"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, January 31, 2008

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்
உனக்காக எப்படி துக்கிக்கிப்பதென்ற
ஒத்திகைகள்
எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன

ஏகத்துக்கும் நீருண்டு வயிறு புடைத்தப் பெருநதி
கரையறியாது தடம் மீறி பிரவாகிப்பதைப் போன்று
உன் நினைவுகளின் புறவடிவம்
என்னுள் மரணிக்கும் தினத்தின் துக்க ஒத்திகைகள்
பெருக்கெடுத்தோடிக் கொண்டேயிருக்கிறது

குமுறிப் பொங்கியெழுந்து வீழ்வேனோ
மீளவியலாத அருவியைப் போன்று?

உதடுகளைக் கடித்துக் கொண்டு
கனத்த மௌனத்துள்
என்னை அடை காப்பேனோ?

கறுப்புக் கண்ணாடியணிந்து
கலங்கிய ரத்தச் சிவப்புக் கண்களை
பிறர் பார்வையிலிருந்து மறைப்பேனோ?

எப்படி
என் துக்கங்களைக் கொண்டாடுவேனென்பதை
அந்த நிமிடத்தைய தீர்மானங்களாவிருக்கட்டும்

முதலில்
உன் மரணம் நிகழ்ந்தால்
எனக்கு அறிவிக்க ஏற்பாடொன்றைச் செய்து



வை!!!

Wednesday, January 30, 2008

இன்றைய தினம்



இன்றைய தினம்


துளித்துளியாய் ஒவ்வொரு அசைப்பிலும்
பெருவெளியின் துறத்தலில் கரைய
அவசரமற்ற நிதானத்தில்
தன்னைக் களைந்து கொண்டிருக்கிறது
அந்த ஒற்றை மரக்காடு

ஒவ்வொரு விடியலிலும்
நேற்றைய தின பெருவன உதிர்ப்பின்
எச்சங்களை அள்ளித் தீர்க்கும்
கவலைகள் பெருகிச் சேர்கிறது

அள்ளித் தீர்க்காத வேளையில்
சட்டை உரித்துப் போட்டுப் போகும்
பாம்பொன்று வந்து போகலாம்

ஈரப்பிசுபிசுப்பில்
அவிந்து மக்கும் கழிவிற்கிடையில்
ஆயிரங்கால் பூரான்களின் குடும்பத் தொகுதியொன்று
பல்கிப் பெருகத் தொடங்கலாம்

முகவரி தேடியலையும்
புதியவன் ஒருவனுக்கு
பாதைகள் விளங்காமல் போகலாம்

நேற்றைய இழப்புகளிலும்
நாளைய அச்சங்களிலும்
பார்க்கப்படாமலே கழிந்து போகின்றது
எல்லாம் களைந்து
திசைகளெங்கும் தன்னைக் கிடத்துகின்ற
மரத்தின் காய்ந்த அம்மணம்

Tuesday, January 29, 2008

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...


ஒரே வாரத்தில் இத்தனை அதிகமாக எழுதியதில்லை. எழுதினால் வாசிப்பதில்லை. வாசித்தால் எழுத நேரமில்லை என்று போய்க்கொண்டிருக்ககயில், வாசித்து வாசித்து எழுத வேண்டிய இந்த வாய்ப்பு மிக்க மகிழ்வாக இருந்தது என்பது உண்மை. எதிர்பாராத சில தொல்லைகள் குறுக்கிட்டன. மூன்று நாட்களாக மின்சாரமும், நீரும் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தனை எழுதியதே வியப்பாக இருக்கிறது. முன் கூட்டிய தயாரித்தல் ஏதுமின்றி தோன்றிய பொழுதும் வழக்கமுள்ள நான், இப்பொழுதும் அதையே பின்பற்றினேன். ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் தான், எதைப் பற்றி எழுதுவது என முடிவு செய்து கொண்டு, பின் அது குறித்த தேடுதலைத் தொடங்கினேன் என்பதும் உண்மை. அரசியல் குறித்தான பதிவுகள் மட்டுமே தொடர்ந்து நான் வாசித்து வந்தவை. மீதியெல்லாம், அந்த நேரத்தில் தோன்றியவை மட்டுமே.

விடை பெறும் முன், துபாய் பதிவர்களின் பதிவுகளைப் பற்றிய ஒரு இடுகையுடன் முடித்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆவல். இவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருக்கிறேன். சிலரை அடிக்கடி. மேலும் சிலருடன் இணைந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதுவும் உண்மை. தனித்தனி பார்வைகளுக்குக் கீழே படியுங்கள்:

ஜெஸீலா பெண்கள் போகப் பொருளா என்ன என்ற கட்டுரையின் ஆதங்கம் அவரது சிந்தனை போக்கைச் சொல்லும். கலகலப்பாகவும், தீவிரமாகவும் ஒரே சமயத்தில் எழுதப்பட்ட படைப்புகளின் சொந்தக்காரர். அவரைப் போலவே அவரது எழுத்துகளும் இனிமையாகப் புன்னகை பூக்கும்.

ஆசிப்
எல்லாவித பிரச்சினைகள் பற்றியும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வுடன், பிறர் மனம் புண்படாதபடி, தான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிடக்கூடிய லாகவம் மிக்க எழுத்துகளைக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், கவுஜைகள், பொதுப்பிரச்சினைகள் என்று எல்லாமுமாக அலசிக் கொண்டிருப்பவர். நடுநடுவே திரண்ட அனுபவம் கொண்ட தந்தையின் கட்டுரையும் கூட வரும். முளைவிடும் பையனின் திரைவிமர்சனம் ஒன்றும் வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறைகளாக ஒரே தளத்தில் எழுதுகிற வலைப்பூக்கள் இல்லை என்றே சொல்லலாம்.

முத்துகுமரன் ஆரம்பகாலக் காதல் கவிதைகளை இப்பொழுது சற்று மெருகேறிய நடையில் எழுதி வரும் நண்பர் - அறைத்தோழர். பெரியார் கருத்தியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெரியாரைப் பற்றிய புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறுகதைகள் எழுதினாலும், இன்னும் 'சொல்வதைத்' தவிர்த்து விட்டு, கதையை நிகழ்த்திக் காட்டுங்கள் என்று விமர்சிக்கும் அளவில் இருக்கிறது. இன்னும் மெருகேற காலமிருக்கிறது. சிறப்பான எழுத்துகளையும், சமூக சிந்தனைகளையும் முன்வைத்து இன்னும் சிறப்பாக எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இசாக் ஒரு நல்ல உழைப்பாளி. மிக அதிகமாக செய்யும் வேலையே காலத்தை உறிஞ்சிக் கொள்ள, மீதி கிடைக்கும் நேரங்களில், எவ்வாறு இத்தனை செயல்பட முடிகிறது என வியக்க வைப்பவர். கவிதைகள் எழுதும் இவர், தன் கவிதைகளில் பலவற்றைப் புத்தகங்களாக கொண்டு வந்திருப்பவர். சமீபத்திய சாதனை, குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டது தான். அண்ணன் அறிவுமதியுடன் நெருங்கிய தொடர்பிலும் இருப்பவர். அரசியல் ஈடுபாடுமுள்ளவர்.

கவிமதி
பெரியாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர். கவிதைகள் இவரது முக்கிய மொழி. கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளும் எழுதி அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரும் முயற்சிலும் இருக்கிறார்.

தம்பி பேரன்புகள் எப்பொழுதுமே கிடத்தப்பட்ட நீண்ட மௌனத்துள் சிக்குண்டு அலையும் என்பது எனது அனுமானம். ஏனென்றால் நான் அப்படித்தான் இருக்கிறேன். 'பேரன்பும், பேரன்பு மட்டுமே கொண்டவன்' என தம்பி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நேரிலே காணும் பொழுது மிக நீண்ட மௌனத்தின் சொந்தக் காரர். கொஞ்சம் அறிமுகம் ஆனதும் பேசுகிறார் தேவைக்கேற்ப. அவர் அழகாக, வாசித்து ஈடுபட வைக்கும் ஒரு நடையில் எழுதுவார் என்பதே தெரியாதிருந்தது. அப்பொழுது தான், ஆசிப் தம்பியைப் பற்றி எழுதிய ஒரு சிறுபதிவை படிக்க நேர்ந்தது. ஆசிப் தன் ஆசான் என்று தம்பி குறிப்பிடுகிறார். ஆசிப், தம்பியின் எழுத்துகள் வாசிப்பதற்கு அலாதியானவை; அரிதானவை என எழுதுகிறார். அதை வாசித்த நான் பதில் எழுதிவைத்தேன் - 'Indulging in mutual back scratching' என்று. ஆனால், பின்னர் தம்பியின் சிறுகதைகளைப் படித்த பின் தான் தெரிந்தது - அவருடைய எழுத்துகள் செறிவும், வளமையும், புனைவும் மிக்கது என்று. 'back scratching' என்று எழுதியதற்கு இதுவரையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை. வெறும் வார்த்தைகளால் சொன்னால் ஆகாது. சரியான சந்தர்ப்பத்தில், சரியான தளத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று காத்திருந்தேன். இது தான் சமயமென்று நினைக்கிறேன். - 'Asif & Thambi - My heartfelt apologies to you, both'

அய்யனார் எழுதுவதற்கு, தனக்கென ஒரு தனி நடை வைத்திருக்கும், அய்யனாரின் எழுத்துகளைப் பற்றிய அறிமுகமா? அனைவருக்கும் தெரியும் தானே? ஏற்கனவே அவரது பதிவுகளைப் பற்றிய ஒரு பார்வையை திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல் என்ற தலைப்பிலே எழுதிவிட்டேன். அதனால், அடுத்தவர்களைப் பற்றி...

குசும்பனின்
படிக்கலாம் வாங்க - போட்டோஷாப் உபயோகிப்பதைப் பற்றிச் சொல்லித் தருகிறார். அதிலும், கறுப்பு வண்ண படங்களை எப்படி வண்ணப் படமாக மாற்றுவது என்பது குறித்த அவரது பதிவு அருமை. எல்லோருக்கும் பயன்படும் வகையில் அமையும். அதிலும் குறிப்பாக புகைப்பட கலைஞர்களாக வலம் வர விரும்புபவர்களுக்கு, அல்லது புகைப்பட தொழில் செய்ய முனைவோருக்கு உதவிகரமாக அமையும். தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

சுல்தான் மிக மென்மையாகவும், அமைதியாகவும் இயங்குபவர். நகைச்சுவை உணர்வும் உடையவர். வாகன ஓட்டிகளைப் பற்றிய அவரது பதிவே அதற்குச் சான்று. என்றாலும், ஏதோ எண்ணிக் கொண்டு, வளைகுடா நாடு வந்து, பின்னர் வேறு எதுவாகவோ மாறிப் போகும் நண்பர்களைப் பற்றிய ஒரு கார்ட்டூன் அட்டகாசம். Just arrived என்பதில் தொடங்கி, இறுதியாக Got converted என்று முடித்திருக்கும் வரையிலும் அருமை என்றாலும், இறுதியாக converted to what? என்று எழுதாது ஒரு குறை தான். அதுபோல அவரது நாட்டுப்புறப் பாடல்கள், சிலேடை, என்ற இலக்கிய ஆர்வத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து தனது ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுவார் எழுத வேண்டுமென்று விரும்புகிறேன்.

கோபிநாத், அபிஅப்பா, சென்ஷி இவர்களைப் பற்றிய நேரிடையான அறிமுகம் இல்லை. வல்லிசிம்ஹன் அவர்கள் துபாய் வந்த பொழுது, பார்த்திருக்கிறேன். ஆனால், அதிகம் பேசியதாக நினைவில்லை. துபாய் பதிவர்கள் பற்றிய ஒரு இடுகை செய்யலாமென்று தோன்றிய பொழுது தான் இவர்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். சிநேகத்தை மட்டுமே பேசுவேன் என்று அடம் பிடிக்கும் எழுத்துகள் இவை. வெகு தீவிரமாக விவாதங்கள் புரிந்து, என்ன சாதித்தோமென்று எப்போதாவது சில சமயங்களில் ஒரு சலிப்புத் தோன்றும் பொழுது, இவர்களைப் போலவே, சிநேகம் மட்டுமே பேசி, மனதை எப்பொழுதும் இலகுவாக வைத்துக் கொண்டால் என்ன என்று தோன்றும். ஆனால், அத்தகைய பாதைக்குத் திரும்பவும் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.

பெனாத்தல் சுரேஷ் நகைச்சுவை தான் பிரதானமென்றாலும், அவ்வப்பொழுது விவாதத்தைக் கிளப்பும் பதிவுகளையும் இட்டு விடுகிறார். அப்படியான சமீபத்திய ஒரு பதிவு தான் இது. புது வருடத்தைக் கொண்டாடுபவர்கள் தான் இது குறித்து கவலை கொள்ள வேண்டும், நேற்றைய கவலைகளுக்காக நொந்து கொள்வது, நாளைய தினத்துக்காக அச்சம் கொள்வது என இன்றைய தினத்தை ரசிப்பதை இழந்து கொண்டிருப்பவர்கள் கூடி விவாதிக்க வேண்டிய ஒரு சமாச்சாரமிது - ஒரு வருடத்தின் முதல் நாள் குறித்த விவாதங்கள். அது போகட்டும் - அவ்வப்பொழுது அவர் எழுதும் நகைச்சுவைகள் - அதுபோலவே நேரிலும் அவரது நகைச்சுவை ததும்பும் பேச்சுகள் பிடிக்கும். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொலைபேசியில் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தும் சாமர்த்தியம் இல்லையென்பதால், பெரும்பாலும் தொலைபேசிகளைத் தவிர்த்து விடுகிறேன் - வாய்ப்புகள் கிடைத்தால் சந்திக்கலாம் நண்பரே.

லொடுக்கு கிரிக்கெட் பற்றி எழுதும் பொழுது கட்டாயம் வந்து பின்னூட்டமிட்டுச் செல்வார். அவருடைய ஆர்வம் கிரிக்கெட் நுணுக்கம் சார்ந்தது. என்னுடையது கிரிக்கெட்டின் அரசியல் பற்றியது. சென்னை ரசிகர்கள் பற்றி அவர் எழுதியது நிஜமாகவே நம்மைப் பெருமையடைய வைக்கும். என்றாலும் லொடுக்கு என்ற பெயர் ஏன்? அவரிடம் நான் கேட்கவில்லை. அவராக சொன்னால் சொல்லட்டுமே!

Monday, January 28, 2008

ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....

ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....

ஒரு தீவில் தனித்து விடப்படும் தனிமை கிடைத்தால் அதை எவ்வாறு கொண்டாடுவாய் என்று ஒரு கேள்வி கேட்கப்படுமென்றால், 'வாசித்து' கொண்டாடுவேன் என்று தான் சொல்வேன். வாசிப்பு என்பது அத்தனை வசீகரமானது. எதை வாசிக்கிறோம் என்பது வேறுபடலாம். ஆனால் வாசித்தல் தரும் இன்பம் அனைவருக்கும் பொதுவானவை. வெறுமனே வாசித்தல் என்பது ஒரு வகை என்றால், வாசிப்பைத் தந்தவர்களைப் பற்றிய அறிமுகங்களைத் தரும் வாசிப்பும் மிக அலாதியானது. சுவராஸ்யமானது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களையும் தீர்மானிக்கக் கூட, இந்த இலக்கியச் சண்டைகள் ஒருவகையில் உதவலாம்.

பல காலங்களாக, அரசியல் வாசிப்பில் திளைத்திருந்த பொழுதும், அவ்வப்பொழுது இலக்கியங்கள் பக்கமும் திரும்பும். சமீபத்தில், இலக்கியமும் அரசியலும் கலந்த ஒரு வாசிப்பைத் தேடிய பொழுது சிக்கியது தான் இந்த இலக்கியச் சண்டைகள் பற்றிய பதிவுகள். இந்த அரசியல் வழியாக அறியக் கிடைப்பது - ஒருவருக்கு மறுபக்கம் என்று ஒன்றும் உண்டு. ஒரு வழியாகவே பயணப்படும் நமது பார்வைகளை அந்த படைப்பாளியின் மறுபக்கத்தையும், அதன் போலித் தனங்களையும் சுட்டிக் காட்டும் பொழுது, இலக்கியம் படைப்பவர்கள் எப்படி அவர்களது படைப்பிற்கு எதிராகவும் இருக்கிறார்கள் - இயங்குகிறார்கள் என்ற புரிதலையும் தருகிறது. அது மட்டுமல்ல, ஒரு படைப்பின் நோக்கம், அதற்கான உன்னதம் - சொல்லப்பட்டவற்றிலிருந்தும் மாறுபாடும் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இலக்கியம் வாயிலாக தாங்கள் முன்வைக்கும் பார்வைகளின் பின்னால், உள்ளார்ந்த அர்த்தத்துடன், அவர்கள் பதிவு செய்யும் சுயவிருப்பு வெறுப்புகளையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த இலக்கிய சச்சரவுகள். அந்த வகையில், இலக்கியம் படிப்பதானால் கிடைக்கும் பார்வைகளைப் போன்றே, இலக்கியம் படைப்பவர்கள் நம்மிடையே இருந்து மறைக்க விரும்பும் பார்வைகள் வழியாகவும் நிறைய அறிந்து கொள்கிறோம். வாசிப்பு இன்பத்திற்காக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாலும், அந்த எழுத்துகளில் முற்றிலுமாக மயங்கி விடாமல், நம்மை மீட்டுக் கொள்ளவும், இந்த மறுபார்வைகள், விமர்சனங்கள் நம்மைத் தயார் செய்து வைக்கின்றன. இந்த வகையில், இலக்கிய அரசியலும் சுவராசியமானது. அந்த அரசியல் பற்றிய ஒரு பதிவு Dispassionated DJவில்...

இலக்கிய அரசியல் பேச ஆரம்பித்தால், அதில் பீடங்களில் எழுந்தருளும் ஆளுமைகளைக் கண்டு கொள்ளாமல் போக முடியாது. சமீப காலங்களில் தமிழகத்தில், இலக்கிய பீடமொன்று அமைக்கப்பட்டு வருகிறது - அதில் ஏற்றி வைக்கப்படாத பாடு படுகிறார்கள் - சுரா என்ற மனிதரை. இது குறித்த நகைச்சுவை கலந்த பதிவு ஒன்றைப் படியுங்கள், சுகுணா திவாகர் எழுதிய இந்தப் பதிவில்... எப்பொழுதுமே, ஒரு மனிதனை, அவனது தகுதிக்கும் மீறிய ஒரு புனித பிம்பமாக அறிவிக்கப்படாத கடவுளாக மாற்ற முனையும் பொழுது தான், அந்த ஆளுமையின் மறுபக்கம் குறித்தும் செய்திகள் வருகின்றன. அந்த எழுத்தாளர்களை அப்படியே விட்டுவிட்டால் கூட, அவர்கள் தங்கள் சொந்த எழுத்துகளின் பலத்தால், ஒரு காலத்தில் நிஜமாகவே எழுந்து நின்று விடக் கூடும் தான். ஆனால், பாவம், இவர்கள் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முனையும் பொழுது தான், முட்டுக் கம்பை எவராவது பறித்து விடுகின்றனர். பின் என்ன, வெறுமனே ஒரு வடிவத்தைத் தாங்கி நின்று செயலிழந்து கிடப்பதை விட, ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு தனது ஆடுகளிடையே ஒர் கட்டுப்பாட்டை உருவாக்கப் பயன்படுமென்றால், அதல்லவா, முக்கியமான பயன்பாடு அந்த முட்டுக் கம்பிற்கு!

இலக்கியச் சண்டைகள், சில சமயம் இலக்கிய வட்டத்தையும் தாண்டிப் போய்விடும். வேறு எல்லைகளுக்குள்ளும் நுழைந்து, விமர்சகர், விமர்சிக்கப்பட்டவர் என்ற இருவரையும் பற்றிய பல பரிமாணங்களையும் எடுத்து வைக்கும். அதுவே, போதுமானதாக இருக்கும் - அந்த இருவரைப் பற்றியும் அறியவும். மிக கவனமாக, ஒரு ஆளுமையைத் தனக்காகக் கட்டிக் காத்து வருகையிலே, தன்னையுமறியாமல எங்காவது ஓரிடத்தில், தன் அடையாளத்தை வெளிப்படுத்தி விடக்கூடும் இந்த சச்சரவுகள். பின் தான் கட்டியெழுப்பிய கடந்த கால பிம்பங்களைத் தூக்கிக் காட்டி என்னையா இப்படி சொல்கிறீர்கள் என்பது தொட்டு, தான் விமர்சித்தவர், எப்படிப்பட்டவர் பார் - அவர் செயல்பாடுகள் எத்தனை தவறானவை என்பது வரை பேச ஆரம்பித்து விடுவோம். ஆனால், விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ஒரு செயலை மறந்து விட்டு, அந்த செயலின் உரிமையாளரின் பிற செயல்களின் நியாய அநியாயங்கள் முன்னுக்கு வந்து விடும். என்றாலும், பெரும்பாலானவர்கள் ஒரு நிலை எடுக்க, அதற்கு முற்றிலும் மாறான ஒரு நிலை எடுத்து, அங்கிருந்து தன் நியாய வாதங்களை பதட்டமின்றி, அடுத்தவர் மீதான குற்றச்சாட்டாக இல்லாமல், ஒரு சிறந்த விளக்கமாக முன் வைக்கும் இந்த சற்று காலம் முன்னே நடந்தேறிய கலைஞர் - ஞாநி சண்டை பற்றிய இந்தப் பதிவைப் படியுங்கள். செல்வநாயகியின் இலக்கிய வாதிகள் குறித்த அரசியல் என்ற வகையில் தான் இந்த சுட்டி. செல்வநாயகியின் இந்தச் சுட்டி சிறப்பான எழுத்துகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டவில்லை. ஞாநி - கலைஞருக்கு மட்டுமே அறிவுரை கூறினார். அவர் தன் அறிவுரையை இன்னும் ஓர் பரந்த தளத்தில் வாஜ்பேய், அத்வானி, பால் தாக்கரே, தொடரும் மரபான வயது கடந்த இந்திய முதல் குடிமகன்கள், என்று இந்தியாவில் அதிகார மேடையேறும் ஆசையுடன் கூடிய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொதுவான ஒரு அறிவுரையாக அவர் பேசி இருக்க வேண்டும். ஆனால், கலைஞர் ஒருவர் மட்டுமே வயது கடந்த பின்னும் அதிகாரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று ஞாநி எண்ணியதில் தான் அனைவரும் அவரது சட்டைக்குள் நெளியும் பூணூலைக் கண்டு கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். வெறுமனே சுஜாதாவைச் சாடியதால், அவர் சமயச் சார்பற்றவர் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான நேசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இப்படி எழுதினார், அப்படி எழுதினார் என்பதில் வாழ்க்கை இல்லை. வாழ்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது. வாழும் பொழுது பேசும் பேச்சுக்கும், பிறரைப் பிரமிக்க வைக்க - தனது புலமையை பிறருக்குக் காட்சிப்படுத்த, எழுத்து தரும் போதை என்று ஒருவர் எழுதுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். பெரும் இலக்கியகர்த்தாக்களில் பலர் தங்கள் எழுத்துகளை எங்கோ ஒரு தளத்தில் வைத்து விட்டு, அதற்கு முற்றிலும் மாறான வாழ்க்கையில் இயங்கத் தான் செய்கின்றனர். ஒருவர் பிரமாதமாக எழுதி விட்டதினாலே, அவர் அப்படியாக்கும் என்று முடிவு கட்டி விட வேண்டியதில்லை.

இந்த இலக்கிய சச்சரவுகள் எல்லாம் ஒரு சிறுதுளியாக ஒரு அறிமுகம் மாத்திரமே - ஒரு மனிதனை விளங்கிக்கொள்வது அவனது இலக்கியத்தில் பாதியைப் புரிந்து கொள்வதாகும். அடுத்த முறை, ஒரு புத்தகம் வாங்கும் பொழுது, அதன் ஆசிரியனையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வாங்குங்கள். அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள, கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் - நிறைய இலக்கிய சண்டைகள் நடக்கின்றன. தெரியவரும்.

தயவு செய்து முதுகு சொறியும் அறிமுகங்களை விட்டு விலகி நின்று கவனியுங்கள்.

ஆழ மேயுங்கள்

ஆழ மேயுங்கள்

ஆழ மேயுங்கள்:


எழுத வேண்டுமென்ற ஆர்வமும், முனைப்பும் ஒருவனிடத்தில் தோன்றிவிட்டால், உடன் என்ன செய்கிறார்கள்? கவிதை எழுதுகிறார்கள். கதை எழுதுகிறார்கள். உலக இலக்கியவாதிகளைப் படித்து கொண்டாடுகிறார்கள். சிலாகிக்கிறார்கள். நம் இலக்கியங்கள் எல்லாம் உலகத் தரமானதுதானா என்ற விவாதம் நடத்துகிறார்கள்.

வெகு சிலர் மாத்திரமே, தங்கள் எழுத்தின் வன்மை கொண்டு, தன்னைச் சுற்றி நிகழும் செயல்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுகிறார்கள். அப்படி ஒரு விமர்சனத்தை முன் வைப்பதன் மூலம், தான் ஒருசார்பானவன் என முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சத்தையும் மீறி, எழுதுகிறார்கள். மொழி என்பது அவர்களது பயன்பாட்டினால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னைச் சுற்றிய சூழலைக் குறித்து அக்கறையற்ற புனனவுகளால் என்றும் ஒரு மொழி வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்க முடியாது.

இத்தகைய மொழி அறிவைத் தங்கள் சமூக அக்கறை மிகும் எழுத்துகளுக்காக அர்ப்பணிக்கும் சில எழுத்துகளைப் பற்றியும் சொல்லி விடலாம். இவர்கள் குறித்து எனக்கு மிக்க மதிப்புண்டு - சமூக அக்கறையும் அதன் விளைவாக எழும் சிந்தனையையும் எழுத்தில் எழுதி வைக்க அசாத்திய துணிவு வேண்டும். எந்த இலக்குமற்ற ஊர்ப்புறணிகளுக்கு கிடைக்கும் வாசிப்பு அளவிற்கு, இந்த பதிவுகளில் வாசகர்கள் வந்து குவிவதில்லை தான். எல்லோரிடத்திலும் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்று 'பரந்த மனம் உடையவராக' வேஷமிடும் பலரும் இந்த எழுத்துகளிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர் என்பதும் வெளிப்படை. ஆனால், இதையெல்லாவற்றையும் மீறி, இந்த எழுத்துகள் வாழ்ந்திருக்கும் - வாசிக்கப்படும்.

அத்தகைய எழுத்துகளை எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களைப் பற்றி:

பெண்களின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் குறித்து எப்பொழுதும் என்னுள்ளே ஒரு தீராத கோபம் உண்டு. ஒரு சமூகமாக ஒரு கூட்டம் கூடி, ஒரு பெண்ணின் மீது வன்முறை நிகழ்த்துவது அநாகரீகம் என்றால், ஒரு அரசே முன்னின்று ஒரு சமூகத்தின் மீது கொடுமை நிகழ்த்த துணை புரிந்த ஒரு செயலைக் கண்டித்து எழுதப்பட்ட அசுரனின் பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று? என்ற இந்தப் பதிவைப் படித்தால் தெரியும், நான் சொல்லும் எழுத்தின் பயன்பாடு என்னவென்று. எது தண்டனை என்ற இந்தப் பதிவின் அலசல், நீதியின் ஒரு புதிய பரிமாணத்தை முன் வைக்கிறது. சிறைத் தண்டனை என்பது வர்க்கத்தினால் தீர்மானிக்கப்படுகிறது - அது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் அதிக தண்டனை தருகிறது என்பது நமது நீதி வழங்கும் முறை சரிதானா என்ற புதிய கேள்வியையும் முன் வைக்கிறது. சார்புத் தன்மைகளைத் தாண்டிய ஒரு பார்வையுடையவராகவும், அது குறித்த அக்கறையுள்ளவர்களாகவும் ஒருவர் இருப்பாரென்றால், இந்தப் பதிவைப் படித்து ஒரு வார்த்தையாவது பாராட்டி எழுதியே தீர வேண்டும்.

தன் இனம் அடிபட்டுத் துடிக்கையில் ஆறுதலாக ஒரு கவிதையை எழுதுவது கூட, இறையாண்மைக்குத் துரோகம் என்று பாடம் சொல்லும் நிலத்திலிருந்து பிழைக்கும் ஊடகத்துறையின் கள்ள மௌனத்தைச் சாடும் திரு வின் இந்தப் பதிவு, ஊடகத்துறையின் சில பெரிய பெயர்களின் போலித் தனத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பத்திரிக்கையாளர் மாலனுக்கு.... என்ற பதிவில் திரு சொல்லியிருக்கும் செய்திகள், எப்படி இந்திய இறையாண்மை என்ற பெயரில், பத்திரிக்கை ஊடகங்கள், சில விருதுதுண்டுகளுக்காக, தன் சொந்த இனத்தை அழிப்பையே வேடிக்கைப் பார்க்கிறது என்பதை வாசிக்க முடியலாம். யாராவது, எழுதக் கூடும், எப்படி, தமிழினம் மாலனுக்கும், ராமிற்கும் சொந்த இனமாக முடியும் என்று எழுதக் கூடும். உண்மை தான். தமிழினம் அவர்களது சொந்த இனமில்லை என்றிருக்கட்டும். ஆனால், அதற்காக, மனசாட்சியின் படி கூடவா செயல்படக்கூடாது?

சில மேலாண்மை மிக்க அரசியல் விளக்கவுரையாளர்கள், தேசபக்தியை ஏகபோகத்துக்கும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட சில அறிவுமிக்க இனங்களின் இறையாண்மைகளால் அவ்வப்பொழுது கொட்டப்படுபவர்களாக நாம் அமைந்து விட்டது மற்றொரு துரதிர்ஷ்டம். இலக்கியப் பாத்திரங்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நன்மை விளைவிக்கும் நலதிட்டங்கள் முடக்கிப் போடுவதை கண்டித்து மக்கள் போராட்டங்கள் நடத்தினால், அதற்காக அந்த மக்கள் தேர்ந்தெடுந்த அரசு கொட்டப்படும். இந்த மண்ணில் அவர்களுக்குள்ள உரிமையை மறுத்து மற்ற மாநிலங்கள் தங்கள் கதவுகளைச் சார்த்திக் கொள்ளும் பொழுது மௌனம் காக்கும். இந்த வகையைச் சார்ந்து சமீபத்தில் நடந்தது தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. பெயர் என்னவோ பிராணிவதை தடுத்தல். வதைத்தல் நிகழ்கிறதா இல்லையா என்பதை முழுமையாக அறியாமலே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது வழங்கப்பட்ட தீர்ப்பு தான் ஜல்லிக்கட்டிற்குத் தடை. இறுதியாக, தீர்ப்பிற்கு கிளம்பிய எதிர்ப்பும், தனது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து, மறுபரிசீலனையைக் கோரிய அரசு, மக்களின் தொடர் உண்ணாவிரதங்கள், கறுப்புக் கொடி, தடை மீறி, ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்ற உறுதி, அத்துடன் சில தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வம், முயற்சி, இவற்றினாலெல்லாம் இறையாண்மிடருந்து மீண்டது ஜல்லிக்கட்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கலாச்சார செயல்பாடுகளுக்கு முழுபாதுகாப்பு என்பதிலிருந்து எத்தனை எளிதாக, இல்லாத வதைத்தலின் பின்பு சென்று நீதி ஒளிந்து கொண்டது? வருத்தமாக இருக்கிறது - சில இனங்கள் மட்டும் தங்களுக்கென்ற அடையாளங்களைப் போராடியே மீட்க வேண்டுமென்ற நிலைமை இருப்பது. ஜல்லிக்கட்டு தடையைப் பற்றிய தகவல்களை பிரபு ராஜதுரையின் மணற்கேணி,
தளத்தில் இருக்கிறது. ஒரு வழக்கைப் பற்றி எழுதும் பொழுது எப்பொழுதுமே ஒரு சுவராசியம் வந்து ஒட்டிக்கொள்ளும். இங்கும் அப்படித்தான். அத்துடன், சல்லிக்கட்டின் உண்மைப்பொருளும் வெளிப்படும் வகையில் எழுதி இருக்கிறார். ஒரு தனிமனிதனின் சுய விருப்பு தவிர்த்து நீதிபதிகள் நடந்து கொள்வது எத்தனை முக்கியமானது என்பதையும் புரிய வைக்கிறது இந்த பதிவு.

இறையாண்மையைப் பற்றிப் பேசும்பொழுது, தேசபக்தியும் உடன் வந்துவிடுகிறது. தேசபக்தி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சிலர் உரிமை கொண்டாடுவதும், மற்றவர்கள் எல்லாம் அதை நிரூபணம் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதுவும், சில அரசியல் தலைமைகளுக்கு ஒரு ஆயுதமாகவே இருக்கிறது. அதிலும் தோல்வியடைந்து, ஆட்சிக் கட்டிலில் அமர வழியில்லை என்றதும், உடன் கையில் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் = இங்கு எவருக்கும் தேசபக்தியில்லை என்று கூட்டத்திற்கு கூட்டம் முழங்கித் திரும்புவது தான். இவற்றை நிராகரித்து, தங்கள் இனத்தின் மீதான அக்கறை குறித்துப் பேசுவது எவ்வகையிலும் கருத்துரிமையை மீறுவதில்லையென தொல்.திருமாவளவன் அளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு: தொல். திருமாவளவன் பேட்டியைப் படித்துப் பாருங்கள்.

இனம் என்ற ஒரு பெரிய வட்டத்தினுள் அடைக்கப்பட்டு, மறக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி பேச பலர் இருந்தாலும், அவர்களாஇப் பற்றிய அறிமுகங்கள் வெளி உலகிற்கு வெகு சொற்பமாகவே கிடைக்கின்றன. சில அரசியல் தலைவர்கள், தங்கள் பொதுவாழ்க்கையின் மேற்பூச்சுக்காக ஒடுக்கப்பட்ட மக்களிடம் தங்களுக்குப் பரிவு இருப்பதாகக் காட்ட முயற்சிப்பதுவும், பரபரப்பு செய்திகள் கிடைத்தால் மட்டுமே அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவோம் என்று அடம் பிடிக்கும் வெகு ஜன ஊடகங்களுக்கிடையில், வலைப்பூக்களில் சிலர் முனைப்புடன், தலித் இன அரசியல் எழுச்சி குறித்து எழுதி வருவது பாராட்டுக்குரியது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டி, ஒரு புதிய தகுதியை வலைப்பூக்களுக்குத் தருகிறது. வலைப்பூக்கள் என்றாலே, பொழுது போக்க எழுதும் இடம் என்ற தளத்திலிருந்து, இன்று அது தீவிரமான சிந்தனைகளையும் முன்வைக்கும் இடமாக மலரும் என்ற நம்பிக்கையைத் தரும் பதிவு இது. ஓசைசெல்லாவின் இந்தப் பதிவும், ஒலி மூலமாக அவர் வழங்கிய பேட்டியும், மீதி தொடர்ச்சியாக தமிழ்வெளித் திரட்டியிலும் காணக்கிடைக்கிறது. அனைவரும் படிக்க, கேட்க வேண்டிய ஒரு பேட்டி. ஓசை செல்லாவின் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் பேட்டியைக் கேட்பதற்கு. (தலைப்பு ரொம்ப நீளம்...) மீதி தமிழ்வெளியில் (தமிழ்வெளி திரட்டியாக இருந்தாலும், தொடர்ச்சியாக இருப்பதனால், அதன் சுட்டியும் கொடுத்திருக்கிறேன்...)

தலித் பற்றிப்பேசும் பொழுதே, இட ஒதுக்கீடு அரசியலும் கவனத்திற்கு வந்து விடுகிறது. தருமி எழுதிய இந்தப் பதிவில் இன்னமும், தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எந்த விதத்திலும் குறையவில்லை என்பதையும், இட ஒதுக்கீடைக் கண்டு புலம்புபவர்கள், இடஒதுக்கீடை என்றாவது ஒரு நாள் விலக்கிக் கொள்ள உதவும் உரிமைகளை தலித் மக்களுக்கு ஒரு துளியைக் கூட, சமூக தளத்தில் கொடுக்க முன்வரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இடஒதுக்கீடு என்பது நிறுத்தப்படவே இயலாத ஒரு அங்கமாக மாறிவிட்டிருக்கிறது நமது சமுதாயத்தில். சமூக அந்தஸ்து சமமாக அனைவரிடமும் ஒன்றென கலந்து மதிப்பும் மரியாதையும் மிகுந்ததாக மனித இனம் மதிக்கப்பட போகிறதோ அன்று தான் இடஒதுக்கீட்டையும் மறு பரீசீலனைக்கு உட்படுத்தும் காலம் வரும் என்ற நிதர்சனத்தையும் எடுத்து வைக்கிறது.


சமூக அக்கறை என்பது எத்தனையோ தளங்களில் இயங்கினாலும், சமூக நீதி என்ற தளத்தில் தான் இன்னமும் ஒவ்வொரு அங்குலத்தையும் போராடிப் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பதனால், அவற்றைப் பற்றிப் பேசும் சில கட்டுரைகளை எழுதிய வலைப்பூக்களை இங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளேன். இன்னும் நிறைய இருக்கலாம். ஆனால், மிக சமீபத்தில் எழுதப்பட்டவை இவை என்பதனால், இந்த கட்டுரைகள். மேலும் நாளை குடியரசு தினமும் கூட. ஆனால், எல்லோருக்கும் இன்னமும் குடியரசின் பலன்கள் போய்ச் சேராத நிலையில், இவை குறித்து இன்னமும் வலுவாகப் பேசப்பட வேண்டும். பேசியாக வேண்டும்.

கதை, கவிதை, இலக்கியம் எல்லாம் குடியரசின் பலன் மக்களிடத்தில் பெருமளவில் போய்ச் சேரும் பொழுது தான் பலன் அளிக்கும். அல்லது அவ்வாறு சேர்ப்பிப்பதற்கான ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அது தான் எழுத கற்றதன் பயன். இல்லையென்றால், நுனிப்புல் மேய்ந்து விட்டு, பெரிதாக எழுதி கிழித்து விட்டேன் என்று நம்மை நாமே முதுகில் வருடிக் கொண்டு அடுத்தவர்களிடத்தில் அங்கலாய்த்து அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கலான்.

எழுத்து என்பது சிந்தனையின் வெளிப்பாடு. சிந்தனையற்றவர்கள் எழுதுவதை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நேரத்தில் துயில் கொள்ளலாம். ஆரோக்யத்திற்கு நல்லது.

நான் நண்பன்



நான் நண்பன்


தன்னை சுயமாக முன்னிலைப் படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்வதில்லையென்பதில் இத்தனை நாட்களும் உறுதியாக இருந்தேன் - இன்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன். யாரிடமும் சொல்லாமல் தனித்து இயங்கிக் கொண்டிருந்த எனது விருப்பங்களைப் பிறருக்கும் அறிமுகம் செய்யும் ஒரு வாய்ப்பைத் தந்து செய்யுமாறு நண்பர்கள் வேண்டிக் கொண்ட பொழுது, ஒதுங்கிப் போவது எப்போதும் போல அத்தனை எளிதாக இல்லை. எனது விருப்பமாக நான் மட்டுமே படித்துக் கொண்டிருந்த சிலவற்றைச் சொல்லிக் கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்புகளோடு, என்னைப் பற்றியும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான், நண்பன்.

என்னைப் பற்றிய அறிமுகத்தை எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவது? என்னைப் பற்றிய முன்முடிவுகள் ஓரளவிற்காவது சிலரிடம் இருக்கக் கூடும். எந்த அடையாளாங்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் பெருவிருப்பமிருந்தாலும், எனது பெயரே என்னை ஒருதளத்தில் அடையாளப்படுத்துகிறது. பிறப்பினாலே இயல்பாக என்னுடனே பிறந்துவிட்ட இந்த அடையாளம் என்னை ஒருவித அந்நியப்படுத்தலுக்கே இட்டுச் சென்றது. எனது வாசிப்பும், அனுபவங்களும் இந்த அடையாளத்தை மீறியவை. என்னை நேரிலே அறியாதவர்கள் இந்த அடையாளத்தின் மூலமாகவே காண்கின்றனர் என்பது எனது விருப்பத்தையும் மீறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த அடையாளத்தைக் கொண்டு நான் அந்நியப்படுத்தப்படுவதை வன்மையாக மறுக்க வேண்டிய கட்டாயச் சூழலில், எனது மொழியும் அவ்வப்பொழுது கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் போல், என்னிடத்தில் பதிலை எதிர்பார்ப்பவர்களின் வன்மத்தையே முன்வைத்தது. இந்த அந்நியப்படுத்தும் அடையாளங்களை விட்டு விலக வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் மீண்டும் விலகி வெளியேறித் திரும்புகிறேன் - புதிதாக என்னை உணர்ந்தவனாக.

மனுஷ்யபுத்திரன் தனது நீராலானது என்ற கவிதைத் தொகுதியின் முன்னுரையில் எழுதுகிறார், 'கவிதைக்கான புலன்கள் அழிந்து என் படைப்பியக்கத்தின் அந்திமப் பருவத்தை எய்திவிட்டேனோ எனத் தோன்றும் படியாக எல்லாமே சலனமற்றுப் போயிருந்தன. என் மொழியின் வழியாக எப்போதும் வெளியேறிக் கொண்டிருப்பவனாக இருந்தேன். தற்செயலாக நான் வர நேர்ந்துவிட்ட ஒவ்வொரு இடத்திலிருந்தும், நாற்காலிகளிலிருந்தும், முடிவுகளிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் முடிவில்லாமல் வெளியேறிக் கொண்டேயிருப்பது தான் எனது எழுத்தின் பயணவழியாக இருந்திருக்கிறது. எழுத முடியாது என்பது வெளியேற முடியாது என்பதையே குறித்தது'

மனுஷ்யபுத்திரனுக்கு படைப்புச் சக்தியின் அந்திமப் பருவத்தை எய்தி விட்டேனோ என்ற அச்சத்தைத் தருகிறது சலனமற்ற பொழுதுகள். எனக்கு படைப்பு சக்தி என்ற பிரம்மைகள் அல்லது மாயையைகள் எல்லாம் கிடையாது. நான் சலனமற்றுப் போவதெல்லாம், இயல்பை மீறி அந்நியப்படுத்தப்படும், சிதைக்கப்படும் எனது அடையாளங்கள் பற்றிய கவலைகள் எழும் பொழுது தான். அப்பொழுதெல்லாம் என்னை நானே சற்று வெளியேற்றிக் கொள்கிறேன் - புதிதாக ஒன்றைக் கண்டு கொள்ள அல்லது இந்த அடையாளச் சிதைவுகளிலிருந்து மீண்டு எழ. நீண்ட மௌனங்களுள் அமிழ்ந்து போகின்றேன் என்னுள்ளே அடைந்து கிடக்கும் தேவையற்ற பிம்பங்களையும் அசூயைகளையும் தொடர்ந்து வெளியேற்றிக் கொள்ள. நீண்ட மௌனங்கள் இந்த வெளியேறுதலுக்கான ஒரு அஞ்சலியாகவே அமைகின்றன. இந்த தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதன் மூலமே, எனது அடையாளங்களை மறுக்க நான் விரும்புகிறேன்.

மனுஷ்யபுத்திரனின் இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கு முன், எனது இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளச் செய்யும் அனுபவங்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. (இலக்கியம்) வாசித்தல் என்னிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களில் ஒரு துளியையேனும் தொட்டிருப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வாசித்தல் என்னை ஒன்றிலிருந்து வெளியேற்றி மேலும் மேலும் புதிய பாதைகளில் பயணிக்க வைக்கிறது. புதிய புதிய அறிமுகங்களை தேடி இட்டுச் செல்கிறது. வாசித்தலைப் போலவே பார்த்தலிலும் திருப்பங்களைத் தந்திருக்கிறது. வெறுமனே வாசித்தல் - பொழுதுபோக்கிற்கான வாசித்தல், பார்த்தல் என்ற தளத்திலிருந்து வெளியேற்றி, என்னை நானே உணர்ந்து கொள்ள வைக்கும் பாதைகளுக்கான வாசித்தலை, பார்த்தலைத் தேடச் சொல்லி அலைக்கழிக்கிறது.

இலக்கியம் வாசித்தலால் என்ன பயன் என சொல்பவர்களுக்கு எனது பதில் மேலே சொன்னவை தான். இந்த வாசித்தலால், பார்த்தலால், வெளியேறுதாலால், புதிதாக வாழ்க்கையை வாழும் ஒரு புது அனுபவம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆக, இவன் தான் நண்பன் என நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் பொழுது, நான் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தளத்திற்குப் போயிருப்பேன். நிறைய எழுதி, நிறைய பேசி, என்னைப் பற்றி எல்லோரையும் நிறைய பேச வைப்பதை விட, நிறைய பார்த்து, நிறைய எழுதி, நிறைய என்னைப் பற்றிப் புரிந்து கொண்டவனாக இருப்பேன்.

ஆக, நான் எங்கும் தங்காமல், போய்க் கொண்டே இருப்பவன். வெளியேறிக் கொண்டே இருப்பவன் - ஒரு நதி தடையற்று ஓடிக் கொண்டேயிருப்பதைப் போன்று.

நான் நண்பன்.

நான் எழுதிக் கொண்டிருக்கும் தளங்கள் கீழே:

நண்பன்
மாற்றுத்தடங்கள்
Nanban

வலைச்சரத்திற்காக எழுதிய பதிவுகளை வெளியிடுகிறேன். இது முதல் பதிவு.

Tuesday, January 22, 2008

திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல்....

திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல்....

வாசித்தல் என்ற ஒற்றைப் பரிமாண அனுபவத்தைப் புத்தகங்கள் தருகிறனவென்றால், பார்த்தல், கேட்டல் வழியே பன்முக அனுபவத்தை திரைப்படங்கள் தருகின்றன.

திரைப்படம் கலை வடிவம், வர்த்தக வடிவம் என்ற இரு மாறுபட்ட வடிவங்களில் இன்று நம்மிடையே உலவி வருகிறது. வர்த்தக வடிவத்தில், 'fantasy' என்ற கற்பனைகளே மிகுந்து, இன்று சலிப்பூட்டும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கலை வடிவமான திரைப்படங்களே, வாழ்வைப் பற்றிய அலசுதல்களை செய்து கொண்டிருக்கிறது. மிகக் குறைந்த மொழியின் பங்களிப்புடன், ஒரு மனிதனின் சூழலில், அவனது உடல் மொழி, உடைகள், அவன் வாழும் நிலத்தின் தன்மை இவையனைத்தையும் ஒருசேர அலசுகிறது. ஒரு நல்ல திரைப்படத்தை மொழி மாற்றம் செய்ய இயலாது. ஏனென்றால், மொழி பெரும்பாலும் நிலத்தின் இயல்பைப் பெற்றிருப்பது தான். ஒரு நல்ல கலைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்றால், அதன் படைப்பாளியின் மொழியிலே தான் பார்க்க வேண்டும். மொழி இயங்கும் நிலம், சுற்றுப்புறங்கள், இவையனைத்தையும் உள்ளடக்கியே ஒரு கலை வடிவம் எழ வேண்டும்.

அவ்வாறானால், நல்ல கலை வடிவங்களைப் பார்க்க அதன் மூல மொழியில் பார்ப்பது தான் உத்தமம். இத்தகைய படங்களைத் தேடியலைபவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் இன்றி, எப்பொழுதும் நல்ல படைப்புகளை அடைந்து விட முடியாது. என்றாவது ஒரு சிறந்த கலைப்படைப்பு கைகளில் சிக்கக் கூடும். பல நேரங்களில், பெயர்களின் பிரபலத் தன்மையைக் கணக்கில் கொண்டு, பார்த்து விட்டு பின்னர் வருத்தப்படக் கூடும் - ஏமாந்து விட்டோமே என்று. நல்ல கலைப்படங்களைப் பார்க்க, அல்லது வாழ்வைத் தத்ரூபமாக நிர்மாணித்துப் பார்வைக்குப் படங்களைப் பற்றி வலைப்பூக்கள் எழுதுகின்றனவா?

முழுவதுமாக திரைப்படங்களுக்கு மட்டுமென அர்ப்பணிக்கப்பட்ட திரைப்பட வலைப்பூக்கள் இரண்டு மட்டுமே கண்ணில் தட்டுப்பட்டது. ஒன்று - மதி கந்தசாமியின் திரைப்பார்வை. மற்றது மாற்றுத் தடங்கள். மாற்றுத் தடங்களில் மொத்தமே ஏழு அல்லது எட்டு படங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், மலைப்பூட்டும் அளவிற்கு எழுதி இருக்கிறார், மதி கந்தசாமி. வலைப்பூ நண்பர்களுக்கு நல்ல திரைப்பட வழிகாட்டியாக அவரது வலைப்பூவைத் தான் பரிந்துரைக்கிறேன். மாற்றுத்தடங்களிலும் நல்ல படைப்புகள் வரும் - நிதானமாக.

ஒரு நல்ல பரிந்துரை எப்படி இருக்க வேண்டும்? கதையின் முடிச்சுகளை அவிழ்த்துப் போடாமல், பார்க்கும் ஆவலைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். திரைப்பார்வைகளில் முழு கதையையும் உட்கார்ந்து எழுதி கொண்டு இருக்கத் தேவையில்லை. ஆனால், அந்த திரைப்படம் எந்த பிரச்சினையைப் பற்றிப் அலசுகிறது?எந்த வகையில் அலசுகிறது? என்பதைப் பற்றி எழுதுவதே - சிறப்பாக இருக்கும். சில படங்களை அனைவரும் பார்க்க வழியே இல்லாத பொழுது, விரிவாக அதன் திரைக்கதையைக் குறிப்பிடலாம்.

மதி கந்தசாமியின் திரைப்பார்வையில் நிறையத் திரைப்படங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். 1966 தொடங்கி இன்றைய தேதி வரையிலுமென பல திரைப்படங்கள். மலைப்பாக இருக்கிறது. திரைப் படங்களைப் பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் திரைப்பார்வை என்ற அந்தத் தளத்தில் கிடைக்கும் நேரத்தைச் செலவிடலாம். சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனக்கு. அவரது பார்வையில் Who is afraid of Virginia Wolf 1966 என்ற திரைப்படம் உங்களுக்காக.

இந்தப் பார்வையின் சிறப்பம்சம் எனச் சொல்ல வேண்டுமானால், படத்தைப் பார்வைகளுடனே, அந்தப் படத்தில் பங்கேற்றவர்களைப் பற்றிய பிற தகவல்கள், மற்ற படங்களுடன் ஒப்பீடு என விரிந்து செல்லும் பார்வையில், பல தகவல்களைப் பெறுகிறோம். 50/ 60களில் இளமைப்பருவத்தைக் கழித்தவர்களுக்குத் தெரியும் - டெய்லர் என்ற நடிகையைப் பற்றி என்று எழுதிய மதியிடம் கேட்கத் தோன்றுகிறது - உங்களுக்கு என்ன வயது என்று! கொஞ்சமாவது, அரசல் புரசலாக ஒரு தகவல் இருந்தால் மட்டும் தான் அது குறித்த தகவல்களைச் சேகரித்து, சுவையாக எழுத முடியும்.

மாற்றுத்தடங்களில் நான் எழுதிய ஒரு திரைப்பார்வையைப் பற்றி At Five in the afternoon
படியுங்கள் - At five in the afternoon என்ற திரைப்படத்தின் மூலம், ஆஃப்கன் மக்களின் வாழ்க்கை அவலங்கள், அதனிடையே அவர்களிடம் கிளர்ந்தெழும் புதிய வாழ்க்கையைப் பற்றிய ஆர்வங்கள் என்று சிறப்பாக இயக்கப்பட்ட திரைப்படம். விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது.

திரைப்படங்களுக்கென எழுதப்பட்ட இந்த இரண்டு தளங்களை விட்டு விட்டு, தங்கள் பதிவுகளில் அவ்வப்பொழுது திரைப்படங்களைப் பற்றி சிறப்பாக எழுதுபவர்களும் இருக்கின்றார்கள். அய்யனாரின், தனிமையின் இசை தளத்தில் சமீபத்தில் அவர் எழுதிய Volver aka Coming back என்ற திரைப்படப் பற்றி படித்துப் பாருங்கள். மேலும் சில நல்ல திரைப்படங்கள் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார். HOUSE OF SAND AND FOG (2003), Citta` delle donne, La (1980) aka The City of Women, tare zameen par, The Brief Encounter என்பது போன்று. 22 திரைப்படங்கள் என்று அவரது சேமிப்புக் கணக்கு சொல்கிறது. அவசரமற்ற வாசிப்புக்குகந்தது அவரது மொழி நடை. படம் பார்க்கத் தோன்றுகிறதோ, இல்லையோ, அந்த மொழி நடைக்காகாவது படிக்கலாம்.

செப்புப்பட்டயம் வலைப்பூவில் பல நல்ல படங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் - அவற்றுள் சில - Blackboard, Blackboard Baran, Marooned in Iraq, 8 mile, y las visitadoras என களஞ்சியமே இருக்கிறது.

நடை வழிக் குறிப்புகள் தளத்தில் ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம் கூட இருக்கிறது. உப்பு என்ற திரைப்படம். இது வரையிலும் தமிழ்த் திரைப்படங்கள் கலைப்பட வரிசையில் இடம் பெற்றது மிக அபூர்வம். துரை இயக்கிய 'பசி' பாலுமகேந்திராவின் 'வீடு,சந்தியாராகம்' மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' 'உதிரிப்பூக்கள்' என வெகுசில படங்களையே சொல்ல இயலும். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, குறிப்பிடப்படும்படியாக ஒரு தமிழ்ப்படம்!

டுபுக்கு வலைத்தளத்தில் Memoirs of a Geisha என்ற விமர்சனமும் ஒரு நல்ல திரைப்படத்தை அறிமுகப்படுத்துகிறது.

நிழல்கள் தளத்தில் ஹரன்பிரசன்னாவின் இந்தப் பார்வையையும் படியுங்கள். களியாட்டம் திரைப்படத்தைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நல்ல படங்கள் என்று குறிப்பிடும் பொழுது, மலையாளப் பட உலகை தவிர்க்கவே முடியாது. மம்முட்டியின், 'மதிலுகள்' இன்றளவும் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கும் ஒரு படம். ஒரு பெண்ணை சிநேகிப்பதற்கு அவளது குரல் மட்டுமே போதும் என்ற திரைக்கதையை வைத்துக் கொண்டு, வைக்கம் பஷீரின் எழுத்துகளைப் படமாக்கி இருப்பார்கள் அற்புதமாக. தமிழ் திரைப்படைப்பாளிகள் வேண்டுமானால், சொல்லிக் கொள்ளலாம் - இதெல்லாம் நாங்கள் புதிதாக முயற்சிக்கிறோமென்று. (மதிலுகள் பற்றி யாராவது எழுதி இருக்கிறார்களா?) ஹரன் பிரசன்னா, கிட்டத்தட்ட 24 திரைப்பார்வைகள் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வாசித்த மற்றொரு தளம் நிர்மலாவின் ஒலிக்கும் கணங்களில் சில நல்ல இந்தியத் திரைப்படங்களைப் பற்றிய செய்திகள் இருக்கின்றன. paroma என்ற திரைப்படத்தைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுதே ஒரு நல்ல திரைப்படம் எவ்வாறு தன்னுள் பார்வையாளானை இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பேசிவிட்டு தொடர்கிறார். அபர்ணா சென்னின் படம். (Mr&Mrs.Iyer செய்தவர் தானே?) The Nameshake
Parzania, Babel என விரியும் இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள். நேரம் கிடைத்தால் இன்னும் சற்று விரிவாகவே பாருங்கள் - நிறையப் படங்கள் இருக்கின்றன.

முழுநேர திரைப்படங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் வேளையில், சப்தமின்றி, புரட்சி செய்து கொண்டிருக்கும் குறும்படங்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இன்னமும் குறும்படங்கள் போதுமான அங்கீகாரம் பெற்றிருக்கவில்லையென்றாலும், குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. அவற்றைக் குறித்த புரிதல்களையும் உண்டாக்க வேண்டியதும், அவற்றைப் பற்றிய அறிமுகத்தைப் பரவலாக அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டியதும் திரைப்படங்களை ஒரு கலைவடிவமாக நேசிப்பவர்களது கடமையாகும். சமீபத்தில், துபாயில் நண்பர் இசாக்கின் குறும்பட திரையிடும் விழாவில் நான் எழுதி வாசித்த இன்றைய சூழலில் குறும்படங்களின் தேவை கட்டுரையையும் வாசியுங்கள். சில பார்த்து ரசித்த குறும்படங்களைப் பற்றிய ஒரு பார்வை படம் காட்டுதல் அல்லது பயமுறுத்துதல் என்ற தளத்தில் கிடைக்கிறது நமக்கு..

மேலும் இலங்கைத் திரைப்படங்களைப் பற்றியும், குறும்படங்களைப் பற்றியும் ஒரு அலசல்
Dispassionaed DJ வில் இருக்கிறது.

இன்னுமின்னுமென்று தேடிக் கொண்டிருந்தால், கிடைத்துக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது, திரைப்படங்களைப் பற்றிய பார்வை. நல்ல திரைப்படங்களைப் பார்ப்பவர்கள், ரசிப்பவர்கள் நிறையவே இருக்கின்றனர். ஆனால், 99 சதவிகிதத்தினர் நல்ல படங்கள் என்று எழுதியவை அனைத்தும் வேற்று மொழிப் படங்களே. என்று நம் தமிழிலும் நல்ல படங்கள் வரக்கூடிய முயற்சிகளைத் தொடங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இங்கு முடித்துக் கொள்கிறேன்.

நல்ல படங்களைப் பற்றி எழுதும் மேலும் நல்ல நண்பர்கள் இருந்தால், சுட்டி கொடுங்கள் - வசதியாக இருக்கும்.

Monday, January 21, 2008

பெண்மொழி - பெண் வலைப்பதிவர்களின் பார்வையில....


பெண்மொழி - பெண் வலைப்பதிவர்களின் பார்வையில்....


கடந்து மறைந்து போன முற்காலங்களை விட, இன்றைய நாட்களில் பெண்ணியம் அதிகம் பேசப்படுவதாக உணர்கிறேன். அல்லது, முன் சென்ற காலங்களில், எவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ளாத தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்ததால், பெண்ணியம் என்ற தனித்த வடிவம் குறித்து கவனம் கொள்ளாதிருந்திருக்கலாம். எப்பொழுதுமே, ஆண், பெண் என்ற தனிப்பிரிவாக எந்த ஒரு படைப்பையும் அணுகாமல், ஒட்டுமொத்தமாக நல்லதா, கெட்டதா என்ற வகைப்படுத்தலின் உள்ளே அனைவரையும் அடக்க முயற்சித்ததனால் இருக்கலாம். எப்பொழுதுமே, எல்லா தளங்களிலுமே, சிலர் மற்றவர்களை விட கூடுதலான சமன்பாட்டைக் கேட்கின்றனர். பெண்களின் கோரிக்கைகளும் இப்பொழுது அவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறது. சமம் என்ற வார்த்தை தரும் பொருளை விட அதிகமாகவே கோருகிறார்கள் என நினைக்கிறேன். இன்னமும், ஒன்றின் சரி, தவறுகளை மட்டுமே நான் கணக்கிடுகிறேன் – செயலின் கர்த்தா ஆணா, பெண்ணா என பார்ப்பதில்லை. பெண்ணியம் கோருவதை முழுவதுமாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல், ஒரு வினையின் தாக்கத்தைப் பற்றி மட்டுமே எனது கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறேன். Rather, I see the value of an action and its implication, not the actors enacting the act.

லீனா மணிமேகலையின் ‘ஒற்றையிலையென’ என்ற கவிதைப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சுகுமாரன், இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒலி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் ‘பெண்ணெழுத்து’ என்ற கருத்துருவம் தமிழில் வலுப் பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்ப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் சில பெண்களுடையவை. அவற்றுள் பொருட்படுத்தக் கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலையும் காண்கிறேன். படைப்பெழுத்தில் பால் வேற்றுமைக்கு இடமில்லை என்று விசாலமான அர்த்தத்தில் நம்புகிறேன். எனினும் காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பிரிவினையை யதார்த்தமாக்கியிருக்கிறது. ஆணாதிக்க சிந்தனையே கலாச்சார மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட.’

இரண்டு முக்கியமான செய்திகளை இங்கு காணலாம். ஆணாதிக்க சிந்தனைகள் கட்டியெழுப்பும் கலாச்சார மதிப்பீடுகளுக்கு மாற்றான பெண்சிந்தனைகள் எழுந்து கொண்டிருக்கின்றன பெண்களிடமிருந்தே என்பதுவும், அத்தகைய சிந்தனைகளை முன் வைக்கும் ‘பெண் கவிதை மொழி’ அதற்கான அத்தியாவசிய தேவையினால் உருவாகி இருக்கிறதும் என்பது தான். பத்திரிக்கை ஊடகங்களில், இத்தகைய மாற்றங்களைத் தேடி அலையும் ‘பெண் கவிதை மொழியையும்’, ‘சிந்தனையையும்’ தேடாமல், வலைப்பதிவில் மட்டுமே இயங்கும் நமது சகபெண்வலைப்பதிவர்களின் ‘பெண் கவிதை மொழியையும், சிந்தனைகளையையும்’ பார்க்கலாமா?

நிவேதாவின் ரேகுப்தி வலைத் தளத்தில், புகையெனப் படரும் பிணங்களின் வாசம் என்ற இந்த கவிதையை வாசித்து விடுங்கள். பின்னர் கீழே படியுங்கள்.




‘அடக்கியொடுக்கப்பட்டு மரித்துப் போன (பெண்ணின்) தாபங்கள் பிறக்கலாம் மழலையென’ இது தான் பெண்மொழியாக இருக்கின்றது. பெண் தன் தாபங்களை மூன்றாமவர் அறியும் படியாக பேசக் கூடாது என்ற ஆண்சிந்தனை தான் இதுநாள் வரையிலும் பெண்களுக்கான மொழியையும் படைத்து வந்தது. ஆனால், இன்றைய பெண்கள் தங்களின் உணர்வுகளைப் படைப்பதற்கு ஆண்கள் தேவையை நிராகரித்து விட்டு, தங்களின் மொழியைத் தாங்களே பேசத் தொடங்கிவிட்டனர். ‘மூன்றாமவர் என்ன, அனைவரும் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்குள்ளும் தாபங்களிருக்கின்றன. காமம் இருக்கின்றன. அவற்றை நெரித்து பிணமாக எங்கள் கருவறைக்குள் தள்ளினீர்களென்றால், அந்தப் பிணங்களே மழலையாக பிறக்கும்’ தங்கள் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளும் ஆண்கள் பிணங்களைப் பிறப்பிப்பவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது எத்தனை வலிமையான சாடல்!

சமூக கட்டமைப்புகளைத் தோற்றுவிக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராக எழும் பெண்மொழி, ஆணின் வன்மத்தை மறுக்க, தன்னை முன்னிலையில் வைத்து அடையாளப்படுத்துவதற்கு தனது பெண் பாலியியல் அடையாள உறுப்புகளை முன்வைத்து பேசுகையில், ஆணின் வன்மத்தை மறுப்பதற்கு மற்றொரு தளத்திலும் ஒரு மொழி கிளம்பியெழுகிறது. விளிம்பு நிலை மனித குரலாய் ஒலிக்கும் அந்த பெண் மொழியின் கவிதை அடையாளப்படுத்தும் உறுப்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், அதன் மீதும் ஆண் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வக்கிரத்தைச் சாடும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் - மகளிர் தின சிறப்பு கவிதை என்ற இந்தக் கவிதையைப் படித்து விடுங்கள்.



இவ்வுலக வாழ்க்கையின் தங்கள் மீதுள்ள விசுவாசத்திற்கு பரிசாக மதங்களால் நிர்மாணம் செய்யப்பட்ட மறு உலக சொர்க்கம் கூட ஒரு துர்சொப்பனமாக மாறிவிடுகிறது – மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு, அதை தங்கள் விருப்பம் போல வளைத்து ஒரு சாரரை அடக்கியொடுக்கும் விதிகள் புகுத்தி பீடத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும் வர்க்கத்தினால்…

பெண்மொழிகளின் தன்மைகளை உள்ளடக்கிய பெண்ணை அடையாளப்படுத்தி பெரும்பாலும் பரபரப்பூட்டும் தலைப்புகளுடன் எழுதும் மற்றொரு எழுத்து மொழி. தமிழச்சியினுடையது கடைசியாக எழுதிய பத்து பதிவுகள் மட்டுமே இருக்கின்றன. சேமித்து வைக்கப்படும் archieves இல்லாததினால், எதுவும் சுட்டிக்காட்டி எழுத இயலவில்லை. ஆனால், தமிழச்சியின் எழுத்துகள் சுயத்தை அடையாளப்படுத்துவதை விட, சமூக கோபத்தை ஆங்காரத்துடன் இடித்துக் காட்டும் வகையிலே தான் அமைந்திருக்கின்றன. என்றாலும் பெண் மொழியைக் கையாளுகிறார் – அதுவும் பெண்ணின் பிரத்யேக சிந்தனைகளை அல்லது உணர்வுகளை வைக்கவில்லையென்றாலும், சமூக கோபம் அல்லது அதன் போலித் தனங்களை அடையாளப்படுத்தும் ஒரு எழுத்தாக அமைவதால் மட்டுமே அதை இங்கே சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

ஆனால், ஆண்களை சாடுவது எப்பொழுதும், எல்லாவிடத்திலும் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லையென்றே சொல்வேன். தன்னை அடையாளாப்படுத்தும் பொழுது, அதற்கு எதிர்ப்பதமான ஆண்களைத் திட்டித் தீர்த்தே ஆக வேண்டும் என்ற அவசியம் தேவையற்றது. ஆனால் அவ்வாறு நிகழ்ந்து கொண்டும் இருக்கத் தான் செய்கின்றது. தாங்கள் பேச விரும்பும் ஒரு மொழியை ஒரு ஆணும் பேசினால், அதற்காக கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தானே? அவ்வாறு கோபம் கொண்டால், வெற்று ஜம்பத்திற்காக பெண்ணியம் பேசுவது ஆகிவிடாதா?

ஆண் என்ற பொதுவை விட, ஒரு ஆண்கவிஞரின் பெயர் குறிப்பிட்டு வக்கிரம் என எழுதப்பட்ட ஒரு சாடலை கீழே உள்ள ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. தான்யா எழுதியது. அது, பெண்மொழி மற்றும் சிந்தனையை முன்வைத்து அலசப்பட்ட ஒரு அருமையான கட்டுரை. பல பெண் கவிஞர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு ஆவேசப்பாய்ச்சலை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையை வாசித்த பொழுது, இவர் மகுடேஸ்வரனைக் குறிப்பிட்டு எழுதியவை சரிதானா என கேள்விகள் எழுகின்றன. தான்யா குறிப்பிடும் அந்த மகுடேஸ்வரனின் கவிதை - 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நு¡லை முன் வைத்து...
"

அவலட்சணமான
அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

(மகுடேஸ்வரன, யாரோ ஒருத்தியின் நடனம்)

ஒரு ஆண் கவிஞரின் தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வெளிவந்திருந்தது. இப்படியான வன்முறையான வக்கிரமான ஆணாதிக்க சிந்தனையுள்ள இந்தக் கவிதைகளை எதிர்க்காத இந்தப் படைப்பாளிகள், பெண்கள் தங்கள் உறுப்புக்களைப் பற்றி தாங்களே எழுதும் போது வந்து விடுகிறார்கள். " இது அந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட விமர்சனம்.


பெண்கள் தங்கள் மனதில் நிகழும் காமத்தை, தங்கள் உறுப்புகளின் மேலேற்றிக் கூறுவதை ஒரு உரிமையாக வைக்கும் பொழுது, ஒரு ஆண், தன் மனதில் நிகழும் கிளர்ச்சியூட்டும் ஒரு உணர்வை கவிதையாக வெளிப்படுத்தியது வக்கிரமா? நிச்சயமாக இல்லை. ‘Intellectual Compatibility ’ is the highesr order of ‘turn on’ for anyone, irrespective of the gender. அறிவுஜீவித்தனம் மற்றெந்த அக, புறப்பண்புகளையும் விட, காமத்தை அதிக கிளர்ச்சியூட்டி உத்வேகம் கொள்ளச் செய்யும். அதைத் தான் மகுடேஸ்வரன் தன் கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அந்தக் கவிதையை ‘தன்மை’ மொழியில் எழுதி விட்டதனால், அது ஆணின் மொழியாக ஆண் மனநிலை வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெண் கவிஞர் ஒருவர் இதையே

அவலட்சணமான
அந்த அறிவுஜீவி ஆணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

என்று எழுதி இருந்தால், அதை ஒரு மகா பெரிய கொண்டாட்டமாக ஆக்கி இருக்க மாட்டார்களா, என்ன? ஆனால், ஒரு ஆண் எழுதி விட்டதால் இது வக்கிரமாகிவிட்டதா, என்ன? இன்னும் சொல்லப் போனால், இது ஆணின் மொழி கூட அல்ல. இந்த கவிதை பெண்களுக்கும் கூடப் பொருந்தும்.

நான் குறிப்பிட்டேன், சமம் என்பது அது தரும் பொருளைவிட, அதிக சமம் என்ற அர்த்தத்திலே தான் எல்லோராலும் கையாளப்படுகிறது. பெண்கள் கூட இப்பொழுது, தன் பெண்மொழியின் வாயிலாக, அந்த அதிக சமன்பாட்டைக் கோருகிறார்களோ என்று? இது சரியா, தவறா என மேலும் விவாதிப்பதை விட, மகிழ்வூட்டுவது என்னவென்றால், ஒதுங்கிப் போகாமல், ஆண்களின் எழுத்துகளையும் எடுத்து விவாதிக்கும் சிந்தனை வலுவைப் பெற்றுவிட்டார்கள் பெண்கள் என்பது தான்.

சரி, இறுதியாக பெண்களைப் பற்றி, நான் எழுதிய நிறையவற்றில் ஒன்றை இங்கே வாசியுங்கள். பின் அதுபற்றி, நீங்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். சுட்டி 'கனியின் பழங்கதை...'

Friday, January 11, 2008

பூக்களில் உறங்கும் மௌனம்


'சீஸேம் கதவைத் திற'வென
திருடர்களின் உலகினுள் அழைத்துச் செல்கிறாய்
குழந்தைகளின் விழிகள் விரிய விரிய
வியப்புகளை நிரப்பிக் கொண்டே

பிரமிட்டாய் எழுந்து நிற்கும் சவக்குழியில்
ஏதோவொரு மன்னனின் பிரேதம் கிடக்கும்
ஒரு மாயாலோகத்தில்
பூக்களில் உறங்கும் மௌனத்தை விழுங்கிய
வனமொன்று காத்துக் கிடக்கின்றது
சில கற்பாளாங்களை நகர்த்தி ஒரு திறப்பினைத் தரும்
'சீஸேம்' போன்ற ஒரு எளிய மந்திர சொல்லிற்கு

பூக்களில் உறங்கும் மௌனத்தை கலைக்கும்
ஓர் ஒற்றைச் சொல்லோடு ஒருத்தி வருவாளென்று
வனம் படைத்த தாவரங்களினடியில்
பதப்படுத்தப்பட்டவனைப் புதைத்துச் சென்ற பூசாரிகள்
சாபவாக்கியமொன்றையும் கீறிவைத்தார்கள்

ஒற்றைச் சொல்லுடன் உன் வருகை குறித்த
எதிர்பார்ப்புகளின் நினைவுகள்
பெயரிடப்படாத காட்டுத்தாவரங்களில்
பூத்துக் கிடக்கின்றன அந்தப்பெருவனத்தினுள்

சிநேகமிகும் தாபங்களின் ஈரப்படுத்தலில்
வாஞ்சையுடன் விரிந்து பரவுகிறது மென்மேலும்
அந்தப் பூக்காடுகளின் பரப்பு

தீப்பிடித்தது போல்
கைக்கெட்டும் சகலத்தையும் ஆக்கிரமிக்கின்றன
உன் பெயரைச் சொல்லும்
பூக்களில் உறங்கும் மௌனங்கள்

தேடித்திரியும் அந்த ஒற்றைச் சொல்
உன் அகராதியின் வார்த்தைத் தொகுப்பிலிருந்து
விட்டு விலகிப் போய்விட்டது
தன்னையறிந்த வெட்கம் கொண்டு

பெயரிடப்படாத காட்டுத் தாவரங்களின்
பூக்களில் உறங்கும் மௌனத்தை
அசைத்துப் போடுவதற்கு கற்றுக் கொள்
பெண்ணே
'சீஸேம்' என்ற மாயச்சொல்லைப் போல்
அந்த ஒற்றைச் சொல்லைப் பேசுவதற்கு

Monday, January 07, 2008

அநாநியின் அழகிய பஞ்சவர்ணக்கிளி



நீங்கள் இந்தப் பதிவின் பின்னூட்டங்களை முழுமையாகப் படிக்கவில்லையென்றால், எதைப் பற்றி இத்தனை தீவிரமாக எழுதுகிறான் என்ற புரிதல் உங்களுக்குக் கிட்டாது.













டியர் அநாநி,





இறுதியாகத் தீர்ப்பு வழங்கி விட்டீர்கள்.

எதிர்பார்த்தது தான்.

தீர்ப்பு வழங்க உங்களுக்கு அருகதை வழங்கியவர்கள் யார் என்ற கேள்விகளை எழுப்பப் போவதில்லை. இதுமாதிரி, சுயதகுதி பெற்ற நீதிபதிகள் பலர் இருப்பதை அறிந்து கொண்டு தான் நாங்களும் இயங்குகிறோம் என்பதை நீங்கள் அறிந்திராமல் இருக்க முடியாது

என்றாலும், உங்களுடனே இருக்கும் அல்லது பிறவிக்குணமாய் ஒட்டிக்கொண்டிருக்கும் முரண்களைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.

// I am not going to do any guess work about your intention as you have done now. Because, I feel guessing intention denotes the guilty mind. //

ஊகிப்பது குற்றமுள்ள மனதைக் குறிக்கிறது என்று எழுதிவிட்டு, நான் செய்யக் கூடாதென நீங்கள் அறிவுறுத்திய அதே செயலைக் கொண்டு தான் நீங்கள் என் நோக்கத்தைப் பற்றி ஊகித்து உங்கள் தீர்ப்பை எழுதி இருக்கிறீர்கள் என்று உங்களுக்குப் புரியவில்லையா

// இன்றிலிருந்து இரண்டாண்டுகளில் "ஜன கன மன" பாடுவது இஸ்லாமியர்களை அவமதிக்கும் செயல் என்று நீங்கள் எழுதப்போகும் கட்டுரையை படிக்கத்தான் போகிறோம். //


எதைக் கொண்டு இதை ஊகித்தீர்கள்? அநாநியாக வந்து கருத்து சொல்லும் உங்கள் தீரம் நான் சொல்லாததை சொல்வதாக ஊகிப்பதற்கு அதிகாரம் வழங்கி விட்டதா? திருப்பிப் படித்துப் பாருங்கள் - ஆங்கிலத்தில் எழுதினால், அந்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரம் கிட்டிவிடும் என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்களானால், அது உங்களின் பலவீனம் தானே தவிர, என்னுடையது அல்ல.

நீங்களும், நானும் எழுதியதை மீண்டும் வாசித்துப் பாருங்கள். உங்களுடைய கேள்விகள் உள்நோக்கம் நிறைந்தது என்று நான் எழுதியதைத் தான் இறுதியில் உங்களின் எழுத்துகள் நிரூபித்திருக்கின்றன.

/// ஒவ்வொரு காரியம் ஒவ்வொரு மாதிரியாகப் பார்க்கப் படுகிறது. விவாதிக்கப் படுகிறது. அதனாலயே, அந்தக் காரியத்தில் ஈடுபட்டவர், தேச விரோதியாகப் பார்க்கப் பட வேண்டிய அவசியமில்லை. ///

நான் மேலே சொல்லியதை நீங்கள் நேர்மையாக எடுத்துக் கையாளவில்லை. Reading in between the lines? நான் இதை சொல்லிய சூழ்நிலையை தவிர்த்து விட்டு, நடுவிலிருந்து சில வரிகளை உருவியெடுத்துக் கொண்டு வந்து, அதை என்னுடைய கருத்தாக மாற்ற முயற்சித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நான் சொன்ன முழுமையையும் படித்துப் பார்க்கவில்லை. அல்லது உங்களுக்குப் புரியவில்லை.

நான் எழுதிய முழுமையான பின்னூட்டம் இதோ:

// இவர்கள் பாடுவார்களா, அவர்கள் பாடுவார்களா என்பதை இஸ்லாமியர்களைக் குறித்து மட்டும் எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்கக் கூடாது. சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்தியாவின் ஜனாதியாகத் தகுதியுடையவர் என்று கருதப்பட்ட திரு. நாராயணமூர்த்தி அவர்கள் கூட, இந்திய தேசிய கீதத்தை இசைப்பது மட்டுமே போதுமானது. பாடவேண்டும் என்று வற்புறுத்த வேண்டாமே என்று ஒரு கருத்தை முன்வைத்தார்.

இது போல, தேசியகீதம் குறித்து அவ்வப்போது பலவித சர்ச்சைகள் எழுகின்றது. விவாதங்கள் நடக்கின்றன. இதெல்லாம் தேசவிரோதமாக பார்க்கப்படவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் இது இணைவைத்தலாகிவிடுமோ என்ற மனசஞ்சலத்துடன், அதுகுறித்த விளக்கங்களைத் தேடினால், உடன் அது சந்தேகத்துடன் பார்க்கப்படவேண்டிய அவசியமென்ன வந்து விட்டது? //


இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி கூட தேசியவிவாதம் எழுப்பினார் - ஆனால், அது தேசவிரோதமாகப் பார்க்கப்படவில்லை. அதுபோலவே, தேசபக்தியோடு சம்பந்தப்படுத்தப்படுபவற்றைக் குறித்து ஐயப்பாடு எழுப்பினார்கள் என்றால் அவர்களை உடனே தேசவிரோதிகளாக சித்தரிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு இருக்கப் போகிறது?
இதுவரையிலும் இஸ்லாமியர்கள் தேசியகீதம் குறித்து எந்தவித கேள்விகளும் எழுப்பவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நீ எழுதப் போகிறாய் என்பது உங்கள் போன்ற ஊனமுற்ற மனதிலிருந்து தான் சிந்தனைகளாக வெளிப்பட முடியும்.

தேசபக்தியை ஏகபோக குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக வேஷம் போடுபவர்கள் தான் இதுவரையிலும் தேசபக்தி சம்பந்தப்பட்ட அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். இன்று புழக்கத்திலிருக்கும் 'ஜணகணமண..' கீதத்தை 'வந்தே மாதரமாக' மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வைத்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கும் சங் பரிவார்களைப் பற்றி நீங்கள் கூறி இருக்க வேண்டும் - இவர்கள் தேச விரோத சக்தி என்று. தேசியகொடியின் மையத்தில் இருக்கும் அசோக சக்கரம் பௌத்தத்தைக் குறிக்கிறது - அதை நீக்க வேண்டும்; தேசியகொடியில் இருக்கும் பச்சை இஸ்லாமியர்களின் அடையாளம் - என தேசிய கொடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர்கள் தான் இந்துத்வா வாதிகள். இத்தனை சிந்தனைகளும் தர்க்கத்திற்குட்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன. தேசியகீதமும், தேசிய கொடியும் வழக்கத்திலிருக்கும் பொழுதுதான் இவையனைத்தும் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது யாரும் யாரையும் தேசவிரோதிகளாகப் பார்க்கவில்லை. அதை ஒரு விவாதத்துக்குரிய பொருளாகவே எடுத்துக் கொண்டு விவாதித்தனர். அதன் அடிப்படையிலே விவாதம் என்று ஒன்று வந்தால், விவாதிக்கத் தவற கூடாது - அது எவராக இருந்தாலும் என்று எழுதினேன்.

உங்கள் நியாயப்படி, சுதந்திரமான சிந்தனைகளை ஒரு இஸ்லாமியர் அல்லாதவர் முன் வைத்தால் அதை விவாதிப்போம். ஆனால், இஸ்லாமியர் ஒருவர் ஒரு சிந்தனையை முன்வைத்தால் - அதை விவாதிக்க மாட்டோம் - மாறாக, அந்த சிந்தனையை முன்வைத்தவரை தேசவிரோதி என பிரகடனப்படுத்துவோம் என அறிவிப்பது - நீங்கள் எந்த அடிப்படைவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு அலைகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அநாநி என்பது ஒரு பெயராக இருக்கலாம் - அதை ஒரே ஒருவர் மட்டும் வைத்துக் கொண்டால் அது ஒருவரின் பெயராக இருக்கும். முகவரியற்ற அனைவரும் அந்த பெயரின் பின்னே ஒளிந்து கொள்ளும் பொழுது, அதை ஒரு பெயராக எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு 'புத்திசாலித்தனம்' மிக்க வாதங்களை வைக்க வேண்டாம். படிப்பவர்கள் சிரிக்கப் போகிறார்கள். மற்றபடி அநாநி வசதியை உபயோகிப்பேன் என அடம்பிடிப்பது உங்கள் விருப்பம். முதுகெலும்பு இல்லாத ஒருவனை நிமிர்ந்து நில் என்று சொல்வது தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்வதாகும், இல்லையா? நான் முட்டாளில்லை.

இறுதியாக, எந்த ஒரு மனிதனிடமும், என் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியத்திற்குட்படுத்திக் கொள்ள மாட்டேன். அதிலும், தன்னை வெளிக்காட்டிக் கொள்ள திராணியற்ற ஒரு அல்பத்திடம் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.


பின், நீங்கள் பிரம்மாஸ்திரமாக எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுடைய மற்றொரு பின்னூட்டம் -


// A very important factor which is making it almost impossible for Hindu-Muslim unity to become an accomplished fact is that the Muslims cannot confine their patriotism to any one country. I had frankly asked many Muslims whether, in the event of any Mohammedan power invading India, they would stand side by side with their Hindu neighbours to defend their common land. I was not satisfied with the reply I got from them.

Gurudev Rabindranath Tagore //

குருதேவ் ரபீந்தரநாத் தாகூர் கூறிய கூற்றாக (!!??) நீங்கள் முன் வைக்கும் வாதம் முற்றிலும் தவறானது.


இந்தியா பாக்கிஸ்தானுடன் நடந்த யுத்தங்களில், பல இஸ்லாமியர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர் - அவற்றைப் பாடப்புத்தகங்களிலே கூட வைத்திருந்தனர் - 30 வருடங்களுக்கு முன்பே நானே படித்திருக்கிறேன். இன்று இஸ்லாமியர்களுக்கு ராணுவத்தில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மையே தவிர, அவர்கள் முன்வரவில்லை என்பது அப்பட்டமான பொய்.

இஸ்லாமியர்களுடைய தேசபக்தி பூகோள எல்லைகளைக் கடந்திருக்கின்றன என்பது தவறான கண்ணோட்டம். இதற்கு மாற்றான கருத்துகளை உலக வரலாற்றிலிருந்து எத்தனை எத்தனையோ உதாரணங்களைக் கொண்டு கூற முடியும் - ஓட்டமான் ஒரு இஸ்லாமியப் பேரரசு தான். ஆனாலும், அவர்களுக்குக் கீழ் இணங்கி இருக்க - அராபியர்கள் விரும்பவில்லை. தனி நாட்டுக்காகப் போராடி பெற்றுக் கொண்டார்கள் - சவுதி அரேபியாவை. எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், பாலஸ்தீனம் என்று எண்ணற்ற நாடுகள் சிறிது சிறிதாக ஓட்டமான் பேரரசிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்தவை தாம்.


இஸ்லாம் மனிதர்களை ஒரு ஆன்மீகத் தளத்தில் தான் இணைத்ததே தவிர, பூகோள எல்லைகளைத் தாண்டிய ஒரு இசைவை உண்டாக்க முடியவில்லை. என் வீட்டில் நான்; உன் வீட்டில் நீ; ஒருவரின் இருப்பிடத்தை மற்றொருவர் மதித்து வசிக்கும் பொழுது, சகோதரராக இருப்போம் - எல்லை மீறினால் வெட்டு, குத்து தான் என்று தான் இன்னமும் இவர்கள் வாழ்கிறார்கள்.


அதை விடுங்கள் - சமீபத்திய உதாரணம் - ஈராக். ஒரே நாடாக, சதாமின் கீழ் அடக்கப்பட்டிருந்த நாடு, இன்று அரபு முஸ்லிம், ஷியா முஸ்லிம், குர்து முஸ்லிம் என மூன்று துண்டுகளாக உடையக் காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் என்ற பொதுமைப் பண்பு இணைப்புக்கு வழி வகுக்காது. வழி வகுக்கக் கூடாது. ஒருவனுக்கு பல அடையாளங்கள் இருக்கின்றது. ஒற்றை அடையாளத்துடன் ஒரு மனிதன் இயங்குகிறான் என்பது எந்த விதத்திலும் சாத்தியமில்லை. ஒருவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. இருக்க வேண்டும். அந்த அடையாளங்கள் அனைத்தையும் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் - அதன் அடிப்படையிலே தான் சமத்துவமும், சகோதரத்துவமும் ஏற்படும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை. மாறாக இஸ்லாமே அடையாளங்களை அழித்து மனிதர்களை ஒன்றாக்கி விடலாம் என்ற கோட்பாட்டை முன் வைக்கவில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நபிகள் பெருமானார் அவர்களின் இறுதி உரையைப் படித்துப் பாருங்கள். இன்றைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடன சாசனத்திற்கு அது ஒரு முன்னுரை போன்று அமையும்.


மனிதனின் விடுதலை வேட்கையை எந்த ஒரு ஒற்றை அடையாளமும் தனித்து நின்று தீர்மானிப்பதில்லை. நீங்கள் முன் வைத்த (தாகூரின்?) கூற்று தவறான அனுமானங்களால் கட்டமைக்கப்பட்டதே அன்றி, யதார்த்தத்தை ஒட்டியதில்லை.


நம் துணைக்கண்டத்திலே, மொழி உணர்வு, மத உணர்வுகளையும் மீறி பிளவு உண்டாக்கக் கூடும் என்ற நிகழ்வை, அவர் அறிந்திருக்க நியாயமில்லை. வங்க தேசம் கிழக்கு பாக்கிஸ்தானிலிருந்து தன் ஆத்மாவைத் தேடி எடுத்துக் கொண்ட பொழுது, இஸ்லாம் என்ற உணர்வையும் மீறி, உருது, வங்கம் என்ற மொழியுணர்வின் அடிப்படையிலே போரிட்டதனால் தான் சாத்தியமாற்று வங்க மொழி முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு.

சமூக ரீதியாக அந்நியப்படுத்தும் போக்கு குறித்து தான் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்களே தவிர, தேசத்தை எதிர்த்து அல்ல.


இந்துத்வா தான் இந்தியா என்ற தவறான - எவருமே ஏற்றுக் கொள்ளாத தத்துவத்தை தான் எதிர்க்கிறோமே தவிர, இந்திய இறையாண்மையை அல்ல. இந்துத்வாவை எதிர்ப்பதில் நாட்டிலே பாதிக்கு மேல் மத அடையாளங்களைத் தாண்டிய பல மக்களும் இணைந்து கொள்ளும் பொழுது, ஒரு சிறுபான்மை குழு தேசபக்தி தரக்கட்டுப்பாடு அலுவலராக தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்வதைத் தான் எதிர்க்கிறோம். எதிர்ப்போம் தொடர்ந்து.


// உங்களைப்போன்றவர்களின் இக்கருத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்களாலேயே இஸ்லாம் புனிதமான மதமாக வாழ்கிறது //

முகவரியற்ற தத்துவங்களைப் பேசுபவர்களின் வீட்டுக் கொட்டடியில், தங்கக் கூண்டில், ஒரு சில வாக்கியங்களை மிமிக்ரி செய்யும் பஞ்சவர்ணக்கிளியின் அழகு வடிவம் போன்று இருப்பவர்களை நீங்கள் சிலாகிப்பதைக் குறித்து எனக்கு எந்த அக்கறையுமில்லை. என் உரிமைகளையும், என் கருத்துகளைப் பேசும் விடுதலை உணர்வையும் மதிக்கும் நல்ல நண்பர்களிடையே தான் நான் 'இந்தியன்' எனப் பெயர் பெற விரும்புகிறேனே தவிர, 'செல்லப் பிராணிகளை' கூண்டில் வளர்த்து தங்கள் ஜீவகாருண்யத்தைப் பறை சாற்றும் சாயம் தீட்டிய போலிகளிடமிருந்து அல்ல. என் தேசபக்தியை மெச்ச வேண்டுமென உங்களைப் போன்ற தெளிவின்மை மிக்க (இந்து)த்துவவாதிகளிடம் கோரி நிற்கப் போவதில்லை.

நன்றி - குறைந்தபட்சமாக வார்த்தைகளில் நாகரீகம் காட்டிப் பேசியமைக்கு, எண்ணங்களில் தேளின் விஷக் கொடுக்கு கொட்டுவதற்குத் துடித்துக் கொண்டேயிருந்தாலும்..




Saturday, January 05, 2008

இன்றைய சூழலில் குறும்படங்களின் தேவை.

திரைப்படங்கள் - கலை / வியாபாரப் போக்குகள்

திரைப்படம் என்பது பிற படைப்புகளைப் போன்றே ஒரு கலைவடிவம். இன்று ஒவ்வொரு படைப்பும் தான் சார்ந்த படைப்பு உத்திகளில் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து பரிசோதித்துக்கொண்டே இருக்கின்றன தனது இருப்பின் நியாயம் குறித்து. திரைப்படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எழுத்தும், ஓவியமும், நடனமும் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்திராத தனிமனித ஆற்றல் சார்ந்த வடிவங்கள் என்றால், திரைப்படம் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த கலைவடிவம். அதனாலேயே திரைப்படங்களின் பரிசோதனைக் களங்கள் ஒருபுறம் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், மறுபுறம் பார்வையாளனின் அனுபவ நுகர்விற்கு படைப்பை எப்படி எடுத்துச் செல்வது என்றும் தொடர்கிறது.

திரைப்படங்களை மக்களிடையே எடுத்துச் செல்வது, மற்றெந்த கலைகளையும் விட மிக எளிது. பிற வடிவங்களை நுகர்வதற்கு - புரிந்து கொள்வதற்கு குறைந்தபட்ச தகுதிகள் வேண்டியிருக்கின்றன. குறைந்த வடிவமாக எழுத்தை எடுத்துக் கொண்டாலும், அதை பலகாலம் பயின்று, பரிச்சியம் பெற்றவர்களால் தான் முடியும். அதுவும் கற்ற மொழியை விட அடுத்த மொழியின் இலக்கியங்களை வாசிக்க முடியாது. ஆனால், திரைப்படங்களின் அனுபவ உணர்தலுக்கு எந்த முன் தயாரிப்புகளும் அவசியமற்றது. அதனால், திரைப்படங்கள் மற்ற எந்த கலைவடிவத்தைக் காட்டிலும், மக்களிடையே வெகு எளிதாக சென்றடைந்து, மக்கள் கலையாகவும் வடிவமெடுக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களை குறைந்த செலவில் அடைந்துவிட முடியும் என்றதும், கணக்குப் பார்க்கும் வியாபாரிகளின் வருகையும், அதையொட்டிய ஆக்கிரமிப்புகளின் வரத்தும் தொடங்கியது. ஆர்வமிக்க கலைஞர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.


உண்மையான திரைப்படங்களை நேசிக்கும் கலைஞர்களால் சும்மா இருக்க முடியுமா, என்ன? திரைப்படம் என்ற கலை வடிவத்தை தீவிரமான ஈடுபாட்டுடன் திரைப்படங்களாக வரச்செய்தனர். இவர்களின் ஈடுபாட்டால் உருவாக்கம் பெற்று வாழ்வின் யதார்த்தங்களை நுணுகி ஆய்ந்து, உரசிப் பார்த்து படைக்கப்பட்ட கலைநயம் மிக்கப் படங்களைப் பார்த்து மிரண்டு போன திரைத்துறை வியாபாரிகள், வர்த்தக சினிமாக்களின் இருத்தலை நியாயப்படுத்தும் பொருட்டு, அவற்றை - எதார்த்தப் படைப்புகளை - கலைப்படங்கள் என்று பெயரிட்டு அழைத்தனர். வியாபார நோக்கில் பொழுதுபோக்கை முன்னிலைப் படுத்தும் திரைப்படங்களை 'Main Stream Cinema' என பெயரிட்டுக் கொண்டனர். 'பொழுதுபோக்கே சினிமா' என்ற கருத்துடன் வரும் படங்களின் மிகப் பிரம்மாண்டமான விளம்பரங்களின் முன், 'கலைப் படங்கள்' மறைக்கப்பட்டன - மக்களின் பார்வையிலிருந்தும். நல்ல திரைப்படங்களை - படைப்பு ரீதியாக நளினமாக செய்யப்பட்ட படங்களைப் பார்க்க விரும்பும் பார்வையாளனின் துரதிர்ஷ்டமே அது.

ஒரு நல்ல திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்?

கதையின் பாத்திரங்களை அதனதன் போக்கில் இயங்க அனுமதித்து, அதிலிருந்து பார்வையாளனின் அனுபவத்திற்கு, சினிமா மொழியை விட்டுச் செல்வது தான் ஒரு சிறந்த சினிமாவின் மொழியாக இருக்க முடியும். இன்று வாசக அனுபவத்தைத் துளிர்க்கச் செய்யும், வாசிப்பில் ஈடுபாடு கொள்ளத் தூண்டும் எழுத்துகள் வந்துவிட்டன. கவிதைகளாக, சிறுகதைகளாக, குறுநாவலாக, புதினங்களாக தமிழிலும் இவை வரத் தொடங்கி விட்டன. ஆனால் சினிமா மட்டும் தான் இன்னமும், அம்மா என்றால் அன்பு, அன்பு என்றால் சிவம் என்று பாடம் சொல்லிக் கொண்டு இருக்கின்றது. இவ்வாறு எடுத்துச் சொல்ல முனைவதாலயே ' the cinematic experience' கிட்டாது, ஒரு உபதேச கச்சேரிக்குப் போய்வந்த களைப்பையேத் தருகிறது நமது திரைப்படங்கள்.

இவை தமிழ்ப்படங்களின் பலவீனமாக அமைகின்றன. அதாவது மெனக்கெடுத்து சொல்லுதல். சொல்கின்ற நாயகனுக்குத் தகுதிகளை வலிந்து நுழைத்தல். எதுவும் இயல்பாக நடப்பதில்லை. எல்லாவற்றையும் முனைப்புடன் சொல்கிறார்கள் - சொல்கிறார்கள் - சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பாத்திரங்களின் இயக்கத்திலிருந்து வினையைப் புரிந்து கொள்வதை பார்வையாளனின் புரிதலுக்கும் அனுபவத்திற்கும் விடுவதில்லை. படைப்பைப் பற்றிய உள்முக விசாரணைகளுக்கெல்லாம் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. நாங்கள் திரைப்படம் என்று தந்தவற்றைப் பார்த்தாயல்லாவா - அத்துடன் நிறுத்திக் கொள் என்ற ஆணவம் தான் நமது சினிமாக்களின் பேசும் மொழி.

ஒரு இலக்கை நோக்கிக் கதை நகர வேண்டும். The film should always be focussed. இடைச்செருகல்கள் கூடாது. கவனத்தைத் திசை திருப்பி, வேறு தளத்தில் பயணிக்க வைக்கும் கிளைக் கதைகள் கூடாது. கதை ஒரே தளத்தில் ஒரு பிரச்சினையின் மையத்தை நோக்கிக் குவிய வேண்டும் - அனைத்துத் தளங்களிலுமிருந்தும். சாதக பாதக நிகழ்வுகளின் மூலம், தர்க்கங்கள் அமைய வேண்டும். தீர்வு என்ன என்பதைக் குறித்த விவாதங்களைப் பார்வையாளனிடத்தில் தோற்றுவிக்க வேண்டும்.

நேரடியான போதனைகளில் இறங்குவது அபத்தமானது. ஆபத்தானதும் கூட. எல்லோரும் எல்லா சமயத்திலும் போதிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. திரைப்படத்தின் இலக்கும் போதிப்பதாக இருக்கக் கூடாது. எந்த ஒரு கலையும் போதிப்பதற்காகப் படைக்கப்படவில்லை. படைப்பும், கலையும் பதிவு மட்டுமே செய்ய வேண்டும். மீதியை பார்ப்பவர்களின் புரிதலுக்கு விட்டுவிட வேண்டும். திரைப்படம் பார்ப்பதை ஒரு அனுபவமாக மாற்றி, தன்னுள்ளே பார்வையாளனை ஒன்றச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால், திரைப்படங்கள் வெறும் பிரச்சாரங்களாக மாறி பார்வையாளனை அந்நியப்படுத்தி விடக்கூடும். பின்னர் அவர்களை பிடிப்பதற்காக, அய்ட்டங்களை வைத்துக் கொண்டு, ரசிகர்களைப் பற்றிய குறைபாடுகளைக் கூறி ஒப்பாரி வைத்துக் கொள்ளலாம்

குறும்படங்களளின் தேவைகள்.

ஆக, இன்று 'Main Stream Films' என்று வழங்கப்படும் திரைப்படம் வியாபாரிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. தனிப்பட்ட நாயக வழிபாடுகளில் ஈடுபடுகிறது. சாதிக்கவியலாத கனவுகளை ஒரு போதையாக மக்களிடத்தில் வைக்கிறது. சிந்திக்கும் கலைஞர்களை தவிர்க்கிறது. ஓரங்கட்டுகிறது. ஜனரஞ்சகப் படங்களின் பொருட்செலவை, வெறும் ஆர்வமுள்ளவர்களால் ஈடுகட்ட முடிவதில்லை.

அதே சமயம் சினிமா என்ற கலைவடிவத்தின் மூலம் கிடைக்கும் மகிழ்வான அனுபவங்கள், வாழ்க்கை நிகழும் தளங்களுக்கு வெகு அருகில் சென்று, எந்த முன்முடிவுகளுமற்று, வாழ்வை கலைநயத்துடன் பதிவு செய்யும் ஆர்வம் இவற்றையெல்லாம் எந்த வியாபாரிகளாலும் அத்தனை எளிதாக ஒழித்து விட முடியாது. வாழ்க்கையை, அதன் ஏற்ற இறக்கங்களுடன் அனுபவித்து, புரிதலுடன், அதன் போக்கில் வாழ முயற்சிக்கும் மனிதர்கள் இருக்கும் வரையிலும், அதைப் பதிவு செய்யவும், வாழ்வின் அழகியலை வெளிக்கொண்டு வரவும் தீராத காதலுடன் திரைப்படங்களை நேசிக்கும் கலைஞர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த முயற்சிகளில், கட்டுப்பாட்டை மீறும் செலவு என்பது ஒரு பெரும் தடையாக இருக்க, அதை வெற்றி கொள்ள வந்த வடிவம் தான் குறும்படங்கள். வியாபார சினிமாவின் தேவைகளான, அய்ட்டம் நம்பர், குத்தாட்டங்கள், அடிதடிகள், இல்லாத நாயக தோரணையை கிழடு தட்டிய நடிகர்களுக்கு உருவாக்குதல் போன்ற செலவுகளை ஓரம் கட்டி, காட்சி அமைப்புகளில் சிக்கனம் காட்டி, உருவாக்கப்படும் குறும்படங்களும் திரைப்படங்களே - முழுமையான சினிமா வடிவங்களே.

இத்தகைய முயற்சிகளை வரவேற்பதுவும், ஆதரிப்பதுவும், சினிமாவை நேசிக்கும், வாழ்க்கையின் பரிமாணங்களைத் தரிசிக்க விழையும் பார்வையாளனின் கடமையாகும். ஒரு சிறந்த தேடுதலுடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த படைப்புகளைத் தேடி வாங்கி ஊக்குவிப்பது மறைமுகமான பங்களிப்பாகும். அதைதவிடவும், இந்த மாதிரியான தயாரிப்புகளுக்கு முதலீடு செய்து உதவுவது நேரடியான பங்களிப்பாகவே அமையும்.

இசாக், இத்தகைய அருமையான முயற்சியின் பலனாக, குறும்படங்களின் நோக்கங்களை ஒட்டிய ஒரு படைப்பை வெளிக் கொண்டு வந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

பாருங்கள்.

இத்தகைய முயற்சிகளை ஆதரியுங்கள்.

நன்றி,

வணக்கம்.

Thursday, January 03, 2008

துபாய் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு.

துபாய் வலைப் பதிவர்களுக்கு ஒரு அன்பார்ந்த அழைப்பு.




நண்பர் இசாக் எழுதி இயக்கிய "ஒரு குடியின் பயணம்" என்ற குறும்பட வெளியீட்டு விழா சனவரி 4, 2008 அன்று நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது. துவக்கு இலக்கிய அமைப்பும் தாய்மண் வாசகர் வட்டமும் இணைந்து இவ்விழாவினை நடத்துகிறார்கள்.

இடம்: சிவ் ஸ்டார் பவன், கராமா.
நேரம்: மாலை 5:30
விழா அழைப்பிதழ் மேலே உள்ளது.

அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

வலைப்பதிவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க அற்புதமான தளமாகவும், தமிழர் அமைப்புகளைச் சார்ந்தவர்களை சந்திக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் தவறாமல் கலந்து கொள்ள வாருங்கள்.

அன்புடன்

நண்பன்

Wednesday, January 02, 2008

வஞ்சிக்கப்பட்டவனின் மரணம்
















நான் சற்று தூங்கிக் கொள்கிறேன்
மரணத்தின் மௌனங்களில்
பெருகி வெளியேறும் உயிரின் திரவச் சூட்டில்
சேமிக்கப்பட்ட நினைவுகளின் மதகுகள்
பெரும் வெடிப்புடன் திறந்துவிட்டன

முந்தைய மரணங்கள் விட்டுச் சென்ற
வெற்றிட வெளிகளின் சூன்யமெங்கும்
நிரவிக் கிடந்த சித்திரப் பாசிகள்
வேரறுந்து வெளியேறுகிறது
நிகழ்ந்து கொண்டிருக்கும்
இந்த மரணத்தின் கனம் தங்க

நான் வெளியேறிய வெறுமையில்
என் பிம்பங்களைச் சுமந்து திரிய
ஒரு மனது உன்னிடத்திலிருக்கிறது

நான் வெளியேயும், மரணம் உள்ளேயும்
இடம் மாறிக் கொள்ளும் வேதனைப்
பகிர்ந்து கொள்ள
பரிவுடன் இடம் கொடுக்கும் மடியுடன்
அருகே நீ இருக்கிறாயா?

மரணத்தின் விழிகளை மூடி
மென்மையாக முத்தமொன்றை பதித்துவிடு
மரணங்கள் அநாதையாக நிகழவேண்டாம்
மரணத்தின் துணையாய் விரித்து வை
நேசம் பொங்கும் உன் மடியை

ஒரு மரணத்தை அமைதி அடையச் செய்ய
அனுமதி வேண்டியதில்லை
உன்னை அடிமைப்படுத்தியவனிடமிருந்து
நான் சற்று தூங்கிக் கொள்கிறேன்
எனது மரணத்தின் மடியில்
நம் உறவை அறிவிப்பாயென்ற அமைதியுடன்

Tuesday, January 01, 2008

Match Fixing?

ஒரு குழுவாக ஆடும் பொழுது, தன் குழுவை அல்லது தன் ஆடும் நாட்டை அல்லது க்ளப்பை ஏமாற்றி விட்டு, சூதாடிகளுக்காக தங்கள் அணியின் வெற்றி வாய்ப்பை தாரை வார்ப்பது அல்லது தங்கள் அணியின் திட்ட நுணுக்கங்களை வெளியிடும் துரோகத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், தனக்காக மட்டுமே ஆடும் ஒரு ஆட்டத்தில் ஒருவர் தனக்குத் தானே துரோகம் இழைத்துக் கொள்ள முடியுமா?

முடியும் என்கின்றனர்.

டென்னிஸ் ஆட்டத்தில் தான்.

2003 தொடங்கி கடந்த நான்கு வருடங்களில் 138 டென்னிஸ் ஆட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆட்டங்களாக இருக்கக் கூடும் என்ற தகவலை The Sunday Telegraph பத்திரிக்கை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அந்தப் பத்திரிக்கை ஆட்ட நிர்ணயங்களைப் பற்றிய தகவலைத் தந்த பொழுது, எவரும் நம்பவில்லை. இந்தத் தகவலை வெளியிடுவதன் மூலம், டென்னிஸ் ஆட்டத்திற்கு மோசமான சேவை செய்த பாவத்திற்கு ஆளாகி விடும் உங்கள் பத்திரிக்கை என்று வேறு சொல்லிவிட்டனர்.

இப்பொழுது எல்லோரும் நம்பத் தொடங்கி இருக்கின்றனர் இந்தத் தகவலை. ஒரு புற்று நோயாக இது டென்னிஸ் ஆட்டக்காரர்களிடையே கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று அறியத் தொடங்கி இருக்கின்றனர். டெலிகிராஃப் பத்திரிக்கை தயாரித்த அறிக்கை வெறுமனே சாடைமாடையாக அல்லாது, பெயரைக் குறிப்பிட்டு தகவல் தருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த இது சிறிது காலத்திலே தன்னைப் போல் மடிந்துவிடும் என்றே பல அப்பாவிகள் நம்பினர். ஆனால் வருடா வருடம் இது மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே போகிறதே தவிர, தெளிவதாகத் தெரியவில்லை.

சூதாட்டக் கூட்டணி எப்படி தங்கள் 'பெட்டிங்' தொழிலைச் செய்கின்றனர். எப்படி, ஆட்டங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற உட்தகவலையும் குறிப்பிடுகிறது. ஆனால், ஒரு ஆட்டக்காரருடனோ அல்லது அவரது பயிற்சியாளர் அல்லது அலுவலர் ஆகியவருடன் இணைத்து நிரூபணம் செய்வது சிரமமான காரியம்.

கடந்த மாதம், டென்னிஸ் ஆட்டங்களை நிர்வகிக்கும் Association of Tennis Professionals (ATP) பகிரங்கமாக தங்கள் தகவல்களை வெளியிட வேண்டிய தருணம் வந்தது. Betfair என்ற பந்தய நிறுவனம் தனது அத்தனை பந்தயங்களையும் நிறுத்தி வைத்தது - உலகத் தர வரிசையில் 4வது இடத்தில் இருந்த ரஷ்யரான நிக்கோலெய் தாவ்டென்கோ என்பவருக்கும் அர்ஜெண்டைன் ஆட்டக்காரர் மார்டின் வாஸ்ஸலோ ஆர்க்யுல்லோ என்பவருக்கும் இடையில் போலந்தில் நடைபெறவிருந்த ஆட்டத்தின் 'பெட்டிங் போக்கு' ஏறுக்கு மாறாக இருப்பதைக் கவனித்து Betfair என்ற அந்த நிறுவனம், உடன் அந்தப் பெட்டிங்கை நிறுத்தி வைத்தது. அதைத் தொடர்ந்து ATPயும் பகிரங்கமாக அறிக்கை வெளியிடும் நிர்ப்பந்தம் தோன்றியது. ரஷ்யர் வன்மையாக மறுத்திருக்கிறார் - காயத்தினால் ஆட்டத்திலிருந்து விலகிக் கொண்டேன் என்றார். அப்பொழுது அவர் தோற்றுக் கொண்டிருந்தார்.

சில ஆட்டக்காரர்களும், தங்களுக்கும் அழைப்பு வந்ததாக பகிரங்கமாக அறிவிப்பு செய்திருக்கின்றனர். பெல்ஜிய ஆட்டக்காரர், கில்லெஸ் எல்ஸெனீர் தனக்கு 70000 பவுண்டுகள் தருவதாக வந்த அழைப்பை மறுத்ததாக சொல்லி இருக்கிறார். இது விம்பிள்டன் போட்டியின் போது. இன்னமும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த மாதம் யு.எஸ் ஓபன் டென்னீஸின் இறுதியாட்டத்தில் தோற்ற நோவக் யோகோவிக் (Novak Djokovic) தனக்கு 110,000 பவுண்டுகள் தருவதாக வந்த அழைப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்திருக்கிறார். பீட்டர்ஸ்பெர்க் போட்டியின் போது முதல் சுற்றில் தோற்று வெளியேறுவதாக இருந்தால் என்று தெரிவித்திருக்கிறார். அவர் அந்தப் போட்டியில் பங்கேற்கவே இல்லை.

தன் சக ஆட்டக்காரர்களுடன் பேசுவதிலிருந்து ஆட்டங்கள் நிர்ணயத்தல் டென்னிஸ் உலகில் நிகழவே செய்கிறது என இங்கிலீஷ்காரரான டிம் ஹென்மான் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவல்களையெல்லாம் திரட்டிய டெலிகிராஃப் பத்திரிக்கையே 138 ஆட்டங்கள் என்பதைக் கண்டு மலைத்து போய் இருக்கிறது. இது வரையிலும் ஒருவர் கூட ATPயினால் கண்டுபிடிக்கப்படவில்லை - தண்டிக்கப்படவில்லை கடந்த நான்கு வருடங்களில் என்பதிலிருந்தே ஊழலை நிரூபிப்பது எத்தனை சிரமமான காரியம் என தெரிந்து கொள்ளலாம். இந்தச் செயலின் முழு பரிமாணத்தையுமே இப்பொழுது தான் ATP உணரத்தொடங்கி இருக்கிறது. நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கிறது - போதுமான அளவில் இல்லையென்றாலும். தாவ்டென்கோ - மார்டின் வாஸ்ஸலோ ஆர்க்யுல்லோ ஆட்டத்தைப் பற்றி விசாரிக்க ஸ்காட்லாந்த் யார்டின் இரண்டு அதிகாரிகளை நியமித்திருக்கிறது. அவர்களின் பணி அந்த ஆட்டத்தைப் பற்றி விசாரிப்பது மட்டுமே.

இதை கிரிக்கெட் ஆட்டங்களுடன் ஒப்பிட்டால் விளங்கிக் கொள்ள முடியும் - இந்த முயற்சி எத்தனை சிறியதென்று. கிரிக்கெட்டில் ஒன்பது அதிகாரிகள் முழுநேர அளவில் ஊழல் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்காக செலவிடப்படும் தொகையின் அளவு - 1 மில்லியன் டாலர் வருடத்திற்கு.

'பெட்டிங்' முற்றிலும் தவிர்க்கப்பட முடியாததாக இருக்கிறது. எந்த ஒரு ஆட்டத்திலும் அது பங்கு வகிக்கத் தான் போகிறது. ரசிகர்களை அழைத்து வருவதுடன், வருவாயையும் கொண்டு வருகிறது. முறைப்படி அதை அனுமதிப்பதே சரியாக இருக்கும். ஆனால் ஊழல் நிகழாமல் பார்த்துக் கொள்வதில் தான் எல்லாம் இருக்கிறது.

இதை எப்படி செய்வது - ATP பிற டென்னிஸ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதுபோல் British Horseracing Authorityயினுடனும். முழுநேர விசாரணை அதிகாரிகள் நியமிப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. என்றாலும் எல்லோரும் நம்புவது, தனி நபராக தனக்கென விளையாடுபவர்கள் தங்கள் பொறுப்பையுணர்ந்து விளையாடுவார்கள் என்றே.

இனி வரும் காலங்களில் Match fixing என்று செய்திகள் வந்தால், அறிந்து கொள்ளுங்கள் - அது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி மட்டுமே பேசப்படும் ஊழலாக இருக்காது. பிற விளையாட்டுகளைப் பற்றியும் கூட இருக்கலாம்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்