"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, January 10, 2006

பத்ரிக்கு ஒரு பதில்....

பத்ரி,

// "நண்பன்" போன்ற அற்புதமான நண்பர்கள், சிலருடைய பெயர்களைப் பார்த்ததுமே அவர்கள் தவறு செய்யக்கூடியவர்கள்தான் என்று முன்முடிவு செய்துவிடுகிறார்கள் அல்லவா, அவர்களுக்கும் முழுவிவரங்கள் தேவை.//

மிக்க நன்றி.

என்னைப் போன்ற "நண்பர்களுக்கும்" தெளிவளிக்கக் கூடிய விளக்கம் தர வேண்டும் என நீங்கள் முனைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டது போல பெயர்களைப் பார்த்ததும், அவர்களைப் பற்றிய குணநலன்களை புட்டு புட்டு வைக்கும் அளவிற்குஎனக்கு 'ஜாதகம்' பார்க்கத் தெரியாது. பெயர்களின் பின்னால் நூலிழையாக ஓடக் கூடிய வரலாறுகளை அறிந்திருக்கும் புலமை - கலை கை வரவில்லை. ஒரு பெயர் என்பது இன்னமும் எந்த மொழியைச் சார்ந்த பெயர் என்பதை கூட, அவர்களாக விளக்கம் சொன்னாலன்றி எனக்குப் புரியாது. நீங்கள் சொன்னவாறு அர்த்தம் செய்து கொள்ள இனி தான் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்த பெயர்கள் மீதான என்னுடைய பலவீனமான புரிதல்களை நானே கிண்டல் செய்து எழுதிய இந்தக் கவிதையைப் படித்து பாருங்கள்.

****
http://nanbanshaji.blogspot.com/2005_07_01_nanbanshaji_archive.html

ஞானம்.

***
எனக்கு
எல்லா முகங்களும்
தெரியும்.

எனக்கு
எல்லா பெயர்களும்
தெரியும்.

ஆனாலும்
எல்லோரையும்
'நண்பனே' என்றுதான்
விளிக்கிறேன்.

மரியாதையின்
பொருட்டு மட்டுமே
அல்ல.

எந்தப் பெயருக்கு
எந்த முகம் என்ற
ஞானம்
இல்லாததினாலும் தான்.....

****
ஆமாம் - இத்தனை தான் என்னால், ஒருவரின் பெயரைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். இந்தக் கவிதைக்கு இந்த கிண்டல் தொனியைத்தாண்டி வேறு ஒரு ஆழமான பொருளும் உண்டு. விளக்கம் எல்லாம் தந்து கொண்டிருப்பது என் வேலையல்ல.

இத்தருணத்தில், நான் மீண்டும் சொல்கிறேன் - Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity.

இந்த விவாதத்தில் நான் குறிப்பிட விரும்பியது, வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள், அதற்கான தங்கள் தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் - அதை விட்டு விட்டு, அதே போட்டியில் இருக்கும் மற்றவர்களே அதையும் நமக்கு சொல்லித் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ஏமாற்றமுறுவதாய் புலம்புவதும் நம்முடைய தகுதியின்மையே தவிர வேறல்ல என்ற வகையில் தான். அதை கொஞ்சம் வலிக்கும்படியாகவே சொல்லி இருக்கிறேன். பின்னே அது கூட இல்லையென்றால், எப்படிங்க?

இதில் நீங்கள் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை.

நண்பன் சொன்னதால், அது உங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றுகிறது என்றால் நீங்கள் தான் அதை விளக்க வேண்டும்.

// இந்த வாக்கெடுப்பு பற்றி நான் என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கலாம். செய்யவில்லை. அதற்கு உங்களிடமும் பிற தமிழ் வலைப்பதிவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.//

நீங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாய் எழுதி இருக்க வேண்டிய அளவிற்கு அவசியமில்லை. அவ்வாறு கேட்டுக் கொண்டதாய் சொன்ன பொழுது அதை எல்லோரிடமும் மனப்பூர்வமாய் கேட்டுக் கொண்டதாய் தான் கருதினேன். இல்லை நீங்கள் சுந்தர வடிவேலுவிற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சொன்னதாக நினைத்தீர்களென்றால் - வருந்துகிறேன். ஏதோ நானும் ஒரு சக வலைப்பூக்காரன் என்பதால், என்னிடமும் கேட்டுக் கொண்டதாகக் கருதி, குறுக்கே புகுந்து என் மன்னிப்பை வழங்கியதற்காக.

நண்பன் போன்ற நண்பர்கள் -

நீங்கள் ஒரு பொதுமைப்படுத்திய கூறிய கூற்றிற்கு நண்பன் என்ற என் புனை பெயர் உங்களுக்குத் துணை நின்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நண்பன் தானே நட்பிற்கு உரிய ஆளுமை உடைய ஆள்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் - நண்பன் என்ற மனிதன் நிச்சயமாக அற்புதமான மனிதன் தான். ஒரு எழுத்தாளானாக வளரவேண்டும் என்ற ஆவல் உடையவன் நான் - ஒரு புத்தக பதிப்பகத்தாராக நீங்கள் - என்றாவது ஒரு நாள் - ஒரு புள்ளியில் சந்திக்காமாலா போய்விடுவோம்?

அப்பொழுது உணர்வீர்கள் - நண்பன் என்ற மனிதனைப் பற்றி. மாற்று கருத்துகளை மதிக்கும் பண்புடையவன் என்று.

அதே சமயம், என்னுடைய கருத்துகளை வலிமையாக ஆழமாக வலிக்கும் படியாக எடுத்து வைப்பவன் என்றும்.

புத்தகங்கள் தேர்வு செய்வதற்காக, Anyindian. com ல் தேடுவதும், கிழக்குப் புத்தகத்தார் என்ன புத்தகம் புதியதாகப் போட்டிருக்கிறார்கள் என்று தேடும் பொழுதெல்லாம் - கிழக்கு பத்ரிக்குச் சொந்தமானது, எனி இந்தியன். காம் PKSக்கு சொந்தமானது - அதனால் இங்கே எல்லாம் வாங்க கூடாது, உயிர்மையில் தான் வாங்க வேண்டும் என்றெல்லாம் நான் கணக்குப் போட்டதில்லை. ஏனென்றால் ஷாஜஹான் என்பது எப்படி ஒரு மனிதனைக் குறிக்கும் ஒரு அடையாளமோ, அப்படித்தான் பத்ரியும், PKSம். ஒரு மனிதனை குறிக்கும் ஒரு சொல் - ஒரு அடையாளம் என்பதைத் தவிர, வேறெதையும் தோண்டுவதில்லை.

இல்லையென்றால், என் நூல் நிலையத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கிழக்குப் புத்தகங்கள் இருக்காது. நாகூர் ரூமியின் இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் என்ற புத்தகம் உட்பட.

ஆகையால், பத்ரி அவர்களே மன அழுத்தம் தவிருங்கள்.

திசைகள் மாலனுக்கு ஒரு கவிதை அனுப்பினேன் - பின்நவீனத்துவம் என்ற பெயரில். புது வருட இதழில் வெளியாகி உள்ளது. குஷ்பு விவகாரத்தில், மாலனுடைய நிலை என்னவென்று, எல்லோருக்கும் தெரியும். அவருக்கு அந்த கவிதையுடன் ஒரு குறிப்பும் அனுப்பினேன். அதில், குறிப்பிட்டது, மாலன், உங்கள் நிலைக்கு எதிரான கருத்து கொண்ட கவிதை இது. உங்கள் கருத்தை முற்றிலுமாக எதிர்க்கும் கவிதை இது. எப்படி ஆதரிப்பதுஉங்கள் கருத்து சுதந்திரமாகிறதோ, அதே போல ஆதரிப்பது என்னுடைய கருத்து சுதந்திரம். மாற்று கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று எழுதி அனுப்பினேன். அந்த கவிதை வெளி வந்த பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. திசையில் என் கவிதை வருவது இது முதல்முறை அல்ல. மாற்று கருத்தாக இருந்தாலும் மாலன் அதை வெளியிட்டது தான் மகிழ்ச்சிக்குக் காரணம். மற்றபடி பல இணைய இதழ்களில் என் கவிதைகள் வரத்தான் செய்கின்றன.

அதுபோலத்தான் - உங்கள் நண்பர்களின் கருத்தை முற்றிலுமாக எதிர்த்து எழுதுகிறேன். ஆனால், அதற்காக பெயர் நோக்கி அரசியல் செய்பவன் அல்ல.

நன்றி....

4 comments:

இன்பத்தமிழன் said...

விட்டுட்டு வேலையைப் பாருங்க நண்பன் சாரே! அவர்களே தேர்தலை அறிவிப்பார்கள், அவர்களே நீதிபதி, அவர்களே தங்களுடையதை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். வெற்றி பெற்றதாக அறிவிப்பு பின்னர். வென்றதற்கு அடையாளமாக சின்னம் ஒன்றினை இணைத்துக் கொள்வார்கள். இதெல்லாம் சின்ன புள்ள வெளையாட்டு!

Anonymous said...

அன்பு நண்பனுக்கு,
தங்கள் கருத்துக்களில் ஒரு நேர்மை இருப்பதை உணர முடிகிறது.
தொடரட்டும் தங்களின் இந்த பணி...
அப்படியே என் சிறிய இல்லத்திற்கும் வருகை தரவும்...
http://engaeyo.blogspot.com

நண்பன் said...

நன்றி,

இன்பத் தமிழன் -உங்கள் கருத்திற்கு.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

நன்றி,

எங்கேயோ - நலமா?

உங்கள் தனி மடல் கிடைத்தது.

பெங்களூர் வரும் பொழுது கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்