"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, March 06, 2007

இது ஒரு பொன்மாலைப் பொழுது - கவிப்பேரரசு வைரமுத்துவுடன்..

கடந்த வெள்ளியன்று, ஒரு திருவிழா நடந்தது துபாயில். காக்கா சலாஹுத்தீன் என்று அழைக்கப்படும் ETA நிறுவனத்தின் தலைவருக்குப் பாராட்டு விழாவும், கவிஞர் வைரமுத்து அவர்களின் கருவாச்சி காவியம் நூல் வெளியீட்டு விழாவும் இணைந்து ஒரே மேடையில் நடைபெற்றது. இது குறித்து, ஆசிப் ஜாடைமாடையாக ஒரு ஜாலி பதிவு போட்டுவிட்டாலும், இந்த விழா பற்றி, சிறிது விரிவாகப் பேசியே ஆகவேண்டும்.

திரு. சலாஹுத்தீன் அவர்கள் மேடைப்பேச்சாளர் இல்லையென்றாலும், இயல்பாக அன்று பேசியது ஆச்சர்யமூட்டியது. அவர் சுவையாக, விரிவாகப் பேசியதை, கேட்டுக் கொண்டிருந்த, கவிஞர் வைரமுத்து அவர்கள் கூட, பின்னர் தன் பேச்சில் குறிப்பிட்டு, அவர் (சலாஹுத்தீன் அவர்கள்) தன் வாழ்வியல் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் எல்லோரும் பயன் பெறும் வகையில் என்று கேட்டுக் கொண்டார்.

திரு. சலாஹுத்தீன் அவர்களின் பேச்சு, மிக எளிமையாக இருந்தது. இறைவனுக்கு நன்றி கூறினார். சிறு வயதிலே பேரம் பேசி பொருட்களை வாங்கும் அளவிற்கு தன்னை வளர்த்ததைக் குறிப்பிட்டு, தன் பெற்றோர்களுக்கு நன்றி கூறினார். தனக்கு ஒத்துழைத்து, இந்நிறுவனம் செழித்து வளர உதவிய தன் நிறுவன ஊழியர்களுக்கு நன்றி கூறினார்.

ஊழியர்களுக்கு நன்றி கூறும் பொழுது ஒரு சுவையான கதை ஒன்றையும் கூறினார். அது இது தான்.

ஒரு சிறுவன் பள்ளித் தேர்வுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். அவன் நண்பன் ஒருவன் சொன்னான் பரீட்சையில், பசுமாட்டைப்பற்றி அல்லது தென்னை மரத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்லப்போகிறார்கள் என்று ஒரு தகவல் சொல்லிவிட்டுப் போக, சிறுவன் யோசித்தான் ஒன்றைப் படித்து விடலாம் என்று தென்னை மரத்தைத் தேர்ந்தெடுத்தான். நன்றாகப் படித்து விட்டு, தேர்வுக்குப் போய், வினாத்தாளை வாங்கியவனுக்கு திகில் அடித்துப் போனது. பரீட்சையில் கேட்டிருந்தது - பசுவைப் பற்றி ஒரு கட்டுரை வரைக என்று.

யோசித்தான். பிறகு எழுதத் தொடங்கினான். தென்னை மரம் உயரமாக வளரும். இளநீர் தரும். தேங்காய் தரும். தென்னை மட்டைகள், கூரை வேயப் பயன்படும். என்றெல்லாம் தென்னை புகழ்பாடி, ஒரு முழு கட்டுரையும் எழுதி முடித்து விட்டு, கடைசியாக எழுதினான் - இத்தகைய சிறப்புமிக்க தென்னையில், பசு மாட்டைக் கட்டுவார்கள் என்று.

அதுமாதிரித் தான் நானும் என்றார். ETA என்ற நிறுவனம் 46,000 ஊழியர்களைக் கொண்டது. மத்தியக் கிழக்கு, இந்தியா, தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் என்று பல நாடுகளில் தொழில் புரிகிறது. அது தொடாத துறைகளே கிடையாது. இப்படி சிறப்புமிக்க நிறுவனத்தின் தலைவர் மட்டுமே நான் என்றார். தன் நிறுவனத்தின் பெருமை அனைத்தும் தன் ஊழியர்களுக்கு மாத்திரமே என்றதும் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரமாகியது.

பின்னர் மற்ற சம்பிரதாயங்கள் நடந்தேறின. சால்வை போர்த்துதல், கேடயம் வழங்குதல், பதில் பரிசு என்று ஒரே மாற்றி மாற்றி புகழ் பாடி எல்லோரையும் கொஞ்ச நெளிய வைத்தார்கள்.



(படத்தில் இருப்பவர்கள் - இசாக், ஹதீம் அண்ணன், கவிஞர் வைரமுத்து, நண்பன், முத்துகுமரன்)

பின்னர் கருவாச்சி காவியம் வெளியிட, கொஞ்சம் தயார்படுத்திக்க, இடைவெளி ஒன்று கிடைக்க, குழந்தைகள் நடனம் இரண்டை அரங்கேற்றினார்கள். சங்கங்கள் நடத்துவதன் முக்கிய காரண காரியமே நடனம் ஆடுவதற்குத் தானே.!!! நடனம் ஆடுவது குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்பதைத் தவிர, அதில் வேறு கூறுகள் கிடையாது. படைப்புத் திறமையோ, கலை ஆர்வமோ துளியும் இருக்காது. அன்றும் அதே. கவிஞரின், ரண்டக்க ரண்டக்க என்ற பாடல். ஆடிய குழந்தைகள் எல்லோரும் மழலை மாறாதவர்கள்.

முத்தத்தால்
என் வியர்வையெல்லாம்
சுத்தம் செய்யேண்டி

என்றெல்லாம், எழுதப்பட்ட வரிகளுடைய இந்தக் கேவலமான பாடல்களுக்கு இந்த குழந்தைகள் ஆடத் தான் வேண்டுமா, என்று நான் முணுமுணுத்தது கொஞ்சம் சத்தமாகவே ஆகிவிட்டது போலும். முன்வரிசையில் இருந்தவர் திரும்பிப் பார்த்து கொஞ்சம் முறைத்துக் கொண்டார்.

பாடல்கள் முடிந்து புத்தக் வெளியீட்டு விழா ஆரம்பித்தது. கவிஞர் வைரமுத்து அவர்கள் திரைப்பட உலகிற்காக பல சமரசங்களைச் செய்து கொண்டவர், அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட, திரைத்துறை தரும் மயக்கமும், வருவாயும் தான் முக்கியம் என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு. தமிழ் அவருக்கு இரண்டாம் பட்சம் என்பதும் எங்களுக்கு அவர் மீது இருக்கும் ஒரு குறைபாடு. இதையெல்லாம் அவருக்கு யாரும் சொல்லித் தந்தார்களோ அல்லது அவராக ஊகித்துக் கொண்டார்களோ தெரியவில்லை. எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக, அன்று அவர் தமிழை முன்னிலைப் படுத்திப் பேசியது மகிழ்வாக இருந்தது. போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்று, பிறகு உண்மையாக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி எழுந்து வந்தது போன்றதாகி விட்டது.

தன்னுடைய கம்பீரமான குரலில், அன்று தமிழ் பண்பாட்டை முன்நிறுத்த வேண்டும் என்று சொல்லி தொடங்கினார். அதாவது, சலாஹுத்தீன் அவர்களைப் பற்றி பேச வேண்டிய சொற்களைப் பேசி முடித்த பின் தான்.

தமிழன் எங்கு சென்றாலும், அந்த மண்ணை வளம் பெறச் செய்வான் - புத்திசாலிகளாக இருப்பான் - சென்ற மண்ணையும் சொந்த மண்ணாக மதித்து உழைப்பான் என்று சொல்லி வந்திருந்தவர்களை உற்சாக மூட்டினார். அவரது நீண்ட உரையை எழுதிக் கொண்டிருக்க முடியாது.

அவர் பேச்சிலிருந்து சில துளிகள்:


#
குழந்தைகளுக்கு நல்ல பாடல்களைச் சொல்லிக் கொடுங்கள் ரண்டக்க, ரண்டக்க என்பன போன்ற பாடல்களுக்கு, ஆடச் செய்யாதீர்கள் இது ஒரு சினிமாவின் வியாபார வெற்றிக்காக எழுதப்பட்டது. தாளம் நன்றாக அமைந்திருப்பது ஒன்றே நடனம் அமைப்பதற்குக் காரணமாக்கிவிடக்கூடாது. நல்ல கருத்துள்ள பாடல்களைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். விழா அமைப்பாளர்கள் முகத்தில் அசடு வழிந்தாலும்,. பின்னர் நீங்கள் வருவதற்கு முன் உங்கள் பாடல்களில் சிலவற்றைப் பாடினோம் என்றெல்லாம் சமாதானம் சொல்லி, சீட்டு கொடுத்து அனுப்பினார்கள்.

#
ரஹ்மானைச் சந்தித்து, ரோஜாவிற்குப் பாடல் எழுதிய சூழலை சொன்னார்.

குளிர் அடிக்கும் விதமாக அரவிந்தசாமியும், மதுபாலாவும், காஷ்மீரத்தில் பாட ஒரு பாடல் வேண்டும் என்று மணிரத்தினம் சூழலையெல்லாம் விளக்கிச் சொல்ல, ரஹ்மான் ஒரு ட்யூனைக் கொடுக்க - 30 க்கும் மேலாக நிராகரிக்கப்பட்டு, கடைசியாக தேர்ந்தெடுத்தது அது.

மணிரத்தினம் சொன்ன மூட் - பாட்டில் குளிர் அடிக்க வேண்டும். காஷ்மீரத்தின் குளிரை, மக்கள் பாட்டில் உணர வேண்டும் என்பது தான் சூழல். ரஹ்மானின் ட்யூனில் குளி அடித்தது. கவிஞரும் பாடல் எழுதினார் -

இது காஷ்மீரமா...
வெள்ளைக் கார்காலமா..

என்று ஒரு பாடலை எழுதி முடித்துக் கொடுத்து விட்டுப் போகிறார். பாடல் பாடப்பெறுகிறது. இரவு கவிஞருக்குப் போன் வருகிறது. "சார், இந்தப் பாடல் வேண்டாம்"

"ஏன்?"

"வேணாம்னா, விட்ருங்க சார். வேற பாட்டு எழுதித் தாங்க.."

"சரிங்க. வேண்டாம். ஆனால் அதற்கான காரணத்தைச் சொல்லித் தான் ஆகணும்.."

"நான் காஷ்மீரத்தைக் காட்டுகிறேன். பின்னர் பாட்டிலும் இது காஷ்மீரமா எம்று நீங்கள் சொல்லிக் காட்டணுமா? அது தான் காட்சியிலே வந்து விடுகிறது. எல்லோரும் பார்ப்பதை ஏன் சொல்லிக்கிட்டு இருக்கணும்? மேலும், இப்போ காஷ்மீரில் கலவரம். ஒருவேளை அங்கே படப்பிடிப்பு நடத்த முடியவில்லையென்றால், நான் ஊட்டிக்கு கூட மாத்திக் கொள்வேன். அப்போ, ஊட்டியைக் காட்டி, காஷ்மீர்னு சொல்ல முடியாது. அதனால வேணாம்."

பிறகு கவிதை மாறுகிறது. காஷ்மீர் எனக் குறிப்பிடப்படாமலே பாடல் வேறு உருவம் பெறுகிறது. வெற்றியும் பெறுகிறது.

இது போல மேலும் சில பாடல்களைக் குறிப்பிட்டார். ஷங்கரின் முதல்வன் படத்தில் வரும் உப்புக் கருவாடு உருவான கதையையும் குறிப்பிட்டார். அருமையான ஒரு பாடல் எழுதி முடிந்ததும், ஷங்கர் சொன்னாராம் - பதிமூன்றாவது ரீலிலே, பாடல் வருகிறது. இத்தனை மென்மையாக மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தால், எல்லோரும் எழுந்திருந்து, வெளியில் போய் விடுவார்கள். அப்புறம் என்னுடைய, க்ளைமேக்ஸ் படுத்துடும் சார். வேகமான துடிப்போடு ஓடிக் கொண்டே இருக்கிற மாதிரி ஒரு பாடல் எழுதுங்க என்று சொன்னார். அப்படி மாத்தி அரைமணி நேரத்தில் எழுதிக் கொடுத்த பாட்டு தான் உப்புக் கருவாடு என்ற பாடல் என்றார்.

கடைசியாக குறிப்பிட்டார் - திரைத்துறையில் பல சமரசங்கள் செய்து கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. ஒரு பாடலைக் கவிஞன் மட்டுமே தீர்மானிப்பதில்லை. முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களிலிருந்து, இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் அதில் இணைகிறார்கள். எல்லோரையும் திருப்தி படுத்தினால் மட்டுமே ஒரு பாட்டு உருவாக முடியும். இத்தகைய சமரசம் தேவை என தன் பக்கத்து நியாயங்களை எடுத்து வைத்தார்.

சமரசம் செய்து கொள்ளாமலே எழுதவும் முடியும் என்று இயங்கியவர்கள் இருக்கையிலே, இந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ள சிரமமிருக்கிறது. அந்த சமரசங்களை ஈடுகட்டும் விதமாகத் தான் இந்த மாதிரி, திரைத்துறையினரின் தலையீடு இல்லாத, மற்ற படைப்பிலக்கியங்களையும் நான் செய்கிறேன் என்றார்.

கருவாச்சி காவியம் பெரும் வரவேற்பைப் பெற்றது ஆனந்த விகடனில் வந்த பொழுதே. இனி அவருக்கு சமரசம் செய்து தான் கவிஞனாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. அதை ஏற்றுக் கொண்டு, இந்த சமரசங்களைக் கைவிட்டு, நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆவலாகவும் இருக்கின்றது.

இறுதியாக, புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் தன் கையொப்பமிட்டுப் புத்தகங்களை வழங்கினார். வெறுமனே கையெழுத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு, புத்தகத்தை எடுத்து வர விருப்பமில்லை. புத்தகத்தில், நண்பன் என்று என்னுடைய கையொப்பமிட்டு, அவரிடமிருந்து, மீண்டும் ஒரு முறை ஒரு சிறிய வாழ்த்துடன் கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டேன் புத்தகத்தை.

2 comments:

Anonymous said...

சுவையாக எழுதியிருக்கிறீர்கள். தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2007/03/06/vairamuthu/

நண்பன் said...

டுபுக்கு,

சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அறிமுகத்திற்குப் பயன்படுத்திக் கொண்டீர்கள்.

ஒரு நல்ல அறிமுகத்திற்கும், நல்ல கருத்தைத் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியதற்கும் மனங்கனிந்த நன்றிகள்.

அன்புடன் நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்