"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, January 29, 2006

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் அவர்கள் வருவதாக இருந்த ஜனவரி 6ம் தேதிக்கு இரண்டு தினங்கள் முன்பாக துபாயின் ஆட்சியாளர் மரணமடைந்து விட, அவர் வருகை தள்ளிப் போய்விட்டது - பிப்ருவரி 24ம் தேதிக்கு.

அடுத்து கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் திட்டமிட்ட வருகையையும் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. அவரது சமீபத்திய மூன்று நூல்கள் மற்றும் கவிதைக்காக அண்ணன் அறிவுமதியால் தொடங்கப்பெற்ற ‘தை’ கவிதை இதழையும் துபாயில் அறிமுகப் படுத்தி வெளியிடும் விழாவும் பிப்ருவரி இறுதிக்கு தள்ளிப் போட வேண்டியதாயிற்று.

இவ்வாறு சோர்வு தரும் வண்ணமாக அமைந்து விட்ட இந்த ஜனவரியை வெறும் நண்பர்கள் கூடிப் பேசியும், எங்களது கவிதைகளை வாசித்து திருத்தி அச்சுக்குத் தயார் செய்து கொண்டும் மட்டுமே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்த பொழுது, கடந்த வாரம் ஒரு தொலைபேசி.

பேசியவர் - திரு. வ.மா.குலேந்திரன் அவர்கள். இவரை இங்கிலாந்தில் அகதிகளாக குடியேற்ற உரிமைக்காகப் போராடும் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும் - ஒரு வழக்கறிஞராக.

அந்த வழக்குரைக்கும் தொழிலுக்குப் பின் அவருக்கென ஒரு இலக்கிய முகமும் உண்டு என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டா என்று தெரியவில்லை.

அவர், சென்ற முறை துபாய் வந்த பொழுது, அவருக்கு ஒரு சிறிய வரவேற்பு அளித்திருந்தோம். அதன் பின் அவர் நண்பர் இசாக்குடன் தொடர்பு வைத்திருந்தார். எப்பொழுது வந்தாலும் எங்களை சந்தியாது செல்லக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தோம் என்றே சொல்ல வேண்டும்.

அவர், இந்தியா வந்து, நெடுமாறன், சுபவீ, வைகோ அவர்களை சந்தித்து விட்டு, பின்னர் லண்டன் செல்லும் வழியில், துபாயில் எங்களைச் சந்திப்பதற்காக நான்கு நாட்கள் பயணத்தில் விடுப்பு விட்டிருந்தார். அவர், அவரது துணைவியார், மற்றும் மாமியார் ஆகியவர்களுடன் வந்திருந்தார்.

துக்கம் அனுஷ்டிப்பின் போது, விழாவாக கொண்டாட கூடாதென்பதால், ஒரு கலந்துரையாடல் அமர்வாக அந்த நிகழ்ச்சியை அமைத்தோம். அவர் தங்கி இருந்த விடுதியில் இருந்து நண்பர் தமிழன்பு அவர்களை அழைத்து வந்தார் தெய்ராவிற்கு.

தமிழ் உணவகத்தின் மாடியில் அமர்ந்து அவரது கவிதைத் தொகுதியைப் பற்றிய ஆய்வாகத் தொடங்கினோம் அண்ணன் செ.ரா.பட்டணம் மணி அவர்கள் தலைமையில்.

அவரது அகராதி கவிதைகள் என்ற குறுங்கவிதைகளிலிருந்து நண்பர்கள் குழாமின் ஒவ்வொருவரும் வாசித்து தங்கள் எண்ணங்களை வெளியிட்டனர்.

சில கவிதைகள் மிக விரிவான விவாதத்திற்கு இட்டு சென்றன என்றால் மிகையாகாது. சில எளிய கவிதைகள் சிந்தனைக்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது.

கீழ்க்கண்ட ஒரு கவிதையைப் பாருங்கள்:

கருணாநிதி.

தமிழும் பணம் சேர்க்கும்
அமிழ்தம் என்று
உலகிற்கு அறிவித்த - சிறந்த
கலைஞர் இவர்.

தமிழ் மீது கொண்ட பற்றை மிகத் திறம்பட இவர் பயன்படுத்திக் கொண்டதை வேறு எந்த தமிழகக் கவிஞர்களாவது சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. சந்தேகம் தான். ஆனால், ஈழக்கவிஞர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் எதுவுமில்லை என்றே சொல்ல வேண்டும். எளிதாக சொல்லி விட்டார்.

இந்தக் கவிதையை ஒட்டிய சிந்தனையாக அன்று காலையில் தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறுகதையும் எண்ணத்தில் எழுந்தது. அது மாலன் சிறுகதைகள் என்ற புத்தகத்தில் ‘இதெல்லாம் யாருடைய தப்பு’ என்ற சிறுகதை தான்.

ஒரு பெண் - தமிழ் சிரியரால் உந்தப் பெற்று, தமிழார்வம் கொண்டு, தமிழ் கற்று, வேசமும், விசையும் பெற்றவளாய் கல்வி கற்று வெளி வருகிறாள். அந்தப் பெண்ணிற்கு வேலையே கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக சாதாரண அறிவுள்ள தங்கை பாத்திரம் ஒன்று படைக்கப் பெற்று வாழ்க்கையில் ஜெயிப்பதாகக் கதை போகிறது.

எப்படி?

// நான் எம்.ஏ முடித்தபோது திலகவதி டிகிரி வாங்கினாள். காலையில் ஜெர்மன், மாலையில் டிராவல் ஏஜென்சி என்று ஏதேதோ படித்து, கூடவே இரண்டு மூன்று சர்டிபிகேட்டுகள் வாங்கினாள் //

இந்தக் கதை குமுதம் இதழில் வெளியாகி இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சரி, இப்போது கேள்வி.

படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது.

ஆனால், இங்கே விவாதம் - எப்படி சிலர் தமிழால் பிழைத்தார்கள் - செல்வந்தர்கள் ஆனார்கள் என்பது தான். தமிழ் மொழி கற்பது உதவாது என்பது மாலன் வாதமானால், அதற்கு நேர் மாறான, தமிழால் வெற்றி பெற்றவர்களையும் காட்ட முடியும்.

ஏன், மாலனின் வெற்றி கூட அவருடைய தமிழ் தான்.

இன்று புத்தக கண்காட்சியில், பல மக்களும் வரிசையில் நிற்கின்றனர் - உள் நுழைவதற்கு என்னும் பொழுது இனி தமிழில் எழுதுபவர்களுக்கும் - தமிழால் பிழைக்கும் ஒரு வழி இருக்கிறது என்று தெளிவாக, உறுதியாக சொல்ல வைக்கிறது தானே?

மாலனின் இன்றைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றன இதில் என்பதை அறிய ஆவல் தான் - மாலன் தன் எண்ணங்களை மீண்டும் ஒரு முறை சொல்வாரா?

தமிழால் பணம் சேர்க்க முடியும் என்பதன் மீதான தன் எண்ணங்களை.!!!

ஒரு சின்ன கவிதை தான் - ‘அகராதி’ கவிதை தான். ஆனால், அந்த தொடர்புகள் வழியாகப் பயணித்தால், எத்தனை சிந்தனைகள் விரிகின்றன.!

இந்த சிந்தனை தொடர்புகள் வழியாக மேலும் ஒரு கவிதையையும் சொல்லத் தான் வேண்டும். அது அப்துல் ஹமீத் பற்றியது:

அப்துல் ஹமீத்

உலகத் தமிழர்
அறிவர் இவரை
இவர் தமிழால்.

அப்துல் ஹமீதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. கடந்த 30.05.05 அன்று துபாய் வந்திருந்தார். அவருக்கு தமிழிணைய நண்பர்கள் சார்பாக ஒரு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்பொழுது அவர் சிறப்புரை ஆற்றினார். அவருடயை இனிய எளிய தமிழை கேட்க ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது.

யாரோ ஒருவர் அப்படி பேசியிருந்தால் அது வருத்தத்திற்குரியதாக இருந்திருக்காது. ஆனால், பலரது அபிமானத்தையும், அன்பையும் தமிழால் பெற்ற அப்துல் ஹமீது அவர்கள், அன்று பேசிய பேச்சு, தமிழ் ஆங்கிலக் கலப்பிற்கு வக்காலத்து வாங்குவதாகவே இருந்தது. விருந்தினராக வந்தவரை விமர்சிக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டோம். பின்னர் விழாவில் முக்கியப் பங்கு வகித்த நண்பரிடம் அது குறித்து வருத்தம் தெரிவித்தோம்.
இதையும் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டோம். தமிழால், பிழைக்க முடியாது என்று பேசுபவர்கள் - இந்த இருவரையும் மறந்து விடக் கூடாது என்றே வலியுறுத்தினார்கள் அனைவரும்.


இது மாதிரி, நிறைய கவிதைகள் - அதைத் தொடர்ந்த அனுபவங்கள் - இவற்றையெல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கையிலே பேச்சு மற்றவற்றைப் பற்றியும் திரும்பியது. இலங்கை அரசியல் - இந்திய அரசியல் என்றெல்லாம் திரும்பியது. ராஜபக்ஷவைப் பற்றி குறிப்பிட்டு, எதனால் ஜெ அவரை சந்திக்க மறுத்தார் என்பது குறித்த அவரது கருத்தைக் கேட்டோம். அவர் சொன்ன பதில் - தமிழக தேர்தலைக் குறித்தான கவலை கொண்டுள்ள ஜெ, தன் அணிக்கு இரு நபர்களை எதிர்பார்த்தார். ஒருவர் பாமகவின் ராமதாசு மற்றவர் மதிமுக வைகோ. இருவருக்குமே ராஜபக்ஷவின் சந்திப்பு வேம்பாக இருக்குமென்பதால், அந்த சந்திப்பைத் தவிர்த்தார் என்றும் மற்றபடிக்கு அவர் தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டிருப்பார் என்று நம்பத் தகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.

வைகோவை அவர் சந்தித்தது பற்றி கேட்டோம் - மிக குறைந்த நேரமே அவருடன் உரையாட முடிந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக நம்பப்பட்டதால், பலரையும் நேரிலே பார்த்துப் பேசுவதாக ஏற்பாடு. அதனால், ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த நேரமே. மேலும், வீட்டைச் சுற்றிலும், ரகசிய ஒற்றர்கள் வேறு. வருகை தருபவர்களைப் பற்றிய குறிப்புகளும் தொகுக்கப்படுகின்றன என்பதால், அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றார். (2.1/2 மணி நேரம் மட்டுமே) அந்த குறைந்த நேரத்திலும், அவர் வீட்டிலிருந்து, தட்டச்சு செய்து வைக்கப்பட்டிருந்த பெரியார் திடலில் ஈழத்தமிழர் தரவு மாநாட்டில் வை.கோ ஆற்றிய உரையின் தொகுப்பையும், அவர் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் தொகுத்துப் புத்தகமாக்கிக் கொண்டு வந்திருந்தார்.

‘ஈழத்தமிழரைக் காப்போம்’ என்ற புத்தகம் அந்த வகையில் மிகக் குறைந்த காலத்தில் புத்தகமாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். வைகோவின் மற்றுமொரு புத்தகத்தையும் எடுத்து வந்திருப்பதாகவும் - கூட்டணி தெளிவாக அமைக்கப்பட்டவுடன் மட்டுமே அதை நண்பர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று வைகோ கூறியிருக்கிறார் என்ற தகவலையும் தெரிவித்தார். அந்தப் புத்தகம் லண்டன் சென்று அங்கிருந்து தான் வரவேண்டும் போலிருக்கிறது.

கூட்டணி பற்றி என்ன மனநிலையில் இருக்கிறார்?

கருணாநிதி தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தன் கட்சிக்காரர்களுக்குக் கணிசமான அளவு தொகுதி வைகோ எதிர்பார்க்கிறார்.

ஜெயுடன் இணைவது பற்றி எந்த மனநிலையில் இருக்கிறார்?

தன் மனநிலையை விடவும் - தன் கட்சிக்காரர்களின் மனநிலையைத் தான் இந்த முறை முக்கியத்துவப் படுத்துவேன் என்கின்றார் வைகோ.

அப்படியானால் ஜெவுடன் உறவு வைத்துக் கொள்ள அவர் தயாராகிவிட்டாரா?

அதை கருணாநிதி தான் தீர்மானிப்பார்.

குழப்பமான பதில் தான். என்றாலும் அதற்கு மேலாக அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேட்டோம். அது வைகோவின் மனம் திறந்த கடிதம் தான். இப்பொழுது அதை வெளியிடுவது உசிதமல்ல - ஆனால், கூட்டணி முடிவானதும், அந்தப் புத்தகத்தை அனுப்பித் தருவேன் என்று உறுதி கூறினார்.

பின்னர் வழக்கமான தமிழக தலைவர்கள் பற்றிய விசாரிப்புகள். அப்பொழுது தான் தகவல் சொன்னார் - சுபவீ விபத்துக்குள்ளான செய்தியை. தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வில் இருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், தொலைபேசியில் தொல்லை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என்றாலும், அனைவர் சார்பிலும், சுபவீயிடம் இசாக் நலம் விசாரித்தார்.

நெடுமாறன் ஐயா அவர்களைச் சந்தித்ததைக் குறிப்பிட்டு, அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டது கண்டு தன் வருத்தத்தையும் தெரிவித்தார்.

பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபாலையும் சந்தித்தார். நக்கீரன் இதழில் தொடராக வந்த ‘இந்துமதம் எங்கே போகிறது’ என்ற புத்தகம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இருப்பது குறித்து நக்கீரன் கோபால் தன் மகிழ்வை தன்னிடம் பகிர்ந்து கொண்டதை தெரிவித்தார்.

பின்னர் துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக நடைபெற இருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டோம். கவிதைப் போட்டிக்கு கிட்டத்தட்ட 800 கவிதைகள் வந்து சேர்ந்திருப்பதையும், நடுவர்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டதையும் அறிவித்தோம். இப்பொழுது, அந்தக் கவிதைகளுக்கு எண்களிட்டு, அந்த எண்களையும் பெயர்களையும் தனியாக எடுத்து விட்டு, கவிதைகளை மட்டும் திரட்டி, மூன்று பிரதிகள் எடுத்து, நடுவர்களுக்கு அனுப்பி வைக்கும் வேலை நடைபெறுவதையும் குறிப்பிட்டோம்.

துபாயில் இருந்து எழுத்துலகில் இயங்கி வரும் ஐந்து நண்பர்களின் புத்தகங்களை இந்த ஏப்ரல் / மே மாத வாக்கில் வெளியிட முனைந்திருப்பதையும், அவ்விழாவிற்கு துபாய்க்கு கவிக்கோ, இன்குலாப், மேத்தா, அண்ணன் அறிவுமதி அவர்கள் அனைவரையும் அழைத்து வர ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்தோம்.

எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமென்றால், பெரும் பொருட் செலவு ஆக கூடும். எவ்வளவு முடியும் என்று தெரியாது. ஆனால், இதுவரையிலும் விரும்பியவற்றை நிறைவேற்றிக் கொள்ள எங்களால் முடிந்திருக்கிறது என்ற அனுபவமே துணையாகி இருக்கிறது.

அனுபவ பகிர்வாகவும், அரசியல் விமர்சனமாகவும், உலக நடப்பாகவும், கவிதை விமர்சனமாகவும் என்று பல தளங்களில் இயங்கிய இந்த கலந்துரையாடலை மாலை 6.30 மணி அளவில் முடித்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் போனதே தெரியவில்லை.

அவர் எழுதிய புத்தகம் - அகராதிக் கவிதைகள். மணிமேகலைப் பிரசுரம். விலை ரூ.25.

14 comments:

முகமூடி said...

// இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான் //

இலக்கிய திறனாய்வு எல்லாம் செய்கிறீர்கள். ஆனால்,

இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டன

என்று எழுத வேண்டியதை

// இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான் //

என்று எழுதுகிறீர்கள்.

*

// படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது //

நீங்கள் + உங்களால் அறிவுருத்தப்படும் நிலையில் இருக்கும் உங்கள் நெருங்கிய உற்றார் உறவினர் என்ன படித்தீர்கள்/ஏன் என்பதை முதலில் ஒரு முறை சொல்லிவிடுங்கள். கருத்து கந்தசாமியாக மாறி என்ன வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் நிதர்சனத்தை சொல்லுங்கள். கூடாது என்பது உங்கள் ஆசை. நடைமுறை என்ன? நான் +2 முடித்தபோது தமிழ் இலக்கியம், எனக்கு விருப்பமான இசைக்கருவி/இசை, பொறியியல் என்ற மூன்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலை பட்டம் பெறுவது என் விருப்பம் என்ற வாய்ப்பு கிடைத்த போது நான் ஏன் பொறியியல் பட்டத்தை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன். ஆசைக்கு படிப்பவர்கள் சிறுபான்மை. வேலைக்கு படிப்பு என்பதுதான் பெரும்பான்மை. சிந்தனை தெளிவுக்கு சைடில் படிக்கலாம் என்பது பகுத்தறிவு. உடனே உதாரணம் காண்பிக்கிறேன் என்று ஒற்றை இலக்கத்தில் ஆள்காண்பிக்காதீர்கள். சுற்றுமுற்றும் பாருங்கள். (ஏட்டுச்சுரைக்காய் - படித்தவர்கள் எல்லாம் நல்லபடி சிந்திக்கிறார்களா என்ற உபகேள்வியை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

மாலன் எழுதியது கதை. அதை நிகழ்வாக பார்த்து, நடைமுறையிலிருந்து உதாரணமும் தருகிறீர்கள். தமிழால் வெற்றி பெற்றவர்களையும் காட்ட முடியும் என்று நீங்கள் சொல்வதை போலவே தமிழால் தான் வெற்றி பெறவில்லை என்று ஒரு கதாபாத்திரம் அந்த கதையில் நினைக்கிறது. புனைவை ஏன் புனைவாக மட்டும் பார்க்க முடியவில்லை உங்களால். கொலையை பற்றி ஒரு கதை எழுதப்பட்டால் கொலை குறித்த ஆசிரியரின் கண்ணோட்டத்தை எதிர்பார்ப்பீர்களா நீங்கள்? மாலனுக்கு கேள்வி வெறுமே உங்கள் பதிவில் மட்டும் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. அவரிடமிருந்து பதில் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kanags said...

நண்பன், இலக்கியச் சந்திப்பில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். பகிர்ந்ததை எமக்கும் அறியத்தந்ததற்கு நன்றி.

//அப்துல் ஹமீது அவர்கள், அன்று பேசிய பேச்சு, தமிழ் ஆங்கிலக் கலப்பிற்கு வக்காலத்து வாங்குவதாகவே இருந்தது//
ஆச்சரியம்!

'துவக்கு'க்குள்ளும் இலக்கியத்தைக் கண்ட தங்களுக்கு பாராட்டுக்கள்.

வசந்தன்(Vasanthan) said...

நல்ல விவரணம்.
நன்றி.

நண்பன் said...

// மாலன் எழுதியது கதை.//

கதை, கவிதை அல்லது எந்த ஒரு படைப்பிலக்கியமும் ஒரு மனிதனின் சிந்தனையிலிருந்து தான் எழுகிறது. இது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. உங்களுக்குத் தான் இலக்கியம் எதுவுமே தெரியாதே.

சிந்தனைத் திறனிலிருந்து உதிப்பது தான் படைப்பு என்னும் பட்சத்தில், அந்தப் படைப்பைப் படைத்தவன் அதில் வருகின்ற கருத்துகளுக்கும் பொறுப்பாளியாகி பதில் சொல்ல வேண்டியது தான். இங்கு சிந்தனை குறித்து தான் கேள்வி எழுப்பப்படுகிறதே தவிர, படைப்பாளியின் நடத்தையோ, அவரே அதையெல்லாம் செய்கிறார் என்றோ அல்ல.

இந்த நுண்ணிய விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நக்கல், நையாண்டி மாத்திரம் உங்களைத் தூக்கி வைத்து விடாது.

மற்றவை பிறகு.

நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

// இலக்கிய திறனாய்வு எல்லாம் செய்கிறீர்கள். //

முகமூடி,

ஒரே ஒரு பதிவை மட்டும் வாசித்து அழகிய கருத்துகளை வெளியிட்ட நீர் - அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல், மூடிக்கொண்டு போய்விட்ட நீர், இப்பொழுது புது வேடம் தரித்து, அடுத்தவர்களைப் பற்றிய அடுத்த கட்ட 'கருத்துகளை' முன் வைக்க வந்துவிட்டீர். பாராட்டுகள். எத்தனை எடுத்து ஓதினாலும், செவிடாகப் போன காதுகளோடும் குருடாகிப் போன கண்களோடும் வலம் வருவதை உங்களால் நிறுத்த இயலாது.

இலக்கிய திறனாய்வு!!!

நான் முன் வைத்த கருத்தை, நீங்களாக இலக்கிய திறனாய்வு என்று எடுத்துக் கொண்டீர்கள். எங்கோ எவரோ கொடுத்த உதையில் இங்கு வந்து புலம்புகிறீர்.

நான் திறனாய்விற்குள் புகுந்திருந்தால், அந்தக் கதாபாத்திரம் எப்படி பாத்திரப்படைப்பில் சறுக்கிற்று, கதையின் மையக் கருவில் உள்ள தவறென்ன, அந்த சிந்தனையின் சாரம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகளுக்குள்ளெல்லாம் புகுந்து அக்கு வேறு ஆணி வேறாக அலசியிருப்பேன்.

என் நோக்கம் அதுவல்ல -

'அன்று தமிழ் படிப்பு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சொன்னீர்கள். பல வருடங்கள் கழிந்து விட்டது. இன்று அது உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது என்பதை சொல்வீர்களா?' என்ற கேள்வி. அவர் தமிழை குறிப்பிட்டு சொல்லியிருந்ததால், அந்த கேள்வி. மற்றபடிக்கு எந்த படிப்பு படித்தால் எந்த வேலை கிடைக்கும் என்று உங்கள் தளத்தில் போட்டு விவாதித்துக் கொள்ளுங்கள் - எனக்குக் கவலையில்லை. அதை விவாதிப்பதற்கான தளம் இதுவல்ல.

இதற்கு மேலும் உங்களுடன் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், நீங்கள் அந்தக் கதையை வாசித்திருக்கவில்லை. வாசித்திருந்தால், ஒரு சிறு குறிப்பு கொடுத்து விட்டு விவாதிக்க வாருங்கள். உங்களின் வாசிக்காமலே கருத்து சொல்லும் தரம் உலகம் அறிந்தது. இனி தான் அதை உலகிறகு எடுத்து சொல்ல வேண்டுமென்பதில்லை.

உங்கள் பார்வையில் மாலனின் எழுத்துகளை நான் குறிப்பிட்டதால், திறனாய்வு செய்து விட்டதாக அர்த்தம் எடுத்துக் கொண்டீர்கள்.

முதலில், இலக்கியம் பற்றிய என் பார்வைகளை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் தான் என்னுடைய பதிவுகள் எதையும் வாசிக்கவே இல்லையே - பின் எப்படி உங்களுக்கு இலக்கியம் பற்றிய என் மதிப்பீடுகள் தெரிய வரும்.?

தன்னைத் தானே எழுதிக் கொள்ளாத கவிதை என்று ஒரு கவிதை எழுதினேன். படித்திருக்க மாட்டீர்கள். படித்திருந்தால் இலக்கியம் பற்றி இங்கு பேச வந்திருக்க மாட்டீர்கள். முதலில், இலக்கியம் என்றால், அவர்கள் பீடத்தில் ஏறி இருப்பார்கள், சொற்பர்களுக்குப் புரியும் படி மட்டும் தான் எழுதுவார்கள் - அப்படி எழுதினால் தான் இலக்கியம் என்ற மதிப்பீடுகள் கொண்டவனல்ல நான். இலக்கியவாதிகள் சில மேல்வர்க்க சிந்தனையாளர்களால் ஆசி கூறப்பட்டவராக இருக்க வேண்டும் என்றோ, அல்லது, பிற குழுக்களால் 'உச்சி முகரப்பட்ட'வராக இருக்க வேண்டும் என்பதோ அல்ல.

இலக்கியம் காலத்தால் தீர்மானிக்கப்படும். இன்று எழுதிய எழுத்துகள் - காலத்தால் அழியாது நின்று ஒரு மீள்பார்வையில், ஒரு மீள்வாசிப்பில் தரமானதாக தன் வாசிப்பிலே உணரப்படுமாயின் - அது இலக்கியமாகும் தகுதி பெறும். இவரது ஆசி, அல்லது அவரது ஆசி என்பதல்ல இலக்கியம். அது சுத்த பேத்தல்.

பிறரால் வழங்கப்படும் எந்த தகுதியும் தேவையில்லை எழுதுவதற்கு என்பது தான் நான் கற்றுக் கொண்ட பாடம். சுயமாக சிந்திக்கும் திறமை, அதை வெளியில் சொல்லக்கூடிய துணிவு, எழுதுவதில் ஒரு திருப்தி - இவை தான் தேவை. முயன்று முயன்று எழுதித் தான் கற்றுக் கொள்ள வேண்டும். பிறவியிலேயே நான் கவிஞன் - என்னிடத்திலே கவிதை என்னை கருவியாக்கி தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்றெல்லாம் பீலா விட்டு, என் மேதைத்தனத்தைக் காட்ட முயற்சிக்கும் முட்டாள் இலக்கியவாதியாக இருக்க மாட்டேன். தொடர்ந்து திருத்தி, திருத்தி சரி செய்து, எனக்குத் திருப்தி வரும் பொழுது அதை பதிப்பிக்கிறேன். இங்கு எழுதப்படும் வலைப்பூக்களில் கவிதை மட்டுமே அந்தத் திருத்துதலுக்கு உட்படுத்தப்படுகிறது. மற்ற எழுத்துகள் அல்ல. அலுவலகப் பணிக்காகக் கொடுக்கப்படும் கணிணியையும், இணைப்பையும், வலைப்பூக்களிலே மேய்வதற்காக உபயோகப்படுத்துபவன் அல்ல நான். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதணும். இணைப்பிற்கு காசு கட்டனும். அதனால் தான் என்னால் விடுமுறை நாட்களிலும் இயங்க இயல்கிறது. மறு வாசிப்பிற்கு உட்படுத்தப்படாத அந்த எழுத்துகளை, திருத்த சந்தர்ப்பம் அமைய நேரமில்லாத எழுத்துகளில் சில பிழைகளைத் தேடி சுட்டிக் காட்டி - உங்கள் மேதாவித்தனத்தை, பிழைகளைக் கண்டு பிடிக்கும் மேதாவி இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள ஆசை இருந்தால் - அதற்கு என்னுடைய பதில் - மூடி கொண்டு போ.

எந்த கருத்தை விவாதிக்கிறோம் என்பதைப் பற்றி தெளிவாக வாசித்து தெரிந்து கொண்டு, விவாதத்திற்கு மட்டும் வாருங்கள். வெறுமனே இது கதை, இது கவிதை - அதிலே வரும் சிந்தனைகளுக்கெல்லாம் எழுத்தாளன் பொறுப்பாக முடியாது என்று பிதற்ற வேண்டாம்.

'இது கதை தான் - இந்த கதாபாத்திரங்கள் பேசுபவற்றிற்கும், சிந்திப்பவற்றிற்கும் எழுத்தாளன் பொறுப்பேற்க மாட்டான்' என்று மாலன் வந்து சொல்வாரானால், அவரிடம் மேற்கொண்டு கேட்க என்னிடம் கேள்விகள் இருக்கின்றன. அதெல்லாம் உங்களுக்குப் பிடிபடாத விஷயங்கள். உங்களால் அந்த கேள்விகளைப் புரிந்து கொள்ளக் கூட இயலாது.

மேம்போக்காக நுனிப்புல் மேய இது இடமில்லை நண்பரே. இனியும் வாசிக்காமல், தெரிந்து கொள்ளாமல், பெனாத்தி, உங்கள் முகமூடியைக் கிழித்துக் கொள்ள வேண்டாம். முகமூடிக்குள்ளிருக்கும் திருமலை போன்ற பெருமித உயரங்களை அடையத் துடிக்கும் அந்த உண்மை முகம் வருத்தமடையப் போகிறது அன்பரே!!!

இலக்கியம் எந்த பீடத்திற்கும் சொந்தமில்லை. அண்ணன் அறிவுமதியிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த பொழுது, இப்பொழுது தான் கல்வி கற்று முதல் தலைமுறையாக எழுத வந்திருப்பவர்களை மிரட்டுவதற்கென்றே - ஒரு இலக்கியக் கூட்டம் அலைகிறது. கவலையே படாதீர்கள். நீங்கள் எழுதுங்கள் - எவன் சொல்வது நாம் எழுதுவதை இலக்கியம் இல்லை என்று? காலம் சொல்லும் தம்பி - யாருடைய எழுத்துகள் இலக்கியமாக நீடிக்கும் என்று. உங்களைப் போன்றவர்கள் நிறைய வாருங்கள் - எழுதுங்கள் - எழுதிக் கொண்டே இருங்கள் - கவலையே படாதீர்கள். முகமூடி, பீடங்களின் ஆசிக்காகக் காத்திருக்கும் உங்களுக்கு தமிழ் இலக்கியவாதிகளின் எண்ணிக்கை - தமிழால் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக தெரியலாம். ஏனென்றால், நீங்கள் தேடும் நாமகரணங்கள் அப்படி. ஆனால், என்னால் தமிழால் வாழ்பவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் காட்ட இயலும். தேவை - வண்ணங்கள் இடப்படாத கண்கள்.

எளிய மக்களின் கிராமியப்பாட்டு, திரைஇசை பாட்டுகள் என்று தான் என் இலக்கிய ஆவல் வளர்ந்தது. முதலாவது புத்தகமாக மேத்தா - இப்படி எளிமையானவர்களால் தான் இலக்கியம் என்னிடத்தில் வளர்ந்தது.

நான் எழுதிய முதல் சில கவிதைகளின் தரம் எப்படி இருந்தது தெரியுமா?

அந்த ஃபீமேல்
இந்த மேல்க்கு
அனுப்பினாள் ஈமெய்ல்
யேல் சாப்பிட்ட
எலியானான்
எங்கள் வீட்டு மேல்.

இந்த துணுக்குத் தோரண எழுத்துகளிலிருந்து தொடங்கி தான் இன்று நான் எழுதிக் கொண்டிருக்கும் கவிதைகளை அடைந்தேன். இன்னமும் கூட சிறப்பாக எழுதலாம் என்று கூட தோன்றும் சில சமயம். திரும்ப திரும்ப வாசித்தல், திரும்ப திரும்ப எழுதுதல், இவை தான் என் இலக்கியப்பாதை.

என் இலக்கிய நண்பர்கள் - எளிமையான சினிமா பாடலாசிரியர்கள் முதலில் - பின்னர் தான் கவிஞர்கள். அண்ணன் அறிவுமதி, நா.முத்துகுமார் எல்லாம் இப்படி தான்.

மூடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இதெல்லாம் புரியாது. எங்கே என்ன வாசித்தோம் என்று குழம்பிப் போய், இனி வாசிப்பதில்லை என்று முடிவு கட்டி விட்டதாய் சொன்னீரே, என்ன ஆயிற்று? அதைக் கடைபிடிப்பது தான் உமக்கு நல்லது. இல்லையென்றால், முழுமையான வாசிப்பில்லாமல், எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள முயற்சித்து, இவருடைய பதிவா, அவருடைய பதிவா என்று குழம்பி - பின்னர் புழுப் போல நெளிய வேண்டி வந்துவிடும்.

நண்பன் said...

//'துவக்கு'க்குள்ளும் இலக்கியத்தைக் கண்ட தங்களுக்கு பாராட்டுக்கள். //

kanags

ரசித்தேன் - உங்கள் சொல்லாடலை.

மிக்க நன்றி.

துவக்குகளை விட வலிமையானது - துவக்கு-வின் இலக்கிய பணி. காலம் அனைவருக்கும் புரிய வைக்கும். உங்களைப் போன்ற நண்பர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும்.

அன்புடன் நண்பன்

நண்பன் said...

இரண்டு முறை அந்தப் பதிவு வந்துவிட்டதால், ஒன்று நீக்கப்பட்டுவிட்டது.

அவ்வளவே.

நன்றி.

நண்பன் said...

வசந்தன்,

நன்றி.

உங்கள் வருகைக்கு - தொடர்ந்து வாருங்கள்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

// இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர்
வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான் //

இலக்கிய திறனாய்வு எல்லாம் செய்கிறீர்கள். ஆனால்,

இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும்
ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டன

என்று எழுத வேண்டியதை

// இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான் //

என்று எழுதுகிறீர்கள்.

மற்றொரு பதில் -

மனதில் தோன்றுவதை அப்படியே எழுதி மறுவாசிப்பின்றி பதிப்பிப்பதை ஒரு பெருங்குற்றமாக முன்வைப்பதற்கு பதில் மூடிக் கொண்டு போ என்றேன்.

ஆனால், அதில் என்ன குற்றம் கண்டுவிட்டார் என்பதை மீண்டும் வாசித்த பொழுது, என்னுள் எழுந்த கேள்வி - பிழை எங்கிருந்து வந்தது? சரியாகத் தானே எழுதி இருக்கிறேன்!

முதலில் துபாயின் நண்பர்களின் வாழ்க்கை நிலை என்ன என்பதை முகமூடி தெரிந்து கொண்டு இருக்க வேண்டும் - கருத்து கந்தசாமியாக மாறுவதற்கு முன்பு.

இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உலகம் இருக்கிறது. அதற்குள்ளே தான் அவர்களால் வாழ இயலும். மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் என
அனைவரும் இல்லாத சூழ்நிலையில், அவர்களுக்கு அவர்கள் வாழும் இந்த உலகம் மிகவும் முக்கியமானது.

சில தொழிலாள நண்பர்களுக்கு மாலை வேளையில் - வெள்ளிக்கிழமை மாலை வேளையில் Carrie4ல் நுழைந்து ஏதாவது சாமான்கள் வாங்க வேண்டும் அல்லது உலாவ வேண்டும்.
சிலருக்கு தமிழகத்தின் ருசியான உணவுகளை உண்டு செல்ல வேண்டும். மற்றும் சிலருக்கு WWF பார்க்க வேண்டும்.

அது போல எங்களுக்கு - எங்கள் உலகம் துவக்கு. ஒவ்வொரு வாரமும் வியாழன் மாலை எப்பொழுது வரும் என்று காத்திருக்கும் தவிப்பும், பின் அந்த மாலை நேர சந்திப்பிலிருந்து
வெள்ளி இரவு 10 மணி வரையிலும் நடக்கும் விவாதங்களும், கவிதைப் பரிமாற்றங்களும், தர்க்கங்களும், இந்த மாதத்திய நிகழ்வாக எந்த இலக்கிய
நிகழ்ச்சியை அரங்கேற்றலாம் என்று உற்சாகமாக பொழுதைக் கழித்து பின்னர் அடுத்த வாரத்திற்காகக் காத்திருக்கும் ஏக்கம் மிகுந்த வாழ்க்கை. உலகம்.
இந்த பின்னணியில், மிகுந்த சிரமத்திற்கிடையில், பொருட்செலவு செய்து, ஏற்பாடுகள் செய்யப்பட்ட கூட்டங்களாக இருக்கட்டும், தாயகத்தில் இருந்து வர இருக்கும்
நண்பர்களை சந்திக்கும் ஆவலாக இருக்கட்டும் - எங்கள் உலகின் இன்பங்கள் அலாதியானவை. பிறரால் புரிந்து கொள்ளப்பட வேண்டுமானால், அவர்கள்
இந்த உலகிற்குள் வந்து வாழ்ந்து பார்க்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்களுக்குப் புரியாது. அதுவும் தங்களை மூடி வைத்திருக்கும் அன்பர்களுக்குப் புரியவே புரியாது. துபாய் மன்னர் மரணத்தால் - நிலை
குலைந்தது எங்கள் உலகம். ஆம் - நான் சரியாகத் தான் சொல்லி இருக்கிறேன் - நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம் - எங்கள் உலகின் நிகழ்வுகள் மிகவும்
பாதிக்கப்பட்டன. என் எழுத்தில் எழுந்த ஆதங்கம் உளப்பூர்வமானது. இதை முகமூடி மாதிரி மூடிக் கொண்டு அலைபவர்களால் புரிந்து கொள்ள இயலாது.
அதனால், மீண்டும் என் பதில், மூடிக் கொண்டு போங்கள் - அவ்வளவு தான்.

முகமூடி said...

WOW.... I AM APPALLED
WOW.... I AM APPALLED
WOW.... I AM APPALLED


தயவு செய்து இதற்கும் பதில் அளிக்க ஆரம்பித்து விடாதீர்கள். பிரதியுபகாரமாக இனி உங்கள் பதிவில் கருத்து சொல்லவே மாட்டேன் ;)

Kanags said...

//இரண்டு முறை அந்தப் பதிவு வந்துவிட்டதால், ஒன்று நீக்கப்பட்டுவிட்டது//
இல்லை. இரண்டாம் முறை நான் கேட்டது, ஏன் உங்கள் இலக்கியச் சந்திப்பை 'நகைச்சுவை/நையாண்டிக்குள்' வகைப்படுத்தினீர்கள் என்பதைத்தான்.

நண்பன் said...

//

//இரண்டு முறை அந்தப் பதிவு வந்துவிட்டதால், ஒன்று நீக்கப்பட்டுவிட்டது//
இல்லை. இரண்டாம் முறை நான் கேட்டது, ஏன் உங்கள் இலக்கியச் சந்திப்பை 'நகைச்சுவை/நையாண்டிக்குள்' வகைப்படுத்தினீர்கள் என்பதைத்தான்.//

அப்படியா நினைக்கிறீர்கள் நீங்கள்?

நான் அதை வகைப்படுத்தவில்லை. இரவு இரண்டு மணி அந்தப் பதிவை இடுகையில். பின் அதை வகைப்படுத்த எத்தனையோ முயன்றும், இந்த நவீன பட்டை கண்ணுக்குத் தெரியாததால், காலையில் எழுந்து பார்த்துக் கொள்ளலாம் என்று படுத்துத் தூங்கிவிட்டேன். சில அற்ப புழுக்கள் - ஒரு நான்கு மணி நேரமாக மிக முயற்சித்து, அதை நையாண்டி, நகைச்சுவைக்குள் வகைப்படுத்தி வைத்து விட்டுப் போயிருக்கின்றன. அவை எத்தகைய புழுக்கள் என்பது உங்களுக்கேப் புரிந்திருக்கும்.

இது தமிழ் மணத்திற்கு ஒரு சறுக்கல் தான். ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக வகைப்படுத்த இயலாமல் போய்விட்டால், உடன் மற்றவர்கள் தங்கள் நக்கும் புத்தியைக் காட்ட இத்தகைய சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றன. சூடு கொடுத்தால் பின்னர் அலறி துடிக்கின்றன. என்ன செய்வது? இத்தகைய மனிதர்கள் தான் நாகரீகத்தைத் தூக்கிப் பிடிப்பதாக நடிக்கின்றனர்.

இந்த ஈனப் பிறவிகளை அடையாளம் காட்டும் வகையாகவே அதை மாற்ற கோரிக்கை வைக்காமல் அப்படியே விட்டு வைத்திருக்கின்றேன்.....

நண்பன் said...

// WOW.... I AM APPALLED
WOW.... I AM APPALLED
WOW.... I AM APPALLED

தயவு செய்து இதற்கும் பதில் அளிக்க ஆரம்பித்து விடாதீர்கள். பிரதியுபகாரமாக இனி உங்கள் பதிவில் கருத்து சொல்லவே மாட்டேன் ;) //

Yes, You need to be appalled at the way you hid yourself behind a veil and still expect respect.

Yes, You need to be appalled at the way you lick your wounds and the taste for exhibiting it in public.

Yes, You need to be appalled at the way you pass judgement on others without even reading them

என் பதிவில் நேர்மையாளர்கள் மட்டுமே விவாதிக்க இயலும். உங்களால் முடியாது. போய் வாருங்கள்.

பதியப் படும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் ஒரு வரியாவது பதில் சொல்ல வேண்டியது என் கடமை. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் :-)

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்