"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, January 15, 2006

மீட்டெடுக்கக் காத்திருத்தல்....

வீழ்ந்துவிட்ட தங்கள் நிழலை
மீட்டெடுத்து கடைத்தேற்றும் முனைப்பில்
பிணந்தின்னிப் பறவைகள் தலைசாய்த்து
தன் இறக்கையின் ஈறும் பேனும் உண்டு
விழும் பிணம் தூக்க காத்திருக்கின்றன.

ஆளரவமற்ற நாட்களின் உரிமையோடு
பறந்து திரிந்த ஆகாயத்தில்
இன்று அச்சமூட்டும் இடிமுழக்கங்களும்
கண்ணொளி பறிக்கும் மின்னொளிகளும்
நிற்கவொட்டாது விரட்டியடிக்கின்றன.

தங்கள் கழிவுகளால் நாற்றமடிக்கும்
இருண்ட குகைகளிலும்
செங்குத்துப் பாறைச்சரிவுகளிலும்
ஒளிந்து ஒளிந்து நோட்டமிடுகின்றன
இடியொலியெழுப்புபவனும்
மின்கதிர் வீசி எரிதழல் மூட்டுபவனும்
மறைந்தொழிந்தார்களாவென
மகோன்னதமிக்க மந்திரங்களைப் பேசி
மடக்கிடலாம் மந்தைமந்தையாய் மனிதனையென
காலம் பார்த்து காத்துக் கிடக்கின்றன

விரிந்த வானம் விலக்கி இருள்குகை புகுந்ததால்
நிழலிழந்தோமென்றறிதலில்லாமல்
விழிப்புற்றவனைக் கண்டஞ்சி
வீழ்ச்சிக்காய்க் காத்திருக்கின்றன
கண்காணாத முகடுகளில் காய்ச்சலோடு

மனிதன் மட்டுமென்னவோ
இன்னமும் தன்மீது ஆதிக்கம் புரியும் நிழலொன்று
தன்னையறியாமலே படிகிறதென்ற பதட்டத்தில்
பக்கத்து வீட்டு மனிதனை
கண்காணித்துக் கொண்டிருக்கிறான்
மரணம் தொட நீளும் ஒரு கலவரத்திற்காக.

Thursday, January 12, 2006

வாழ்க்கை இனிப்பாகத்தான் இருக்கிறது.

பிறந்த நாளன்று, பெங்களூரில் இருக்கும் மனைவி, மகன், மகளுக்கு ஒரு இனிய கடிதம். என் பெயரைப் பார்த்ததுமே நெகட்டீவ் ஓட்டு குத்தணும்னு கை நமநமக்கிறவங்கல்லாம் கொஞ்சம் பொறுமை காத்து அடுத்த பதிவில் போடுங்க. ரைட்?

****




அன்பின்
அன்பான மனைவியே
இரண்டாவதாகப் பிரிந்ததும் தான்
உணர்கிறேன்
உன்னை எத்தனை தூரம்
காதலிக்கிறேனென்று.

முதல் பிரிவின்
வலியைத் துடைக்க வந்து
வலி கூடிப்போய்த் திரும்பினேன்.

உன்னை மீண்டும் பார்க்க
இன்னும் வெகுதொலைவு
நடக்க வேண்டுமென்ற புரிதலில்
கூடிப்போன வலியை
சுமந்து திரிகிறேன்.

பிரிவின் நடுவேயும்
வாழ்ந்த ஒருமாத வாழ்க்கை
இன்றும் பசுமையாய் இருக்கிறது
கடலில் மிதக்கும்
ஒரு குட்டித் தீவைப் போல.

நீயும் நானுமாய்
தனித்திருக்குமிடத்தில்
பாலையும் பசுமையாயிருக்கும்.

இங்கெல்லாம்
எனக்குப் பசுமையாய்த்
தானிருக்கிறது.
உனக்கென
நான் விரித்து வைத்த
வானத்தில்
தன்னந்தனியாய்
உன் நினைவுகள்
பறந்து கொண்டேயிருப்பதால்

இன்னும் ஒரு வருடம் வாழ
போதுமான வாழ்க்கையை
எடுத்து வந்திருக்கிறேன்
மனதின்
ஏதோ ஒரு மூலையில்
மறைத்து வைத்து.

யாரும் அறியாத சமயத்திலே
நான் மீண்டும் வாழ்வேன் -
மனதின்
மறைவிடங்களின் தனிமையில்.

உன் மூச்சுக் காற்று
என் நுரையீரலில்
மோதப்போவதில்லை தான்.

நடுநிசிக் குளிரில்
இருளைத் துழாவி
உன் போர்வைக்குள்
வந்துவிட முடியாது தான்.

எந்த ஒரு கைப்பக்குவமும்
உன் சமையலின்
சுவையைத்
தந்துவிட முடியாது தான்.

என்றாலும்
இந்த நினைவுகளாலும்
தரமுடிந்தது ஒன்றுண்டு -
இத்தனை
வருடங்கள் கழித்தும்
நம்மிடையே காதல்
பூத்த தினத்தின் மலர்ச்சியோடு
இருக்கிறதென்ற உணர்வு தான்.

நடுநடுவே
வந்து போன சண்டைகளில்
காதல் தொலைந்து போனதாக
வந்த நினைப்புகள்
ஆவியாகிப் போனதே
இந்த பிரிவின் பரிசானது.


சிறுவனாய்
நான் விட்டு வந்த
நம் மகன்
இன்று
உனக்கு நண்பனாய்
வளர்ந்து விட்டது
ரசிப்பதாயிருக்கிறது.

அழாமலிருப்பேனென்று
அழுது கொண்டே
சொன்ன மகள்
தன்னைத் தானே
கவனித்துக் கொள்ளும்
ஆளாகி விட்டதை
அருகேயிருந்து
பார்த்து வியக்கவியலாத துயரம்
வற்றா நதியாய்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

நானில்லாத வாழ்க்கையை
வாழக்கற்றுக் கொண்ட
உங்கள் வாழ்வில்
உள்ளே நுழையாது
விலகி நின்று பார்த்தால்
வாழ்க்கை
இனிப்பாகத்தான் இருக்கிறது

Wednesday, January 11, 2006

BOSLAN

போஸ்லான்


முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்

முன்னம்
பக்கத்து நாடுகள் விழுங்கி
யூனியன் ஆகி
சமத்துவம் வளர்த்தது.

ரொட்டித் துண்டுகளின்
வினியோக வரிசையில்
உணவிற்கு உரிமைகள்
பண்டபரிமாற்றம்.

உண்ணத் திறக்கும்
வாயைக்கூட
அளந்தே திறக்க வேண்டும்.
ரகசிய உளவாளிகள்
நாடெங்குமுண்டு.

மீறித்திமிறும் குரல்கள்
சைபீரியப் பனிப்பாலையில்
உறைய வைக்கபடும்.

தேவாலய மணிக்கூண்டுகள்
ஊனமானது.
மசூதியின் அழைப்போசை
ஊமையானது.

அடக்கி ஒடுக்கப்பட்ட
நம்பிக்கைகள்
ஆங்கோர் அக்னிக்குஞ்சாய்
மனத்திடை மறைந்து கனன்றது.

வேடிக்கை காட்சிகள்
விண்ணிலும், மண்ணிலும்
தொடர்ந்தன.
நிலவைத் தொட்ட
ஆசையடங்குமுன்னே
ஆஃப்கன் அணங்குகளின் மீதும்
செங்கரம் நீண்டது.

பிணம் தின்னும் கழுகுகளும்
களம் புகுந்தது -
பனிப்போரின் ஆடுகளமாக
ஆஃப்கன் ஆகிப்போனது.

முரட்டுப் பத்தான்கள்
முஜாஹிதீன்கள் ஆனார்கள்
முனைந்து நடத்திய யுத்தத்தில்
மூக்குடைபட்டுப் போனது
வல்லரசுவும்

ஆயுதம், மனோதிடம் -
எந்த நாட்டையும்
உலுக்கிவிடலாம்
ஆஃப்கனில் உருவானது

வளர்த்த இரு நாடுகளும்
கூவிக்கூவி அழைக்கின்றன
அனைத்து நாடுகளையும் -
அடக்கி விடுவோம்
தீவிரவாதத்தை.

வினையின் எதிர்வினை
என்றறியாமலே
மக்கள் போராட்டங்கள்
தீவிரவாதமாயின.

சிறு குழுக்கள்
குண்டு போட்டால்
தீவிரவாதம்
பெரும் நாடுகள்
மனிதனை அம்மணமாக்கினால்
விசாரணை யுக்தி.

பயங்கரவாதமடக்க
சேனைகள் தேடித்துழாவின
கன்னிகளின் கர்ப்பக் குழிகளை.

வீசிய குண்டுகளில்
மலர்களின் மகரந்தம்
சாம்பல் துகள்களாக -
மலராத மொட்டுகளில்
புதைக்கப்பட்டது
ஆணவ விந்தணுக்கள்.

யுத்தத்தில் கொடியது -
எதிரியின்
பண்பாட்டு சின்னங்களை
சிதைத்து விடும் சிறுமை -
எத்தனை உயரம் போனாலும்
யுத்ததந்திரம் மட்டும்
ஆதிகால வாசனையைத்தான்
முகரும்.

பண்பாட்டுச் சின்னங்கள் -
வணங்கும் தலங்கள்
இசைக்கும் இசை
உண்ணும் உணவு
நாற்றங்காலில் பயிராகும்
குழந்தைகள் -
இத்துடன் பெண்ணின் பெருமிதம்

கட்டுக்கோப்பான சீருடைகள்
எதிரியின் பெண்களை
ருசிக்கையிலே
குருடாகிப் போன அரசுகள்
பாண்டவர் காலம் தொட்டு
இராக் வரையிலுமுண்டு

‘யுத்தங்களை எடுத்துச் செல்
எதிரியின் மண்ணிற்கு -
நம் பெண்கள்
நம் குழந்தைகள்
நம் வீடுகள்
அழியாதிருக்க...’

அவரவர் நியாயம்
அவரவர்க்கு...

‘ஒரு கன்னத்தில் அடித்தால்
இரு மடங்கு பலத்துடன்
மறுகன்னத்தில் அடித்து விடு’
தீவிர வாதிகள்
புதுவேதம் ஓதினார்கள்.

புதுவேதம் புரியாதவர்கள்
எதிர்வினைக்கு தொடர்வினையாக,
மயக்க மருந்துகளின் வலுவில்
மறந்து விட்டனர் -
சமரசம்
பேசுவதெப்படியென்பதை!

குரல்வளையைத் திருகியே
பழகிய தலைமை
புஜ வலிமைக் காட்டியே
காரியம் சாதிக்க நினைக்கிறது.

யார், எவரையும் விட
பாடம் கற்பதில்
உருமாறிக் கொள்வதில்
புது இடத்திற்கு
இணங்கிப் போவதில்
தீவிரவாதிகளின் வேகம்
வியப்பானது

வேகத்தைக் கணிக்க
அரசு எந்திரத்திடம்
மனம் இல்லை -
மனிதம் இல்லை.

அன்று
நீ என்னையடித்தாய் -
இன்று
நானுன்னை அடித்துவிட்டேன்
தொடரும் தீவிரவாதம்
அரசு அமைப்பிலிருந்தும்
போராடும் குழுக்களிலிருந்தும்

யுத்தவாதிகளே...!
எதை வேண்டுமானாலும்
அழியுங்கள் -
எத்தனை முறை வேண்டுமானாலும்
அழியுங்கள்
அல்லது
அழிந்தொழியுங்கள்


யுத்தங்களை மட்டும்
உங்களையொத்த
வயதுடைய வீரர்களோடு
நிறுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் யுத்தம்
குழந்தைகளோடும்
குழந்தைகள் துயிலும்
கர்ப்பப் பைகளோடும்
மட்டும் வேண்டாம்

Sunday, January 01, 2006

நான் வெற்றி பெற்றவன்

என் திரிதலெல்லாம்
என் தேடுதலெல்லாம்
முயற்சித்தோமென்ற சந்தோசமன்றி
வேறொன்றும் தருவதில்லை

எல்லோரிடமும்
நான் சொல்லிக்கொள்வதெல்லாம்
நான் வெற்றி பெற்றவன்

அனைவரும்
என்னைக் கேட்பதென்னவோ -
வெற்றியை
எப்பொழுது பார்த்தாயென்று?

வெற்றியை
யார் தான் சந்தித்தது?

எத்தனை
எவரெஸ்ட்களை ஏறினாலும்
என்னுடைய
எவரெஸ்ட் மட்டும்
வளர்ந்து கொண்டே போகிறது...

உச்சியை அடையாதது
தோல்வியல்ல -
ஏறாதிருப்பது தான் தோல்வி.

இன்னதுதான் தோல்வியென்று
கண்டுகொண்ட அன்று
என் வெற்றியைச் சந்திப்பேன்.

எல்லோரிடமும்

சொல்லிக்கொள்வதெல்லாம்
நான் வெற்றி பெற்றவன்

மறுப்பதற்கு எவருமில்லை
நான் வெற்றி பெற்றவன்

***
கவிதை வாசித்த அன்பு நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

வெற்றி தோல்வி என்பது ஒரு Relative measurement தான்.

ஒப்பிட்டு அளக்கப்படும் செயல்பாடுகள்.

ஒப்பீடுகளை உதறித் தள்ளுங்கள்.

நீங்கள் உறுதியாக நம்புபவற்றை செயல்படுத்துங்கள் - பேசுங்கள்.


அது தான் வெற்றி.

உங்களைத் தூற்றுபவர்களைக் கண்டு ஆவேசம் கொண்டால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் அவர்கள் சீண்டுவது உங்கள் நம்பிக்கையை - தன்னம்பிக்கையை.

மீண்டும் வாழ்த்துகள்.

அன்புடன் நண்பன்.

Sunday, December 25, 2005

ஒரு பிரார்த்தனை.

இன்று உலகில்
எந்த ஒரு மூலையிலும்
குண்டுகள் வெடிக்காதிருக்கட்டும்

எந்த ஒரு நதியும்
எந்த ஒரு மூலையிலும்
கரை மீறாதிருக்கட்டும்

எந்த ஒரு எரிமலையும்
எந்த ஒரு மூலையிலும்
பொங்கிக் குமுறாதிருக்கட்டும்

எந்த ஒரு கடலும்
எந்த ஒரு மூலையிலும்
உயிர்களை விழுங்காதிருக்கட்டும்

எந்த ஒரு இடியும்
எந்த ஒரு மூலையிலும்
எவர் தலையிலாவது விழாதிருக்கட்டும்

எனது இறைவனே !!!
உன்னால் கொடுக்க முடிந்தது
அனைத்தையும்
கொடுத்து விடு -
கேட்டது மட்டுமின்றி
கேட்காமல் விட்டதையும் தான்

இத்துடன்
எனது பிரார்த்தனைகள்
முடிந்து விட்டன -
நேரமின்மையால்

எந்த நிமிடத்திலும்
அழைப்பு வரலாம்
பதுங்கு குழி விட்டேகி
எதிரியின் மண்ணில்
எறிந்தே ஆகவேண்டும் குண்டுகளை -
தலைமை ஆணையிடலாம்.

இன்று
நான் எறியப் போகும்
இந்தக் குண்டுகளில்
எந்த ஒரு குழந்தையும்
சிக்காதிருக்கட்டும்.

இல்லையென்றால்
காக்கும் சக்தி இருப்பதாக
எண்ணிக் கொண்டு
இத்தனை நேரம் இறைஞ்சிய
என் பிரார்த்தனைகளை
என் குண்டுகளில் மடிந்துவிழும்
குழந்தைகளின் காலடியில்
சமர்ப்பித்துவிடும் -
சுவர்க்கத்தில் காலடி
எடுத்து வைக்கும் அவர்களிடம்

Friday, December 16, 2005

கர்மா

தன் நிழலை
ஒட்டி வைத்தான்
தான் உண்டாக்கியதன் மேல்.

தன் தவற்றிற்கு
தன் நிழல்
தண்டனை அடைவது
அவனுக்குத் தெரியவில்லை.

இறந்த காலத்தின்
தவறுகள் படிந்த
நிகழ்காலத்தை
வாழ்வது
நிஜம்மான அவனின்
நிழல் மட்டுமே

செத்தவன்
கர்மம் தொலைக்க
சமயம் வாய்க்குமுன்னே
வந்திறங்கும் தண்டனை
காலத்தின் கைப்பிடியில்
குழந்தையாக அவன்

திடீர் தாக்குதல்
வலியில் திகைத்து
வலி வந்த
வகையைத் தேடுவானா?
வலித்த வேதனையை
அழுது தீர்ப்பானா?

Tuesday, December 13, 2005

முழுமையடைந்த வெறுமை....

ஒரு மாலைப் பொழுதில்
மெலிந்த நிழலை
வீழ்ந்த இலைகளுக்கிடையே
மரஉச்சியிலிருந்து
தூக்கியெறிந்தது
இலையுதிரும் காலம்

துக்கம் பாவிக்கும் நிழல்
துயருற்று கிடந்ததாங்கே
விதியை நொந்து

அப்பொழுது தான்
அவள் உள்நுழைந்தாள்
பரவசமூட்டும் புன்னகையை
எங்கெங்கும் படரவிட்டு

அடிவானம் தொட்டு உரசிய
மின்னல்களில்
அப்பழுக்கற்ற ஓவியமாய்

முதல் மழையின் மண்வாசனையை
உயிர்க்கொடியின்
ஒவ்வொரு திசுவிற்கும்
கறந்த பாலின் மணத்துடன்
விளம்பிக் கொண்டே
மனதினுள் பதிந்தாள்

படங்கள் நிரந்தரமாய்
சுவரில் தொங்குகிறது
ஒரு ஒழுங்கற்ற கோணத்தில்
என்னவோ மனம் மட்டும்
தேடுகிறது
அந்த மண்வாசனையை

மெல்ல மெல்ல தேய்ந்து
விலகிப் போகும்
மண்வாசனையை
மீண்டும் உயிர்ப்பிக்க
காலத்தால் மட்டுமே முடியும்
அதன் விருப்பம் போல

வீழ்ந்த நிழலின் பெருமூச்சு
விலகிக் கொள்கிறது.


(இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்க - http://sharepoetry.com/poem/show/4947

ஆங்கிலத்திலும் எழுதியது நானே. தமிழில் - வரிக்கு வரியான மொழி பெயர்ப்பு அல்ல.)

பின் நவீனத்துவம்

பின்நவீனத்துவம்...

வேற்று முகம்
பொருத்தப்படும்
பழைய முகத்திலென
அறிவிப்புடன் கடை போட்டான்
நவீன அறிவுஜீவி.

அலைமோதியது
அங்குமிங்கும் கூட்டம் -
புதுமுகம் தரித்து
முற்போக்கு வேஷம் போட்டாட.

புதுமுகம் பொருத்தி
வந்த மனுஷிகளெல்லாம் நடித்தனர் -
பலருடன்
பாதுகாப்பாய்ப் படுத்தல்
தங்களை தளைகளிலிருந்து
விடுவிப்பதாய்.

ஆண்களிடமிருந்து விடுபட
ஆண்களுடனே படுத்தெழுங்களென்ற
பின் நவீனத்துவம்
நாகரீகமாய்ப்பட்டது சிலருக்கு.

எங்கெங்கும்
அவர்களைப் பற்றியே
பேச்சாக இருந்தது.
புதிய புதிய மனுஷிகளால்
நிரம்பி வழிந்தது
நவீனத்துவ கடை.

புதுத்தொழிலாகிய
கட்டுடைத்தலின் பேரால்
கடந்தகால முகங்களை வீசி
பாவங்களைக் கழுவத் தொடங்கினர்
நடுவீதியில்.

ஒழுங்கமைவற்ற
கட்டுடைத்தல்களில்
விழுந்து போன
பழைய முகங்களைக்
குப்பைத் தொட்டியில்
போடச் சொன்னனர்
தெருவில் வாழும் மக்கள்
கொஞ்சம் அதட்டியே.

அடக்கப்படுவதாய்
கிளர்ந்தெழுந்த ஒப்பாரியில்
தொடர்ந்து கிழிகின்றது
ஒப்பனை முகங்கள்.

என்றாலும் அவர்கள்
என்னவோ பரிகசிக்கிறார்கள்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு
திரைச்சீலைகள் போட்டுப்
பாதுகாக்கப்பட்ட
படுக்கை அறைகளைப் பார்த்து -
பலருடன் பகிரப்படவில்லையென்று.

அறிவுஜீவி மட்டும்
யோசித்துக் கொண்டிருக்கிறான்
இன்னொரு கடை
திறக்கலாமாவென்று.

Friday, November 11, 2005

சிறுவட்டம் தாண்டி

குண்டுச்சட்டியில்
குதிரை ஓட்டிக் களைத்து வீழ்ந்த
நண்பர்கள்
விழிகளை வீசித் தேடினர்
சக குண்டு சட்டிகளை

குண்டுச்சட்டி சிறுவட்டம் வழி
வான்துண்டொன்று எட்டிப்பார்த்தது
மல்லாந்து கிடந்த நண்பர்களை

விண்வெளியின் விரிவே
ஒரு துண்டு வட்டமென்ற புரிதலில்
வாழ்வின் இன்பங்களைத் தேடி
வட்டமடி தொழிலில்
மீண்டும்
குதிரைகள் மீதேறி வலம்

முகமறியா ராசகுமாரன் வருகை தவத்தில்
துதிபாடலுடன் ஒருவர் பின் ஒருவராக
குண்டுச்சட்டியின் விரிந்த வயிற்றில்
பழகிய வட்டப்பாதையின்
வரிசைக் கிரம சுற்றுதலில்
நண்பர்கள்

குண்டுச் சட்டி தொப்பையடியில்
குருதிப் பிதுக்கி வெளியேற்றும்
இந்திரியநாற்ற முகர்வில் முகஞ்சுளித்து
வலம் வந்த நண்பனுக்கு மட்டும்
வானம் தன் இருப்பை அறிவித்தது
சிறுவட்டமருகே வந்த பறவையொன்றினால்
குத்தித் தூக்கி வானில் மிதக்க வைத்து

வானின் விரிவுகளில்
பறவை சவாரி பிரும்மாண்டத்தில்
மீண்டுமொரு வட்டப்பாதை வாழ்க்கை
விரும்பா நண்பனோ
பறவையிடம் கூக்குரலிட்டான் -
சிறகுகள் தா
என்னைத் தூக்கிச் சுமக்காதே

தோளில் துளைத்த அலகில்
வலிக்க வலிக்க
பிய்ந்து தொங்கும் சதைகள்
வடிந்து உறையும் குருதியோட்டம்
உயிர் பிய்க்கும் பிரசவம்
தோள் கிழித்து வந்ததொரு உறுப்பு

கண்மூடி வலி தாங்கிக் கிடந்த மனம்
உலுப்பி விட்டது
பற பற
இறக்கை வீசி வீசி
பற பற

விட்டுப் போன இடத்திலிருந்து பற
பிறந்ததன் பொருளறிந்து பற

பற பற
இறக்கை வீசி வீசி
பற பற

அடிவானம் தொட விரியும் இறக்கை
துருவங்கள் தொட நீளும் இறக்கை
பிரபஞ்ச வெடிப்பு தேடும் இறக்கை

வீசி வீசி
பற
வீசி வீசி
பற

புதிதாய் வந்த விடுதலை கொண்டு
பறந்து பறந்தே மரணம் வரை
பற

புவியீர்ப்பு விசைக்கு
உடல் பணியும் வரை
பற.

பறந்து திரியும் வாழ்வறியா
குண்டுசட்டி குதிரையோட்டிகள்
தலைவன் துதியோதி
அதே
வட்ட பாதையில்
அதே
வாழ்க்கையில்.

அறிந்திருக்கவில்லை
அந்த அவர்கள்
குண்டுசட்டியின் சிறுவட்டம் தாண்டி
விரிந்திருக்கும்
பிறிதொரு வாழ்தலின் உன்னதம்.

அவர்கள்

என்றும் போல்
என்றும் போல்
என்றும் போல்

மூடராய்.

Saturday, October 22, 2005

கணவன் !

மாலை சாயும் வேளையானால்

முகம் கழுவி

பவுடர் பூச வேண்டும்.

காடான கூந்தலை

பிடித்துக் கட்டி

ஒரு கொத்துபூக்களை

அணிய வேண்டும்.

புருவம் திருத்திய

நெற்றியில் குங்குமம்

துலங்க வேண்டும்.

பட்டாம்பூச்சியாக

வெட்டும் இமைகளின் அடியில்

மை தீட்ட வேண்டும்.

உதடுகளில் மட்டுமல்ல -

வெட்டிய கூர் நகங்களில் கூட

சாயம் தீட்ட வேண்டும்.

வியர்த்துப் போன அக்குளில்

கமகம நறுமண திவலைகள்

அடிக்க வேண்டும்.

எல்லாம் செய்து

மகாலட்சுமியாக போக வேண்டும்

படுக்கை அறைக்கு.

ஆங்கே காத்திருப்பான் -

வளையம் வளையமாக

ரசித்து விடும் புகைமண்டலத்தினுள்

நாற்றமெடுக்கும் வாயுடன் -

கணவன்.. .. .

Monday, October 17, 2005

தண்டனை....

தனியாக வந்த பொழுது
நீர் எமக்கு அனுசரணையாயிருந்தீர்
பசி தாகமென்ற தவிப்புகளை
அமைதி கொள்ளச் செய்தீர்
பின் வழிகாட்டியாய்
சிந்தனைகளுக்கு
வண்ணம் பூசும் ஓவியனாய்
பல்வேறு அவதாரமெடுத்தீர்
பல்வேறு தருணங்களில்.

மெல்ல மெல்ல கற்று தேர்ந்து
தனித்தியங்கும் தன்மையுற்றதும்
அறிந்து கொண்டோம் -
நீர் காட்டித்தந்த
வழித்தடங்கள் பலவும்
எங்கும் செல்லாதவையென்று.
நீர் சுற்றி வளைத்து
போட்டுத்தந்த பாதைகளனைத்திற்கும்
நேர்வழி கண்டுகொண்டோம் இன்று.

உன் பிரம்மாண்ட நிழலில்
இருண்மை அப்பிய மலர்த்துளிகளில்
இன்று சூரியம் வழிகிறது
வலிக்க வலிக்க சூல் கொள்கிறது
எம் கர்ப்ப மூளைகள்.
உம்மை கடும்விசாரணை செய்து
வீதியில் நிறுத்தி கேள்விகேட்க
எண்ணிய பொழுதிலே
நீர் விலகிக் கொண்டீர்
மிகைபீடங்களில் -
புன்னகைத்தமர்ந்து
கேள்விகளுக்கப்பாற்பட்ட ஓர் இறைத்தூதனாய்
எமக்கெட்டாத தூரத்தில்.

உம்மை
விசாரிப்பதோ
கேள்விகேட்பதோ
பண்பாடற்ற செயலியாய்
பதிவு செய்யப்படும்
வரலாற்றில்.

எம்மால் முடிந்த
எளிய தண்டனைவொன்றை செய்வோம்
உமக்கு
பீடங்களற்ற சிலையொன்றை வைப்போம்
மிக அதிகமாக மாசுபடும் வீதியொன்றில்.

Sunday, October 16, 2005

கதவுகள் திறக்கின்றன.......

முறிந்த சிறகு
தேவையற்று கிடக்கிறது
தெருவை வீட்டிற்கு சொல்லும்
திண்ணைகளொழிந்த வீதியில்.

பூட்டிய
கதவுகளின் தோரணை
தொடங்கியதன்று.

தன்னுள்
விரியக் காத்திருக்கும்
உள்வெளியை
இறுக்கிப் புழுக்குகிறது
சன்னல்.

புதிய மலர்வுகளின்
வாழ்துடிப்பை
ஏந்திவரும் காற்றை
வீதியில் நிறுத்துகிறது
குளிர்மி.

முன்னறிவிப்பில்லா
வருகைகள்
முற்றிலும் மறுக்கப்படும்.
தேவையான பதில்
கதவு சொல்லும்.
மேலதிக தகவலை
கதவிடுக்கு உள்வாங்கும்.

செய்திகள்
தொடர்புகள்
சித்திரங்கள்
நூலகங்கள்
எவற்றிற்கும்
கதவுகள் விரிவதில்லை
அவைகளுக்கென
தனித்தடங்களுண்டு
நிர்ணயிக்கப்பட்ட
கட்டணத்தில்.

ஒரு நாளின்
சொற்ப சமயம்
திறந்து மூடும்
பணிகள் நிமித்தம்
பள்ளி நிமித்தம்
சென்றுவர.

மற்றைய நேரத்தில்
விட்ட மூச்சையே
திரும்பப் பிடித்து
சுவாசித்துக் கிடக்கும்
இந்த
மௌன கதவு.

எப்பவும்
அடைந்தே கிடக்கும்
இந்த வீட்டுச் சிறை
சலித்து நகரும்
தெருப்பிச்சையின் அதிசயமாய்
கண்முன்னே விரிகிறது
பூட்டிக் கிடந்த கதவு.

வெளியேறுகிறான்
முறிந்து கிடந்த
சிறகு மாட்டி
காற்றில் மிதந்து செல்லும்
ஒருவன்.

Tuesday, September 27, 2005

இறப்பதினால் ஆய பயன்....

நண்பனே நாமிருவரும்
எப்பொழுதாவது
சந்தித்துக் கொண்டிருக்கிறோமா?

நமக்குள்
தீர்க்கவியலாத சிக்கல்கள்
ஏதுமுண்டா?

என்னை கொல்வதற்கு
உனக்கு
என்ன காரணங்கள் உண்டு?

உனக்கென நியாயங்களிருக்கலாம்.

உன் குழந்தைகள்
ஏதோ ஒரு வீதியுத்தத்தில்
என் நாட்டு குண்டுகளில்
வீழ்ந்திருக்கலாம்.

உன் மனைவியை
என் நாட்டின்
யாரோ ஒரு வீரன்
பாழ்பண்ணியிருக்கலாம்.

உன் அழகிய வீட்டின் சுவர்கள் மீது
கரி பூசியிருக்கலாம்
வெடித்துச் சிதறிய குண்டுகள்.

உன் இனிமையான தோழன்
ஒருவனின் கால்களை
என் நாட்டு டாங்கிகளேறி
சிதைத்திருக்கலாம்.

உன் எல்லாத் துயரங்களின்
அடையாளமாக என்னை
இருத்தி வைத்திருக்கிறாய்.

உன் கையிலுள்ள துப்பாக்கியில்
எத்தனை எதிர்பார்ப்புகள்
மரணிக்கப் போகின்றன தெரியுமா?

மகன் திரும்பப்பிரார்த்திக்கும்
ஒரு தாயின் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்துவிடும்

இரவில் குட்டிக் குட்டிக் கதைகள்
கேட்கக் காத்திருக்கும்
என் சிறு குழந்தைகள்
இனி ஒருபோதும்
தேவதைக் கதைகளை
கேட்கவே போவதில்லை.

இரவின் மௌனத்தில்
காதலின் மொழி பேசிய
என் மனைவியின் அன்பு
இனி உறைந்து போய்விடலாம்.

இதெல்லாம் எனது வருத்தமில்லை
நண்பனே.
என் பரிதாபத்தைப் படமெடுத்து
நான் சார்ந்த அனைத்தையும்
அவமானப்படுத்துகிறாயே
அதை மட்டும் நிறுத்திக் கொள்

சுட்டு விடு.
ஒரே குண்டில்
ஒரே துளைத்தலில்
நான் சாகும்படி சுட்டுவிடு.

நண்பனே
எந்தக் கணக்கானாலும்
என் மரணத்துடன்
நீ சமாதானமாகி விடு.
இல்லையெனில் என்ன பயனுனக்கு
நான் சாவதால்?

Thursday, September 22, 2005

என்னைத் தேடி

பல முகங்கள் தேடி
தன் முகம்
இழந்து விடுவேனோ
பயம் தான் விரட்டுகிறது

தன் முகம் தேடி
அவ்வப்போது அலைச்சல்

வைத்த இடத்தில்
கண்ட பழைய முகத்தில்
வைரத்தின் ஜொலிப்பு
கொஞ்சம் குறைந்ததாய்
அடிக்கடி ஒரு குடைச்சல்

சொந்த முகத்திற்கு
பட்டை தீட்ட
சில பழைய முகங்களும்
பல பக்க முகங்களும்
தேவைதான்

சொந்த முகம்
பட்டை தீட்டிய பின்னும்
நம் முகமாய் இருக்குமென்றால்

Monday, September 19, 2005

ஓர் இறைவனின் சோகம்

ஓர் இறைவனின் சோகம்.


இயற்கையேற்க
மறுக்கும் விளக்கத்தில்
சிக்கித் தவிக்கும்
பிறப்பு

இறையேற்க
மறுக்கும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
வாழ்க்கை

இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்

வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது
ஒரு அன்பான பெண்ணினுடைய
மற்றுமொரு
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில்.

புலம் பெயர்ந்த
கோப்பைகள்
நிழலுலகின்
இருண்ட வீதிகளில்
தொலைந்தே போய்விட்டது
நம்பிக்கையாளர்களின்
மீண்டும்
ஒரு தேடலுக்காக.

குறியீடுகளில்
புதைந்து போன
வரலாற்று மோசடிகளில்
அனைத்தையுமிழந்துவிட்டு
நான் மட்டுமே மிஞ்சினேன்
இறைவனாக உயர்த்தப்பட்டு

ஒரே வித்தியாசம்.

ஒரே வித்தியாசம்


அவளை விட
உயர்ந்தவள் தானென்று
நிறுவுவதில்
அதீத கவனம் கொள்கிறாய்.

பூவும் பொட்டும் வைப்பதும்
தாலி கட்டுவதும் கட்டாததும்
அதிக வித்தியாசப்படுத்துவதில்லை.

பணிகள் நிமித்தம்
தேவைகள் நிமித்தம்
எல்லாவிடத்தும் போய்வருவதில்
என்ன பெரிய வித்தியாசமிருக்கப் போகிறது?

ஒன்றில் மட்டும்
உன்னிடம் அவள் தோற்றுப்போவாள் -
பகட்டாகவும் படோடபமாகவும்
மணச்சடங்கு இல்லங்களில்
உனக்குக் கிடைக்கும் வரவேற்பு
அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை தான்.

என்றாலும் உனக்குத் தெரியுமா -
நீ அறியாத
வித்தியாசமொன்று உண்டு என்பதை.

பூசணிக்காயையும் எலிகளையும் கொண்டு
சிந்தெரல்லாவிற்கு
தேர் கொடுத்த தேவதையாக
வருடத்திற்கொரு மாதம்
புலம் பெயர்ந்த உன் புருஷனை
உனக்குத் தருவது போல்
அவளுக்குத் தராத
அந்த இறைவன் தான்
அந்த வித்தியாசமென்று?

Sunday, September 18, 2005

மௌனம் துற.....

மௌனம் துற....

உன் மௌனம் காண்பதற்கு
விலைமதிப்பற்றது தான்
என்னருகே நீயிருக்கையிலேயென்று
என்றோ ஒரு நாள் உன்னிடம்
சொன்னேனென்பதற்காக
இன்று கண்டங்கள் இடைவெளியில்
மீண்டொருமுறை தொலைபேசியில்
மௌனம் காட்டும் உன் முயற்சியை
விலைமதிப்பற்றதென்று
சொல்ல இயலவில்லை அன்பே!

மின்னல் வேகத்தில்
கம்பிகளுக்கிடையே நகர்ந்திடும்
துடிப்புகளில்
விலை நிர்ணயிக்கப்படுகிறது
உன் மௌனத்திற்கு.

ஆதலால் அன்பானவளே
மௌனம் துற
கண்டங்கள் இணையட்டும்.

நிழல்கள்.

நிழல்கள்.
***

1.

உன் தாவணி
பிடித்து
நீ தவிர்க்க நினைத்த
வெய்யில்
உன் கைகளை
மாலையாக்குகிறது
என் நிழலுக்கு....
***

2.
மாலை நேர
இருட்டை விரட்ட
சன்னல் கதவுகளைத் திறந்தேன்.
வெளிச்சமாக உள்ளே
நுழைந்தது
மாடியில் பாடம் படிக்கும்
உன் நிழல்.....
***

3.
நிழல்கள் மெலிந்து போனது -
இலையுதிர் காலத்தில்
மொட்டை மரம்.
***

4.
மழை ஓய்ந்த நேரத்து
வெய்யிலில்
சூடாக என் தேகம்.

எனக்கும் சேர்த்து
நடுங்குகிறது
ஓடும் நீரில்
என் நிழல்....
***

5.
எப்போதும்
என்னை ஒட்டிக் கொண்டிருக்கும்
நிழலே
நீ எங்கே தூங்குவாய்?
என் படுக்கையின் கீழா?
***

6.
என்னைப்
புதைக்க
இருளிலே
தூக்கிச் செல்லுங்கள்.
என் நிழலுக்குத்
தெரிய வேண்டாம்
இனி
ஒருபோதும் பிறப்பில்லை
அதற்கென்று.........
***

7.
விறகு கட்டைகள்
அடுக்கி
துணி போர்த்து
நீயும் நானும்
கட்டிய வீட்டின்
நிழல்
மொட்டை மாடியில்
இன்னமும் இருக்கிறது -
ஒதுங்க ஆள் இல்லாமல்.
***

8.
நீயும் நானும்
தட்டுத் தடுமாறி
ஒரு குடையினுள்
ஒட்டிக் கொள்ள
தடுமாறுகையில்
பிணக்கில்லாமல்
ஒன்றாகிப் போயிருந்தது
நம் நிழல்கள்.....
***

9.
முட்டாள் நிழலே!
எனக்கே இடமில்லாத
அவள் பிடிக்கும்
குடையினுள்
நீ ஏன் நுழைய
முயற்சிக்கிறாய்?
***

10.
எழுந்து நிற்கும்
ஒவ்வொரு பொருளோடும்
ஒட்டுதல்.

ஆன்மாவோடு
அலையும்
மனிதனை மட்டுமல்ல -
ஜடத்தையும் கூட
அண்டி நிற்றல்.

எஜமானனின்
அத்தனை பராக்கிரமத்துக்கும்
கொடுப்பது,
எல்லோருக்கும் போல
ஒரு புறகோட்டு வடிவம்.

ஒரு துண்டு வெளிச்சம் -
தீக்குச்சி முனை
அண்ட வெளியின்
அணு உமிழல்
ஒரு கீற்று வெளிச்சம் -
ஒரு துண்டு வெளிச்சம்
வழி மறிக்கும்
ஒரு வடிவம் போதும் -
நிழலாக.

Thursday, September 01, 2005

அன்பானவளுக்காக

1.
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுக்குள்
மற்றவர்
உற்று நோக்குவதல்ல........

அருகருகே அமர்ந்து
தொலைதூரத்திலுள்ள
இலக்கை
இணைந்து நோக்குவதே

காதல்........


2.
என்
மிகச்சிறந்த
கவிதைகளை
நான் என்றுமே
வெளியிடப் போவதில்லை...

அவை
உனக்காக எழுதப்பட்ட
காதல் கடிதங்கள்....


3.
பல ஆண்டுகளாக
எனக்காக
கவிதையே எழுதவில்லையே
என்று அங்கலாய்க்கிறாய் நீ...

இத்தனை நாட்களும்
உன்னோடு
நான் பேசிய பேச்சுக்களையெல்லாம்
என்னவாக நினைத்தாய்?


4.
உனக்கு
கொலுசு அணிந்து
அழகு பார்க்க
மனம் துடிக்கிறது.

பின்னர்
நீ பேசுவதில்
கவனம் கொள்ள
இயலாதென்பதால்
வாங்கிய கொலுசுகள்
இன்றும் சிணுங்குகின்றன
என் மனதினுள்...

5.

சொற்களில்
புதைந்த காதலை
தேடச் சொல்லி
கவிதை தருவேன்......

நீ
காதலைக் காட்டி
சொற்களை
தேடச் சொல்வாய்......

வழக்கம்போல
இன்றும்
எனக்கு
தோல்வி தான்.....

6.
உன்
காதலுக்கான
காத்திருப்பிற்கு
காலக்கெடுவுகள்
எல்லைகள்
விதிக்க முடியாது...

மரணம் கூட
உன் காதல்முன்
வெறும் அரைப்புள்ளி தான்...

7.
வியப்பாக இருக்கிறது
முக்கடல் கூடும்
சங்கமம்
எத்தனை சிறியதென!!!

நீயும் நானும்
இணைந்து நின்று
கடல் பார்த்தபொழுது

8.
எத்தனை எத்தனை
பெணகளை நேசித்திருக்கிறேன் -
நீ அருகிலிருந்து
என் தலையில்
கொட்ட கொட்ட...

ஸ்டெஃபி கிராபிலிருந்து
சானியா மிர்சா வரை...

அருந்ததி ராய் தொடங்கி
சில்வியா பிளாத் வரை...

ரேகா முதல்
சிம்ரனின் இடை வரை...

அருகே இருந்த வரைக்கும்
அனைவரையும்
காதலிக்க அனுமதித்தாய்...

விலகி நிற்கையிலே
யாரையும் காணவியலாது
கண் மறைக்கிறது
உன் வடிவின் பிரம்மாண்டம்...

காதலியே
நீ எப்போதும்
என்னருகிலேயே இருந்து விடேன் -
உலகின் அழகுப் பெண்களெல்லாம்
பாவமில்லையா?
9.
உனக்கான
என் காத்திருத்தலில்
காலம் வீணாகியது...

எனக்கான
உன் காத்திருத்தலிலும்
காலம் வீணாகியது...

இன்று
காலம் காத்திருக்கிறது -
நமக்கான காதலை
கையில் வைத்துக் கொண்டு ....

10.
என்றோ எழுதியதை
எடுத்துப் படிக்கும்
இந்தக் கணத்தில் -
இந்த சிறுபிள்ளைத்தனத்தை தாண்டி
எத்தனை தூரம்
வந்து விட்டோமென்றெண்ணி
வியர்க்கையில்

மீண்டும்
அந்த சிறுபிள்ளைகளின்
காலத்திற்குள் பயணப்பட
புகைப்படத் தொகுப்புக்குள்ளே
முகம் புதைத்து கிட ---

அன்பானவளே
தலையில் நரைத்திருக்கும்
அந்த ஒற்றை முடியைப்
பிடுங்கி எறிந்த பின்.

Sunday, August 28, 2005

தனிமை

ஒராயிரம் மனிதர்கள் மத்தியிலும்
என்னைத் தனித்தவனாக
வேறாருடனும் ஒட்டச் செய்யாமல்
தான் மட்டும் ஒட்டியிருக்கும் உறவு.
ஆளரவமற்ற பெருஞ்சாலைப் பயணத்தில்
ஆயிரமாயிரம் மனிதர்களை
சுற்றிலும் நிற்கவைத்துப் போகும்
புன்னகையுடன்.
எந்தப் பேரங்களுக்குமிடமில்லாது
தன் போக்குக்கு வந்து போகுமதை
இப்பொழுதெல்லாம்
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அருகில் அது வீற்றிருப்பதைக் காணதவர்கள்
சட்டென்று விரைந்து விலகி
தூரப்போய்த் திரும்பி கலவரப்படும் பொழுது
வீற்றிருக்குமோ அருகே இந்தத் தனிமை?

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்