"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, January 17, 2006

வாழ்க்கை

அவர்கள் எல்லோரும்
ஆத்திரத்துடன் இருக்கிறார்கள்
தங்கள் உருவத்தைப் பற்றிய
என்னுடைய கண்ணோட்டத்தின் மீது

அவர்களது உருவின்
இளமை முதுமைகளைப் பற்றிய
எந்த அபிப்பிராயமும் என்னிடம் கிடையாது

அவர்களது உருவத்தை
பிறர் சகிக்கவேண்டி தடவிக் கொள்ளும்
ஆர்ப்பாட்டமான அத்தர் வகையறாக்களும்
அவசியமற்றவையெனக்கு

தங்களது உருவை மூடிக்கொள்ள
அவர்களுடுத்தும் ஆடையணிகளைப் பற்றிய
விமர்சனங்களும் என்னிடத்தில் இல்லை.

அவர்களிடத்தில் அச்சமிருக்கிறது
தங்களைப் பற்றிய முழுமையான செய்திகளும்
என்னிடத்த்லிருக்கிறதென்ற அச்சம்.

இந்த அச்சத்தைக் கொண்டு
எந்தவொரு பயன்பாடும் இல்லையெனக்கென
எத்தனை சொல்ல முயற்சித்தும்
வெருண்டோடும் பசுவாய் புழுதி கிளப்பி
நதியின் கரை பிடித்து ஓடுகின்றனர்.

ஓடியாடி நதியோடு சமுத்திரத்தில் வீழ்ந்தாலும்
இவர்களைப் பிழைப்பூட்டியெடுத்து வர
யாரும் காத்திருக்கப் போவதில்லையென்றாலும்
நீந்தி நீந்தி நானில்லாத சமுத்திரத்தின்
அக்கறையேறிவிடாலாமென்ற நப்பாசையுமிருக்கிறது.

இவர்கள் அறிவதில்லை என்றென்றும்
பிழைத்தெழுந்து கடல் தாண்டினாலும்
அங்கும் நானிருப்பேன் இவர்களறியா வகையில்
அப்பொழுது
புதிதாக என்னைப் பார்ப்பார்கள்
புதிதாக என்னைச் சலித்துக் கொள்ளுவார்கள்
புதிதாக என்னால் நிம்மதியிழப்பார்கள்
நேருக்கு நேராக மட்டும்
ஏறெடுத்தும் பார்க்கவியலாத
அச்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு
கண்டம் விட்டு கண்டம் சிதறி
தேடிக் கொண்டிருக்கிறார்கள் தீர்வை.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்