"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, January 15, 2006

மீட்டெடுக்கக் காத்திருத்தல்....

வீழ்ந்துவிட்ட தங்கள் நிழலை
மீட்டெடுத்து கடைத்தேற்றும் முனைப்பில்
பிணந்தின்னிப் பறவைகள் தலைசாய்த்து
தன் இறக்கையின் ஈறும் பேனும் உண்டு
விழும் பிணம் தூக்க காத்திருக்கின்றன.

ஆளரவமற்ற நாட்களின் உரிமையோடு
பறந்து திரிந்த ஆகாயத்தில்
இன்று அச்சமூட்டும் இடிமுழக்கங்களும்
கண்ணொளி பறிக்கும் மின்னொளிகளும்
நிற்கவொட்டாது விரட்டியடிக்கின்றன.

தங்கள் கழிவுகளால் நாற்றமடிக்கும்
இருண்ட குகைகளிலும்
செங்குத்துப் பாறைச்சரிவுகளிலும்
ஒளிந்து ஒளிந்து நோட்டமிடுகின்றன
இடியொலியெழுப்புபவனும்
மின்கதிர் வீசி எரிதழல் மூட்டுபவனும்
மறைந்தொழிந்தார்களாவென
மகோன்னதமிக்க மந்திரங்களைப் பேசி
மடக்கிடலாம் மந்தைமந்தையாய் மனிதனையென
காலம் பார்த்து காத்துக் கிடக்கின்றன

விரிந்த வானம் விலக்கி இருள்குகை புகுந்ததால்
நிழலிழந்தோமென்றறிதலில்லாமல்
விழிப்புற்றவனைக் கண்டஞ்சி
வீழ்ச்சிக்காய்க் காத்திருக்கின்றன
கண்காணாத முகடுகளில் காய்ச்சலோடு

மனிதன் மட்டுமென்னவோ
இன்னமும் தன்மீது ஆதிக்கம் புரியும் நிழலொன்று
தன்னையறியாமலே படிகிறதென்ற பதட்டத்தில்
பக்கத்து வீட்டு மனிதனை
கண்காணித்துக் கொண்டிருக்கிறான்
மரணம் தொட நீளும் ஒரு கலவரத்திற்காக.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்