"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, December 25, 2007

வணக்கமும் வந்தே மாதரமும்

நல்லடியாரின் வணக்கம் வணக்கம் வணக்கம் பதிவில் பின்னூட்டமிட்டது.

வணக்கம் என்ற சொல்லின் பயன்பாட்டை, இத்தனை தூரத்திற்கு ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள் என்பதை நினைக்கும் பொழுது, வியப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு செயலையும், எந்த நோக்கோடு செய்யப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டே, அந்தச் செயல் அங்கீகரிக்கப்படுகிறது. எந்த உள்நோக்கமுமின்றி, இயல்பாக ஒரு மொழியைப் பயன்படுத்துவதால், எந்தப் பாதகமும் நிகழ்ந்து விடுவதில்லை.

நோன்பு வைப்பவர்கள், அதற்கான 'நிய்யத்' செய்து கொள்ள வேண்டும். அதாவது தனது நோக்கம் குறித்த உறுதிபாடு. இவ்வாறு 'நிய்யத்' செய்யாமல், சும்மா பட்டினி கிடப்பதெல்லாம், நோன்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதே போல், தொழுகையின் போது, 'இந்தத் தொழுகையை தொழுகிறேன்' என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அது தொழுகையாக ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆக, இறைவனை வணங்கும் பொழுது, 'நான் உன்னை வணங்குகிறேன்' என்ற உறுதியில்லாதவற்றை இறைவணக்கமாக ஏற்பதில்லை என்ற கோட்பாட்டை இஸ்லாம் உருவாக்கியதே இணைவைத்தல் என்ற பாவத்தை செய்து விட கூடாது என்ற காரணத்தால் தான்.

இணைவைத்தல் நிகழ்வதற்கு - 'நான் இன்னதை வணங்குகிறேன் - இறைஞ்சுகிறேன்' என்ற 'நிய்யத்'தை செய்து கொண்டாக வேண்டும். இன்றும் பலர் தர்காவில் அடக்கமாகி இருக்கும் அறிஞர்களிடத்தில் 'நேர்ச்சையாக' வேண்டிக் கொள்வார்கள் - எனக்கு நீ இதைக் கொடுத்தால், நான் உன் தர்காவில் வந்து இன்னின்ன செய்கிறேன் என்று. அதாவது ஒரு உறுதிபாடை உண்டாக்கிக் கொள்கிறார்கள். 'நிய்யத்' செய்கிறார்கள். அதுவே தவறாகிறது. ஆனால், எந்த ஒரு 'நிய்யத்'துமின்றி, ஒரு சுற்றுலா போன்று அங்கு சென்று வருவதற்கு தடையேது?

இங்கு 'வணக்கம்' என்று சொல்வது, எதிரில் இருப்பவரை நான் இறைவனாகக் கருதி வணங்குகிறேன் என்பதாகக் கருதக் கூடாது. மரியாதை செலுத்துவதைக் குறிக்கும் ஒரு மொழியின் சொல். அந்த சொல்லைப் பயன்படுத்தினால், அது இறைவனுக்கு இணைவைத்ததாகிவிடும் என்பது மூளையின் சிந்தனைச் ஜவ்வுகளை வலுக்கட்டாயமாக இழுத்து சிதைப்பதாகும் - வதைப்பதாகும். சிந்தனையாகாது.

வந்தே மாதரம் என்ற பாடலில் மண்ணின் பெருமையைத் தான் சொல்வதாகக் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, அதை இறைவனாக உயர்த்தி, மனதில் 'நிய்யத்' செய்து கொண்டு வணங்குவதாகக் கருதக் கூடாது. இத்தகைய மனத் தடைகளைக் களைவதில் நாம் முனைப்பு காட்ட வேண்டும். மொழியைக் கையாள்கையில், அநாவசியமாக நோக்கங்கள் கற்பித்துக் கொண்டு, தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக் கொண்டு, தனித்தீவாக ஆவது சரியல்ல என்பது எனது கருத்து. இதை நான் எங்கும் படித்துச் சொல்லவில்லை. எனது சிந்தனையாகத் தான் முன்வைக்கிறேன்.

மொழிகளின் பயன்பாடு குறித்து இத்தனை மனத்தடைகளை எழுப்பிக் கொண்டது நாம் தானே தவிர, மொழிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. மொழி பெயர்த்தவர்கள் அப்படி செய்திருக்கிறார்கள். அப்படியும் மனதில் சஞ்சலமிருந்தால், அழகப்பன் சொல்லியது போல, வணக்கத்திற்குரியவன் என்பதை வழிபடுதலுக்குரியவன் என்ற சரியான பதத்தை இனி நாம் கையாள வேண்டுமே தவிர, 'வணக்கம்' என்று சொல்ல மாட்டேன் என்று விலகி நிற்பது சரியல்ல.

நாம் பேசும் தாய்மொழியைத் தவறாக அர்த்தம் செய்து கொண்டு, அதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக, நாம் இருவருக்குமே அந்நியமான மொழியில், 'அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்லிக் கொள்வோம் என்று அழைப்பு விடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதை அறிந்த இரு முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும். ஆனால், அரபி மொழி அறியாத ஒரு பிற மதத்தினருக்கு அவ்வாறு செய்யலாமே என்று பரிந்துரைப்பது தவறு.

'நோக்கங்கள்' தெளிவாக இருக்கும் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு பொழுதும் நிகழாது - ஒரு மொழியைக் கையாள்வதால்.

வணக்கம் என்று சொல்வதினாலும், வந்தே மாதரம் என்று பாடுவதினாலும் நாம் இறைவனுக்கு எந்த விதத்திலும் குற்றமிழைத்தவர்களாக மாட்டோம்.

As long as the intentions are clear, everything is fine.

இதை வாசித்து கருத்து சொன்ன நண்பர் ஒருவர் சொன்னார் - வணக்கம் என்பது தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் எழுந்த முகமன் அல்ல. தமிழர் பண்பாட்டின் வழியாக முகமன் சொல்வது "வாழ்க...." என்ற வாழ்த்துதலுடன் தான். எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். (வாழ்க வாழ்க என்பது போல..)

இந்த வணக்கம் என்பது ஆர்யர்கள் தமிழர்களிடையே புகுத்தியது. அடிமைப்படுதலைக் குறிக்கும் வகையில் வணக்கம் என்பதை புகுத்தி விட்டனர். பல பண்பாட்டு மயக்கங்களில் இதுவும் ஒன்று. இதை கைவிட வேண்டும். அதற்குப் பதில், 'வாழ்க..' என்று வரவேற்பதுவும், பதில் மொழியாக 'வாழ்க வாழ்க..' என்றும் கூறிக் கொள்வது, நம்மை அடிமைச் சிந்தனையிலிருந்து விடுவிக்கும் என்று சொன்னார். (என்ன ஒன்று, வாழ்க வாழ்க என்று தகுதியற்ற தலைவர்களையெல்லாம் வாழ்த்துக் கொண்டிருக்கும் பண்பாட்டை நினைத்தால் தான், அந்த வார்த்தையை நடைமுறையில் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் பலமாக எழுகிறது. தகுதியற்றவர்களை கூட்டம் போட்டு, கோஷம் போட்டு, வாழ்க வாழ்க என்று கூவுவதை விட்டு விட்டால், வாழ்க என்பது வணக்கம் என்ற சொல்லிற்கு நல்ல மாற்றாக அமையக் கூடும்...)

ஆக, இனி, நாம் வாழ்க என்று சொல்லியே ஒருவரை ஒருவர் வரவேற்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.

என்றாலும், 'இணைவைத்தலை' அதன் நோக்கம் கருதியே இணைவைத்தலா அல்லது இல்லையா என்று வரையறுக்க வேண்டுமென்பதைக் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நண்பர்கள் அனைவரும் வாழ்க என்று வாழ்த்தப் பழகும் வரையிலும் வணக்கத்தைத் தாராளாமாகச் சொல்லலாம்.

22 comments:

nagoreismail said...

தமிழர் பண்பாட்டில் முகமன் கூற பயன்படுத்தும் சொல் 'வாழி..' என்பதாக ஈரோடு தமிழன்பன் அவர்களது உரையில் கூற கேட்டிருக்கிறேன். நாகூர் இஜட்.ஜபருல்லாஹ் அவர்கள் ஒரு முறை சொன்னார்கள், 'தலை தரையில் பட்டாலே சஜ்தா(சிர வணக்கம்) என்றால் எவரும் குப்புற படுக்கவே முடியாது, தவிர தவறி விழுந்து விடுகிறான் ஒருவன், நெற்றி தரையில் பட்டு விடுகிறது, எதிரே ஒரு சிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம், அவன் சிலைக்கு சஜ்தா செய்து விட்டான் என்று அர்த்தமாகுமா?' என்று கேட்டார்கள். உடலும் உள்ளமும் கலக்காத எந்த ஒரு செயலையும் தன் அடியாரிடமிருந்து இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை என்ற ஹதீஸை எனது ஆசான் நாகூர் ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் 'இறை வணக்கம்' என்ற நூலில் படித்ததும் நினைவிற்கு வருகிறது. - நாகூர் இஸ்மாயில்

Unknown said...

நண்பன்,
மதம் தாண்டி இந்தப் பழக்கவழக்கங்களை இறக்குமதி அரசியல் என்றே சொல்வேன்.

இறைவன்(அல்லது தூதர்) என்று ஒருவனை விரும்பி ஏற்றுக் கொண்டால், அந்த இறைவன்(அல்லது தூதர்) எங்கே முதன் முதலில் அறியப்பட்டானோ அந்த மண் சார்ந்த பழக்கவழக்கங்களையும் பூசிக்கொள்வதுதான் மத அரசியல்.

இது எல்லா மதங்களிலும் உள்ளது. ஒரு மொழி அல்லது சில வார்த்தைகளை புனிதமாகக் கருத்துவது ஒரு குழு அரசியல் அல்லது அடையாளம்.

மனைவி என்பவள் பெண் என்பதால், மகளைப் பெண் என்று சொல்லமாட்டேன் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ, அது போன்றதே மதங்களின் மொழி அரசியல்.

***

பிறைநதிபுரத்தான் said...

நன்பனுக்கு!
வணக்கம் பற்றிய தங்களின் தெளிவான - தீர்க்கமான கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

அடுத்து, இந்திய இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாட மறுப்பதற்கு உண்மையான காரணம் - அந்தப்பாடலின் பின்னனியான பக்கிம் சந்திர சட்டர்ஜியின் 'ஆனந்த் மட்' நாவலை படித்தால் விளங்கும். ஆனந்த் மட் நாவல்- வந்தே மாதரம் பாடல் - பற்றிய சுருக்கமான என்னுடைய கட்டுரையின் இணைப்பை தங்களுக்காக கீழே தந்துள்ளேன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80406108&edition_id=20040610&format=html

நல்லடியார் said...

நண்பன் ஷாஜஹான்,

//'நோக்கங்கள்' தெளிவாக இருக்கும் பொழுது, இறைவனுக்கு இணை வைத்தல் ஒரு பொழுதும் நிகழாது - ஒரு மொழியைக் கையாள்வதால். //

//இறைவனை வணங்கும் பொழுது, 'நான் உன்னை வணங்குகிறேன்' என்ற உறுதியில்லாதவற்றை இறைவணக்கமாக ஏற்பதில்லை என்ற கோட்பாட்டை இஸ்லாம் உருவாக்கியதே இணைவைத்தல் என்ற பாவத்தை செய்து விட கூடாது என்ற காரணத்தால் தான். //

இணை வைத்தல் குறித்த உங்களின் தெளிவு வியக்க வைக்கிறது. மனபூர்வமாக (நிய்யத்துடன்) செய்யப்படாத எந்த வழிபாடும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை.ஆகவேதான் உளப்பூர்வமாக செய்வதாக நிய்யத் செய்து, தவிர்க்க முடியாத சூழலில் நிறைவேற்ற முடியாமல் போனாலும் அதனைச் நிறைவேற்றியதாகக் கருதப்படும் என்று இஸ்லாம் சொல்கிறது. உடலும் உள்ளமும் இணைந்து செய்யும் வழிபாடுகளை வற்புத்துவதாலேயே வெளிப்பார்வைக்கு இஸ்லாமிய இறைவழிபாடுகள் கடுமையானவையோ என்ற எண்ணம்கூடச் சிலருக்கு ஏற்படுவதுண்டு!

//மொழிகளின் பயன்பாடு குறித்து இத்தனை மனத்தடைகளை எழுப்பிக் கொண்டது நாம் தானே தவிர, மொழிகள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. மொழி பெயர்த்தவர்கள் அப்படி செய்திருக்கிறார்கள்.//

மனிதர்களின் பலவீனங்களை அறிந்ததால்தான் இறைவன் தனக்குச் செய்யப்படும் வழிபாடுகளில் உள்ள(நிய்ய)த்தை நோக்குகிறான். அல்லாஹ் என்ற அரபிப் பதத்தை எப்படி வேண்டுமானாலும் மொழிபெயர்த்து வணங்கலாம்; நோக்கம் அல்லாஹ்வை வணக்குவதாக இருக்க வேண்டும்.

//நாம் பேசும் தாய்மொழியைத் தவறாக அர்த்தம் செய்து கொண்டு, அதை நான் சொல்ல மாட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக, நாம் இருவருக்குமே அந்நியமான மொழியில், 'அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்லிக் கொள்வோம் என்று அழைப்பு விடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதை அறிந்த இரு முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும்.ஆனால், அரபி மொழி அறியாத ஒரு பிற மதத்தினருக்கு அவ்வாறு செய்யலாமே என்று பரிந்துரைப்பது தவறு. //

வணக்கத்தை விட சலாம் சிறந்தது என்றதன் நோக்கம் அரபி மொழியை உயர்த்திச் சொல்வதற்கல்ல;மாறாக, சொல்லின் பயன்பாட்டை முன்னிருத்திச் சொல்லப்பட்டது.மேலும் மொழிகளில் சுதேசி/விதேசி என்று பாகுபடுத்ததிப் பார்ப்பது,குறிப்பிட்ட மொழியின் வளர்ச்சிக்கு உதவாது என்பது என் கணிப்பு. அந்நியச் சொல்லாக இருந்தாலும் பயன்பாட்டின் சிறப்பு கருதி ஏற்றுக் கொள்வதே மொழியை வளர்க்கும்; ஆகவேதான் இங்கிலாந்தில் மட்டும் வழக்கிலிருந்த ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

வணக்கம் என்று இருகைகளைக்கூப்பி அந்நியப்படுவதை விட, அஸ்ஸலாமு அலைக்கும் என்று கைகுலுக்கி, நெஞ்சோடு அனைத்து மனங்களை இணைப்பது எளிது. தாய்மொழியில் உள்ளது என்பதற்காக அதன் நெருடலைச் சுட்டுவது தவறாகாது. அந்நிய மொழி என்றாலும் அதன் பயன்பாடு அர்த்தமுள்ளதாக இருந்தால் ஏற்பதில் தவறில்லை என்பது எனது நிலைப்பாடு. இதைப் பரிந்துரைப்பதில் குற்றமிருப்பதாகக் கருதவில்லை!

சிந்திக்க வைத்த பின்னூட்டத்திற்கு நன்றி!

அன்புடன்,

நண்பன் said...

நாகூர் இஸ்மாயில்,

நீண்ட நாட்களாகி விட்டது - உங்கள் வருகையைக் கண்டு.

வாருங்கள்.

சங்க இலக்கியங்களில், இருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, 'வாழி' என்று தான் கூறிக் கொண்டனர். 'வாழ்க' என்பது இதன் நவீன வடிவமே. பேராசிரியர் நன்னன் அவர்கள் மக்கள் தொலைக் காட்சியில் தமிழ்ப் பண்ணை நிகழ்ச்சியில் சமீபத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டதாக நினைவு.

பழங்காலத்தில் மன்னர்களைச் சந்திக்கும் பொழுது கூட, புலவர்கள், தங்கள் கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, ' வாழிய எம்மான் ' என்று தான் வாழ்த்தினர்.

நம்ஸ்காரம், நமஸ்கரித்தல் முதலிய கலாச்ச்சார வடிவங்கள் வந்த பொழுது, அந்தக் கலாச்சாரத்தை மொழிபெயர்த்த பொழுது உருவாக்கிய வார்த்தை தான் வணக்கம்.

இரு கலாச்சாரங்கள் தங்களுக்குள் உறவாடிய பொழுது, உளப்பூர்வமான 'வாழியவே' என்பதைக் கைவிட்டு, உடல்ரீதியான பவ்யத்தை முன்வைத்த முறையை ஏற்றுக் கொண்டது. காரணம் - வலுவான சிலருக்கு அது ஏற்றத்தைக் கொடுத்தது. பலமிழந்தவர்களைக் காலில் வீழ வைத்தது. இத்தகைய மோகத்திற்கு அடிமைப்பட்டதினால், ஒரூ இனிய வரவேற்கும் முறை ஒழிந்து போனது.

இந்த நவீன உலகம் கூட இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது, இந்தக் காலில் வீழும் கலாச்சாரத்தை வெல்வதற்கு.

தற்சமயத்திற்கு, கை கூப்பி வணக்கம் என்று சொல்வதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், அந்த நடைமுறை வழக்கத்தை நாமும் செய்வதில் எந்தத் தப்புமில்லை.

அதைவிடவும், வாழி என வாழ்த்தி வரவேற்றுப் பழகுவதே அனைவருக்கும் நலம்.

(என்றாலும் காலில் விழுவது, துண்டை எடுத்து இடையில் கட்டுவது, அல்லது கக்கத்தில் அமுக்கி ஒடுங்குவது போன்ற அநாகரீகங்களை வணக்க முறையாக ஏற்றுக் கொள்ள வேண்டாம், ஒரு போதும்.ஒரு சில இடங்களில், தலித் இனத்தவரிடமிருந்து, இத்தகைய மரியாதைகளை இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்கின்றனர் - விரும்புகின்றனர் - வருந்தத்தக்க வகையில்)

நண்பன் said...

கல்வெட்டு எ பலூன் மாமா,

// இறைவன்(அல்லது தூதர்) என்று ஒருவனை விரும்பி ஏற்றுக் கொண்டால், அந்த இறைவன்(அல்லது தூதர்) எங்கே முதன் முதலில் அறியப்பட்டானோ அந்த மண் சார்ந்த பழக்கவழக்கங்களையும் பூசிக்கொள்வதுதான் மத அரசியல்.//

இதில் அரசியல் எங்கிருந்தும் வரவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு மதம் - ஒரு பண்பாடு - அது தோற்றமெடுத்த இடத்தின் பண்பாட்டை புறவடிவமாக ஏற்று, தன்னுடைய அகவடிவமாக தான் கற்பிக்க முனையும் தத்துவங்களைக் கொண்டிருக்கும். இது இயல்பு. எந்த ஒரு மதமும் - பண்பாடும் - தத்துவமும் எந்த புறவடிவமுமின்றி, அகவடிவம் மட்டும் கொண்டே பிறப்பெய்துவது சாத்தியப் படாது.

இந்தப்புற வடிவங்கள், அவ்வப்பொழுது உருமாற்றம் பெறும் - தான் செல்லுமிடத்திலுள்ள கலாச்சார கூறுகளையேற்று. அல்லது தன்னிடத்திற்கு வந்துவிடும் மாற்று கலாச்சாரக் கூறுகளை ஏற்று. இத்தகைய கொடுக்கல் வாங்கலினால் புற வடிவ மாற்றங்கள் ஏற்பட்டாலும், தனது அகத்தை, தனது intrinsic valueவை இழக்காமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அது ஜீவித்திருப்பதாக அர்த்தம்.

மாறாக, தனது அகத்தையும் மாற்று கலாச்சாரத் தாக்கத்துக்குப் பறி கொடுத்து விட்டு, வெறும் கூடாக நிற்பது அழிவிற்கு சமானம். இதைத் தான் ஒவ்வொரு மதமும் பின்பற்றுகிறது. புற வடிவ மாற்றங்களுக்கு மறுப்பின்றி உடன்படும்
ஒரு மதம் அல்லது கலாச்சாரம், தன் அகக் கூறுகளை இழப்பதை எதிர்க்கிறது.

ஒருவரின் கலாச்சாரத்தை அல்லது மதத்தை மதித்து, அடுத்தவர் கலாச்சாரத்தின் அல்லது மதத்தின் அகக்கூறுகளை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், எவ்வித பிரச்சினையும் வரப் போவதில்லை.

இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு மதமும் மற்ற மதத்தின் அகக்கூறுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோருகின்றன. இதுவே அடிப்படைவாதத்திற்கும் வித்திடுகிறது. இதைத் தவிர்த்துக் கொண்டால், அடிப்படைவாதத்தை கைவிட்டால் சிக்கல்கள் ஏதுமற்று போய்விடும். அதாவது, தன் கருத்துகளை தான் மட்டும் பின்பற்றுவதை விட்டுவிட்டு, அடுத்தவரும் அதையே ஏற்க வேண்டும் என்று வலிந்து திணிப்பதுவே அடிப்படைவாத சிக்கலாகி விடுகிறது.

சங் பரிவாரத்தினரின் அடிப்படைவாதமே - தங்கள் மேலாண்மையை முன்னிறுத்தும் ஹிந்து மத கூறுகளை - மற்ற சிறுபான்மையினரும் ஏற்று தங்களை ஹிந்து என அறிவிக்க வேண்டும் என்றும், தாங்கள் வணங்கும் அனைத்தையும் பிறரும் வணங்க வேண்டும் என்ற பலாத்காரம் தான்.

ஏக இறை வணக்கத்தை - அனைத்து மதங்களும் ஏற்றுக் கொண்ட ஒரு தத்துவத்தை - இஸ்லாத்தின் அகவடிவத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வலியுறுத்தி அரசியல் செய்யும் பொழுது தான், அதை எதிர்க்கும் செயலும் அரசியலாக்கப்படுகிறது.

சிந்திக்க வேண்டியவர்கள் - மத அரசியல் செய்யும் சங் பரிவாரத்தினர் தான்.

கல்வெட்டு,

மிக்க நன்றி பங்கெடுத்துக் கொண்டமைக்கு.

தொடர்ந்து எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

பிறை நதிபுரத்தான்,

// இந்திய இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாட மறுப்பதற்கு உண்மையான காரணம் - அந்தப்பாடலின் பின்னனியான பக்கிம் சந்திர சட்டர்ஜியின் 'ஆனந்த் மட்' நாவலை படித்தால் விளங்கும். ஆனந்த் மட் நாவல் //

இணைவைத்தலா இல்லையா என்ற கேள்வியின் அடிப்படையிலே, வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுவது குறித்து எழுதினேன்.

அந்தப் பாடலைப் பாடுவதற்குள்ள மனத்தடை - இணைவைத்தல் அல்ல, மாறாக, இஸ்லாமியர்களை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட ஒரு புனைவின் ஒரு அங்கமாக அந்தப் பாடல் அமைந்தது தான் என்பதை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பாடுவது தவறா, இல்லையா என்ற கேள்விக்கு மட்டுமே அதை பதிலாக வைத்துக் கொள்ளுங்கள்.

'ஏன் பாட முடியாது?' என்றொரு கேள்வி எழும்பி இருந்தால், அப்பொழுது இந்தக் காரணத்தைச் சொல்லலாம். 'நோக்கம்' தான் ஒரு செயலின் தன்மையை முன்னெடுக்கிறதே தவிர, புறவடிவங்கள் அல்ல என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

முஸ்லிம்களை இழிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளும் பொழுது, அதை பாட மறுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் தனிப்பட்ட கருத்துரிமை.

எங்குமே 'நோக்கம்' தான் பிரதானப் படுத்தப்படுகிறது. நோக்கங்களைப் பொறுத்தே செயல் அமைகிறது. இந்த நோக்கங்களை அடிப்படைவாதிகள் கைவிட்டால், பின் அதைப் பாடுவதற்கு தடை இருக்கப் போவதில்லை தானே?

(உங்களுடைய திண்ணை கட்டுரைகள் படித்தேன். இந்துத்வா எதிர்ப்பு குறித்து எந்தவித கேள்விகளும் இல்லை. ஆனால், இஸ்லாமியர்களின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. அவற்றைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம் - குறிப்பாக ஜமாஅத்களின் செயல்பாடுகள் குறித்து எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. )

மிக்க மகிழ்ச்சி, உங்கள் கருத்துகளைப் பெற்றமைக்கு. விஷய ஞானமுள்ளவர்களுடன் உரையாடுவது ஒருதனி மகிழ்ச்சி தான். பலவற்றிற்கு தெளிவு பிறக்கலாம் பலருக்கும்...

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

நல்லடியார்

மிக்க மகிழ்ச்சி - உங்கள் கருத்துகளைப் படித்ததும்.

வணக்கம், ஸலாம் இவற்றில் எது உயர்ந்த முகமன் என்பதைக் குறித்து நான் விவாதிக்க முயற்சிக்கவில்லை.

அரபு மொழியின் வரவேற்பு முறையில், ஒரு முகமன் கூறப்பட்டால், அதற்குப் பதிலாக கூறப்பட்ட வாழ்த்தைப் போல இருமுறை கூறப்படவேண்டும் என்ற உயர்ந்த மரபு முறையை நான் அறிவேன்.

ஆனால், நான் இங்கு சொல்ல வந்த விஷயமே கொஞ்சம் வேறுவிதமானது. நண்பர் கல்வெட்டுவிற்கு எழுதிய பதிவில் கொஞ்சம் முயற்சித்திருக்கிறேன் - எனது கருத்துகளை சொல்ல. மீண்டும் ஒரு முறை முயற்சிக்கிறேன்.

அகவடிவத்தை இழக்காமல், புறவடிவ மாற்றங்களை ஒரு கலாச்சாரம் அல்லது மதம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டிலே - நாம் வாழுமிடம் பேசும் மொழி இவற்றின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலே - அவற்றிற்கான மதிப்பை நாம் அளிக்க வேண்டும் என்ற முறையிலே - வணக்கம் என்ற வந்தனத்தை - முகமன் கூறுவதில் தவறில்லை என்ற கருத்தைத் தான் முன்வைக்கிறேன்.

இணைவைத்தலாகி விடுமோ என்ற அச்சத்தை வைத்துப் பார்க்கும் பொழுது வணக்கம் என்று சொல்வது நிந்தனையாகாது இறைவனுக்கு - காரணம் அது நம் நோக்கமல்ல என்பதைத் தான் தெளிவுபடுத்தினேன். அதனால், சகநண்பர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு, வணக்கம் என்று சொல்வதில் தவறில்லை, தயக்கம் காட்ட வேண்டாம் என்ற பொருள் பட கூறி இருந்தேன்.

நீங்கள் இப்பொழுது மேலும் ஒரு பரிமாணத்தை முன் வைக்கிறீர்கள். பிற மொழியிலிருந்து, வார்த்தைகளைப் பெற்றுக் கொள்ள ஒரு மொழி தயங்கக்கூடாது. வணக்கம் என்பதை விட, பல முறை சிறப்புப் பெற்ற ஸலாம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சிந்திக்க வைக்கிறது.

தமிழ் மொழி பிற மொழிச் சொற்களைப் புழக்கத்தில் ஏற்கவில்லையா? என்ற கேள்விக்கு நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதே பதில். தன்னுடன் சொற்ப காலத்திற்கேனும் உறவாடிய பிற மொழிச் சொற்களை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதிலும் சந்தேகம் இல்லை.

ஆனால், இந்த ஸலாம் என்ற வார்த்தையை ஏன் இன்னமும் ஏற்கவில்லை. நீண்ட நெடுங்காலாமாகத் தொடர்பிருந்தும்?

ஸலாம் என்ற வார்த்தை இஸ்லாம் தோன்றிய பின்னே தான் வரவேற்பு முறையாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சாந்தி, அமைதி என்ற வார்த்தைகளுடன் தொடர்பு உடையது ஸலாம். இஸ்லாமும் இந்த வேர்களிலிருந்தே வந்தது. அதாவது, ஸலாம் என்பது - சாந்தி, அமைதி என்பது இஸ்லாத்தின் அகவடிவம். இந்த அகவடிவ நிலையைக் குறிக்கும் சொல் என்பதால், அது எத்தனை உன்னதமாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள மனத் தடைகள் இருந்திருக்கலாம் - அல்லது விரும்பாதிருந்திருக்கலாம்.

வணக்கம் என்பதை வணங்குதல் என்று புரிந்து கொண்டு, அது இஸ்லாத்தின் அகவடிவத்தை அசைத்துப் பார்ப்பதாக சஞ்சலப்படும் நண்பர்களால், வணக்க்ம் சொல்வதற்கு தயக்கம் காட்டப்படுவதைப் போலவே, ஸலாமும் இஸ்லாத்தின் அகவடிவமாகப் பார்க்கப்படுகிறது. அதை ஏற்பது என்பது இஸ்லாத்தையே ஏற்பது என்பது மாதிரிதானே?

ஆகையால் தான் அதை வற்புறுத்துவதை விட, முழு புரிதலுடன், வணக்கம் என்ற சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை முன் வைத்தேன் - வைக்கிறேன்.

அல்லது சொல்லுங்கள் - வாழ்க என்று.

நல்லடியார் வாழ்க....வாழ்க...

(நன்றாகவே இருக்கிறது)

நண்பன் said...

நல்லடியார்,

// வணக்கம் என்று இருகைகளைக்கூப்பி அந்நியப்படுவதை விட, அஸ்ஸலாமு அலைக்கும் என்று கைகுலுக்கி, நெஞ்சோடு அனைத்து மனங்களை இணைப்பது எளிது.//

கைகூப்பி வணக்கம் சொல்வதை நாசூக்காக விலகி நிற்பதற்கான உத்தி என்று என்னுடைய நண்பர் ஒருவர் - தாய்மண் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளார் ஒருவர் கூறினார்.

உளப்பூர்வமாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி வரவேற்பது என்பது இஸ்லாத்தின் சிறப்பு. அதை நாம் சொன்னால் சிலருக்கு கடுப்பாகலாம்.

ஆனால், அதே விஷயத்தை முன்னா பாய் சொன்னால், மனங்களிக்க அனைவரும் சிலாகிக்கின்றனர்.

என்ன இருந்தாலும், மனங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார் - முன்னா பாய் எ சஞ்சய் தத்.

Anonymous said...

Dear Islamic friends,

Your explanation for not accepting to sing Vandemataram is clear to me.

What is your opinion about singing the national anthem - Jana gana mana?

Do you have any reservation against singing the national anthem?

Unknown said...

நண்பன்,
கடவுள் ஒருவர்தான் அவர்தான் xxxxxx என்றுதான் பெரும்பான்மையினர் நம்புகிறார்கள்.

கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை வந்தவுடன் அந்தக் கடவுளை வணங்க வேண்டும் என்றும், அவருக்கு பயந்து (தீயவை செய்யாமல் என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள்) வாழவேண்டும் என்ற கருத்தாக்கம் வந்துவிடுகிறது.

அப்படி வாழ்வதற்கு, சில வழிமுறைகள் (விதிகள்/ guidelines) தேவையாகிறது.

இந்த விதிகளைத்தான் "மதம்" என்ற குழுவில் புனித புத்தகங்களாக உள்ளது.

மேலே சொன்னதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?

****

இந்தப்புனித புத்தகங்களில் உள்ள வழிகாட்டுதல்கள், மதம் முதலில் தோன்றிய இடங்களின் புவியியல்/பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை.

பகவத்கீதை அருளிய கண்ணன் எந்த இடத்திலும் ஆப்ரிக்கா காடுகள் பற்றிச் சொல்லவில்லை.

இயேசுவின் அறிவுரைகள் அல்லது அவர் வழி வந்த பைபிள் எந்த இடத்திலும் சிந்து நாகரிகம் பற்றிச் சொல்லவில்லை.

அதுபோல் நபி வழங்கிய குரானில் அண்டார்டிகாவில் எப்படி வாழ வேண்டும் என்பது பற்றிச் சொல்லவில்லை.

மேலே சொன்னதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?

எந்தப்பழக்க வழக்கங்களும் எல்லா புவியியல் தன்மைகளுக்கும் பொதுவாக இருக்க முடியாது.

****

இப்படி எந்த ஒரு மதமும்/புனித அறிவுரைகளும் அந்த காலகட்டத்தில், அந்த மனிதர்கள் வாழ்ந்த புவியியல்/பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை.

இவை எல்லா இடத்திற்கும் பொதுவானது அல்ல.


***

கடவுளை மட்டும் நம்பும் பட்சத்தில் இந்த மதம்/பண்பாடு அது தோன்றிய இடத்தில் ஏற்றுக் கொண்ட புறவடிவங்களை (தன்னுடைய அகவடிவமாக ஏற்று) எல்லா இடத்திலும் கற்பிக்கத் தேவையே இல்லை.

பாலைவனத்தின் பண்பாடு பனிப்பிரதேசத்திற்கு பொருந்தாது.

கடவுளை மட்டும் ஏற்கும் பட்சத்தில் எந்த மதங்களும் புறவடிவங்களைச் சொல்லித்தரத் தேவை இல்லை.

***

எல்லா மதங்களும் ஒரே இறைவன் என்று சொல்லி , எப்படி வேண்டுமானலும் அவனை வணங்கிக்கொள் என்றும் சொல்லி, எந்த புற அடையாளங்களும் தேவை இல்லை என்றும் சொன்னால் இந்த உலகம் எப்படி இருக்கும்?

மதங்கள் என்றாலே அது அரசியல்தான். ஏன் என்றால் அது நம்பும் ஒரு சித்தாந்தத்தை(வழி/மார்க்கம்) அதன் அக/புற வடிவங்களோடுதான் எல்லா இடங்களிலும் புவியியல்/வரலாற்றுக் காரணிகளைப் புறக்கணித்து பரப்புகிறது. பரப்புதல் (மார்கெட்டிங்) நோக்கம் கொண்ட எதுவும் ஒருவகை அரசியல்தான்.

இது ஏன் தேவைபடுகிறது என்றால் ஒரு குழுவாக அடையாளம் காண சில கட்டாய அடையாளங்கள் தேவைப்படுகிறது. இந்த அடையாளங்களே நான் சொல்லும் மத அரசியல் என்பது.

மாடசாமி என்ற பெயருடன்,நெற்றியில் நாமம் போட்டு ஒருவர் இஸ்லாமியராக இருக்கமுடியுமா?

அவர் மனதால் அல்லா என்ற ஒரு ஏக இறைவனை ஏற்றுக் கொண்டாலும்( அகவடிவத்தைக் ) மதம் அவரை சில அடையாளங்களை (புற வடிவம்) ஏற்றுக் கொள்ளாதவரை குழுவில் சேர்க்காது.

இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.


*****

மதம் இல்லாமல் இறைநம்பிக்கையுடன் வாழமுடியுமா? என்று சிந்திக்கத்தயாரா?

இறைவன் என்ற ஒருவன் இருக்கும் பட்சத்தில்...

இறைவனை நாம் தேடிச் செல்லத்தான் மதம்(மார்க்கங்கள்) தேவைப்படுகிறது.

இறைவன் நம்மைத் தேடி வருவதற்கு எந்த மதமும் தேவை இல்லை. சமூகம் சார்ந்த நல்ல பண்புகளே போதும்.

மதங்களை உதறிவிட்டு மனிதனாக நிமிரும்போது பல புதிய பரிணாமங்கள் புரியவரும்.

கற்றுக் கொடுக்கப்பட்டவைகளுக்கும் மட்டும் சிந்திக்கும்போது புதிய பரிணாமங்கள் தெரியவராது.

****
இயேசுவும் சரி நபியும் சரி (புத்தம், சமணம் ..etc.,) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வழக்கில் இருந்த பழக்கங்களை/நம்பிக்கைகளை புறக்கணித்து புதிய பாதையில் சிந்திக்கத் தொடங்கியதால்தான் அவர்களுக்கு புத்தம் புதிய வழிகள் கிடைத்தது.

அவர்களின் சிந்தனைகள் எனக்கு தேவை இல்லாததாக இருந்தாலும், பழையவற்றின்மீது கேள்வி எழுப்பி புதியவற்றை தேட விழைந்த முயற்சியை மதிக்கிறேன்.

ஒவ்வொருவரும் அவர்கள் வாழும் இடம்/புவியியல்/தேவைகளுக்கு ஏற்ப அக/புற வடிவங்களை எந்த நிர்பந்தமும் இல்லாமல், வாழும் சமூகத்தை பாதிக்காமல் அதே ஏக இறைவனை விருப்பம்போல் வணங்கலாம். இதற்கு எந்த மதமும் தேவை இல்லை.

மதம் என்பதே இறைவனை இலக்காகவைத்த புற அடையாளங்களுடன் கூடிய அரசியல்தான்.

***
என்னளவில் மதம் எனக்குத் தேவை இல்லாதது. எனவே இஸ்லாமாகட்டும், (பார்ப்பணீய) சங்பரிவார் கூட்டமாகட்டும் எல்லாம் ஒன்றே. இலங்கையில் ஆசையை ஒழிக்கச் சொன்ன புத்தம் கூட தலைவிரித்தாடுகிறது.விஷங்களின் பிராண்ட் நேம் மாறுவதால் விசத்தன்மை மாறுவது இல்லை.

நல்ல உதாரணம் தமிழகத்தில் இருக்கும் கட்சிகள். பெயர் மாற்றங்களும் கொள்கை மாற்றங்களும் பல கட்சிகளைக் கொண்டுவரலாம் தேவையானதைக் கொடுக்காது.

**

மேற்சொன்ன காரணிகளால்தான் மத அரசியல் என்று சொன்னேன். எந்த ஒரு மதத்தையும் குறித்தானது அல்ல.

Unknown said...

//அஸ்ஸலாமு அலைக்கும் என்று கைகுலுக்கி, நெஞ்சோடு அனைத்து மனங்களை இணைப்பது எளிது.//

நல்லடியாராக இருந்தாலும் நண்பனாக இருந்தாலும் நேரில் சந்தித்தால் ஆரத்தழுவிக் கொள்வேன். என்னளவில் உங்களுக்கும் எனக்கும் எது ஏற்புடையது என்று மட்டும்தான் பார்ப்பேன். அது எந்த மதம் சார்ந்தது என்ற தேடல் எனக்குத் தேவை இல்லை.

மதங்களைத் தாண்டிய சுதந்திர மனிதனாக மட்டும் இருக்கும்போது, என்னால் எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி இயல்பாய் இருக்க முடிகிறது.

நண்பன் said...

Mr. Anonymous,

// Your explanation for not accepting to sing Vandemataram is clear to me.

What is your opinion about singing the national anthem - Jana gana mana?

Do you have any reservation against singing the national anthem? //

உங்களுக்கு யாரோ தவறான தகவலைத் தந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. எந்த முஸ்லிமும், ஜணகணமண பாட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். அதற்குத் தேவையுமில்லை. அவசியமுமில்லை.

I do not have any reservation in singing the national anthem so as other muslims.

இத்தனை கேட்கறீர்களே - இதனுடைய பொருள் என்ன? தேசிய கீதம் பாடி, உங்கள் தேசபக்தியைப் பாடி நிரூபிபுங்கள் என்ற தொனியில் தானே?

முஸ்லிமின் தேசபக்தியை அல்லது சிறுபான்மையினரின் தேசபக்தியை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் தானே?

ஒருவரின் தேசப்தியை உரசிப் பார்த்து விலை நிர்ணயிக்கும் தகுதி இங்கு யாருக்கு இருக்கிறது?

சற்று உரசிப் பாருங்கள் - இந்தியத் தேசியத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் யார் என்பது உங்களுக்குப் புரியும்...

நண்பன் said...

கல்வெட்டு,

//எந்தப்பழக்க வழக்கங்களும் எல்லா புவியியல் தன்மைகளுக்கும் பொதுவாக இருக்க முடியாது. //

நான் எழுதியவற்றை ஒருமுறைத் திரும்பவும் படித்துப் பாருங்கள் - நீங்கள் மேலே சொன்னவற்றைத் தான் நான் ஒரு மதம் அல்லது கலாச்சாரம் அல்லது பண்பாடு ஆகியனவற்றின் புற வடிவம் எனக் கூறுகிறேன்.

மதங்கள் முன் வைக்கும் core value தான் அதன் ஜீவனே தவிர, வட தென் துருவ பூகோள எல்லைகளுக்கும், ஆயிரமாயிரம் காலங்கள் கடந்து போகும் கால எல்லைகளுக்குமென்று அது வடிவங்களைத் தாங்கிக் கொண்டு அலைய முடியாது.

எந்த எல்லையானாலும், மதம் முன் வைக்கும் core value எத்தகையது என்பதைத் தான் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது அகவடிவம். பிற புற வடிவங்கள் மாற்றங்களுக்குட்பட்டது. அது மாறிக் கொண்டே இருக்கும்.

ஆக நீங்கள் அல்லது நான் - இருவருமே ஒரே மொழியை வேறு வேறு தொனிகளில் பேசிக் கொண்டிருக்கிறோம் - இல்லையா?

நண்பன் said...

// இப்படி எந்த ஒரு மதமும்/புனித அறிவுரைகளும் அந்த காலகட்டத்தில், அந்த மனிதர்கள் வாழ்ந்த புவியியல்/பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை.

இவை எல்லா இடத்திற்கும் பொதுவானது அல்ல.//

நீங்கள் சொல்பவை எல்லாம் புற வடிவங்களைப் பற்றியது. அகவடிவங்கள் என்பது வேறு.

இறைவன் இல்லை இறைவனைத் தவிர என்பது இஸ்லாத்தின் அகநிலை. இது எந்தக் காலத்திற்கும் எந்த தேசத்திற்கும் பொருந்தும். இந்த அகநிலையை எவராலும் மாற்ற முடியாது. இது மாறாத நிலைத்தன்மை கொண்டது. விமர்சனங்கள், ஏளனப் பேச்சுகள் என அனைத்தையும் கடந்து நிற்கக் கூடியது. இது போன்று பல அகநிலைகள் உண்டு. ஒவ்வொன்றையும் எடுத்து சொல்ல இப்பொழுது நேரமில்லை.

இது போலவே, பிற மதங்களுக்கும் பல அகநிலைகள் இருக்கும் - இருக்கின்றன. மதங்களைப் பற்றிய விவாதங்கள் இந்த அகநிலையில் தான் அமைய வேண்டுமே தவிர, புறவடிவங்களைத் தாக்கும் அவலத்தை அடைந்து விடக் கூடாது. ஏனென்றால் புற வடிவங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. பல்வேறு இடங்களில் அந்த இடங்களின் தன்மைக்கேற்ப மாற்றங்களை உள்வாங்கும் பண்புடையது. இதில் உள்ள சரி, தவறுகளுக்கு மதங்களைப் பொறுப்பாக்கக் கூடாது.

இவற்றை அனைவரும் புரிந்து கொண்டால், எந்தவித சண்டை சச்சரவுகளும் இருக்காது, மதங்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இந்த 'scientific temper' தேவைப்படும் உலகில், நான் இந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று சொல்வதற்கு நாணிக் கொண்டு, மதங்கள் இல்லை என்று சொல்லிக் கொள்ளத் தேவையுமில்லை.



இது போல, ஒவ்வொரு

நண்பன் said...

கல்வெட்டு,

உங்கள் மனதில் காய்தல் உவத்தல் இன்றி தோன்றிய இந்த ஒரு வரி இஸ்லாத்தின் கொள்கை என்பது உங்களுக்குப் புரியுமா? தெரியுமா?

// அதே ஏக இறைவனை விருப்பம்போல் வணங்கலாம். இதற்கு எந்த மதமும் தேவை இல்லை. //

உங்களை அறிந்தோ அறியாமலோ நீங்கள் எழுதி விட்ட இந்த வரிகளைப் பாருங்கள்.

இஸ்லாம் - இறைவனுக்கு உருவம் படைக்காது - ஏக இறை கொள்கை உடைய மனிதர்களையும் ஏற்றுக் கொள்கிறது. இயேசுவை இறைத்தூதராக மட்டும் ஏற்றுக் கொண்டுள்ள கிறித்துவர்கள், ஏக இறைவணக்கத்தில் ஈடுபடும் யூதர்கள் இவர்களையும் இஸ்லாம் கௌரவிக்கிறது. அவர்களுடன் மண உறவு வரையிலும் செய்து கொள்ளவும் அனுமதிக்கிறது. அவர்கள் இஸ்லாத்தைத் தழுவ வேண்டிய அவசியமில்லை.

There is no God, but God இஸ்லாத்தின் இந்த அகநிலையை ஏற்றுக் கொண்டால் போதும். Muhammed is his last prophet என்பதையும் ஏற்றுக் கொண்டால் அவர்கள் இஸ்லாமியர்களாகி விடுகின்றனர். முதல் பாதியை ஏற்றுக் கொண்டு, அவரவர் மதத்தில் இருப்பவர்களையும் இஸ்லாம் அங்கீகரிக்கிறது. இது இஸ்லாத்தின் அகநிலை.

இந்த உண்மையை இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் வெளியில் சொல்வது இல்லை. இஸ்லாத்தின் புறவடிவங்கள் குறித்த விமர்சனங்களையே இஸ்லாத்தின் அகவடிவங்களின் மீதும் ஏற்றிக் கூறுகின்றனர்.

ஆனால், உங்களைப் போன்ற வெகு சிலரே - இந்த உண்மையை உணர்கிறார்கள்.

மதங்களைக் கடந்த இறைவன் என்ற கோட்பாட்டை முன் வைக்கின்றனர். ஒரு வருடத்திற்கு முன், சில வலைப்பதியும் நண்பர்கள் ஷர்ஜாவில் சந்தித்த பொழுது நான் இதைப் பற்றி பேசி இருக்கிறேன்.

இப்பொழுது மீண்டும் உங்களுடன்

நன்றி

Anonymous said...

Dear Mr. Nanpan,

You said: முஸ்லிமின் தேசபக்தியை அல்லது சிறுபான்மையினரின் தேசபக்தியை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் தானே?

My answer: No. (You are either overreacting or becoming extremely defensive even before an offense is made. I am not going to do any guess work about your intention as you have done now. Because, I feel guessing intention denotes the guilty mind.

I have a lot of respects for many Muslims who have laid down their lives for this country, for Indian people as a real humen, beyond caste, creed, and religion. They are worth the worship of our generation.)

I asked the question to get clarity about Indian muslims' stand in singing any patriotic songs.

Your reply confirms that not only you, but all Indian Muslims have no objections singing "Jana gana mana", though they do not want to sing "Vande mataram". I agree to that stand, and also accept you not singing "vande mataram". Not singing "vande mataram" can never make you less patriotic.

You said: எந்த முஸ்லிமும், ஜணகணமண பாட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். அதற்குத் தேவையுமில்லை. அவசியமுமில்லை.


Now my question is: Will you/Indian Muslims change your stance in future about singing "Jana gana mana"?

I am asking this question, because different fatwas are issued at different times asking Muslims to change their stance in some particular issues.

So is there any chance for "Jana gana mana" being rejected by Muslims?

(I am asking this question as a fellow citizen who knows that you have as much as rights and patriotism as I have, and as courageous as I am to answer who questions you.)

Unknown said...

நண்பன்,
விரிவான விளக்கத்திற்கு நன்றி!

மதச் சார்புகளைத்தாண்டி சில விசயங்களை உங்களிடம் பேச முடிந்தது.

**

// நான் இந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று சொல்வதற்கு நாணிக் கொண்டு, மதங்கள் இல்லை என்று சொல்லிக் கொள்ளத் தேவையுமில்லை. //

மதங்கள் இருக்கிறது. இருந்துவிட்டுப்போகட்டும்.
ஆனால் எனக்கு மதம் தேவை இல்லை. என்பதே எனது நிலை.

***

நண்பன் said...

// மதங்கள் இருக்கிறது. இருந்துவிட்டுப்போகட்டும்.
ஆனால் எனக்கு மதம் தேவை இல்லை. என்பதே எனது நிலை.//

கல்வெட்டு,

உங்களுடைய நிலைபாட்டில் நீங்கள் சொல்ல மறந்தது -

இவ்வுலகைப் படைத்த ஒரு மகாசக்தியொன்று உண்டு.

மதங்களை ஏற்கவேண்டுமென்பது கட்டாயமில்லை. இறை நம்பிக்கை இருக்கும் வரையிலும்.

மிகச் சிறந்த கொள்கை. தன் அகத்தே இதைக் கொண்டு, தனி மனிதனாக சிறப்பாக இருக்க முடியும். ஆனால் சமூகமாக இந்தக் கொள்கையை அறிவிக்க முடியாது. அதுதான் சிக்கலே.

மற்றபடிக்கு உங்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது - உங்கள் எழுத்துகளின் மூலம்.

நன்றி

நண்பன் said...

Mr.Anonymous

// I feel guessing intention denotes the guilty mind. //

உண்மை தான். ஒருவரின் நோக்கம் குறித்து ஊகிப்பது ஒரு உரையாடலுக்குத் தேவையற்றது என்பது சரிதான். ஆனால், அது தன் அடையாளங்களை மறைக்காது, நேரிடையான சந்திப்பின் போது மட்டுமே சாத்தியம்.

தான் யாருடன் பேசுகிறோம் என்பது கூட தெரியாமல், ஒருவன் தான் நம்பும் கொள்கைகளைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருக்க முடியாது. ஒரு கேள்வியைக் கூட, தன்னை மறைத்துக் கொண்டு தான் கேட்க வேண்டும் என்ற நிலை ஏன்?

நான் பொதுவாக அநாநிகளை ஆதரிப்பது இல்லை. அதிலும் ஆங்கிலப் பின்னூட்டங்களை என்னுடைய தளத்தில் அனுமதிப்பது இல்லை. அவ்வப்பொழுது சிலர், உங்கள் தளத்தில் எழுதுவது எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது - முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்சமிருக்கிறது. அதனால் தான் அநாநியாக....

இதில் ஓரளவு நியாயமிருப்பதாலேயே சில நாகரீகமான அநாநி பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், எதற்காக ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள்? சில நண்பர்கள் குறிப்பிட்டே சொல்கின்றனர்.

ஆங்கிலத்தில் எழுதினால் விளங்கவில்லை - அதற்கான மொழி பெயர்ப்பைத் தாருங்களேன் என்று சில நண்பர்கள் வெளிப்ப்டையாகவே கருத்து கூறியுள்ளனர். பாருங்கள், உங்கள் கேள்வி புரியாது. ஆனால், பதிலை மட்டும் அவர்களால் வாசித்துக் கொண்டிருக்க முடியும். இந்த சங்கடங்களையெல்லம் விலக்கத் தான் அநாநிகளையும், ஆங்கிலப் பின்னூட்டங்களையும் அனுமதிப்பதில்லை. நீங்கள் பின்னூட்டம் மட்டுமின்றி, கேள்வி வேறு கேட்டு வைக்கிறீர்கள்... என் நோக்கம் குறித்து ஊகிக்கக் கூடாது என்ற நிபந்தனை வேறு.....

சரி, சரி, இந்தக் கேள்வியை மட்டும் தெளிவுபடுத்தி விடுகிறேன்....

// You said: எந்த முஸ்லிமும், ஜணகணமண பாட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். அதற்குத் தேவையுமில்லை. அவசியமுமில்லை.

Now my question is: Will you/Indian Muslims change your stance in future about singing "Jana gana mana"? //

தேசபக்தி பாடல்களைப் பாடுவதனால், அது இறைவனுக்கு இணைவைத்தலாகாது ஆகையால், அதைப் பாடுவதற்குத் தயங்க வேண்டியதில்லை.

இனி எவர் பாடுவர், எவர் பாடமாட்டார் என்றெல்லாம் நான் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஜணகண பாடுவதற்கு என்னைப் பொறுத்தவரைக்கும் எந்த முஸ்லிமும் மறுத்ததில்லை. இனியும் அதை மறுப்பதற்கான தேவையும் எழ வாய்ப்புகள் இல்லை.

இவர்கள் பாடுவார்களா, அவர்கள் பாடுவார்களா என்பதை இஸ்லாமியர்களைக் குறித்து மட்டும் எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்கக் கூடாது. சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்தியாவின் ஜனாதியாகத் தகுதியுடையவர் என்று கருதப்பட்ட திரு. நாராயணமூர்த்தி அவர்கள் கூட, இந்திய தேசிய கீதத்தை இசைப்பது மட்டுமே போதுமானது. பாடவேண்டும் என்று வற்புறுத்த வேண்டாமே என்று ஒரு கருத்தை முன்வைத்தார்.

இது போல, தேசியகீதம் குறித்து அவ்வப்போது பலவித சர்ச்சைகள் எழுகின்றது. விவாதங்கள் நடக்கின்றன. இதெல்லாம் தேசவிரோதமாக பார்க்கப்படவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் இது இணைவைத்தலாகிவிடுமோ என்ற மனசஞ்சலத்துடன், அதுகுறித்த விளக்கங்களைத் தேடினால், உடன் அது சந்தேகத்துடன் பார்க்கப்படவேண்டிய அவசியமென்ன வந்து விட்டது?

தேசீயக் கொடிக்கு அவ்வப்பொழுது, நாம் அவமரியாதை என்று நினைக்கும் காரியங்களைப் பலரும் செய்யத் தான் செய்கின்றனர். அப்பொழுதெல்லாம் விவாதங்கள் எழத்தான் செய்கின்றன. அதே சமயம் பலவெளிநாட்டினர், தங்கள் தேசிய கொடிகளினால் ஆன உடைகளை அணிகின்றனர் - உள்ளாடை முதற்கொண்டு. ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு காரியம் ஒவ்வொரு மாதிரியாகப் பார்க்கப் படுகிறது. விவாதிக்கப் படுகிறது. அதனாலயே, அந்தக் காரியத்தில் ஈடுபட்டவர், தேச விரோதியாகப் பார்க்கப் பட வேண்டிய அவசியமில்லை.

அதுபோலத் தான் ஃபத்வாக்களும்.

இது ஒரு சமய விவாதமே. கருத்தே.

ஒவ்வொரு சமயத்திலும், ஒவ்வொரு விவாதங்கள் நடைபெறுகிறது. சில சமயங்களில் இந்த விவாதங்கள் அமுங்கிப் போய்விடுகிறது. சில சமயங்களில் மேலெழுகிறது. இதை மட்டும் சந்தேகிப்பது அவசியமற்றது.

நன்றி...

Anonymous said...

நண்பன் எனும் பெயருடையவரே,

என் கேள்விகளுக்கு பதிலளித்த உங்களுக்கு "அனானி" என்கிற பெயருடைய என் நன்றிகள்.

தமிழில் எழுத தயக்கம் எனக்கு எதுவும் இல்லை. நான் கேட்டிருந்த கேள்வி வேறு. அதற்கு பதிலளித்துவிட்டு தமிழில் டைப் செய்திருப்பதன் பலன் பற்றி நீங்கள் சொல்லியிருக்கலாம்.

ஆனால், ஆங்கிலம் அதிகம் தெரியாதவர்கள் உங்களது பதிவைப் படிப்பார்கள் என்பது ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தே. அவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பது நியாயமான வாதம்.

தங்களுடைய பல பதிவுகளின் பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், நானும் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டுவிட்டேன். மேலும், அனானியாக பின்னூட்டமிடும் வசதியை தந்துவிட்டு அனானியாகப் பின்னூட்டம் இடாதீர்கள் என்று நீங்கள் சொல்லுவது உங்களது நம்பிக்கை சார்ந்த வழிமுறையின் விளைவு என்பது புரிகிறது. எனினும், தாங்கள் அனானி வசதியை வைத்திருக்கும்வரையில் அதை உபயோகிக்கவே எனக்கு விருப்பம்.

ஜனகன மண பாடுவது குறித்த என் கேள்விக்கு தங்களுடைய பதில்:

/// ஒவ்வொரு காரியம் ஒவ்வொரு மாதிரியாகப் பார்க்கப் படுகிறது. விவாதிக்கப் படுகிறது. அதனாலயே, அந்தக் காரியத்தில் ஈடுபட்டவர், தேச விரோதியாகப் பார்க்கப் பட வேண்டிய அவசியமில்லை. ///

அதாவது ஜன கன மன பாடுவது சரியானதா தவறானதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுமானால் அவற்றை பரிசீலிக்கவேண்டும் என்கிறீர்கள்.

"ஜன கன மன" பாடலையும் நீங்கள் பிரச்சினைக்கு உரிய பாடலாக மாற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையை தந்தமைக்கு நன்றிகள்.

இன்றிலிருந்து இரண்டாண்டுகளில் "ஜன கன மன" பாடுவது இஸ்லாமியர்களை அவமதிக்கும் செயல் என்று நீங்கள் எழுதப்போகும் கட்டுரையை படிக்கத்தான் போகிறோம்.

உங்களைப்போன்றவர்களின் இக்கருத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்களாலேயே இஸ்லாம் புனிதமான மதமாக வாழ்கிறது.

Anonymous said...

A very important factor which is making it almost impossible for Hindu-Muslim unity to become an accomplished fact is that the Muslims cannot confine their patriotism to any one country. I had frankly asked many Muslims whether, in the event of any Mohammedan power invading India, they would stand side by side with their Hindu neighbours to defend their common land. I was not satisfied with the reply I got from them.

Gurudev Rabindranath Tagore

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்