"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, January 31, 2008

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்
உனக்காக எப்படி துக்கிக்கிப்பதென்ற
ஒத்திகைகள்
எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன

ஏகத்துக்கும் நீருண்டு வயிறு புடைத்தப் பெருநதி
கரையறியாது தடம் மீறி பிரவாகிப்பதைப் போன்று
உன் நினைவுகளின் புறவடிவம்
என்னுள் மரணிக்கும் தினத்தின் துக்க ஒத்திகைகள்
பெருக்கெடுத்தோடிக் கொண்டேயிருக்கிறது

குமுறிப் பொங்கியெழுந்து வீழ்வேனோ
மீளவியலாத அருவியைப் போன்று?

உதடுகளைக் கடித்துக் கொண்டு
கனத்த மௌனத்துள்
என்னை அடை காப்பேனோ?

கறுப்புக் கண்ணாடியணிந்து
கலங்கிய ரத்தச் சிவப்புக் கண்களை
பிறர் பார்வையிலிருந்து மறைப்பேனோ?

எப்படி
என் துக்கங்களைக் கொண்டாடுவேனென்பதை
அந்த நிமிடத்தைய தீர்மானங்களாவிருக்கட்டும்

முதலில்
உன் மரணம் நிகழ்ந்தால்
எனக்கு அறிவிக்க ஏற்பாடொன்றைச் செய்து



வை!!!

2 comments:

Unknown said...

அழுத்தமான கவிதை

மன நெருக்கமும் உடல் தூரமும் அதிகமாகிக் கிடக்கிறது

பிளந்துபோட்டிருக்கும் இந்த தூரம் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இதன் உணர்வுகள் அழுத்தமானவையேதான்

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

நண்பன் said...

வாங்க புகாரி, நலம் தானே?

மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும்.

அன்புடன் நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்