"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, March 07, 2007

மாங்கா மடையர்கள்.....

எரியும் புத்தகக் கடைவீதி.

ஒரு இனத்தை அழிக்க, ஆதி காலம் தொட்டே இருந்து வரும் வழக்கம்- அறிவைத் தேடும் வழிமுறைகளை ஒழித்து விடுவது. அதைத் தான் இன்று ஈராக்கில் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். இத்தனை காலமும், இன அழிப்பிற்காக போராடிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது, ஒரு புத்தகங்களை விற்கும், நூலகங்கள் நிறைந்த ஒரு கடை வீதியை தகர்த்தெறிந்திருக்கிறார்கள்.

முத்தனபி தெரு என்று சொல்லப்படும் அந்தக் கடை வீதியின் வயது ஆயிரம் வருடங்களுக்கு மேல். 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞரின் ஞாபகமாக அந்தத் தெருவிற்கு முத்தனபி என்று பெயர் வைத்து, அந்தத் தெரு முழுவதும், புத்தகங்கள் விற்பனைக்கும், நூலக வாசிப்புக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

அறிவைக் கொண்டாடிய முத்தனபி தெரு

அந்தத் தெருவில், இலக்கியவாதிகளும், கருத்தாளர்களும் கூடுவார்கள் தினமும். பல்வேறு வாத பிரதிவாதங்கள் நிகழும். இவைகள் எல்லாம், அமைப்பு ரீதியாக அல்லாமல், நட்பு வட்டங்களாக குழுமம் குழுமாக கூடி விவாதத்திலும், தர்க்கத்திலும் ஈடுபடும் இடமாகவும், புத்தக வாசிப்பும், பகிர்ந்து கொள்ளுதலுமாக, இலக்கிய பூங்காவாக திகழ்ந்த இடம்.

அந்தக் காலத்தைய ப்ளாக்கர்கள் கூடும் இடம்?!!!

கொடுமையான, இனப் போராட்டத்தில் கூட, அந்தத் தெருவை எவரும் தொட்டதில்லை. ஈராக் மக்களின், post Saddam காலகட்டத்தின், நிம்மதியான பாதுகாப்பான இடமாக இந்த தெரு இருந்தது. ஆனால், அங்கு தான் - இனங்கள் தாண்டிய அறிவுசார் வட்டமாக இயங்கிய அங்கு தான், வெடிகுண்டு பயமின்றி, மக்கள் புழங்கிய சமயத்தில் குண்டு வெடித்திருக்கிறார்கள். 26 பேர் மரணம். அதைவிட கொடுமை, பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எரிந்து நாசமாகி விட்டன.

புத்தகங்கள் தேடுதல், வாங்குதல், படித்தல், பாதுகாத்தல், பகிர்தல், என பல உள்ளார்ந்த அனுபவங்களைத் தரும். அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். புத்தகங்களைத் தேடுவது, இறைவனைத் தேடித் திரியும் பயணம் போல இன்பமான அனுபவம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். ஒரு மாதத்தில் ஒரு நாளேனும் ஒரு புத்தகக் கடையினுள் நுழைந்து, புத்தகங்களைத் தேடித்தேடி வாங்காவிடில், மனம் பரபரக்கத் தொடங்கி விடும். தான் தேடி செல்லும் புத்தகங்கள் கிடைக்காவிட்டால், மனம் சோர்ந்து விடுவதும், கிடைத்து விட்டால், மகிழ்ச்சி கொள்வதும் என எப்பொழுதுமே, புத்தகங்களுடன் ஒரு பரவச நிலையிலான உறவு என்னுடையது.

புத்தகங்களின் மீது காதல் கொண்ட அனைவருக்குமே அது ஒரு பரவச நிலையைக் கொடுக்கும். காதலிக்கும் புத்தகங்களை ஒரு போதும் கடன் கொடுக்காது, வைத்துப் பாதுகாப்பது, அப்படியே மீறி எவரேனும் வாசிக்க விரும்பினால், தங்கி இருந்து, வாசித்து போங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்வது - இப்படியான புத்தகக் காதலனுக்கு, ஒரு புத்தகக் கடைத்தெருவே எரிந்து போனது - சில தீவிரவாதிகள் யாரையோ எதிர்ப்பதற்காக, தங்கள் சொந்த நாட்டின் அறிவுதேடலை கொன்று புதைத்து விட்டார்கள் என்ற செய்தியைப் படித்ததும், அடைந்த வேதனையை சொல்லி முடியாது.

இது இப்படியென்றால், இந்தப் புத்தகங்களை வியாபாரம் செய்தவர்கள், கண்ணீர் மல்க கூறிய செய்தி -ஒரு மனிதனுக்கு மிஞ்சிப் போனால், ஒரு நூற்றாண்டு வாழ்வு. ஆனால், இந்தப் புத்தகங்கள் நிரந்தரமான வாழ்வுடையது அல்லவா? எதை கொல்கிறோம் என்று தெரியாமலே, இந்தப் பாவிகள் செய்தது ஈராக்கின் பல தலைமுறைக்கான அறிவு செல்வத்தை அல்லவா அழித்து விட்டார்கள்.

Murder the intellectual capability of the country.

ஆமாம் - தீவிரவாதம் இப்பொழுது புதிய தளத்தில் பயணிக்கிறது. Murder the intellectual capability of the country. சிந்திக்கும் சக்தியை அழித்தொழித்தால், பின்னர் எல்லாம் தங்கள் கைவசப்படும் என்ற திட்டத்துடன் செயல்படத் தொடங்கி விட்டனர். இந்த சித்தாந்தத்தில் செயல்பட்ட சில குழுக்களால், பாதிக்கப்பட்ட சமூகங்கள் எத்தனை. தலைமுறை தலைமுறையாக கல்வி பெற வசதியின்றி, வீழ்ந்து விட்டன. இன்று அதலபாதாளத்தில் விழுந்தவர்களைக் கை தூக்கி விட, எத்தனை முயற்சிக்க வேண்டியதிருக்கிறது.

தீவிரவாதிகளும் இப்பொழுது அதைத் தான் செய்ய முனைந்திருக்கிறார்கள். தங்களைக் குறித்து கேள்வி எழுப்ப சக்தியுள்ளவர்கள் - இந்த intellectuals மாத்திரமே. இவர்களைத் தேடித்தேடி கொன்று கொண்டிருக்க முடியாது. அதனால், அவர்களின் அறிவின் மூலமாகிய புத்தகங்களை அழித்து ஒழித்து விட்டால், இனி என்றுமே சிந்திக்கத் திராணியற்றவர்களாய், தாங்கள் சொல்லும் அடிப்படை வாதத்தை பிடித்துக் கொண்டு, தங்களோடு சேர்ந்து நிற்பார்கள் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது - ஒவ்வொருவரின் கடமையாகும். இது மதம் சார்ந்த விடயமென இன்று ஒதுங்குபவர்கள் - சிந்தனை செய்யும் மனமுடையவர்களுக்கு எதிராக மௌனம் காக்கிறார்கள் - மனித இனத்திற்கெதிராக துரோகமிழைக்கிறார்கள் என்று தான் சொல்வேன்.

27 comments:

nagoreismail said...

உயிர்களின் மதிப்பறியாத விஷங்களின் செயல்கள் கொச்சைப் படுத்த தகுதியானவை தான் - சந்தேகமே இல்லை - ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல முன் மாதிரி - தலைப்பில் வேறு வார்த்தை கட்டாயம் தேவை - நாகூர் இஸ்மாயில்

சீனு said...

//தலைப்பிற்கு மன்னிக்கவும். இந்த தீவிரவாதிகளின் செயல்களுக்கு எதிர் குரல் கொடுப்பதற்கு இதைவிட வலுவான எனக்குத் தெரியவில்லை.//

கேவலம். உங்களை அதே வார்த்தையில் திட்டிவிட்டு, உங்களிடம் மன்னிப்பு கேட்கட்டுமா? சொல்லுங்கள்...

Santhosh said...

மிகவும் கண்டிக்கத்தக்கது. உங்க கோபம் நியாயமானதே.

நண்பன் said...

நாகூர் இஸ்மாயில், சீனு, சந்தோஷ் மிக்க நன்றி.

நடக்கும் கொடுமைகளை, அநீதிகளை தடுத்து நிறுத்தி விட எல்லோரும் 'சூப்பர் மேன்' அல்ல. பார்த்து, படித்து, கேட்ட அநீதிகளை ஆத்திரம் தீர, திட்டி விட்டு மட்டுமே போக முடியும்.

இந்தத் தலைப்பு, அத்தகைய இயலாமை நிறைந்த மனிதனின் ஒரு பலவீனமான முணுமுணுப்பு தான்.

சீனு, திட்டி விட்டு, திட்டப்பட்டவனிடமே மன்னிப்பு கேட்கவில்லை. இதை சகித்துக் கொள்ள வேண்டிய என் வலைப்பதிவை வாசிக்க நேர்ந்தவர்களிடம் தான் மன்னிப்பு கேட்டேன்.

எந்தத் தவறும் செய்யாதவர்களை, பண்பாடு அறிந்த யாரும் திட்டப் போவதில்லை. அப்படித் திட்டுவது என ஒருவர் முடிவெடுத்துவிட்டால், அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

மரைக்காயர் said...

//தீவிரவாதம் இப்பொழுது புதிய தளத்தில் பயணிக்கிறது. Murder the intellectual capability of the country. சிந்திக்கும் சக்தியை அழித்தொழித்தால், பின்னர் எல்லாம் தங்கள் கைவசப்படும் என்ற திட்டத்துடன் செயல்படத் தொடங்கி விட்டனர்.//

குண்டுகள் ஏற்படுத்தும் நாசத்தைவிட ஒரு சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதம் இது. அமெரிக்கப் படை பாக்தாத்தில் நுழைந்தபோது அவர்கள் குறி வைத்து வீழ்த்திய கட்டிடங்களுள் பாக்தாத்தின் புகழ் வாய்ந்த, அரிய புத்தகங்களை கொண்ட நூலகங்களும் அடங்கும் என்று முன்பு படித்த ஒரு தகவல் நினைவுக்கு வருகிறது.

நண்பன் said...

முன்பு செய்தவர்கள் எதிரிகள். அவர்களுக்கு ஒரு நாட்டின் கலாச்சார பெருமை பற்றிய அறிவு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க ராணுவம், நூலகம் மாத்திரமல்ல, அருங்காட்சியகத்தையும் சேர்த்தே அழித்தார்கள். சுமேரிய நாகரீகம் தொட்டு, விலைமதிப்பற்ற பல கலைச் செல்வங்களை அதன் பெருமை அறியாத பல பாமரர்கள் தூக்கிச் சென்றனர். அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் - அவர்களுக்கு ஈராக்கின் மீது பற்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுது செய்தவர்கள் சொந்த நாட்டினர். முத்தனபி தெருவின் பெருமையையும், வயதையும் அறிந்தவர்கள்.

அதன் சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொண்டே, அந்த தெருவை, குண்டு வீசி தகர்ப்பது என்பது அநியாயம்.

எத்தனை தான் கோபம் இருந்தாலும், நாம் தாஜ்மஹாலைப் போய் இடிப்போமா?

அது மாதிரி தான் இதுவும்.

அபூ முஹை said...

அன்பின் நண்பன்,
உங்கள் மனக் கொதிப்பு நியாயமானது. அதே நேரத்தில் நீங்கள் பயன்படுத்திய தலைப்பு எந்த வகையிலும் நியாயப்படுத்திட முடியாத கடுமையான வார்த்தைகளாகும்.

சிந்தித்துப் பாருங்கள்!

பயங்கரவாதிகளை வார்த்தைகளால் தாக்குவதாகக் கருதி, பயங்கரவாதச் செயலுக்கு துளியும் சம்பந்தமில்லாத பயங்கரவாதியின் தாயைப் பழிக்கிறீர்கள். அவர் ஒழுக்கமுள்ள நல்ல பெண்மணியாக இருந்திருக்கலாம் - இருக்கலாம். இதையறியாமல் ஒரு உத்தமியின் மீது அவதூறு சொல்லியக் குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.

தலைப்பின் சொல்லுக்கு அவர் தகுதியில்லாதவராக இருந்தால் சொன்ன வார்த்தைகள் சொல்லியவரை நோக்கித் திரும்பி விடும்.

வேண்டாம், இது போன்ற தரக்குறைவான வார்த்தைகள் நமக்கு அழகல்ல!

அன்புடன்,
அபூ முஹை

அரவிந்தன் நீலகண்டன் said...

வருத்தமான விசயம்தான். உங்கள் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். ஈராக் அருங்கலையக கொள்ளை காலம் காலமாக மானுடம் வருத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி. பொதுவாக ஈராக்கில் நடப்பது எவருக்கும் மனவருத்தத்தையே தரும். விரைவில் அங்கு எல்லா இன மக்களுக்கு நீதி கிடைக்கிற அமைதி திரும்ப ஆசைப்படுவதை தவிர ஏதும் செய்வதற்கில்லை.

அரவிந்தன் நீலகண்டன் said...

சீனு, இந்த விசயத்தில் நண்பன் காட்டியிருக்கும் கோபமும் மனவருத்தமும் எந்த மனிதனுக்கும் வர வேண்டியதுதான். இந்த பதிவை படிக்கையில் அந்த கடைவீதியை பார்க்கையில் மனது நெகிழ்ந்துதான் போனது.

நண்பன் said...

அபூமுஹை, நாகூர் இஸ்மாயில், சீனு இவர்களின் விருப்பம் போல தலைப்பை மாற்றிவிட்டேன்.

அறிவுறுத்திய நண்பர்களுக்கு நன்றி.

லொடுக்கு said...

உங்கள் கண்டனத்தில் நானும் சேர்ந்து கொள்கிறேன். :(

நல்லடியார் said...

நண்பன்,

இதுவரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஹோலோகாஸ்டில் ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். எஞ்சி இருப்பவர்கள் வரலாற்றைப் படித்து முன்னேறி விடக்கூடாது என்ற பல்நோக்குத் திட்டத்தினால் நூலகவீதியும் எரிக்கப் பட்டிருக்கலாம்.

தார்த்தாரியப் படையெடுப்பின் போது பாக்தாத் நூலகத்திலிருந்த அறிவுப் பொக்கிஷங்கள் எரிக்கப்பட்டு திக்ரித் நதி கருமையாக ஓடிய வரலாறு, மீண்டும் அமெரிக்க கைக்கூலி அரசின் கையாலாகாத்தனத்தால் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.

nagoreismail said...

அன்பு நண்பன் அவர்களுக்கு, தலைப்பை மாற்றியதற்கு நன்றி, - நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் - யார் செய்திருந்தாலும்.

காலம்காலமாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பவர்கள் செய்யும் காரியங்களில் மிக முக்கியமானது அவர்களின் அறிவுக்கருவூலத்தை அழித்தொழிப்பதாகும்.

800 ஆண்டு காலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயின் வரலாற்றில் அவர்களை இல்லாமல் அழித்தொழித்த பொழுது அங்கிருந்த இரு பெரும் நதிகளில் ஒன்று முஸ்லிம்களின் இரத்தத்தால் சிவப்பு நிறத்திலும் மற்றொன்று கருமை நிறத்திலும் ஓடியதாக கூறும் வரலாற்று நிகழ்வுகள் தற்போது கண்முன் நிழலாடுவதை தவிர்க்க இயலவில்லை.

உலகின் அனைத்து துறை வளர்ச்சிகளுக்கும் முன்னோடியான முஸ்லிம்களின் அறிவுக் கருவூலத்தை தீக்கிரையாக்கி அதனை நதியில் கரைத்து விட்டதனால் ஒரு நதியே கருமை நிறமாக ஓடும் அளவிற்கு அன்று அறிவின் கருவூலம் முஸ்லிம்களின் கைகளில் இருந்தது.
இதனையும் அதன் தொடர்ச்சியாகவே காணமுடிகிறது.

இத்தகைய படுபாதக செயலை செய்பவர்கள் நிச்சயம் மனித சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுவர்.

இறை நேசன்.

Unknown said...

//Murder the intellectual capability of the country.//
குரூர புத்தி கொண்ட கொடியவர்கள்.

சீனு said...

//அபூமுஹை, நாகூர் இஸ்மாயில், சீனு இவர்களின் விருப்பம் போல தலைப்பை மாற்றிவிட்டேன்.//

நன்றி. "கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் பழைய தலைப்பு தான் வரும். அது தமிழ்மணத்தின் enhancement-ல் செய்ய வேண்டியது. இருந்தாலும் இங்கு மாற்றியதற்கு மிக்க நன்றி.

நண்பன் said...

அபூமுஹை

// பயங்கரவாதிகளை வார்த்தைகளால் தாக்குவதாகக் கருதி, பயங்கரவாதச் செயலுக்கு துளியும் சம்பந்தமில்லாத பயங்கரவாதியின் தாயைப் பழிக்கிறீர்கள். அவர் ஒழுக்கமுள்ள நல்ல பெண்மணியாக இருந்திருக்கலாம் - இருக்கலாம். இதையறியாமல் ஒரு உத்தமியின் மீது அவதூறு சொல்லியக் குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.//

நல்ல குட்டு.

பெண்களை இழிவு படுத்துவதை கண்டிப்பவன். அவர்களது உரிமைகளை ஒப்புக் கொண்டபடி கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், கொஞ்சம் அதிகமாகவே கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துபவன் நான்.

சறுக்கல் தான். என்றாலும் உங்கள் அன்பான குட்டில் திருத்திக் கொண்டேன்.

நாகூர் இஸ்மாயில்,

// அன்பு நண்பன் அவர்களுக்கு, தலைப்பை மாற்றியதற்கு நன்றி, - நாகூர் இஸ்மாயில் //

என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், மரியாதைக்கும் மிக்க நன்றி. இது போன்ற நண்பர்களால் ஒரு மனிதன் நல்வழியில் நடக்க முடியும் என்பது உண்மை.

சீனு,

//நன்றி. "கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் பழைய தலைப்பு தான் வரும். அது தமிழ்மணத்தின் enhancement-ல் செய்ய வேண்டியது. இருந்தாலும் இங்கு மாற்றியதற்கு மிக்க நன்றி.//

சீனு, எல்லாம் ஒரு உணர்ச்சி வேகம் தான். கடந்த மூன்று வருடங்களில் மட்டும் நான் வாங்கிக் குவித்த புத்தகங்கள் ஆயிரத்தை தொட்டு விட்டது. இது போல் ஊரிலும் ஒரு பங்கு புத்தகங்கள் உண்டு. எப்பொழுதும், குழந்தைகளுக்குப் பரிசளிக்க நான் புத்தகங்களைத் தான் தேர்ந்தெடுப்பேன்.

நான் வாங்கிய புத்தகங்களில், pulp novels என்று சொல்லப்படும் புத்தகங்கள் ஒன்று கூட கிடையாது. எல்லாமே, அறிவையும் சிந்தனையும் தூண்டக் கூடிய புத்தகங்கள். யார் வீட்டிற்குச் சென்றாலும், முதலில் அவர்கள் புத்தகங்கள் வைத்திருக்கிறார்களா என்பதைத் தான் பார்ப்பேன். எந்த மாதிரி புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தான் நோட்டமிடுவேன்.

நன்முறையில் எழுதப்பட்ட புத்தகங்கள் மதங்களைத் தாண்டியவை.

ஆயிரம் வருடங்களாக இயங்கிய ஒரு புத்தக கடை வீதி வெடிகுண்டால் தகர்க்கப்பட்டது என்னும் பொழுது, அது எனது சொந்த நூலகமே தகர்ந்து போனது போன்று ஒரு உணர்வைத் தந்ததால் தான்.

கடுமையான வார்த்தைகளைத் தேடினேன். கிடைத்ததைப் போட்டு விட்டேன்.

தவறு திருத்தப்பட உங்கள் மூவரின் அறிவுறுத்தலும் தான் காரணம்,

அனைவருக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நண்பன்.

நண்பன் said...

நல்லடியார்

//தார்த்தாரியப் படையெடுப்பின் போது பாக்தாத் நூலகத்திலிருந்த அறிவுப் பொக்கிஷங்கள் எரிக்கப்பட்டு திக்ரித் நதி கருமையாக ஓடிய வரலாறு, மீண்டும் அமெரிக்க கைக்கூலி அரசின் கையாலாகாத்தனத்தால் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை//

இறைநேசன்,

//800 ஆண்டு காலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயின் வரலாற்றில் அவர்களை இல்லாமல் அழித்தொழித்த பொழுது அங்கிருந்த இரு பெரும் நதிகளில் ஒன்று முஸ்லிம்களின் இரத்தத்தால் சிவப்பு நிறத்திலும் மற்றொன்று கருமை நிறத்திலும் ஓடியதாக கூறும் வரலாற்று நிகழ்வுகள் தற்போது கண்முன் நிழலாடுவதை தவிர்க்க இயலவில்லை.//

சுல்தான்

//Murder the intellectual capability of the country.//
குரூர புத்தி கொண்ட கொடியவர்கள்.

இஸ்லாமியர்களைக் குறை கூறுபவர்கள், வரலாற்றை முழுவதுமாக வாசிக்காதவர்கள். அரைகுறை அறிவுடன், வரலாறு பற்றி எழுதுவதே வழக்கமாக்கிக் கொண்டவர்கள் அறிய மாட்டார்கள் - இஸ்லாம் தந்த உன்னதங்களை.

ஐரோப்பா முழுவதும், யூதர்களை ஓடஓட விரட்டிக் கொண்டிருந்த பொழுது, அவர்களுக்கு அடைக்கலம் தந்து மரியாதை செய்தவர்கள் - ஸ்பெய்ன் நாட்டை ஆண்ட இஸ்லாமியர்கள் தான். இதை என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா-வில் பதிவு செய்திருக்கிறார்கள். அதுபோல இஸ்லாமியர்கள் உருவாக்கித் தந்த கணித அறிவு ஐரோப்பாவிற்கு அறிமுகம் ஆனதும் ஸ்பெய்ன் வழியாகத் தான். ஆனாலும் இஸ்லாமின் அடிச்சுவடுகள் குரூரமாக அழிக்கப்பட்டன.

இன்று 'நாகரீகம்' பற்றி பேசுபவர்கள் இதையெல்லாம் மறந்து விட்டிருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு அது தேவையில்லை. ஆனால், நமக்கு அந்த வரலாறுகள் அவசியம் தேவை.

இத்தகைய வரலாறுகள் புத்தகங்கள் வழியாகத் தான் பின் வரும் தலைமுறைகளுக்குச் சென்று அடைய வேண்டும். கணினி, படச்சுருள்கள் என்று எத்தனை வழிகள் வந்தாலும், புத்தகங்கள் தரும் நெருக்கத்தையும் உறவையும் வேறெதிலும் காண முடியாது.

இவர்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டவர்கள் ஆகிவிட்டார்கள்.

நண்பன் said...

அரவிந்தன் நீலகண்டன் said...

//சீனு, இந்த விசயத்தில் நண்பன் காட்டியிருக்கும் கோபமும் மனவருத்தமும் எந்த மனிதனுக்கும் வர வேண்டியதுதான். இந்த பதிவை படிக்கையில் அந்த கடைவீதியை பார்க்கையில் மனது நெகிழ்ந்துதான் போனது.//

அர்விந்த்,

உங்களுடைய இரண்டு பின்னூட்டங்களும், ஜிமெய்ல் வழியாக வராமல் டாஷ்போர்ட்டில் சிக்கிக் கொண்டது. அதனால் பிரசுரிக்கத் தாமதம்.

புத்தக அபிமானிகளை நிச்சயமாக வருத்தமடைய செய்யும், இந்தச் செயல்.

Sundar Padmanaban said...

தீவிரவாதிகளுக்கு யார் மீதும் எதன் மீதும் தயவோ தாட்சண்யமோ கிடையாது.

//புத்தகங்களைத் தேடுவது, இறைவனைத் தேடித் திரியும் பயணம் போல இன்பமான அனுபவம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்//

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் இவர்களுக்கு குண்டு போட்டு நாசம் விளைவிப்பது இறைவனைத் தேடும் பயணமாக அமைந்துவிட்டது துரதிர்ஷ்டம்.

இறைவன் சீக்கிரம் இந்தக் கேவலச் செயல் புரிந்தவர்களை அழைத்துக் கொள்ளட்டும்.

பரிதாபமான நிலையில் இருக்கும் அந்த நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் விடிவு பிறக்கட்டும்.

தலைப்பை மாற்றியதற்கு நன்றி. என்னைப் பொருத்தவரை 'தாசியின் மகன்' என்ற பதத்தைக் 'கெட்ட வார்த்தை'யாகப் பாவிப்பதே கேடுகெட்ட ஆணாதிக்க வக்கிரச் செயல்.

பதிவுக்கு நன்றி.

Anonymous said...

///இதுவரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஹோலோகாஸ்டில் ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். எஞ்சி இருப்பவர்கள் வரலாற்றைப் படித்து முன்னேறி விடக்கூடாது என்ற பல்நோக்குத் திட்டத்தினால் நூலகவீதியும் எரிக்கப் பட்டிருக்கலாம். ///

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது ஈழத்தமிழர்களை எந்தளவுக்கு ஈழத்தமிழர்களின் மனதைப் பாதித்தது என்பதை அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நல்லடியாரின் பின்னூட்டத்தை வாசிக்கும் போது அமெரிக்கப் படைகள் திட்டமிட்டுப் புத்தகங்கள் விற்கப்படும் சாலையைத் தாக்கியது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

அந்தக் குழப்பத்தைப் போக்க 'நண்பர்' அவர்கள் இந்தச் செய்தியின் link அல்லது URL ஐ தந்தாலென்ன. அவர் தந்துள்ள படத்திலுள்ள குண்டுகளால் வெடிபட்ட காரின் பக்கத்தில் யாரோ லெபனானின் கொடியைப் பிடித்திருக்கிறார்கள். ஈராக்கில் எப்படி லெபனானின் கொடி? இந்தச் சம்பவம் லெபனானில் நடந்தததா அல்லது ஈராக்கிலா.

இந்தச் செய்தியின் மூலத்தை நண்பர் அவர்கள் வெளியிடுவாரென நம்புகிறேன்.

Please give us the source of this news.

ஆரூரன்

நண்பன் said...

http://www.7days.ae/en/2007/03/06/%e2%80%98killing-the-books%e2%80%99.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...
This comment has been removed by the author.
podakkudian said...

உங்கள் கோபம் மிக நியாமானது.உங்களோடு சேர்ந்து எனது எதிர்ப்பையும் தெரிவித்து கொள்கிறேன்.

நண்பன் said...

வற்றாயிருப்பு சுந்தர்,

//பரிதாபமான நிலையில் இருக்கும் அந்த நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் விடிவு பிறக்கட்டும்.//

இந்த பிரார்த்தனை ஒன்றே, இனி அந்த மக்களைக் காப்பாற்ற முடியும் சுந்தர்.

// podakkudian said...
உங்கள் கோபம் மிக நியாமானது.உங்களோடு சேர்ந்து எனது எதிர்ப்பையும் தெரிவித்து கொள்கிறேன். //

நன்றி podakkudian.

சீனு said...

//சீனு, இந்த விசயத்தில் நண்பன் காட்டியிருக்கும் கோபமும் மனவருத்தமும் எந்த மனிதனுக்கும் வர வேண்டியதுதான்.//

கோபமும் வருத்தமும் வரும், வர வேண்டியதுதான். இவை போன்ற உணர்ச்சிகள் இருந்தால் தான் நாமெல்லாம் நார்மல் மணிதர்கள். ஆனால், சபை ஏற்ற தேவை இல்லாத வார்த்தைகள் தேவை இல்லை என்பது என் கருத்து.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்