அர்த்தமுள்ள சாஸ்திரங்கள் ???
நுனிப்புல் உஷாவின் அர்த்தமுள்ள சாஸ்திரங்கள் -
கிளறி விட்ட சிந்தனைகளின் தொடர்ச்சி தான் இது.
உஷா இரண்டு விஷயங்கள் பற்றி சொல்லி இருக்கிறார் -
ஒன்று தர்க்கம் பற்றிய அவரது கருத்து.
மற்றது இந்தியாவின் மூத்த குடிகள் கடைபிடித்து வந்த செயல்கள் அர்த்தமற்றவை என்ற தொனியில் எழுதப்பட்டவை.
முதலில் வாக்குவாதங்களைப் பற்றிய அவரது கருத்திற்குப் பதில்:
//பொதுவாக வாக்குவாதங்கள், தர்க்கங்கள் என்னை கவருவது இல்லை. காரணம் உண்மை மற்றும் பொய்கள், தவறு மற்றும் சரியான கருத்து என்பது இரண்டு பக்கமும் இருக்கும்.//
அதையும் தாண்டி ஒன்றிருக்கிறது. ஒருவன் தன் இருப்பின் நியாயத்தையும் நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது. குற்றச் சாட்டுகளை மறுக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிற பொழுது, தன் கருத்தை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது தான் உண்மை.
நீங்கள் சொல்லுவது போல, பொய்யையே முழக்கமிடும் நபர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். புரிதலற்ற அவர்களுக்கு விளக்கம் கொடுக்க முனையும் பொழுது அதை தர்க்கமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது.?
இறுதியாக அவரவர் நியாயம், தர்மம் அவரவர்க்கு. அதைப் புரிந்து கொண்டால் சரி.
தன் இருப்பை, தன் நிலையை எடுத்து வைப்பதில் ஒன்றும் தவறில்லை.
//நல்ல நட்புகளுடன், பரஸ்பர மரியாதையுடன் ஏற்படும் விவாதங்கள், பேச, பேச எதிர் கருத்தை ஒத்துக் கொள்கிறோமோ இல்லையோ மனதிற்கு சுகமாய் இருக்கும்.//
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வதும், மாற்று சிந்தனைகளை ஏற்க மறுப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பங்களாக இருக்கலாம். ஆனால், அவைகளையே எல்லோரும் செய்ய வேண்டும் என்று விரும்புவது நல்லதல்ல. அதன் மூலம், நம் குறைபாடுகள் நமக்குத் தெரியவராது போய்விடலாம். உதாரணமாக, உங்கள் மீதுள்ள அன்பால், உங்கள் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டாது நண்பர்கள் இருந்திருப்பார்களேயானால், பிழையின்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்திருக்காது இல்லையா?
அது மாதிரி தான் - வாதங்களும், தர்க்கங்களும்.
கண்ணாடியின் முன் நிற்கும் பொழுது, நமக்குப் புலப்படாத நம் தவறுகள் -
ஒரு தர்க்கத்தின் போது, நம் எதிராளி நம் முகத்திற்கு நேராக நீட்டும் கண்ணாடியில் நம் குறைகள் தெரியவரும். அதை பொது இடத்தில் ஏற்றுக் கொள்ள இயலாவிட்டாலும், தனிமையில் சிந்திக்கலாமே - நாம் இப்படி செய்திருக்க வேண்டாமோ என்று?
இது தான் தர்க்கத்தின் வெற்றி. அந்த தர்க்கத்தை மறுக்கும் பொழுது, நம்மைப் பற்றி, நாம் அறிய வேண்டிய ஒரு சில உண்மைகளை நாம் இழக்கிறோம். நான் தர்க்கங்களை வாதங்களை அப்படித் தான் பார்க்கிறேன்.
இப்பொழுது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம். பழமையான பழக்க வழக்கங்கள் - சில அடிப்படை வசதியற்ற காலங்களில் ஏற்படுத்தப்பட்ட நியதிகள். குறிப்பாக குப்பை கொட்டுவது. இருளில் வெளியே சென்று குப்பை கொட்டுவதால், செல்வம் வெளியேறி விடும் என்பார்கள். இதன் காரணம் - அந்தக் காலத்தில் இருட்டிய பின் போதுமான வெளிச்சம் தரும் விளக்குகள் இல்லாத சமயத்தில், எதை வெளியே கொட்டுகிறோம் என்று பார்க்கவியலாது என்பதால், குப்பை கொட்டுவதைத் தவிர்க்கச் சொன்னார்கள். குப்பையுடன் சேர்ந்து, தங்கம், வெள்ளி, அல்லது பணமும் தவறுதலாக வெளியே போய்விட ஒரு சந்தர்ப்பம் இருந்தது என்றோ, அல்லது குப்பை கொட்டும் பணியாள் குப்பையுடன் திருட்டுப் பொருட்களையோ கலந்து கொண்டு போய் போட்டுவிடக்கூடும் - ஆகையால் வெளிச்சத்திலே இந்தக் காரியத்தைச் செய்தால் போதும் என்பது தான் காரணம், இதில் நியாயம் இருக்கிறது. இப்பொழுது வெளிச்சம் எங்கும் கொட்டிக் கிடக்கிறது என்பதால் தாராளமாக இனி இரவிலும் செய்யலாம். ஆனால், அதற்காக பழமையான, வசதிகளற்ற காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாகிவிடாது.
இதே வீச்சில், இப்பொழுது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தீச்சட்டி முறைமையையும் குறிப்பிட்டாக வேண்டும். அன்று காட்டில் தீ மூட்டப்படுவது சிரமம் என்பதால், வீட்டிலிருந்து, தீயையும் சட்டியில் எடுத்துச் சென்றார்கள். அந்தக்காலத்தில், தீயை அணையாது பாதுகாத்து வந்தார்கள். எனக்குத் தெரிந்தே, பக்கத்து வீடுகளில், தேங்காய்ச் சிரட்டையில் தீக்கணல்களை எடுத்து வந்து வீட்டில் அடுப்பில் தீ மூட்டிய பொழுதுகளைக் கண்டிருக்கிறேன். ஆனால், தீ மூட்ட சிரமமான அந்தக் காலம் அது. இந்தக் காலத்தில் தீ மூட்டுவது சிரமமான காரியாமா? தீப்பெட்டி இருக்கிறது. லைட்டர் இருக்கிறது. எளிதாக தீபற்ற வைக்கலாம். இருந்தும் இன்னமும் தீச்சட்டியை ஏன் தவறாது எடுத்துப் போகிறார்கள்? விட்டு விடலாம் தானே? இதைத் தான் பெரியார் கேட்டார்.
பெரியார் கேள்வி கேட்டதில் உள்ள நியாயம் உங்களிடத்தில் இல்லை. உங்களிடத்தில் எள்ளல் இருக்கிறது. பாருங்கள் இதை -
//உடனே, 'இவற்றைக் குறித்து அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து நம் முன்னோர்கள் சொன்னது விஞ்ஞான ரீதியான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார். //
‘அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள்’ பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, இதை நமது மருத்துவர்களும், சீனாவின் பிரபல அக்யு-பங்ச்சர் முறை மருத்துவர்களும் கண்டு பிடித்து விட்டனர்.
உஷா, ஒரு விஷயத்தைக் கிண்டலடிக்கும் முன் அதைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு கிண்டல் செய்தால் - நல்லது.
நீங்கள் இந்தியன் படம் பார்த்தீர்கள் தானே? அதில் வரும் வர்மக் கலையைத் தெரியும் தானே? உடல் முழுக்க ஓடிக் கொண்டிருக்கும் நாடி நரம்புகளை அறிந்து, முறைப்படி அதை இயக்கினால், இந்த உடலின் செயல்பாடுகளை விரும்பிய வகையில் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்தியன் படத்தில் காட்டி விட்டதால் அல்ல. இன்றும் இத்தகைய வர்மக் கலை சிகிச்சை முறைக்காக இந்தியா நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான, பிற நாட்டு பிரஜைகளைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். (உடனே இது அலோபதிக்கு மாற்றா என்ற விவாதம் வேண்டாம். )
அதே போல உடலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் நரம்புகளை சரியான இடத்தில் சிறு சிறு ஊசிகளால் குத்தித் தூண்டி விடுவதன் மூலம், உடலின் நோய்களைக் கட்டுப்படுத்த / சரி செய்ய முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டதே.
அதன் அடிப்படையிலேயே இந்த வகை மருத்துவமும் ஒரு சில குறிப்பிட்ட
அளவிற்கு மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடை முறையில் இருந்து வருகிறது. இந்த வழிவகையில் வந்தது தான் - மசாஜ் மற்றும் பிஸியோதெரபி வகை மருத்துவ பிரிவுகளும்.
இப்படி இருக்க, காது மடல்களில் துளை இடுவது எதற்காக? எந்தக் காரண காரியமும் இல்லாமலா?
கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். -
பிள்ளையாரின் காதுகள் எப்படி இருக்கின்றன?புத்தரின் காதுகள் எப்படி இருக்கின்றன?
காது மடல்கள் எத்தனை நீளமாக இருக்கின்றன? எதற்காக அப்படி? எதைக் குறிப்பதற்காக அப்படி? நான் படித்த வரையிலும் அவை புத்திக் கூர்மையைக் குறிப்பதற்கான குறியீடுகள்.
அவற்றை முறைப்படி அழுத்தம் செய்து, அதனால் மூளையைக் கிளர்ந்து எழச் செய்ய முடியும் என்பது தான் செய்தி. இதை விஞ்ஞான பூர்வமாக மூதாதையர்கள் உணர்ந்து செய்தார்களா? அல்லது பலநூற்றாண்டுகளாக தொடர்ந்த கவனிப்பில், ஒரு statistical survey மாதிரி Data Analysis படி செய்தார்களா என்பது தெரியாது. (மதத்தை இங்கு இணைத்தது - நீங்கள் சொன்ன மாதிரி, மதத்தின் பெயரால் சொன்னால் தான் தவறாமல் செய்வார்கள் என்றிருக்கலாம். அன்றி, இவை மதரீதியான செயல்பாடுகள் அல்ல - குறிப்பாக காது மடல்கள் பிடித்து தோப்புக் கரணம் போடுவது, காது குத்துவது.)
ஆக, உங்களது எள்ளல் இங்கு முறையற்றது. அந்த வயதான பாட்டி சொன்னது சரிதான். எல்லாவற்றையும் எள்ளி நகையாடுவதால், புதுமையாளன், புரட்சியாளன் என்று கருதி விடப் போவதில்லை.
நிற்க, இந்த காது குத்துவது, மூளையை வளர்ச்சியடைய செய்யுமா? செய்யாதா என்ற debateற்குள் போக வேண்டாம். (தர்க்கம் என்றால் பயப்படுகிறீர்கள் என்பதால், இனி டிபேட் என்றே சொல்வோம்.) ஆனால், இந்த காது மடல் சமாச்சாரம் மூளையைக் கிளர்ச்சி அடையச் செய்யும், உணர்ச்சி வசப்படச் செய்யும் என்ற பாக்கியராஜின் முருங்கைக்காய் சமாச்சாரத்தை திருமணமான அனைவரும் அறிவர்.
இந்த காது குத்துவது வந்தது ஏன் தெரியுமா?
இந்தக் காது மடலில் இருந்து கிளம்பி, மூளையை நோக்கிச் செல்லும் சில நரம்புகளைத் துண்டித்து விட்டால் - காம இச்சைகளைப் பெரும்பாலும் குறைத்து விடாலாம். அதாவது, காம இச்சை கிளர்ந்தெழுவது என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. பெண்களுக்கு அது கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனையின் ஏற்பாடே!!!
//அது என்னவோ பெண்களை முட்டாள் ஆக்க விதவிதமான வழி முறைகள்!//
ஏற்றுக் கொள்கிறேன் - ஆனால் நீங்கள் சொன்ன காரணத்திற்காக அல்ல.
3 comments:
நண்பன் அருமையான பதிவு. உஷாவின் பதிவை படிக்கவில்லை. இருந்தாலும் சில சுவையான தகவல்கள் கிடைத்தது.
எனக்க்கு ஒருகாது குத்தியிருக்காங்க.
சின்ன வயசிலேயே எவனோ எனக்க்கெதிரா சதி செஞ்சிருக்கான்.
:))
நண்பன் அருமையான பதிவு. உஷாவின் பதிவை படிக்கவில்லை. இருந்தாலும் சில சுவையான தகவல்கள் கிடைத்தது.
எனக்க்கு ஒருகாது குத்தியிருக்காங்க.
சின்ன வயசிலேயே எவனோ எனக்க்கெதிரா சதி செஞ்சிருக்கான்.
:))
சிறில்,
கடைசி வரியை முதலில் புரியவில்லை. பிறகு முழு பதிவையும் படித்ததும் தான் தெரிந்தது, அதிலுள்ள குறும்பு.
புது பிளாக்கரில் அவ்வப்பொழுது சில சில பிரச்சினைகள். அதை சரி செய்ய முயலும் பொழுது எதிர்பாராத விளைவுகள் உண்டாகின்றன. அப்படித்தான் இதுவும்.
ஆனாலும், ஒரு மறுவாசிப்புக்கு இது உதவிற்று என்ற வகையில் இந்த சின்ன பிரச்சினைகள் உதவிகரமாகவே அமைந்து விட்டது.
நன்றி.
Post a Comment