"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, January 05, 2008

இன்றைய சூழலில் குறும்படங்களின் தேவை.

திரைப்படங்கள் - கலை / வியாபாரப் போக்குகள்

திரைப்படம் என்பது பிற படைப்புகளைப் போன்றே ஒரு கலைவடிவம். இன்று ஒவ்வொரு படைப்பும் தான் சார்ந்த படைப்பு உத்திகளில் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து பரிசோதித்துக்கொண்டே இருக்கின்றன தனது இருப்பின் நியாயம் குறித்து. திரைப்படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எழுத்தும், ஓவியமும், நடனமும் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்திராத தனிமனித ஆற்றல் சார்ந்த வடிவங்கள் என்றால், திரைப்படம் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த கலைவடிவம். அதனாலேயே திரைப்படங்களின் பரிசோதனைக் களங்கள் ஒருபுறம் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், மறுபுறம் பார்வையாளனின் அனுபவ நுகர்விற்கு படைப்பை எப்படி எடுத்துச் செல்வது என்றும் தொடர்கிறது.

திரைப்படங்களை மக்களிடையே எடுத்துச் செல்வது, மற்றெந்த கலைகளையும் விட மிக எளிது. பிற வடிவங்களை நுகர்வதற்கு - புரிந்து கொள்வதற்கு குறைந்தபட்ச தகுதிகள் வேண்டியிருக்கின்றன. குறைந்த வடிவமாக எழுத்தை எடுத்துக் கொண்டாலும், அதை பலகாலம் பயின்று, பரிச்சியம் பெற்றவர்களால் தான் முடியும். அதுவும் கற்ற மொழியை விட அடுத்த மொழியின் இலக்கியங்களை வாசிக்க முடியாது. ஆனால், திரைப்படங்களின் அனுபவ உணர்தலுக்கு எந்த முன் தயாரிப்புகளும் அவசியமற்றது. அதனால், திரைப்படங்கள் மற்ற எந்த கலைவடிவத்தைக் காட்டிலும், மக்களிடையே வெகு எளிதாக சென்றடைந்து, மக்கள் கலையாகவும் வடிவமெடுக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை குறைந்த செலவில் அடைந்துவிட முடியும் என்றதும், கணக்குப் பார்க்கும் வியாபாரிகளின் வருகையும், அதையொட்டிய ஆக்கிரமிப்புகளின் வரத்தும் தொடங்கியது. ஆர்வமிக்க கலைஞர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.


உண்மையான திரைப்படங்களை நேசிக்கும் கலைஞர்களால் சும்மா இருக்க முடியுமா, என்ன? திரைப்படம் என்ற கலை வடிவத்தை தீவிரமான ஈடுபாட்டுடன் திரைப்படங்களாக வரச்செய்தனர். இவர்களின் ஈடுபாட்டால் உருவாக்கம் பெற்று வாழ்வின் யதார்த்தங்களை நுணுகி ஆய்ந்து, உரசிப் பார்த்து படைக்கப்பட்ட கலைநயம் மிக்கப் படங்களைப் பார்த்து மிரண்டு போன திரைத்துறை வியாபாரிகள், வர்த்தக சினிமாக்களின் இருத்தலை நியாயப்படுத்தும் பொருட்டு, அவற்றை - எதார்த்தப் படைப்புகளை - கலைப்படங்கள் என்று பெயரிட்டு அழைத்தனர். வியாபார நோக்கில் பொழுதுபோக்கை முன்னிலைப் படுத்தும் திரைப்படங்களை 'Main Stream Cinema' என பெயரிட்டுக் கொண்டனர். 'பொழுதுபோக்கே சினிமா' என்ற கருத்துடன் வரும் படங்களின் மிகப் பிரம்மாண்டமான விளம்பரங்களின் முன், 'கலைப் படங்கள்' மறைக்கப்பட்டன - மக்களின் பார்வையிலிருந்தும். நல்ல திரைப்படங்களை - படைப்பு ரீதியாக நளினமாக செய்யப்பட்ட படங்களைப் பார்க்க விரும்பும் பார்வையாளனின் துரதிர்ஷ்டமே அது.

ஒரு நல்ல திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்?

கதையின் பாத்திரங்களை அதனதன் போக்கில் இயங்க அனுமதித்து, அதிலிருந்து பார்வையாளனின் அனுபவத்திற்கு, சினிமா மொழியை விட்டுச் செல்வது தான் ஒரு சிறந்த சினிமாவின் மொழியாக இருக்க முடியும். இன்று வாசக அனுபவத்தைத் துளிர்க்கச் செய்யும், வாசிப்பில் ஈடுபாடு கொள்ளத் தூண்டும் எழுத்துகள் வந்துவிட்டன. கவிதைகளாக, சிறுகதைகளாக, குறுநாவலாக, புதினங்களாக தமிழிலும் இவை வரத் தொடங்கி விட்டன. ஆனால் சினிமா மட்டும் தான் இன்னமும், அம்மா என்றால் அன்பு, அன்பு என்றால் சிவம் என்று பாடம் சொல்லிக் கொண்டு இருக்கின்றது. இவ்வாறு எடுத்துச் சொல்ல முனைவதாலயே ' the cinematic experience' கிட்டாது, ஒரு உபதேச கச்சேரிக்குப் போய்வந்த களைப்பையேத் தருகிறது நமது திரைப்படங்கள்.

இவை தமிழ்ப்படங்களின் பலவீனமாக அமைகின்றன. அதாவது மெனக்கெடுத்து சொல்லுதல். சொல்கின்ற நாயகனுக்குத் தகுதிகளை வலிந்து நுழைத்தல். எதுவும் இயல்பாக நடப்பதில்லை. எல்லாவற்றையும் முனைப்புடன் சொல்கிறார்கள் - சொல்கிறார்கள் - சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பாத்திரங்களின் இயக்கத்திலிருந்து வினையைப் புரிந்து கொள்வதை பார்வையாளனின் புரிதலுக்கும் அனுபவத்திற்கும் விடுவதில்லை. படைப்பைப் பற்றிய உள்முக விசாரணைகளுக்கெல்லாம் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. நாங்கள் திரைப்படம் என்று தந்தவற்றைப் பார்த்தாயல்லாவா - அத்துடன் நிறுத்திக் கொள் என்ற ஆணவம் தான் நமது சினிமாக்களின் பேசும் மொழி.

ஒரு இலக்கை நோக்கிக் கதை நகர வேண்டும். The film should always be focussed. இடைச்செருகல்கள் கூடாது. கவனத்தைத் திசை திருப்பி, வேறு தளத்தில் பயணிக்க வைக்கும் கிளைக் கதைகள் கூடாது. கதை ஒரே தளத்தில் ஒரு பிரச்சினையின் மையத்தை நோக்கிக் குவிய வேண்டும் - அனைத்துத் தளங்களிலுமிருந்தும். சாதக பாதக நிகழ்வுகளின் மூலம், தர்க்கங்கள் அமைய வேண்டும். தீர்வு என்ன என்பதைக் குறித்த விவாதங்களைப் பார்வையாளனிடத்தில் தோற்றுவிக்க வேண்டும்.

நேரடியான போதனைகளில் இறங்குவது அபத்தமானது. ஆபத்தானதும் கூட. எல்லோரும் எல்லா சமயத்திலும் போதிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. திரைப்படத்தின் இலக்கும் போதிப்பதாக இருக்கக் கூடாது. எந்த ஒரு கலையும் போதிப்பதற்காகப் படைக்கப்படவில்லை. படைப்பும், கலையும் பதிவு மட்டுமே செய்ய வேண்டும். மீதியை பார்ப்பவர்களின் புரிதலுக்கு விட்டுவிட வேண்டும். திரைப்படம் பார்ப்பதை ஒரு அனுபவமாக மாற்றி, தன்னுள்ளே பார்வையாளனை ஒன்றச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால், திரைப்படங்கள் வெறும் பிரச்சாரங்களாக மாறி பார்வையாளனை அந்நியப்படுத்தி விடக்கூடும். பின்னர் அவர்களை பிடிப்பதற்காக, அய்ட்டங்களை வைத்துக் கொண்டு, ரசிகர்களைப் பற்றிய குறைபாடுகளைக் கூறி ஒப்பாரி வைத்துக் கொள்ளலாம்

குறும்படங்களளின் தேவைகள்.

ஆக, இன்று 'Main Stream Films' என்று வழங்கப்படும் திரைப்படம் வியாபாரிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. தனிப்பட்ட நாயக வழிபாடுகளில் ஈடுபடுகிறது. சாதிக்கவியலாத கனவுகளை ஒரு போதையாக மக்களிடத்தில் வைக்கிறது. சிந்திக்கும் கலைஞர்களை தவிர்க்கிறது. ஓரங்கட்டுகிறது. ஜனரஞ்சகப் படங்களின் பொருட்செலவை, வெறும் ஆர்வமுள்ளவர்களால் ஈடுகட்ட முடிவதில்லை.

அதே சமயம் சினிமா என்ற கலைவடிவத்தின் மூலம் கிடைக்கும் மகிழ்வான அனுபவங்கள், வாழ்க்கை நிகழும் தளங்களுக்கு வெகு அருகில் சென்று, எந்த முன்முடிவுகளுமற்று, வாழ்வை கலைநயத்துடன் பதிவு செய்யும் ஆர்வம் இவற்றையெல்லாம் எந்த வியாபாரிகளாலும் அத்தனை எளிதாக ஒழித்து விட முடியாது. வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களுடன் அனுபவித்து, புரிதலுடன், அதன் போக்கில் வாழ முயற்சிக்கும் மனிதர்கள் இருக்கும் வரையிலும், அதைப் பதிவு செய்யவும், வாழ்வின் அழகியலை வெளிக்கொண்டு வரவும் தீராத காதலுடன் திரைப்படங்களை நேசிக்கும் கலைஞர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த முயற்சிகளில், கட்டுப்பாட்டை மீறும் செலவு என்பது ஒரு பெரும் தடையாக இருக்க, அதை வெற்றி கொள்ள வந்த வடிவம் தான் குறும்படங்கள். வியாபார சினிமாவின் தேவைகளான, அய்ட்டம் நம்பர், குத்தாட்டங்கள், அடிதடிகள், இல்லாத நாயக தோரணையை கிழடு தட்டிய நடிகர்களுக்கு உருவாக்குதல் போன்ற செலவுகளை ஓரம் கட்டி, காட்சி அமைப்புகளில் சிக்கனம் காட்டி, உருவாக்கப்படும் குறும்படங்களும் திரைப்படங்களே - முழுமையான சினிமா வடிவங்களே.

இத்தகைய முயற்சிகளை வரவேற்பதுவும், ஆதரிப்பதுவும், சினிமாவை நேசிக்கும், வாழ்க்கையின் பரிமாணங்களைத் தரிசிக்க விழையும் பார்வையாளனின் கடமையாகும். ஒரு சிறந்த தேடுதலுடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த படைப்புகளைத் தேடி வாங்கி ஊக்குவிப்பது மறைமுகமான பங்களிப்பாகும். அதைதவிடவும், இந்த மாதிரியான தயாரிப்புகளுக்கு முதலீடு செய்து உதவுவது நேரடியான பங்களிப்பாகவே அமையும்.

இசாக், இத்தகைய அருமையான முயற்சியின் பலனாக, குறும்படங்களின் நோக்கங்களை ஒட்டிய ஒரு படைப்பை வெளிக் கொண்டு வந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

பாருங்கள்.

இத்தகைய முயற்சிகளை ஆதரியுங்கள்.

நன்றி,

வணக்கம்.

2 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

நல்ல பதிவு.

குறும்படங்கள் மொழிகடந்தவை. சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், நம்மில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. டிவி விளம்பரங்களையே ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்களேன், சில வினாடிகளில் சுருக்கமாக சொல்லவேண்டிய விஷயத்தை மிக நேர்த்தியாக சொல்லும் திறமை நம் இயக்குனர்கள் பலரிடம் இருப்பது புலப்படும்.

நண்பன் said...

பாரதிய நவீன இளவரசன்,

மிக்க நன்றி.

மொழி கடந்தவை என்பது உண்மையே.

இரண்டு வேலிகளுக்கிடையில், கால்பந்து விளையாடும் இரண்டு சிறுவர்களைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

அல்லது, எரியும் நெருப்பில், கையைச் சுட்டுக் கொண்டே சமைக்கும் சப்பாத்தி சுடும் தாய்க்கு உதவியாக, ஒரு துண்டு மின்கம்பியை வளைத்து, இடுக்கி செய்து கொடுக்கும் மகன் பற்றிய ஹவெல்'ச் கேபிள் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?

இந்த விளம்பரங்களில் மொழி கிடையாது. கால்பந்தாடும் சிறுவர்கள் கத்துவது மொழியாகாது. என்றாலும், மனதைத் தொடத் தவறவில்லை.

மனதைத் தொடும் கதைகளை இனி குறும்படங்களால் மட்டுமே தர முடியும் என்றே தோன்றுகிறது.

நன்றி

நண்பர்கள் சொல்கிறார்கள்

GF - உலகச் செய்திகள்

Error loading feed.