BOSLAN
போஸ்லான்
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
முன்னம்
பக்கத்து நாடுகள் விழுங்கி
யூனியன் ஆகி
சமத்துவம் வளர்த்தது.
ரொட்டித் துண்டுகளின்
வினியோக வரிசையில்
உணவிற்கு உரிமைகள்
பண்டபரிமாற்றம்.
உண்ணத் திறக்கும்
வாயைக்கூட
அளந்தே திறக்க வேண்டும்.
ரகசிய உளவாளிகள்
நாடெங்குமுண்டு.
மீறித்திமிறும் குரல்கள்
சைபீரியப் பனிப்பாலையில்
உறைய வைக்கபடும்.
தேவாலய மணிக்கூண்டுகள்
ஊனமானது.
மசூதியின் அழைப்போசை
ஊமையானது.
அடக்கி ஒடுக்கப்பட்ட
நம்பிக்கைகள்
ஆங்கோர் அக்னிக்குஞ்சாய்
மனத்திடை மறைந்து கனன்றது.
வேடிக்கை காட்சிகள்
விண்ணிலும், மண்ணிலும்
தொடர்ந்தன.
நிலவைத் தொட்ட
ஆசையடங்குமுன்னே
ஆஃப்கன் அணங்குகளின் மீதும்
செங்கரம் நீண்டது.
பிணம் தின்னும் கழுகுகளும்
களம் புகுந்தது -
பனிப்போரின் ஆடுகளமாக
ஆஃப்கன் ஆகிப்போனது.
முரட்டுப் பத்தான்கள்
முஜாஹிதீன்கள் ஆனார்கள்
முனைந்து நடத்திய யுத்தத்தில்
மூக்குடைபட்டுப் போனது
வல்லரசுவும்
ஆயுதம், மனோதிடம் -
எந்த நாட்டையும்
உலுக்கிவிடலாம்
ஆஃப்கனில் உருவானது
வளர்த்த இரு நாடுகளும்
கூவிக்கூவி அழைக்கின்றன
அனைத்து நாடுகளையும் -
அடக்கி விடுவோம்
தீவிரவாதத்தை.
வினையின் எதிர்வினை
என்றறியாமலே
மக்கள் போராட்டங்கள்
தீவிரவாதமாயின.
சிறு குழுக்கள்
குண்டு போட்டால்
தீவிரவாதம்
பெரும் நாடுகள்
மனிதனை அம்மணமாக்கினால்
விசாரணை யுக்தி.
பயங்கரவாதமடக்க
சேனைகள் தேடித்துழாவின
கன்னிகளின் கர்ப்பக் குழிகளை.
வீசிய குண்டுகளில்
மலர்களின் மகரந்தம்
சாம்பல் துகள்களாக -
மலராத மொட்டுகளில்
புதைக்கப்பட்டது
ஆணவ விந்தணுக்கள்.
யுத்தத்தில் கொடியது -
எதிரியின்
பண்பாட்டு சின்னங்களை
சிதைத்து விடும் சிறுமை -
எத்தனை உயரம் போனாலும்
யுத்ததந்திரம் மட்டும்
ஆதிகால வாசனையைத்தான்
முகரும்.
பண்பாட்டுச் சின்னங்கள் -
வணங்கும் தலங்கள்
இசைக்கும் இசை
உண்ணும் உணவு
நாற்றங்காலில் பயிராகும்
குழந்தைகள் -
இத்துடன் பெண்ணின் பெருமிதம்
கட்டுக்கோப்பான சீருடைகள்
எதிரியின் பெண்களை
ருசிக்கையிலே
குருடாகிப் போன அரசுகள்
பாண்டவர் காலம் தொட்டு
இராக் வரையிலுமுண்டு
‘யுத்தங்களை எடுத்துச் செல்
எதிரியின் மண்ணிற்கு -
நம் பெண்கள்
நம் குழந்தைகள்
நம் வீடுகள்
அழியாதிருக்க...’
அவரவர் நியாயம்
அவரவர்க்கு...
‘ஒரு கன்னத்தில் அடித்தால்
இரு மடங்கு பலத்துடன்
மறுகன்னத்தில் அடித்து விடு’
தீவிர வாதிகள்
புதுவேதம் ஓதினார்கள்.
புதுவேதம் புரியாதவர்கள்
எதிர்வினைக்கு தொடர்வினையாக,
மயக்க மருந்துகளின் வலுவில்
மறந்து விட்டனர் -
சமரசம்
பேசுவதெப்படியென்பதை!
குரல்வளையைத் திருகியே
பழகிய தலைமை
புஜ வலிமைக் காட்டியே
காரியம் சாதிக்க நினைக்கிறது.
யார், எவரையும் விட
பாடம் கற்பதில்
உருமாறிக் கொள்வதில்
புது இடத்திற்கு
இணங்கிப் போவதில்
தீவிரவாதிகளின் வேகம்
வியப்பானது
வேகத்தைக் கணிக்க
அரசு எந்திரத்திடம்
மனம் இல்லை -
மனிதம் இல்லை.
அன்று
நீ என்னையடித்தாய் -
இன்று
நானுன்னை அடித்துவிட்டேன்
தொடரும் தீவிரவாதம்
அரசு அமைப்பிலிருந்தும்
போராடும் குழுக்களிலிருந்தும்
யுத்தவாதிகளே...!
எதை வேண்டுமானாலும்
அழியுங்கள் -
எத்தனை முறை வேண்டுமானாலும்
அழியுங்கள்
அல்லது
அழிந்தொழியுங்கள்
யுத்தங்களை மட்டும்
உங்களையொத்த
வயதுடைய வீரர்களோடு
நிறுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் யுத்தம்
குழந்தைகளோடும்
குழந்தைகள் துயிலும்
கர்ப்பப் பைகளோடும்
மட்டும் வேண்டாம்
2 comments:
என்னைச் சிந்திக்க வைத்த கவிதை.
சமீபத்தில் "the kite runner" என்ற கதையைப் படிக்க நேர்ந்தது. வல்லரசுகள் குறிப்பாக ரஷ்யா ஆஃப்கானிஸ்தானத்தை எப்படிச் சூறையாடினார்கள் என்பதை வலிக்கச் சொல்லியிருந்தார்கள். நீங்கள் சொன்னது போல் அவரவர் நியாயம் அவரவருக்கு.
தீவிரவாதத்தை அடுத்த தலைமுறையிலாவது ஒழிக்கக் கோரும் உங்கள் அழைப்பை மனமார வரவேற்கிறேன்.
அன்புடன்,
பிரதீப்
மிகுந்த நன்றி பிரதீப்.
தவறுகளை ஒழித்துக் கட்ட முனையும் பொழுது, அது எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ற மூலத்தையும் ஆராய்ந்து அதனையும் களைய வேண்டும்.
இல்லையென்றால், தொடரும் தீவிரவாதம் தலைவலியாகத் தானிருக்குமே அன்றி, தீர்வுகள் கிடைக்கும் என்று தோன்றவில்லை.
எல்லாம் புரிகிறவர்களுக்குப் புரிந்தால் சரி.
அன்புடன்
நண்பன்
Post a Comment