சமீபத்திய ஒரு விவாதத்தில் என்னைப் பற்றிய இருவர் விமர்சனங்கள் வைத்தனர். வழக்கம் போல அவர்களுக்கு அதே தளத்தில் நின்று பதில் சொல்லி அந்த விவாதத்தை திசை திருப்ப விரும்பாததால், இந்த தனி பதிவு. இதில் நண்பர்கள் சன்னாசி, முகமூடி இருவருக்கும் பதில் சொன்னதோடு, அமெரிக்கர்கள் மீதான என் கடுமையான விமர்சனங்களுக்குக் காரணம் என்ன என்பதையும், இஸ்லாமிய தீவிரவாதம் என்று எழுதப்படுவது குறித்தும் என் கண்டனங்களையும் எழுதி இருக்கிறேன். இனி வாசிக்கலாம்....
சன்னாசி,
உங்களின் நீண்ட பதிவிற்கு மிக்க நன்றி.
திசை திருப்பக் கூடாதென்பதால், பெரும்பாலான கருத்துகளுக்கு நன்றி. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதினால்.
அகராதி என்று எழுதிய பொழுது, பக்கத்திலே சூட்டைத் தணிக்க ஒரு ஸ்மைலி போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி போடாமல் விட்டது என் தவறு தான். நம்மிடையே நடக்கும் பனிப்போரை அறியாதவர் என்னைப் பற்றித் தவறாக நினைக்கத் தூண்டும் - அதை ஒரு தனிமனித தாக்குதலாகக் கூட கருத வாய்ப்புண்டு என்ற புரிதல் வந்த பொழுது, அது பதிவாகி விட்டது. சிரமம் பாராது அதை அழித்துவிட்டு, புதிதாகவே எழுதி இருக்க வேண்டும். பிறருக்கு வலிக்கும் வகையாக எழுத வேண்டுமென்று நினைத்தால் கூட, தனிமனித தாக்குதலாக போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். நீங்கள் இப்பொழுது அதைப் பற்றிக் குறிப்பிட்டதில், அது நகைச்சுவையாக ஏற்கப்படவில்லை - மனம் புண்படும் வகையாகவந்து விட்டது அறிந்து வருந்துகிறேன். மற்றபடிக்கு, உங்கள் விமர்சனங்களைப் புரிந்து தான் இருக்கிறேன். கள்ளன் போலிஸ் என்று குறிப்பிட்டது ஒரு வகை விமர்சனமே தவிர, வேறு அர்த்தம் இல்லை. எப்படி நீங்கள் டிக்ஷனரி விமர்சனங்களைக் கருதுகிறீர்களோ அதே போலத் தான் இதுவும். ஆனால், இதற்காக (கள்ளன் போலிஸ்) நான் வருந்தவில்லை.
முகமூடி,
//மத்த fill in the blanksக்கு உங்கள் அஞ்சறை பெட்டியை திறந்து சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ், மதம், ஜாதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி ஒரு பதிவு பல பின்னூட்டங்கள் என்று சம்பந்தமில்லா இடங்களில் எல்லாம் எழுதி வருகிறீர்கள் என்பதே...//
முதன்முறையாக உங்களிடமிருந்து விமர்சனம் - நன்றி.
என் பெயரை உபயோகப்படுத்தியதற்காக நான் பதில் எழுதுவது அல்ல. மாறாக என் பெயரோடு சேர்க்கப்படும் அடை மொழிகளுக்குத் தான் பதில் சொல்கிறேன். நிறைய இடங்களில் அல்ல - இரண்டே இடங்களில் தான்.
நண்பன் என்ற ஷாஜஹான். ஆரோக்யம் எழுதியது.
அவரது பதிவுகள் தமிழ் மணத்தில் இடம் பெற வில்லையென்பதால், அவருக்குப் பதிலாக ஒரு பதிவை என் வலைப்பூவில் எழுதினேன். ஆரோக்கியத்திற்குப் பதில் எழுதியது தவறென நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால், பின்னர் உங்களின் அடிப்படை நேர்மையையே நான் சந்தேகிக்க வேண்டி வரும். சரிதானே?
நண்பன் போன்ற அற்புதமான நண்பர்கள் - அடைமொழியுடன் பத்ரி எழுதிய பொழுது, அதே வார்த்தைகளைக் கையாண்டு ஒரு பதில். ஏனென்றால், இந்த 'அற்புதமான' என்ற வார்த்தையில் ஒரு விஷேசம் இருக்கிறது. என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர், கொடுத்த அடைமொழி. அவருடைய பதிவை அதுவரையிலும் நான் வாசித்திருக்கவில்லை. அவரும் எங்கும் என் பதிவில் பின்னூட்டமிடவில்லை. அப்படியிருக்க அவர் உபயோகித்த அந்த அடைமொழி எந்த வித நியாயமோ?
பின்னர் எங்கிருந்து இந்த அடைமொழி வந்தது? எந்தப் பதிவிலிருந்து அவர் இந்த அடைமொழியை எடுத்துக் கொண்டார்? ஆயிஷா என்ற பதிவிலிருந்து தானே? அவர் என்னை ஷாஜஹான் என்று அடையாளம் கண்டு கொண்ட மாதிரி, நான் அவரை பத்ரி என அடையாளம் கண்டு கொண்டதில் என்ன தவறு இருக்கிறது?. அந்த அடையாளங்களைச் சொல்லி, நான் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால் சொல்லுங்கள் - திருத்திக் கொள்கிறேன்.
இங்கே - நான்காவது முறையாக - Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity. இது ஜனவரி 7ம் தேதியன்று ஸ்ரீகாந்தின் மனம் ஒரு குரங்கு என்ற பதிவில், எழுதினேன். தன் அடையாளங்களை மறைத்து விட்டு, மத ஒருங்கிணைப்பு என்று பம்மாத்து செய்வதை விட்டுவிட்டு, அவரவர் மத அடையாளங்களுடன் நல்லிணக்கத்திற்கு முயற்சி செய்வோம் என்று. இப்பொழுதும் என் கருத்தில் ஏதும் மாற்றமில்லை. இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஒரு வாக்கியத்தைத் தான் பல்வேறு இடங்களில் எழுதி இருக்கிறேன். இது உங்களுக்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் எழுதுவதாக தோன்றுகிறதா? உங்களைப் போன்றவர்களுக்கும் இது சம்பந்தமில்லாமல் தோன்றியது குறித்து நான் வருத்தமடையப் போவதில்லை.
இங்கு நான் தெளிவு படுத்தி விடுகிறேன் - அற்புதமான நண்பர்கள் என்று விளித்ததில் வருத்தமில்லை. ஆனால், அடைமொழிகளை எப்பொழுதும் நான் விரும்புவதில்லை. அதுவும் அறிமுகமற்ற நிலையில். அது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறது என்பதால் அதை தவிர்க்கவே முயல்கிறேன். ஆனால், மத அடையாளங்களை மறைத்து முகமூடி போட்டுக் கொண்டு சமத்துவம் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.? (முகமூடி - வாசிக்க :: முகத்திரை. உங்க பேரை நீங்க இப்படி வச்சுக்கிட்டா நான் என்ன பண்ணுவது :-) )
//இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில்// முகமூடி உங்கள் தமிழ் சற்று தகராறு பிடித்தது போல் தெரிகிறது. Context என்று ஒன்றுண்டு. அதாவது, இடஞ்சுட்டி பொருள் விளக்குக என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? அதைப் போலத் தான். சரியாக இடம் சுட்டி பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடம் சுட்டப்பட்டதென்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே first person பற்றி மட்டும் பேசக்கூடாது. பேசப்படும் பொருளாக அங்கிருந்தது - பிராமிணர்கள். அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கையில், நான் அந்த வரிகளை எழுதினேன். நன்றாகத்தானே இருக்கிறீர்கள் - நீங்கள் என்று. பேசு பொருளாக இருந்த பொருளைக் குறித்து கேள்வி ஒன்று வைத்தேன் - பிராமிணர்கள் என்பதை குறிப்பிடாமல், ''நீங்கள்'' என்று சொன்னேன். இந்த நீங்கள் - பத்ரியை சுட்டுகிறது என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்கள். என் எண்ணம் அதுவல்ல. சுட்டு பொருளாக நிற்பது பிராமிணர்கள் தான். என்றாலும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன். யாரை குறித்துகேள்வி கேட்கிறேமோ, அவர்களின் பெயர்களையும் எழுதி விடுகிறேன். அது அத்தனை எளிதல்ல. மாறாக வேறு வகையான சங்கடங்களையும் உண்டாக்கும். எப்படி என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.
மேலும்
மசாலா சேர்த்து எழுதுகிறேன் என்று நீங்கள் சொன்னதற்கு நன்றி. என் சமையல் நன்றாகத் தான் இருக்கும் - சமைக்க (எழுதத்) தெரியுமென்பதால்.
தமிழ் மொழி பற்றி இதுவரையிலும் ஒரு பதிவு கூட எழுத ஆரம்பிக்கவில்லை. ஏன் திராவிட சிந்தனை குறித்தும் கூட நான் இன்னமும் எங்கும் எழுதவில்லை. ஆகையினால், உங்களது இந்த விமர்சனம் நேர்மையற்றது.
சுபவீ, அறிவுமதி, பாமரன் படங்கள் வைத்திருப்பதால், உடனே நான் தமிழ் பற்றி, திராவிடம் பற்றி எழுதி விட்டேன் என்று நீங்கள் கூப்பாடு போட்டால் அது உங்கள் தவறு. சொல்லுங்கள் - நான் இதைப்பற்றியெல்லாம் எங்கே எழுதி இருக்கிறேன் என்று. நான் இதுவரையிலும் எழுதாத ஒன்றை நான் எழுதுகிறேன் என்று கூப்பாடு போடுவதிலிருந்தே தெரிகிறது - சும்மா குன்ஸா ஒரு கமெண்ட் வைப்போம் - என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று. அல்லது இத்தனை படங்களை வைத்துக் கொண்டு இயங்குவதால், கண்டிப்பாக எழுதி இருப்பான் என்று அனுமானித்து அதன் மூலம் இந்த விமர்சனத்தை அச்சமில்லாமல் வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இயங்கினால், அது உங்கள் தவறு தானே தவிர, என் மீதான நேர்மையான விமர்சனமாகாது.
மதம் பற்றி எழுதுவது, யாரையும் திட்டவோ, பரிகசிக்கவோ இல்லை. என் மதத்தின் மேன்மையை மட்டும் தான் நான் எடுத்துரைத்தேன். அதிலும் சிலர் இஸ்லாம் பற்றி வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலாக. அதில் என்ன தவறு இருக்கப் போகிறது.? நீங்கள் பிராமினிசம் காக்க முன் வந்தால், நான் அதை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், அங்கு உங்கள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் வைக்காமல், என் நம்பிக்கை சரியா, அடுத்தவர் நம்பிக்கை சரியா என்று தர்க்கங்களுக்குப் போய் விமர்சனங்களை வீசும் பொழுது - பதிலுரைக்க வேண்டி வருகிறது. (நான் இதுவரையிலும், பிற மதங்களைப் பற்றிய விமர்சனத்தில் இறங்கியதில்லை. இனியும் இறங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். )
முகமூடி, தயவு செய்து, மீண்டும் ஒருமுறை என்னுடைய பதிவுகளைப் படித்துப் பார்த்து விட்டு, பொறுப்போடு விமர்சனம் வையுங்கள்.
நான் மிக அதிக பதிவுகள் போட்டது அமெரிக்காவின் உலக / இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் - அது பற்றி ஒரு வார்த்தை கூட உங்களால் பேச இயலவில்லை - ஏன்? உங்களுக்கே தெரியும் அதில் உள்ள நியாயங்கள். சிலருக்கு நான் அமெரிக்காவைப் பற்றி எழுதியதுமே கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. உங்கள் பக்கத்து நியாயமாக அமெரிக்காவில் கிடைக்கும் - (மீண்டும் - இங்கு உங்கள் என்பது முகமூடி அல்ல. மாறாக அமெரிக்காவைப் பாதுகாக்க நினைக்கும் அங்கு வாழும் அமெரிக்கார்களைப் பற்றியதானது இந்த 'உங்கள்' இப்பொழுதாவது புரிகிறதா - என்னுடைய பாணி என்னவென்று) அதிகப்படியான வசதிகள் கொண்ட வாழ்க்கை - சம்பளம் - என்று நியாயங்கள் இருக்கலாம். அதனால், என்னை எதிர்ப்பதும் கடமையாகிறது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு. ஒன்று செய்யட்டுமே - அமெரிக்க வாழ் இந்தியர்கள் (பாருங்கள் - எல்லோரும் அடிக்க வரப்போகிறார்கள் - ஏன் எப்பொழுதும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்றே எழுதிக்கொண்டிருக்கிறான் - Tell him to use a pronoun - shorter one என்று குரல் கொடுக்கப் போகிறார்கள் - ) எல்லோரும் பதிலுக்கு அமெரிக்க செய்யும் நல்ல காரியங்களைப் பற்றி எழுதட்டுமே - அப்படி ஒன்று இருந்தால் - நாங்களும் தான் தெரிந்து கொள்கிறோம்.?
அமெரிக்கர்களைப் பற்றிய என் பக்கத்து தரப்பு நியாயங்களும் உண்டு.
இந்த அமெரிக்கர்களின் கொள்கைகளோடு நேரடியாக அனுபவம் உண்டு. பிஜேபி ஆட்சியில் அணுகுண்டு வெடித்ததும், ஒரு தடை போட்டார்கள் - அதாவது, இந்தியாவின் அணுத் துறைக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது. தேவைப்படும் தொழில் நுட்பங்கள் - பொருட்கள் எதுவும் கிடைக்கக் கூடாது என்று ஒரு தடை விதித்தார்கள். அதாவது நம் அணுத்துறையையே அடக்கி மண்டி வைத்து விடவேண்டும் என்று. ஆனால், அதன் பின்னால் இருந்த hidden agenda - அணுத்துறை மட்டுமல்ல - சகல விஞ்ஞான துறைகளையும் முடக்கிப் போட வேண்டும் என்பது இந்த துறைகளோடு சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும். நான் இந்த துறைகளில் நேரிடையாக சம்பந்தப் படாவிட்டாலும் - இவர்களுக்கெல்லாம் தேவைப்படும் தொழிலில் இருக்கிறேன். நான் ஒரு Air conditioning Engineer. அமெரிக்கா இந்த ஏர்கண்டிஷனர்களுக்குக் கூட தடை விதித்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? இந்த ஏர் கண்டிஷனர்களால் - ஒரு ராக்கெட்டைப் பறக்க வைத்து விடலாம் என்றோ, அல்லது அணு உலையை ஓட்டி விடலாம் என்றோ யாரும் நம்பப் போவதில்லை. இந்த ஏர்கண்டிஷனர்களால் ஆகக் கூடிய ஒரே காரியம் - குளிர்ந்த நீரை உற்பத்தி செய்து தர முடியும் - 5 டிகிரி செல்சியஸ்ற்கு. பிறகு அதை கொண்டு, AHU மூலமாகக் காற்றைக் குளிர்விக்க வேண்டும்.
இதில் என்ன பெரிய காரியம்? இந்த மெஷின்களை ஏன் தடை செய்ய வேண்டும்.?
விஞ்ஞானிகள் குளுகுளு சூழலில் உட்கார்ந்து வேலை செய்து, அணு உலை தயாரிக்கப் போகிறார்கள் என்றா?
அந்தப் பொழுதில் இந்தியாவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் - Trane, Carrier, etc உட்பட, எவருமே இந்த எந்திரங்கள் இந்தியாவிற்கு தரும் பொழுது ஒரு உறுதி மொழிப் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு தான் தருவார்கள் - அந்தப் பத்திரம் என்ன தெரியுமா? எங்களிடம் வாங்கப் படும் இந்த இயந்திரங்கள் - ஏர்கண்டிஷனர்கள் - இந்தியாவின் அரசு தொடர்புடைய எந்த நிறுவனத்திற்காகவும் வாங்கப்படவில்லை. மாறாக எங்கள் சொந்த உபயோகத்திற்காக வாங்குகிறோம் என்ற வகையில் எழுதித் தர வேண்டும். எதற்கு? வெறுமனே குளிர்ந்த நீரை உண்டாக்கவா?
நீங்கள் ( இது இவ்வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் அன்பர்களைப் பார்த்து) இப்பொழுதும், போய் பாருங்கள் - ISRO, GTRE, அணுத்துறை மற்றும் அரசு சார்ந்த துறைகளில் - எங்காவது அமெரிக்காவில் இருந்து, வரவழைக்கப்பட்ட எந்திரங்கள் இருக்கிறதா என்று.? அங்கு நீங்கள் பார்ப்பதெல்லாம் வெறுமனே - Kirloskar, Voltas, Bluestar, Batliboi போன்ற இந்திய நிறுவனங்கள் தயாரித்த out-dated என்று சொல்லத்தக்க reciprocating machinesஐ வைத்துத் தான் காலம் தள்ளுகின்றன. இது 2003 வரையிலும் உள்ள நிலைமை.
இந்த reciprocating இயந்திரங்களில் உபயோகப்படுத்துவது - R22 என்று சொல்லப்படும் தடை செய்யப்பட்ட halo-carbon குடும்பத்தைச் சார்ந்த freon என்னும் குளிர்விப்பான். இந்த வகை வாயு, 2020 ல் இந்தியாவில் தடை செய்யப்படும். அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது. அதாவது இன்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த அனைத்து வகை குளிர்மி-களையும் நாம் நிறுத்தியாக வேண்டும். அதற்குள்ளாக, மாற்று freonகளைக் கொண்டு இயங்கும் இயந்திரங்களை நிறுவாவிட்டால், அப்புறம் நமது விஞ்ஞான நிறுவனங்கள் எல்லாம் அம்பேல் தான். அப்படியில்லையென்றால், ஒசோன் வட்டத்தைத் துளையிடாத freonகளால் இயங்கக் கூடிய வகையில், இந்த அரதப் பழசான எந்திரங்களைக் கழற்றி கடாசி விட்டு, புது எந்திரங்களை வடிவமைத்து நிறுவ வேண்டும். எப்படி என்றாலும், நமக்கு பெரும் செலவு. அதை இப்பொழுதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டால் நலம். அதற்குத் தடையாக இருப்பது அமெரிக்கா. மாறி விட்ட சூழ்நிலையில், இந்த தடை நீக்கப்பட்டதா, நமக்கு இந்த எந்திரங்கள் எல்லாம் கொடுக்கிறார்களா என்பதை இனி தான் விசாரிக்க வேண்டும்.
இந்த நேரிடையான அனுபவம் தான் அமெரிக்காவின் அனைத்து செயல்களிலும் என்ன உள்குத்து வேலை இருக்கிறது என்பதை ஆராயத் தூண்டுகிறது. இங்கு சிலர் (இந்த சிலர் தான் இனி வரக்கூடிய நீங்கள் என்ற சுட்டிக்கு அர்த்தம்), அமெரிக்காவும் இந்தியப் பாதுகாப்பும் என்று எழுதும் பொழுது, சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. இத்தகைய அறிவிலிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று. அதிலும் அவர்கள் (அந்த சிலர்) - என்னைப் போன்றவர்களை கேள்வி வேறு கேட்கிறார்கள் - தேச பக்தி இருக்கிறதா என்று. என் நாட்டிற்கு, விஞ்ஞான துறையுடன் சம்பந்தப்படாத பொருட்களைக் கொடுக்கக் கூட தடைவிதித்த செய்கையால் அமெரிக்காவை எப்பொழுதும் கண்டித்துக் கொண்டிருக்கும் என்னையெல்லாம் நிரூபிக்கச் சொல்வார்கள் - தேச பக்தியை - தங்கள் தேசபக்தியை அடகு வைத்தவர்கள்.
அணுத்துறை சார்பாக சமீபத்தில் பல முன்னேற்றங்கள் - அமெரிக்கா நமக்கு உதவப் போகிறது என்றெல்லாம் பேச்சு. அது சரி, இந்த 25 வருடங்களாக நம்மை நசுக்கனும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா -இப்பொழுது உதவ முன் வந்த காரணம்? சில உள்குத்து வேலைகள் இருக்கத் தானே செய்யும்? எனக்குத் தெரிந்த ஒன்று - நாம் நம் அணுக்கூடங்களை - civilian என்று அறிவிக்கப்பட்ட உலைகளை - சர்வதேச கண்காணிப்பாளார்கள் வரும் பொழுது திறந்து விடவேண்டும். அந்த உலைக்கூடங்களை எக்காரணம் கொண்டும் ராணுவ பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றக் கூடாது என்ற நிபந்தனை. இது போதுமே - ராணுவத்திற்கென தனியாக நாம் வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கக் கூடும்.
இந்த நிபந்தனையின்படி, இந்திய அரசு - எது சிவிலியன் - எது ராணுவ உலை என்று தங்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறதா? நம் ராணுவம் தனக்குத் தேவையான அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொள்ள, போதுமான உலைகள் இருக்கிறதா என்று மக்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறதா? (ராணுவ ரகசியங்கள் முன்னிட்டு, இடங்களைக் குறிப்பிடாவிட்டாலும், ஒரு உறுதிமொழியாக, ஊக்கமொழியாக அறிவித்திருக்கிறதா? சந்தேகம் தான். ஆனால், இதே சரத்தை அணுகுண்டு வல்லரசுகளாக அறிவிக்கப்பட்ட நாடுகள் எப்படி கையெழுத்திட்டிருக்கின்றன?
'தேவைப்பட்டால், சிவிலியன் உலைக்கூடத்தை ராணுவ உலையாக மாற்றுவோம் - எந்த முன்னறிவிப்புமின்றி.' இது சீனாவுக்கும் பொருந்தும்.
போதுமா? அமெரிக்காவின் நரித்தனம்?
'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பார்கள். அமெரிக்காவின் குடுமி மட்டும் சும்மா ஆடும் என்று எதிர்பார்க்க முடியுமா? நாம் நம்ப வேண்டும் - அமெரிக்கர்கள் பொறுப்பானவர்கள் என்று! ஆனால் அவர்கள் நம் நாட்டை ஒரு பொறுப்பான நாடு என்று நம்ப மாட்டார்கள். பாக்கிஸ்தான், வியட்நாம், லிபியா போன்ற சண்டிய நாடுகள் என்ற நிலையில் தான் வைத்துப் பார்ப்பார்கள். (இந்த ரோக் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிட்டது அமெரிக்கர்களின் பார்வையில். என் கண்ணோட்டம் அதுவல்ல. அந்த நாடுகளுக்கு என்று நியாயங்கள் இருக்கக்கூடும். அமெரிக்கர்களுக்கென்று நியாயம் எதுவுமில்லையா என்று கேட்காதீர்கள் - அவர்களுக்கு உள்ள பயங்களை - அராபியாவில் அம்மா முலையில் பால் குடிக்கும் குழந்தை கூட நம்மை அழித்து விடும் என்ற அதீத பயத்தைப் போக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் அந்த பயத்தை துறந்து, நிம்மதியாக இருக்க முடியாது. இது இறைவன் அவர்களுக்குக் கொடுத்த சாபம். யாரும் இதில் எதுவும் செய்வதற்கில்லை.)
இது தான் அமெரிக்கர்கள் நமக்குக் கொடுக்கும் மரியாதை. இதை சரி என்பவர்களைக் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஒன்றைத் தவிர - தேசபக்தியின் ஏகபோக குத்தகையாளர் நாங்கள் என்று பேசுவதை விட்டுவிடுங்கள்.
முகமூடி
இந்தப் பதிவே உங்களுக்கு ஒரு பாடமாக (பாடமாக:: படிக்க - விளக்கமாக) அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதுகிறேன். அதனால் தான் வேண்டுமென்றே இந்த திசை திருப்பல் - அமெரிக்காவைப் பார்த்து. இப்பொழுது சொல்லுங்கள் - இங்கு நான் சிலர் என்று குறிப்பிட்டு பேசுவதை என்னவென்று? நன்றாகத் தெரியும் - இது உங்களை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி அல்ல என்று. (தேச பக்தியின் ஏக போக உரிமையாளர் என்ற சொற்றோடர்) ஆனால் மேலே உங்கள் பெயரை எழுதிவிட்டதால், எழுதப்படும் அனைத்தும் தன்னைத் தான் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டால், அது உங்கள் மொழி ஆளுமையின் குறை பாடே தவிர என்னுடையது அல்ல. (உங்கள் தெளிவிற்காக, தேச பக்தியைப் பற்றி நான் குறிப்பிட்டது - கேள்வி எழுப்பியது - சமுத்ராவை நோக்கி. தொடர்ந்து நீங்கள் என் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு தெளிவு கிடைத்திருக்கும். ஆனால், முன்னரே சொன்னது போல, நிதானமாக வாசித்துப் பதில் எழுதும் பொறுமை இல்லாத நீங்கள் என் வலைத்தளத்தில் இருக்கும் படங்களைக் கொண்டு எழுந்த அனுமானத்தில் உண்டாக்கிக் கொண்ட சித்திரங்கள் தானே? அப்படி இல்லையென்றால், மிக்க மகிழ்ச்சி.)
முகமூடி, (சீக்கிரமே பேரை மாத்துங்க நன்பரே - அழைப்பதற்கு சிறிது தயக்கமாக இருக்கிறது. :-) )
சம்பந்தமில்லா இடங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் - நீங்கள் தான் சொல்ல வேண்டும். பின்னூட்டங்கள் எல்லோருக்கும் உரியன. நான் பின்னூட்டம் எழுதுவது மட்டும் சம்பந்தமில்லா இடங்களில் என்று ஆகிவிடுமா என்ன? இப்படியான விமர்சனம் இதுதான் முதல் முறை. நான் எழுதிய வலைப்பூக்காரர்கள் இதுவரையிலும் இப்படி சொன்னதேயில்லை. உங்கள் தளத்தில் ஒன்று கூட நான் எழுதியதில்லை. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். என்ன சொல்வது? தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்!
மேலும், இந்த சம்பந்தமில்லாமல் எழுதப்படும் எழுத்துகள் எப்படி இருக்கும் தெரியுமா? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தான். எப்படி மேலெழுந்தவாரியாக எழுதிக் கொண்டே போகிறார்? அந்த ஸ்டைல் தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவது என்பது. ஏன்? நினைவிற்கு வரவர எழுதிக்கொண்டே இருக்கலாம். பலருக்கும் ஒரே இடத்தில் பதில் சொல்லலாம். மேலும் தீவிரமாக ஒரு கருத்தை எழுத வேண்டியதில்லை. கலவையாக கதம்பமாக பதில் எழுதி விடலாம். இது எத்தனை விதத்தில் வசதியாக இருக்கிறது தெரியுமா, சுஜாதாவிற்கு? ஆனால் என்னுடைய பாணி அதுவல்ல என்று இப்பொழுது தெரிந்திருக்கும் - இல்லையா?
// இப்போது உங்கள் பாணியில் பேசினால், //
என் பாணி என்ன என்று உங்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை இதுவரையிலும். இப்பொழுது தான் கொஞ்சம் உணர்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். என்றாலும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், உங்கள் அனுமானம் என்ன என்றும் தான் பார்ப்போமே!.
// உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா? //
முதலில் நான் இதுகுறித்து மேலே ஒரு பெரிய விளக்கம் கொடுத்து விட்டேன். மீண்டும் ஒரு முறை விளக்குகிறேன். நீங்கள் (முகமூடி) என்னிடம் நீங்கள் இப்படி செய்கிறார்களே இது சரியா என்று கேட்டால், தீவிரவாதத்தில் நம்பிக்கை உள்ள அந்த இளைஞர்களைப் பற்றித் தான் கேள்வி எழுப்புகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்கள் (தீவிரவாதிகள்) செய்வது தவறு தான் என்று பதில் சொல்வேன். ஆனால், நீங்கள் (சில வலைப்பதிவாளர்கள் - தினசரிகள். இந்த சில வலைப்பதிவாளர்களில் நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ) எழுதும் பொழுது எவ்வாறு என்று எழுதுகிறீர்கள் - இஸ்லாமிய தீவிரவாதி என்றல்லவா? இங்கு தன்மை, முன்னிலை, படர்க்கை என்றெல்லாம் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், தெளிவாக இஸ்லாம் என்று குறிப்பிட்டு, எழுதுவதைத் தான் கேள்வி எழுப்புகிறோம். தீவிரவாதிகள் அனைத்து மதத்திலும் இருக்கையிலே அவர்கள் எல்லாம் மதம் சாராத குற்றவாளிகளாகவும், இஸ்லாமியனாக இருந்தால், அவனை மதத்தோடு இணைத்து விடுவது மட்டும் எந்த விதத்தில் நியாயம் என்று தான் கேள்வி கேட்கிறோம். இந்த தெளிவு என்னிடமிருக்கிறது. ஆனால், உங்களிடம் இல்லாத பொழுது, அதை நான் என்னவென்று சொல்வது? தீவிரவாதத்தைக் கண்டிப்பதில் அனைவரும் முன்வரவேண்டும் - அது எம்மதத்தைச் சார்ந்ததாகவும் இருந்து விட்டுப் போகட்டும். ஏன் இதை கருத்தில் வைக்க மாட்டேனென்கிறீர்கள்? உங்களுடையது எந்த விதத்தில் நேர்மையானது சொல்லுங்கள் பார்ப்போம்.?
மேலும் இப்படியெல்லாம் எழுதவில்லை என்று யார் சொன்னது? விழித்துக் கொண்டு உலகில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள் நண்பரே -
எழுதத் தான் செய்கிறார்கள்.
நீங்கள் எழுதவே இல்லை இதுவரை என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் - நியாயமாக நடந்து கொள்ளும் ஒரு மாற்று மத சகோதரர் இருக்கிறார் என்று.
உங்களைப் போன்ற அன்பர்களையும் அழைக்கிறோம் - அத்தகைய தவறான எண்ண ஓட்டத்தில் இருந்து மற்றவர்களையும் வெளிக் கொண்டு வர துணை புரியுங்கள். செய்தீர்கள் என்றால் நல்லது - இல்லையென்றால், அதனால் வருத்தமில்லை. தொடர்ந்து, பொய் பிரச்சாரங்களை எதிர்த்து எழுதுவோம்.
// மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். //
உங்கள் எண்ணத்திற்கு மிக்க நன்றி. இத்தகைய சிந்தனைகள் வளர வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
மிக்க மகிழ்ச்சி, முகமூடி.
இதே அலைவரிசையில் விவாதங்கள் தொடரும் என்றால்.
அன்புடன்
நண்பன்