்றி Gulftamilan.

இறந்தவர்கள் எந்த மதத்தினர் என்று அறிந்து கொள்ளும் பொருட்டு, தேடியதில், இந்தப் பதிவு எழுதுவதற்கு தாமதமாயிற்று.

என்றாலும் இதை ஒரு சமாதானமாகக் கொள்ள முடியாது. முஸ்லிம் அல்லாதவர்களாய் இருந்தால், கொன்றால் பரவாயில்லை என்பது வாதிக்க இயலாத செய்தி தானே?

தீவிரவாதிகள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அவர்களுக்குத் தேவை - கவன ஈர்ப்பு. அழுத்தம் உண்டாக்குதல். சவால். கொஞ்ச நாளைக்கு முன்னால், அவர்கள் சில சவுதி போலிஸைக் கூட கொன்றார்கள். அதெல்லாம் முக்கியத்துவம் பெறாது. அதனால் தான் அவர்கள் வெள்ளைத் தோல் நபர்களைத் தேடி அலைகிறார்கள் - கொல்வதற்கு. விளவுகள் மிக அழுத்தமாக இருக்க வேண்டும்.

நன்றி, கல்ஃப்தமிழன்

கருப்பு said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

அர்விந்த்,

// உங்களிடமிருந்து இப்படி ஒரு கருத்து நேர்மையற்ற பதிவினை எதிர்பார்க்கவில்லை //

நானல்ல, எந்த ஒரு மனிதரும், நீங்கள் எழில் பதிவில் எழுதியவற்றைப் படிக்கும் பொழுது அப்படித்தான் நினைக்க இயலும். ஒவ்வொரு தளத்திலும் கவனமாக எழுத வேண்டியது, எழுதுபவரின் கடமையே தவிர, வாசிப்பவர் எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. நிமிடத்திற்கு ஒரு பதிவு வந்து விழுந்து கொண்டிருக்கையில், எல்லா பதிவுகளையும், அதன் பின்னூட்டங்களையும் தேடிப் பிடித்து, படித்துத் தான் தனது கருத்தை ஒருவன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? இயலுமா? ஆக, when you pass a wry comment on something, you should take care, to make sure that your words would not go out of context. அதனாலே தான், என்னுடைய பின்னூட்டங்கள் சற்று விரிவாகவும், படித்தால் ஒரு தனி பதிவாகவே போடலாமே என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு இருக்கிறது.

ஒருவரின் பெயரை அழுத்தினால், அவர் எங்கெங்கு சென்றார், என்ன என்ன எழுதி இருக்கிறார் என்று தேடுவதற்கு வசதியாக ஒரு software இருக்குமென்றால், அப்படி தேடாதது, வாசிப்பவரின் தவறாக இருக்கும் என வாதிடலாம். அப்படி ஒரு software தமிழ்மணத்தில் இல்லாத பொழுது, வாசிப்பவர்களைக் குறை கூறக் கூடாது என்பதே சரியாக இருக்கும், இல்லையா?

நன்றி,

நண்பன்

Anonymous said...

//அவர்கள், இஸ்லாமிய புனிதத் தலங்களில் நுழைந்து விட்டார்கள் - அல்லது நுழையப் போகிறார்கள் என்பதெல்லாம் காரணமில்லை. ஏனென்றால், இஸ்லாம் இந்த இடங்களில் மனிதர்கள் நுழையக் கூடாது என்று தடை விதிக்கவில்லை. இஸ்லாம் தோன்றிய காலத்திலே, அங்கு யூதர்களும், கிறித்தவர்களும் இருக்கத் தான் செய்தனர். இந்த தடை விவகாரம் பின்னர் வந்தது. வஹாபிக்கள் என்று சொல்லப்படும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட, சில இஸ்லாமிய தலைவர்கள் ஏற்படுத்திக் கொண்டது.//

ஆஹா உங்க பொது புத்தி நல்லாவே வேலைபாக்குது. இந்து மத்துலையும் அப்படிதான். யாரையும் தடுக்கல கோவிலில் நுழைய. சாதி அமைப்புகளும் கிடையாது. ஆனா அங்க மட்டும் வந்து மதத்த கும்முறீங்க.

அய்யா மஞ்ச கலர் கண்ணாடி போட்டுட்டு பாத்தா எல்லாம் மஞ்சளாதான் தெரியும். பச்சகலரு கண்ணாடி போட்டு பாத்தா பச்சையாதான் தெரியும். இது பொருளின் தப்பு இல்லை. உங்க பார்வையின் தப்பு. உண்மயான தவற கண்டுபிடிக்கனும்னா உண்மையான மனசு வேணும்.
சரி பராவாயில்லை தங்களின் சொறிந்துவிடும் தொழிலை தொடருங்கள்.

வரட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா

நண்பன் said...

அநாநி 1:


// ஆஹா உங்க பொது புத்தி நல்லாவே வேலைபாக்குது. இந்து மத்துலையும் அப்படிதான். யாரையும் தடுக்கல கோவிலில் நுழைய. சாதி அமைப்புகளும் கிடையாது. ஆனா அங்க மட்டும் வந்து மதத்த கும்முறீங்க.//

நான் எதையும் கொஞ்சம் தீர்க்கமாக அணுகுபவன். நகைச்சுவைக்கு என் எழுத்தில் இடமிருக்காது. இது எனக்கு ஒரு கவலையாகவே இருக்கின்றது. படிப்பவர்களுக்குக் கொஞ்சம் நகைச்சுவை கலந்து கொடுத்தால், வாய்விட்டு சிரித்து விட்டுப் போவார்கள் அல்லவா?

உங்களை மாதிரி, காமெடியன்கள் அடிக்கடி வந்து விட்டுப் போனால், நன்றாக இருக்கும்.

தொடர்ந்து வாருங்கள், காமெடியனே!!!

Anonymous said...

//உங்களை மாதிரி, காமெடியன்கள் அடிக்கடி வந்து விட்டுப் போனால், நன்றாக இருக்கும்.

தொடர்ந்து வாருங்கள், காமெடியனே!!!//

என்ன பண்ண உங்கள மாதிரி வில்லன்கள என்ன மாதிரி பொடியன்கள் எதிர்க்க முடியுமா. அதனால நாங்களெல்லாம் காமெடியனாவே இருந்துட்டு போகிறோம் உங்கள போல வில்லன்களுக்கு அல்லைக்கையா இருந்து சொறிந்துவிடுவதை விட.
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
சாரே எதையும் தீர்க்கமாக அனுகலாம். ஆனா முன் தீர்மானத்தோடத்தான் அனுக்கக்கூடாது. இதுல நீங்க எதுல இருக்கீங்கனு நீங்களே பாத்துக்கோங்க.

முக்கியமான விசயம் நான் ஒன்னும் பூரி ஜெகன்நாந் விசயத்தை நியாப்படுத்தல. நீங்க இங்க சொறிந்து விட்டுகிட்டு இருக்கீங்களே அத சொல்லுரேன்.புரிஞ்சா சரி. இல்ல "எனக்கு சொறிந்து விடுவதுதான் பிடிச்சுருக்கு" என்று நீங்க சொன்னா
Please carry on your Honorable work I will not interfere with your work.

நண்பன் said...

விடாது கருப்பு,

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அதை நீக்குவதற்குக் காரணம் - அதன் மொழி நடையும், எழுத்தில் தெரிந்த வன்முறையும்.

நீங்கள் இந்துத்வாவையும், அதன் பிரதிநிதிகளையும் எதிர்க்கிறீர்கள் என்ற அளவில் மட்டும் தான் எனக்கு உடன்பாடே தவிர, அதை எப்படி செய்ய வேண்டுமென்பதில், உங்களிடமிருந்து, நான் வேறுபடுகிறேன்.

ஆகையால், உங்கள் பின்னூட்டத்தை நீக்கியது குறித்து, வருந்த வேண்டாம்.

உங்கள் பணியை, உங்கள் பாணியில் நீங்கள் செய்யுங்கள். எனது பணியை எனது வழியில் நான் செய்து கொள்கிறேன். சரிதானே?

நன்றி. (பின்னூட்டத்தைப் போடலங்கறதுக்காக, வாசிக்கிறத நிறுத்திடாதீங்க.)

நண்பன்

நண்பன் said...

ஐயா அநாநித் தோழரே,

முக்காடு போட்டுக்கிட்டு வந்து, எனக்கு நீ அறிவுரை சொல்லத் தேவையில்லை.

பொத்திக்கிட்டுப் போய்க் கொண்டே இரும், தம்பி.

Anonymous said...

//உங்கள போல வில்லன்களுக்கு அல்லைக்கையா இருந்து சொறிந்துவிடுவதை விட.//

நண்பன் ஜி,

இவ்வரிகலுள்ள முக்காடு போட்டு பின்னூட்டமிட்டது ஒரு வாலறுந்த மாயவரத்து நரி. நான் யாரைக் குறிப்பிடுகிறேன்னு புரிஞ்சா சரி.

Anonymous said...

அன்பின் நண்பன்,
தங்களின் 'இந்துத்வாவின் சமரசம்' என்ற பதிவைப் பற்றி:
அரவிந்தன் அஸ்ஸாம் தீலிரவாதிகள் செய்த கொலையைப்பற்றி குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் ஏதோ பூசாரிகளைப் பற்றியதாக நினைத்துள்ளீர்கள்.
நட்புடன்
சுல்தான்

அரவிந்தன் நீலகண்டன் said...

நண்பன்,

ஒன்று: பயங்கரவாதிகள் செய்ததையே தான் சவூதி அரசும் செய்யும். உதாரணமாக, இந்திய அரசு அதிகாரிகள் தலையிடாமல் இருந்தால் இடத்துவா ஜோஜோ ஜோசப்பின் தலை வெட்டப்பட்டிருக்கும் சவூதி அரசினால். ஆகவே அதிர்ஷ்டவசமாக ஜோஜோவின் தலை தப்பியது பயங்கரவாத கத்திக்கா அடிப்படைவாத கத்திக்கா? சரி பெரிதாக ஆலாபனை செய்தீர்களே ஒரு அடிப்படைவாதம் மற்றொரு அடிப்படைவாதம் என்று. எந்த தரவின் அடிப்படையில்? என்னை பொறுத்தவரையில் மீரா ஜாஸ்மினை கோவிலுக்குள் விடாதது/அபராதம் விதித்தது, ஏசுதாசை குருவாயூர் கோவிலுக்குள் விடாதது, பூரி ஜகன்னாதர் கோவிலில் அமெரிக்கன் நுழைந்ததற்காக லட்ச ரூபாய் பெறுமான சோத்தை புதைத்தது எல்லாமே செருப்பால் அடிக்க வேண்டிய மடத்தனம். ஆனால் மீண்டும் சொல்கிறேன் ஏதோ முஸ்லீம்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாத இடத்தில் நுழைந்தவர்களை தலையை துண்டிப்போம் என்பது பூரி ஜகன்னாத் கோவிலில் நடந்த மடத்தனம் எவ்வளவோ பரவாயில்லை என சொல்லவைக்கிற மனிதத்தன்மையற்ற மிருகத்தனம்.
http://www.ndtv.com/morenews/showmorestory.asp?slug=Death+penalty%3A+Saudi+court+spares+Keralite&id=98204&category=National

நண்பன் said...

அர்விந்த்


// பெரிதாக ஆலாபனை செய்தீர்களே ஒரு அடிப்படைவாதம் மற்றொரு அடிப்படைவாதம் என்று. எந்த தரவின் அடிப்படையில்?//

இது ஒரு பொது நியதி. இதற்கு உதாரணங்கள் வேண்டுமானால், சொல்லிக் கொண்டே போகலாம். கலாச்சார காவலர்கள், பண்பாடு காக்கப் புறப்படும் பொழுது, எல்லா பேதங்களையும் தாண்டி, ஒன்றிணைகிற மனிதர்கள் இருக்கிறார்கள். எம்.எஃப்.ஹுசைன் மீது வழக்குத் தொடுத்த இஸ்லாமியர்கள் சிறந்த உதாரணம். அடிப்படை வாத பாசிச சக்திகளை ஆராதிக்கிறதில் இணைகின்ற கூட்டங்கள் இருக்கின்றன. அது பற்றி பதிவுகள் வரும்பொழுது, பேசலாம்.

சவுதியின் கொள்கைகள் பழமைவாதம் மிக்கது என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால், அது ஆட்சியாளர்களின் தவறு மாத்திரமே. இஸ்லாத்தின் தவறு அல்ல. இந்த ஆட்சியாளார்கள் சமீபத்தில் வந்தவர்கள். வந்ததும், எண்ணெய் வளமிகு செல்வம் கொடுத்த சௌகரியமான வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள மத அடிப்படைவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டனர். பி.ஜே.பி. மசூதி இடிப்புகள் மாதிரி. மக்களை அடிப்படைவாதத்தின் ஊடாக அடக்குவது எளிது.

ஆனால், பூரி ஜகன்னாத் கோயிலுக்குள் நுழைவதற்கு மாற்று மதத்தினர் என்ன, சொந்த மதத்துகாரர்களையே அனுமதிப்பதில்லயே!!! இந்திரா காந்தி இதே கோயிலுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது - அவர் பார்சி இனத்தைச் சார்ந்த பெரோஸ் காந்தியை மணந்ததால் மாத்திரமே.

உள்ளூரில் நடக்கும் அக்கிரமத்தைக் கண்டு கொள்ளாமல், உலகத்தைத் திருத்தப் புறப்பட்டதைப் பற்றி என்ன சொல்வது?

மடத்தனம் என்று இங்கே மட்டும் சொன்னால் போதாது. எல்லா தளங்களிலும் அதையே சொல்லுங்கள். நன்றி.

கருப்பு said...
This comment has been removed by a blog administrator.
அட்றா சக்கை said...

//ஒரு அடிப்படை வாதம் மற்றொரு அடிப்படைவாதத்தை ஆதரிக்கும். இல்லையென்றால், அதனுடைய இருப்பே கேள்விக்கு உரியதாகி விடும்

தீவிரவாதிகளின் செயல்பாட்டைக் கொண்டு, பூரி ஜகன்னாத் கோயில் சம்பவத்தை நியாயப்படுத்த முனையும் இந்த நண்பர்களின் செயல், மேற்கண்ட வாக்கியத்தை உறுதிபடுத்துகிறது - இன்னும் ஒரு படி மேல் போய், ஒரு அடிப்படை வாதம் என்றதன் அடுத்த கட்டமான தீவிரவாதத்தைக் கூட நியாயப்படுத்த தயாராகிவிட்டார்கள்.

இது தான் இந்துத்வாவின் முகம் - தன் இருப்பை நியாயப்படுத்த, எதனுடனும் - அடிப்படை வாதமோ, தீவிரவாதமோ, சமரசம் செய்து கொள்ளத் தயங்காது என்பதே.//

எவ்வளவு உன்னிப்பான வார்த்தைகள்!

இந்த அரவிந்தன் நீலகண்டன் என்பவர் இஸ்லாத்தை மனம்போன போக்கில் விமர்சிக்கும் நேசகுமார் என்ற வக்கிரம் பிடித்த மனநோயாளியின் பதிவில் பின்னூட்டம் இடுகிறார் அற்புதமான பதிவு என்று!

அந்த பதிவின் ஊடே அந்நபர் சொல்வது RSS does not mean anything to us Hindus! என்று

அதாவது RSS என்பது ஒரு ப்பொருட்டெ இல்லையாம் இந்துக்களுக்கு. RSS -ன் முழுநேர கொபசெவான அரவிந்தனுக்கு இது மிக நல்ல பதிவாம்.

இந்துத்துவா தங்கள் இருப்புக்கு சவாலான் இஸ்லாத்தைத் தூற்றுபவர் தங்களையே ஒரு பொருட்டாக மதிக்காவிட்டாலும் வெட்கம் என்பது சிறிது கூட இல்லாமல் சமரசம் செய்து கொள்வார்கள் என்பதற்கு இன்னொரு உஹ்டாரணம் இவர்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்