Match Fixing?
ஒரு குழுவாக ஆடும் பொழுது, தன் குழுவை அல்லது தன் ஆடும் நாட்டை அல்லது க்ளப்பை ஏமாற்றி விட்டு, சூதாடிகளுக்காக தங்கள் அணியின் வெற்றி வாய்ப்பை தாரை வார்ப்பது அல்லது தங்கள் அணியின் திட்ட நுணுக்கங்களை வெளியிடும் துரோகத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், தனக்காக மட்டுமே ஆடும் ஒரு ஆட்டத்தில் ஒருவர் தனக்குத் தானே துரோகம் இழைத்துக் கொள்ள முடியுமா?
முடியும் என்கின்றனர்.
டென்னிஸ் ஆட்டத்தில் தான்.
2003 தொடங்கி கடந்த நான்கு வருடங்களில் 138 டென்னிஸ் ஆட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டங்களாக இருக்கக் கூடும் என்ற தகவலை The Sunday Telegraph பத்திரிக்கை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அந்தப் பத்திரிக்கை ஆட்ட நிர்ணயங்களைப் பற்றிய தகவலைத் தந்த பொழுது, எவரும் நம்பவில்லை. இந்தத் தகவலை வெளியிடுவதன் மூலம், டென்னிஸ் ஆட்டத்திற்கு மோசமான சேவை செய்த பாவத்திற்கு ஆளாகி விடும் உங்கள் பத்திரிக்கை என்று வேறு சொல்லிவிட்டனர்.
இப்பொழுது எல்லோரும் நம்பத் தொடங்கி இருக்கின்றனர் இந்தத் தகவலை. ஒரு புற்று நோயாக இது டென்னிஸ் ஆட்டக்காரர்களிடையே கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று அறியத் தொடங்கி இருக்கின்றனர். டெலிகிராஃப் பத்திரிக்கை தயாரித்த அறிக்கை வெறுமனே சாடைமாடையாக அல்லாது, பெயரைக் குறிப்பிட்டு தகவல் தருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த இது சிறிது காலத்திலே தன்னைப் போல் மடிந்துவிடும் என்றே பல அப்பாவிகள் நம்பினர். ஆனால் வருடா வருடம் இது மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே போகிறதே தவிர, தெளிவதாகத் தெரியவில்லை.
சூதாட்டக் கூட்டணி எப்படி தங்கள் 'பெட்டிங்' தொழிலைச் செய்கின்றனர். எப்படி, ஆட்டங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற உட்தகவலையும் குறிப்பிடுகிறது. ஆனால், ஒரு ஆட்டக்காரருடனோ அல்லது அவரது பயிற்சியாளர் அல்லது அலுவலர் ஆகியவருடன் இணைத்து நிரூபணம் செய்வது சிரமமான காரியம்.
கடந்த மாதம், டென்னிஸ் ஆட்டங்களை நிர்வகிக்கும் Association of Tennis Professionals (ATP) பகிரங்கமாக தங்கள் தகவல்களை வெளியிட வேண்டிய தருணம் வந்தது. Betfair என்ற பந்தய நிறுவனம் தனது அத்தனை பந்தயங்களையும் நிறுத்தி வைத்தது - உலகத் தர வரிசையில் 4வது இடத்தில் இருந்த ரஷ்யரான நிக்கோலெய் தாவ்டென்கோ என்பவருக்கும் அர்ஜெண்டைன் ஆட்டக்காரர் மார்டின் வாஸ்ஸலோ ஆர்க்யுல்லோ என்பவருக்கும் இடையில் போலந்தில் நடைபெறவிருந்த ஆட்டத்தின் 'பெட்டிங் போக்கு' ஏறுக்கு மாறாக இருப்பதைக் கவனித்து Betfair என்ற அந்த நிறுவனம், உடன் அந்தப் பெட்டிங்கை நிறுத்தி வைத்தது. அதைத் தொடர்ந்து ATPயும் பகிரங்கமாக அறிக்கை வெளியிடும் நிர்ப்பந்தம் தோன்றியது. ரஷ்யர் வன்மையாக மறுத்திருக்கிறார் - காயத்தினால் ஆட்டத்திலிருந்து விலகிக் கொண்டேன் என்றார். அப்பொழுது அவர் தோற்றுக் கொண்டிருந்தார்.
சில ஆட்டக்காரர்களும், தங்களுக்கும் அழைப்பு வந்ததாக பகிரங்கமாக அறிவிப்பு செய்திருக்கின்றனர். பெல்ஜிய ஆட்டக்காரர், கில்லெஸ் எல்ஸெனீர் தனக்கு 70000 பவுண்டுகள் தருவதாக வந்த அழைப்பை மறுத்ததாக சொல்லி இருக்கிறார். இது விம்பிள்டன் போட்டியின் போது. இன்னமும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த மாதம் யு.எஸ் ஓபன் டென்னீஸின் இறுதியாட்டத்தில் தோற்ற நோவக் யோகோவிக் (Novak Djokovic) தனக்கு 110,000 பவுண்டுகள் தருவதாக வந்த அழைப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்திருக்கிறார். பீட்டர்ஸ்பெர்க் போட்டியின் போது முதல் சுற்றில் தோற்று வெளியேறுவதாக இருந்தால் என்று தெரிவித்திருக்கிறார். அவர் அந்தப் போட்டியில் பங்கேற்கவே இல்லை.
தன் சக ஆட்டக்காரர்களுடன் பேசுவதிலிருந்து ஆட்டங்கள் நிர்ணயத்தல் டென்னிஸ் உலகில் நிகழவே செய்கிறது என இங்கிலீஷ்காரரான டிம் ஹென்மான் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தகவல்களையெல்லாம் திரட்டிய டெலிகிராஃப் பத்திரிக்கையே 138 ஆட்டங்கள் என்பதைக் கண்டு மலைத்து போய் இருக்கிறது. இது வரையிலும் ஒருவர் கூட ATPயினால் கண்டுபிடிக்கப்படவில்லை - தண்டிக்கப்படவில்லை கடந்த நான்கு வருடங்களில் என்பதிலிருந்தே ஊழலை நிரூபிப்பது எத்தனை சிரமமான காரியம் என தெரிந்து கொள்ளலாம். இந்தச் செயலின் முழு பரிமாணத்தையுமே இப்பொழுது தான் ATP உணரத்தொடங்கி இருக்கிறது. நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது - போதுமான அளவில் இல்லையென்றாலும். தாவ்டென்கோ - மார்டின் வாஸ்ஸலோ ஆர்க்யுல்லோ ஆட்டத்தைப் பற்றி விசாரிக்க ஸ்காட்லாந்த் யார்டின் இரண்டு அதிகாரிகளை நியமித்திருக்கிறது. அவர்களின் பணி அந்த ஆட்டத்தைப் பற்றி விசாரிப்பது மட்டுமே.
இதை கிரிக்கெட் ஆட்டங்களுடன் ஒப்பிட்டால் விளங்கிக் கொள்ள முடியும் - இந்த முயற்சி எத்தனை சிறியதென்று. கிரிக்கெட்டில் ஒன்பது அதிகாரிகள் முழுநேர அளவில் ஊழல் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்காக செலவிடப்படும் தொகையின் அளவு - 1 மில்லியன் டாலர் வருடத்திற்கு.
'பெட்டிங்' முற்றிலும் தவிர்க்கப்பட முடியாததாக இருக்கிறது. எந்த ஒரு ஆட்டத்திலும் அது பங்கு வகிக்கத் தான் போகிறது. ரசிகர்களை அழைத்து வருவதுடன், வருவாயையும் கொண்டு வருகிறது. முறைப்படி அதை அனுமதிப்பதே சரியாக இருக்கும். ஆனால் ஊழல் நிகழாமல் பார்த்துக் கொள்வதில் தான் எல்லாம் இருக்கிறது.
இதை எப்படி செய்வது - ATP பிற டென்னிஸ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதுபோல் British Horseracing Authorityயினுடனும். முழுநேர விசாரணை அதிகாரிகள் நியமிப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. என்றாலும் எல்லோரும் நம்புவது, தனி நபராக தனக்கென விளையாடுபவர்கள் தங்கள் பொறுப்பையுணர்ந்து விளையாடுவார்கள் என்றே.
இனி வரும் காலங்களில் Match fixing என்று செய்திகள் வந்தால், அறிந்து கொள்ளுங்கள் - அது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி மட்டுமே பேசப்படும் ஊழலாக இருக்காது. பிற விளையாட்டுகளைப் பற்றியும் கூட இருக்கலாம்.
8 comments:
சீக்கிரம் காசு சேர்க்க எல்லாருமே வழி தேடுகிற காலமாயிடுச்சு. என்ன சொல்றது. சின்ன சின்ன விஷயங்கள் துவங்கி, குடும்பம், ஆன்மிகம், இலக்கியம் என எல்லா துறைகளிலும் காசுதான் முதன்மம வகிக்கிறது.
பிறரையில்லையென்றாலும் நம்மை நாம் கட்டுக்குள் வைக்க முயலவேண்டும்.
நல்ல பதிவ்ய் நண்பரே
நன்றி சிறில் அலெக்ஸ்,
என்ன தான் காசுக்கு ஆசைப்பட்டாலும், தோற்பதற்கு ஒருவர் ஒப்புக் கொள்கிறார் என்பதே வியப்பாக இருக்கிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொருவரும் எத்தனை போராடுகிறார்கள்?
இவர்கள் மட்டும் தோற்றுக் கொண்டே ஜெயிக்க முயற்சிக்கிறார்கள் போலிருக்கிறது?
என்ன செய்வது!!!
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் நன்பரே !! விளையாட்டில் காசு புகுந்து விளையாடுகிறது. என்ன செய்ய ?
ஒருவர் தனக்காக விளையாடினாலும் அவர் நாட்டின் பெயரையும் கூடவே குறிக்கின்றனர். அவர் தனக்காக தோற்றாலும் தன் நாட்டுக்கு இழுக்கு தேடித்தந்தார் என்றாகும். விளையாட்டும் விளையாட்டாய் இல்லாமல் வியாபாரமாகவும் நாட்டுப்பற்றை அளக்கும் கருவியாகவும் என்னும் என்னவெல்லாமுமாக மாறியதால் வந்த வினையென்று சொல்லலாம்.
சீனா,
மிக்க நன்றி,
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்புடன்
நண்பன்
சுல்தான்,
விளையாட்டை, விளையாட்டுக்காகப் பார்ப்பதை விட, அதை தேசபக்தி மீட்டராக பயன்படுத்தியதால் வரும் வினை என்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.
முடிவுகளை முன் கூட்டியே தீர்மானிக்க இயலாத எல்லா நிகழ்வுகளும், சூதாட்டத்திற்கு உட்படுத்தப்படுகிறது. குதிரைப் பந்தயம் போன்றவை தேசபக்தியோடு சம்பந்தப்படுத்துவதில்லை. என்றாலும் அங்கேயும் சூதாட்டங்கள் நிகழத் தான் செய்கிறது.
இங்கு பிரச்சினையே, சூதாட்டக் காய்களும் சூதாடிகளுடன் சேர்ந்து கொள்வது பற்றியே...
உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்,
அன்புடன்
நண்பன்
அவர்கள் என்ன 'நான் சூதாடவே மாட்டேன்' என்று உருதிமொழியா எடுக்கிறார்கள். '' pulp fiction மாதிரி க்காக வாங்கிய பணத்தை தன் மீதே வைத்து அதை பல மடங்கு பெருக்கினால், வெற்றி பெற்று cup வாங்குவதை விட மிக அதிக பணம் கிடைக்கும் !!!!
களப்பிரர்,
சூதாடுவது மோசமல்ல. சூதாட்டம் என்பது ஒரு அளந்தெடுக்கப்பட்ட சாகசமாக இருக்கும் வரையிலும் அதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், மோசடி செய்வது சூதாட்டத்தில் கூட அனுமதிக்க முடியாது தானே? இந்த விளையாட்டு வீரர்கள் இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவது, நேர்மைக்குப் புறம்பானதல்லவா?
அதற்காகத் தான் இந்தக் கட்டுரையே!!!
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்....
Post a Comment