"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, January 20, 2006

தன்னைத் தானே எழுதிக் கொள்ளாத கவிதை...

தன்னைத் தானே
எழுதிக் கொள்ளத் தெரியாத கவிதைகள் பல
என்னை நெருக்கிக் கொண்டிருக்கிறது
எழுதித் தொலை என்னையென்று
பிதுங்கி பிதுங்கி வழியும்
இந்தக் கவிதைகள்
கவனச் சிதறலைத் தந்து
தவறாது தங்களிருப்பை நினைவூட்டுகின்றன.
இவைகளை எழுதித் தொலைத்து விட
எல்லா நாட்களிலும் பொழுது கிடைப்பதில்லை.
கிடைக்கும் நாட்களில் கூட
தடதடவென வந்து நிற்பதில்லை.

மிகுந்த பிணக்குடனும் நாணத்துடனும்
மெல்ல மெல்ல அவைகளை
இழுத்து வரவேண்டியதிருக்கிறது சிரமத்துடன்.
வரமறுக்கும் இடைப்பட்ட வேளையில்
மனவெற்றிடத்தின் விருப்பவடிவமாக
தட்டித்தட்டிப் பார்த்த சொற்கூடுகளை
பின்னர் கண்டித்து வெளியேற்றும் சிரமத்தை
சுயம்புவாக எஔழுந்துவிடும் கவிதைகள் அறிவதில்லை.

கூடிக்கூடிப் பிரித்து கீழாக மேலாக நகர்த்தி
குயவனின் வட்டுச்சுழற்சியில் உயரும் பானையாக
மெல்ல மெல்ல வடிவம் பெற்று வருகையிலே
சட்டென்று சிதைந்து போய்விடும் துயரத்தை
தானாக வடியும் கவிதைகள் தருவதில்லை.
அலுத்து சலித்து விலக நினைக்கும் தருணத்தில்
கடைசியாக ஒருமுறையென்ற இறுதிப்போரில்
மெல்ல மெல்ல உதித்து விடக்கூடும்
இந்தக் கவிதைகள்.

எத்தனையோ இரவுப் பொழுதுகளைப் பாழாக்கி
எத்தனையோ காகிதங்களைக் குப்பையாக்கி
எப்படியோ தட்டுத் தடுமாறி முட்டி மோதி
எழுதி முடித்த கவிதை தந்து விடுகிறது
மலையுச்சியேறிய இன்பத்தை இறுதியாக.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்