"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, December 08, 2008

தேர்தல் முடிவுகளும் தீவிரவாதமும்

ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்திருக்கிறது.

மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஷ்ஹரிலும் பிஜெபி தனிப்பெரும்பான்மை அடைந்திருக்கிறது. மிசோரம், டெல்லியில் காங்கிரஸ் வென்றிருக்கிறது தனிப்பெரும்பான்மையுடன். ராஜஸ்தானில் காங்கிரஸ் (96) வென்றிருக்கிறது. என்றாலும் ஆட்சி அமைக்க சில சுயேட்சை நண்பர்களின் ஆதரவு தேவைப்படலாம்.


ஒன்றுமற்றது என எண்ணப்பட்ட பிஎஸ்பி, எல்லா இடங்களிலும் தன் இருப்பைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. தலித்கள் மட்டுமின்றி, பிராமிணர்களையும் தேர்தலில் நிறுத்துவோம் என்ற அவர்கள் நிலை, தொடர்ந்து ஆதரவு பெற்று வருகிறது. ஆனால், அவர்கள் வென்ற இடங்களை விட, அவர்கள் காங்கிரஸ், பிஜெபியின் வெற்றி வாய்ப்புகளைப் பல இடங்களில் பாதித்திருக்கின்றனர். அதுவே பிஎஸ்பி யின் முக்கிய நோக்கமாக கூட இருக்கலாம். இனி புள்ளிவிபரவியலாளர், தொடர்ந்து ஆய்ந்து, சதவிகிதங்களோடு வரும் பொழுது, பிஎஸ்பி எப்படி அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தன்னை நடத்திக் கொள்ளும் என்று தெரிய வரும்.


யாருடைய ஓட்டு வங்கியை உடைத்திருந்தாலும், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக தன்னை வளர்த்துக் கொள்வதுவும், அதன் மூலம் பேரங்களைப் பேசுவதும் தான் அதன் எண்ணமாக இருக்கும். ஏற்கனவே, மாயாவதி, தன்னை இந்தியாவின் அடுத்த ஒபாமா என சொல்லிக் கொண்டு இருக்கிறார். பிரதமர் கனவு அவரிடம் எப்பொழுதும் இருந்தே வந்திருக்கிறது. அதற்கான நியாயமும் அவரிடம் இருக்கிறது.


தன்னை கவனமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும், அனைத்தையும் மறுத்து, தன்னை முழுக்க முழுக்க தலித் அடையாளத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அதையும் மீறி, தன்னை வளர்ப்பதன் மூலமே, இந்தியாவின் உச்ச அதிகார மையத்தில் தான் வீற்றிருக்க முடியும் என்று புரிந்து கொண்ட செயல்பாடுகளின் மூலம் அவர் சரியான திசையிலே தான் செல்கிறார் என்பதை உணர முடிகிறது.


இங்கு குறிப்பிடத்தக்க வெற்றி என எடுத்துக் கொண்டால் ராஜஸ்தானைத் தான் சொல்ல வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்காத மாநிலம். ராஜஸ்தானும், டெல்லியும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் தேர்தலை சந்தித்த மாநிலம் என்பதால் அதன் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரு மாநிலத் தேர்தலிலும் பிஜெபி முக்கியப் பிரச்சினையாக ‘தீவிரவாதத்தை’ முன் வைத்தது. அதிலும், அத்வானியும், வசுந்தராவும் அலறும் குரலில் தீவிரவாதத்தையும், காங்கிரஸ் அதை தடுக்கத் தவறி விட்டது எனவும் முழங்கினார்கள். ஆனால், மக்கள் அதை காதில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, ‘தீவிரவாதத்தைத் தடுப்பது’ தங்கள் ஏகபோக உரிமை என பிஜெபி ‘இறுமாந்திருந்ததற்கு’ மறுப்பு சொல்லி தூக்கியெறிந்திருக்கிறார்கள் மக்கள்.


இங்கு இரண்டு விஷயம் கவனிக்கப்படத்தக்கது.


ஒன்று -

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை விட, அபாயகரமான இந்துத்வ தீவிரவாதத்தைத் தடுக்கத் தவறிய நிலையில் இருந்து கொண்டே தீவிரவாதத்தை தடுக்காத பழியைக் காங்கிரஸின் மீது திணிக்க நினைத்தது.


இரண்டு -

தீவிரவாதத்திற்கு எதிராக மொத்த இந்தியாவும் ஒன்றிணைந்து தங்கள் கோபத்தை வெளிக்காட்டிய பொழுது, அவர்கள் தங்கள் வெறுப்பை உமிழ்ந்த ஒரே இனமாக இருந்தது – The Political Class. அவர்கள் தங்கள் கோபத்தை அரசியல்வாதிகள் என பொதுப்படையான ஒரு வகுப்பின் மீது காட்டினார்களே தவிர, காங்கிரஸ் என்ற ஒரு கட்சியின் மீது காட்டவில்லை.

அரசியல்வாதிகள் ஒரு குடையின் கீழாக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்பிய ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக, அத்வானி சர்வ கட்சி கூட்டத்திற்குப் போகாமல், பிரச்சாரத்திற்கு சென்று, அரசைக் குறை கூறிக் கொண்டிருந்தார் – மக்களின் மனநிலையை அறியாமலே.

தாஜ் ஒரு பாரம்பரிய கட்டிடம் அதை சிதைத்துவிட்டார்களே என அழுதது மக்களிடத்திலே எடுபடவில்லை. புராதணக் கட்டிடங்களை சிதைத்ததற்கு முன்னோடி தான் என்பதை அவர் வசதியாக மறந்து விட்டார். ஒரு கட்டிடத்தை இடிப்பதற்காக, இந்தியாவின் ஊர் ஊராக தேரில் பயணம் வந்ததும், அதுவரையிலும், அயோத்தி என்ற இடத்தின் உள்ளூர் பிரச்சினையாக – ஒரு நிலத்தகராறாக மட்டுமே இருந்து வந்த பிரச்சினையை, தனது அரசியல் லாபத்திற்காக, இந்து-முஸ்லிம் பிரச்சினையாக மாற்றி, இனக்கலவரங்களை மூட்டி, அதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டவர் தான் என்பதை அத்வானி மறந்து விட்டு, இன்று, தீவிரவாதத்திற்கான காரணத்தை பிற கட்சிகளின் மீது திணிக்கப்பார்த்ததை மக்கள் ஏற்கவில்லை.


இப்பொழுது, பிஜெபி தன்னை அடுத்த கட்ட நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.


தீவிரவாதத்தை ஒரு தேசிய பிரச்சினையாக அணுக வேண்டும். அதை தனக்கு ஓட்டு வாங்கித்தரும் ஒரு துருப்பு சீட்டாக மட்டுமே பயன்படுத்தக் கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது. ஒரு பொறுப்புள்ள கட்சியாக செயல்பட வேண்டுமென்றால், தனது எஜமானர்களை அடக்கி வைக்க வேண்டும். எஜமானர்களை அடக்குவது சாத்தியப்படுமா என்பது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தான். ஆனால் அதை கண்டிப்பாக அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்.


அடுத்து, counter terrorism என்று நாமகரணம் சூட்டப்பட்டு, இந்தியாவிற்குள்ளேயிருந்து கிளம்பியிருக்கும் தீவிரவாதக் கும்பலையும், எல்லை தாண்டிய தீவிரவாதம் என்ற வகையில், ஒரு நாட்டின் அமைதியைக் குலைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவை பொருளாதார ரீதியாக உயர்ந்துவிடாமல் செய்து, அதன் மூலம் வல்லரசு என்ற நிலையை எட்டி விடாமல் இருக்க முயற்சிக்கும் அண்டை நாட்டின் தீவிரவாதத்தையும் ஒரே நிலையில் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். தீவிரவாதம் என்பதிலும் இனம் பார்ப்பது, பிஜெபி-யின் நோக்கத்தை எப்பொழுதும் கேள்வி கேட்க வைக்கும்.


ஒரு சாத்வி தீவிரவாதியாக இருக்கவே முடியாது, அவரை எப்படி துன்புறுத்தலாம் என்று ஒரு குற்றவாளியாகக் கருதப்பட்டு, போலிஸ் விசாரணையில் இருப்பவருக்காக ஆதரவு குரல் கொடுத்தவர் அத்வானி. அடுத்த பிரதமர் இவர் தான் என பலராலும் முன்வைக்கப்படும் ஒருவர், போலிஸ்துறையினருக்கு எதிராக இத்தனை வெளிப்படையாகக் கருத்தை முன்வைத்தது, தீவிரவாதத்தின் மற்றொரு பரிமாணத்தை வெளிக் கொணர்ந்த போலிஸ் குழுவினரின் மன உறுதியை முற்றிலுமாகப் பாதித்திருந்திருக்கும்.

பிறப்பில் தான் சாதி பார்ப்போம் என்ற மனநிலையிலிருந்து, தீவிரவாதத்திலும் இனம் பார்த்து தான் குரல் கொடுப்போம் என்ற தடுமாற்றத்தைத் தான் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதை பிஜெபி புரிந்து கொண்டு, தீவிரவாதத்தை ஒரே பார்வையில் நடத்துவது என்பதைத் தீர்மானித்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அடுத்த தேர்தலில், தீவிரவாதம் என்ற நிலையை முன்வைத்து பிஜெபி தேர்தலில் இறங்கினால், முதலில், அது தான் தீவிரவாதிகளின் ஆதரவாளன் அல்ல என்ற இக்கட்டான நிலையை கடந்தே ஆக வேண்டும். குறைந்த பட்சம் காங்கிரஸிற்கு அத்தகைய நிலை இருக்காது.

தாங்கள் ஆரம்பித்து வைத்து ஆபத்தான விளையாட்டு, இப்பொழுது தங்களுக்கு எதிரான தடத்திற்கு திரும்புகிறது என்பதை பிஜெபி உணர வேண்டும்.

Friday, November 28, 2008

Trial By bloggers

Trial By Bloggers


நாற்பத்தெட்டு மணி நேரங்களைத் தொடப் போகும் இந்த யுத்தத்தில், இன்னமும் நிலைமை தெளிவடையவே இல்லை. ‘முடிந்து விட்டது’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய ஒரு நிமிட இடைவெளிக்குள், அதிகாரிகள், ‘என்கவுண்டர்’ இன்னமும் முடிவடைய இல்லை, விலகுங்கள்’ என்று அறிவிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கு முன்னரே வெற்றி குரல்களும், பாராட்டு குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.

It’s spontaneous.

தேவையான ஒன்றும் கூட.

தங்கள் பணியை எந்த சார்புமற்ற பொதுமக்கள் உற்சாகக் குரல் கொண்டு ஆதரிக்கிறார்கள் என்பது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்த வீரர்களுக்கு நிச்சயமாக உற்சாகத்தைக் கொடுக்கும். ஒவ்வொருவருமே தங்கள் பணிக்காக வெறும் சம்பளத்தை மட்டும் கொண்டே திருப்தியுறுவது கிடையாது.

Appreciation is an important motivation.

இந்தத் தாக்குதல் பற்றி, பலவகை எண்ணங்களும் கருத்துகளும் வலைத்தளத்தில் வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் தத்தமது பார்வையில் கருத்துகளை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனது கருத்துகளை சுதந்திரமாக வைக்க உரிமை இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் பின்னூட்டமிடவில்லையென்பதால், அவற்றைப் பற்றிய எனது எண்ணங்களை மொத்தமாக ஒரே பதிவாக எழுதி விடுகிறேன்.

‘இந்தத் தீவிரவாதம், கஜினி முகமது, கோரி முகமது வந்த பொழுதே வந்துவிட்டது’என்ற நகைச்சுவையுடன், ஒரு முழுநீள காமெடியுடன் இட்லிவடை தளம் ஆரம்பிக்கின்றது. புஷ்ஷின் உறுதியான தலைமையாலேயே மீண்டும் அங்கு ஒரு தீவிரவாத செயல் நிகழவில்லை என்றும் வாதிடுகிறார்..

‘அமெரிக்கர்களின் நலனை உலகம் முழுவதும் தாக்குவோம்’ என்ற அல்-கொய்தாவின் நிலைபாட்டையொட்டி, அமெரிக்கர்கள் இயங்கும் ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தத் தான் செய்கின்றனர் - அதை எதிர்த்துத் தான் அவர்களும் யுத்தத்தை தொடர்ந்து நடத்துகின்றனர் நேர்மையற்ற வழிகளில் என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி என்ன சொல்வது? புஷ்ஷின் இந்தத் தோல்வி தான்,சமீபத்தில் நடந்த தேர்தலில் அகோரமான தோல்வியை அவரது கட்சிக்கும், நண்பருக்கும் பெற்று கொடுத்ததும் என்பதுவும், 'மிக மோசமான அதிபர்' என்ற பெயருடனும், பெருத்த அவமானத்துடனும் தான் அவர் பதவி விலகுகிறார் என்பதும் தெரியாதவர்களாக இவர்கள். இல்லை, நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம் அதனால் உலகம் இருண்டுவிட்டது என்று நாங்கள் சொல்லும் உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களது வாதத்தின் 'அதிபுத்திசாலித்தனம்' குறித்து நகைக்க வேண்டியிருக்கிறது. இறுக்கமான சூழ்நிலையைக் குறைக்கத் தேவையான காமெடி நடிகர்களின் பணியைச் செய்திருக்கின்றனர்.

ஒரு காலத்தில் தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாக். அரசைக் குறி வைத்துக் கூட தீவிரவாதத்தைத் தொடர்கின்றனர் என்ற பொழுது, அல்-கொய்தாவிற்கு யாரும் பொருட்டில்லை. இவர்களை ‘நல்லது / கெட்டது’ என்ற எல்லைக்குள் வைத்து மட்டும் தான் பார்க்க வேண்டுமே தவிர, வேறு எந்த சித்தாந்தாங்களுடன் இணைக்க முடியாது. தன்னிச்சையாக இயங்கும் ஒரு Evil force மட்டுமே இவர்கள். அதை நியாயப்படுத்த அவர்கள் எந்த ஒரு தத்துவத்தையும் இழுத்து வந்து தங்களுக்கு அரணாக நிறுத்தி வைக்க முடியும். Counter terrorism என்ற வகையில், தாங்கள் நீதி வழங்கப் போவதாக எண்ணிக்கொண்டு, தீவிரவாதத்தை கையிலெடுத்த சில அமைப்புகளைப் போன்றதே இந்த அமைப்பும். counter terrorism என்பது ‘ரா’வின் வேலை என்று சொல்லி மற்றொரு நகைச்சுவையாளர் ஒருவர் தனது தேசபக்தியையும் வெளியிட்டிருந்தார்.

அத்துடன், இவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு நரேந்திர மோடி தான் சரி என்ற தீர்வையும் முன்வைக்கிறார். டோண்டுவும் கூட அந்த கருத்தைத் தான் வைக்கிறார். இந்தத் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட இஸ்லாமியர்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுவது ஒன்று தான் வழி என்ற இனஒழிப்பை ஆதரிக்கும் இவர்களால் வேறு நற்சிந்தனைகளை முன் வைக்க முடியாது. இஸ்லாமியர்களை அழித்து ஒழித்த பின்பு, வேறு எவரைக் குறித்த counter terrorism குண்டுகளை சங் பரிவார்கள் தங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப் போகிறார்கள் என்பது ஒரு interesting question! அல்லது தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிடப் போகிறார்களா என்பதுவும் தெரியவில்லை. மூடிவிட மாட்டார்கள். அழித்தொழிப்பிற்கு, அவர்களது மேலாண்மையை எதிர்க்க பலர் இருக்கின்றனர்.


மறுபுறம் பல கேள்விகளை எழுப்பி, இந்தத் தீவிரவாதிகளை இந்துத்வத்தின் முகமாகப் பார்க்க முனைகிறது – சத்தியமார்க்கம். அந்தத் தீவிரவாதிகள், தங்கள் கைகளில் சிவப்புக் கயிற்றை அணிந்திருந்தார்கள் என்ற சாதாரண விஷயத்தை வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வருவது எத்தனை சரியாகும்?

என்றாலும், சத்தியமார்க்கம் எழுப்பிய முக்கியமான கேள்விகளில் ஒன்று – ஏன் ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்டார்? Counter terrorism என்ற பெயரில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்த சில அமைப்புகளைக் குறித்த தகவலை வெளிக்கொணர்ந்தார் – அவர்கள் சங் பரிவார் சித்தாந்தத்தில் வந்தவர்கள் தான் என்ற தகவலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், சங் பரிவார்களும், அதன் அரசியல் முகமான பிஜேபி-யும் இனியும் தீவிரவாத துருப்புச் சீட்டை எடுத்ததெற்கெல்லாம் வீசியெறிய முடியாது என்ற இக்கட்டான நிலைமைக்கு கொண்டு வந்த ஆத்திரம் இருந்தது. அதனால், தீர்த்துக் கட்டி விட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்தது.


ஆரம்பத்தில் அப்படித் தான் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்திருக்கும். ஆனால், தொடர்ந்து ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த நிலையின் உக்கிரம் அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது. இது குறித்து நான் பண்புடன் தளத்தில் 27/11/08 (http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/0a509464b1ee8136#) தளத்தில் எழுதியிருந்தேன் இவ்வாறு:


// ஹேமந்த கர்கரே - தானாகத் தான் அங்கு சென்றிருக்கிறார். அவரைக் கொல்வது தான்
உத்தேசம் என்றால், அவர்கள் இந்த வழியைத் தேடியிருக்க மாட்டார்கள். உயர் அதிகாரிகள் முன்னணியிலிருந்து சண்டையிடுவார்கள் என்று எவருமே எண்ணிப்பார்த்திருக்க முடியாது. அவரது பதவியின் தன்மையைக் கொண்டு பார்த்தால், அவர் பின்னால் நின்று கொண்டு, தனது கான்ஸ்டபிள்களை முன் அனுப்பி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக முன்னணிக்குச் சென்று தானே தீவிரவாதிகளை எதிர் கொண்டிருக்கிறார் என்ற பொழுது அவரது தீரம் பிரமிக்க வைக்கிறது. //


இது போன்று ஒரு உயர் அதிகாரியே துப்பாக்கியை எடுத்து வந்து, தனது படையினருடன் தோளாக தோள் நின்று போரிடுவார் என்று எந்த இயக்கமும் நம்பி திட்டம் தீட்டியிருக்க முடியாது. அதிகாரிகள் பெரும்பாலும் responsible for taking the decision – not for executing it themselves in the field. அவர் முன்னணிக்குச் சென்று யுத்தமிட்டது தீரம் என்றாலும், இன்று இழப்பு நமக்கு தான். இதையே என்றென்றும் அன்புடன் பாலாவும் தனது தளத்தில் தெரிவித்திருக்கிறார்.


சத்தியமார்க்கம் முன்வைத்த தியரி ஒத்துவருமா என்று தெரியவில்லை.


இந்த மாதிரி ஒருநிலை சார்பான கருத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிற தளங்களின் கருத்துகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழரங்கம், ராயகரன் எழுதிப் பதிவிட்ட, பம்பாய் பயங்கரவாதம் ஆளும் வர்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற கட்டுரை படிக்க வேண்டும்.

// அரச பயங்கரவாதமும், மனித விரோதக் கூட்டத்தின் குறுகிய நலன்களும் தான் 'பயங்கரவாதத்தை" உற்பத்தி செய்கின்றது. இந்தப் பூமியில் சக மனிதனாக வாழமுடியாத நிலைமைதான் 'பயங்கரவாதத்தின்" வெளிப்பாடு. எப்படி மனிதன் இந்த உலகில் வாழமுடியாது அதிருப்தியுற்று தற்கொலை செய்கின்றானா, அப்படித்தான் 'பயங்கரவாதம்" எதிர் தாக்குதலாகின்றது. //

பயங்கரவாதத்தின் உற்பத்தி மூலத்தைத் தொட்டிருக்கிறார், இராயகரன்.

// சட்டம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் என்பது அனைவருக்கும் மறுக்கப்பட்டு, அது சில சமூகங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் சிறப்பாக அடைபடும் போது, அதன் எதிர்வினை தான் 'பயங்கரவாதம்".//

என்று அது எவ்வாறு வளர்கிறது என்பதையும் பொதுப்படையாகவே சொன்னவர்,

// பம்பாய் தாக்குதல் கடந்த காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, இந்து பயங்கரவாதம் நடத்திய கொடூரத்தின் மொத்த விளைவாகும். //

என்று இந்த இரு தின யுத்தத்தை இந்து பயங்கரவாதத்தின் எதிர்வினையாகப் பார்க்கிறார். இந்தத் தாக்குதல், இந்து பயங்கரவாதத்திற்கு எதிரான பின்வினை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இன்றைய தினத்தில் நடந்த பம்பாய் தாக்குதல் குறி வைத்தது – அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இஸ்ரேல் மக்கள். அயோத்தி சம்பவத்திற்குப் பின், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகத் தாக்குதல் தொடுத்தவர்கள் – இப்படி ஒரு selected targetஐ குறிவைத்து இயங்கியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு இந்திய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் குறியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு நிகழ்ந்தது – குறி வைக்கப்பட்டவர்களில் எவரும் இந்தியர்களாக இல்லை.

இறந்து போனவர்களில் இந்தியர்கள் இருக்கக்கூடும் – அது, crossfireல் மாட்டிக்கொண்டவர்கள் தான். குறிப்பாக ஊழியர்கள். தாஜ் ஊழியர்கள்.

அதனால், இந்த மும்பை தாக்குதல், வெறுப்படைந்த இந்திய முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் – அதற்கான நியாயம் அவர்களுக்கிருக்கிறது என்ற கண்ணோட்டத்தை மறுக்கிறேன்.

மேலும் ஊடக உலகைப் பற்றிய குறைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் அதை ஒரு வன்முறையாகச் செய்கிறார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தே திணிப்புகளே – செய்திகளை தங்கள் நலனுக்குகந்ததாக மாற்றிப் பேசவைப்பதே – ஊடக வன்முறைகளாக மாறுகிறது. ஆனால், இங்கு எந்த சித்தாந்த திணிப்புமின்றி, காட்சிகளை அது நிகழும் வகையில் அப்படியே காட்டுவது என்பதை வன்முறையாகப் பார்க்க முடியாது. அதிலும், சில காட்சிகளை அவர்களே தவிர்த்துவிட்டார்கள் என்பதுவும் தெரிய வந்தது. இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் எந்த ஒரு ஊடகமும், எந்த ஒரு முடிவையும் செய்யாமல், நாலு ‘எக்ஸ்பர்ட்டுகளைக் கூப்பிட்டு’ தாங்கள் கண்டுபிடித்த முடிவைச் சொல்லி, கருத்து கேட்காமல் இருந்ததே ஒரு ஆறுதல்.

அதை பின்னர் செய்யக்கூடும். ஆனால், அதை செய்யாது நிகழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதை குறை கூற முடியாது. இது குறித்து நான் எழுதியது:


// மேலும் ஒரு முழு இரவு முழுக்கவும் விழித்திருந்து - 12:30 லிருந்த்து காலை 10:00 மணி வரைக்கும் தொடர்ந்து பார்ர்த்த பொழுது - ஒரே ஒரு வார்த்தை கூட 'islamic terrorist' என்ற வார்த்தைப் பேசப்படவே இல்லை. முதன் முதலாக ஒரு செய்தியை அச்சத்துடனும், பதட்டத்துடனும் பாராமல், ஒரூ இந்தியன் என்ற உணர்வுடன் பார்க்க வைத்தது. இப்பொழுது கூட, terrorist என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

இனி, இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை -மாறாக அவர்களை கெட்டவன் என்ற நோக்கை மட்டும் கொண்டே பார்க்க வேண்டும் என்ற புரிதலுக்கு வந்திருக்கின்றனர்ர். முதன்முதலாக, அத்வானி அரசைக் குறை கூறாமல், மன்மோகன்சிங் குடன் மும்பை வருவதற்கு தயாராகியிருக்கிறார். தீவிரவாதத்திற்கு எதிராக, ஒருமித்த குரல்
ஒன்றாக எழுந்திருக்கிறது. அதைவரவேற்கத் தயாராகுங்கள்.//


தீவிரவாதம் குறித்த பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு மதத்துடன் அதை இணைப்பதினால், தீவிரவாத ஒழிப்பு என்ற பாதையை விட்டுவிலகி மததுவேஷம் என்ற பாதையிலே மட்டும் தான் பயணம் செய்வோம். தீவிரவாதத்தை GOOD Vs EVIL என்ற பார்வையைக் கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும்.


பின் எவர் தான் செய்திருப்பார்கள் என்ற கேள்வியை trial by media ஆவாக எவரும் செய்ய வேண்டியதில்லை. அதற்கான துறைகள் விசாரித்து, முறைப்படியான தகவல்களைக் கொடுக்கட்டும் என்று பொறுத்திருக்கத் தான் வேண்டும். இல்லையென்றால், ஊடக வன்முறைகள் என்று புலம்பும் பிளாக்கர்கள், தாங்கள் செய்யும் ‘வன்முறையைக்’ காண கண்ணில்லாதவர்களாகிவிடுவார்கள்.

Trial by media என்பது போய் trial by bloggers என்ற தளத்திற்குப் போய்விடுவோம்
அனைவரும், தீவிரவாதம் குறித்த பார்வையில் ஒரு மாற்றத்திற்குத் தயாராக வேண்டும் – including trial by blogs.

Thursday, November 27, 2008

மும்பையில் கொடிய மிருகங்களுடன் ஒரு யுத்தம்....

நம்ப முடியவில்லை.

மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் பரப்பளவும், உக்கிரமும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ராணுவ படையெடுப்புப் போன்றிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாக NDTV சொல்வதை விழித்திருந்து பார்க்கும் பொழுது, அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. பத்து இடங்களில் தாக்குதல் நடந்திருந்ததாக முதல்வர் தேஷ்முக் அறிவித்திருக்கிறார்.

தாஜ், ட்ரைடண்ட் போன்ற நட்சத்திர விடுதிகளைத் தேர்ந்தெடுத்தது, பரவலான பார்வையைத் தங்கள் மீது திருப்பும் - விளைவிக்கப்போகும் மரணங்கள் - இந்தியர்களாக மட்டுமே இருக்கக் கூடாது - ஆனால், உலகின் பல பாகங்களிலிருந்துமிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். அதன் மூலம் தங்களை அனைவரும் நோக்க வேண்டுமென்ற வெறியுடன் இயங்கியிருக்கிறார்கள், வெறியர்கள்.

டெக்கான் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

மும்பையின் தலை சிறந்த போலிஸ் அலுவலர்கள் இறந்திருக்கின்றனர். ATS Chief Hemant Karkere, Mumbai ACP Ashok Kamte, Cop Vijay Salaskar கொல்லப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 11 போலிஸினர் - 4 - 5 அதிகாரிகள் உட்பட கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மும்பை முழுவதும் ராணுவம் அனுப்பட்டிருக்கிறது. 5 Columns of army and 200 NSG commondos have been called. படகுகளின் மூலம் தீவிரவாதிகள் வந்திருக்கக் கூடும் - அது ஒன்றே பத்து இடங்களில் நிகழ்ந்த தாக்குதலை - geographically explaining.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாஜ் ஹோட்டலின் உள்ளே - அனைத்து ஊடகங்களின் முழு பார்வையும் பதிந்திருக்கும் பொழுதே -ஐந்து வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். சில பாகங்களில் தீ பிடித்து எரிகின்றது. அடிபட்டு விழுந்தவர்களை தூக்கிக் கொண்டு, இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

இதுவரையிலும் குண்டுகளை ஒளித்து வைத்து விட்டு ஓடிப்போனவர்கள், இந்த முறை நேருக்கு நேராக மோதத் துணிந்திருக்கிறார்கள். அப்பாவிகள் அதிகம் கூடியிருக்கும் - அதிலும் வெளிநாட்டினர் அதிகமிருக்க வாய்ப்புள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின் தீவிரத்தை விவரித்த NDTVயின் பாசு, இது காஷ்மீரத்தில் நிகழ்ந்த யுத்தம் போலிருக்கிறது என்கிறார்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை 80ஐத் தாண்டி விட்டது. 9 பேர் வெளி நாட்டினர். இன்னமும் தாஜ் ஹோட்டலின் உள்ளே துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

9 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னமும் 2 நபர்கள் உயிருடன் பிடிபடாதிருக்கின்றனர்.3 பேர் தப்பித்து ஓடியிருக்கின்றனர். அகற்றப்படாத உடல்கள் தாஜ் உள்ளே கிடப்பதாக வெளியேறியவர்கள் சொல்லியிருக்கின்றனர். இன்னமும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்.

சிலரை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும். இன்னமும் நிலைமை கட்டுக்குள் வரவில்லையென்று மகாராஷ்ட்ரா முதல்வர் நிருபர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார் - ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும்.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களைப் பிடித்து மரணங்களை விதைத்தது போன்று அவர்களையும் மரணத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த சூழலில், தீவிரவாதிகளுடன் யுத்தம் புரிந்து இறந்து போன அந்த போலிஸ் அதிகாரிகளுக்கு - A Salute to you all Officers.

No amount of words would express our gratitude.

May God give the strength to your family to bear the losses.

மொத்த இந்தியாவுமே, உங்களின் தீரம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கிறது.

Wednesday, November 26, 2008

இலங்கைத் தமிழர்களும், இஸ்லாமியர்களும்

நேற்றிரவு வின் தொலைக்காட்சியில் தவ்ஹீத் ஜ்மாத்தாரின் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியை கண்டேன். அதில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பி. ஜெய்னுல் ஆபிதீன். அதில் ஒரு கேள்வி ' நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை ?

பதில்: விடுதலைப் புலிகள் தமிழர்களை மதரீதியில் பிரித்து பார்க்கிறார்கள். ஈழத்து இஸ்லாமியத் தமிழர்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள் ஈழத் தமிழ் முஸ்லிம்கள்.

Any comments friends ?
*****

தனி மடலில், இப்படியொரு கேள்வி வந்தது -நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி. நான் என்ன ஒரு சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு முக்கியமானவனா? என் கருத்தைக் கூட ஆவலாகக் கேட்க ஒருவர் முனைகிறார்? கேள்வியை அனுப்பியவர், நான் மிகவும் மதிக்கும் நண்பர்.

குழப்பமான கேள்வி தான். நான் சந்தித்த சில இலங்கை இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமே அவ்வாறு சொல்கிறார்கள் - புலிகளால் நாங்கள் தொல்லைக்காளானோம் என்று. ஆனால், மற்ற பெரும்பான்மையான முஸ்லிம் நண்பர்கள் பலரும் அவ்வாறு சொல்லவில்லை. யாரும் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லவில்லை. இலங்கையின் தமிழ் இலக்கிய உலகில் இயங்கும் சில நண்பர்கள் கூட அவ்வாறு குற்றச் சாட்டை வைக்கவில்லை. (நடந்துவிட்ட சில சம்பவங்கள், மனதை வருத்தினாலும், புலிகளைக் கைவிட தயாரில்லை என்றே சொல்கிறார்கள்)

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் கிழக்குப் பகுதியில், கருணாவின் தலைமையில் நிகழ்ந்தது. ஆனால், அவர் விலகிய பின்பு அத்தகைய நிகழ்வுகள் இல்லையென்றும் சொல்கிறார்கள்.

மறுபுறம், இஸ்லாமியர்கள், சிங்களத்தினரிடம் புலிகளை அடையாளம் காட்டும் வேலையில் ஈடுபட்டதாகவும், அந்தத் துரோகத்திற்குப் பதிலாகத் தான் அவர்கள் மீது தொடக்கத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். அதாவது காட்டிக் கொடுத்தல் என்ற சம்பவத்தை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டோம் - அவர்களின் மதசார்பு நிலையைக் கணக்கில் கொள்ளவில்லையென்று.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேட்டியளித்த பொழுதும், முஸ்லிம்களை நோக்கி நேசகரம் நீட்டுவோம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாகப் பார்க்காமல், வேறு வகையில் தனித்த இனமாகப் பிரித்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் - தாங்கள் எந்தப் பக்கமென்று.

தமிழ் மொழியை ஒரு அடையாளமாக ஏற்க மறுத்தால், நாளை அதே வீச்சில், சிங்கள மொழியையும் ஏற்க மறுக்க வேண்டும். அந்த சமயத்தில், சிங்கள சமூகத்தில், அவர்களுக்கு எந்த அடையாளமும் இருக்காது. இல்லை, நாங்கள் சிங்கள அடையாளத்தை எந்தவித சிரமமுமின்றி ஏற்போம் என்று கூறினால், அது ஒரு இரட்டை நிலைபாட்டை எடுத்ததாகிவிடும்.

முஸ்லிம் அடையாளம் என்ற காரணத்தால், தமிழ் அடையாளத்தைத் துறக்கத் துடித்தவர்கள், நாளை சிங்கள அடையாளத்தை ஏற்க முனைந்தால், அதைப் போன்று ஒரு அபத்தம் இருக்க முடியாது. சிங்கள அடையாளத்தையும் மறுப்போம் என்றால், பேரினவாதத்தின் கொடுங்கரத்திலிருந்து, இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது.

இப்பொழுது அவர்கள் எங்களை நன்றாக வைத்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்வது தற்காலிக பாதுகாப்பாக அமையக் கூடும். இது பிரித்தாளும் உத்தியை சிங்களவர்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு மாத்திரமே அடையாளம். சிங்கள மேலாண்மையை ஏற்று பாதுகாப்பைத் தேடுவோம் என்பது இஸ்லாமியர்களின் இன்றைய நிலைபாடாக மட்டும் இருக்காது. வாழ்நாள் முழுவதற்கும் 'அண்டி வாழும்' நிலையை மேற்கொள்ள இன்றைய சூழல் இட்டுச் செல்லும். அதிலும், சிங்கள மொழியை தங்கள் அடையாளமாக ஏற்றுக் கொள்ளும் பொழுது மட்டுமே சாத்தியப்படும்.

பாதுகாப்பிற்காக, தமிழைக் கைவிடுவோம், சிங்களத்தை ஏற்போம் என்ற நிலைபாட்டை எடுத்தால் - it would be totally against the free spirit of the humankind and the intellectual capability of the human animals. தமிழை தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள், இலங்கையில் தங்களைத் தமிழர்களாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். அது ஒன்றே அவர்களுக்கு நன்மை தரும்.

இல்லையென்றால், the muslims will become the hypocrites in SriLanka.

தமிழகத்து இஸ்லாமியர்கள் இந்த விஷயத்தில், தமிழ் என்ற அடையாளம் சார்ந்து இயங்குவதே நல்லது. (இது எனது கருத்து மட்டுமே) PJயின் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. (மேலும் பல விஷயங்களில் கூட)

அது சரி, இது ஏன் பொதுவில் வைக்கப்படக் கூடாது ஏன்கிறீர்கள்? இதுவும் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வியே.

இருசாராரும், தங்களிடையே விதைக்கப்பட்ட வேறுபாட்டைக் களைந்து, ஒன்றுபட இதுவே தருணம்.

Tuesday, November 25, 2008

மைக் ஜாக்ஸனும், பேசப்பட வேண்டிய வரலாறுகளும்!!!

MJ இணைந்ததில் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை தான். இங்கு அவர் இஸ்லாத்தில் இணைந்து விட்டதை பெருமையாகச் சொல்லவில்லை. ஆனால், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்பதை மட்டும் மறுக்க முடியாது. செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் இன்று பல வலைப்பூக்கள் / குழுமப் பதிவுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒரு செய்தி மட்டுமே!!!


எப்படி இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி?


இஸ்லாம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு செய்தியாக்கும் பொழுது, அதை மறுப்பதுவும், ஒரு செய்தியே. பொய்களுக்கிடையில் 'அது அவ்வாறில்லை' என்ற மறுப்பு தருவதற்கு இதுவும் ஒரு செய்தியே.


இந்த வகையான செய்திகளை ஒதுக்குவதன் மூலம், இந்த உலகில் ஒவ்வொரு மூலையிலும், ஒரு ஒடுக்கப்பட்ட இனம், மேலாண்மைமிக்கதாகத் தங்களைக் கருதிக்
கொள்ளும் ஒரு சமூகத்திடமிருந்து, எத்தகைய கொடுமைகளை, இன்னல்களை ஏற்க வேண்டியதிருக்கிறது என்ற வரலாற்றையும் மறந்து விட வேண்டிய சூழலில் இருப்பவர்களாகி விடுவோம்.


மீனாட்சிபுரம் - அன்று செய்தியாகத் தான் செய்தது. பலத்த நெருக்கடியை உண்டாக்கிய செய்தி. பல அரசியல் குழுமங்களும், சமூக தொண்டாற்றும் இயக்கங்களும், இந்து, இஸ்லாமிய இயக்கங்களும் பல நாட்கள் முகாமிட்டு, எப்பொழுது கலவரம் வெடிக்குமோ என்ற சூழ்நிலையில் தான் இயங்கியது. அன்று அது ஒரு வலுவான செய்தியாக இருந்தது. மேற்சாதியினர் என தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், எவ்வாறு தங்கள் செயல்களைத் திரும்பிப் பார்க்க வைக்கப்பட்டனரோ, அது போலவே தான் இதுவும். பின்னர் கோரியூர் என்ற சம்பவங்கள் பத்திரிக்கைகளால் மூடி மறைக்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு நிகழ்ந்தது எல்லாம் செய்தி ஆகவில்லையே - அதனால், வேறு எதுவுமே செய்தியாகிவிடக்கூடாது என்ற கட்டளைகள் ஏதும் உண்டோ? இல்லை. பத்திரிக்கைகள் கொண்டு வராத பொழுது, அதை தெரிந்தவர்கள் செய்யலாம்.


இவ்வாறு செய்திருக்காவிட்டால், யாருக்குமே மால்கம் X என்பவர் யார், கறுப்பின மக்களுக்காக அவரது போராட்டத்தின் இறுதியில், தன்னை இஸ்லாமித்திற்கு மாற்றிக்கொண்ட வரலாறு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. சமூகக் குற்றவாளிகளுடன் தொடர்பிருந்ததாகக் கூறி, சிறை வைக்கப்பட்டார். இந்த சிறுமையிலிருந்து, வெளியேற வாய்ப்பேயில்லையா என்று தவித்த பொழுது தான், அவருக்கு Nation of Islam கிடைத்தது. இது ஒரு விடுதலையைத் தருமென நம்பினார். தலித் மக்களுக்கு எப்படி, பௌத்தம் ஒரு வழியாகுமென அம்பேத்கர் நம்பினாரோ, அது போன்ற ஒரு நம்பிக்கை தான் இது. பின் அவர் இஸ்லாத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து, அதையே தன் மக்களுக்கும் சொன்னார். இன்று அமெரிக்காவில், எல்லா எதிர்ப்புகளையும் மீறி, இஸ்லாம் வளர்கிறது என்றால், இந்த மதமாற்றமும் காரணம். ஒரு வரலாறாக, கறுப்பின மக்களிடையே பேசப்பட்டு வருவதினால் தானே?

(1960ல் தங்கம் வென்ற பொழுது)

பின்னர் வந்த காஸ்ஸியஸ் க்ளே என்பவரை யாருக்கும் தெரியாதிருக்கலாம். முகமத் அலி என்று தன்னை மாற்றிக் கொண்ட பின்பு, அவர் வாழ்ந்த வாழ்க்கை, எந்த இஸ்லாமியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். தெரு வீதிகளில், சண்டையிடும் பக்கத்து தெரு ரவுடி போலத்தான் அவர் வாழ்வும் தொடங்கியது.

ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில், தங்கம் வென்ற அவரை, அமெரிக்கா எப்படி வரவேற்றது தெரியுமா? க்ளேயின், மூதாதையரில், எங்கோ ஓரிடத்தில், வெள்ளை ரத்தம் கலந்து விட்டிருக்கிறது – அதுவே காரணம் என்றது.


பழக்கப்பட்ட வாக்கியமாகத் தோன்றுகிறதா?


அது தான் உண்மை. ஆத்திரம் பொங்க, தான் வாங்கிய தங்கத்தை, மிஸ்ஸிஸிப்பி ஆற்றில் விட்டெறிந்தார். தன்னை, சமமானவாக மதிக்கும் ஒரு புதிய பாதையைத் தேடினார். அவர் கண்டு கொண்டது தான் – இஸ்லாம்.


வியட்நாம் யுத்ததிற்கு அவர் ஆதரவைப் பெற்றுவிட முனைந்த அமெரிக்காவிற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? வியட்நாமியருக்கும் எனக்கும் எந்தப் பகையுமில்லை என்றார். அன்று அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலிலும், அந்த வியட்நாம் யுத்ததிற்கு எந்த விதத்திலும் தன் பெயரை வழங்க மாட்டேன் – தேவையானல், என்னைக் கைது செய்து கொள் என்றார்.


அவரை வசை பாடிய அதே அமெரிக்கா, 1960ல் ரோம் ஒலிம்பிக்கில் வென்ற தங்கத்தை கோபம் கொண்டு நதியில் தூக்கியெறிய வைத்த அதே அமெரிக்கா, பின்னர் அவரைக் கொண்டே 1984 LA ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற வைத்து, விண்ணதிர கரகோஷம் செய்து, தன் மீது படர்ந்த கறையைக் கழுவி கொண்டது. அவர் எப்பொழுதோ, மத எல்லைகளைக் கடந்து விட்டார். ஆனால், அவ்வாறு கடந்து போகும் நிலைமையைத் தந்தது - இஸ்லாம்.


கறுப்பின மக்களை விட்டு விடுங்கள் - Cat Steevens வரலாறு தெரியுமா? அவர் கறுப்பினத்தைச் சார்ந்தவர் இல்லை. வெள்ளையர் தான். எந்த சூழல் அவரை நிர்ப்பந்தித்தது? தனது பத்தொன்பதாவது வயதில், காசநோயால் அவதிப்பட்ட பொழுது, மருத்துவ மனை நரகத்திலும், அருகே மனிதர்கள் இறந்து போவதைக் காண்பதுமாக கழிந்த நாட்களில், அவருள் எழுந்த கேள்வியே அது. தொடர்ந்து, அவர் அச்சத்துடன் தன் மீத வாழ்க்கைக்காக, அலைபாயும் மனதுடன் தவித்த கணங்களே, அவரை இறைவனைத் தேடச் சொல்லித் தூண்டியது. அவர் முதலில் தியானம் செய்தார். சைவத்திற்கு மாறினார். பிற மதங்களின் நூல்களைத் தேடித்தேடி படித்தார். புத்தம், ஜென், ஐ சிங்க், எண் கணிதம், டாரோட் கார்ட், ஜோதிடம் என சகல தளங்களிலும் தேடினார்.


இந்த நிலையில், மொராக்கோவிற்கு சென்றிருந்தவர், தொழுகை அழைப்பைக் கேட்டார் –


‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’


உடல், மனம் என தன்னை முழுமையாக ஆக்கிரமித்த அதை ஒரு இசையாகக் கருதினார். அருகே இருந்தவர்களிடம் அதைக் கேட்ட பொழுது, அவர்கள் அவருக்கு விளங்கும் மொழியில் சொன்னார்கள் –

It’s the music of God.


மரணத்தின் விளிம்புகளில்
தாகமெடுத்தலையும் மனதை
உனது இசையால் நிரப்பினாய்
இறைவா
என்னை உன் பாதையில் அழைத்துக் கொள்.


இறைவனின் இசையில் உடலும், மனமும் குழைந்தாலும், இன்னமும் முழுமையான இஸ்லாமியனாக உள்ளே நுழையவில்லை. அதற்கு இதைவிட இன்னமும் அழுத்தமான கணங்கள் காத்திருந்தன.


மாலிபொ கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடித்துச் செல்லப்பட்டார். இனி, அடுத்த கணம் மரணம் என்ற தீர்மானத்தின் இறுதியில், அவர் இரைந்து இறைவனை உதவிக்கு அழைத்தார் – ‘இறைவா, என்னைக் காப்பாற்று, இனி என்றென்றும் உன் பாதையில் நானிருப்பேன்’ அடுத்து நிகழ்ந்ததை அவரே சொன்னார் – ஒரு பெரும் அலையொன்று என்னைத் தூக்கி வந்து கடலின் கரையில் போட்டது.


ஒரு பெரும் மாற்றத்திற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்ட பொழுது, அவருடைய சகோதரன் ஜெருசலேத்திலிருந்து ஒரு நூலை வாங்கி வந்திருந்தார் –

என்ன தெரியுமா?


குரான்


அதை முழுவதுமாக வாசித்து விட்டுத் தான் கீழே வைத்தார். நான் என் வாழ்வில் தேடிய அமைதியை என்னுள் தந்தது குரான். இனி, நான் ஒரு முஸ்லிம் என்று அறிவித்தார். தன் பெயரை மாற்றிக் கொண்டார் – யூசுப் இஸ்லாம் என்று.

குரானை வாசிக்கிறார் தன் அருமைத் தமக்கை எனத் தெரிந்ததும், அவரைக் கொலை செய்யும் நோக்கில், உருவிய வாளுடன் வீட்டிற்கு சென்ற உமர் (ரலி), கதவைத் திறக்க தாமதித்த ஒரு கணத்தில், குரானின் இனிய வாசகங்களை உள்வாங்கத் தொடங்கிய மனதிடம் தன்னை ஒப்புவித்தார். உருவிய வாள் கீழே விழுந்தது. கண்களில் தாரை தாரையாக வழிந்தோடும், கண்ணீருடன், குரானை வாசிக்க ஆரம்பித்த உமர் (ரலி) அவர்களின் வரலாறையா வாசிக்கிறோம் என்ற பிரமிப்புத் தோன்றுகிறது – யூசுப் இஸ்லாமின் மனமாற்றம்.


பின் மீதமிருந்த தன் வாழ்வை, அமைதியின் நல்வழியை அனைத்து மக்களிடமும் காட்டுவதற்காகவும், கல்வியைப் பரப்பவுமே செலவழித்தார். உலகத்தினர், அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டேயிருந்தனர். அவை எதுவுமே எடுபடவில்லை.


புகழின் உச்சத்தில் - மூன்று முறை பிளாட்டினம் டிஸ்க் கொடுத்தவர் என்ற புகழின் உச்சத்தில் இருந்தவர் - தன் இசைக்கருவிகள் அனைத்தையும் விற்று, நன்கொடையாக வழங்கினார். இஸ்லாமிய சமூகத்தின் கல்விக்காக முப்பது வருடங்களையும் கடந்து உழைத்துக் கொண்டிருப்பவர். அவரது உழைப்பிற்காக பல விருதுகள் சமாதானத்தை வளர்த்தெடுத்தற்காக அவருக்கு வழங்கப்பட்டன. அதில், 2003's World Award, the 2004 Man for Peace award, and the 2007 Mediterranean Prize for Peace இவையனைத்தும் அடங்கும். நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும் முயற்சியில்.


ஆனால், அவரை எப்படி நடத்தியது, அமெரிக்கா?


அவரை ஒரு தீவிரவாதி என்றது! அவர் பயணம் செய்த விமானத்தை திசை திருப்பி வேறிடத்திற்கு அனுப்பியது. அத்தனை பயணிகளையும் சேர்த்து தான். அவரைக் கைது செய்து - தன் நாட்டு எல்லைகளை விட்டு, மறுநாளே வேறொரு விமானத்தில் ஏற்றி அனுப்பியது - அவர் பிரிட்டிஷ் பிரஜை என்பதால் அத்துடன் விட்டார்கள். வேறு யாராக இருந்தாலும், அப்படி ஒருவர் வந்தார் என்பதோ, தாங்கள் கைது செய்தோம், என்பதோ கூட வெளியில் தெரிந்திருக்காது.

பிரிட்டீஷ் ஊடகங்கள், அவரை தீவிரவாதி என்று எழுதி தங்கள் வெறுப்பைக் கொட்டினார்கள். The Sun. The Sunday Times என்ற பத்திரிக்கைகள். பின்னர், நீதிமன்றத்திற்கு வெளியே பெரும் பொருள் கொடுத்துத் தீர்த்துக் கொண்டனர். அத்துடன், தங்கள் பத்திரிக்கையில், பகிரங்க மன்னிப்பு கடிதம் வெளியிட்டனர்.


அமெரிக்கா எப்படி சமாதானம் ஆயிற்று?


பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை காரியதரிசி, ஜாக் ஸ்ட்ரா, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை காரியதரிசி, காலின் பவலை நேரில் சந்தித்து புகார் கூறியதன் பின்னே, watch list மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, திருத்தப்பட்டது. அதுவும் யூசுப் இஸ்லாம் என்ற பெயரின் ‘spelling’ திரும்பத் திரும்ப கேட்கப்பட்டு, எழுத வைக்கப்பட்டு, ‘அது ஏதோ எழுத்துப் பிழையால் நிகழ்ந்தது’ என்ற பம்மாத்து காட்சியை அரங்கேற்றி, பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என அறியாது வாழ்வதா, வாழ்க்கை? இஸ்லாம் குறித்து தவறாகப் பேசுவதற்கு, ஒஸாமா, ஜாவேரி என காட்டும் பொழுது, அவர்களுக்கு மாற்றாகக் காட்டவும், ஒரு தேடுதல் மூலமாக வந்தவர்கள் தான் – இவர்கள். இந்த வரலாறுகளை பிரபலங்களின் வரலாறு தானே – இதில் என்ன இருக்கிறது என கேட்டால், பின் எதில் தான் என்ன இருக்கிறது?

மஹ்மூத் தர்வேஸ் என எழுத்துலகில், கவிதையுலகில் சிற்றிலக்கியப் பத்திரிக்கைகள் கொண்டாடுவதால், நானும் அவரை கொண்டாடுகிறேன் என்பது, ஊரோடு ஒத்தூது என்பது மட்டும் தானே?

கறுப்பின மக்களின் எழுச்சிக்காக உழைத்த மால்கம் X கொண்டாடப்பட வேண்டியவர் தானே?

இனத்தூய்மையற்றவன் என புரணி பேசிய இனத்தை எதிர்த்துப் பொங்கியெழுந்து, பின்னர் இந்த நூற்றாண்டின் இணையற்ற விளையாட்டு வீரன் என BBCயாலும், Illustrated Sports பத்திரிக்கையாளும் கொண்டாடப்பட்டவர் தானே முகமத் அலி? நாமும் கொண்டாட வேண்டுமா, இல்லையா?


காட் ஸ்டீவன்ஸ், மரணத்திலிருந்து தப்புவதற்காக, இறைவனை தேடி அலைந்து, பின்னர் தான் கண்ட அமைதியை உலகிற்கு எடுத்துச் சொன்னாரே – அது கொண்டாடப்பட வேண்டாமா?


இவர்களையெல்லாம் கொண்டாடுவதற்கு என்ன பயம்? இஸ்லாத்திற்குள் தன்னை இணைத்து, உன்னத வழியைக் கண்டவர்கள் என்ற உண்மையையும் கொண்டாட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவோம் என்ற பயமா?

இறைவா, என் சகோதரர்களை ஒஸாமா, ஜாவேரி போன்ற தீவிரவாதிகளின் பாதையில்
போகாமல், இவர்களைப் போன்றவர்களின் வழியில் நடத்து என சொல்வதற்காக,
இவர்களைக் கொண்டாட வேண்டாமா? வெறுமனே, தீவிரவாதத்தை எதிர்க்கிறேன் என்ற
முழக்கம் மட்டும் போதுமா? மாற்று பாதைகளையும் கொண்டாட வேண்டாமா?


MJ இப்பொழுது தான் இணைந்திருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
(பஹ்ரைன் மன்னர் மகனை ஏமாற்றிவிட்டார் என்ற செய்தியையும் MJ முடித்து
வைத்து விட்டார் – இன்றைய செய்தியின் படி.)

(இணைக்கப்பட்ட படங்களும் செய்தி சொல்கின்றன - கூர்ந்து கவனியுங்கள்)

Sunday, November 23, 2008

தமிழீழ அங்கீகார மாநாடு

வருகின்ற டிசம்பர் 1, அன்று 'தமிழீழ அங்கீகார மாநாடு' ஒன்றை விடுதலை சிறுத்தைகளின் இளஞ்சிறுத்தைகள் நடத்துகின்றனர். அதில் அனைவரும் பங்கேற்று ஆதரவு குரல் கொடுங்கள்.

நவம்பர் 26ஆந் தேதியன்று, மதுரையில் நடத்துவதாக இருந்தார்கள். ஆனால், சட்டக் கல்லூரியின் பிரச்சினையால், மதுரையில் சிறுத்தைகள் கூடினால் தென் மாவட்டங்கள் சூடேறும் - நீங்கள் சென்னைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்ற காவல் துறையினரின் வேண்டுகோளின் படி, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

அனைவரையும் அழைத்துள்ளனர்.

ஒரு தேசமாக அங்கீகாரம் கிடைப்பது ஒன்று தான் மீதம் என்ற சூழலில், அரசினால் அந்த அங்கீகாரம் கிடைக்காது என்ற பொழுதில், மக்களாக அந்த அங்கீகாரம் வழங்க, முனைந்திருக்கின்றனர். ஈழமக்களின் போராட்டங்களின் பொழுது, தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் பலரும் - தலைவர்கள் உட்பட கலந்து கொள்ளும் இந்த விழாவில், அனைவரும் கலந்து கொள்வது, சிறப்பானதாக இருக்கும்.

Saturday, November 22, 2008

வணக்கமும், பெண் மொழியும் :: கவிக்கோவின் பார்வையில்...

தமிழகத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவரான, கவிக்கோ, துபாய்க்கு வந்திருந்தார். ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக, இங்குள்ள பலரிடமும் அது குறித்து விவாதிப்பதற்காக வந்திருந்தார். வந்த இடத்தில் தனக்குப் பிடித்தமான கவிதைகளைக் குறித்தான நிகழ்ச்சிகளுக்கும் கொஞ்சம் இடமொதுக்கித் தந்தார்.


வியாழன் மாலை மருளில்லா மலர்கள் என்ற ஒரு கவிதை நூலை வெளியிட்டார். ஆனால், நிகழ்ச்சியை 6:00 மணிக்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட, துபாயின் தொல்லைகள் நிறைந்த போக்குவரத்தில் நீந்தி வருமுன்னே, கவிக்கோ பேசி முடித்து விட்டு கிளம்பி விட்டிருந்தார். அடுத்து அவருக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது - ஈமான் அமைப்பினால். (ஈமான் - Indian Muslim Association - IMAN).


சரி, அங்கு சென்றால், அவருடைய பேச்சைக் கேட்கலாம் என்று புத்தக வெளியீட்டு விழா முடிந்ததும் சென்றால், அங்கும் இறுதியாக சிலவற்றை மட்டுமே கேட்க முடிந்தது. ஏழை மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதற்கு இஸ்லாமியர்கள் முன்வர வேண்டும் என்ற கோரிககையை முன் வைத்து அதை மட்டும் குறித்தே பேசினார்.




அவரது பேச்சை எங்குமே முழுமையாகக் கேட்கவில்லையென்றாலும், மறு நாள் அமீரகக் கவிஞர் பேரவையின் மூலமாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தோம். வெள்ளியன்று மாலை சரியாக ஏழு மணிக்கு அவைக்கு வந்து அமர்ந்து விட்டார்.


7:15 க்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. வளவளவென்று பேசிக்கொண்டிருக்காமல், ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பின், கவிஞருடன் கலந்துரையாடல் தொடங்கியது. ஒரு சிறிய முன்னுரையைப் பேசி தொடங்கி வைத்தார் - கவிக்கோ.


அதைத் தொடர்ந்து முதல் கேள்வியை நண்பர் முத்துகுமரன் கேட்டார். புதுக்கவிதைக்கு, மரபுக்கவிதைப் பயிற்சி அவசியமா என்ற கேள்வியை. முதல் கேள்வியே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. மரபுக்கவிதைகளின் பயிற்சியின் மூலம் புதுக்கவிதைகள் வளமுறுமே தவிர, குறையாது என்று பதில் சொல்லியவர், அதற்காக சில புத்தகங்களையும் வாசிக்கும்படி சொன்னார். இன்னமும் அதிகமான வழிகாட்டும் புத்தகங்களைப் பின்னர் தருவதாக சொன்னார்.


அடுத்த முக்கியமான கேள்வி:


ராவுத்தர்ஷா என்ற நண்பர் ஒருவர் ஒரு கேள்வியைத் தொடங்கினார் - வணக்கம் சொல்வது சரியா, தவறா என. ஆசிப், அந்தக் கேள்வியை சற்று விரிவுபடுத்தி, வணக்கம் என்ற சொல்லைக் குறித்தான இஸ்லாமியர்களின் தயக்கத்தையும், அது குறித்து நிகழும் சர்ச்சைகளையும் தர்க்கங்களையும், பின்னர் அது தமிழர் மரபல்ல என்ற நிலையை சில இஸ்லாமியர்கள் எடுக்க முனைந்ததையும் விரிவாகச் சொல்லி, தமிழ், இஸ்லாம் என்ற நிலையிலிருந்து, இதை விளக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.


ஒரு சாதாரணக் கேள்வியாகத் தான் கேட்கப்பட்டது. ஆனால், அது அத்தனை சூடு கிளப்பும் என்று எதிர்பார்க்கவில்லை. கவிக்கோ பேச ஆரம்பித்ததும், முதல் வாக்கியமாக சொன்னது -
இஸ்லாமியர்களில் பலருக்கு இஸ்லாத்தையும் தெரியவில்லை - தமிழையும் தெரியவில்லை என்று சொன்னதும், சில இஸ்லாமிய நண்பர்களுக்கு - அதுவும் தான் இஸ்லாமியன் என்ற அடையாளங்களை மிக விரிவாக ஏற்றிருந்த சில நண்பர்கள் அதை மறுக்க ஆரம்பித்து விட்டனர். எப்படி எங்களுக்கு இஸ்லாத்தைத் தெரியாது, தமிழைத் தெரியாது என்று சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள் என்று கேட்கத் தொடங்கி விட்டனர். 'அமருங்கள் - பதில் சொல்கிறேன்' என்று சொல்லியும், கேளாது, அவரை பேசவிடாமல் மீண்டும், மீண்டும் இடைமறித்து பேசிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில், அவர் ஒலிவாங்கியை வைத்து விட்டு, நீங்கள் பேசி முடியுங்கள் அப்புறமாக நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் தான், அவரைப் பேச அனுமதித்தனர்.


'இறைவா, நான் உன்னை வணங்குகிறேன்' என்ற நிய்யத்தை, மன உறுதியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அது இறைவழிபாடாகிறது. அதில்லாமல், வணங்குகிறேன் என்ற சொல், வெறும் வரவேற்பிற்கான சொல் மட்டுமே. மேலும் வணங்குதல் என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது, அதனுடன் இணைந்த உடல்மொழியைக் கவனித்தாலும், இதில் உள்ள வேறுபாடு புரியும் என்ற கவிக்கோ, அதையும் தெளிவுபடுத்தினார்.


தெய்வத்தை வணங்குவதாக இருந்தால், தலைக்கு மேலாகக் கைகளைக் கூப்பி வணங்குதல் செய்ய வேண்டும். வயதில் மூத்தவர்களுக்கு வணக்கம் சொல்லும் பொழுது, முகத்திற்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும். தனக்கு சமமான நண்பர்களை வரவேற்கும் பொழுது, வணக்கம் சொல்லும் முறையானது - நெஞ்சுக்கு நேராக கைகூப்புதல் வேண்டும். நாம் இதையெல்லாம் செய்யாமல் வணக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒருவருக்கான வரவேற்பு மொழியை, 'வணங்குதல்' என்ற நிய்யத்தின்றி இயல்பாக, உடன் இணையும் உடல் மொழியல்லாது தான் செய்கிறோம். எண்ணத்தில் இல்லாத ஒன்றை, ஒரு செயல் நிகழ்த்தி விடாது. அதனால் வணக்கம் சொல்வதில் எந்தத் தயக்கமும் வேண்டாம் என்று சொன்னவர், அடுத்து மொழியைக் குறித்துப் பேசினார்.


ஆரம்ப காலத்தில் இல்லையென்பதனால், ஒரு மொழி தன்னை வளப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பிற மொழியின் சொற்களை ஏற்பதைக் கொண்டு, அச்சம் கொள்ள வேண்டியதில்லை. வணக்கம் என்பது இடைப்பட்ட காலத்தில் வந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தன்னை வளப்படுத்திக்கொள்ளும் பொருட்டே, ஒரு மொழி, சொற்களை உருவாக்குகிறது. அதற்கு சமமான பிற மொழி சொற்களையும் ஏற்றுக் கொள்கிறது. மொழியியலின் வழமை அது. வளர்வதற்கான அறிகுறியது. அதை நிராகரிக்க வேண்டாம் என்று சொன்னார்,


வணக்கம் சொல்வது, இஸ்லாமியத் தத்துவங்களின் படியும், தமிழ் மொழியின் இயல்புக்கேற்ற வகையிலும் ஏற்புடைய செயலே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.


அடுத்து நான் கேட்ட கேள்வி - படிமம், குறியீடு இவற்றின் நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு, அதை கவிதையில் இயல்பாகக் கையாள்வது கவிதையின் வீச்சை அதிகப்படுத்தும் என்று சொல்கிறீர்கள். ஒரு வளர்ந்த கவிஞரின் படிமம், குறியீடுகளை தொடர்ந்து வாசித்து வருவதன் மூலம், எளிதாகக் கிரகித்துக் கொள்ள முடிகிறது. அவரது படிமமும், குறியீடுகளும் எவை எங்கிருந்து பெறப்படுகின்றன என்ற புரிதல் இருப்பதால், அவை வீச்சைக் கூட்டுபனவையாக இருக்கின்றன. ஆனால், புதிதாக வரக்கூடிய கவிஞர்களின் படிமங்கள், குறியீடுகள் முற்றிலும் அறிமுகமற்றதாக இருக்கும் பொழுது, அவற்றை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது, அல்லது எவ்வாறு ஒரு கவிதையில் அமைப்பது என்பது குறித்து சற்று பேசுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன்.


அது குறித்து அவர் மிக விரிவாக பேசினார். படிமங்கள், குறியீடுகள் அவற்றை அறியப்படாமலே, பலரும் அவற்றைக் கையாளத் தான் செய்கின்றனர். ஆரம்ப காலத்தில் நாம் உவமை, உருவகம் என்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், இவற்றின் பலவீனம் அவை ஒன்று - ஒன்று என்ற உறவைக் கொண்டு, மனித கற்பனைகளுக்கு இடம் கொடாத வகையில் இருந்தன. ஒற்றைப் பொருளைச் சுட்டுவதுடன், உவமை, உருவகங்கள் மறைந்துவிடுகின்றன. ஆனால், படித்தவர்களின் அறிவாற்றலையும் தன் கவிதைக்குள் வரவழைக்கத் தான் இவற்றை மீறிய ஒரு உத்தியைத் தேடினான் மனிதன்.


மனித மனம் ஒரு காமிராவைப் போன்றது. ஒரு புகைப்படக் கருவி, ஒரு பருப்பொருளை மட்டுமே பதிவு செய்யும். நுண்பொருளை - abstract objects - அவற்றைப் பதிவு செய்யாது. அதனால், ஒரு நுண்பொருளைப் பற்றிப் பேசும் பொழுது,அவற்றைப் பதிவு செய்ய ப்ருப்பொருளான ஒரு காட்சியையும் அமைக்க வேண்டியதிருக்கிறது. காட்சிகள் நுண்பொருளுடன் இணக்கமாக அமைக்க வேண்டும். நுண்பொருள் உணர்த்தாத காட்சி படிமம் ஆகாது.


சில இடங்களில் அந்தப் படிமம் வெளித்தோன்றாமலும் அமைந்துவிடும் - உதாரணமாக,


என் மனம்
அவளிடத்தில் அழைத்துச் செல்லச் சொல்கிறது
நான் அதட்டினால்
அழுகிறது


இதில் மனம் என்பதை ஒரு குழந்தை என்ற படிமத்தைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், குழந்தை என்பதை எங்கேயுமே சொல்லவில்லை. அந்த வார்த்தைப் பயன்படுத்தவேயில்லை. ஆனால், அதன் பண்பு இருக்கிறது. படிமங்களை அமைக்கும் பொழுது, இந்த பண்புகளைத் தவறவிடாது அமைக்க வேண்டும் என்று சொன்னர். (அவர் சொன்னதன் சுருக்கமான தகவல் மட்டுமே)


பின்னரும் தொடர்ந்த விவாதங்களில், கவிதை என்றால் என்ன, சமுதாயத்திற்கு கவிதைகள் என்ன பணியாற்றுகின்றன, செம்மொழி திட்டத்தினால் தமிழுக்கு என்ன பயன், உயர்நிலைப் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் ஏன் புதுக்கவிதைகள் இடம் பெறுவதில்லை, பாரதியையும் பாரதிதாசனையும் தாண்டி கவிஞர்கள் ஏன் மறுக்கப்படுகிறார்கள், இன்றைய படைப்பிலக்கியங்களில் வார்த்தை வறட்சி அதிகம் தென்படுகிறதே ஏன் - என்பது போன்ற கேள்விகளும் பதிலுமாய் போய்க் கொண்டிருந்த விவாதத்தில், அடுத்து பிரச்சினைக்குரிய ஒரு கேள்வியாக மாறப் போகிறது என்பது தெரியாமலே ஒரு கேள்வி கேட்டேன்.


Surrealism என்ற ஆழ்மனப் பிம்பங்களையும், உணர்வுகளையும் (sub-conscious feelings and images) அதிகம் பாடல்களில் கையாண்டவர் நீங்கள். அதாவது, புறவுடல் என்பதை மறுத்து அகவுடல் நோக்கிய பயணமாகக் கவிதைகளைக் கையாண்டீர்கள். ஆனால், இன்றைய சூழலில், அகத்தை விட அதிகமாக புறவுடலின் அவயவங்களை முன்னிறுத்தி கவிதை படைக்கும் உத்தி அதிகம் கையாளப்படுகிறதே, இது குறித்து உங்கள் பார்வை என்ன என்று பேசுங்களேன் என்று கேட்டுக் கொண்டேன்.


எடுத்த எடுப்பிலே, அவர் சொன்னார் – உடலுறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவிதைகளில் கையாளப்படுவதை தான் முற்றிலுமாக மறுப்பதாக சொன்னார். மேலும், பல தளங்களிலும், இது குறித்து நான் மறுத்தே பேசி வந்திருக்கிறேன். சிற்றிதழ் இலக்கியவாதிகளில் தங்கள் மீது கவனம் கொள்ளுமாறு, ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக செய்யப்படும் இவை நீண்டகாலம் நிலைக்கப் போவதில்லை. உடலுறுப்பைக் கொண்டு எதை சொல்ல வருகிறீர்கள் என்ற தெளிவின்மை நிறைந்திருக்கிறது. ஆண்டாள் ப்ரியதர்ஷிணியின் கவிதை நூல் ஒன்றை வெளியிடச் சென்ற பொழுது, சில வரிகளைக் குறிப்பிட்டு சொன்னேன் – இத்தன நாட்களும் ஆண்கள் பெண்களின் சதைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், மனதைப் பார்க்கவில்லை என்று ஆதங்கப் படுகிறார்கள் பெண்கள். உங்களுக்கு எழுதுவதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்ட பொழுது, நீங்கள் மனதையா காட்டுகிறீர்கள், சதைகளையேத் தானே திரும்பவும் திறந்து காட்டுகிறீர்கள் என சொன்னேன். அது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கிவிட்டது. அவ்வாறு எழுதுவது தவறு என்றார்.


பார்வையாளராக இருந்த நண்பர் அசோக், “அதை எப்படி தவறு என்று சொல்கிறீர்கள் – அது ஒரு பெண்மொழி தானே” என்றார்.

“அந்தப் பெண்மொழியினால், நீங்கள் பெறுவது எதை? உடலுறுப்புகளை மையப்படுத்துவதன் அவசியம் என்ன?”

“அது ஒரு கொண்டாட்டம். தன் உடலைத் தானே கொண்டாடுதல்”

“கொண்டாடத்தக்க பங்களிப்பு என்ன இருக்கிறது. தன்னைத் தானே கொண்டாடும் ஆபாசம் அந்த மொழி என்பது எனது கருத்து. அதற்கு மாற்றாகக் கருத்தை நீங்கள் கொண்டிருக்கலாம். அது குறித்து நான் கவலை கொள்ளவில்லை”

“அதை – பெண்மொழிகளை ஆபாசம் என தீர்மானிக்க உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது?” என சட்டென கேட்டுவிட்டார், அசோக்.

எல்லோரிடத்திலும் ஒரு பதற்றம். என்னுடைய கருத்து அது – நீங்கள் அது குறித்து மாற்றுக் கருத்து கொண்டிருக்கலாம் என்று சொன்னதன் பின், அதிகாரம் குறித்துப் பேசியது கொஞ்சம் அதிகப்பட்சமோ என தோன்றியது. என்றாலும் அந்த விவாதத்தை அத்துடன் முடித்துக் கொண்டு, அடுத்த கேள்வியை ஒருவர் கேட்க, எல்லாம் அமைதியாகியது.
பின்னர் விழா முடிந்து, போகும் பொழுது, அசோக்கிடம் அவரைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஓவியங்களில் ஆர்வமும் வரையும் பழக்கமும் கொண்டவர் என்பது தெரிந்து வியந்தார். பின்னர், எப்படி எழுத்துகளின் மீது இத்தகைய நுட்பமான பார்வை? என்றார். ‘வாசிப்பதில் மிக்க ஆர்வம் உள்ளவர். எழுத்துகளைப் பற்றிய விமர்சனங்களையும், விவாதங்களையும் வாரந்தவறாமல் செய்து கொள்கிறோம்’ என்று சொன்னேன்.
அத்துடன் விடை பெற, கூட்டம் இனிதாக முடிந்தது.

மைக்கெல் ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைந்தார்.

பெப்ருவரி 25, 2007 அன்று நான் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைகிறார். அதற்கான காலம் கனிந்து வருகிறேன் என்று.

இன்றைய செய்தி - ஜாக்ஸன் இணைந்தே விட்டார் என்று.

Good Luck and Welcome Jackson.

வணக்கம், மைக்கெல் ஜாக்ஸன், வாருங்கள்.





மிக்காயீல் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு அவர் இஸ்லாத்தில் இணைந்த செய்தியும், கடந்த வருடம் நான் எழுதிய பதிவின் மீள் பிரசுரமும் இதோ கீழே::



Troubled pop star Michael Jackson has converted to Islam and changed his name to Mikaeel.

Jackson, 50, was dressed in the Islamic garb as he pledged his allegiance to the Koran at a friend's house in Los Angeles. He sat on the floor as an Imam was called to officiate the ceremony.

Jackson, who was raised a Jehovah's Witness, decided to convert after discussing religion with a music producer and songwriter on his new album - both of them converts to Islam.

"They began talking to him about their beliefs and how they thought they had become better people after they converted. Michael soon began warming to the idea. An Imam was summoned, and Michael went through the shahada, which is the Muslim declaration of belief," a source was quoted as saying.

Mikaeel is the name of one of Allah's angels.

கடந்த வருடம் நான் எழுதிய பதிவு இது தான்.


மைக்கெல் ஜாக்ஸன் வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைவார் என அவரது சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் ஒரு பிரிட்டிஷ் இஸ்லாமிய செய்தித் தாளில் அறிவித்துள்ளார். இதைப் பற்றிய செய்தி, இன்று கலீஜ் டைம்ஸிலும் வெளியாகியுள்ளது.

தன்னைப் பின்பற்றி, தனது சகோதரனும் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார் என கூறியுள்ள அவர், தனது ஹஜ் கடமைகளை முடித்து விட்டு, திரும்புகையில் தனது சகோதரனுக்காக நிறைய இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி வந்ததாகவும், அவர் இஸ்லாம் மதம் பற்றி தன்னிடம் நிறைய கேள்விகள் கேட்டதாகவும், தான் அதற்கு இஸ்லாம் அமைதியான, அழகிய மார்க்கம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்ட மைக்கேல் ஜாக்ஸன், அமைதியையும், மன வலிமையையும் தரக்கூடிய வழியைக் கண்டு கொண்ட தன் சகோதரனைக் குறித்துப் பெருமையடைந்ததாக சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் (52) கூறினார். 'வெகு விரைவில் அவர் இஸ்லாத்தில் இணையக் கூடும்" என்ற ஜெர்மய்ன், மைக்கேல் இஸ்லாத்தில் இணைந்தால், தானும் அவரும் சேர்ந்து இவ்வுலகில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.

'மைக்கேலால் நிறையச் செய்ய முடியும். நான் முயற்சிப்பதைப் போல். நான், மைக்கேல் ஜாக்ஸன், மற்றும் இறைவனின் வார்த்தைகளால் நிறையச் செய்ய முடியும்.' என்கிறார் ஜெர்மய்ன். 1989ல் தன்னை இணைத்துக் கொண்ட, ஜெர்மய்ன், சமீபத்தில் நடைபெற்ற Big Brother Celebrityயில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் - அதாவது ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த இடம். இன துவேஷத்திற்கு ஷில்பா ஆளான பொழுது, அவருக்கு ஆதரவாக இருந்து, நண்பனானவர்.

பல வழக்குகளில் சிக்கி மன அமைதி இழந்து, நிம்மதியின்றி தவித்தவர் - ஜாக்ஸன்.

செய்தியின் சுட்டி.
http://news.yahoo.com/s/afp/20070222/ennew_afp/afpentertainmentislam_070222184705
The Khaleej Times, 25-2-07.

செய்தியைப் படித்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியான பின்பு அவர் பஹ்ரைன் வந்தார். அங்கேயே பெரும்பகுதியைக் கழித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் விடுபட்டாலும் இன்னமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு, வழக்குகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பொழுது கூட, அவர் மீதும், ஒரு மருத்துவ மனை மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. காரணம் - அவர் காய்ச்சலுடன் உடல் நலமின்றி வந்த பொழுது, ஒரு நோயாளிப் பெண்மணியை அகற்றி விட்டு, அவருக்கு அந்த இடத்தைத் தந்தார்கள். அந்தப் பெண்மணி, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவர் சாவிற்கு ஜாக்ஸன் தான் காரணம் என்று ஒரு வழக்கு.

ஒரு மனிதனை எத்தனை தூரம் ஒரு சமூகம் சின்னாபின்னா படுத்த முடியும் என்பதற்கு மைக்கேல் ஜாக்ஸன் ஒரு உதாரணம். மன அமைதியைக் குலைத்து, தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்ட ஒரு சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவர் தேர்வு செய்து கொண்ட பாதை: இஸ்லாம்.

வலுக்கட்டாயமான கருத்துத் திணிப்பினால், அவர் தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக முற்றிலும் அறிந்து, பின் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் அவ்வாறு தன்னை இணைத்துக் கொள்வாரானால், இஸ்லாம் அவரை வரவேற்கும். அவருக்கு அமைதியை வழங்கும்.

புலம்புபவர்கள் புலம்பித் திரியட்டும்.

இஸ்லாம் அமைதியாக தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கும்

Friday, November 21, 2008

Is IT people a seperate entity?








IS IT people a seperate entity?

ஒரு தொழிற் சமூகமாக இந்த வகை போராட்டங்களில் ஈடுபட வைப்பது நியாயமா?


தமிழ் என்ற உணர்வு ஒன்றே மட்டும் தான், தமிழீழ ஆதரவிற்குத் துணையாகும்.
IT என்ற பல வகை மனிதர்களையும், அவர்கள் சென்னையில் இயங்குவதால் மட்டுமே,
ஒரு அழகிய டீ சர்ட்டுகளுக்குள் அடைத்து தமிழின உணர்வாளர்களாக மாற்றிக்
காட்ட முனைவதில் அர்த்தமேயில்லை.


இதில் கலந்து கொண்ட அனைவருமே, தமிழுணர்வால், கலந்து கொண்டார்கள் என்றால், அதை ஏற்பதில் தயக்கமில்லை. ஆனால், வற்புறுத்தலின் பேரால், கலந்து கொள்ள வைக்கப்பட்டார்கள் என்றால், இத்தகைய உணர்வுகள் தேவையற்றவை. ஏனென்றால், எனக்குத் தெரிந்து, மொத்த இந்தியாவுமே, தேசபக்தி என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு, தமிழீழ விடுதலையை ஏளனம் செய்யும் பார்வையையே எல்லா தளங்களிலும் முன் வைத்திருக்கின்றன.

சென்னையில் IT people என்பது ஒரு தனி அடையாளாமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. இங்குள்ள பல IT நிறுவனங்களின் தலைமையகமோ, அல்லது கிளைகளோ, மற்ற மாநிலங்களிலும் இருக்கின்றன. அங்குள்ளவர்களின் நிலைபாடுகள் முற்றிலும் மாறாக இருக்க வாய்ப்பிருக்கின்றன.

தமிழர்களுக்கான காவிர் நீர் ஆற்றுப் பிரச்சினையில், தமிழர்களுக்கெதிரான ஒரு நிலைபாட்டை பெங்களூர் IT நிறுவன ஊழியர்கள் எடுக்க நேர்ந்ததையும் எல்லோரும் அறிவர். அவ்வாறிருக்க, தமிழீழ நிலைபாட்டில், ஒரு அடையாளமாகத் தங்கள் கிளை நிறுவன ஊழியர்களை இவ்வாறு அனுமதிப்பது, தங்கள் தமிழ் பற்றை, தாங்கள் சென்னையில் யங்குவதால் மட்டுமே அனுமதிப்பது போலல்லவா இருக்கிறது?


ஆகையால் ஒரு தொழிற் சார்ந்து ஒரு இனமாக உருவெடுப்பதைக் காட்டிலும், நேர்மையாக இருப்பதுவே மேல். இது குறித்து யாருமே எந்த தவறான பார்வையும் முன்வைக்கவில்லை.

'டெக்கிஸ்'களுக்கான உலகம் தனியானது. அதனால், அவர்களைக் குறித்து கவலை கொள்வதை விட்டு விடலாம். அதையும் மீறிய தமிழுணர்வாளர்களால் இருப்பார்களேயானால் சரி, மற்றபடிக்கு, அவர்கள் தங்கள் secular credentialsஐ விட்டு விட்டு, பேருக்காக இத்தகையப் போராட்டங்களை நடத்தி தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளவேண்டிய அவசியமேயில்லை. அது இல்லாமலே, அங்கிருக்கும் உணர்வாளார்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

புரிந்து கொள்வார்கள்.

புரிந்து கொண்டோம்.

காவிரி ஆற்று நீர் பிரச்சினைக்காக ஒரு நிலையும், ஈழ பிரச்சினைக்காக ஒரு நிலையும் என்று அரசியல் சதுரங்க ஆட்டத்திற்குள் எல்லாம் அவர்கள் நுழைய வேண்டியதில்லை. தொழில்நுட்ப சமூகம் ஒரு தனி உலகம். அவர்கள் சமூக பிரச்சினைகளில் தலையிடவில்லையே என்று யாரும் புகார் செய்யவில்லை. அதே சமயம் அவர்கள் ஒரு இனத்திற்கான எதிர்வினையாளிகள் என்றும் யாரும் புகார் செய்யவில்லை.

சிலர் அவ்வாறு செய்திருந்தாலும் அது ஒரு ஆதங்கமாகத் தான் இருந்திருக்கும்.

தங்கள் ஆடைகளில் வசீகர வாக்கியங்களை ஏந்திக் கொள்ளும் அதே சமயத்தில், கைப்பேசியில் யாருடனோ பேசத் தவிக்கும், வெற்று ஆராவாரத்துடன், ஈழம் பேசப்பட வேண்டியதில்லை.



(புகைப்படங்கள் - இலக்குவன் / பண்புடன் குழுமம்.)

Friday, November 14, 2008

நன்றி : காவிக்குழுவினருக்கு.....

நவம்பர் 11.

தேச கல்வி தினம்.

அபூல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள்.

இப்படியெல்லாம் சொன்னால் எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவின் – premiere institute என்று சொல்லப்படும், IITக்களைத் தோற்றுவித்த மூல கர்த்தா என்று சொன்னால் தெரியுமில்லையா?






ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும். இன்றைய நடைமுறையில், எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதரவு தேவைப்படுகிறதென்றால், அதை இரண்டு வழிகளில் பெற முடியும்.

#1. தங்கள் கருத்துகளை நேராகக் கூறி, கிடைக்கக் கூடிய நன்மைகளை நேரிடையாகச் சொல்லி, அதனால் ஆதரவு கோருவது. An optimistic outlook.

#2. நிகழ சாத்தியமற்ற ஆபத்து கூறுகளைப் பட்டியலிட்டு, அச்சமூட்டி, அதனால், எங்களை
ஆதரித்து விடு என வற்புறுத்துவது. The pessimistic and negative view.

இதில் இன்று உலகம் முழுக்க இந்த எதிர்மறை பிரச்சாரங்களைப் பரப்பித் தான் அரசு எந்திரங்கள் தங்களுக்கு ஆதரவைக் கோருகின்றன. அமெரிக்க அரசியல் தலைமை தான் முதன்முதலாக இந்த எதிர்மறை பிரச்சார உத்திகளை மேற்கொண்டு, அதன் மூலம் மனித உரிமைகள் என்ற தத்துவத்திற்கு ஆதரவு கோரியது. கம்யூனிஸத்தை ஒரு பயங்கரவாத பிசாசாக தொடர்ந்து கட்டமைத்தது. அதைத் தடுக்க வேண்டுமென்றால்,முதலாளித்துவத்தைத்
தொடர்ந்து தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற மற்றொரு பயங்கரத்தை முன்நிறுத்தி ஆதரவு வேண்டியது. இந்த வகையான பிரச்சாரம் நல்ல பலனைக் கொடுக்கிறது என்ற தவறான புரிதலின் பயங்கரம் இன்று வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது - முதலாளிகள் வாழ, தொழிலாளிகள் ஒழியட்டும் என்ற பூனை இன்று பையிலிருந்து குதித்து ஓடிக்கொண்டிருக்கிறது அங்குமிங்கும்.

அமெரிக்காவின் இந்த உத்தியை, இன்று மிக லாகவமாக தன் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், பரிவார்கள். இந்துக்களை - மதத்தின் உள் பலவீனங்களையும் மீறி, ஒன்று படுத்தி ஓட்டு வங்கியாக மாற்ற முனைவதற்காக, அவர்கள் முன் வைக்கும் எதிர்மறை பிரச்சாரம் தான் - முஸ்லிம், கிறித்துவ மதங்கள் இந்து மதத்தை விழுங்கி விடும் என்ற பூதத்தைக் காட்டி பயமுறுத்தி, மற்றவர்களைத் தங்கள் அணிக்கு வரவழைப்பதற்கான
முயற்சி.

இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற முயற்சி - அனைவரையும் சமமான
தளத்திற்குள் கொண்டு வருவோம் என்ற முயற்சியாக நேரிடையாக பிரச்சாரம் செய்யப்படும் கருப்பொருளாக அமைந்திருந்தால், அதை விட மிக்க மகிழ்ச்சியான செய்தி வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், அதை செய்ய அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால், பல சாதிக்கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் இனங்களையெல்லாம் ஒன்று கூட்டி, இடைப்பட்ட தடைக்கோடுகளை அழித்தெடுக்கும் எண்ணமெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. அதனால், இந்துக்களை ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டுமென்ற முனைப்பு, அதன் உட்பிரிவின் கணங்களிலே அமிழ்ந்து முழுகிப் போய்விடும். இந்துக்களை ஒன்று திரட்ட, அதன் உட்பிரிவுகளின் அகோர முகத்தை ஒழிப்பதைக் காட்டிலும், இந்து மதத்திற்கு அழிவு என்ற
பூச்சாண்டியை வெளியில் இருப்பவர்களைக் காட்டிச் செய்வதன் மூலம் எளிதாக முடித்து விடலாம் என்ற திடமான நம்பிக்கைக்கு வந்து விட்டனர். அதற்கான எளிய வழி -
அமெரிக்காவின் பிரச்சார மாடல்கள். Rather than being an optimist and
wait for the day to arrive, go the pessimist way and rummage through
by the negative propaganda.

இதற்குண்டான எளிய வழி, இஸ்லாம், முஸ்லீம் மற்றும் பிற சிறுபான்மை மத, இன, மக்களின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நினைவாற்றல்களிலிருந்து அழித்தொழிப்பது, அவர்களை எதிரிகளாகச் சித்தரித்துக் காட்டுவது, அவர்கள் மீது தேச துரோக குற்றங்களைச் சாற்றுவது, பிற சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்துவது, கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளைப் பறிப்பது என்ற தொடர் தாக்குதல்கள்.

பட்டியலிட்டால் கணக்கிலடங்காமல் போகும் அளவிற்கு உண்டு.

குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றிரண்டு.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தானை அவர்கள் religious bigot என்ற பட்டம் சூட்டி வரலாற்றைத் திரிக்க முனைந்தது, உலக வரலாற்றிலேயே முதன்முதலாக ராக்கெட் தொழில்நுட்பம் கொண்டு ஏவுகணை ஆயுதத்தைப் பயன்படுத்தியதன் மூலம், ஒரு விஞ்ஞான அறிவுப் பாதையைத் தொடங்கி வைத்தது - இவற்றையெல்லாம் சுத்தமாக மறைத்ததைக் குறிப்பிடலாம்.

இன்று திப்பு சுல்தானுக்கு அங்கீகாரம் கொடுத்தது அமெரிக்காவின் நாசா நிறுவனம் தான். அவர்கள் அலுவலக வரவேற்பறையில் திப்பு சுல்தானின் மிகப்பெரிய ஓவியப்படம் இருக்கிறது - ராக்கெட் தொழில்நுட்பத்தைத் தொடங்கி வைத்தவர் என்பதற்கான மரியாதையின் நிமித்தம்.

ஆனால், இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில், எவராவது ஒருவர் திப்பு சுல்தானுக்கான அங்கீகாரத்தை வழங்கியதுண்டா? ஏன் இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த கலாம் அவர்கள் கூட இதை எங்கும் குறிப்பிட்டதாக எனக்குத் தெரியவில்லை.

இது போலவே இந்தியாவின் வலுவான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவிற்கு அடிகோலிய
ஐ.ஐ.டி கல்வி நிலையங்களை நிறுவியவரே ஆசாத் அவர்கள் தான் என்பதே இப்பொழுது
தான் பொதுவிற்கு வருகிறது. இதைப் பற்றியெல்லாம் பேச விரும்பாத, தேசபக்தர்கள், இத்தனை நாளும் ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள் - இஸ்லாமியத் தீவிரவாதம் என்று. ஆனால், இன்று அந்தப் பிரச்சாரமே கேள்விக்குறியாகி நிற்கின்றது. நாட்டில் வெடித்த அனைத்து வெடிகுண்டுகளும் இஸ்லாமிய குண்டுகள் மட்டும் தானா? ஆர்.எஸ்.எஸ் குண்டுகள் அவற்றில் எத்தனையோ? தாங்களே குண்டுகளை வைத்து விட்டு, அவற்றை இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை அள்ளி வீசும் வகையில் பிரச்சாரம் செய்யும் உத்தியா இது?

எந்த ஒரு தத்துவமும் எப்படி தன் தவறுகளின் கணத்தினாலே வீழ்ந்து விடுகிறதோ - அது போலவே, இன்று இந்துத்வா தத்துவமும் தன் தவறுகளின் கணத்திலே வீழ்ச்சியடையத் தொடங்கி விட்டது. பூச்சாண்டிகளைக் காட்டுவதன் மூலம் 'நிச்சயிக்கப்பட்ட நிலங்களை' எவராலும் அடைய முடியாது என்பதே இன்றைய நிதர்சனம்.

இன்று தீவிரவாதிகளை எந்த ஒரு மதத்திடனும் அடையாளப்படுத்தக் கூடாது என்று
குரல்கள் எழுகின்றன.

நன்றி.

இத்தனை நாளும் நாங்கள் மட்டுமே அதற்கான போராட்டத்தை நடத்தி வந்தோம். இன்று பெரும்பான்மையானவர்களும் அதையே பேச ஆரம்பித்திருக்கின்றனர். தவறான அச்சுறுத்தல்களை விலக்கி விட்டு, உண்மையைப் பேசினால் மட்டுமே தீவிரவாத
எதிர்ப்பு வலுவுள்ளதாக இருக்கும் என்ற புரிதல் வருவதற்கு இந்துத்வவாதிகளே காரணம் என்ற வகையில், மீண்டும் ஒரு நன்றி.

இனியாவது, இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய நற்பணிகளைப் பற்றி, நன்றியுடன் நம் சமூகம் பேச முன் வருமா?

இந்தக் கேள்விக்கான பதிலின் மூலம் மட்டுமே, இந்து முஸ்லீம் நல்லிணக்கமும், பொதுவான நல்லிணக்கமும் சாத்தியப்படும், இந்தியாவில்.

( அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளைக் குறிப்பிட்டு, கட்டுரை எழுதிய நீடுர் ஆன்லைன்.காம், மற்றும் அதை பண்புடன் குழுமத்தில் மேலும் விரிவாகப் பேசிய ஆசாத், ஆசாத் அவர்களுக்கும் நன்றி. )

Thursday, November 06, 2008

ஒபாமா ஒன்றும் தேவதூதன் அல்ல....

The Great White Lies failed.


'சும்மா அதுருதுல்ல'


ஷங்கர் படத்தின் 'fantasy' கதைகள் போலிருக்கிறது. தெருவில் கூடி குதூகலிக்கும் மக்களின் மகிழ்ச்சிப் பெருவெள்ளம் உற்சாகம் கொள்ள வைக்கிறது. மிகக் கேவலமான ஒரு ஆட்சியின் இறுதியில் நிகழும் மாற்றத்தைக் கண்டு, இந்த உலகமே உவகை கொண்டிருக்கிறது.

ஆனால், எல்லோருக்குமே அப்படியிருக்குமா?

பால்பாயாசத்தில் உப்பு போட்டுத் தருபவர்கள் இல்லாமலா இருப்பார்கள்?

தொனி மாறுகிறது - யுத்தங்கள் குறித்த பேச்சுகளில் என்பது தொடங்கி, பொருளாதாரத் துறைகளில் எதுவுமே செய்ய முடியாது என்று தொடர்ந்து, இது இன வெற்றியல்ல என்று குமுறுவது வரை வாதங்கள் பத்திரிக்கையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஒபாமாவின் வெற்றி இனரீதியாக ஈட்டப்பட்ட வெற்றியல்ல என்பது வரையில் உண்மையாக இருக்கலாம். பெரும்பான்மைக்கும் குறைவான மக்களுடைய ஓட்டுகளால் ஆனது மட்டுமே இந்த வெற்றி என்று எவரும் நினைத்து விட முடியாது தான். அந்த வகையில், இது ஒரு பொதுப்படையான வாதம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒ(டு)துக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவன் மேலெழுந்து வந்து, உலகின் வல்லாண்மை மிக்க ஒரு அரசின் தலைவனாக எழுச்சியுற முடியும் என்பது - எவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிருவப்பட்டிருக்கிறது. இதை நடுத்தர வர்க்கத்து மக்களின் அபிலாஷைகள் என்று தான் பார்க்க வேண்டும் என்று சொல்வது, ஒரு எழுச்சியை மறைத்து இகழ்வதாகவே அமையும்.

நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை முன்னெடுத்துச் செல்வது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால், அதை ஒரு வெள்ளையரால் கூட செய்திருக்க முடியும். பெரும்பான்மை பலம் கொண்ட வெள்ளையர்களும் அதைத் தான் விரும்பி இருப்பார்கள். பொருளாதார காரணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களித்திருந்தால், அவரால் 'அதிருதுல்ல்' என்று சொல்ல வைக்கும் வெற்றியைத் தொட்டிருக்க முடியாது. இத்தனைக்கும், கெய்ன், முதலாளித்துவக் கொள்கைகளைப் ஒபாமாவை விட தன்னால், நன்றாகக் காக்க முடியும் என்று அறைகூவலே விடுத்தார்.

நடுத்தர மக்கள் தங்கள் கனவான ஒரு நல்வாழ்வைக் குறித்து மட்டுமே கவலை கொண்டிருக்கவில்லை. மாறாக இந்த உலகம் முழுவதும் தங்கள் ஆணவத்தை இகழ்கிறது - தாங்கள் அனைத்து மக்களாலும் வெறுக்கப்படுகிறோம். இதை மாற்றச் செய்ய வேண்டுமானால், அதற்கான ஒரு தகுந்த முகம் ஒன்றை கண்டாக வேண்டுமென்ற வேகம்
தான் இந்தத் தேர்தலின் முடிவுகள் என்றே கருதுகிறேன். மீண்டும் ஒரு வெள்ளை முகத்தை நிறுத்துவதன் மூலம் இந்த உலக மக்கள் அமெரிக்காவின் மீது கொண்டிருக்கும் வெறுப்பை மாற்றியமைக்கத் தேவையான நம்பிக்கயை முதலில் பெற முடியுமா? என்பது சந்தேகமே!


அமெரிக்க தேசம் நடத்திய யுத்தங்களின் கோர முகம் வெளியே தெரிய ஆரம்பித்த பின்னர் தான், அவர்களது மதிப்பு உலக அரங்கில் அடிவாங்கத் தொடங்கியது. இல்லாத அணு ஆயுதங்களைக் காண்பித்தது, ஆடிய கோரதாண்டவத்தின் விளைவாக, தீவிரவாத விளை நிலமாக மாற்றிவிட்டு, பின்னர் தீவிரவாதங்களுக்கு எதிரான யுத்தம் என புலம்பிக் கொண்டிருந்தது, பிற நாடுகளின் இறையாண்மைகளைத் தூசியாக ஊதித் தள்ளி, தன் படையினரை அந்நாட்டு எல்லைகளைக் கடக்கச் செய்தது, இன்னமும் மீதி இருக்கும் நாடுகளின் மீதுமேதோ காரணம் காட்டி போர் தொடுக்க முனைவது என ஒரு யுத்த பிசாசாக அலைந்தது.


அமெரிக்கர்கள் நடத்திய “எதிராளியற்ற மூன்றாவது உலகப் போரை” அனைவருமே வெறுத்தனர்.

எவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உண்மை என்பது எப்பொழுதும் அழியாத்தன்மை கொண்டது. இந்த உண்மையை இப்பொழுது தான் உணரத் தொடங்கினர் என்பதே யதார்த்தம். தங்கள் நலனுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்காத உள்ளூர் சண்டைகளிலெல்லாம், நுழைந்து தங்கள் நாட்டு மக்களைப் பலி கொடுத்தது என்பதை எவர் தான் ஏற்றுக் கொள்வர்? செத்துப் போகும் பிற நாட்டு மக்களின் சடலங்களைக் கண்டு, எந்த மனசாட்சியுள்ள மனிதனால் அமைதி கொள்ள இயலும்? இந்த யுத்தங்களில் இறந்துவிடும் நபர்களின் குடும்பங்களின் துயரங்களை யார் கணக்கிலெடுத்துக் கொள்வது?


இந்த யுத்தங்களை நிறுத்துவது தான் அமெரிக்க தன் மதிப்பை மீட்டெடுக்கக் கூடிய ஒரே வழியாக இருக்க முடியும். அதற்கான ஒரு நபராக எதிர் அணியிலிருந்து தான் ஒருவர் வரமுடியுமே தவிர, புஷ்ஷின் நண்பர்களால் அதை செய்ய முடியாது.


ஒபாமாவால், எத்தனை தூரம் இதில் முன்நோக்கி நகர முடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது ஒரு தற்காப்பான பொதுப்படையான வாதம். அதை செய்வதினால் மட்டுமே ஒருவரை விமர்சித்து விடமுடியாது. ஒபாமா தனது கருத்தியலை மாற்றிக் கொண்டு, வெற்று அறிவிப்புகளோடு முடித்துக் கொள்வார் என்பது சரியான வாதமாக இருக்காது.

இந்த யுத்தங்களை நிறுத்திவிட இயலாதவாறு பலரும் முயலக் கூடும் - குறிப்பாக ஆயுத வியாபாரிகள் மற்றும் இஸ்ரேலிய லாபி. வெகு ஆழமாக புதை மணலில் சிக்கிக் கொண்டவன் தன்னை விடுவித்துக் கொள்ளவே பெரும் பிரயத்தனம் செய்தாக வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியையாவது ஒபாமாவால் தொடங்கி வைக்கப்படுமென்றால், அதுவே வெற்றியாகத் தான் அமையும்.


அதை வெற்று அறிவிப்புகளாகக் கருதி இன்றே அதை தோல்வியாக வர்ணித்து புளகாங்கிதம் அடையவேண்டியதில்லை.


பொருளாதார சறுக்கல்களுக்குக் காரணம் - எந்தப் பிடிமானமுமற்ற வரைமுறையற்ற
அனுமதிகளே காரணம் என்பது வரையில், எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பொருளாதார சுரண்டல்கள் முதலீட்டு சந்தையில் தடுக்கப்பட வேண்டுமென்றால், குறிப்பிடத்தக்க நிபந்தனைகளும், சமூக மதிப்பீடுகளைக் காக்கும் திட்டங்களும் அமைக்கப் பெற வேண்டும் - இல்லையென்றால், எல்லோரும் ஒட்டுமொத்தமாக முழுக வேண்டியதிருக்கும் என்ற புரிதல் அனைவரையும் சென்றடைந்திருக்கிறது. ஆக, நியாயமான முதலீட்டுக் கொள்கைகளை அனுமதிக்கும் வேளையில், சூறையாடுதலையும், சூதாட்டத்தையும் முன் வைத்து செயல்படும் பேராசைகளுக்குக் கடிவாளம் போடுகையில் அதை எதிர்ப்பதற்கு எவருக்கும் துணிவிருக்காது.


பெரும் அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட ஒபாமா ஒன்றும் தேவதூதன் அல்ல – என்றாலும், ஒரு நல்ல வாழ்வினை நோக்கி இந்த வாழ்க்கையை நகர்த்திச் செல்வது ஒன்று தான் அவரிடமிருந்து எதிர்பார்க்க வேண்டுமே தவிர, உலகின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் ஏன் தன் ராணுவத்தை பின்னழைக்கவில்லை, ஏன் முழுமையான சோசலிச நாடாக இன்னும் மாற்றிவிடவில்லை, என்றெல்லாம் பின்னர் கேள்வியெழுப்பத் தோதாக இப்பொழுதே பேசி, எழுதி வைத்து விடுவோம் என்பது குதர்க்க வாதத்திற்குட்பட்டது.


மாற்றங்கள் தேவை என்று ஓங்கி ஒலித்த குரல் - தீண்டப்படாதவனாக ஒதுக்கப்பட்ட ஒரு இனத்திற்கும் எழுச்சியுண்டு என்று உலகெங்குமிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமைந்ததைக் கண்டு எழுச்சியுறாமல், ஒரு அசூயையுடன் பேசுவது, இன்னமும் நாம் அந்த எல்லைகளை - தீண்டப்படாதவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை ஆட்சியாளாராக மாற்றிப் பார்க்கும் எல்லைகளைத் தொடத் தயாராகவில்லையென்பதையே தெரிவிக்கிறது. அதனால் தான் இந்த வெற்றியைத் திரிப்பது, ஒரு சாதாரண நிகழ்வாக மாற்றிக் காட்ட முனைவது, வெற்று அறிவிப்புகள் தான் வருமென ஆரூடம் சொல்வது, கனவுகளாகப் போய்விடும் என்பது எல்லாம்...

சில பத்திரிக்கையாளர்களுக்கும், பரம் அறிவுஜீவிகளுக்கும், இந்த உலகை வௌவாலாகத் தான் பார்க்க இயல்கிறது என்பது சொல்லித் தான் தெரிய வேண்டுமா?

Tuesday, November 04, 2008

ஒபாமா Vs கெய்ன் - The Great Little White Lies Will Decide

ஒபாமாவும், கெய்னும்...




ஒரு வழியாக தேர்தல் நாளைத் தொட்டு விட்டார்கள்.

எங்கெங்கும் யுத்தங்கள், பொருளாதார வீழ்ச்சி, இன்னமும் புதிய யுத்தத்திற்கு முயற்சிகள் என எட்டு ஆண்டுகள் தொடர்ந்து அவநம்பிக்கை கொண்டலையும் ஒரு அரசையே புஷ்ஷினால் மக்களுக்குத் தர முடிந்தது.

தீவிரவாத ஒழிப்பு என்று உலகெங்கும் வேட்டையாடுதலை ஒரு வெறியுடன் தனது மற்றைய மேலை நாட்டு சகாக்களுடன் தொடர்ந்து நடத்தினார். இராக்கின் மீதான யுத்தத்திற்காக தனது பத்திரிக்கையுலக நண்பர்களுடன், பல பொய்களை பிரச்சாரம் செய்தார். இப்பொழுது கூலிப்படைகளை அனுப்பி, அங்கு அமைதியை நிலைநாட்டுகிறேன் என நாடகமாடிக் கொண்டிருக்கிறார். அணுகுண்டு தயாரிக்கப் போகிறார்கள் என அடுத்து வடகொரியா, இரான் என தனது பார்வைகளை விரிவு படுத்தினார்.

ஆக தனது மொத்த ஆட்சிக்காலத்தையும், அமெரிக்கர்களின் நலனை விட, சில நிறுவன ஆதாயங்களுக்காக அர்ப்பணித்தார். பொருளாதார வீழ்ச்சியின் அவலத்தில் நாட்டை மொத்தமாக சிக்க வைத்த பின்னர், அவரது காலமும் முடிவடைகிறது.

புதிதாக அதிபர்கள் தேர்தல்.

மிக்க எதிர்பார்ப்புள்ள தேர்தல்.

மாற்றங்கள் வேண்டும் என தனது வாதங்களை முன் வைக்கிறார் - ஒபாமா.

மாற்றங்கள் தேவை தான் என்பதை கெய்ன் ஆதரிக்கிறார்.

ஒபாமாவின் கோஷம் - புஷ் காலத்தைய தவறுதல்களிலிருந்து ஒரு மாற்றம் என்ற வகையில், பொருள் பொதிந்தது. ஆனால், கெய்ன் எதைக் கொண்டு கோஷம் போடுகிறார்? புஷ்ஷின் பக்கம் இருந்தவர். அவரது ஆதரவாளார். இன்று மாற்றங்கள் தேவை என்று குரல் எழுப்புவதை அன்றே செய்திருக்கலாமே? அவரது போதாத காலம், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தினால், பாதிப்படைந்த, வீட்டு உடைமையாளர்களுக்காக எதையும் செய்யவில்லை புஷ் என்ற கருத்தை ஆமோதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

கெய்ன் பேசும் மாற்றங்கள் அர்த்தமற்றவை.

இன்றைய சூழலில் - வெற்றி பெறக் கூடிய சாத்தியம் ஒபாமாவிற்கே இருக்கிறது. ஆனாலும், வெற்றி பெறுவாரா? கணிப்பில் 51% ஒபாமாவிற்கு ஆதரவாக உள்ளது.

தீவிரவாதம் ஒன்றே தனது இலக்கு என ஆட்சிபுரிந்த புஷ், அதற்கான தீர்வு எதுவுமின்றியே அழித்து ஒழித்து விட முடியும் என நம்பினார். அவரால், முஷாரஃப் கெட்டது தான் மிச்சம். புஷ் தனது இருண்ட ஆட்சிக்காலம் முடிந்து வெளியேறும் சமயத்தில், எது முக்கியமான பிரச்சினை, எதை மனதில் கொண்டு ஓட்டளிப்பீர்கள் என வாக்கெடுத்ததில், முதலில் இருப்பது - பொருளாதாரம் - 51%. அடுத்து இராக், health care, தீவிரவாதம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் நான்காவது இடத்தில் தான் இருக்கிறது. 11% முக்கியத்துவம் மட்டுமே பெற்று. இறுதியாக, புஷ்ஷின் மொத்த ஆட்சியையும் எடை போட இந்தக் கணிப்பே போதுமானது. தீவிரவாதம் குறித்த புஷ்ஷின் போக்கு மொத்த ஆதரவையுமே இழந்திருக்கிறது. சரியான கவனம் கொண்டு, புஷ், தனது வெளியுறவு கொள்கைகளை அமைத்துக் கொண்டிருந்தாலே, பாதி தீவிரவாதம் ஒழிந்து போயிருந்திருக்கும். ஆனால், பாவம், அவர் யுத்தங்கள் நடத்தி சில நண்பர்களின் பணப்பெட்டியை நிரப்பினாலே போதுமென்று நினைத்து விட்டார் போலும்.

எல்லாமும் சாதகமாக இருந்த போதிலும், ஏன் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக் கணை எழுகிறது?

ஒபாமா is a radical என்று கிட்டத்தட்ட அவரை ஒரு தீவிரவாதியாகவே சித்தரிக்க முனைந்தனர். எதிர் அணியினர் மட்டுமல்ல - அவ்ரது அணியிலிருந்தே ஹில்லாரி க்ளிண்டன் தரப்பிலிருந்து, அவர் பாரம்பரிய ஆடைகள் அணிந்த புகைப்படங்களை கசிய விட்டனர். அவரது தந்தை ஒரு இஸ்லாமியர் என்பதை வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.


கெய்ன் தனது துணையாளாராக சாரா பாலினைத் தேர்ந்தெடுத்த பொழுது, ஒரு கவர்ச்சிப் புயலே சுழன்றாடியது. ஆனால், தனது தேர்தல் பிரச்சாரங்களில் பலமுறை சறுக்கினார். அவர் பலமா, சுமையா கெய்னுக்கு என விவாதம் போகக் கூடிய அளவிற்கு பின்னர் கீழிறங்கி விட்டார்.

இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி - ஒபாமாவின் அத்தை (?) அல்லது சித்தி (?) சட்டத்திற்குப் புறம்பாக தங்கி இருக்கிறார் என ஊடக ஜல்லிகள். ஒபாமாவைப் பற்றிய எதிர்மறை தகவல்களும் செய்திகளும் தான் எங்கும் ஊடக்த்தால் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் கூட ஒபாமா எளிதாக தாண்டிவிட்டார். பலவற்றை மௌனமாக ஒதுக்கித் தள்ளினார். மக்களும் அவற்றை ஏற்றுக் கொண்டனர். கணிப்பில் அவர் 51 விகிதத்திலே இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். அனைத்து கணிப்புகளிலும்.

எவராலும் எளிதாகச் சொல்ல முடியும் - ஒபாமா வென்று விடுவார் என்று.

என்றாலும், சில 'surprises' இருக்கக்கூடும் என்கிறார் கெய்ன். அமெரிக்கத் தேர்தலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் - ஒன்றைச் சொல்கின்றனர். The little White lies. இது தான் இறுதியாக முடிவைத் தீர்மானிக்கும் என்கின்றனர்.

அதென்ன white lies?

வேறொன்றுமில்லை. வெள்ளையர்கள் சொல்லும் சின்ன, குட்டிப் பொய். அவ்வளவே. கருத்துக் கணிப்பில், தங்கள் கட்சி சார்பாக ஓட்டளிப்போம் என்று கூறுபவர்கள், ஓட்டைக் குத்தும் பொழுது, தங்களது பாசப்பிணைப்பினால், வெள்ளையர்களுக்கே குத்தி விடுவார்கள். கறுப்பு நிறத்தவரை அங்கீகரிக்க மாட்டார்கள். அதனால், ஒபாமாவின் வெற்றியை சில 'surprise'கள் தகர்த்து விடக் கூடுமென்கின்றனர்.

இருக்கக் கூடும். தங்களது மனசாட்சிக்கு ஆறுதல் சொல்ல வாகாக அவர்கள் சுட்டிக் காட்டக் கூடும் - சாரா பாலினை.

'என்ன பண்றதுப்பா, ஒரு பெண்ணுக்கும் வாய்ப்பு கொடுக்கனுமில்லையா, அதனால், சாரா பாலினுக்கு ஓட்டு போடுவதற்காக, கெய்னுக்கும் போட வேண்டியதாயிற்று' என சொல்லி, தங்களை சமாதானப்படுத்திக் கொண்டே, தங்கள் வெள்ளைப் பொய்களை அரங்கேற்றுவர் என்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, ஒபாமா கூட, ஹில்லாரியை தனது துணையாளாராக வைத்திருக்க வேண்டும் - அவர் தவறு செய்து விட்டார் என்கின்றனர் சில பார்வையாளர்கள்.

எந்த அளவிற்கு இது உண்மையாகப் போகிறது என்பதை தேர்தல் கழிந்த நாளன்று தான் சொல்ல முடியும்.

வெற்றி பெறுவதற்குரிய அனைத்து தகுதிகளும், காரணிகளும் நிரம்பி வழிகிறது - ஒபாமாவிடம். அவர் தோற்பதாக இருந்தால், ஒன்றே தான் காரணமாக அமைய முடியும் - The Great Little Lies.

அதையும் மீறி அவர் வெற்றி பெற வாழ்த்துவோம் - ஒரு முழுமையான மாற்றத்தைத் தருவார் என்ற நம்பிக்கையினால்...

Thursday, October 16, 2008

ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...

ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை









நியாயத் தீர்ப்பு நாள் இன்று
வயற்சதுப்பு வெளியெங்கும்
தம்மைச் சேகரித்துக் கொள்கிறது
ஆராவாரப் பெருங்கூட்டம்
குற்றச்சாட்டு இதுதான்:
நான் உன்னை நேசித்தேன்.


இவ்வுலகின் தங்குமிடமெங்கும்
ஒருதுளி மதுகூட மிச்சம் வைக்கப்படவில்லை.
பேருவகையின் மீதெவர் ஆணையிடுகின்றனரோ
அவர்களின் விழித்திருத்தல் உறுதிபடுத்திக் கொள்கிறது
சும்மா வேடிக்கைப் பார்க்கும் தாகத்துடன்
தங்களது போதைகள் இன்று விலக்கி வைக்கப்படாதென்பதை


இந்த வாளேந்திய கொலையாளி எவரைத் தேடுகிறான்?
தன் மக்களெல்லோரையும் துரத்திவிட்ட
அல்லது இறுதிமனிதனையும் தீர்த்துக் கட்டிவிட்ட
மௌனத்தின் நகரிலிருந்து வந்திருக்கின்றான்
ரத்தம் உண்டு சிவந்த வாளுடன்


கொலையாளிகளுக்கும் கொலைக்கருவிகளுக்குமிடையே
மர்மம் நீண்டுக்கிடக்கையில்
பந்தயம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்
யாருடைய சாவு?
அடுத்த முறை யாருடையது?
அந்தப் பந்தயம் இக்கணத்தில் என்மீது


ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...
யாருடைய முத்திரைகளினால்
அதன் மூலைகள் மூடப்பட்டிருக்கிறதென்பதை
நான் கண்டேயாக வேண்டும்
அந்த ஆணைச்சுருளின் மீதிருக்கும் கையொப்பத்தை
நான் அறிந்து கொண்டேயாக வேண்டும்
ஆகையால் கொண்டு வாருங்கள் எனது மரண சாசனத்தை...

- faiz ahmed faiz

Monday, October 06, 2008

தொலைந்து போன சிந்துபாத்...

தொலைந்து போன சிந்துபாத்...







முழுகியதை மீட்டுவிடலாமென்றும்
தொலைத்த கடலைத் தொட்டுவிடலாமென்றும்
தேடியலையும் நம்பிக்கைகளிலும் பதற்றத்திலும்
சிந்துபாத்களின் தோளில் எப்பவும் ஒரு முடக்கிழவன்

அருகிலேயே கடல் கிடப்பதாக
பொய் சொன்ன கிழவன்
கடலோடு கப்பலொன்றும் கட்டித் தருவதாக
நம்பிக்கைகளைப் படரவிடுகிறான்
உச்சித்தலையிலிருந்து

பொய்யென்றோ மெய்யன்றோ பகுத்தறிய
கடல்புறத்து பழங்கிழவனின்
உடல் மொழிகள் கீழிறங்கி வருவதில்லை

முடுக்கிட இடுப்பிலுதைத்த கால்கள்
சிந்துபாத்தின் உடலொட்டியொன்றாகி அபகரித்தது
சிந்துபாத்தையும் அவனது கடலையும்

எல்லா திக்கும் சொல்லித் திரிகிறான்
பொய்க்கிழவன் தானே சிந்துபாத்தாக
மறந்துபோவதிலே இருத்தலடைபவர்களினிடையே
இப்பொழுது கடலுமில்லை சிந்துபாத்துமில்லை
அவனது லைலா அடைக்கப்பட்ட பெட்டியுமில்லை

எல்லோரும் இப்பொழுதும்
கன்னித்தீவு வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
சிந்துபாத்தின் மீதான தீராத வெறுப்புடன்.

Friday, October 03, 2008

நேசமிகு மரணம்

நேசமிகு மரணம்
*****



எனக்கு அவசரதேவையாக
ஒரு கோப்பை நீரும்
ஒரு சிட்டிகை நச்சுப்பொடியும்
மேலும்
விஷக்குவளையை உதடுகளில் பொருத்தவும்
நானில்லாத என்னுடலை
படுக்கையில் கிடத்தவும்
துணையாக ஒரு மனித உயிர்.


நீங்கள் தயாராகும் முன்
சற்று தெரிந்து கொள்ளுங்கள்


என்ன செய்து கொள்ள வேண்டுமென்ற
தீர்மானமான முடிவை எட்டிவிட்டாலும்
வினைமுடிக்கவியலா முடக்கத்தினுள்
தாவரமாய் துவண்டு கிடக்கின்ற என்னை
நானே காலியாக்கிக் கொள்ளும் முடிவிற்கு
உங்களால் எளிதாக உதவிட முடியாது
கொலையாளியெனும் பட்டமேற்காமல்


என்னைக் கொலை செய்வதன் மூலமே
உங்களால் நிரூபிக்க இயலும்
என் மீது உங்களுக்கெந்த அதிகாரமுமில்லையென்பதையும்
நீங்கள் என்னை நேசித்தீர்கள் என்பதையும்
****






Voluntary euthanasia: When the person who is killed has requested to
be killed.


துயரமும் அவலமும் ததும்பும் நாட்களை அசையவியலா ஓருயிர் தாவரமாய் படுக்கையிலோ, நகரும் நாற்காலியிலோ கழிக்கும் விரக்தியில் - இந்த உடலை விட்டு விலகிப் போவதன் மூலம் தனக்கும் தன்நேசத்திற்குரியவர்களுக்க்கும் நிரந்தரமான தீர்வைத் தேடி எடுக்கும் முடிவு தான் தன்னழிப்பு. மரணத்தின் மூலமே நேசத்தைத் தக்க வைத்துக் கொள்ளவியலும் என்பதே ஒரு முரண் தான்.


சில நாடுகள் இதை சட்டபூர்வமானதாக அறிவித்திருந்தாலும், இங்கு வந்து இறந்து போனவர்களின் துணை சொந்த நாடு திரும்பும் பொழுது கைது செய்யப்படலாம்.


இதை விவாதமாகக் கொண்டு, the sea inside என்ற ஸ்பானிஷ் திரைப்படம் ஒன்று
வந்திருக்கிறது.


சமீபத்தில், இங்கிலாந்தில் இது சம்பந்தமாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் விபரங்கள் –


Debbie Purdy என்ற பெண், தன் நோயின் தன்மையால் மேலும் வாழ்வது அர்த்தமற்றதென முடிவு செய்து செத்துப் போவதற்கு முடிவு செய்தார். ஆனால், அவரால் பிறர் உதவியின்றி, எதுவும் செய்து கொள்ள இயலாது. மேலும் இங்கிலாந்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை. அவர் ஸ்விட்சர்லாந்து செல்ல வேண்டும். அங்கு சென்று தன் சாவிற்கு தன் கணவர் சட்டத்திற்குட்பட்டு, எத்தனை தூரம் உதவ முடியுமென்று தெரிந்து கொள்ள
விரும்புவதாக நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார். (Gulfnews, 3/10/08)


அதுவே இங்கு கவிதையாக....

Sunday, June 08, 2008

இல்லாது போனவற்றின் வலி

இல்லாது போனவற்றின் வலி.





ஊர்ந்து உரசும் மூச்சொலி
மெல்லக் கீறுகிறது செவிப்பறையின் சவ்வுகளை

அசைவுறும் மௌனத்தின் அடிக்கால்களனைத்தும்
நீந்திப் பாய்கிறது தேடுபுலன்கள்
மையப்புள்ளியின் ஆதாரத்தில் சுழலும் விசைபோல

ஒவ்வொரு நிழலின் முதுகுப்புறத்தினின்றும்
செவியில் விழுமொரு நிசப்தம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

செவியின் தவிப்பில் விழியிலேறிப் பயணிக்கிறது
உடலெங்குமொரு பிடிபடாதவொரு அசௌகரியம்

ஒன்றாகிக் கிடந்த புறவெளியின் கோலமொன்றிலிருந்து
ஒரு கணம் விலகியெழுந்து விரைத்துயர்ந்து
இமையா விழி வீசிய அரவத்தின் பிரம்மாண்டம் கண்டதன்
அநிச்சையான விலகலின் போது
வதையுண்டு அடங்கிக் கொண்டிருந்தது ஒரு உயிர்

ஒரு கணசெலவில் காலத்தினுள் தேய்ந்து போன
உயிர் வதையறிந்த படபடப்படங்கி
பொத்தென்று விழுந்து நிமிர்ந்த அந்த அற்பப் பறவை
அணைத்துக் கிடந்தது மீதமிருந்த வாழ்க்கையை
இல்லாது போனதையெண்ணி வலியுறும் வகையறியாது

Friday, April 11, 2008

நண்பர்களுக்கு ஓர் அழைப்பு - நண்பனிடமிருந்து....

அனைத்து நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு...

துபாயில் வருகிற 18ந்தேதி அன்று, எனது, மற்றும் முத்துகுமரன் புத்தக வெளியீட்டு விழா, கவிஞர் இன்குலாப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ கீழே உள்ளது:





அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...


அன்புடன்

நண்பன்

Sunday, February 03, 2008

முதல்வன்


முதல்வன்



கற்பிப்பவர் எழுதத் தொடங்கினார்
' 1, 2, 3......'
கரும்பலகை நிறைந்து
மரக்கால்களின் வழி கீழிறங்கி வழிகிறது -
'...51, 52, 53.....' என

விரிந்த அறை தாளாது
பெருகித் தாழ்வாரம் நிறைத்து
பசுந்தாவரங்களின் வேர்களில் பாய்கிறது
எண்ணும் வாய்ப்பாட்டும்

எண் ஓதும் ஒலியிலெழும் பெருந்தொகையெல்லாம்
தன்னைத் தொடர்கின்றதாய்
ஒன்றாமிடமென குறிக்கப்பட்ட முதல் எண்
முதலாக நிறபதன் பெருமையைப் பேசித்திரிந்தது
எண் இரண்டிடம்

எண் குறித்த பரிச்சியம் மேலும் பெருக
அருகிலிருந்து வானுயர கட்டிடத்தின்
தளங்களுக்கு எண் குறித்து
எண்ணிப் பழகச் சொன்னார் கற்பிப்பவர்.

புதுமகிழ்வுடன் ஒரு புது அனுபவமாய்
மேகங்களுக்கு முதுகு சொறியக் கிளம்பிய
கட்டிடத்தளங்களுக்கு எண்ணிட்டு
கூச்சலிடத் தொடங்கினர் குழந்தைகள்

' 1,2,3..'என

தொடங்கிய தளங்களின் எண்ணிக்கையில்
தரையைத் தொட்டு நசுங்கிக் கிடந்தது
ஒன்று தன் முதலிடத்தில்

வானை முட்டியெழும் சாதனைத் தளங்களில்
முதலிடங்கள் என்றும்
முதலில் நிற்பதில் மட்டுமே இருப்பதில்லை

Thursday, January 31, 2008

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்

உன் மரணம் நிகழும் ஒரு நாளில்
உனக்காக எப்படி துக்கிக்கிப்பதென்ற
ஒத்திகைகள்
எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன

ஏகத்துக்கும் நீருண்டு வயிறு புடைத்தப் பெருநதி
கரையறியாது தடம் மீறி பிரவாகிப்பதைப் போன்று
உன் நினைவுகளின் புறவடிவம்
என்னுள் மரணிக்கும் தினத்தின் துக்க ஒத்திகைகள்
பெருக்கெடுத்தோடிக் கொண்டேயிருக்கிறது

குமுறிப் பொங்கியெழுந்து வீழ்வேனோ
மீளவியலாத அருவியைப் போன்று?

உதடுகளைக் கடித்துக் கொண்டு
கனத்த மௌனத்துள்
என்னை அடை காப்பேனோ?

கறுப்புக் கண்ணாடியணிந்து
கலங்கிய ரத்தச் சிவப்புக் கண்களை
பிறர் பார்வையிலிருந்து மறைப்பேனோ?

எப்படி
என் துக்கங்களைக் கொண்டாடுவேனென்பதை
அந்த நிமிடத்தைய தீர்மானங்களாவிருக்கட்டும்

முதலில்
உன் மரணம் நிகழ்ந்தால்
எனக்கு அறிவிக்க ஏற்பாடொன்றைச் செய்து



வை!!!

Wednesday, January 30, 2008

இன்றைய தினம்



இன்றைய தினம்


துளித்துளியாய் ஒவ்வொரு அசைப்பிலும்
பெருவெளியின் துறத்தலில் கரைய
அவசரமற்ற நிதானத்தில்
தன்னைக் களைந்து கொண்டிருக்கிறது
அந்த ஒற்றை மரக்காடு

ஒவ்வொரு விடியலிலும்
நேற்றைய தின பெருவன உதிர்ப்பின்
எச்சங்களை அள்ளித் தீர்க்கும்
கவலைகள் பெருகிச் சேர்கிறது

அள்ளித் தீர்க்காத வேளையில்
சட்டை உரித்துப் போட்டுப் போகும்
பாம்பொன்று வந்து போகலாம்

ஈரப்பிசுபிசுப்பில்
அவிந்து மக்கும் கழிவிற்கிடையில்
ஆயிரங்கால் பூரான்களின் குடும்பத் தொகுதியொன்று
பல்கிப் பெருகத் தொடங்கலாம்

முகவரி தேடியலையும்
புதியவன் ஒருவனுக்கு
பாதைகள் விளங்காமல் போகலாம்

நேற்றைய இழப்புகளிலும்
நாளைய அச்சங்களிலும்
பார்க்கப்படாமலே கழிந்து போகின்றது
எல்லாம் களைந்து
திசைகளெங்கும் தன்னைக் கிடத்துகின்ற
மரத்தின் காய்ந்த அம்மணம்

Tuesday, January 29, 2008

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...


ஒரே வாரத்தில் இத்தனை அதிகமாக எழுதியதில்லை. எழுதினால் வாசிப்பதில்லை. வாசித்தால் எழுத நேரமில்லை என்று போய்க்கொண்டிருக்ககயில், வாசித்து வாசித்து எழுத வேண்டிய இந்த வாய்ப்பு மிக்க மகிழ்வாக இருந்தது என்பது உண்மை. எதிர்பாராத சில தொல்லைகள் குறுக்கிட்டன. மூன்று நாட்களாக மின்சாரமும், நீரும் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தனை எழுதியதே வியப்பாக இருக்கிறது. முன் கூட்டிய தயாரித்தல் ஏதுமின்றி தோன்றிய பொழுதும் வழக்கமுள்ள நான், இப்பொழுதும் அதையே பின்பற்றினேன். ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் தான், எதைப் பற்றி எழுதுவது என முடிவு செய்து கொண்டு, பின் அது குறித்த தேடுதலைத் தொடங்கினேன் என்பதும் உண்மை. அரசியல் குறித்தான பதிவுகள் மட்டுமே தொடர்ந்து நான் வாசித்து வந்தவை. மீதியெல்லாம், அந்த நேரத்தில் தோன்றியவை மட்டுமே.

விடை பெறும் முன், துபாய் பதிவர்களின் பதிவுகளைப் பற்றிய ஒரு இடுகையுடன் முடித்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆவல். இவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருக்கிறேன். சிலரை அடிக்கடி. மேலும் சிலருடன் இணைந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதுவும் உண்மை. தனித்தனி பார்வைகளுக்குக் கீழே படியுங்கள்:

ஜெஸீலா பெண்கள் போகப் பொருளா என்ன என்ற கட்டுரையின் ஆதங்கம் அவரது சிந்தனை போக்கைச் சொல்லும். கலகலப்பாகவும், தீவிரமாகவும் ஒரே சமயத்தில் எழுதப்பட்ட படைப்புகளின் சொந்தக்காரர். அவரைப் போலவே அவரது எழுத்துகளும் இனிமையாகப் புன்னகை பூக்கும்.

ஆசிப்
எல்லாவித பிரச்சினைகள் பற்றியும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வுடன், பிறர் மனம் புண்படாதபடி, தான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிடக்கூடிய லாகவம் மிக்க எழுத்துகளைக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், கவுஜைகள், பொதுப்பிரச்சினைகள் என்று எல்லாமுமாக அலசிக் கொண்டிருப்பவர். நடுநடுவே திரண்ட அனுபவம் கொண்ட தந்தையின் கட்டுரையும் கூட வரும். முளைவிடும் பையனின் திரைவிமர்சனம் ஒன்றும் வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறைகளாக ஒரே தளத்தில் எழுதுகிற வலைப்பூக்கள் இல்லை என்றே சொல்லலாம்.

முத்துகுமரன் ஆரம்பகாலக் காதல் கவிதைகளை இப்பொழுது சற்று மெருகேறிய நடையில் எழுதி வரும் நண்பர் - அறைத்தோழர். பெரியார் கருத்தியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெரியாரைப் பற்றிய புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறுகதைகள் எழுதினாலும், இன்னும் 'சொல்வதைத்' தவிர்த்து விட்டு, கதையை நிகழ்த்திக் காட்டுங்கள் என்று விமர்சிக்கும் அளவில் இருக்கிறது. இன்னும் மெருகேற காலமிருக்கிறது. சிறப்பான எழுத்துகளையும், சமூக சிந்தனைகளையும் முன்வைத்து இன்னும் சிறப்பாக எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இசாக் ஒரு நல்ல உழைப்பாளி. மிக அதிகமாக செய்யும் வேலையே காலத்தை உறிஞ்சிக் கொள்ள, மீதி கிடைக்கும் நேரங்களில், எவ்வாறு இத்தனை செயல்பட முடிகிறது என வியக்க வைப்பவர். கவிதைகள் எழுதும் இவர், தன் கவிதைகளில் பலவற்றைப் புத்தகங்களாக கொண்டு வந்திருப்பவர். சமீபத்திய சாதனை, குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டது தான். அண்ணன் அறிவுமதியுடன் நெருங்கிய தொடர்பிலும் இருப்பவர். அரசியல் ஈடுபாடுமுள்ளவர்.

கவிமதி
பெரியாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர். கவிதைகள் இவரது முக்கிய மொழி. கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளும் எழுதி அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரும் முயற்சிலும் இருக்கிறார்.

தம்பி பேரன்புகள் எப்பொழுதுமே கிடத்தப்பட்ட நீண்ட மௌனத்துள் சிக்குண்டு அலையும் என்பது எனது அனுமானம். ஏனென்றால் நான் அப்படித்தான் இருக்கிறேன். 'பேரன்பும், பேரன்பு மட்டுமே கொண்டவன்' என தம்பி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நேரிலே காணும் பொழுது மிக நீண்ட மௌனத்தின் சொந்தக் காரர். கொஞ்சம் அறிமுகம் ஆனதும் பேசுகிறார் தேவைக்கேற்ப. அவர் அழகாக, வாசித்து ஈடுபட வைக்கும் ஒரு நடையில் எழுதுவார் என்பதே தெரியாதிருந்தது. அப்பொழுது தான், ஆசிப் தம்பியைப் பற்றி எழுதிய ஒரு சிறுபதிவை படிக்க நேர்ந்தது. ஆசிப் தன் ஆசான் என்று தம்பி குறிப்பிடுகிறார். ஆசிப், தம்பியின் எழுத்துகள் வாசிப்பதற்கு அலாதியானவை; அரிதானவை என எழுதுகிறார். அதை வாசித்த நான் பதில் எழுதிவைத்தேன் - 'Indulging in mutual back scratching' என்று. ஆனால், பின்னர் தம்பியின் சிறுகதைகளைப் படித்த பின் தான் தெரிந்தது - அவருடைய எழுத்துகள் செறிவும், வளமையும், புனைவும் மிக்கது என்று. 'back scratching' என்று எழுதியதற்கு இதுவரையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை. வெறும் வார்த்தைகளால் சொன்னால் ஆகாது. சரியான சந்தர்ப்பத்தில், சரியான தளத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று காத்திருந்தேன். இது தான் சமயமென்று நினைக்கிறேன். - 'Asif & Thambi - My heartfelt apologies to you, both'

அய்யனார் எழுதுவதற்கு, தனக்கென ஒரு தனி நடை வைத்திருக்கும், அய்யனாரின் எழுத்துகளைப் பற்றிய அறிமுகமா? அனைவருக்கும் தெரியும் தானே? ஏற்கனவே அவரது பதிவுகளைப் பற்றிய ஒரு பார்வையை திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல் என்ற தலைப்பிலே எழுதிவிட்டேன். அதனால், அடுத்தவர்களைப் பற்றி...

குசும்பனின்
படிக்கலாம் வாங்க - போட்டோஷாப் உபயோகிப்பதைப் பற்றிச் சொல்லித் தருகிறார். அதிலும், கறுப்பு வண்ண படங்களை எப்படி வண்ணப் படமாக மாற்றுவது என்பது குறித்த அவரது பதிவு அருமை. எல்லோருக்கும் பயன்படும் வகையில் அமையும். அதிலும் குறிப்பாக புகைப்பட கலைஞர்களாக வலம் வர விரும்புபவர்களுக்கு, அல்லது புகைப்பட தொழில் செய்ய முனைவோருக்கு உதவிகரமாக அமையும். தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

சுல்தான் மிக மென்மையாகவும், அமைதியாகவும் இயங்குபவர். நகைச்சுவை உணர்வும் உடையவர். வாகன ஓட்டிகளைப் பற்றிய அவரது பதிவே அதற்குச் சான்று. என்றாலும், ஏதோ எண்ணிக் கொண்டு, வளைகுடா நாடு வந்து, பின்னர் வேறு எதுவாகவோ மாறிப் போகும் நண்பர்களைப் பற்றிய ஒரு கார்ட்டூன் அட்டகாசம். Just arrived என்பதில் தொடங்கி, இறுதியாக Got converted என்று முடித்திருக்கும் வரையிலும் அருமை என்றாலும், இறுதியாக converted to what? என்று எழுதாது ஒரு குறை தான். அதுபோல அவரது நாட்டுப்புறப் பாடல்கள், சிலேடை, என்ற இலக்கிய ஆர்வத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து தனது ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுவார் எழுத வேண்டுமென்று விரும்புகிறேன்.

கோபிநாத், அபிஅப்பா, சென்ஷி இவர்களைப் பற்றிய நேரிடையான அறிமுகம் இல்லை. வல்லிசிம்ஹன் அவர்கள் துபாய் வந்த பொழுது, பார்த்திருக்கிறேன். ஆனால், அதிகம் பேசியதாக நினைவில்லை. துபாய் பதிவர்கள் பற்றிய ஒரு இடுகை செய்யலாமென்று தோன்றிய பொழுது தான் இவர்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். சிநேகத்தை மட்டுமே பேசுவேன் என்று அடம் பிடிக்கும் எழுத்துகள் இவை. வெகு தீவிரமாக விவாதங்கள் புரிந்து, என்ன சாதித்தோமென்று எப்போதாவது சில சமயங்களில் ஒரு சலிப்புத் தோன்றும் பொழுது, இவர்களைப் போலவே, சிநேகம் மட்டுமே பேசி, மனதை எப்பொழுதும் இலகுவாக வைத்துக் கொண்டால் என்ன என்று தோன்றும். ஆனால், அத்தகைய பாதைக்குத் திரும்பவும் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.

பெனாத்தல் சுரேஷ் நகைச்சுவை தான் பிரதானமென்றாலும், அவ்வப்பொழுது விவாதத்தைக் கிளப்பும் பதிவுகளையும் இட்டு விடுகிறார். அப்படியான சமீபத்திய ஒரு பதிவு தான் இது. புது வருடத்தைக் கொண்டாடுபவர்கள் தான் இது குறித்து கவலை கொள்ள வேண்டும், நேற்றைய கவலைகளுக்காக நொந்து கொள்வது, நாளைய தினத்துக்காக அச்சம் கொள்வது என இன்றைய தினத்தை ரசிப்பதை இழந்து கொண்டிருப்பவர்கள் கூடி விவாதிக்க வேண்டிய ஒரு சமாச்சாரமிது - ஒரு வருடத்தின் முதல் நாள் குறித்த விவாதங்கள். அது போகட்டும் - அவ்வப்பொழுது அவர் எழுதும் நகைச்சுவைகள் - அதுபோலவே நேரிலும் அவரது நகைச்சுவை ததும்பும் பேச்சுகள் பிடிக்கும். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொலைபேசியில் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தும் சாமர்த்தியம் இல்லையென்பதால், பெரும்பாலும் தொலைபேசிகளைத் தவிர்த்து விடுகிறேன் - வாய்ப்புகள் கிடைத்தால் சந்திக்கலாம் நண்பரே.

லொடுக்கு கிரிக்கெட் பற்றி எழுதும் பொழுது கட்டாயம் வந்து பின்னூட்டமிட்டுச் செல்வார். அவருடைய ஆர்வம் கிரிக்கெட் நுணுக்கம் சார்ந்தது. என்னுடையது கிரிக்கெட்டின் அரசியல் பற்றியது. சென்னை ரசிகர்கள் பற்றி அவர் எழுதியது நிஜமாகவே நம்மைப் பெருமையடைய வைக்கும். என்றாலும் லொடுக்கு என்ற பெயர் ஏன்? அவரிடம் நான் கேட்கவில்லை. அவராக சொன்னால் சொல்லட்டுமே!

Monday, January 28, 2008

ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....

ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....

ஒரு தீவில் தனித்து விடப்படும் தனிமை கிடைத்தால் அதை எவ்வாறு கொண்டாடுவாய் என்று ஒரு கேள்வி கேட்கப்படுமென்றால், 'வாசித்து' கொண்டாடுவேன் என்று தான் சொல்வேன். வாசிப்பு என்பது அத்தனை வசீகரமானது. எதை வாசிக்கிறோம் என்பது வேறுபடலாம். ஆனால் வாசித்தல் தரும் இன்பம் அனைவருக்கும் பொதுவானவை. வெறுமனே வாசித்தல் என்பது ஒரு வகை என்றால், வாசிப்பைத் தந்தவர்களைப் பற்றிய அறிமுகங்களைத் தரும் வாசிப்பும் மிக அலாதியானது. சுவராஸ்யமானது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களையும் தீர்மானிக்கக் கூட, இந்த இலக்கியச் சண்டைகள் ஒருவகையில் உதவலாம்.

பல காலங்களாக, அரசியல் வாசிப்பில் திளைத்திருந்த பொழுதும், அவ்வப்பொழுது இலக்கியங்கள் பக்கமும் திரும்பும். சமீபத்தில், இலக்கியமும் அரசியலும் கலந்த ஒரு வாசிப்பைத் தேடிய பொழுது சிக்கியது தான் இந்த இலக்கியச் சண்டைகள் பற்றிய பதிவுகள். இந்த அரசியல் வழியாக அறியக் கிடைப்பது - ஒருவருக்கு மறுபக்கம் என்று ஒன்றும் உண்டு. ஒரு வழியாகவே பயணப்படும் நமது பார்வைகளை அந்த படைப்பாளியின் மறுபக்கத்தையும், அதன் போலித் தனங்களையும் சுட்டிக் காட்டும் பொழுது, இலக்கியம் படைப்பவர்கள் எப்படி அவர்களது படைப்பிற்கு எதிராகவும் இருக்கிறார்கள் - இயங்குகிறார்கள் என்ற புரிதலையும் தருகிறது. அது மட்டுமல்ல, ஒரு படைப்பின் நோக்கம், அதற்கான உன்னதம் - சொல்லப்பட்டவற்றிலிருந்தும் மாறுபாடும் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இலக்கியம் வாயிலாக தாங்கள் முன்வைக்கும் பார்வைகளின் பின்னால், உள்ளார்ந்த அர்த்தத்துடன், அவர்கள் பதிவு செய்யும் சுயவிருப்பு வெறுப்புகளையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த இலக்கிய சச்சரவுகள். அந்த வகையில், இலக்கியம் படிப்பதானால் கிடைக்கும் பார்வைகளைப் போன்றே, இலக்கியம் படைப்பவர்கள் நம்மிடையே இருந்து மறைக்க விரும்பும் பார்வைகள் வழியாகவும் நிறைய அறிந்து கொள்கிறோம். வாசிப்பு இன்பத்திற்காக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாலும், அந்த எழுத்துகளில் முற்றிலுமாக மயங்கி விடாமல், நம்மை மீட்டுக் கொள்ளவும், இந்த மறுபார்வைகள், விமர்சனங்கள் நம்மைத் தயார் செய்து வைக்கின்றன. இந்த வகையில், இலக்கிய அரசியலும் சுவராசியமானது. அந்த அரசியல் பற்றிய ஒரு பதிவு Dispassionated DJவில்...

இலக்கிய அரசியல் பேச ஆரம்பித்தால், அதில் பீடங்களில் எழுந்தருளும் ஆளுமைகளைக் கண்டு கொள்ளாமல் போக முடியாது. சமீப காலங்களில் தமிழகத்தில், இலக்கிய பீடமொன்று அமைக்கப்பட்டு வருகிறது - அதில் ஏற்றி வைக்கப்படாத பாடு படுகிறார்கள் - சுரா என்ற மனிதரை. இது குறித்த நகைச்சுவை கலந்த பதிவு ஒன்றைப் படியுங்கள், சுகுணா திவாகர் எழுதிய இந்தப் பதிவில்... எப்பொழுதுமே, ஒரு மனிதனை, அவனது தகுதிக்கும் மீறிய ஒரு புனித பிம்பமாக அறிவிக்கப்படாத கடவுளாக மாற்ற முனையும் பொழுது தான், அந்த ஆளுமையின் மறுபக்கம் குறித்தும் செய்திகள் வருகின்றன. அந்த எழுத்தாளர்களை அப்படியே விட்டுவிட்டால் கூட, அவர்கள் தங்கள் சொந்த எழுத்துகளின் பலத்தால், ஒரு காலத்தில் நிஜமாகவே எழுந்து நின்று விடக் கூடும் தான். ஆனால், பாவம், இவர்கள் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முனையும் பொழுது தான், முட்டுக் கம்பை எவராவது பறித்து விடுகின்றனர். பின் என்ன, வெறுமனே ஒரு வடிவத்தைத் தாங்கி நின்று செயலிழந்து கிடப்பதை விட, ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு தனது ஆடுகளிடையே ஒர் கட்டுப்பாட்டை உருவாக்கப் பயன்படுமென்றால், அதல்லவா, முக்கியமான பயன்பாடு அந்த முட்டுக் கம்பிற்கு!

இலக்கியச் சண்டைகள், சில சமயம் இலக்கிய வட்டத்தையும் தாண்டிப் போய்விடும். வேறு எல்லைகளுக்குள்ளும் நுழைந்து, விமர்சகர், விமர்சிக்கப்பட்டவர் என்ற இருவரையும் பற்றிய பல பரிமாணங்களையும் எடுத்து வைக்கும். அதுவே, போதுமானதாக இருக்கும் - அந்த இருவரைப் பற்றியும் அறியவும். மிக கவனமாக, ஒரு ஆளுமையைத் தனக்காகக் கட்டிக் காத்து வருகையிலே, தன்னையுமறியாமல எங்காவது ஓரிடத்தில், தன் அடையாளத்தை வெளிப்படுத்தி விடக்கூடும் இந்த சச்சரவுகள். பின் தான் கட்டியெழுப்பிய கடந்த கால பிம்பங்களைத் தூக்கிக் காட்டி என்னையா இப்படி சொல்கிறீர்கள் என்பது தொட்டு, தான் விமர்சித்தவர், எப்படிப்பட்டவர் பார் - அவர் செயல்பாடுகள் எத்தனை தவறானவை என்பது வரை பேச ஆரம்பித்து விடுவோம். ஆனால், விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ஒரு செயலை மறந்து விட்டு, அந்த செயலின் உரிமையாளரின் பிற செயல்களின் நியாய அநியாயங்கள் முன்னுக்கு வந்து விடும். என்றாலும், பெரும்பாலானவர்கள் ஒரு நிலை எடுக்க, அதற்கு முற்றிலும் மாறான ஒரு நிலை எடுத்து, அங்கிருந்து தன் நியாய வாதங்களை பதட்டமின்றி, அடுத்தவர் மீதான குற்றச்சாட்டாக இல்லாமல், ஒரு சிறந்த விளக்கமாக முன் வைக்கும் இந்த சற்று காலம் முன்னே நடந்தேறிய கலைஞர் - ஞாநி சண்டை பற்றிய இந்தப் பதிவைப் படியுங்கள். செல்வநாயகியின் இலக்கிய வாதிகள் குறித்த அரசியல் என்ற வகையில் தான் இந்த சுட்டி. செல்வநாயகியின் இந்தச் சுட்டி சிறப்பான எழுத்துகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டவில்லை. ஞாநி - கலைஞருக்கு மட்டுமே அறிவுரை கூறினார். அவர் தன் அறிவுரையை இன்னும் ஓர் பரந்த தளத்தில் வாஜ்பேய், அத்வானி, பால் தாக்கரே, தொடரும் மரபான வயது கடந்த இந்திய முதல் குடிமகன்கள், என்று இந்தியாவில் அதிகார மேடையேறும் ஆசையுடன் கூடிய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொதுவான ஒரு அறிவுரையாக அவர் பேசி இருக்க வேண்டும். ஆனால், கலைஞர் ஒருவர் மட்டுமே வயது கடந்த பின்னும் அதிகாரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று ஞாநி எண்ணியதில் தான் அனைவரும் அவரது சட்டைக்குள் நெளியும் பூணூலைக் கண்டு கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். வெறுமனே சுஜாதாவைச் சாடியதால், அவர் சமயச் சார்பற்றவர் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான நேசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இப்படி எழுதினார், அப்படி எழுதினார் என்பதில் வாழ்க்கை இல்லை. வாழ்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது. வாழும் பொழுது பேசும் பேச்சுக்கும், பிறரைப் பிரமிக்க வைக்க - தனது புலமையை பிறருக்குக் காட்சிப்படுத்த, எழுத்து தரும் போதை என்று ஒருவர் எழுதுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். பெரும் இலக்கியகர்த்தாக்களில் பலர் தங்கள் எழுத்துகளை எங்கோ ஒரு தளத்தில் வைத்து விட்டு, அதற்கு முற்றிலும் மாறான வாழ்க்கையில் இயங்கத் தான் செய்கின்றனர். ஒருவர் பிரமாதமாக எழுதி விட்டதினாலே, அவர் அப்படியாக்கும் என்று முடிவு கட்டி விட வேண்டியதில்லை.

இந்த இலக்கிய சச்சரவுகள் எல்லாம் ஒரு சிறுதுளியாக ஒரு அறிமுகம் மாத்திரமே - ஒரு மனிதனை விளங்கிக்கொள்வது அவனது இலக்கியத்தில் பாதியைப் புரிந்து கொள்வதாகும். அடுத்த முறை, ஒரு புத்தகம் வாங்கும் பொழுது, அதன் ஆசிரியனையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வாங்குங்கள். அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள, கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் - நிறைய இலக்கிய சண்டைகள் நடக்கின்றன. தெரியவரும்.

தயவு செய்து முதுகு சொறியும் அறிமுகங்களை விட்டு விலகி நின்று கவனியுங்கள்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்