நான் நண்பன்
நான் நண்பன்
தன்னை சுயமாக முன்னிலைப் படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்வதில்லையென்பதில் இத்தனை நாட்களும் உறுதியாக இருந்தேன் - இன்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன். யாரிடமும் சொல்லாமல் தனித்து இயங்கிக் கொண்டிருந்த எனது விருப்பங்களைப் பிறருக்கும் அறிமுகம் செய்யும் ஒரு வாய்ப்பைத் தந்து செய்யுமாறு நண்பர்கள் வேண்டிக் கொண்ட பொழுது, ஒதுங்கிப் போவது எப்போதும் போல அத்தனை எளிதாக இல்லை. எனது விருப்பமாக நான் மட்டுமே படித்துக் கொண்டிருந்த சிலவற்றைச் சொல்லிக் கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்புகளோடு, என்னைப் பற்றியும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான், நண்பன்.
என்னைப் பற்றிய அறிமுகத்தை எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவது? என்னைப் பற்றிய முன்முடிவுகள் ஓரளவிற்காவது சிலரிடம் இருக்கக் கூடும். எந்த அடையாளாங்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் பெருவிருப்பமிருந்தாலும், எனது பெயரே என்னை ஒருதளத்தில் அடையாளப்படுத்துகிறது. பிறப்பினாலே இயல்பாக என்னுடனே பிறந்துவிட்ட இந்த அடையாளம் என்னை ஒருவித அந்நியப்படுத்தலுக்கே இட்டுச் சென்றது. எனது வாசிப்பும், அனுபவங்களும் இந்த அடையாளத்தை மீறியவை. என்னை நேரிலே அறியாதவர்கள் இந்த அடையாளத்தின் மூலமாகவே காண்கின்றனர் என்பது எனது விருப்பத்தையும் மீறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த அடையாளத்தைக் கொண்டு நான் அந்நியப்படுத்தப்படுவதை வன்மையாக மறுக்க வேண்டிய கட்டாயச் சூழலில், எனது மொழியும் அவ்வப்பொழுது கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் போல், என்னிடத்தில் பதிலை எதிர்பார்ப்பவர்களின் வன்மத்தையே முன்வைத்தது. இந்த அந்நியப்படுத்தும் அடையாளங்களை விட்டு விலக வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் மீண்டும் விலகி வெளியேறித் திரும்புகிறேன் - புதிதாக என்னை உணர்ந்தவனாக.
மனுஷ்யபுத்திரன் தனது நீராலானது என்ற கவிதைத் தொகுதியின் முன்னுரையில் எழுதுகிறார், 'கவிதைக்கான புலன்கள் அழிந்து என் படைப்பியக்கத்தின் அந்திமப் பருவத்தை எய்திவிட்டேனோ எனத் தோன்றும் படியாக எல்லாமே சலனமற்றுப் போயிருந்தன. என் மொழியின் வழியாக எப்போதும் வெளியேறிக் கொண்டிருப்பவனாக இருந்தேன். தற்செயலாக நான் வர நேர்ந்துவிட்ட ஒவ்வொரு இடத்திலிருந்தும், நாற்காலிகளிலிருந்தும், முடிவுகளிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் முடிவில்லாமல் வெளியேறிக் கொண்டேயிருப்பது தான் எனது எழுத்தின் பயணவழியாக இருந்திருக்கிறது. எழுத முடியாது என்பது வெளியேற முடியாது என்பதையே குறித்தது'
மனுஷ்யபுத்திரனுக்கு படைப்புச் சக்தியின் அந்திமப் பருவத்தை எய்தி விட்டேனோ என்ற அச்சத்தைத் தருகிறது சலனமற்ற பொழுதுகள். எனக்கு படைப்பு சக்தி என்ற பிரம்மைகள் அல்லது மாயையைகள் எல்லாம் கிடையாது. நான் சலனமற்றுப் போவதெல்லாம், இயல்பை மீறி அந்நியப்படுத்தப்படும், சிதைக்கப்படும் எனது அடையாளங்கள் பற்றிய கவலைகள் எழும் பொழுது தான். அப்பொழுதெல்லாம் என்னை நானே சற்று வெளியேற்றிக் கொள்கிறேன் - புதிதாக ஒன்றைக் கண்டு கொள்ள அல்லது இந்த அடையாளச் சிதைவுகளிலிருந்து மீண்டு எழ. நீண்ட மௌனங்களுள் அமிழ்ந்து போகின்றேன் என்னுள்ளே அடைந்து கிடக்கும் தேவையற்ற பிம்பங்களையும் அசூயைகளையும் தொடர்ந்து வெளியேற்றிக் கொள்ள. நீண்ட மௌனங்கள் இந்த வெளியேறுதலுக்கான ஒரு அஞ்சலியாகவே அமைகின்றன. இந்த தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதன் மூலமே, எனது அடையாளங்களை மறுக்க நான் விரும்புகிறேன்.
மனுஷ்யபுத்திரனின் இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கு முன், எனது இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளச் செய்யும் அனுபவங்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. (இலக்கியம்) வாசித்தல் என்னிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களில் ஒரு துளியையேனும் தொட்டிருப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வாசித்தல் என்னை ஒன்றிலிருந்து வெளியேற்றி மேலும் மேலும் புதிய பாதைகளில் பயணிக்க வைக்கிறது. புதிய புதிய அறிமுகங்களை தேடி இட்டுச் செல்கிறது. வாசித்தலைப் போலவே பார்த்தலிலும் திருப்பங்களைத் தந்திருக்கிறது. வெறுமனே வாசித்தல் - பொழுதுபோக்கிற்கான வாசித்தல், பார்த்தல் என்ற தளத்திலிருந்து வெளியேற்றி, என்னை நானே உணர்ந்து கொள்ள வைக்கும் பாதைகளுக்கான வாசித்தலை, பார்த்தலைத் தேடச் சொல்லி அலைக்கழிக்கிறது.
இலக்கியம் வாசித்தலால் என்ன பயன் என சொல்பவர்களுக்கு எனது பதில் மேலே சொன்னவை தான். இந்த வாசித்தலால், பார்த்தலால், வெளியேறுதாலால், புதிதாக வாழ்க்கையை வாழும் ஒரு புது அனுபவம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆக, இவன் தான் நண்பன் என நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் பொழுது, நான் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தளத்திற்குப் போயிருப்பேன். நிறைய எழுதி, நிறைய பேசி, என்னைப் பற்றி எல்லோரையும் நிறைய பேச வைப்பதை விட, நிறைய பார்த்து, நிறைய எழுதி, நிறைய என்னைப் பற்றிப் புரிந்து கொண்டவனாக இருப்பேன்.
ஆக, நான் எங்கும் தங்காமல், போய்க் கொண்டே இருப்பவன். வெளியேறிக் கொண்டே இருப்பவன் - ஒரு நதி தடையற்று ஓடிக் கொண்டேயிருப்பதைப் போன்று.
நான் நண்பன்.
நான் எழுதிக் கொண்டிருக்கும் தளங்கள் கீழே:
நண்பன்
மாற்றுத்தடங்கள்
Nanban
வலைச்சரத்திற்காக எழுதிய பதிவுகளை வெளியிடுகிறேன். இது முதல் பதிவு.
No comments:
Post a Comment